Saturday 5 May 2018

உயிர் இதழ்- அறிமுகக் கூட்டம்


உள்ளே நுழைந்த உடன், திரு.சண்முகானந்தம் சார் கைகொடுத்து வரவேற்றார். வலது புறத்தில்  திரு.தியடோர் பாஸ்கரன் சார் நாற்காலியில் அமர்ந்து இருந்தார். அவருக்கு வணக்கம் சொன்னவுடன் எழுந்து நின்று கைகொடுத்து வணக்கம் சொல்லி அமர்ந்தது, ஆச்சரியமாக இருந்தது. அவர் அருகில் அமர சொன்னவுடன் சிறிது நேரம் பொதுவான தலைப்புகளை பேசிவிட்டு அடுத்து இருந்த  அறையில் உயிர் இதழ் அறிமுக கூட்டம் தொடங்கியது.

சண்முகானந்தம் அவர்கள் அறிமுக உரை நிகழ்த்தினார், இது உயிர் இதழின் முதல் அறிமுகக் கூட்டம். இதுவரை இரண்டு இதழ்கள் வந்துள்ளன. உங்களின் இதழ் பற்றிய கருத்துகள் குறிப்பாக நிறைகளை விட, குறைகள் மேலும் இதழை செழுமைபடுத்தும் என்று கூறி   தியடோர் பாஸ்கரன் சாரை பேச அழைத்தார்.


பறவை, விலங்கு, பூச்சிகள், புகைப்படம் எடுப்பது என்று விரிவாக பேசினார். இன்றைய காலகட்டத்தில் பறவைகளை புகைப்படம் எடுப்பவர்கள் அதிகரித்து உள்ளனர். ஆனால் அவர்கள் பறவைகள் பற்றிய பெயர், அதன் செயல்பாடுகள் பற்றி சிறிதும் தெரிந்து கொள்வதில்லை. படம் எடுத்து முகநூலில் போட்டு நிறைய லைக்ஸ் வாங்கவேண்டும் என்று ஆர்வமாக இருக்கிறார்கள். அவர்களுக்கு பறவை என்பது புகைப்படம் எடுக்க ஒரு subject மட்டுமே என்றார்.


பறவை, விலங்குகளுக்கு தமிழில் உள்ள பெயர் குறித்து பேசினார். பெரும்பாலம் ஆங்கில பெயரை நேரடியாக தமிழில் மொழிபெயர்த்து விடுகிறார்கள்.  அது தவறு என்று குறிப்பிட்டு. உதாரணமாக Grey-headed flycatcher இதனை நேரடியாக தமிழில் மொழி பெயர்த்து அவற்றை சொல்லி பார்க்கும்பொழுது  வேறு ஒரு அர்த்தத்தை தருகிறது என்று தமிழ் பொழிபெயர்ப்பை   குறித்து சொன்னார்.

நிறைய பறவைகளுக்கு தமிழில் சரியான பெயர் இல்லை அதனால்  அவற்றுக்கு எப்படி பெயர் வைப்பது என்று தியடோர் பாஸ்கரன் சாரிடன் கேட்டேன். தமிழில் பெயர் இல்லை என்பது உண்மைதான் அதனால் இந்த கேள்விக்கு பதில் சொல்வது என்பது இப்பொழுது கடினம் என்றார்.  
சுவாரசியமாக பேசிக்கொண்டே சென்றார். இடையில் மீன்கொத்தி பறவைகளை பற்றி நிறைய தகவல்களை சொன்னார். வெண்மார்பு மீன்கொத்தி, கருப்பு-வெள்ளை மீன்கொத்தி, சிறிய மீன்கொத்தி இவைகளின் செயல்பாடுகளில் வெண் மார்பு மீன்கொத்தி பரவலாக நாம் பார்க்க முடிகிற பறவையாகும்.
  

கருப்பு-வெள்ளை மீன்கொத்தி (Pied Kingfisher) :
இவற்றை நாம் பார்க்க வேன்டும்மென்றால் தெளிந்த நீர் இருக்கும் இடத்திற்கு செல்லவேண்டும். காரணம் இந்த வகை மீன்கொத்தி, தெளிந்த நீரில் மட்டுமே (உயரத்தில் இருந்து, நீரில் மீன் தென்பட்டால் நேரடியாக டைவ் அடித்து) மீனை பிடிக்கும் அதனால் தெளிந்த நீர் நிலைபகுதிகள் இல்லை என்றால் இவற்றின் வாழ்கை நிலை கடினமே.

மீன்கொத்தி (Common Kingfisher)
இவற்றின் வரலாறு சுவாரசியமானது. ஏன் இதனை Common Kingfisher என்று அழைக்கபடுகிறது என்று கேள்வி கேட்டு, இந்த மீன்கொத்தி உருவில் சிறியவை அவை Old World மற்றும்  New World என்று அழைக்கப்படும் ஆப்பிரிக்க மற்றும்  அமெரிக்கா கண்டங்கள் இரண்டிலும் கானப்பட்டவை, கானப்படுவை  அதனால் இவற்றை Common Kingfisher என்று அழைக்கிறோம் என்று புது தகவலை சொன்னார்.

உயிர் இதழின் உள்ளடக்கம், தகவல்கள், படங்கள் தரமாக காணப்படுகிறது. குறை ஒன்றும் தெரியவில்லை என்று உரையை முடித்து, கேள்விகள் இருந்தால் கேளுங்கள் என்றார். திரு.முவி.நந்தினி அவர்கள் இப்பொழுது வரும் சுற்றுச்சூழல் கட்டுரைகளை படிக்கிறிர்களா என்று கேட்டார். என் கவனத்துக்கு வருபவைகளை தொடர்ந்து படித்து வருகிறேன். இன்று நிறைய புதியவர்கள் எழுத வந்திருப்பது சந்தோசம் தருகிறது. ஆனால் இவை காலம் கடந்த செயலாகவே இருக்கிறது. காரணம் இப்பொழுது நிறைய உயிரிணங்கள் அழிந்து விட்டது என்று முடித்தார்.

தியடோர் பாஸ்கரன் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, அடுத்து இங்கு பேச வருபவர் சுற்றுச்சூழல் பற்றி நன்கு தெரிந்து வைத்திருப்பவர், காட்டுயிர் பற்றி தொடர்ந்து படித்து, விவாதித்து வருபவர், பறவை பாடத்தை முறைப்படி முடித்தவர், சமிபத்தில் இவரின் கட்டுரை தொகுப்பு வேட்டைகார ஆந்தையின் தரிசனம் என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்தது குறிப்பிடத்தக்கது என்று சொல்லி  ஹிந்து நா.வினோத் குமாரை அழைத்தேன்.

நா. வினோத் குமார் :

மலையாளதில் இரண்டு இதழ், ஆங்கிலத்தில் Sanctuary Asia, Saves us  என்று இரண்டு இதழ், தமிழில் முகமது அலியின் காட்டுயிர் இதழ், காடு என்ற இதழ், இப்பொழுது  உயிர் என்ற புது காட்டுயிர் இதழ் இதை தவிர்த்து வேறு மொழியில் காட்டுயிர் தொடர்பான இதழ்கள் வருகிறதா என்று தெரியவில்லை என்று பேச ஆரம்பித்தார்.

அதுவும் முகமது அலியின் காட்டுயிர் இதழ் தொடர்ந்து வரவில்லை. என்னிடம் இருபது இதழிற்கு மேல் உள்ளது என்று குறிப்பிட்டு. உயிர் இதழ் குறித்து விரிவாக பேசினார். இதழ் அடுத்து அடுத்து நிலைக்கு வர பெரிதும் உதவி செய்பவை விளம்பரங்கள் அதனால் விளம்பரங்கள் மிக முக்கியம். இதழின் உள்ளடகத்திற்கு, படத்திற்கு  அறுபது ரூபாய் என்பது தாரளாமாக கொடுத்து வாங்கலாம். 
கட்டுரைகளை பற்றி குறிப்பிடும்பொழுது, ஒரு கட்டுரை அல்லது நேர்காணலின் பக்கத்தை கொஞ்சம் எடிட் செய்து குறைகலாம் அதன் மூலம் இன்னும் ஒரு கட்டுரையை சேர்க்கமுடியும் என்று தொழில் ரீதியாகவும், வாசகர் பார்வையாகவும் உயிர் இதழ் குறித்து பேசினார்.

என்னதான் இன்றைய தொழில்நுட்ப்ப காலத்தில் ebook மூலம் படிக்க முடிந்தாலும், புகைப்படங்களை நம் கைப்பட தொட்டு பார்பதற்கும், உதாரணமாக கானமயில் படத்தை எடுத்து காண்பித்து பேசுகிறார். இதன் உடல் நிறங்கள், கண் அருகில் இருக்கும் துல்லியமான நிறங்கள் போன்றவை அச்சு புத்தகத்தில் பார்க்கும்பொழுதுதான் நாம் சுலபமாக உள்வாங்கமுடியும். உயிர் இதழ் மேலும் வளர வாழ்த்துகள் என்று முடித்தார்.


வினோத் குமார் அவர்களுக்கு நன்றி தெரிவித்து, அடுத்து பேச வருபவர், இவரின் சுற்றுச்சூழல் புத்தகம் ஒன்று சமிபத்தில் வெளிவந்தது. அதில் முதல் முறையாக தமிழகத்தில் இருக்கும் பறவை ஆர்வலர்கள், சுற்றுச்சூழலியர்கள் போன்றவர்களின் நேர்காணல் வெளிவந்தது இதுவே முதல் முறை என்று தெரிவித்து திரு.நந்தினி அவர்கள் பேச வருமாறு அழைக்கிறேன் என்றேன்.

மு.வி.நந்தினி :

உயிர் இதழ் கட்டுரைகள் பற்றி தெளிவாக பேசினார். இதழ் எப்படி ஆரம்பிக்கப்பட்டது, இதழை குழந்தைகள் எப்படி வரவேற்கிறார்கள் என்று சொல்லி அலையாத்தி காடுகள்  நேர்காணலை விரும்பி படித்ததாக சொன்னார். இவற்றை காட்டுயிர் இதழாக மட்டும் செயல்படுத்த போகிறிர்களா அல்லது குழந்தைகள் செய்திகளும் வெளியிடுவீர்களா என்று ஆசிரியருக்கு கேள்வி ஒன்றை எழுப்பினார்.

சுற்றுச்சூழல் கலைசொற்கள் நிறைய உருவாகவேண்டும், மாற்றும் உயிர் இதழில் சிறு பெட்டி செய்திகளாக கலைசொற்களை தொடர்ந்து வெளியிடவேண்டும் அதனால் ஆங்கிலத்தில் இருப்பதுபோல் ஒரு அகராதியை உருவாக்க முடியும் என்று சுற்றுச்சூழல் கலைசொற்கள் முக்கியத்துவத்தை நமக்கு உணர்த்தினார். இவருக்கு நன்றி தெரிவித்து அடுத்து திரு.தமிழ் ஆசான் பேசினார்.

Add caption
தமிழ் ஆசான் :

உங்களைவிட நான் இதழை முதலில் படிப்பவன் அதனால் இதழ் அடுத்து அடுத்து  மெருகேறி வருகிறது. மூன்றாவது இதழ் இன்னும் அருமையான கட்டுரைகள் உடன் வெளிவரபோகிறது. தமிழ் ஆசான் என்ற வார்த்தைக்கு ஏற்றாற்போல் ஒவ்வொரு தமிழ் எழுத்தும் முழு ஒலியுடம் அவரிடம் இருந்து வெளிப்பட்டது.

அவருக்கு இருந்த உயிரிணங்கள் ஆர்வம் நடுவில் நகரத்தில் வந்ததால் விடுபட்டு இப்பொழுது உயிர் இத்ழ மூலம் முந்தைய தொடர்பை ஏற்படுத்தி கொள்ளமுடிகிறது  என்று விவரித்தார். அவர் வகுப்பு மாணவரிடம் இங்கு தான் நீரே இல்லையே எப்படி நீச்சல் அடிப்பாய் என்று கேட்டுள்ளார். அதற்கு மாணவன் கூவத்தில் குளிப்பேன் என்று சொன்னதை கேட்டு இவருக்கு ஆச்சரியமாகி வேறு என்ன செய்வாய் என்று கேட்டுள்ளார் அதில் மீன் பிடிப்பேன் என்ற பதில் இவருக்கு அழுக்கு  நீரில் மீன் இருப்பதை வைத்து அங்கு இருக்கும் உயிரிணங்களை அராய்ந்து கட்டுரையாக உயிர் இதழில் வரவேண்டும் என்றரர்.

முடிவாக ஆசிரியர்.சண்முகானந்தம் அவர்கள்  நிறைவு உரை நிகழ்த்தினார். தமிழில் பல குழந்தைகள் இதழ் வருகிறது அதனால் உயிரை முழுவதும் காட்டுயிர் தொடர்பாக வெளியிடவேண்டும் என்று நினைத்துள்ளேன் மற்றும்  இவை முதல் கூட்டம், இதழை குறித்து கருத்து தெரிவித்தவர்களுக்கு மிக்க நன்றி. உங்கள் ஒத்துழைப்புடன் மேலும் பயணிப்போம் என்று முடித்தார்.
-செழியன்.ஜா

1 comment: