Wednesday 28 June 2017

Tracing the Calls



Adyar-Sangeetha Hotel
மே மாதம் வந்தால் ஒரு பறவையின் குரலை கேட்டுக்கொண்டே வண்டி ஓட்டிக் கொண்டிருக்கிறேன். இந்த வருடமும் அதே போல் குரல் காதில் கேட்டுக் கொண்டேயிருக்கிறது. ஒரு நாள் சாஸ்திரி பவன் சாலையில் செல்லும்பொழுது ஓசை கேட்டது ஆனால் ஓசை வந்த இடத்தை நோக்கி பார்க்க கூட முடியவில்லை அந்த அளவுக்கு வண்டிகள் சாலையில் அதிகம் ஓடியது. உடனே முடிவு செய்தேன் நகரத்தில் வேறு எங்கெல்லாம் இவற்றின் குரல்கள் கேட்க முடிகிறது மற்றும் அந்த பறவையை பார்க்க முடியவில்லை என்றாலும் பரவாயில்லை குரலை நோக்கிச் செல்வோம், முடிந்தால் பறவையை அல்லது மரங்களை படம் பிடிப்போம் என்று வண்டியை சென்னை நகரம் முழுவதும் ஓட்டி வலம் வந்தேன். எந்த பறவை என்று சொல்லவில்லையே என்பீர்கள் வேறு யாரு நம்ம கறுப்பன் தான், அதாங்க குயில்.

காகத்தை திசை மாற்றி அதன் கூட்டில் முட்டை இடுவதே பெரும் சவாலாக வருடா வருடம்  குயில் செய்துவருகிறது. மனிதனுக்கும்-காகத்திற்கும் உள்ள வித்தியாசம், நம் குட்டி இவை இல்லை என்று தெரிந்த பிறகு காகங்கள் தன் கூட்டில் இருந்து குயில் குட்டியை  வருடா வருடம் வெளியே துரத்தும். இருந்தாலும் அடுத்த வருடம் குயிலின் முட்டையை போற்றி பாதுகாக்கம். நாம் அரசியில்வாதிகளிடம் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை வாக்குறுதிகளை நம்பி, தெரிந்தே ஏமாறுவது போல் காகங்கள்  வருடம் வருடம் தெரியாமல் ஏமார்ந்து கொண்டிருக்கும். நாம் ஐந்து வருடத்திற்கு ஒருமுறை, காகங்கள் வருடம் ஒரு முறை ஏமாறும், வித்தியாசம் அவ்வளவுதான்.

குயிலின் குரல் வரும் மரத்தில் காகங்களை பார்க்க முடியவில்லை. தந்திரங்கள் செய்து காகங்களை திசை மாற்ற இப்படி செய்கிறதா என்று தெரிந்து கொள்ளவேண்டும். குயில் இருந்த ஒரு மரத்தில் காகம் வந்து அமர்ந்தது உடனே குயில் அங்கு இருந்து காகம் இல்லாத வேறு ஒரு மரத்தில் சென்று அமர்ந்து கொண்டது. இதை என் நகர் வலத்தில் தெரிந்துகொண்டேன்.

Besant Nagar
முதல் பயணத்தை இப்படி முடிவு செய்து கொண்டேன் அசோக் நகர், கிண்டி, அடையாறு, பெசன்ட் நகர், மந்தவெளி, மயிலாப்பூர், பட்டினப்பாக்கம் மற்றும் சாந்தோம்.

அசோக் நகர் KFC பக்கத்தில் இருக்கும் சாலை வழியாக செல்லும்பொழுது குயிலின் ஓசையை கேட்க முடிந்தது. வண்டியை நிறுத்தி மரத்தை எப்படி நின்று பார்த்தாலும் குயில் தெரியவில்லை அதனால் கிளம்பவேண்டியது ஒன்றுதான் பாக்கி என்று வண்டியை காசி தியட்டர், ஜாபர்கான் பேட்டை, ஒலிம்பியா எதிர் சந்தில் நுழைந்து கிண்டி பஸ் நிலையத்தின் பின் வழியாக அங்குள்ள கடையில் நின்று “டீ” சாப்பிடும் பொழுது குரலை கேட்டுவிட்டேன் ஆனால் எந்த மரம் என்று தெரியவில்லை அங்கு மரங்கள் நிறைய இருந்தது ஒரு காரணம்.

மிக கூச்ச சுபாவம் உள்ள பறவைதான்  குயில், அடர்த்தியாக இருக்கும் இலைகள் மத்தியில் அமர்ந்து கொண்டு ஓயாத குரல் கொடுத்துக் கொண்டிருக்கும். ஆண் குயில் மட்டுமே கூவும் என்று சொன்னால் இதெல்லாம் எங்களுக்கே தெரியும், மேலே சொல்லு என்பீர்கள்.

வண்டியை கிண்டி சாலையில் ஓட்டிக் கொண்டே வந்ததில் செல்லம்மாள் கல்லூரி அருகில் அதே குரல். கல்லூரி பக்கத்தில் சந்து அங்கு இருந்த ஒரு மரத்தில் இருந்து தான் ஓசை வருகிறது என்று தெரிந்து சந்துக்குள் சென்று நின்று கொண்டேன் அந்த மரத்தில் தேடிக் தேடி ஓய்ந்தது தான் மிச்சம் பார்க்க முடியாமல் இடத்தை மட்டும் படம் எடுத்து கொண்டு நகர்ந்தேன்.

Guindy-Near Chellamal College
பரபரப்பான சாலையில் காதை மரங்களின் பக்கம் கொடுத்துவிட்டு சென்று கொண்டே  கவர்னர் மாளிகை, அண்ணா பல்கலைக்கழகம், மத்தியகைலாஸ் இவற்றை தாண்டி இடதுபுறம் வரும் அடையார்  சங்கீதா ஓட்டல் அருகில் இருக்கும் மரத்தில் இருந்து ஓசை காற்றில், அட டா என்று வண்டியை நிறுத்தி கவனித்ததில் ஓட்டலின் எதிர்புறத்தில் இருந்தும் ஓர் குரல் வருகிறது. உடனே எதிர் புறம் சென்று சர்விஸ் சாலையில் நின்று, இரண்டு மரங்களை தொடர்ந்து பார்த்ததில் உனக்கு தெரியமாட்டேன் என்று குயில் அடம்பிடித்துக்கொண்டிருந்தது. இருந்தாலும் ஒரே நேரத்தில் எதிர் எதிர் மரங்களில் இருந்து குயில் குரல் கேட்டது இனிமையான பொழுது  அதனால்  படங்கள் எடுத்துக் கொண்டு நேராக பெசன்ட் நகர் நோக்கி.

பெசன்ட் நகர் சாலை நிறைய மரங்கள் நிறைந்த காணப்படும் என்று எல்லோருக்கும் தெரிந்ததே அதனால் அங்குள்ள மரங்களில் கண்டிப்பாக குயில் குரல் கேட்காமல் எப்படி போகும் என்று அங்கு சென்று, நின்று கேட்டுவிட்டு பிறகே மந்தவெளி சென்றேன்.

மந்தவெளியிலிலும் நிறைய மரங்கள் இருந்ததால் வண்டியை வளைத்து வளைத்து ஓட்டியதில் பழைய சன் தொலைக்காட்சி அலுவலகத்தின் எதிரில் இருந்த மரத்தில் குயில் கூவிக்கொண்டிருந்தது. நின்று சிறிது நேரம் பாட்டை கேட்டுக்கொண்டிருந்தேன். நிறைய மரங்கள் என்பதால் நகர்ந்து நகர்ந்து சரியான மரத்தின் கீழ் சென்று நின்று மரத்தை மட்டும் கடைசியில் படம் எடுக்க வேண்டியதாகிவிட்டது.

இதுவரை குயிலை கண்ணில் பார்க்காமல் அதன் குரலுடன் பயணித்து கொண்டிருக்கிறேன். மந்தவெளி St John Schoolல் இருந்து பட்டினப்பாக்கம் சாலையில் வலது புறத்தில் சிறு சிறு மரங்கள் அதில் காகங்கள் கூடு தென்பட்டது ஆக இங்கு குயில்கள் இருக்கும் என்று சென்று கொண்டிருந்தேன். சாந்தோம் ஏர்டெல் அலுவலகத்தின் அருகில் இருந்த ஒரு மரத்தில் கூ கூ என்று அதே ஓசை. மயிலாப்பூர் குளத்தின் அருகில் நிறை மரங்கள் உண்டு அதிகம் வண்டிகள் ஓடும் சாலையில் வாகனங்களை மறந்து கூவி கொண்டிருந்தது. சாய்பாபா கோயில் அருகில் குயில் ஓசை என்று நிறைய குயில் பாட்டுகள் கேட்டுக்கொண்டிருந்தேன்.

முதல் சுற்று நிறைவு- குயிலை பார்க்காமலே வழி நெடுக்கும் குரலை மட்டும் கேட்டு முதல் பயணத்தை நிறைவு செய்துவிட்டேன். மொத்தம் ஒன்பது இடங்களில் இதுவரை குரல் கேட்டு பதிவு செய்துகொண்டேன். 

இரண்டாவது சுற்று  


எங்கு குயிலை பார்க்கமுடியும் என்ற நினைப்பில் அடுத்த சுற்றுக்கான வழித்தடத்தை அமைத்தேன். ராயப்பேட்டை, திருவல்லிக்கேணி, மவுண்ட் ரோடு, எக்மோர், சென்ட்ரல், பாரிஸ், மெரீனா பீச்
 


DD Pothigai-Television

ராயப்பேட்டை மிகவும் அதிக வாகனங்கள் மற்றும் நெரிசல் நிறைந்த பகுதி. மைலாப்பூரில் இருந்து ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள மேம்பாலத்தில் இருந்து பார்த்தேன் இடது பக்கம் பெரிய அரச மரம் அதில் காகம் கூடு இருந்தது குயில் இருக்குமா என்று சிறிது நேரம் இருந்து பார்த்தால் குரல் கூட வரவில்லை அங்கு இருந்து கிளம்பி ராயபேட்டை மருத்துவமனை, மணிக்கூண்டு, பைகிராப்ட் சாலை சுற்றி வந்தாலும் குயில் சத்தம் இல்லை ஒருவேளை அதிக இரைசல் காரணமாக இல்லையோ என்ற கேள்வியை கேட்டு கொண்டேன்.

காங்கிரஸ் அலுவலகம் சத்தியமூர்த்தி பவன் அருகில் இருந்த மரத்தில் குரல் வந்தது இங்கும் அதிக இரைச்சல்உடன் வண்டிகள் ஓடுகிறது ஆனால் ஓசை கேட்டது எப்படி என்று புரியவில்லை மற்றும் ராயபேட்டை ஸ்மித் சாலையில் அதே ராகம்.

திருவல்லிக்கேணி வழியாக பொதிகை தொலைகாட்சி இருக்கும் இடத்தில் வரும்பொழுது குயில் ஓசை தவழ்கிறது. எங்கு இருந்து- தொலைகாட்சி நிலையத்தின் உள்ளே இருக்கும் மரத்தில் இருந்து. மிக அமைதியாக இருக்கும் இடம் என்பதால் குயிலை பார்க்க முடியும் என்ற நம்பிக்கையில் உள்ளே சென்று எந்த மரத்தில் இருந்து குரல் வருகிறது என்று பார்த்து, அதன் அடியில் சென்று நின்று, கண்ணை 360டிகிரி சுழற்றியதில் மாட்டிகொண்டது இரண்டு ஆண் குயில்.
ஒரே கிளையில் இரண்டும் அமர்ந்திருந்தது. குயில் இரண்டு விதமாக குரல் கொடுப்பதை வழிநெடுக்க பார்த்து வருகிறேன்.

முதல் வகை - “கூ” மிக சிறிய கேப் “கூ” மிக சிறிய கேப் “கூ”.
இரண்டாவது வகை- கூ கூ கூ கூ கூ என்று தொடர்ச்சியாக கேப் இல்லாமல் வேகமாக குரல் எழுப்புகிறது. இதைத்தவிர குரலில் இன்னும் சில வகைகள் இருக்கலாம்.

IIT-Madras
பொதிகையில் பார்த்த குயில் இரண்டாவது வகையில் குரல் எழுப்பிக்கொண்டிருந்தது. மற்றொரு குயில் அமைதியாக அமர்ந்து இருந்தது. வெகு நேரம் நின்று பார்த்து கொண்டிருந்தேன். அமைதியான இடம் என்பதால் நமக்கு தொந்தரவு இருக்காது என்று மனிதர்களின் பார்வை படும் போல் அமரலாம் என்று நினைத்து கொண்டிருந்ததா? என்று தெரியவில்லை. இதே போல் IIT Madras உள்ளேயும் இலைகள் அதிகம் இல்லாத தாழ்வான கிளையில்- குயில் ஒன்று இருந்ததை பார்த்தது நினைவுக்கு வருகிறது.

அமைதியான இடத்தில் கூச்சம் போய், குயில் மற்றவர்கள் பார்வையில் படும் அளவிற்கு  அமர்கிறதா? என்பதை தொடர்ச்சியாக கவனிக்க வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறேன்.

பொதிகை முடித்து அண்ணாசாலை தொட்டு எக்மோர் உள்ளே புகுந்துவிட்டேன். எக்மோரை குறுக்கும் நெடுக்கும் வலம் வந்ததில் கண்ணிமரா நூலக சாலையில் செல்லும்பொழுது குரல் வந்த திசையை நோக்கி வண்டி தானாகவே சென்று நின்று கொண்டது. நூலகத்தில் இருந்த ஒரு மரத்தில் இருந்து ஓசை ஆனால் அங்கு அடர்த்தியான மரங்கள் உண்டு என்பதால் ஆனந்த ராகத்தை மட்டும் கேட்டுக் கொண்டிருந்தேன் பார்க்காமல் விடக்கூடாது என்று நகர்ந்து நகர்ந்து, ஓசையை செல் போனில் பதிவு செய்துகொண்டே குயிலை கண்டுபிடித்து விட்டேன். தொடர்ந்து குரல் கொடுத்து கெண்டே இருந்தது. காகம் ஒன்று வந்தவுடன் தன் இடத்தை காலிசெய்து வேறு மரத்திற்கு தாவிவிட்டது.

முடிந்த அளவு ஓசை வரும் மரத்தை சரியாக கண்டுபிடித்து அங்கு சென்று நின்று கொள்ளும் பழக்கம் வந்துவிட்டது.

எதிராஜ் கல்லூரி உள்ளே இருக்கும் மரத்தில் குயில் பாட்டு காலையில் கேட்டேன், மாலை பொழுது இரண்டு ஆண் குயில்கள் தாழ்வான நிலையில் எதிர் எதிர் பறந்து செல்வதை பார்க்கமுடிந்தது. அவை சென்று அமர்ந்த மரத்தை நோக்கி சென்று உற்று நோக்கியதில் இரண்டு ஆண் குயில் பக்கத்து பக்கத்து கிளையில் அமர்ந்து அதில் ஒன்று குரல் கொடுத்து கொண்டிருந்தது. எதிர் மரத்தில் காகத்தின் கூடு இருப்பதையும் பார்த்து நினைவில் வைத்துக்கொண்டேன்.

Ethiraj College
ஸ்பென்சர் பக்கத்து சந்தில் இருக்கும் மரத்தில் இருந்து குயில் கூவுவதை  பதிவுசெய்து கொண்டேன். எக்மோர் முடித்து அண்ணா சாலை வந்து சென்ட்ரல் செல்வதற்கு இடது புறம் திரும்புவம் அதாவது பல்லவன் சாலை. மாநகர பேருந்துகள் நிறுத்தும் டிப்போ ஒன்று உள்ளது அதில் இருந்த ஒரு மரத்தில் ஓசை அதை கேட்டுக்கொண்டே சென்ட்ரல் பக்கத்தில் செல்லும் வால்டாக்ஸ் சாலையில் சென்று கொண்டே இருந்தேன் அதிகம் மாரங்கள் இல்லை என்பதால் காககங்கள் கூடும் குறைவு அதனால் குயில் இங்கு இருக்க வாய்ப்பில்லை என்று சாலை முடிவில் சென்று “ யு” டர்ன் போட்டு ஆதியப்பன் நாயக்கன் தெருவில் நுழைந்து கடற்கரை ரயில் நிலையம் அடைந்தேன், சத்தங்கள் ஒன்றும் வரவில்லை. சென்ட்ரல், பாரிஸ் போன்ற இடத்தில் பெரியதாக குயில் இருக்க வாய்ப்\பில்லை என்று நினைக்கிறேன்.

பாரிஸ் இருந்து மெரீனா கடற்கரை சாலையில் வண்டியை இறக்கினேன். கடற்கரையை பார்த்தவாறு சென்று கொண்டே இருந்தேன். கடற்கரை உள் சாலையில் நிறைய மின்கம்பங்கள் அதன் அருகில் ஒற்றை கொம்பு போல் இலைகள் அற்ற நீண்ட மரங்கள் அதில் காகத்தின் கூட்டை பார்த்து உள் சாலையில் சென்று அருகில் பார்த்தால், காகம் ஒன்று அதில் அமர்ந்து முட்டையை அடைகாக்கிறது. மிக தாழ்வாக ஒரு சில காகங்கள் தங்கள் கூட்டை அமைத்து கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது. தொடர்ச்சியாக நிறைய கூடுகள் வெட்டவெளியில்  வெய்யில் நேரடியாக படுமளவு உள்ளது. மழை வந்தால் என்ன நிலைமையாகும் என்று புரியவில்லை எப்படி காகங்கள் பாதுகாப்பு இல்லாமல் இருக்கிறது என்று நினைத்து கொண்டிருந்தபொழுது கோவை சதாசிவம் சார்  சொன்னது நினைவுக்கு வந்தது.

காகங்கள் மரத்தின் மேல் கூட்டை அமைத்து இருந்தால் மழை வராது என்று அர்த்தம் அதே, கூட்டை மரத்தின் நடுவில் பாதுகாப்பாக அமைத்து இருந்தால் மழை வரும் என்று சொன்னார். இதையும் தொடர்ந்து விவாதிக்கவேண்டும்.


Marina beach


Marina Beach
கடற்கரை எங்கும் குயில் பாட்டு கேட்கவில்லை ஆனால் காகங்கள் நிறைய இருக்கிறது, இவையே லைட் ஹவுஸ் வரை தொடர்ந்தது பார்க்கமுடிந்தது.
இரண்டாவது சுற்றை லைட் ஹவுஸில் முடித்துவிட்டேன் மொத்தம் ஏழு இடங்களில் குரலை கேட்டு  மற்றும் மூன்று இடத்தில் குயிலை பார்த்து குறித்து கொண்டு ஓய்வு எடுத்தேன், அடுத்த ரவுண்டு வருவதற்கு.

மாலை வேலையில் அதிகம் குயில் ஓசையை கேட்க முடியவில்லை. எதிராஜ் கல்லூரி அருகே மாலை வேளையில் ஒரே ஒரு முறை சன்னமான குரலில் கூவுவதை கேட்டேன். விடியற்காலையில் இருந்து பாடுவதால் சோர்ந்து ஓய்வு எடுக்கும் என்று நினைக்கிறேன். பறவைகளில், குயில் கூடு கட்ட தெரியாததால் மனிதர்கள் வாடகை வீட்டில் இருப்பது போன்றே அதன் வாழ்க்கை உள்ளது. இனபெருக்க காலத்தில் மிக அதிக விழிப்புணர்வுடன் இருந்து காகத்தின் கவனத்தை திசை திருப்புவதற்கு பெரிய அக்கபோரே செய்யவேண்டி உள்ளது.

காகம் வருவதற்குள் முட்டையை அதன் கூட்டில் இட்டுவிட்டு நகரவேண்டும். வீட்டில் உள்ளவர்களுக்கு விழிப்பு வருவதற்குள், இருப்பதை எடுத்து கொண்டு ஓடும் திருடர்களுக்கு தான் தெரியும் அதன் கஷ்டம். சிறப்பு என்னவென்றால் காகம், குயில் இரண்டும் ஒரே மாதத்தில் இனப்பெருக்கம் செய்கிறது. முட்டையும் ஏறக்குறைய காகத்தின் முட்டை நிறமே இருக்கும். இயற்கையின் அதிசயத்தில் இது ஒரு ஆச்சரியம். 

மூன்றாவது சுற்று- புரசைவாக்கம், பெரம்பூர், வியாசர்பாடி, ஜவஹர் நகர், பெரியார் நகர், அயனாவராம், அண்ணா நகர், அமைந்தகரை, கீழ்ப்பாக்கம், சேத்பட், நுங்கம்பாக்கம் மற்றும் ஜெமினி பாலம்.

Egmore-Library
மோட்சம் தியட்டர் சாலையில் எந்த குயில் சத்தமும் இல்லாததால் வண்டி நேராக பெரம்பூர் பஸ் நிலையத்தில் சென்று நின்றது. சிறிது நேரத்தில் அருகில் இருந்த சந்தில் இருக்கும் மரத்தில் இருந்து “கூ” “கூ” “கூ” என்ற ராகம் வந்ததை அடுத்து நிமிர்ந்து மரத்தை பார்த்துவிட்டு அங்கு இருந்து கிளம்பினேன். பெரம்பூரில் வேறு எங்கும் கேட்காததால் பெரியரர் நகர் போகும் வழியில் ஜவஹர் நகர், அங்கு இருக்கும் ஸ்டேட் பேங்க் அருகிலுள்ள மரத்தில் இருந்து இசை வந்தது. நின்று பார்த்தால் அடர்த்தியான இலைகளை கொண்ட மரம், இருந்தாலும், பொறுமையாக தேடியதில் பார்வைக்கு குயில் கிடைத்துவிட்டது.

ஒரு ஆண் குயில் இலைகளின் நடுவில் மறைவாய் அமர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தது. அங்கு இருந்து எதிர் வீட்டில் இருக்கும் வேப்ப மரத்தில் சென்று அமர்ந்து கொண்டது. மாறி மாறி அவை பறந்து கொண்டிருந்ததை பார்த்து விட்டு அயனாவரம் நோக்கி சென்றால், நான் சென்ற நேரம் ஒன்றும் கேட்கவில்லை சுற்றி சுற்றி நேராக அண்ணாநகர் சென்றதில் அங்கு 7th மெயின் ரோடு (கிழக்கு) சாலையில் இருக்கும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அருகில் இருக்கும் அரச மரத்தில் இருந்து கண்டுபிடிக்கமுடியாத அளவுக்கு இலைகளின் நடுவில் அமர்ந்து கொண்டு குரல் கொடுத்துக் கொண்டிருந்தது.

அமைந்தகரை பச்சையப்பாஸ் கல்லூரி வருவதற்கு முன்பு இருக்கும் சிக்னல் இடது பக்கத்தில் இருந்து வந்த ஓசையை கேட்டுக்கொண்டே சேத்பட் வரை வந்தால் இங்கு ஒன்றும் இல்லை அடுத்து நுங்கம்பாக்கம் வருமான வரி அலுவலகம் உள்ளே இருந்த மரத்தில் இருந்து என்னை பாட்டு பாடி அழைத்தது. வெளியே இருந்து நோக்கினால் எங்கே தெரியும். காதில் கேட்டதோடு முடிவுற்றது சென்னை ஊர் சுற்றல். 

இந்த சுற்றில் ஐந்து இடத்தில் குரல் கேட்டு ஒரு இடத்தில் பார்த்து குறித்து கொண்டேன்.
மரங்கள் என்று எடுத்து கொண்டால் நிறைய அரச மரம் பார்க்க முடிந்து. பெரும்பாலான இடங்களில் வேப்ப மரம், சில இடங்களில் அசோக மரம், வீட்டின் உள்ளே தென்ன மரங்கள் மற்றும் இன்னும் நிறைய மரங்கள் இருந்தது எனக்கு பெயர் தெரியாததால் அவற்றை பற்றி குறிக்க முடியவில்லை. ஒரு BOTANY பயணம் செய்தால் மட்டுமே கற்றுக் கொள்வதற்கு சுலபமாக இருக்கும் என்பதால் மரங்களை சுற்றி காண்பிக்கும் மனிதர்களை தேட வேண்டும்.

ஆக சென்னை உள்ளேயே சுற்றியதில் மொத்தம் 25 இடத்திற்கும் மேல் குயில் பாட்டு கேட்டு, நான்கு இடத்தில் ஆண் குயிலை பார்த்து, ஒரு இடத்திலும் பெண் குயிலை பார்க்காமல், அடுத்த வருடம் உங்கள் பாடல்களை கேட்க வருகிறேன் என்று கை அசைத்து விட்டு இப்படியாக என்னுடைய குயில் புராணம் முடிவுக்கு வந்தது. 


-செழியன்
தங்கள் கருத்துக்களை மின்னஞ்சல் செய்துடுங்கள்:
lapwing2010@gmail.com

2 comments:

  1. அருமையான பதிவு. நான் வசிக்கும் ஊரில் இது போன்ற ஒரு குயில் பாட்டு round up செய்ய தூண்டும் பதிவு. மிக்க நன்றி

    ReplyDelete