Sunday, 30 April 2017

இன்னும் ஐரோப்பாவிற்கு செல்லவில்லைWOOD SANDPIPER
குளிர்கால வலசைபறவைகள் இந்த நேரம் அதன் நாட்டிற்கு சென்று கொண்டிருக்கும் என்ற நினைப்பில் இருந்தேன் அடையார் பாலத்தை கடக்கும் வரை. மிக நீள அலகுடன் கருவால் மூக்கன் கண்ணில் தென்பட்டது இவை இங்கு என்ன செய்கிறது அதன் நாட்டிற்கு செல்லாமல் என்ற கேள்வியை கேட்டுக்கொண்டு இன்னும் வேறு என்ன, என்ன வலசை பறவைகள் அதன் நாட்டிற்கு செல்லாமல் சென்னையில் இருக்கிறது என்று அறிய நண்பர்கள் மாசிலாமணி, ஷரன், சின்னப்பராஜ் ஆகியோருடன் வலசை செல்ல ஆரம்பித்துவிட்டேன்.

அதிக வாத்து வகைகள் பெரும்பாகத்தில் இருப்பதாக நண்பர் மாசிலாமணி சொன்னார் அதனால் அங்கு செல்வது என்ற முடிவில் கடந்த வாரம் காலை ஆறு மணிக்கு ஒன்று சேர்ந்தோம். குளிர் காலத்தில் கூட பெரும்பாகத்தில் இவ்வளவு பறவைகள் இருக்காது இப்பொழுது மிக அதிக எண்ணிக்கையில் காணப்பட்டது. முதல் பறவையாக கோணல் மூக்கு உள்ளான் (pied avocet) ஆனந்தத்தை வெகு நேரம் பார்த்துகொண்டிருந்தோம். இப்பொழுதுதான் இந்த பறவையை முதல் முறையாக பார்கிறேன். இந்த வெளிநாட்டு வலசை பறவைக்கு ஏப்ரல் கடைசி வாரத்தில் இங்கு என்ன வேலை? இந்த கடுமையான வெய்யிலை எப்படி தாக்கு பிடிகிறது? 

கோணல் மூக்கு உள்ளான் (Pied Avocet)

ஐரோப்பா நாட்டில் இருந்து வலசை வரும் கோணல்மூக்கு உள்ளான்(pied avocet)  இந்தியா, இலங்கை போன்ற நாடுகளுக்கு வலசை செல்கிறது. கருப்பு, வெள்ளை நிறத்தில் காணப்படும் இந்த பறவை அதன் அலகு நீண்டு மேல் நோக்கி வளைந்து காணப்படும். பச்சை கிளிக்கு அலகு கீழ் நோக்கி வளைந்து இருக்கும். பறவைகளுக்கு அவற்றின் உணவு வகைகளுக்கு ஏற்ப அலகு அமைந்து இருக்கும் என்று ஏற்கனவே நாம் பறவை நோக்குதல் தொடரில் பார்த்தோம்.


பெரும்பாகத்தில், தொடர்ந்து இரையை தேடிகொண்டிருந்த கோணல்மூக்கு உள்ளான்(pied avocet)அதன் நாட்டில் மிக அதிக அச்சுறுத்தலுக்கு உள்ளாகிறது. பூச்சி கொல்லி மருந்து, மனித நாகரிகம் என்ற பெயரில் பறவைகள் இடத்தில குடியேறுதல் போன்ற காரணங்களால் எண்ணிக்கை குறைய ஆரம்பிக்கிறது. அதனால் தமிழ்நாட்டிலேயே இருந்துவிடலாம் என்ற எண்ணத்தில் உள்ளதா என்று தெரியவில்லை? அந்த அளவுக்கு எல்லாம் மனிதர்களை போல் பறவைகள் யோசிக்காது என்ற எண்ணம் உள்ளது. இந்த நிமிடம் வரை IUCN-Least Concern வகையில் இருந்தாலும் நாளடைவில் இதன் எண்ணிக்கை குறையவே ஆரம்பிக்கும்.ஊசிவால் வாத்து (Northern Pintail):
 
ஊசிதான் இதன் அடையாளம், வால் நீண்டு ஊசி போல் கூர்மையாக இருப்பது, நமக்கு சுலபமாக அடையாளம் கண்டுகொள்ள முடியும். இந்த வாத்தும் ஏரியில் காணப்பட்டது. எண்ணிக்கை, என்னும் அளவே இருந்ததால் இதன் மீதி சொந்தங்கள் அதன் நாட்டிற்க்கு சென்று கொண்டிருக்கும் என்று நினைக்கிறேன். ஜனவரி மாதம் அதிகமாக பார்த்துள்ளேன். ஐரோப்பாவில் இருந்து வலசை வரும் பறவைகளில் ஊசிவால் வாத்தும் ஒன்று. இதன் இனபெருக்கும் வடக்கு ஐரோப்பா, வட அமெரிக்கா, ஆசியா போன்ற நாடுகளில் தங்களின் வம்சத்தை உண்டுபண்ணுகிறது.

நீலச் சிறகி (Garganey):

சிறிது தூரத்தில் நீலச்சிறகி வாத்து(Garganey) சிறு திட்டில் நின்றிருந்தது. அதிகம் இல்லையென்றாலும் இந்த சிறு ஏரியில் தன் தாய் நாட்டை மறந்து அல்லது கிளம்பவேண்டும் என்ற நினைப்பில் இருந்ததா என்று தெரியவில்லை. ஐரோப்பாவில் இருந்து கிளம்பும் நீலச் சிறகி இந்தியா, ஆப்ரிகா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு வலசையாக செல்கிறது. இந்த பறவையை அடையாளம் காண்பதற்கு வசதியாக அதன் கண் மேற்புறத்தில் இருந்து தொடங்கும் வெள்ளை பட்டை அதன் கழுத்து தொடக்கம் வரை காணப்படும்.

தட்டவாயன் வாத்து (Northern Shoveler) :

கரும் பச்சை தலையும், காப்பி நிற வயிறும், வெள்ளை நிற மார்பும் வைத்து சுலபமாக இப்பறவையை அடயாளம் காணமுடியும். சிறு எண்ணிக்கையில் காணப்பட்டது. ஐரோப்பாவில் இருந்து வரும் வலசை பறவைகளில் இந்த பறவையும் ஒன்று. வட அமெரிக்க, ஆசியா கண்டங்களிலும் காணப்படும் பறவையாகும். அதன் சொந்த நாட்டிற்கு கிளம்புவதற்கு தன் நண்பர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுகொண்டிருந்ததை பார்க்கமுடிந்தது.

கருவால் மூக்கன்(Black-TailedGodwit), சிற்றுள்ளான்(Little Stint) :

கருவால் மூக்கன் தன் நீண்ட அலகில் தொடர்ந்து இரையை தேடும் காட்சியை அடையார் கழிமுகத்தில் பார்க்கலாம். பாலத்திற்கு மிக அருகில் வரை வருகிறது. அதே போல் சிற்றுள்ளான், ஒரு கூட்டமாக இரையை தேடிகொண்டிருந்தது. ஒன்று, இரண்டு தனியாகவும் காணப்பட்டது. நடுவில் சூறைக் குருவிகள்(Rosy Starling) போல் மொத்தமாக பறந்து மீண்டும் நீர்நிலையில் அமர்ந்தது.

இந்த இரண்டு பறவையும் அந்தி சாயும் வரை நீரிலே இருப்பதை பார்த்துள்ளேன் காலையில் நீர் வரத்து அதிகமாக இருப்பதால் பறவைகள் அதிகம் வருவதில்லை, மதியம் மூன்று மணிக்கு மேல் நீர் குறைந்து, பறவைகள் நிற்கும் அளவுக்கு இருப்பதால் அதிக அளவில் வலசை பறவைகள் வருகிறது.

கருவால் மூக்கன்(Black-TailedGodwit), ஐஸ்லேன்ட் நாட்டில் தன் இனவிருத்தியை நடத்துகிறது. சிற்றுள்ளன், ஐரோப்பா நாட்டில் காணப்படும் பறவையாகும். Wader பறவைகளில் மிக சிறிய பறவை சிற்றுள்ளன்(Little Stint) .
காட்டு வாலாட்டி (Forest Wagtail) :

இதன் பெயரே நமக்கு அதன் செயல்பாடுகளை உணர்த்திவிடுகிறது அதாவது வாலை ஆட்டும் பறவை என்று. ஆனால் காட்டு வாலாட்டி, மற்ற வாலாட்டி பறவைகள் விட வேறுபட்டு  தன் உடம்பை இடதில் இருந்து வலது புறமாக ஆட்டும் தம்மை கொண்டது. சிட்டு குருவியை விட சிறுது பெரியதாக இருக்கும் பறவைதான் காட்டு வாலாட்டி.

ஒரே ஒரு காட்டு வாலாட்டி பறவையை பெசன்ட் நகர் MNS meeting நடக்கும் இடத்தில் பார்க்க முடிந்தது. பார்க்கும்பொழுது தரையில் மைனவுடன் தனக்கான இரையை தேடிகொண்டிருந்தது. பூச்சிகளை விரும்பி, சிக்கன் 65 போன்று உண்ணும் பறவையாகும். இவற்றை வண்ணாத்தி குருவி என்றும் அழைக்கபடும். இந்தியாவுக்கு வலசை வரும் காட்டு வாலாட்டி வட கிழக்கு பகுதி, தென் இந்தியா (தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, ஆந்திரா) போன்ற மாநிலங்களுக்கு வலசையாக வருகிறது.

சாதா உள்ளான்(CommonSandpiper), பொறி உள்ளான்(Wood Sandpiper) :
   
WOOD SANDPIPER
வலசை பறவைகளில் அதிகம் நீர் நிலை அருகில் பார்க்க முடிகிற பறவைதான் உள்ளன் வகைகள். அதில் சாதா மற்றும் பொறி உள்ளன், ஐரோப்பாவில் இருந்து வலசையாக வரும் இப்பறவை தமிழ் நாட்டில் பரவலாக பார்க்க முடியும். பெரும்பாலும் சாதா உள்ளான், தனியாக இரையை தேடுவதை பார்த்திருக்கிறேன் பெரும்பாகத்திலும் அப்படியே.

பொறி உள்ளன் கூட்டமாக இரையை தேடிகொண்டிருந்தது. உடல் மேல்பாகத்தில் பழுப்பு நிறமும், அதில் வெண் புள்ளிகள் திட்டு திட்டாக காணப்படும், வயிறு வெள்ளையாக இருக்கும். நீண்ட அலகு கொண்டு சேற்றை கிளறி இரையை உண்ணுவதை பொறுமையாக பார்துகொண்டிருந்தோம். இந்த பறவையும் இன்னும் அதன் நாட்டிற்க்கு கிளம்பாமல் விருந்தாளியாகவே இங்கு இருக்கிறது.

ROSY STARLING
கடைசியாக கிண்டியில் பார்த்த வலசை பறவையான சூறைக் குருவிகள்(Rosy Starling), இருக்கிறதா? என்று ஒரு மாலைபொழுது பார்க்க சென்றேன் அந்த இடத்திற்கு சொந்தமான காகம், மைனா இன்னும் சில பறவைகள் மட்டுமே இருந்தது. சூறைக் குருவிகள் இந்த நேரம் அதன் நாட்டை அடைந்திருக்கலாம் அல்லது பறந்து கொண்டிருக்கலாம். அந்த இடத்தில உள்ள மனிதர்களை வசிகரித்த சூறைக் குருவிகள் இல்லாதது நிச்சயம் அவர்களை சோர்வுடையவே செய்யும். இந்த பறவை தமிழ் நாட்டை விட்டு கிளம்பிவிட்டது.

விருந்தாளியாக வந்த வலசை(Migration)பறவைகள் எப்படியும் இன்னும் சில நாட்களில் அதன் நாட்டிற்கு கிளம்பிவிடும். வீடிற்கு வந்த சொந்தங்கள் கிளம்பிவிட்டால் எப்படி வீடு வெறிச்சோடி இருக்குமோ அது போல் தமிழக நீர் நிலைகள் காணப்படும் அடுத்து இப்பறவைகள் வரும்வரை நம் உள்ளூர் பறவைகளுடன் விளையாடுவோம்.

-செழியன்
Photo- Dr.Masilamani                                                     lapwing2010@gmail.com

3 comments:

  1. Very Nice article Chezhiyan Sir, I learned lot and my heart full thanks and my wishes. hopefully i will join in further bird watching and eagerly waiting to learn from you. :-)

    ReplyDelete
  2. Thanks to chinnapa raj and afasja jajy

    ReplyDelete