Monday 23 June 2014

Hen Market


மாட்டு சந்தை , ஆட்டு சந்தை , குதிரை சந்தை போல் கோழி சந்தை ஒவ்வரு சனிக்கிழமையும் வேலூர் காட்பாடியில் நடைபெற்று வருகிறது. சரியாக காட்பாடி ரயில்நிலையம் பாலத்தில் இருந்து வடக்கே பார்த்தால் உழவர்சந்தை அதன் அருகில் வெகு ஜோராக கோழி, சேவல், சண்டை கோழி இதன் இடை இடையே முயல், காடை விற்பனையாவதையும் பார்க்கலாம். ஆனால் யாரும் ப்ராயளர் கோழியை பொருட்டாகவே நினைபிதில்லை அவை இங்கு விற்பதும் இல்லை எல்லாம் நாட்டு கோழிகளே.




நிறைய சுவாரசியமான நிகழ்வுகள் உள்ளன. மொத்தம் இரண்டு வகையான விற்பனையை  பார்க்கமுடிந்தது .கோழி வியாபாரிகள் என்று நிறையப்பேர் சுற்றி கொண்டிருக்கிறார்கள் ஆனால் அவர்களுக்கு கோழிகளை விற்பதே கிராமத்து மனிதர்கள்.முயலை காதை பிடித்து தூக்குவது போல் கோழிகளை கால்களை பிடித்தே சுற்றிவருகிறார்கள்.


 காட்பாடி சுற்றி இருக்கும் கிராமங்களில் இருந்து நிறைய பேர் நாட்டு கோழிகளுடன் சந்தையின் நோக்கி வருகிறார்கள், சந்தை அருகில் அவர்கள் வருவதற்குள் அவர்களை நோக்கி இந்த கோழி வியாபாரிகள் ஓடுகிறார்கள் பையில் இருக்கும் கோழிகளை கட கடவென்று இவர்களே எடுத்து என்ன விலை, என்ன விலை என்று ஒரே சத்தம்.


சேவல், பெட்டை என்று அதன் இரண்டின் காலையும் கட்டி ஜதை ஜதையாக விற்பவர்களும் இருந்தார்கள். ஒரு ஜதை எவ்வளவு என்று ஒரு கோழி வியாபாரி கேட்டதற்க்கு, 1500 என்று கிராமத்தில் இருந்து வந்த ஒரு பாட்டி சொன்னார்.


என்னது 1500ஆஆஆ என்று இழுத்த வியாபாரி, நீயே 1500சொன்னா நான் என்ன விலைக்கு விற்ப்பது என்றதற்கு பாட்டி சொன்னாரே ஒரு பதில் நானே விற்பதற்கு தான் வந்திருக்கிறேன் உன்னை யார் வாங்க சொன்ன்னது .


வியாபாரி இதை எதையும் காதில் வாங்கியதாக தெரியவில்லை, 750ல் ஆரம்பித்தார். கோழியை கொடு என்று கூட பாட்டி சொல்லவில்லை பிடுங்கி கொண்டார்.

ஏம்மா பிடுங்கிறாய் உன் கோழியை தூக்கி கொண்டு போய்விடமாட்டேன், 850 தருகிறேன்.


1400 கொடுத்தா தருகிறேன் என்று பாட்டி சிடு சிடுன்னு சொன்னதை கேட்டு 1000 போதுமா என்றார் வியாபாரி .


தரமாட்டேன்


1100 ரூபாயை எடுத்து கொடுத்தார், ஊகும் பாட்டி அசைந்து கொடுக்கவில்லை

கிராமத்தில் இருந்து வந்துகொண்டிருக்கும் அடுத்து பெண்ணை நோக்கி நடையை செலுத்தினார் வியாபாரி . நான் சிறிது நேரம் பாட்டி அருகில் இருந்து கவனித்தேன்.

எந்த ஊர் பாட்டி


வள்ளி மலை


வாரம் வாரம் வருவீர்களா ?


இல்லை தம்பி, இன்னும் நாலு நாளில் வீட்டுல விசேஷம் அதான் கோழியை விக்க வந்தேன். நான் வியாபாரி எல்லாம் இல்லை, இதை நான்தான் குட்டியில் இருந்து வளர்த்து வருகிறேன் பணம் இல்லை என்பதால் விற்க வந்தேன்.


வரும் கிராம மனிதர்கள் எல்லோருக்கும் ஏதேதோ ஒரு காரணம் ஆனால் முடிவில் பணத்தில் வந்து நிற்கிறது.

இங்கு ஆண்களை விட பெண்கள், பாட்டிகளே உஷாராக விற்பதை பார்க்கமுடிந்தது, கறாராகவே பெண்கள் பேசுகிறார்கள். தான் நினைக்கும் விலைக்கு படியவில்லை என்றால் விற்காமலும் நின்றுகொண்டு இருக்கிறார்கள். பாட்டி ரொம்ப நேரம் நின்று கடைசியில் 1250க்கு விற்றார்.


இதற்க்கு நடுவில் அதாவது இந்த கூச்சளுக்கு நடுவில் ஒருவர் வந்து எத்தனை கோழி எடுத்து வந்திருக்கிறாய் என்று கேட்டார், எட்டு என்றார் பாட்டி, அப்போ என்பது ரூபாய் கொடு என்றார் . இது என்ன என்று விசாரித்தேன் ,கேட் பாஸ் என்று சொல்கிறார்கள்.


நாம் எத்தனை கோழி கொண்டு வந்திருக்கிறோமோ, தலா ஒரு கோழிக்கு பத்து என்ற கணக்கில் கொடுக்க வேண்டுமாம், பாட்டி கொண்டுவந்தது எட்டு கோழி அதனால் என்பது ரூபாய் கேட்டதற்கு இன்னும் விற்கவே இல்லை அதற்குள் காசு கேட்ட்கிறாய், வித்த உடன் தருகிறேன் என்று கறாராக சொன்னார், கேட்டவரும் சென்றுவிட்டார்.



பாட்டி மற்ற கோழிகளை எவ்வளவு விலைக்கு விற்றார் என்று தெரியவில்லை. நான் பாட்டி அருகில் இருந்து நகர்ந்து வியாபாரி அருகில் சென்று வாங்கிய கோழிகளை இவர்கள் எவ்வளவுக்கு விற்கிறார்கள் என்று கவனித்தேன்.


ஒருவர் ஒருமணி நேரமாக சுற்றி சுற்றி வந்து கொண்டுஇருக்கிறார், எல்லா கோழிகளையும் விலை பேசுகிறார் , நான் விற்பதற்க்கு வாங்கவில்லை, வளர்பதற்கு வாங்க வந்தேன் என்று சொல்லி சொல்லியே வியாபாரிகளை விட அடிமட்ட விலைக்கு பேரம் பேசிகொண்டிருந்தார். ஒரு கிராமத்து பெண்மணி 250 ரூபாய் சொன்ன கோழியை 100 ரூபாய்க்கு கேட்டுகொண்டிருகிறார்.


வியாபாரிகள் 200ரூபாய் கொடுத்து வாங்கிய கோழியை 400ரூபாய் சொல்கிறார்கள் அப்படி இப்படி என்று 300 ரூபாய்க்கு பேரம் படிந்து பணம் கைமாறுகிறது. உடனே கிராமத்து மனிதர்கள் யாரவது கோழிகளை கொண்டு வருகிரார்களா என்று சுற்றும் முற்றம் பார்வையை சுழற்றுகிறார்கள்.


காட்பாடியில் வியாபாரிகளிடம் கோழிகளை வாங்குவதை விட அங்கு விற்க வரும் கிராமத்து மனிதர்களிடம் வாங்குவதே சிறந்தது என்று உள்ளூர் மனிதர்களுக்கு தெரிந்தே இருக்கிறது. அவர்கள் நேரடியாக அவர்களிடம் சென்றே வாங்குகிறார்கள்.

சுவாரசியமாக வியாபாரமும் ,கிராமத்து மனிதர்களின் வேடிக்கை பேச்சிகளும்,பாட்டிகளின் சிடு சிடுகளும் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடைபெறுவதால் அங்கு சென்றால் நீங்களும் பார்க்கலாம்.


No comments:

Post a Comment