Monday, 30 May 2016

பட்டினபாக்கத்தில் 45 நிமிடம்பட்டினபாக்கதில் உள்ள நீர்நிலையை, குட்டை அல்லது குளம் என்று அழைக்க வேண்டுமா என்று தெரியவில்லை. இன்று காலையில் வந்த நாளிதழில் பட்டினப்பாக்கம் ஏரியில் வெயிலையும் பொருட்படுத்தாமல் இறை தேடும் கூழைகடாக்கள் என்று படத்துடன் செய்தி வெளிவந்ததையொட்டி பைனாகுலர், கேமரா, குறிப்பு நோட்புக் எடுத்துகொண்டு கிளம்பிவிட்டேன். பட்டினப்பாக்கம் சென்று வண்டியை நிறுத்தி அங்குள்ள ஆட்டோ ஓட்டுபவர்களை கேட்பதுதான் நன்று என்று பட்டினப்பாக்கம் ஏரி எங்கு இருக்கிறது என்ற என்னுடைய கேள்விக்கு? ஏரியா? என்று அவர்கள் இழுக்கும்பொழுதே தெரிந்துவிட்டது இங்கு ஏரியெல்லாம் இல்லை என்று அதேயே அவர்களும் சொன்னார்கள்.

நான் குளம்,குட்டையாவது இருக்கிறதா என்றேன் முன்னே சென்று, சிக்னல் இடது பக்கம் திரும்பினால் குட்டை போல் இருக்கும் என்றார்கள்.சொன்னது போலவே இருந்தது ஆனால் ஒரே ஒரு பறவைகளும் அதில் இல்லை. அங்கு இருந்த ஒயின் ஷாப் முன்பு நிறைய மனிதர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஒயின் ஷாப் எல்லாம் மதியம் பன்னிரண்டு மணிக்குதான் திறக்கும் என்பது அப்பொழுதுதான் நினைவுக்கு வந்தது. நான் அங்கு இருந்தபொழுது மணி 12.15pm.

அதையும் தாண்டி சென்றேன் கடல் வந்துவிட்டது இதற்குமேல் செல்ல முடியாது என்ற காரணத்தால் திரும்பி வந்தவழியாக வந்து மெயின் ரோட்டுக்கு வந்து நின்று, பாலத்தின் இடது பக்கம் உள்ள நீர்நிலையில் தான் பறவைகள் இல்லை அதனால் பாலத்தின் வலது பக்கத்தில் உள்ள நீர்நிலையில் பறவைகள் உள்ளதா என்று வண்டியை யு டேர்ன் போட்டு வந்து நின்றபொழுதே கூழைக்கடாகள் கண்ணில் தென்பட்டது இது தான் நாளிதழில் வந்த இடம் என்று  தெரிந்துவிட்டது.இந்த நீர்நிலையை சுலபமாகவே கண்டுபிடிக்கலாம்.ஏரி என்று கேட்டதால் சுற்றவேண்டி வந்தது. சாந்தோம் சர்ச்ல் இருந்து வரும்பொழுது பட்டினப்பாக்கம் சிக்னல் தாண்டி வரும் பாலத்தின் அடியில் உள்ள நீர்நிலைதான் பறவைகள் உள்ள இடம். பலத்தின் இடது புறத்தில் பார்க்காமல் வலது புறம் வந்து நீர் நிலையை பார்த்தல் போதும்.
ஏறக்குறைய நாற்பத்தைந்து நிமிடங்கள் மேல் நின்று பறவைகளை நோக்கியதில் பதிமூன்று பறவைகளை வரை குறிப்பெடுக்க முடிந்தது.

1.கூழைக்கடா (Pelican)- 17 Nos

2.மஞ்சள் மூக்கு நாரை (Painted Stork)- 1 No

3.சிறிய கொக்கு (Little Egret)-10 Nos

4.பவள கால் உள்ளான் (Black Winged Stilt)- 1 No

5.தாழைக்கோழி (Common Moorhen)- 1No

6.நீலத் தாழைக்கோழி (Purple Swamphen)- 4 Nos

7.சிகப்பு ஆள் காட்டி பறவை (Red-Wattled Lapwing)- 1 No

8.வென்மார்பு இலைக்கோழி (White Breasted Water Hen)- 1 No

9.முக்குளிப்பான் (Little Grebe)- 1 No

10.குயில் (Koyel)- 3Nos பறந்த நிலையில் பறவை

11.செம்போத்து (Pheasant Coucal)- 1 No பறந்த நிலையில் பறவை

12.சிறிய நீர்க்காகம்(Little cormorant)-1 No பறந்த நிலையில் பறவை

13.மாட புறா (Blue Rock Pigeon) பறந்த நிலையில் பறவை

                                                                      -செழியன்

Thursday, 19 May 2016

பறவை நோக்குதல் : புதிய தொடர் -1பொழுதுபோக்கில் இவற்றையெல்லாம் சேர்க்கலாம்- சினிமாவுக்கு போவது, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, விஷயமே இல்லாமல் பக்கத்து வீட்டு மனிதர்களுடன் பேசிக்கொண்டிருப்பது, சும்மாவே உட்கார்ந்திருப்பது இவையெல்லாம் அன்றைய பொழுதை .... எப்படியாவது போக்க வேண்டும் என்று பெரும்பாலானோர் செய்து கொண்டிருப்பது. இவற்றில் பறவை நோக்குதலை சேர்க்கலாமா என்றால்? கண்டிப்பாக சேர்க்கலாம். ஆரம்பத்தில் பொழுதை போக்கவாது பறவைகளை பாருங்கள் பிறகு அவை உங்களின் அன்றாட செயல்களில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும்.
பறவைகளை ஏன் பார்க்க வேண்டும் அதனால் என்ன நன்மை என்று நீங்கள் நினைத்தால்? வேலைக்கு போனால், சம்பளம் என்ற நேரடியான பலன் இதில் இல்லைதான் ஆனால் நம் வாழ்க்கை முறையை சம விகிதத்தில் கொண்டு செல்வதில் (உதாரணமாக பூச்சிகளை கட்டுபடுத்துவதில்) முக்கிய பங்கு பறவைகள் வகிக்கிறது.யோசித்து பாருங்கள் மனிதர்கள் எங்களை சுடுகிறார்கள் என்று பறவைகள் நான்கு நாட்கள் பூச்சிகளை சாப்பிட மாட்டோம் என்று ஸ்ட்ரைக் செய்தால் நம் நிலை?
வீட்டை விட்டு வெளியே வரமுடியுமா? அப்படியே வந்தாலும் நம்மை சுற்றி  பூச்சிகளே பறந்து கொண்டிருக்கும் அவையே நாள் ஆக, நாள் ஆக பூச்சிகளின் தேசத்தில் தான் நாம் வாழ வேண்டி வரும். வாழ முடியுமா? இந்த இடத்தில பறவை மனிதர் என்று அழைக்கபடும் சலிம் அலி சொன்னது நினைவுக்கு வருகிறது- “மனிதர்கள் இன்றி பறவைகள் வாழும் ஆனால் பறவைகள் இன்றி மனிதனால் வாழமுடியாது”.
பெரும்பாலும் பறவை நோக்குதல் புத்தகங்களில் பல்வேறு பறவைகளை பற்றி படத்துடன் கொடுத்து அவற்றின் சிறிய அறிமுகங்கள் இருக்கும். ஆனால் இந்த தொடர் சிறிது மாறுபட்டு கீழ் கண்டவாறு எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். கொஞ்சம் விரிவாக எல்லாவற்றையும் சொன்னால் புதியவர்களும் பறவை நோக்குதலில் ஈடுபாடு ஏற்பட வாய்புண்டு என்ற எண்ணம்தான். அதனால் எனக்கு தெரிந்த மொழிலியே எழுதுகிறேன்.   

பறவை நோக்குதல் என்ற இந்த தொடரில்:

1.பறவைகளின் வகைகள் மற்றும் குறிப்புகள் 

2.பறவை பார்ப்பதற்க்கான நெறிமுறைகள் மற்றும் காலநேரம் 

 3.எது சிறந்த பைனாகுலர்

4.பறவை சம்பந்தமான புத்தகங்கள் மற்றும் இதழ்கள் 

5.பறவை சங்கங்கள்

6.தமிழ்நாட்டின் பறவை சரணாலயங்கள் 

7.இந்திய பறவை சரணாலயங்கள்

8.பறவைகள் இடமான-ஏரி-குளம்-கழிமுகங்கள்-சதுப்புநிலங்கள்

9.பறவைகள் பற்றிய படிப்புகள்
 
10.பறவை நிபுணர்களின் பேட்டிகள்

11.பறவை மனிதர்களின் சந்திப்புகள் 

12.பறவை இணையதளங்கள்-தமிழ்/ஆங்கிலம்  

13.கேள்வி-பதில் 

14.IUCN - RED LIST-BIRDS (அழிவு நிலையில் உள்ள /அழிந்து போன  
  பறவைகள்)

இவற்றை எல்லாம் நாம் தொடர்ச்சியாக அடுத்தடுத்த கட்டுரையில் பார்ப்போம். பறவைகளின் வகைகளை மட்டும் கொடுத்தால் படிக்க போர் அடித்து விடும் என்பதால் எல்லாவற்றையும் கலந்தே எழுது வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறேன்.

பறவை பார்த்தல் என்று சொல்லாமல் ஏன் பறவை நோக்குதல் என்று  சொல்கிறார்கள் என்ற கேள்வியை நாமே கேட்டுக்கொண்டு அதற்கான பதிலை பார்ப்போம் அங்கே ஒருத்தர் நிற்கிறார் அவரை பாருங்களேன், பிள்ளைகளா தெருவில் யானை போகுது வந்து பாருங்கள் என்று சொல்லுவோம். இதில் ஒரு சில நிமிடங்களில் முடிந்து விடுவதை நாம் பாருங்கள் என்று சொல்லுவோம் அவற்றை பற்றி கேட்டால் (அதாவது அந்த ஆளை அல்லது யானையை பற்றி) நமக்கு எதுவும் தெரியாது.ஏன் என்றால் ஒரு சில நிமிடங்களில் என்ன சொல்லிவிட முடியும் அதே அந்த ஆளை அல்லது யானையை ஐந்து நாள் பின் தொடர்ந்து செல்லுங்கல், ஐந்து நாள் முடிவில் அதே கேள்விக்கு நம்மிடம் நிறைய பதில் இருக்கும்.இதை தான் பார்ப்பதற்கும் நோக்குவதற்கும் உள்ள வித்தியாசம்.
பறவையை ஒரு சில நிமிடங்களில் பார்த்தால் அவற்றை பற்றி ஒன்றும் தெரியாது அதே அவற்றை தொடர்ந்து நோக்கும்போது நிறையை தகவல்கள் நமக்கு கிடைக்கும் இவ்வளவுதான் வித்தியாசம்.அதனால்தான். இதை ஆங்கிலத்தில் BIRD WATCHING என்று சொல்லுகிறார்கள், BIRD SEEING இல்லை.
பறவை பார்ப்பதை யார் ஆரம்பித்தார்கள் என்று யோசித்தால் இதற்கு முன்னோடி ஆங்கிலேயர்கள் என்பதே முற்றிலும் சரி(அவர்களின் பெயர்களை எல்லாம் இப்போதைக்கு தவிர்த்து விடுகிறேன்) அதன் பிறகே இந்தியாவில் இவை பரவ ஆரம்பித்தது.ஆங்கிலேயர் இந்தியாவை விட்டு சென்று அறுபத்து ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இன்றும் பறவை நோக்குதல் என்பது இந்தியாவில் மேல் தட்டு மக்கள் விஷயமாகவே உள்ளது.
பறவைகளை பார்க்க அதற்கென்று நேரம் ஒதுக்கி சென்றிருக்கிறீர்களா? என்று கிராமங்களில் உள்ளவர்களிடம் கேட்டுபாருங்கள். இதற்கான பதில்-இதற்கெல்லாமா நேரம் ஒதுக்குவார்கள் வேறு வேலை இல்லை எங்களக்கு என்றும் அவர்களுக்கு தெரிந்த பறவைகள் பற்றி அந்த வட்டார பெயரில் சொல்லுவார்கள் அதை தவிர மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவதோ அதை பற்றி விவாதிப்பதோ, பறவைகளை பாதுக்காக்க வேண்டும் என்பதோ அவர்களுக்கு தெரியாது அதனால் பறவை அவதானித்தால் இன்றும் இந்தியாவில் மேல் தட்டு மனிதர்களின் செயலாகவே உள்ளது.
பறவைகள் சம்பந்தமாக வெளிவரும் இதழ்கள்,பத்திரிகைகள்,புத்தகங்கள் மற்றும் இணையதளங்கள்,செயல்படும் சங்கங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே உள்ளது. அதனால் ஒரு பாமர மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கொஞ்சம் சிரமமே.தமிழில் ஒரு சில முயற்சிகள் நடந்திருக்கிறது ,நடந்துகொண்டிருகிறது ஆனால் மிக மிக குறைவே.இப்பொழுதுதான் காடு என்ற இரு மாத இதழ் வெளிவருகிறது மற்றும் காட்டுயிர் என்ற இதழும் வருகிறது அனால் காட்டுயிர் இதழிலேயே ஒரு வரி இப்படி செல்கிறது பொருளாதாரம் பல படும்பொழுது காட்டுயிர் இதழ் வரும் ஆனால் தொடர்ச்சியாக வருவது சிரமமே என்ற வரியும் உள்ளது. அதை தவிர தமிழில் வேறு எதுவும் இல்லை என்றே தெரிகிறது.மக்களுக்கு ஆர்வம் இருந்தால் தானே பறவை இதழ்கள் விற்பனையாகும்.
காகத்தின் கூடு 


ஒரு சிறு அறிமுகத்துடன் முடிப்போம் முதல் பாகத்தை:

நம் வீட்டை சுற்றியிருக்கும் பறவைகளை நாம் இதுவரை முழுவதும் பார்த்து இருக்க மாட்டோம் என்பதே உண்மை.வேண்டுமென்றல் நீங்கள் ஒரு நிமிடம் யோசித்து எழுதி  பாருங்கள் உங்கள் வீட்டை சுற்றி என்ன என்ன பறவைகளை இதுவரை பார்த்து இருக்கிறோம் என்று. பிறகு இரண்டு நாள் உன்னிப்பாக அதே வீட்டை சுற்றி இருக்கும் பறவைகளை பாருங்கள் முதலில் சொன்ன பறவைகளின் எண்ணிக்கை விட இப்பொழுது இரண்டு அல்லது மும் மடங்கு எண்ணிக்கை உயர்ந்து இருப்பதை கான முடியும்.
இவை உண்மையும் கூட பெரும்பாலும் நம் கண்களுக்கு புலப்படுவது காகம்,தவிட்டு குருவி,மைனா,புறா,சில சமையும் சிட்டு குருவி, வாத்தை நம் தெருவில் யாராவது ஓட்டி செல்லும்பொழுது, நம் தலை எப்பொழுதாவது மேல் நோக்கி நிமிர்ந்தால் “பருந்து” இப்படி கை விட்டு என்னு அளவுக்கே பறவைகளின் எண்ணிக்கை இருக்கும்.அதற்கென்று சிறுது நேரம் ஒதுக்கி உன்னிப்பாக பறவைகளை கவனியுங்கள் பிறகு எண்ணிக்கையில் நிறைய மாற்றம் தெரியும்.
முதலில் நம் வீட்டை சுற்றி இருக்கும் பறவைகளை முழுவதும் பார்த்து விட்டு பிறகு வேறு இடங்களுக்கு செல்லுவோம்.இந்தியாவில் சிறந்த காட்டுயிர் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் அவர்கள் அவர் வீட்டை சுற்றி இதுவரை 33வகை பறவைகள (புள்ளினங்களை) பார்த்துள்ளதாக ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.இப்பொழுது இதை விட அதிகமாக பார்த்திருக்க கூடும். அதனால் நம் வீட்டை சுற்றி இருக்கும் பறவைகளின் எண்ணிக்கை முழுவதும் நமக்கு தெரிந்து இருக்க வேண்டும்.
பறவைகளை பார்க்ககூடிய இடங்கள் என்று -தமிழ்நாடு,மற்றும் இந்தியாவில் நிறைய உள்ளது.உதாரணமாக குளம்,ஏரி,ஆற்று படுகைகள்,சதுப்பு நிலங்கள்,காடு,மலை பிரதேசங்கள்,சரணாலயங்கள்,வயல் வெளிகள்,கழிமுகங்கள்,புதர் காடுகள், மனிதன் செயற்கையாக உருவாக்கிய மின் கம்பங்கள், இவ்வளவு இடங்கள் இருப்பதால் நம்மால் சுதந்தரமாக எல்லாவற்றையும் பார்த்து ரசிக்க முடியும்.அதற்கு முன் நம் வீட்டை சுற்றி இருப்பதை முதலில் பார்த்து விடுவோம்.

உங்கள் வீட்டை சுற்றி மேலே சொன்னவற்றில் என்ன என்ன  இடங்கள் உள்ளது என்று ஒரு லிஸ்ட் போடுங்கள்.பிறகு அங்கு சென்று பார்த்து குறிப்பெடுங்கள்.அதற்கு முன் நிறைய பறவைகளை நம்மால் இனம் காணமுடியாது மற்றும் அவற்றின் பெயரும் நமக்கு தெரியாது என்பதும் மிக பெரிய குறையாக இருக்கும்.அதனால் பறவை பெயர்கள் தெரிந்தவர்களுடன் சென்றால் அந்த குறை நீங்கி விடும்.அப்படி யாரவது இல்லையென்றால் அதற்கும் பதில் உள்ளது. பறவை சங்கங்கள் உள்ளது அவற்றில் சேர்ந்து தெரிந்து கொள்ளலாம். கிராமத்தில் இருப்பவர்கள் அருகில் இந்த சங்கங்கள் இருக்காது அதனால் நீங்களே உருவாக்கி மற்றவர்களுக்கு சொல்லிகொடுக்கலாம். அதற்கு முன் தமிழில் பறவை அறிமுக புத்தகங்கள் உள்ளது மற்றும் முடிந்தவர்கள் ஆங்கிலத்தில் நிறைய பறவை புத்தகங்கள் உள்ளது அதை படித்து தெரிந்து கொள்ளவது சிறந்ததாக இருக்கும்.

  நம் வசதிக்காக பறவைகள் இப்படி வகைப்படுத்தலாம்  :

- நம் வீடு, வயல்வெளி மற்றும் புதர் சுற்றி இருக்கும் பறவைகள்
 காகம்,குருவி,மைனா,கொக்கு (காட்டில் வாழும் மைனாவும் உண்டு)

- நீர் நில பறவைகள்:
 (ஏரி,குளம்,ஆறு,சதுப்பு நிலங்கள்,கழி முகங்கள்)
 வேடந்தாங்கலில் உள்ளவை எல்லாம் நீர் நில பறவைகள்.

- காடு மற்றும் மலை பிரதேச பறவைகள்-
நிறைய பறவைகளை இங்கு காணமுடியும் அவை எல்லாம் பிறகு  
பார்ப்போம்.மேலே சொன்ன இடங்களில் நிறைய உட்பிரிவு இடங்கள் இருந்தாலும் இவையே இப்போதைக்கு போதும்.

இந்த தொடர் புதியவர்களுக்கே என்பதால் பறவை நோக்குபவர்களுக்கு(BIRD WATCHER) இது தெரிந்த விஷயமாகவே கடந்து செல்வீர்கள்.தமிழில் தொடரை ஆரம்பிப்போம் எப்படி செல்கிறது என்று,வரும் மின் அஞ்சல் மற்றும் பின்னுட்டங்களை வைத்து யோசித்து செயல்படலாம் என்றும் அல்லது இவையே சரியாக இருந்தால் அப்படியே தொடரலாம் என்ற நினைப்பும் இருக்கிறது. 

 முடித்து கொள்ளுங்கள் முதல் பாகத்தை என்று நீங்கள் சொல்வது 
 தெரிகிறது அதனால் .............
                                                            -தொடரும் 

                                                                                                                          -செழியன் 

Sunday, 1 May 2016

இயற்கையை நேசிக்க கற்றுக்கொடுங்கள்..உலகம் ரொம்பவும் கெட்டுப்போய்விட்டது.. அப்போதெல்லாம் இப்படி இல்லை.. சித்திரையில் வெய்யில் கொளுத்தியது..  ஆடியில் காற்றடித்தது.. ஐப்பசியில் அடைமழை பெய்தது.. கார்த்திகையில் தூறல் இருந்தது.. மார்கழியில் குளிரடித்தது.. இப்படி எழுபது, என்பது வயது பெரியவர்கள் இன்றும் புலம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.  இதில் எந்த சந்தேகமும் இல்லை.  அவர்கள் சொல்வதெல்லாம் உண்மையிலும் உண்மைதான். ஆனால் இன்றைய குழந்தைகளிடம் இயற்கையை பற்றி நம்மில் எத்தனை பேர் பேசுகிறோம்..? எத்தனை குழந்தைகளுடைய வீட்டில் வாங்கி வைக்கும் காய்கறிகளின் பெயர்களை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கிறோம்..?  அவர்கள் தினமும் சாப்பிடும் அரிசி சோறு எதிலிருந்து வந்தது என்பதுகூட அவர்களுக்கு சரியாக தெரியாது.  இதற்கு அவர்களை குற்றம் சொல்லி பயன் இல்லை.  எல்லாவற்றுக்கும் காரணம் நாம்தான்.. 

Photo-Kalyan Varma
ஆட்டுக்கல்லையும், அம்மிக்கல்லையும், உரலையும், உலக்கையையும் அறியாத இன்றைய இளையதலைமுறையினர் அரிச்சுவடிகளில்கூட இவற்றை பற்றி படிப்பதில்லை. அணிலும், ஆடும், இலையும், ஈயும், உரலும், ஊதலும் எல்லாம் இடம்பெற்றிருந்த அரிச்சுவடி புத்தகங்கள் இன்று காலத்தின் ஔட்டத்தில் எங்கோ தொலைந்துபோயிருக்கின்றன.. உடுத்தும் உடையும், உண்ணும் உணவும், குடிக்கும் நீரும், சுவாசிக்கும் காற்றும் எங்கிருந்து வந்தன என்பதை பற்றிய உணர்வே இல்லாமல் இயற்கையை வாசிக்கத்தெரியாத ஒரு தலைமுறைதான் இன்று வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.. பிச்சிப்பூவையும், செம்பருத்தியையும், மருதாணியையும், மரிக்கொழுந்தையும் பற்றி எதுவுமே தெரியாத தலைமுறைதான் இது.. மஞ்சளும், இஞ்சியும் என்ன என்று தெரியாத இவர்கள் சாப்பிடுவது எதுவோ அது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையான விழிப்புணர்வு கூட இல்லாமல் இயற்கை எழில் கொஞ்சும் இந்த பூமியில் வாழ்க்கையின் இனிமையான இளம்பருவத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்..

எத்தனை பெற்றோர்கள் இன்று தங்கள் குழந்தைகளுக்கு யானையையும், புலியையும் பற்றி சொல்கிறார்கள்..?  அடுத்த அறையிலும், மேல்மாடியிலும் இருக்கும் குழந்தைகளை அலைபேசியில் அல்லவா சாப்பிட அழைக்கிறார்கள் இன்றைய அம்மாக்கள்..?  அறிவியல் முன்னேற்றம் இங்கே துஷ்பிரயோகம் அல்லவா செய்யப்படுகிறது? ஒரு நாளில் எத்தனை  நிமிடங்கள் அப்பா, அம்மாக்கள் தங்கள் குழந்தைகளிடம் பேசுவதற்காக செலவழிக்கிறார்கள்..?  தாய்மண்ணையும், தாயின் மடியின் சுகத்தையும் அறியாமல் வளரும் இன்றுள்ள இளையதலைமுறை எப்படி அந்த மண்ணையும், தாயையும் நேசிப்பவர்களாக இருக்க முடியும்..?  எத்தனை குழந்தைகளுக்கு இன்று புல்வெளிகளையும், அவற்றில் பறந்து திரிந்த தட்டான்பூச்சிகளையும், பட்டாம்பூச்சிகளையும் பிடித்து விலையாடத்தெரியும்..? மாறாக அவர்கள் கம்ப்யூட்டரில் துப்பாக்கிகளோடு எதிரியை சுட்டுக்கொல்வதிலும், வீழ்த்துவதிலும் அல்லவா தங்கள் இளமை பருவத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்..?  நெருஞ்சி முள் குத்த குத்த ஔடி விளையாடிய காலம் எல்லாம் காணாமல் போய்விட்டது இன்று..!  பொன் வண்டை பிடித்து தீப்பெட்டிக்குள் அடைத்துவைத்து அதற்கு அரிசி ஊட்டிவிட்டு அதை சாப்பிடச்சொன்ன கதைகளை எத்தனை அப்பா, அம்மாக்கள் தங்கள் குழந்தைகளிடம் சொல்லியிருக்கிறார்கள்..? காகத்துக்கு காலையில் சாப்பிடுவதற்கு முன்பு நாம் எத்தனை பேர் நம் குழந்தைகளிடம் அவற்றுக்கு சோறு போட்டுவிட்டு வரச்சொல்கிறோம்..?  குளிர்சாதனப்பெட்டிகளையும், துணி துவைக்கும் இயந்திரங்களையும், ஏர் கண்டிஷனையும் பார்க்கும் இந்த தலைமுறைக்கு மண்பானை தண்ணீரின் சுகமும், விசிறி காற்றின் இன்பமும், ஆற்றங்கரையில் தோய்க்கும்  கல்லில் துணியை தோய்ப்பதில் உள்ள ஆனந்தமும் எப்படி தெரியும்..? இன்றுள்ள குழந்தைகள் வானத்தில் வரும் நிலாவையாவது பார்த்திருப்பார்களா என்றால் அதுகூட சந்தேகம்தான்.. மின்னும் நட்சத்திரங்களும், நீல நிற வானமும், அதில் ஔடி விளையாடும் வெண்மையான மேகங்களும் எல்லாம் இவர்களுக்கு இணையதளத்தில் மட்டும்தான் பார்க்க தெரியும்.. 
 
photo-kalyan varma
சிறிய சிறிய பட்டன்களை அழுத்தி கணினியில் பெரிய பெரிய உலகங்களை கணினி திரையின் வழியாக பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தலைமுறை நாளை வளர்ந்து ஆளாகும்போது, விசாலமான இந்த உலகத்தில் சுருங்கிப்போன மானுட வடிவத்தில் பிறந்த இயந்திரங்களாகத்தான் வாழ்வார்கள்.. சக மனிதர்களின் வேதனைகளை இவர்களால் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்..? இந்த உலகம் நாளை நல்லபடியாக இருக்க வேண்டும் என்றால் அது இன்றைய இளம் தலைமுறையால் மட்டும்தான் முடியும். சொத்து சுகங்களையும், காரையும், பங்களாக்களையும் சேர்த்துவைப்பதில் என்ன பயன் இருக்கிறது..? யாருக்காக சேர்த்துவைக்கிறார்களோ அவர்கள் இந்த பூமியில் நாளை அவர்களுடைய காலத்தில் வாழமுடிந்தால்தானே அவர்களின் தாய், தந்தையர் சேர்த்துவைத்துவிட்டுச்சென்ற சொத்து சுகத்தால் பயன் இருக்க முடியும்..?  இருப்பதற்கு பூமியே இல்லாமல் போகும்போது காரும், காசும் பணமும் இருந்து என்ன பயன்..? இதை இன்றைய பெற்றோர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இயற்கையை நேசிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இயற்கையை வாசிக்கக் கற்றுக்கொடுக்க  வேண்டும். இயற்கையை சுவாசிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். தெருவில் இரங்கினால் போக்குவரத்து நெரிசலையும், வீட்டுக்குள் இருக்கும்போது கம்ப்யூட்டர் என்ற மாயாஜால உலகத்தையும், சாப்பிடுவதற்கு பிசாவையும், பர்கரையும், குடிப்பதற்கு பாட்டில் தண்ணீரையும், உடுப்பதற்கு உடம்பை சிறைப்படுத்தும் நவநாகரீக ஆடைகளையும், வாழ்வதற்கு எல்லாவிதமான வேலைகளையும் செய்துதரும் இயந்திரங்களையும் மட்டுமே பார்த்து வளரும் இந்த கால குழந்தைகள் நாளை பெரியவர்களாகும்போது பெரிதாக இந்த பூமியை காப்பாற்றுவதற்கு என்று எதை சாதித்துவிடப்போகிறார்கள்..? அதனால் இன்றே இப்போதே இன்றுள்ள பெற்றோர்கள் அவர்களுடைய குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.. இயற்கையை நேசிப்பதற்கும்,, கண்டுணர்ந்துகொள்வதற்கும் அவர்களுக்கு வாய்ப்புகளை நாம்தான் ஏற்படுத்தி தரவேண்டும்.. 

கணினியின் முன் 24மணிநேரமும் உட்கார்ந்துகொண்டு விளையாடும் குழந்தைகளை பல்லாங்குழியை நோக்கியும், தாயக்கட்டத்தை நோக்கியும் திருப்பி விடுங்கள். அவர்களை வெளியில் மண்ணில் இறங்கி விளையாட விடுங்கள்.  அப்போதுதான் புல்லையும், பூச்சிகளையும் பற்றி அந்த குழந்தை அனுபவித்து அறிந்துகொள்ள முடியும்.. பசுமையான சூழலை அவர்களுக்கு காட்டுங்கள்..  புல்வெளிகளை அவர்களுக்கு காட்டிக்கொடுங்கள்.. அரசமரத்தையும், வேப்பமரத்தையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்..  வீட்டு சமையலறைக்குள் அவர்களை அழைத்து சென்று அஞ்சரைப்பெட்டிக்குள் இருக்கும் அத்தனை மருத்துவகுணமுடைய பொருள்களையும் அவர்களுக்கு காட்டிக்கொடுங்கள்.. தாளிக்கும் கடுகில் இருந்து வாசனையின் அரசனான ஏலத்தை அவர்களுக்கு எடுத்துக்காட்டுங்கள்..  வெளியில் ஔடியாடி விளையாடி துளசியையும், தும்பைப் பூவையும், தட்டான்பூச்சியையும், தும்பியையும் அப்போதுதான் அவர்கள் அறிந்துகொள்வார்கள். 
 
இயற்கையை நேசிப்பவர்களால் மட்டுமே வாழ்க்கையில் நேசமுள்ளவர்களாக இருக்க முடியும்.. காக்கையும், குருவியையும் தெரிந்துகொள்ளாமலேயே வளரும் அவர்களுடைய பால பருவத்தை பெரியவர்களாகிய நாம் திருடிக்  கொண்டிருக்கிறோம்.. சத்துப்பற்றாக்குறையைப்போல இயற்கை சூழல் பற்றிய உணர்வின் பற்றாக்குறை இன்றைய குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.. இதை சரிசெய்வதற்கான மருத்துவம் பெரியவர்களாகிய நம் கையில்தான் இருக்கிறது..  இயற்கையை எப்போது நேசிக்கவும், சுவாசிக்கவும் தெரிகிறதோ அப்போதுதான் ஒரு குழந்தைக்கு உடல்நலமாகவும், மனநலமாகவும், படைப்பாற்றல் மிக்கவராகவும் வருங்காலத்தில் வாழமுடியும்..  

Photo-Kalyan Varma
தோட்டம் போடுங்கள்.. அதில் பூத்து சிரிக்கும் பூக்களை பார்க்கும்போது நம் உடலும் நலம் பெறுகிறது. மனமும் நலம் பெறுகிறது..  மரங்களையும், எல்லாவகையான செடிகளையும், பழங்களையும், வீட்டில் தோட்டம் போட்டு தாவரங்களை நட்டு வளருங்கள். அவற்றோடு உங்கள் குழந்தைகளும் வளர்வார்கள். இலைகளையும், பூக்களையும், கூழாங்கற்களையும், கிளிஞ்சல்களையும் பொறுக்கி விளையாட அவர்களை அனுமதியுங்கள். மரங்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகளை குழந்தைகளுக்கு நேரில் அழைத்துசென்று அவற்றின் பெயர்களையும் அவற்றின் பெயர்களையும் குணங்களையும் பற்றி குழந்தைகளுக்கு எடுத்துச்சொலுங்கள்.. வளரும் செடிகளோடும், வளர்ந்துநிற்கும் மரங்களை குழந்தைகளுக்கு எடுத்துச்சொல்ல  வேண்டும்..  வாரத்துக்கு ஒரு தடவையாக மலைகள், வனங்களுக்கு அவர்களை அழைத்து செல்லுங்கள்..

மரங்களையும், செடிகளையும், மரங்களையும், புழுக்களையும், பூச்சிகளையும்,  பறவைகளையும், விலங்குகளையும் குழந்தைகளுக்கு நேரில் காட்டி அவற்றின் பெயர்களை சொல்லிக்கொடுத்து அவற்றின் குணநலன்களை பற்றியும் கூறவேண்டும். மார்க்கெட்டுக்கு கூட்டிச்சென்று அங்கேயிருக்கும் காய்களையும், பழங்களையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்திவைக்க வேண்டும். அவைகள் எங்கு விளைகின்றன என்றும் எடுத்துக்கூற வேண்டும்.  முடிந்தால் சுற்றுலா செல்வதைப்போல நம் சொந்த கிராமங்களுக்கு பொங்கல்விடுமுறையில் குழந்தைகளை கூட்டிச்சென்று வயல்வெளிகளையும், கிணறுகளையும் அவர்களுக்கு காட்டவேண்டும். குளங்களையும், ஏரிகளையும், ஆற்றையும், அதன் கரையில் வளர்ந்திருக்கும் ஆலமரங்களையும், அரசமரத்தையும், நாவல் மரங்களையும் அவர்களுக்கு காட்ட வேண்டும். மணல்தரையில் கிளிஞ்சல்களையும், சங்குகளையும் பொறுக்கி எடுத்து விளையாட அவர்களுக்கும் ஒரு வாய்ப்பை அவர்களின் இளம் வயதில் ஏற்படுத்தித் தரவேண்டும். 

வீட்டிலேயே இடமில்லை என்றாலும்கூட தொட்டிகளிலேயே செடிகளை நட்டுவைத்து வளர்த்து ஒரு அழகான தோட்டம் போட அவர்களையும் அதில் ஈடுபடுத்த வேண்டும். காடுகளுடன் உள்ள மலைப்பகுதிகளுக்கும், கடற்கரை பகுதிகளுக்கு அவர்களை ஒருவருடத்துக்கு ஒரு தடவையாவது கூட்டிக்கொண்டுபோய் இயற்கையின் வெவ்வேறுவிதமான பரிணாமங்களின் அற்புதங்களையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.  பிறந்த நாள், தீபாவளி, பொங்கல், புதுவருடம் போன்ற சிறப்பு நாள்களில் இயற்கையை பற்றிய புத்தகங்களையும், குறுந்தகடுகளையும் அவர்களுக்கு பரிசாக தந்து இயற்கையின் பக்கம் அவர்களை அழைத்துவர வேண்டும்.  கை லென்சுகளையும், பைனாக்குலர்களையும், டெலஸகோப்பையும், கேமராவையும் அவர்களுக்கு பழக்கப்படுத்தித் தரவேண்டும்.

மூங்கில் காடுகள் நடத்தும் இசைக்கச்சேரியையும், அதற்கு தாளம் போடும் வண்டுகளின் முனகல்களையும் அவர்கள் கேட்டு ரசிப்பதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும்.   கடலலைகளின் ஔசையில் எழும்பி விழுந்து மறுபடியும் எழும்பி எழும்பி வரும் படகுகளின் நாட்டியத்தை அவர்களுக்கு காட்டித்தர வேண்டும். குயில்கள் பாடலையும், கிளிகளின் கொஞ்சலையும் அவர்கள் அறிந்துகொண்டால் பிறகு போலியான கணினி திரைகளை தேடி அவர்கள் ஒருகாலும் ஔடமாட்டார்கள்.  காலை இளம் கதிரின் வெளிச்சக்கீற்றுக்கள் ஏற்படும் சுகத்தை அவர்கள் அனுபவிக்க அனுமதியுங்கள்..   

தென்றல் தாலாட்டும் தென்றல் தலை வருடிவிட்டு தென்னங்கீற்றுகளின் அழகை அவர்கள் கண் குளிர காண வாய்ப்பு தாருங்கள்..  முடிந்தால் வாரவிடுமுறைகளில் இரவுநேர நட்சத்திரங்களையும், நிலாவையும் கண்டு ரசிக்க அவர்களை அழைத்து செல்லுங்கள்.. உங்கள் குடும்பத்தில் இளமைக்கால கிராம வாழ்க்கையின் அனுபவங்களை அவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். சூரிய குடும்பத்தைப் பற்றியும் அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.. 

photo-Kalyan varma
நம்மோடு சக உயிரினங்களாக வாழ்ந்து வந்த உயிரினங்களை போற்றி பாதுகாத்த நம் முன்னோர்கள் பின்பற்றிய வழிகளில் முடிந்ததை அவர்களையும் பின்பற்ற ஊக்குவியுங்கள். காலையில் காகத்துக்கு சோறு படைத்தல், குருவிகளுக்கும், புறாக்களுக்கும் அரிசி மணிகளையும், கிண்ணத்தில் நீரையும் வைப்பது, வீட்டுவாசலில் அரிசிமாவால் கோலம் போடுவது போன்ற செயல்களை அவர்கள் செய்ய சொல்லி பழக்கிவிடுங்கள்.. வீட்டு தோட்டம் போட்டு அவர்களுக்கு பிடித்தமான பூச்செடிகளையும், காய்கறி செடிகளையும் அவர்கள் கையாலேயே நட்டு வளர்க்க சொல்லுங்கள்.  இதை பெருமையாக எல்லோரிடமும் சொல்லுங்கள்..  கேக்குகளுக்கும், ஜாம்களுக்கும் பதிலாக தேனையும், கடலை மிட்டாயையும் அவர்களுக்கு வாங்கிக்கொடுங்கள். ஊரில் நடக்கும் திருவிழாக்களுக்கு அவர்களையும் அழைத்துசெல்லுங்கள். அவற்றில் ஒருசிறிய அளவாவது இயற்கையின் போற்றுதல் இருக்கும்.. 

பிறகு என்ன..? இயற்கை இன்றைய இளம் தலைமுறையால் வருங்காலத்திற்கும் பாதுகாக்கப்படும்.. காசு பணத்தை அவர்களாகவே கூட சம்பாதித்துக் கொள்வார்கள்.  காசு பணத்துக்காக இன்று நாம் இயற்கையை அழித்துவிட்டால் அதை யாராலும் மீட்டுக்கொண்டுவர முடியாது..  இயற்கையை நேசிக்க கற்றுக்கொண்ட இன்றைய குழந்தைகள் நாளை பூமியை பத்திரமாக பார்த்துக்கொள்வார்கள்.. 

                                             
                                                                                                                  -சிதம்பரம் இரவிச்சந்திரன்