Tuesday 2 January 2018

Round up-2017 : With birds and beyond.....


இந்த வருடம் என்ன செய்தோம் என்று யோசித்ததில் ஓர் அளவுக்குதான் யோசிக்கமுடிந்தது. ஆனால் துல்லியமாக யோசிக்க முடியுமா என்றால் சிரமமே. பறவைகள் பார்த்ததை குறிப்பதற்க்கென்று ஒரு Birding Planner வருட ஆரம்பத்தில் வாங்கி குறித்து கொண்டு வந்தேன். அவற்றை எடுத்து பார்த்ததில் இந்த வருடம் என்ன செய்தோம் என்பது துல்லியமாக தெரிந்துவிட்டது.

பறவைகளை பார்த்து மட்டுமில்லமல் அவற்றை பற்றி நிறைய விழிப்புணர்வு ஏற்படுத்துதியது, சிட்டுகுருவி தினத்தின் கொண்டாட்டம்,  சென்னை பறவை பந்தயம்(Chennai Bird Race), ஊர்புறத்து பறவைகள் கணக்கெடுப்பு(GBBC), இயற்கை, பறவை பற்றிய கட்டுரைகள் எழுதியது, நிறைய புதிய பறவை மனிதர்கள் அறிமுகம், புதிய பறவைகளை(Lifer) பார்த்தது, பட்டாம்பூச்சி பார்க்க ஒரு நடை, இயற்கை தொடர்பான புத்தகம் சேகரித்தல் என்று 2017யை பொறுமையாக நடந்து, சில முறை ஓடி  கடந்துள்ளேன்.

மொத்தம் இருபது முறை பறவையும், மற்ற உயிரினங்களையும் பார்க்க இந்த ஆண்டு சென்றுள்ளேன். மாதம் சராசரியாக ஒருமுறைக்கு மேல் சென்றிருப்பது தெரிந்தது. சென்னையில் சிறுதாவூர் ஏரி, கேளம்பாக்கம், பெரும்பாக்கம், பள்ளிகரணை, முட்டுக்காடு பாலம், மணப்பாக்கம் ஆறு, அடையார் பாலம், தியோசபிகல் சொசைட்டி, கிண்டு காடு, முதலை பண்ணை, IIT-Madras, வேளச்சேரி ஏரி, மணிமங்கலம் ஆறு, கிண்டியில் சூறைக் குருவிகள்(Rosy Starling) நடனம் என்று பயணம் சென்று முடிவடைந்தது.

கோனை மூக்கு உள்ளானை பெரும்பாகத்தில் அதிக எண்ணிகையில் நண்பர்களுடன் பார்த்தேன். நீண்ட கோணமூக்கை கொண்டு நீரில் துழாவி விளையாடி கொண்டிருந்தது. சாம்பல் தலை ஆள்காட்டி பள்ளிகரனையில் நிறைய நின்று கொண்டிருந்தது. உற்று நோக்கி கண்டுபிடித்தோம். சந்திரசேகர் சார் இங்கு சாம்பல் தலை ஆள்காட்டி இருக்கும் என்று அழைத்து சென்று காண்பித்தார் அவர் சொன்னபடி பள்ளிகரனையில் நிறைய இருந்தது.

சாம்பல் கதிர்குருவி(Ashy Prinia) கண்டுபிடிக்க முடிகிறது. ஆனால், சாதாரண கதிர்குருவியை(Plain Prinia) சில முறை குழப்பத்திலேயே கண்டுபிடிக்க வேண்டியுள்ளது. பறவைகள் தங்கள் வாழ்க்கையை செடிகள், முட்புதர்கள், கொடிகள், மரங்கள் போன்றவற்றில் ஆனந்தமாக கழிக்கும்பொழுது மனிதர்களாகிய நாம் ஓர் வீடு போதாது என்று இரண்டாவது வீடு அதற்கு கடன் என்று பெரும் குழப்பத்தில்,பிரச்சனயில் இருப்பது நினைவுக்கு வந்து மறைந்தது.

பறவைகளை பார்ப்பவர்களின், எண்ணிக்கை உயர்ந்து உள்ளார்களா என்று தேடியதில் நிறைய புதியவர்கள், பறவை-இயற்கை-சுற்றுச்சூழல் பக்கம் தங்களின் கவனத்தை செலுத்திவருகிறார்கள். சென்னை, மதுரை, கோவை, திருநெல்வேலி, சேலம், திருப்பூர் போன்ற ஊர்களில்  பறவை, இயற்கை சங்கங்கள் உற்சாகமாக செயல்பட்டுவருகிறது.

சங்கம் போல் இல்லாமல், சிலபேர் சிறு சிறு குழுக்களாக இணைந்து பறவைகளை பார்த்து வருகிறார்கள்.  திருவண்ணாமலையில் கலைமணி மற்றும் அவர் நண்பர்கள், இராஜபாளையம் விஷ்ணு & நண்பர்கள்  என்று சிறு குழுக்களாக செயல்படுகிறார்கள். தொடர்ந்து பறவைகளை பார்த்து, விவாதித்து முழு அர்பணிப்புடன் செய்து வருகிறார்கள். கலைமணியுடன் செஞ்சி மலையில் மஞ்சள் தொண்டை சின்னானை அதன் வாழிடத்தில் பார்த்தது இன்னும் நினைவில் உள்ளது.


மார்ச்-20 சிட்டுக்குருவிகள் தினம் என்பதால் பெசன்ட் நகரில் விழிப்புணர்வு நடப்பதை தெரிந்து நாமும் சிறிது பங்களிப்பு செய்யலாமே என்று காலையே அங்கு சென்று, தெரிந்த அளவு சிட்டுக்குருவிகள் பற்றி கேட்பவர்களுக்கு சொல்லிகொண்டிருந்தேன். பின்பு இன்று எப்படியும் ஒரு சிட்டுகுருவியாவது பார்த்து படம் எடுத்துவிட வேண்டும் என்று சுற்றியதில், வீட்டருகில் ஏழு சிட்டுக்குருவிகளை மாலையில் பார்த்து பதிவு செய்தேன்.Sparrow Day
Sparrow day- Besant Nagar

இயற்கை, பறவைகள் பக்கம் கவனம் செலுத்தியது ஒரு சில வருடங்கள் முன்பு மட்டுமே ஆனால் பத்து வருடங்கள் முன்பே சுற்றுச்சூழல் தொடர்பான புத்தகங்கள் வாங்கி சேகரித்து இருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த வருடம் என்ன தலைப்புகளில் புத்தகங்கள் வாங்கியிருகிறேன் என்று எனது புத்தக இருப்பில் தேடியதில் Grimmetன் Birds of Indian subcontinent புத்தகம் புதிய பதிப்பாக வந்திருப்பது தெரிந்து அவற்றை அமேசானில் விலை குறைந்தபொழுது வாங்கி வைத்து கொண்டேன்.  பார்த்தேன்.
கா.ரத்னம் அவர்களின் “தமிழ்நாட்டு பறவைகள்” புத்தகம் நீண்ட நாள் பதிப்பில் இல்லாமல், இப்பொழுது புதிய பதிப்பு வந்தவுடன் அவற்றையும் வாங்கி சேகரித்துவிட்டேன். சிட்டுக்குருவிகள் பற்றி தெளிவான கட்டுரைகள் கொண்ட புத்தகமான “சிட்டு” புதிய பதிப்பு வாங்கியுள்ளேன், ஆதி வள்ளியப்பன் சார் பரிசாக கொடுத்த Birds from my window புத்தகம். புத்தகங்களை படிக்கிறோமோ இல்லையோ பிறகு தேவைப்படும் என்று சேகரித்தும் வருகிறேன்.

நகரில் நிறைய கண்காட்சி நடந்தாலும் சுற்றுச்சூழல் தொடர்பான காட்சிகள் நடப்பது மிக குறைவு. அரிதாக அப்படி ஒரு கண்காட்சி அடையார் நதியை பற்றி EFI அமைப்பு நடத்தியதை சொல்லலாம். அடையார் நதியின் அவலங்களை, அழிவுகளை மிக பெரிய படங்களாக நமக்கு காட்சி படுத்தியிருந்தார்கள்.Adyar River Expo

சென்னைக்கு வெளியே – வேடந்தாங்கல் பறவை சரணாலயம், கரிகிலி பறவைகள் சரணாலயம், ஏலகிரி, வேலூர், கடலூர் போன்ற இடங்களிலும் சென்று பறவைகள் பார்த்து குறித்திருப்பதை பறவை நாட்குறிப்பு தெரிவித்தது. கடலூரில் Pipt ஒன்றை பின்தொடர்ந்து வீடியோ எடுத்தேன். அது நடந்தே சென்று கொண்டிருந்தது கூடவே பின்னால் சென்று பார்த்தேன் சிறுது துரத்தில் பறந்து அங்கும் இங்கும் சென்று அமர்ந்து கொண்டது. அதே இடத்தில இருந்த ஒரு பனை மரத்தில் தூக்கனாங்குருவி தன் கூட்டில் அமர்ந்து இருந்தது. கிட்டே சென்றதில் பறந்து அருகில் இருந்த மின் கம்பிக்கு சென்றுவிட்டது. தொலைவிலேயே நின்று கொண்டேன்.

வானம்பாடி ஒன்று அதே மின் கம்பியில் அமர்ந்து பாடி கொண்டிருந்தது. அதன் குரல், இணையை தேடுகிறது என்று தெரிந்து விட்டது. சிறிது நேரத்தில் அதன் துணையின் குரலை கேட்டு புல் தரையில் சென்று கொஞ்ச தொடங்கியது. வயல் நடுவில் இருந்து திடிரென்று மிக அதிக எண்ணிகையில் சிறு பறவைகள் பறந்து வலம் வந்து மீண்டும் வயலில் அடைக்கலம் ஆகிவிட்டது. என்ன பறவை என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இப்படி வாயில் நடுவில் இருந்து நிறைய சிறு  பறவைகள் என்னவாக இருக்கும் என்று தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.

சிகப்பு ஆட்காட்டி பறவை ஒன்று ஒரு இடத்திலும் மற்றொன்று அதன் எதிர் திசையிலும் நின்று கொண்டிருந்தது. கிட்டே சென்றதில் வட்டம் அடிக்க தொடங்கிவிட்டது. பறவைகள் மிக ஜாகரதியாகவே இருப்பதை பார்க்க முடிகிறது.

தீபாவளிக்கு இரண்டு நாள் முன்பு சூரியன் பண்பலையில் இருந்து சென்னையில் காற்று மாசு அடைவது மற்றும் பட்டாசு வெடி விடுவதால் அதனால் எந்த அளவுக்கு காற்று மாசு ஆகிறது என்பதை பற்றி சிறு பேட்டியை கேட்டார்கள். யார் உங்களுக்கு தெரியபடுத்தியது என்று கேட்டதில் திரு.K.V.சுதாகர் அவர்கள்தான்  உங்களிடம் பேட்டி கேட்க சொன்னார் என்று சொன்னார்கள். அதனால் சூரியன் பன்பலைக்கு  சுற்றுச்சூழல் பேட்டியை கொடுத்தேன். இதற்கும் திரு.சுதாகர் சாருக்கு நன்றி.
GNP

PULICAT
சென்னை பறவை பந்தயம்(10th Chennai Bird Race) மற்றும் ஊர் புறத்து பறவைகள் கணக்கெடுப்பு (GBBC) இந்த இரண்டு பறவை கணக்கெடுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வலம் வந்தது புதிய அனுபவமாக இருந்தது. பறவைகள் பார்க்க செல்வது என்பது ஒரு வகை என்றால் பறவைகளை கணக்கெடுப்பது மற்றொரு வகையாகும். இப்படி கணக்கெடுப்பு செய்யும்பொழுது நாம் இன்னும் பறவைகளை நெருக்கமாக தெரிந்துகொள்ள முடியும்.
மக்கள் தொகை கணக்கெடுப்பு போல் பறவைகள் கணக்கெடுப்பு அரசு செய்யவேண்டும். ஆனால் புலிகளுக்கு தரும் முக்கியத்துவம் பறவைகளுக்கு இல்லை என்று தெரிகிறது. புலி காட்டின்  முக்கிய் சூழியல் குறியீடு என்றால் பறவைகளும் அப்படியே.

மெட்ராஸ் இயற்கை சங்கத்தின்(MNS) மூலம் நடத்த படும் சென்னை பறவை பந்தயம் இந்த ஆண்டும் மிக சிறப்பாக நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு ஒரே நாளில் ஐம்பதுக்கும் மேற் பட்ட பறவை வகைகள் மற்றும் நிறை இடங்களுக்கு பயணம் செய்தது புதிய அனுபவமாக இருந்தது. அதுவும் ஓர் குழுவாக பயணித்தது நிறைய புதிய விஷயங்களை கற்றுகொள்ள முடிந்தது. பெரும்பாகத்தில் Comb Duck பார்த்தது எங்கள் குழுவின் Birds of the day பறவை என்று குறித்து கொண்டோம். Chennai Bird Race

இன்னும் ஒரு பறவை கணக்கெடுப்பு ஊர்ப்புறத் பறவை கணக்கெடுப்பு (GBBC) நடந்து அதில் MNS குழுவினருடன் SHAR Road சென்று அதிகமான பறவைகள்  பார்கவில்லை என்றாலும் புதிய பறவைகள் நிறைய பார்த்தேன். GBBC-2017

வடுவூர் பறவைகள் சரணாலயம் சென்று வந்ததை பற்றி எழுதிய கட்டுரை  மற்றும் “கோவை பறவைகள்” என்ற புத்தகத்தை பற்றி எழுதிய கட்டுரை ஹிந்து தமிழ் நாளிதழில் வந்தது Hindu Tamil Newspaper . கிண்டியில் பார்த்த சூறைக் குருவிகள் நடனத்தை பற்றி எழுதிய கட்டுரை MADRAS MUSINGS பத்திரிக்கையில், இயற்கையை அழித்தால் கட்டுரை பாவையர் மலர் புத்தகத்திலும் வெளிவந்தது. Madras Musings Magazine

ஆழ்வார்பேட்டையில் உள்ள CPR conservational அரங்கில் சுற்றுச்சூழல் தொடர்பான கருத்தரங்கம் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டதில் விக்கிப்பீடியா போல் விகாஸ்பீடியா என்று ஒரு முழு தகவல்கள் அடங்கிய வலைதளத்தை உருவாகியுள்ளோம் அதில் சுற்றுச்சூழல் தொடர்பான கட்டுரைகள் தேவைபடுகிறது அதனால் அதில் எழுதங்கள் என்று வந்திருந்த அனைவருக்கும் சொன்னார்கள்.

SNAKE RESCUE TEAM
பாம்புகள் என்றால் படையே நடுங்கும் என்று சொல்வார்கள் ஆனால் வீட்டின் உள்ளே வரும் பாம்புகளை பிடித்து அவற்றின் வாழ்விடத்தில் விடுவதற்கு என்று ஒரு அமைப்பு செயல்படுகிறது. துணிச்சலாக அதே சமையும் ஜாகரதியாகவும் பாம்புகளை பிடிகிறார்கள். சென்னை பாம்பு பூங்காவில் இவர்கள் கலந்துகொள்ளும் ஒரு சந்திப்பில் கலந்துகொண்டேன். அதில் எப்படி பாம்புகளை பிடிப்பது, பிடிக்கும்பொழுது எதில் கவனம் இருக்கவேண்டும், எல்லா பாம்புகளுக்கும் விஷம் உண்டா போன்ற கேள்விகளுக்கு தெளிவான பதில்களை தந்தார்கள்.

பாம்பு பூங்காவில் இருக்கும் ஊழியர்களை அறிமுகபடுத்தி அவர்களின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டார்கள். அதில் நிறைய ஆச்சரியமான தகவல்கள் கேட்க முடிந்தது. எக்கு மிக சுவாரசியமாக இருந்தது. பாம்புகளுக்காக வாழ்க்கையை செலுத்துபவர்கள் மற்றும் ஆபத்தின் நடுவிலே எந்நேரமும் வாழ்கை நடத்துபவர்கள்.

கோவை சதாசிவம் ஐயாவை சென்னை பொதிகை தொலைகாட்சி நிலையத்தில் பார்த்து பேசியபொழுது நிறைய தகவல்களை சொன்னார். இயற்கையை பற்றி ஆழமான கருத்துகள் அவரிடம் இருக்கிறது. பறவைகளை பற்றி நுணுக்கமான தகவல்களை தருகிறார். ஒரு முறை அவரிடம் பேசிப்பாருங்கள் நிறைய விஷயங்களை தெரிந்துகொள்வீர்கள் என்பது நிஜம்.

ROYAPETTAI- PARAKEET
பச்சைகிளிகள் நிறைய வரும் இடமான ராயப்பேட்டை சேகர் சார் வீட்டின் மேல் மாடியில் ஒரு மாலை சென்று நண்பர் மாசிலாமனியுடன் அமர்ந்துகொண்டோம். கிளிகள் மிக மிக எங்கள் அருகில் இருந்து அரிசி சாப்பிடுவதை இரண்டு மணிநேரம் மறைவாக அமர்ந்து நிறைய புகைப்படங்களை எடுத்துக்கொண்டு கிளம்பினோம். பச்சைக்கிளியின் உறவினரான சேகர் சார் அவர்களுடன் பேசிகொண்டிருந்தது நல்ல அனுபவமாக இருந்தது. கிளிகளை பற்றி நிறைய சுவாரசியமான தகவல்களை சொன்னார். அனைவரும் ஒரு முறை சென்று பார்க்கவேண்டிய இடம் ஆகும்.

உலக சுற்றுச்சூழல் நாள் அன்று சென்னை அண்ணா பல்கலைகழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்துகொண்டதில் இயற்கை பாதுகாப்பை நாம் எங்கு இருந்து தொடங்கவேண்டும் என்பதை கன்யாகுமாரி மாவட்ட ஆட்சியராக இருந்த திரு.ராதாகிருஷ்ணன் ராட்னூ.IAS,அவர்கள் என்ன சொன்னார் என்பதை அவர் வார்த்தைகளில் பார்போம்.

GUINDY- ENVIRONMENTAL DAY
நான் மாவட்ட ஆட்சியராக கன்யாகுமாரிக்கு வந்தபொழுது என் வீட்டில் இருபவர்களிடம் சொன்னேன். முதலில் நம்மிடம் இருந்து ஆரம்பிப்போம் இனிமேல் பிளாஸ்டிக் பைகளை தவிர்த்து துணி பைகளை கொண்டு சொல்வோம் என்று. இவற்றை அப்படியே பின்பற்றி என் வீட்டில் இருபவர்கள் செயல்பட்டார்கள் என்று சொன்னபொழுது அனைவரும் கைதட்டி உற்சாகம் தெரிவித்தனர்.

பறவைகள் பார்ப்பது போல் வண்ணத்துபூச்சிகளையும் இந்த வருடம் முதல் பார்க்க தொடங்கியுள்ளேன். பறவைகள் போல் அதில் பெரியதாக தெரியாது என்றாலும் அவற்றை பற்றிய செய்திகள் சேகரிப்பது, அவற்றை படிப்பது மற்றும் பார்த்தும் வருகிறேன். அப்படி ஒரு வண்ணத்துபூச்சிகள் பற்றிய அறிய மிக பழமையான படங்கள் சென்னை கன்னிமாரா நூலகத்தில் பார்பதற்கு வைத்திருப்பதை கேள்விப்பட்டு சென்று பார்த்து பதிவு செய்துகொண்டேன்.

MUSEUM- BUTTERFLY 
மிக அரிதான புகைப்படங்கள் அங்கு காட்சி படுத்தப்பட்டுள்ளது. அதன் தாள்கள் தொட்டாலே கிழிந்து விடும் அளவு இருப்பது அதன் எவ்வளவு வருடங்கள் பழமையானது என்பதை உணத்தியது. மற்றும் பூச்சிகள் படமும் வரைந்து இருக்கும் புத்தகங்களை பார்த்தேன்.

தமிழ் பறவையாளர் சந்திப்பு இந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் ஏலகிரி மலை மேல் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு புதிய மனிதர்கள் சந்திப்பு, பறவைகள் பற்றிய புதிய தகவல்கள், பறவை நோக்குதல் என்று ஜாலியாக இரண்டு நாள் கடந்தது. TAMIL BIRDERS MEET


வர்தா புயல், மனிதர்கள் மட்டுமே இல்லாமல், பறவைகளையும் விட்டுவைக்காமல் தடம் புரட்டிவிட்டது. சூறைக் குருவிகள் கிண்டி மரத்தில் ஏராளமாக இருப்பது தெரிந்து, அங்கு விசாரித்ததில், இதுவே முதல் முறை. இதுவரை இதுபோல் பறவைகள் இங்கு வந்ததில்லை என்று சொன்னார்கள். வர்தா புயல் வந்ததால் பறவைகள் அமர்ந்த 
இருந்த மரம் விழ்ந்திருந்து, அதனால் அவை வேறு புகலிடம் தேடி வந்திருக்க வேண்டும், இந்த மரம் அதற்கு ஏற்றதாக இருப்பதால் கெட்டியாக பிடித்து கொண்டது. ஆனால் இந்த வருடம்-2018 சூறைக் குருவிகள் வந்துள்ளதா என்று மீண்டும் கிண்டி சென்று பார்த்து விசாரித்ததில் அங்கு உள்ள மனிதர்கள் இந்த வருடன் வரவில்லை என்பதை உறுதி படுத்தினார்கள். அப்போ வேறு எங்கு போயிருக்கும்?

GUNIDY- ROSY STARLING
2018 புது வருடம், மீண்டும் நிறைய கனவுகளுடன் பயணத்தை தொடங்கியுள்ளேன் .எந்த விதமான அனுபவம் ஏற்படுகிறது என்பதை வருடத்தின் முடிவில் எழுதுகிறேன்.

-செழியன்.ஜா

lapwing2010@gmail.com

No comments:

Post a Comment