Tuesday 20 June 2017

இயற்கையை அழித்தால் ?



(இயற்கையை அழித்தால் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை ஜூன் மாத பாவையர் மலர் இதழில் வெளிவந்துள்ளது.)

உலகில் உயிரினங்கள் தோன்றியபொழுது மனிதன் தோன்றவில்லை, டைனோசர்கள் வாழ்ந்த காலத்திலும் மனிதன் இல்லை. லேட்டாக வந்தாலும் லேட்டஸ்ஸாக வருவேன் என்ற வசனத்திற்கு ஏற்ப மனிதன் லேட்டாக பூமியில் தோன்றினான். ஆனால் லேட்டஸ்ஸாக அனைத்து உயிரினங்களையும் தன் காலடியில் கொண்டுவந்துவிட்டான். இன்று மனிதன் நினைத்தால் ஒரே வாரத்தில் உலகில் உள்ள உயிரினங்களை அனைத்தும் கொன்றுவிட முடியும் அந்த அளவுக்கு சர்வ வல்லமை படைத்த நிலைக்கு உயர்ந்துவிட்டான். 

யானை ஊருக்குள் புகுந்தது, சிறுத்தை மனிதனை கொன்றது போன்ற செய்தியை நாம் அடிக்கடி பத்திரிக்கையில் படிப்போம். உடனே யானை மற்றும் சிறுத்தையை கொல்ல, விரட்ட முயற்சிப்போம். இவற்றை நேரடியாக பார்க்கும் பொழுது, சரி என்ற முடிவுக்கு வருவோம். ஆனால் அப்படி வருவதற்கு முன்பு நம் வீட்டுக்குள் நடக்கும் ஒரு நிகழ்வை பார்த்தபிறகு முடிவு செய்வோம்.

வீட்டுக்குள் பாம்பு, பூரான் அல்லது தேள் வந்துவிட்டால் உடனே அவற்றை அடிப்போம்.  காரணம் வீட்டில் இருபவர்களை கடித்துவிடுமோ என்ற பயம் வரும் மற்றும் இது எங்கள் வீடு இங்கு உனக்கு வேலை இல்லை என்ற உள்மன நினைப்பு இருக்கும். அதனால் பாம்பை, தேளை கொல்லுவது சரியா என்று கேட்டால் சரி என்றே சொல்வோம். பாம்பு கடித்து, வீட்டில் உள்ள மனிதன் இறப்பான் போன்ற  நியாயமான காரணம் இதற்கு உள்ளது.

இதே காரணத்தை நாம் யானை ஊருக்குள் புகுந்தது, சிறுத்தை மற்றும் புலி மனிதனை கொன்றது போன்ற செய்தியோடு ஒப்பிட்டு பார்த்தோமானால் யானை ,சிறுத்தை, புலி செய்தது சரி என்றே சொல்லவேண்டும். இதுவரை யானை எந்த ஒரு நகரத்தின் முக்கிய வீதியில் புகுந்ததில்லை அதாவது யானை சென்னை அண்ணா சாலையில் புகுந்துவிட்டது, சிறுத்தை மதுரை நகரில் இருக்கும் மனிதனை கொன்றது என்று படித்து உள்ளோமோ? கண்டிப்பாக இல்லை. ஆக மனிதன்- யானை, சிறுத்தை வாழும் இடங்களில் குடியேறுதல் மற்றும் அதன் இடங்களை வளைத்து கொள்ளுதல் போன்ற நிகழ்வு ஏற்படும் பொழுது மட்டுமே இது போல்  ஏற்படும்.

அடுத்த முறை இதே போல் செய்தியை படிக்கும் பொழுது அவை எந்த இடத்தில் நடந்தது என்ற வரியையும் சேர்த்து படியுங்கள். கண்டிப்பாக அவை ஏதாவது காட்டின் அருகில் அல்லது அவற்றின் வாழிடத்தில் இருப்பது தெரியவரும். உதாரணம்: என் உறவினர் ஒருவர் அவர் வீட்டின் பின் பக்கம் துணியை துவைத்து கொண்டிருந்தார் வீட்டின் உள்ளே வாழைமரம் உள்ளது இவர் அதன் கீழ் இருந்தார். சிறிது நேரத்தில் தும்பிக்கை ஒன்று வாழைமரத்தை துழாவிகொண்டிருந்ததை பார்த்து, தவழ்ந்து வீட்டிற்குள் வந்து விட்டார். 

யானை அந்த தும்பிக்கையை வாழை மரத்தின் மேல் போடாமல் கிழே விட்டிருந்தால் இவர் யானையிடம் மாட்டியிருப்பார். உடனே இங்கு நாம் யானையை துரத்த வேண்டும் என்ற முடிவுக்கு வருவோம். ஆனால் இங்கே என் உறவினர் வீடு எங்கு உள்ளது என்று கவனிக்கவேண்டும். மருதமலை மலை அடிவாரத்தில் புதிதாக நிறைய வீடுகள் கட்டி மக்கள் குடியேறுகிறார்கள் அங்குதான் இவரும் புதிதாக சென்று உள்ளார். முற்றிலும் விலங்குகள் வாழும் இடத்தில இருக்கிறார். இரவு இரண்டு மணியளவில் சிறுத்தை ஒன்று வீட்டை கடந்து செல்வதாக ஒரு முறை சொல்லியிருந்தார். ஆக அதன் இடத்தில் நாம் சென்றால் விலங்குகள் நம்மை தாக்காமல் வேறு என்ன செய்யும். அதாவது நம் வீட்டிற்குள் பாம்பு, தேள் வந்தபொழுது நாம் என்ன செய்தோம் அதையே அந்த விலங்குகளும் செய்கிறது. நாம் செய்வது சரி, விலங்குகள் செய்வது தவறு என்பதுபோல் தோற்றத்தை உருவாக்கி வைத்துவிட்டோம்.

எந்த விலங்கும், பறவைகளும் மனிதர்களின் இடங்களை அழிப்பதில்லை நாம் மட்டுமே அவற்றை செய்கிறோம் அதாவது மிக தாமதமாக பூமியில் தோன்றிய மனிதன், அதற்கு முன்பு இருந்து, பூமியில் வாழும் உயிரினங்களை அழிப்பது என்ன நியாயம்? 

முற்றிலும் மனிதனால் அழிக்கபட்ட உயிரினங்கள், மரங்கள் என்று ஏராளம் உள்ளது. மொரிசியஸ் தீவில் வாழ்ந்து வந்த டோடோ என்ற பறவை, சூழல் சமன்பாட்டில் முக்கியபங்கு ஆற்றியது. இந்த பறவை ஒரு மரத்தின் பழத்தை சாப்பிட்டு, பிறகு  அதன் கழிவின் மூலம்  பழத்தின் கொட்டை வெளியே வரும், அந்த கொட்டை தான் மரமாக வளர ஆரம்பிக்கும். நாம் நேரடியாக பழத்தின் கொட்டையை புதைத்து வைத்தால் மரம் வளராது. டோடோ பறவை கழிவின் மூலம் வரும் கொட்டை மட்டுமே மரத்தை வளரவைக்கும்.

ஆக டோடோ பறவை இருந்தால் மட்டுமே அந்த மரத்தை உற்பத்தி செய்யமுடியும் ஆனால் மனிதர்களாகிய நாம் டோடோ பறவையை, பூமியில் இருந்து முற்றிலும் அழித்து விட்டோம். இன்று ஒரு டோடோ பறவை கூட உலகில்  இல்லாததால் அந்த மரமும் அழிந்து உள்ளது. இயற்கையாக உருவாகிய பறவை, மரம் மனிதனால் அழிக்கப்படுகிறது என்பது மனிதனின் சுயநலத்தை காட்டுகிறது. இந்த பூமி எனக்கு மட்டும் தான் சொந்தம் என்று நிலையை உணர்த்துகிறது.

செல்போன் கோபுரம் வந்ததால் சிட்டுக்குருவிகள் காணாமல் போனது அல்லது அழிந்துவருகிறது என்ற பேச்சு பரவலாக உள்ளது. உண்மையில் செல்போன் கோபுரத்திற்கும் சிட்டுக் குருவிக்கும் எந்த தொடர்பும் கிடையாது. அதனால் சிட்டுகுருவி அழிந்து வருகிறது என்ற பேச்சும் உண்மையில்லை. கடைசியாக நாம் எப்பொழுது சிட்டுக் குருவிகளை பார்த்தோம் என்று நினைத்து பாருங்கள். கண்டிப்பாக மிகுந்த முயற்சியால் மட்டும் பார்க்கும் அளவு இன்று சிட்டுக் குருவிகள் காணப்படுகிறது. 

நம் வீட்டு முற்றத்தில் கூடு கட்டி வாழ்பவை சிட்டுகுருவி மற்றும் விடியற்காலை வீட்டு முன்பு போடும் மாவு கோலத்தை சாப்பிடும். இன்று வீட்டில் முற்றம் இல்லாமல் கான்க்ரிட் வீடாக மாறியுள்ளது, மாவு கோலமும் போடுவதில்லை பெய்ன்ட் கோலம் போடுகிறோம் இதனால் அவற்றின் உணவு குறைந்தது. ஆக சிட்டுகுருவிகள் வாழ தகுந்த சூழ்நிலை இல்லாதால் அவை அழிந்து வருகிறது. இனிமேல் யாரவாது சிட்டுக் குருவிக்கும் செல்போன் கோபுரத்திற்கும் தொடர்பு உண்டு என்று சொன்னால் நம்பாதிர்கள்.

இயற்க்கை என்பது மிக பெரிய சக்திவாய்ந்த நிலை. அவற்றை நாம் நம் வசதிற்க்கேற்ப மாற்ற முயலும் பொழுது அதனால் ஏற்படும் பாதிப்பு நம்மால் தாக்கு பிடிக்கமுடியாது. சிறு உதாரணம்- 2015ஆண்டு சென்னையில் வெள்ளம் வந்து, பெரிய அளவில் மனித இழப்புகள் ஏற்பட்டதை பார்த்தோம். செம்பரம்பாக்கம் ஏரியை திறந்ததால்  சென்னை முழுகிவிட்டது என்றார்கள். உண்மையில் நீர் செல்வதற்கான் இடங்களை எல்லாம் கட்டடங்களை கட்டி விட்டதால் நீர் எப்படி கடலில் கலக்கும் என்ற கேள்வி இன்றும் அப்படியே இருக்கிறது. சைதாப்பேட்டை பாலத்தை முழுவதும் வெள்ளம் முழுகி சென்றதை பார்த்தோம். வரலாற்றில் மிக பெரிய மழை, வெள்ளம் போன்றவை எல்லாம் மிக சிறப்பாக அன்றைய ராஜாக்கள் கையாண்டார்கள் அதற்கு மிக பெரிய உதாரணம்- கல்லணை. ஆனால் இன்று மிக சிறிய மழை வெள்ளதைதை கூட நம்மால் தாக்கு பிடிக்க முடியாமல் திணறுகிறோம். காரணம் நம்முடைய  சுயநலத்தால் அனைத்து விளைநிலங்களையும் விட்டு வைக்காமல் விற்றுவிடுகிறோம். 

சமிபத்தில் சென்னை உயர்நீதிமன்றம்- விவசாய நிலங்களை வீடு கட்ட விற்றுவிடுவதால் இனிமேல் முறையான அனுமதி இல்லாமல் பத்திரபதிவு செய்யகூடாது என்று உத்தரவு போட்டுள்ளது. அந்த அளவுக்கு நாம் விவசாய நிலங்களை பணமாக பார்க்கிறோம். இவை இப்படியே சென்றால் அடுத்து தலைமுறை மனிதர்கள் உணவுக்காக வீட்டின் மொட்டைமாடியில், பயிர் நடவு செய்யும் அளவுக்கு சென்றுவிடும்.

உலகில் உள்ள மற்ற உயிரினங்களையும் உள்ளடக்கியே மனிதனே தவிர, நாம் மட்டும் தான் உலகில் சிறந்தவன் என்ற மாய பிம்பத்தை உடைத்து இயற்க்கைய அழிக்காமல் வாழ ஆரம்பித்தால் எதிர் கால சந்ததியர்களுக்கு நாம் செய்யும் உதவியாகும். இன்று இருக்கும் இடங்கள், விலங்குகள், பறவைகள் நம்முடன் சேர்ந்தே இருக்கட்டும் அவற்றை அழித்து நாம் மட்டும் வாழ்வதில் என்ன அர்த்தம் உள்ளது. 

-செழியன்

lapwing2010@gmail.com

1 comment:

  1. அருமையான பதிவு.
    அழிவின் விளிம்பில் இருக்கும் உயிரினங்களை பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம் என்பதை நாம் அனைவரும்வரும் மறந்து விடக்கூடாது.

    ReplyDelete