Monday, 31 October 2016

பறவை நோக்குதல் : தொடர் - 5
பறவை நோக்குதல் என்ற இந்த தொடரில் இதுவரை பைனாகுலர் தேர்வு செய்வது, உன்னி கொக்கு, நாகணவாய், கரிச்சான், வென்மார்பு மீன்கொத்தி போன்ற பறவைகள், IUCN அமைப்பின் செயல்பாடு மற்றும் RED LIST, பெயர் தெரியாத ஒரு பறவையை பார்த்து பெயர் கண்டறிதல்(பறவைகளின் அலகு, வால், இறக்கை, உடல் அமைப்பு, வாழும் இடம்) போன்றவற்றை பார்த்தோம்.

மழை காலம் வரப்போகிறது மற்றும் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் பறவைகள் வர தொடங்கிவிட்டதால் பார்வையாளர்கள் சென்று பார்ப்பதற்கு சரணாலய்தையும் திறந்துவிட்டார்கள் என்பது பறவை நோக்குபவர்களுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய செய்தியாக இருக்கும்.

ஆரம்பத்தில் மரங்கள் நடுவில் வாழ ஆரம்பித்த மனிதன் இன்று சுவர்கள் நடுவில் வாழ்வதால் பறவை என்பது நம்முடம் வாழும் உயிரனம் இல்லை என்று நினைத்து, மரங்கள் இல்லாத வீட்டை அமைத்து கொண்டதால் குழந்தைகளுக்கு மூன்று, நான்கு பறவைகளுக்கு மேல் இன்று தெரிவதில்லை. 

இன்றைய பள்ளி புத்தகங்களில் கூட பறவைகளை பற்றி கற்று தரும் அளவுக்கு அதில் பாடங்கள் இல்லை. தனியாக சில அமைப்புகள் மட்டுமே பறவை பார்பதற்கு மற்றும்  அழைத்து செல்வதற்கு என்று இருப்பதால் அவை தமிழ்நாடு முழுவதும் தெரிவதற்கு வாய்ப்பில்லை. 

காகம் மற்றும் காகங்கள் போல் இருக்கும் பறவைகளை பார்ப்போம்

செம்போத்து (SOUTHERN COUCAL) :

காகத்தின் அளவு உள்ள செம்போத்து குயில் இனத்தை சேர்ந்த பறவையாகும். மரத்தில் குயில் வாழும் ஆனால் செம்போத்து தரையில் வாழ்க்கூடியது மற்றும் கூடு கட்டி முட்டை இடும் பறவையாகும்.

மிளிரும் கருமை நிற உடலும் அடர் காப்பி நிற இறக்கையும் உடையது. அதிக தூரமும், உயரமாகவும் பறக்க முடியாத பறவை தான் செம்போத்து. தரையிலேயே தன் வாழ்கையை முடித்து கொள்ளும்.

இவற்றின் வாழிடம் அதிகம் பாதிப்புக்கு உள்ளாவதால் இவற்றின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.மணப்பாக்கம் பாலத்தில் இருந்து கரையோரமாக இருக்கும் புதரில் ஒரு செம்போத்தை பார்த்தேன். அடுத்த மாதம் அங்கு சுவர் எழுப்பிவிட்டார்கள் அதனால் புதர்கள் அழிக்கப்பட்டத்தை பார்க்க முடிந்தது. அங்கிருந்த செம்போத்து இப்பொழுது எங்கு இருக்கும் என்ற நினைப்பு வருகிறது.

மணப்பாக்கம் பாலத்தில் இருந்து செம்போத்து பார்த்த இடம் இப்பொழுது புதர் அழிக்கப்பட்டு இருக்கும் படம்
வெட்டுக்கிளி, நத்தை, பறவைகளின் முட்டை, பல்லி, சுண்டெலி, சிறு பாம்புகள் என்று செம்போதின் உணவு நீண்டு கொண்டே செல்கிறது. 

வாழும் இடங்கள்:

வயல்வெளிகள், நம் வீட்டருகில், காடுகளில், புதர்களில் வாழும்   
RANGE :

இந்தியா முழுவதும் காணப்படுகிறது 

குறிப்பு:

IUCN Status – Least Concern
 
பறவையின் வட்டாரப்பெயர்கள்:

செம்பகம்

குக்கில்

செங்காகம்

செண்பகப்பட்சி 

படம்-விக்கிபீடியா
வீட்டு காக்கை (HOUSE CROW) :

காலையில் வீட்டின் முன்பு காகம் கத்தினால் அன்று வீட்டுக்கு விருந்தாளி வரப்போகிறார்கள் என்று நாம் நிறைய தடவை காகம் கத்தும் பொழுது வீட்டில் அதைப்பற்றி பேசியிருப்போம். இன்றும் கிராமபுரங்களில் இதைபோல் பேசும் மனிதர்கள் இருப்பார்கள் என்று தான் தோன்றுகிறது. மனிதர்கள் அருகில் வாழக்கூடிய மிக சில பறவைகளில் காகமும் ஒன்று.

இரண்டு விதமான காகங்களில், சாம்பல் கழுத்து மற்றும் கருப்பு உடல் கொண்ட காகத்தை வீட்டு காகம் என்று கூறுகிறோம். கூடி வாழம் பறவையான காகம், உணவு கிடைத்தவுடன் அருகில் இருக்கும் அணைத்து காகங்களையும் குரல் கொடுத்து வரவைத்துவிடும்.

இன்றும் கடவுளுக்கு படைத்த உணவை காகங்களுக்கு தான் நாம் வைப்போம். வேறு எந்த பறவைகளையும் மனிதர்கள் உறக்க குரல் கொடுத்து கூப்பிட்டு பார்திருக்கமாட்டோம் ஆனால் காகத்திற்கு ஊரே குரல் கொடுத்து உணவை வைப்பது தமிழ்நாடு முழுவதும் உள்ளது.

சைவம், அசைவம் என்று இல்லாமல் உணவுகளில் எதை வேடுமானாலும் உண்ணும் வழக்கமுடையது காகம். கோடைக்காலத்தில் 3 முதல் 5 முட்டைகள் வரை இடும் குயிலின் முட்டையும் காகத்தின் முட்டை அளவுடன் இருப்பதால் அவை காகத்தின் கூட்டில் போட்டுவிடும் காகத்திற்கு அதை கண்டுபிடிக்க முடியாதது குயிலுக்கு வசிதியாக போகிறது.

படம்-விக்கிபீடியா
மற்ற பறவைகள் போல் இருட்டியதும் தூங்காமல் காகம் நிலா வெளிச்சத்தில் நீண்ட நேரம் விழித்திருக்கும் மற்றும் இரவிலும் அங்கும் இங்கும் பறப்பதையும் பார்க்க முடியும் ஏன் இரவில் பறக்கிறது என்று தெரியவில்லை.

வாழும் இடங்கள் : 

நம் வீட்டருகில், வயல்வெளிகளில், Edges of Forest
RANGE :

இந்தியா முழுவதும் காணப்படுகிறது 

குறிப்பு :

IUCN Status – Least  Concern 

பறவையின் வட்டாரப்பெயர்கள்:

நல்ல காக்கா 

ஊர் காக்கா 

வீட்டு காக்கா 

மணியன் காக்கா 

வால் காக்கை (RUFOUS TREEPIE) : 

காகத்தை போலவே காணப்படும் ஆனால் மைனா அளவு இருக்கும் பறவைதான் வால் காக்கை. சாம்பல் நிறம் மற்றும் கருமை முனையுடைய வால், நீண்டு காணப்படும். மனிதர்கள் இயற்கையை கூர்நது கவனித்தால் வால்காகையை பார்க்க முடியும் ஆனால் எதுவும் நம் முன் வந்தால் தான் பார்ப்பேன் என்பவர்களுக்கு வால்காக்ககை தெரியாது.
படம்-விக்கிபீடியா
பழம், பூச்சிகள், சிறு பல்லிகள், பிற பறவைகளின் முட்டை,குட்டிகள் என்று உணவை கலவையாகவே சாப்பிடும் .கூட்டமாக காடுகளில் வசிக்கும்.நம் வீட்டருகிலும் இவற்றை பார்க்க முடியும்.பறவை நோக்க ஆரம்பித்து விட்டால் எல்லா பறவைகளும் நம் கண் முன்பு தெரிய ஆரம்பிக்கும்.

காகத்தை போல் இதன் அலகு தடித்து இருக்கும். கருப்பு தலையும், கருப்பு, வெள்ளை, சாம்பல் நிறத்தில் இறக்கை இருக்கும். இறக்கையில் வெள்ளை பட்டை காணப்படும். ஆண் பெண் ஒன்று போலவே இருக்கும்.

படம்-விக்கிபீடியா
ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை வால்காக்கையின் இனப்பெருக்க காலம் ஆகும் நான்கு முதல் ஐந்து முட்டைகள் வரை வெண் சிவப்பு நிறத்தில் இடும். இவை காடுகளிலும், நம் வீட்டு தோட்டத்திலும், வயல்வெளிகளிலும் காணப்படும். நான் வால் காக்கையை வேடந்தாங்கலில் பார்த்திருக்கிறேன் இரண்டு வால் காக்கை அங்கும் இங்கும் பறந்து கொண்டு இருந்ததை வெகு நேரம் பார்த்தேன். தனது கூட்டை மரத்தின் உயரத்தில் அமைக்கும் அதுவும் இலைகளின் நடுவில் யாருக்கும் தெரியாதது போல் அதன் கூடு அமைத்திருக்கும்.

வாழும் இடங்கள்:

காடுகள், வீட்டு தோட்டங்கள், வயல்வெளிகள், மலைகளில்
RANGE:

இந்தியா முழுவதும் காணப்படுகிறது 

குறிப்பு:

IUCN Status – Least Concern  

பறவையின் வட்டாரப்பெயர்கள்:

வால் காக்கை 

மாம்பழத்தான் 

அவரை கன்னி 

ஓலை நாலி 

முக்குருணி 

படம்- விக்கிபீடியா
அண்டங்காக்கை (JUNGLE CROW) :

தடித்த கருமை நிற அலகு, மிளிரும் கருமை நிறம் என தன் உடல் முழுவதும் கருமையை கொண்டிருக்கும் அண்டங்காக்கை வீட்டு காக்கை போல் கூட்டமாக வாழாது. தனித்து தன் இணையுடன் காணப்படும் மற்றும் சிறு குழுவாக சில நேரங்களில் பார்க்க முடியும்.

கோடையில் பெரும் மரத்தில் கூடு கட்டி நீல நிறத்தில் முட்டைகள் இடும், மிக சில நேரத்தில் கட்டிடத்தில் கூடு கட்டும். மனிதர்கள் இல்லாத இடத்திலும் வாழக்கூடிய பறைவையாக அண்டங்காக்கை இருக்கிறது.

நம் வீட்டருகே சாம்பல் நிற காகமும், அண்டங்காகமும் சுலபமாக பார்க்க முடியும். மிக சிறந்த சூழியல் துப்புரவாளராக (எல்லாவித உணவுகளையும் சாப்பிட்டு) காகங்கள் செயல்படுவதால் நம் ஊர் சுத்தத்திற்கு காசில்லாமல் நமக்கு வேலை செய்கிறது.

ரொம்ப சுலபமாக நம்மால் பார்க்க கூடிய பறவையாக காகங்கள் இருப்பதால் அவை ஒரு பறவையாக நமக்கு தெரிவதில்லை. 

வாழும் இடங்கள்:

காடுகள், நகர் புறங்களில், கிராமப் புறங்களில்
RANGE :

இந்தியா முழுவதும் காணப்படுகிறது

குறிப்பு:

IUCN Status – Least Concern

பறவையின் வட்டாரப்பெயர்கள்:

கானக் காக்கை 

தொன்னான் காக்கை 

காரி

- தொடரும் 


-செழியன் 
  

உங்கள் கருத்துக்கள் அடுத்த பாகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்: 

lapwing2010@gmail.com


முந்தய பாகங்கள் :


முதல் பாகம்

http://birdsshadow.blogspot.in/2016/05/1.html
இரண்டாம் பாகம்
http://birdsshadow.blogspot.in/2016/06/2.html

மூன்றாம் பாகம்
http://birdsshadow.blogspot.in/2016/07/3.html

நான்காம் பாகம் 

http://birdsshadow.blogspot.in/2016/09/4.html
 


6 comments:

 1. Your writing motivates me a lot... Thanks.

  ReplyDelete
 2. மிக்க நன்றி

  ReplyDelete
 3. Your bird details are very useful to me.thank you sir

  ReplyDelete
 4. Well written, We are gifted to live in area ( ayanambakkam, chennai) where Coucal has some "Prosopis juliflora" shrubbery is left. We have planted Ponganamia & Tree Pie calls are our morning alarm!! Barn owl shows up occasionally!

  Interestingly 8months back we spotted a red winged crested cuckoo near our area.

  ReplyDelete
  Replies
  1. மிக்க நன்றி, பறவைகளின் நடுவில் வாழ்கிறீர்கள் மிக சிறப்பு.......

   Delete