Saturday 14 February 2015

மரங்களின் நிழல்

கோடைகாலத்தில் மட்டுமல்ல இப்போதெல்லாம் எப்போதும் வெய்யில் கொளுத்துகிறது.  மழை இல்லை.  தண்ணீர் தட்டுப்பாடு வேறு.  நகரங்கள் கிராமங்களை நகரமயமாக்க கிராமங்களோ முழு நகர வசதிகளையும் பெறாமல் இரண்டுங்கெட்டான்களாக நிற்கின்றன.  இந்த நிலையில் நகரங்கள் ஒவ்வொன்றும் மெகா நகரங்களாக வளர்ந்து  உருமாறி வருகின்றன.  

பெருகி வரும் மக்கள்நெரிசலும், வேலைவாய்ப்புகளும் நகரங்களின் தவிர்க்கமுடியாத விரிவாக்கத்திற்கு காரணமாக அமைந்துவிட்டன.  இந்த நிலையில் இயற்கை ஆர்வலர்கள் மரம் நடுவதைப் பற்றியும், காடுகள் பாதுகாக்கப்படுவதையும் அறைகூவல் விடுத்துவருகிறார்கள்.  தப்பித்தவறி பெய்யும் மழையை ஒரு துளிகூட வீணாக்காமல் நிலத்துக்கடியில் இறக்கிவிட மரங்களும், காடுகளும் பெருமளவில் பயன்படுகின்றன.  இன்னும் எக்கச்சக்கமான பயன்களைத் தருகிறது மரங்களும், அவை சேர்ந்து உருவாக்கும் காடுகளும்.  நகரங்களிலேயே காடுகள் ஏற்படுத்தினால் என்ன என்ற சிந்தனை சமீபகாலமாக ஏற்பட்டுவருகிறது.  நகரங்களின் மையப்பகுதிகளில் இந்தக் காடுகள் அமைந்தால் எவ்வளவு நன்மைகள் ஏற்படும்? 

   மரங்களின் முக்கியத்துவம் கருதிதான் நம் முன்னோர்கள் இறைவழிபாட்டுக்காக கட்டிய கோயில்கள் ஒவ்வொன்றிலும் திருத்தல மரம் என்று ஒன்றை ஏற்படுத்தி மரம் வளர்ப்பதன் சிந்தனையை முந்தைய சந்ததிகளுக்கு ஏற்படுத்தினார்கள்.  அது மட்டுமல்லாமல் வீட்டில் வளர்க்கமுடியாத பல அரிய மருத்துவகுணங்களை உடைய மரங்களை கோயில்களில் வளர்த்து கோயில் காடுகளையும் ஏற்படுத்தினார்கள்.  மரம் வளர்ப்பதை புனிதமானதாக்கி, மத நம்பிக்கையோடு பின்னிப் பிணைத்தார்கள்.  அப்போதெல்லாம் இதனால்தான் மரத்தடியில் கிராமப் பஞ்சாயத்துக்கள் நடந்தன போலும்.  உளவியல் அறிஞர்கள் மரநிழலில் மனித மனதிற்கு தெளிவான சிந்தனையும், மன அமைதியும் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் செய்து கண்டறிந்துள்ளனர்.  அதனால்தான் எவ்வளவு சிக்கலான பிரச்சனைகளையும் அக்காலங்களில் மரநிழலில் ஊர் கூடி நல்லவிதமாகத் தீர்வு கண்டது போலும்.. 

   நமது கோயில்களில் சிவபெருமான் குருவடிவாக அருள் புரியும் தட்சணாமூர்த்தியும் பிரம்மாவின் புத்திரர்களான சனகர், சனாதனர், சனந்தனர்,சனற்குமாரரர் ஆகிய நால்வருக்கும் (தந்தையான பிரம்மா படைத்தலில் மூழ்கியிருந்ததாலும், விஷ்ணு இல்லறத்தில் மூழ்கியிருந்ததாலும் வேறு குருவைத் தேடி இறுதியில் சிவபெருமானிடம் வர அவர்களை ஏமாற்ற விரும்பாத சிவபெருமானும் சின் முத்திரை காட்டி, அக்னியையும், உடுக்கையையும், ஔலைச்சுவடியையும் கைகளில் ஏந்தி முயலகனை காலில் முதித்தவாறே ஞான உபதேசம் செய்வது ஆல மரத்தடியில் இருந்துதான்.. 

   அக்காலங்களில் பழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் பதப்படுத்தப்பட்ட பனை ஔலைகளில்தான் எழுத்தாணிகள் கொண்டு எழுதி வைக்கப்பட்டன.  சாலையோரங்களில் நம் ஆன்றோர்கள் புளியமரங்களை நட்டுவைத்து வளர்த்தற்கும் அறிவியல்பூர்வமான காரணம் ஒன்று இருக்கிறது.  இருக்கும் மரங்களிலேயே புளியமரம்தான் அதிகம் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் தன்மை கொண்டது என்பதுதான் அது.  இந்த அறிவியல் உண்மையை அன்றே உணர்ந்த நம் முன்னோர்கள் சாலைகள் நெடுகிலும் புளியமரங்களை நட்டு  வைத்தார்கள்.  இன்றும் இந்து மத சடங்குகளில் ஹோமங்கள் வளர்த்து யாகங்கள் செய்யப்படும்போதும், மற்ற எல்லா சடங்குகளுக்கும் இடப்படும் குச்சிகளாகப் பயன்படுவது அரச மரக்குச்சிகளே ஆகும்.  இதேபோல ஹோமங்களில் ஆகுதி செய்யப்படும் நெய் போன்ற பொருள்கள் புரச மர இலைகளால்தான் செய்யப்படுகின்றன. 

   போதி மரத்தடியில்தான் புத்தருக்கும் ஞானம் தோன்றியது.  அசோகர் வழியெங்கும் அவருடைய ஆட்சிகாலத்தில் நட்டுவைத்த மரங்களால்தான் இன்றும் வரலாலாற்றின் பக்கங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.  

   மரங்களை கடவுளாக, கடவுளரின் வடிவங்களாகக் கருதி வழிபடும் மதங்களும் இதனால்தான் மரம் வளர்ப்பை வலியுறுத்தின.  வில்வம் என்றால் சிவபெருமானுடைய வடிவாகவும், வேம்பை மாரியம்மனுடைய வடிவாகவும், அரசமரத்தை பெருமாளின் வடிவமாகவும் இன்றும்  நாம் வழிபட்டு வருகிறோம்.  நாகரும், பிள்ளையாரும் மரத்தடிகளில் நிரந்தரமாக இடம் பிடித்துள்ளனர்.  பிள்ளையாருக்கு அருகம்புல்லும், எருக்கும், பெருமாளுக்கு துளசி இலையும், விருந்து என்றால் வாழை இலையும், விசேடமான பண்டிகைகள் என்றால் மாவிலையும் மறவாமல் இடம்பெறுகின்றன.  கிறித்துவத்திலும், பனை ஔலைகளால் ஆன குருத்தோலை ஞாயிறும், ஔசன்னாத் திருநாளும் இன்றும் சிறப்பாக கிறித்துவர்களால் அனுசரிக்கப்படுகிறது. 

   இப்படி பலவிதங்களில் நம் வாழ்க்கையோடு நெருங்கிய உறவுடைய மரங்களுடைய பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம்.  மரங்களுக்கே இவ்வளவு பெருமை என்றால் அவை தரும் நிழக்கு எவ்வளவு நன்மைகள் இருக்கின்றன தெரியுமா?  ‘ நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்’ என்று ஒரு பழமொழியே இருக்கிறது.  ஆனால் அறிவியல்பூர்வமாக மரநிழலுக்கு அளப்பெரிய நன்மை செய்யும் பண்புகள் இருக்கின்றன.  வாழ்வியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மரநிழல் மனிதனுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்கிறது.  மருத்துவ ஆய்வுகளின்படி, மரநிழல் மனிதனின் இரத்தக்கொதிப்பையும், மன அழுத்தத்தையும் பெருமளவில் குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.  

மரங்களின் நிழல்  குளிர்ச்சியைத் தருகிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.  ஆனால் இது சூழலின் வெப்பநிலையைக் குறைப்பதற்குப் பெரிதும் பயன்படும்.  நகரங்களில் உருவாகும் நச்சுவாயுக்களான நைட்ரஜனின் ஆக்சைடுகள், காற்றில் பரவும் புகையில் கலந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத நுண்துகள்கள் போன்றவற்றறை சுத்திகரிப்பதற்கு மரங்களைவிட்டால் நமக்கு வேறு வழியில்லை.  

கான்கிரீட் கட்டிடங்களில் சூரிய வெப்பம் விழும்போது அது பிரதிபலிக்கப்பட்டு இருக்கும் வெப்பநிலையைவிட நகரங்களில் வெப்பநிலை அதிகமாக்கப்படுகிறது.  நடுப்பலல்நேரங்களில் இதனால் நகரங்களில் வெப்பநிலை மிக அதிகமாக உள்ளது.  மரங்கள் இருந்தால் அவை தரும் நிழல் இந்த வெப்பநிலையை மூன்று முதல் ஐந்து டிகிரி வரை குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.  மரநிழலில் உள்ள இடங்கள் 0.04 டிகிரி  முதல் 2 டிகிரி செண்டிகிரேடுவரை அந்த இடத்தின் வெப்பநிலையைக் குறைப்பதாகவும், 5மில்லியன் சதுரமீட்டர் பரப்பளவுள்ள இடத்தில் விழும் மரநிழல் 8டிகிரி செண்டிகிரேடு வரை நிழல் விழும் இடத்தின் வெப்பநிலையைக் குறைக்கிறது என்றும் அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.  இதேபோல் குளிர்காலங்களில் ஸமோக் எனப்படும் கடும்பனிமூட்டம் நகரங்களில் உருவாவதையும் மரநிழல் தடுப்பதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். 

   நகரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது நீண்டு விரிந்து செல்லும் தார்சாலைக்கள்தான்.  இந்த சாலைகளை அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் நிலக்கரியின் பிரித்தெடுப்பில் உருவாகும் கழிவான தாரில் எளிதில் ஆவியாகும் அங்கப்பொருள்கள்(valatile organic compounds) உள்ளன.  இந்தப் பொருள்கள் பெரும்பாலும் கார்பனும், ஹைடிரஜனும் அறுங்கோண வடிவில் இணைந்துள்ள பென்சின் என்ற ஹைடிரோகார்பன் மூலக்கூறின் அடிப்படையில்தான் அமைந்துள்ளது.  இந்தப் பொருள்கள் நாம் சுவாசிக்கும்போது உள்ளே சென்று சுவாசக்கோளாறுகள், சிறுநீரகப் பாதிப்புகள், குரோமோசோம்களின் அமைப்பில் பாதிப்புகள் போன்றவற்றைத் தோற்றுவிக்கின்றன.  இந்த பாலிசைக்கிளிக் கரிமப்பொருள்கள் (poly cyclic hydro carbons) புற்றுநோயைத் தோற்றுவிக்கும் இயல்புடையவை.  பகலில் வெப்பமண்டல நாடுகளில் அதிகமாகக் காணப்படும் வெப்பநிலையால் இந்த பாலிசைக்கிளிக் பொருள்கள் எளிதாக ஆவியாகி, காற்றில் உள்ள நுண்துகள்களுடன் இணைந்து, சுவாசக்காற்றின் வழியாக நம் உடலை அடைகின்றன. 

 மரங்கள் மிகுந்த சாலையில் உருவாகும் நிழல் இந்த சாலையின் வெப்பத்தைக் குறைத்து,, விஷத்தன்மையுள்ள இந்த வேதிப்பொருள்கள் ஆவியாகி, காற்றில் கலப்பதைத் தடுக்கின்றன.  தார் ஆவியாவது தடைசெய்யப்படுவதால் சாலையின் ஆயுளும் நீட்டிக்கப்படுகிறது.  அடிக்கடி சாலைகளைப் பழுது பார்க்க செலவிடப்படும் பணமும் மிச்சமாகிறது.  தீங்கு செய்யும் இந்த பாலிசைக்கிளிக் நச்சுப்பொருள்கள் பிறக்கும் மற்றொரு இடம் வாகனங்கள்.  இவை பயன்படுத்தும் பெட்ரோலியம், டீசல், என்ஞின் ஆயில் போன்றவற்றில் இது அதிகமாக உள்ளது. 

 எரிபொருள் எரியும்போதும், எரிபொருள் செல்லும் குழாய்கள் மற்றும் எரிபொருள் சேமித்து வைக்கப்படும் டாங்க் ஆகியவற்றிலும் இந்த நச்சுப்பொருள் ஆவியாகி காற்றில் கலக்கின்றன.  இவ்வாறு வெளியேறும் பாலிசைக்கிளிக் ஹைடிரோகார்பன்கள் 16% என்று கணக்கிடப்பட்டுள்ளது.  மரநிழலில் வாகங்கள் நிறுத்தி வைக்கப்படும்போது வெப்பம் குறைவதால் இந்த நச்சு ஆவியாவது பெருமளவில் குறைக்கப்படுகிறது.  மேற்கித்திய நாடுகளில் இதனால்தான் வாகனங்கள் நிறுத்தும் இடத்தின் மொத்தபரப்பில் 50% மரநிழல் இருக்கவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

    வெறும் நிழல் மட்டுமே இப்படிப்பட்ட அரிய செயல்களைச் செய்யும்போது மரம் என்ன செய்கிறது?  மரங்களின் இலைகளில் கண்களுக்குப் புலப்படாத க்யூட்டிக்குகள் எனப்படும் நுண்துவாரங்கள் உள்ளன.  இவற்றின் வழியாக நீர் ஆவியாகி வெளியேற மரநிழல் குளிர்ச்சியைத் தருகிறது.  இதே நுண்துளைகள் வழியாக காற்றில் கலந்துள்ள நச்சுவாயுக்களான கார்பன் மோனோ ஆக்சைடு,  நைட்ரஜனின் ஆக்சைடுகள், சல்பர் டை ஆக்சைடு போன்றவை உறிஞ்சப்பட்டு, தாவரத்தில் உள்ள நீரில் கரைந்துவிடுகிறது.  1991ல் அமெரிக்காவில் சிகாகோவில் செய்யப்பட்ட ஆய்வுகள் அங்குள்ள மரங்கள் 170டன் கார்பன் மோனோ ஆக்சைடையும், 93டன் சல்பர் டை ஆக்சைடையும், 98டன் நைட்ரஜன் டை ஆக்சைடையும் உறிஞ்சி காற்றைத் தூய்மையாக்கின என்று கூறுகின்றன.  

இதே வேலையை கருவிகள் உதவியோடு தொழில்நுட்பத்தால் செயல்படுட்த்தினால் பில்லியன் கணக்கில் டாலர்களைச் செலவிடவேண்டியிருக்கும்.  காற்றில் கலந்துள்ள நுண்துகள்கள் மரஇலைகளில் படிந்துவிடுவதால், இலைகள் உதிரும்போது, இவை மண்ணுடன் கலந்துவிடுகின்றன.  1991ல் நடந்த ஆய்வுகள் சிகாகோவில் உள்ள மரங்கள் அந்த வருடத்தில் மட்டும் 10மைக்ரோமீட்டர் அளவுள்ள நுண்துகள்களை காற்றிலிருந்து பிரித்தெடுத்துள்ளன என்பதையும் கூறுகிறது.  அதாவது 234டன்கள்.  75செ.மீ குறுக்களவு க்கொண்ட ஒரு மரம் ஒரு வருடத்திற்கு காற்றிலிருந்து பிரித்தெடுக்கும் திட, திரவ நுண்துகள்களின் அளவு 104கி.கி ஆகும். 

   இவ்வாறு மரமும், அதன் நிழலும் மனிதனுக்கு அளப்பெரிய பயன்களைத் தருகிறது.  இனியாவது மரங்களை வெட்டாமல் நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்து மறைவதற்குள் ஆளுக்கொரு மரத்தையாவது நட்டு விருட்சமாக்குவோம். 

                                                                                                       -சிதம்பரம் ரவிச்சந்திரன்

No comments:

Post a Comment