Sunday 12 June 2016

பறவை நோக்குதல் - தொடர்-2


IAS தேர்வில் பறவைகள் பற்றி ஒரு கேள்வி கேட்க்கப்பட்டது?

கிராமத்து வயல்களில் மேயும் மாடுகளின் மேல் அமர்ந்து அவற்றின் தோலில் உள்ள பூச்சிகளை கொத்தி சாப்பிடும் பறவைகள் எது ?


1.Painted Stork             2.Common Myna           3.Black-Necked Crane    4.Cattle Egret

 Options

(a) 1,2,3,4                        (b) 1 and 3                    (c) 2 and 4             (d)  3 and 4


இவை தான் அந்த கேள்வி ஒரு நிமிடம் யோசித்து அல்லது யோசிக்காமலும்  பதிலை கண்டுபிடியுங்கள்.

என்னது IAS தேர்வில் இதெல்லாமா கேட்பார்கள் என்று நினைக்காதீர்கள். நம்முடைய கவனம் பாட புத்தகத்தில்(Text Book) மட்டும் இருக்க கூடாது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

நாமும் வயல் வெளிகளில் நிறைய முறை சென்று இருப்போம் அல்லது அந்த பக்கமாக செல்லும்பொழுது அங்கு மேயும் மாட்டை பார்த்திருப்போம் ஆனால் ஒரு முறை கூட மாட்டின் மேல் அல்லது அதன் அருகில் இருக்கும் பறவைகளை பார்திருக்க மாட்டோம் என்பது தான் நிஜம்.

மேலே உள்ள அந்த பறவைகளில் இருந்தே நாம் பறவைகளின் வகைகளை இந்த கட்டுரையில் ஆரம்பிப்போம்.

IAS கேள்விக்குக்கான பதில் - :” C”

நெறிமுறைகள்:

பறவைகள் நோக்குவதற்கு ஏதாவது நெறிமுறை உள்ளதா என்றால்? இதற்க்கெல்லாம் நாம் வேலைக்கு சேரும்பொழுது தரும் நெறிமுறைகள்(Code of Conduct) படிவம் போல் பக்கம் பக்கமாக இருக்கும் என்று பெரிதாக நினைத்து விடாதிர்கள்.

1.பறவைகளுக்கு எந்தவிதத்திலும் நம்மால் தொந்தரவோ,

2.முட்டை மற்றும் குஞ்சுகளுக்கு இடையூரோ,

3.சத்தம் எழுப்பி கலவரபடுத்துவதோ,

4.உணவு அளிப்பது  

இவையெல்லாம் தவிர்த்தாலே அதுவே பறவைகளுக்கு நாம் செய்யும் பெரிய நன்மைதாங்க.இதை கவனத்தில் கொண்டு பறவைகளை பார்க்க செல்லுங்கள்.

எந்த நேரத்தில் பறவைகளை பார்க்க வேண்டும் அல்லது எந்த நேரத்தில் பார்ப்பது சிறந்தது என்ற அடுத்த கேள்வி நீங்கள் கேட்கப்போகிறிர்கள்.

புதிதாக பறவை நோக்குபவர்கள் (Beginners) ஆரம்பத்தில் நேரம் எல்லாம் பார்த்து செல்லாதிர்கள்.பறவை நோக்குவதற்கு என்று நேரம் உண்டு என்றாலும் ஆரம்பத்தில் அதெல்லாம் வேண்டாம். நினைக்கும் அல்லது நினைத்து நேரங்களில் பார்க்க ஆரம்பியுங்கள்,நீங்கள் போகும் இடங்களில் எல்லாம் பாருங்கள் ஆர்வம் அதிகமாகும் பொழுது குறிப்பிட்ட நேரத்தில் பார்க்க ஆரம்பிப்போம்.

நேரம் என்று பார்த்தால் அதிகாலை ஆறு மணிக்கும், மாலை ஐந்து மணியில் இருந்து கூட்டில் அடையும் வரையும் (மதியம் இரண்டு மணி அளவிலும் பார்க்கலாம்) இவ்வளவுதாங்க பறவைகளை பார்பதற்கான நேரம்.ஆரம்பத்தில் இவையெல்லாம் கவனத்தில் கொள்ளாதிர்கள்.சிலபேருக்கு அதிகாலையில் எழவே முடியாது அதனால் ஆறு மணிக்கு பார்க்க செல்வோம் என்று அலாரம் வைத்து தூங்கிகொண்டிருப்பார்கள்.கடைசி வரை அவர்களால் பறவைகளை அவதானிக்க முடியாது.அதனால் ஆரம்பத்தில் குறிப்பிட்ட நேரத்தில் என்பதை விட்டு நேரம் காலம் பார்க்காமல் பாருங்கள்.

முதல் பறவையாக IASல் கேட்கபட்ட பறவையை பற்றி பார்ப்போம்

1. உண்ணிக் கொக்கு (Cattle Egret) :

பார்பதற்கு முழு வெள்ளையாக காணப்படும் உண்ணிக் கொக்கு. இனப்பெருக்க காலங்களில் மட்டும் பெண் உண்ணிக் கொக்குக்கு தலை மட்டும் முதுகு பகுதியில் ஆரஞ்சு கலர்  தூவிவிட்டது போல் காணப்படும்.இவற்றின் அலகு மஞ்சள் நிறத்திலும், கால்கள் கருப்பு நிறத்திலும் இருக்கும் இவை தான் மற்ற கொக்கில் இருந்து இதனை வேறுபடுத்தி காட்டுகிறது. அந்த பறவையோட மூக்கை பாருங்களேன் என்று சொல்லுவார்கள் உண்மையில் அது மூக்கு அல்ல, அலகு(Beak or Bill) என்று குறிப்பிட வேண்டும்.

 உண்ணிக் கொக்கு நீர் நிலைகளை தவிர வயல்வெளிகளிலும்,மாட்டின் அருகிலும் அதிகமாக காணப்படும்.மாட்டின் அசைவில் வெளிப்படும் பூச்சிகளை மற்றும் மாட்டின் ரதத்தை உறிஞ்சும் உண்ணிகளையும் சாப்பிடுவதால் உன்னிக் கொக்கு என்று பெயர். இதற்கு மாட்டு கொக்கு என்ற பெயரும் உள்ளது.இவற்றின் மஞ்சள் நிற சிறிய அலகு-தடிமனாக இருக்கும்.

இந்தியா மற்றும் உலகளவில் உன்னிகொக்கு காணப்படும். இன்று நல்ல நிலையில் இவற்றின் எண்ணிக்கை இருந்தாலும் நீர் நிலைகள்,சதுப்புநிலங்கள் (பள்ளிகரணை, பெரும்பாக்கம் ஏரி) போன்ற இடங்கள் இன்று அடுக்கு மாடிகளாக மாறிவருவதால் இவற்றின் வாழிடம் பாதிப்படைகிறது.
photo-wikipedia

பறவைகளின் அறவியல் பெயர், குடும்பம் இதையெல்லாம் தவிர்த்துவிட்டு பறவைகளின் செயல்பாடுகள்,நிறம், வாழிடம், எண்ணிக்கை இவற்றை பற்றி மட்டும் பார்ப்போம். எல்லாவற்றையும் புதிதாக பறவைகளை நோக்க ஆரம்பிப்பவர்கள் ஆரம்பத்திலே படித்தால் அவை பள்ளியில் படிக்கும் பாடம் போல் இருந்துவிடும். அதனால் இப்போதைக்கு தவிர்த்து பிறகு தேவையென்றால் பார்ப்போம்.

தொலைநோக்கி - (Binocular)

நிறைய வகைகளில் Binocular கிடைக்கிறது.எது சிறந்த Binocular?


எப்படி தேர்ந்தெடுப்பது ? பறவை பார்பதற்கு நாம் எதை வாங்குவது? என்று நிறைய கேள்விகள் இருக்கும்?

Binocularல் இரண்டு நம்பர் மூலமாக அறியப்படுகிறது. ஒன்று மிக தூரத்தில் இருப்பதை மிக அருகில் காட்டும் திறன் கொண்டது, இரண்டாவது முன்பக்கம் உள்ள லென்ஸ் அளவை (Diameter) குறிக்கும்.

எடுத்துக்காட்டு : 7 x 35 Binocular

இதில் 7 என்ற எண்   Binocularரின் திறனை குறிக்கும்(X-Magnification Power). அதாவது இந்த திறன் கொண்ட Binocular மூலம் ஒரு பொருளை பார்க்கும்பொழுது அந்த பொருள் 7 மடங்கு அருகில் தெரியும்.

ஒரு பறவை 350 yards  தூரத்தில் இருப்பதாக வைத்து கொள்வோம். இந்த 7 x 35 Binocular மூலம் பார்க்கும்பொழுது அந்த பறவை 50 yards ( 350 / 7 ) தூரத்தில் இருப்பது போல நன்றாக தெரியும். அதாவது ஏழு மடங்கு அருகில் தெரியும்.

அப்பொழுது அதிக திறன் கொண்ட Binocular மூலம் ஒரு பொருள் மிக மிக அருகில் இருப்பது போல் தோன்றுமா என்ற கேள்வி எழும்

அவ்வாறு கிடையாது, Binocularதிறன் 10யை தாண்டும்பொழுது நம் கைகளின் சிறு அசைவும் பறவையை தெளிவாக காண்பது சிரமமாக்கிவிடும்.

Binocular 12 X , Binocular 20 X இந்த வகை Binocularரை , Binocular Expertஆல் சரியாக பயன்படுத்த முடியும். பறவை பார்க்க ஆர்ம்பிப்பவர்கள் முதலில் குறைவான எண் உள்ள Binocular பயன்படுத்திவிட்டு பிறக்கு அதிக திறன் உள்ள Binocular பயன்படுத்துவது பலனை தரும்.

இரண்டாவது எண் : 35”  Binocular ( முன்பக்கம் உள்ள ) லென்சின் அளவை குறிக்கும்.

எடுத்துக்காட்டு : 

7 x 35 Binocularல் லென்சின் அளவு 35 mill meters (1.38 inches) இதை பொறுத்துதான் ஒரு Binocular எவ்வளவு வெளிச்சத்தை க்ரகிக்க முடியும் என்பதை தீர்மானிக்கும். ஒரு Binocular அதிக வெளிச்சத்தை கிரகிக்க கூடியதாக இருந்தால், சிறு வெளிச்சத்தில் உள்ள பறவையை கூட மிக பிரகாசமாக காட்டும். 


 முடிவு :

பறவை நோக்குவதற்கு (Bird Watching) என்றால் Binocular 8 X 42 அல்லது 10 X 42 சிறந்தது.


2. நாகணவாய் பறவை (Common Myna)

நாகணவாய் என்று அழைத்து யாருமே பார்த்து இருக்கமாட்டோம்.மைனா என்பதுதான் தமிழ் பெயர் என்ற நினைப்பில் இன்று வரை இருக்கிறோம் ஆனால் இனிமேல் அப்படி இருக்கலாமா? ஆக நாகணவாய் என்பதுதான் மைனா என்று நாம் அழைக்கும் பறவையின் தமிழ் பெயர்.
photo-wikipedia

1.மைனாவில், காடுகளில் வாழும் மைனா, மலைப்ரதேசங்களில் இருக்கும் மைனா நம் வீட்டு அருகே வாழும் மைனா என்று பல வகைகள் உள்ளது.

2.நாம் பொதுவாக பார்க்கும் நாகணவாய் எல்லாவற்றையும் சாப்பிடும், புழு, வெட்டுக்கிளி,மனிதர்கள் உணவுகள் என்று எதையும் விடாது.

3.பெரும்பாலும் ஜோடியாகவே காணப்படும் பறவையான இவை உடல் பழுப்பு நிறத்திலும் கண் அருகே மஞ்சள் திட்டும்,கால் மற்றும் அலகு மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.

4.மனிதர்கள் அருகில் வாழக்கூடிய ஒரு சில பறவைகளில் இவையும் ஒன்று.


                                                -தொடரும்

                                                                      
                                                                      -செழியன்
முதல் பாகம்

http://birdsshadow.blogspot.in/2016/05/1.html
                                                           

உங்கள் கருத்துக்கள் அடுத்த பாகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்:
 

lapwing2010@gmail.com.


1 comment:

  1. Very useful information particularly the selection of binoculars for bird watching...
    Thanks Mr.Chezhiyan.

    ReplyDelete