Saturday, 14 February 2015

மரங்களின் நிழல்

கோடைகாலத்தில் மட்டுமல்ல இப்போதெல்லாம் எப்போதும் வெய்யில் கொளுத்துகிறது.  மழை இல்லை.  தண்ணீர் தட்டுப்பாடு வேறு.  நகரங்கள் கிராமங்களை நகரமயமாக்க கிராமங்களோ முழு நகர வசதிகளையும் பெறாமல் இரண்டுங்கெட்டான்களாக நிற்கின்றன.  இந்த நிலையில் நகரங்கள் ஒவ்வொன்றும் மெகா நகரங்களாக வளர்ந்து  உருமாறி வருகின்றன.  

பெருகி வரும் மக்கள்நெரிசலும், வேலைவாய்ப்புகளும் நகரங்களின் தவிர்க்கமுடியாத விரிவாக்கத்திற்கு காரணமாக அமைந்துவிட்டன.  இந்த நிலையில் இயற்கை ஆர்வலர்கள் மரம் நடுவதைப் பற்றியும், காடுகள் பாதுகாக்கப்படுவதையும் அறைகூவல் விடுத்துவருகிறார்கள்.  தப்பித்தவறி பெய்யும் மழையை ஒரு துளிகூட வீணாக்காமல் நிலத்துக்கடியில் இறக்கிவிட மரங்களும், காடுகளும் பெருமளவில் பயன்படுகின்றன.  இன்னும் எக்கச்சக்கமான பயன்களைத் தருகிறது மரங்களும், அவை சேர்ந்து உருவாக்கும் காடுகளும்.  நகரங்களிலேயே காடுகள் ஏற்படுத்தினால் என்ன என்ற சிந்தனை சமீபகாலமாக ஏற்பட்டுவருகிறது.  நகரங்களின் மையப்பகுதிகளில் இந்தக் காடுகள் அமைந்தால் எவ்வளவு நன்மைகள் ஏற்படும்? 

   மரங்களின் முக்கியத்துவம் கருதிதான் நம் முன்னோர்கள் இறைவழிபாட்டுக்காக கட்டிய கோயில்கள் ஒவ்வொன்றிலும் திருத்தல மரம் என்று ஒன்றை ஏற்படுத்தி மரம் வளர்ப்பதன் சிந்தனையை முந்தைய சந்ததிகளுக்கு ஏற்படுத்தினார்கள்.  அது மட்டுமல்லாமல் வீட்டில் வளர்க்கமுடியாத பல அரிய மருத்துவகுணங்களை உடைய மரங்களை கோயில்களில் வளர்த்து கோயில் காடுகளையும் ஏற்படுத்தினார்கள்.  மரம் வளர்ப்பதை புனிதமானதாக்கி, மத நம்பிக்கையோடு பின்னிப் பிணைத்தார்கள்.  அப்போதெல்லாம் இதனால்தான் மரத்தடியில் கிராமப் பஞ்சாயத்துக்கள் நடந்தன போலும்.  உளவியல் அறிஞர்கள் மரநிழலில் மனித மனதிற்கு தெளிவான சிந்தனையும், மன அமைதியும் ஏற்படுவதாக ஆராய்ச்சிகள் செய்து கண்டறிந்துள்ளனர்.  அதனால்தான் எவ்வளவு சிக்கலான பிரச்சனைகளையும் அக்காலங்களில் மரநிழலில் ஊர் கூடி நல்லவிதமாகத் தீர்வு கண்டது போலும்.. 

   நமது கோயில்களில் சிவபெருமான் குருவடிவாக அருள் புரியும் தட்சணாமூர்த்தியும் பிரம்மாவின் புத்திரர்களான சனகர், சனாதனர், சனந்தனர்,சனற்குமாரரர் ஆகிய நால்வருக்கும் (தந்தையான பிரம்மா படைத்தலில் மூழ்கியிருந்ததாலும், விஷ்ணு இல்லறத்தில் மூழ்கியிருந்ததாலும் வேறு குருவைத் தேடி இறுதியில் சிவபெருமானிடம் வர அவர்களை ஏமாற்ற விரும்பாத சிவபெருமானும் சின் முத்திரை காட்டி, அக்னியையும், உடுக்கையையும், ஔலைச்சுவடியையும் கைகளில் ஏந்தி முயலகனை காலில் முதித்தவாறே ஞான உபதேசம் செய்வது ஆல மரத்தடியில் இருந்துதான்.. 

   அக்காலங்களில் பழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் பதப்படுத்தப்பட்ட பனை ஔலைகளில்தான் எழுத்தாணிகள் கொண்டு எழுதி வைக்கப்பட்டன.  சாலையோரங்களில் நம் ஆன்றோர்கள் புளியமரங்களை நட்டுவைத்து வளர்த்தற்கும் அறிவியல்பூர்வமான காரணம் ஒன்று இருக்கிறது.  இருக்கும் மரங்களிலேயே புளியமரம்தான் அதிகம் கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சும் தன்மை கொண்டது என்பதுதான் அது.  இந்த அறிவியல் உண்மையை அன்றே உணர்ந்த நம் முன்னோர்கள் சாலைகள் நெடுகிலும் புளியமரங்களை நட்டு  வைத்தார்கள்.  இன்றும் இந்து மத சடங்குகளில் ஹோமங்கள் வளர்த்து யாகங்கள் செய்யப்படும்போதும், மற்ற எல்லா சடங்குகளுக்கும் இடப்படும் குச்சிகளாகப் பயன்படுவது அரச மரக்குச்சிகளே ஆகும்.  இதேபோல ஹோமங்களில் ஆகுதி செய்யப்படும் நெய் போன்ற பொருள்கள் புரச மர இலைகளால்தான் செய்யப்படுகின்றன. 

   போதி மரத்தடியில்தான் புத்தருக்கும் ஞானம் தோன்றியது.  அசோகர் வழியெங்கும் அவருடைய ஆட்சிகாலத்தில் நட்டுவைத்த மரங்களால்தான் இன்றும் வரலாலாற்றின் பக்கங்களில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.  

   மரங்களை கடவுளாக, கடவுளரின் வடிவங்களாகக் கருதி வழிபடும் மதங்களும் இதனால்தான் மரம் வளர்ப்பை வலியுறுத்தின.  வில்வம் என்றால் சிவபெருமானுடைய வடிவாகவும், வேம்பை மாரியம்மனுடைய வடிவாகவும், அரசமரத்தை பெருமாளின் வடிவமாகவும் இன்றும்  நாம் வழிபட்டு வருகிறோம்.  நாகரும், பிள்ளையாரும் மரத்தடிகளில் நிரந்தரமாக இடம் பிடித்துள்ளனர்.  பிள்ளையாருக்கு அருகம்புல்லும், எருக்கும், பெருமாளுக்கு துளசி இலையும், விருந்து என்றால் வாழை இலையும், விசேடமான பண்டிகைகள் என்றால் மாவிலையும் மறவாமல் இடம்பெறுகின்றன.  கிறித்துவத்திலும், பனை ஔலைகளால் ஆன குருத்தோலை ஞாயிறும், ஔசன்னாத் திருநாளும் இன்றும் சிறப்பாக கிறித்துவர்களால் அனுசரிக்கப்படுகிறது. 

   இப்படி பலவிதங்களில் நம் வாழ்க்கையோடு நெருங்கிய உறவுடைய மரங்களுடைய பெருமையை சொல்லிக்கொண்டே போகலாம்.  மரங்களுக்கே இவ்வளவு பெருமை என்றால் அவை தரும் நிழக்கு எவ்வளவு நன்மைகள் இருக்கின்றன தெரியுமா?  ‘ நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்’ என்று ஒரு பழமொழியே இருக்கிறது.  ஆனால் அறிவியல்பூர்வமாக மரநிழலுக்கு அளப்பெரிய நன்மை செய்யும் பண்புகள் இருக்கின்றன.  வாழ்வியல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மரநிழல் மனிதனுக்கு ஏராளமான நன்மைகளைச் செய்கிறது.  மருத்துவ ஆய்வுகளின்படி, மரநிழல் மனிதனின் இரத்தக்கொதிப்பையும், மன அழுத்தத்தையும் பெருமளவில் குறைக்கும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.  

மரங்களின் நிழல்  குளிர்ச்சியைத் தருகிறது என்பது நம் எல்லோருக்கும் தெரியும்.  ஆனால் இது சூழலின் வெப்பநிலையைக் குறைப்பதற்குப் பெரிதும் பயன்படும்.  நகரங்களில் உருவாகும் நச்சுவாயுக்களான நைட்ரஜனின் ஆக்சைடுகள், காற்றில் பரவும் புகையில் கலந்திருக்கும் கண்ணுக்குத் தெரியாத நுண்துகள்கள் போன்றவற்றறை சுத்திகரிப்பதற்கு மரங்களைவிட்டால் நமக்கு வேறு வழியில்லை.  

கான்கிரீட் கட்டிடங்களில் சூரிய வெப்பம் விழும்போது அது பிரதிபலிக்கப்பட்டு இருக்கும் வெப்பநிலையைவிட நகரங்களில் வெப்பநிலை அதிகமாக்கப்படுகிறது.  நடுப்பலல்நேரங்களில் இதனால் நகரங்களில் வெப்பநிலை மிக அதிகமாக உள்ளது.  மரங்கள் இருந்தால் அவை தரும் நிழல் இந்த வெப்பநிலையை மூன்று முதல் ஐந்து டிகிரி வரை குறைக்கும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.  மரநிழலில் உள்ள இடங்கள் 0.04 டிகிரி  முதல் 2 டிகிரி செண்டிகிரேடுவரை அந்த இடத்தின் வெப்பநிலையைக் குறைப்பதாகவும், 5மில்லியன் சதுரமீட்டர் பரப்பளவுள்ள இடத்தில் விழும் மரநிழல் 8டிகிரி செண்டிகிரேடு வரை நிழல் விழும் இடத்தின் வெப்பநிலையைக் குறைக்கிறது என்றும் அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்துள்ளனர்.  இதேபோல் குளிர்காலங்களில் ஸமோக் எனப்படும் கடும்பனிமூட்டம் நகரங்களில் உருவாவதையும் மரநிழல் தடுப்பதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். 

   நகரம் என்றாலே நம் நினைவுக்கு வருவது நீண்டு விரிந்து செல்லும் தார்சாலைக்கள்தான்.  இந்த சாலைகளை அமைப்பதற்குப் பயன்படுத்தப்படும் நிலக்கரியின் பிரித்தெடுப்பில் உருவாகும் கழிவான தாரில் எளிதில் ஆவியாகும் அங்கப்பொருள்கள்(valatile organic compounds) உள்ளன.  இந்தப் பொருள்கள் பெரும்பாலும் கார்பனும், ஹைடிரஜனும் அறுங்கோண வடிவில் இணைந்துள்ள பென்சின் என்ற ஹைடிரோகார்பன் மூலக்கூறின் அடிப்படையில்தான் அமைந்துள்ளது.  இந்தப் பொருள்கள் நாம் சுவாசிக்கும்போது உள்ளே சென்று சுவாசக்கோளாறுகள், சிறுநீரகப் பாதிப்புகள், குரோமோசோம்களின் அமைப்பில் பாதிப்புகள் போன்றவற்றைத் தோற்றுவிக்கின்றன.  இந்த பாலிசைக்கிளிக் கரிமப்பொருள்கள் (poly cyclic hydro carbons) புற்றுநோயைத் தோற்றுவிக்கும் இயல்புடையவை.  பகலில் வெப்பமண்டல நாடுகளில் அதிகமாகக் காணப்படும் வெப்பநிலையால் இந்த பாலிசைக்கிளிக் பொருள்கள் எளிதாக ஆவியாகி, காற்றில் உள்ள நுண்துகள்களுடன் இணைந்து, சுவாசக்காற்றின் வழியாக நம் உடலை அடைகின்றன. 

 மரங்கள் மிகுந்த சாலையில் உருவாகும் நிழல் இந்த சாலையின் வெப்பத்தைக் குறைத்து,, விஷத்தன்மையுள்ள இந்த வேதிப்பொருள்கள் ஆவியாகி, காற்றில் கலப்பதைத் தடுக்கின்றன.  தார் ஆவியாவது தடைசெய்யப்படுவதால் சாலையின் ஆயுளும் நீட்டிக்கப்படுகிறது.  அடிக்கடி சாலைகளைப் பழுது பார்க்க செலவிடப்படும் பணமும் மிச்சமாகிறது.  தீங்கு செய்யும் இந்த பாலிசைக்கிளிக் நச்சுப்பொருள்கள் பிறக்கும் மற்றொரு இடம் வாகனங்கள்.  இவை பயன்படுத்தும் பெட்ரோலியம், டீசல், என்ஞின் ஆயில் போன்றவற்றில் இது அதிகமாக உள்ளது. 

 எரிபொருள் எரியும்போதும், எரிபொருள் செல்லும் குழாய்கள் மற்றும் எரிபொருள் சேமித்து வைக்கப்படும் டாங்க் ஆகியவற்றிலும் இந்த நச்சுப்பொருள் ஆவியாகி காற்றில் கலக்கின்றன.  இவ்வாறு வெளியேறும் பாலிசைக்கிளிக் ஹைடிரோகார்பன்கள் 16% என்று கணக்கிடப்பட்டுள்ளது.  மரநிழலில் வாகங்கள் நிறுத்தி வைக்கப்படும்போது வெப்பம் குறைவதால் இந்த நச்சு ஆவியாவது பெருமளவில் குறைக்கப்படுகிறது.  மேற்கித்திய நாடுகளில் இதனால்தான் வாகனங்கள் நிறுத்தும் இடத்தின் மொத்தபரப்பில் 50% மரநிழல் இருக்கவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

    வெறும் நிழல் மட்டுமே இப்படிப்பட்ட அரிய செயல்களைச் செய்யும்போது மரம் என்ன செய்கிறது?  மரங்களின் இலைகளில் கண்களுக்குப் புலப்படாத க்யூட்டிக்குகள் எனப்படும் நுண்துவாரங்கள் உள்ளன.  இவற்றின் வழியாக நீர் ஆவியாகி வெளியேற மரநிழல் குளிர்ச்சியைத் தருகிறது.  இதே நுண்துளைகள் வழியாக காற்றில் கலந்துள்ள நச்சுவாயுக்களான கார்பன் மோனோ ஆக்சைடு,  நைட்ரஜனின் ஆக்சைடுகள், சல்பர் டை ஆக்சைடு போன்றவை உறிஞ்சப்பட்டு, தாவரத்தில் உள்ள நீரில் கரைந்துவிடுகிறது.  1991ல் அமெரிக்காவில் சிகாகோவில் செய்யப்பட்ட ஆய்வுகள் அங்குள்ள மரங்கள் 170டன் கார்பன் மோனோ ஆக்சைடையும், 93டன் சல்பர் டை ஆக்சைடையும், 98டன் நைட்ரஜன் டை ஆக்சைடையும் உறிஞ்சி காற்றைத் தூய்மையாக்கின என்று கூறுகின்றன.  

இதே வேலையை கருவிகள் உதவியோடு தொழில்நுட்பத்தால் செயல்படுட்த்தினால் பில்லியன் கணக்கில் டாலர்களைச் செலவிடவேண்டியிருக்கும்.  காற்றில் கலந்துள்ள நுண்துகள்கள் மரஇலைகளில் படிந்துவிடுவதால், இலைகள் உதிரும்போது, இவை மண்ணுடன் கலந்துவிடுகின்றன.  1991ல் நடந்த ஆய்வுகள் சிகாகோவில் உள்ள மரங்கள் அந்த வருடத்தில் மட்டும் 10மைக்ரோமீட்டர் அளவுள்ள நுண்துகள்களை காற்றிலிருந்து பிரித்தெடுத்துள்ளன என்பதையும் கூறுகிறது.  அதாவது 234டன்கள்.  75செ.மீ குறுக்களவு க்கொண்ட ஒரு மரம் ஒரு வருடத்திற்கு காற்றிலிருந்து பிரித்தெடுக்கும் திட, திரவ நுண்துகள்களின் அளவு 104கி.கி ஆகும். 

   இவ்வாறு மரமும், அதன் நிழலும் மனிதனுக்கு அளப்பெரிய பயன்களைத் தருகிறது.  இனியாவது மரங்களை வெட்டாமல் நாம் ஒவ்வொருவரும் வாழ்ந்து மறைவதற்குள் ஆளுக்கொரு மரத்தையாவது நட்டு விருட்சமாக்குவோம். 

                                                                                                       -சிதம்பரம் ரவிச்சந்திரன்

Tuesday, 10 February 2015

Books in Tamil - II1.சோலை எனும் வாழிடம் –சு.தியடோர் பாஸ்கரன் –உயிர்மை பதிப்பகம்-Rs.110, தொலைபேசி-.044-24993448
 
2.பறவை உலகம் – சலீம் அலி –நேஷ்னல் புக் டிரஸ்ட்-Rs.60

3.இந்திய பாம்புகள் – ரோமுலஸ் விடேகர் –நேஷ்னல் புக் டிரஸ்ட்-Rs.60
 
4.காட்டின் குரல் –சு.பாரதிதாசன்-பாரதி புத்தகாலயம்-Rs.40, தொலைபேசி -044-24332424, 24332924.
 
5.உயிர்த்துளி உறவுகள் –தேவிகாபுரம் சிவா-New century Book House-Rs.70
 
6.ஊர்ப்புறத்துப் பறவைகள் –கோவை சதாசிவம் –வெளிச்சம் வெளியிடு-Rs.80 - Ph-   0422-4370945, Mobile-9894777291
 
7.நெருப்புக் குழியில் குருவி –ச.முகமது அலி –அங்குசம்-Rs.90, mobile-9444997384
 
8.நாராய் நாராய் –ஆதி வள்ளியப்பன் –தடாகம் Rs.50, Mobile-8939967179, 8144255588

9.என்ன நடக்கிறது இந்திய காடுகளில் –இரா.முருகவேள் –பொன்னுலகம் பதிப்பகம்-Rs.50, mobile- 9486641586
 
10.கூவாத கோழிகளும் குடைசாயும் இறையாண்மையும் ...-பி.சுந்தரராஜன் –தடாகம்-Rs.20, Mobile-8939967179, 8144255588

11.இறகுதிர் காலம் –கோவை சதாசிவம் –வெளிச்சம் வெளியிடு-Rs.100, Ph-0422-4370945, Mobile-9894777291
 
12.அழிவுக்கு இலக்காகி இருக்கும் இந்திய விலங்குகள் –எஸ்.எம்.நாயர் - நேஷ்னல் புக் டிரஸ்ட்- Rs.45

13.தமிழகத்தின் இரவாடிகள் –ஏ.சண்முகானந்தம் –தடாகம்- Rs.300, Mobile-8939967179, 8144255588

Books in Tamil - I 

http://birdsshadow.blogspot.in/2014/04/books-in-tamil.html

Sunday, 1 February 2015

BirD Watching - Iவீட்டில் இருக்கும் குட்டிஸ்களுக்கு ஒரு போட்டி என்று ஆரம்பித்தேன், மூன்று குட்டிஸ்கள் ரெடியாக வந்து என்ன போட்டி என்று நின்றார்கள். தினமும் உண்டியலில் ஒரு ரூபாய் அல்லது கிடைக்கும் காசுகளை போட்டு கொண்டு வருகிறார்கள் அதனால் போட்டியை அதை வைத்தே ஆரம்பித்தேன்.

இன்றைய நாள் முழுவதும் எவ்வளவு பறவையை நீங்கள் பார்த்து எழுதுகிறிர்களோ ஒவ்வொரு பறவைக்கும் ஒரு ரூபாய் என்றும், அதனால் யார் அதிகம் பார்கிறிர்கள் என்று தான் போட்டி. இதில் சில நிபன்தனைகள் உண்டு என்று சொல்ல ஆரம்பித்தேன்.

1. காகத்தை பத்து முறை பார்த்தாலும் ஒரு முறை தான் கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.அதே போல் தான் மற்ற பறவைகளுக்கும்.

2. பெயர் தெரியாத பறவை என்றால் என்னிடம் வந்த கேட்கலாம். அல்லது அதன் கலர்,  அலகு எப்படி இருக்கிறது என்று குறித்து வைத்து கொள்ளுங்கள்.

3. ஒரு பறவையில் ஆண் மற்றும் பெண் பறவைகளை பார்த்தால் அவை தனி தனியாக கணக்கில் எடுத்து கொள்ளப்படும்.

போய் பாருங்கள் என்றவுடன் ஒரு காகம் கண்ணில் பட்டது அதை குறித்து கொண்டார்கள். அன்றைய பொழுதுவரை வீட்டு தோட்டத்திலும், வீட்டை சுற்றியும், வீட்டு பக்கத்தில் இருக்கும் சின்ன பெட்டி கடைக்கு போகும் பொழுதும் பறவைகளை பார்த்து கொண்டே சென்றார்கள்.

இது அந்த குட்டிஸ்களுக்கும் புது விதமான அனுபவமாக இருந்தது. வீட்டில் இருக்கும் பெரியவர்களுக்கும் இவ்வளவு பறவைகள் நம் வீட்டுக்கு வருகிறதா என்று அவர்களே சொல்லி கொண்டார்கள்.

குட்டிஸ்கள் பார்த்த பறவைகள் உடனக்குடன் நானும் அவற்றை பார்த்து பறவைகளின் தமிழ் பெயர் மற்றும் ஆங்கில பெயர் என்று இரண்டையும் சொல்லி கொண்டே வந்தேன். வீட்டை சுற்றி பார்த்த பறவைகள்

1. அண்டங்காக்கை- Indian Jungle Crow

2.காகம்- House crow

3.உழவாரக் குருவி- Swift

4. கரிச்சான் -Black Drongo

5.கிளி- Parrot  (Male & female)

6.தவுட்டு குருவி -Yellow-Billed-Babbler

7.தேன்சிட்டு-Sun Bird (male & female)

8. மணிப்புறா-Spotted dove

9.மீன்கொத்தி- KingFisher
 
10.வல்லுறு-Shikra

11.கழுகு-Eagle 

12.மைனா- Myna
 
ஒரே நாளில் வீட்டை சுற்றி இவ்வளவு பறவைகள் வருகிறது என்பதே வீட்டில் இருப்பவர்களுக்கும், குட்டிஸ்கள் குறிப்பு எடுத்து காண்பித்த போதுதான் தெரிந்ததே அது வரை அவர்களை பொருத்து கிளி , தவுட்டு குருவி , காகம் இவைகள்தான் அவர்கள் கண்ணில் தென்பட்டதாகவும், ஆச்சரியமாக இருந்ததாக தெரிவித்தார்கள்.ஒவ்வொரு பறவையும் நானும் பார்த்தால் அதை உறுதிபடுத்தினேன்.

பறவை அவதானித்தால் பெரியவர்களுக்கும் சேர்த்தே என்பதும், நீங்களும் அவற்றை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்றும் சொல்லி முடித்தேன் இனி இந்த பறவைகள் பற்றி சிறு குறிப்பு 

காகத்தை சுலபமாக பார்க்க முடியும் என்பதால் அடுத்து பறவை என்று பார்க்க சொன்னேன். அண்டங்காக்கை பறந்து வந்து தென்னை கிளையில் அமர்ந்ததை பார்த்து சொன்னார்கள்.

மின்னல் வந்து ஒரு தென்ன மரத்தை தாக்கியதால் அது பட்டு போய்விட்டது அதனால் அவை கிளைகள் இல்லாமல் நின்றிருந்தது, அதில் ஆண் மற்றும் பெண் பச்சை கிளிகள் அமர்ந்து விளையாடி கொண்டிருந்ததை பார்க்க முடிந்தது.
தேன்சிட்டு இங்கும் அங்கும் பறந்து கொண்டிருந்ததை குட்டிஸ்களுக்கு கூப்பிட்டு காண்பித்தேன்.

மதிய நேரத்தில் மிக உயரத்தில் கழுகு பறந்து கொண்டிருந்ததை பெட்டி கடைக்கு சென்று வந்த ஒரு குட்டிஸ் வந்து சொன்னதை அனைவரும் சென்று பார்த்தோம்.
உழவாரக் குருவி நிற்காமல் பறந்து கொண்டிருந்ததை குட்டிஸ்களுக்கு அது என்ன என்ற தெரியவில்லை எங்கயாவது அவை அமர்ந்தால் குறிப்பு எடுக்கலாம் ஆனால் தொடர்ச்சியாக பறந்து கொண்டே இருந்ததால் அவர்களுக்கு தெரியவில்லை அதனால் அவர்களை கூப்பிட்டு விளக்கி சொன்னேன் 

அதிகமாக பார்க்க முடிந்தது தவுட்டுகுருவிகள் தான், தொடர்ச்சியாக சுற்றி சுற்றி வந்து கொண்டிருந்ததை மாலை வரை குட்டிஸ்கள் பார்த்து கொண்டே இருந்தார்கள்.
நாள் முழுவதும் ஒரே ஒரு சிட்டு குருவியை கூட பார்க்க முடியவில்லை என்பதுதான் முக்கியமாக இங்கே பதிவுசெய்ய வேண்டும் அவை ஏன் இங்கு இல்லை  ,அவை எங்கே என்று குட்டிஸ்களும் கேள்வி கேட்டு கொண்டே இருந்தார்கள்.

சென்னையில் வீட்டு பக்கத்தில் நிறைய சிட்டு குருவி வருவதை நிறை முறை நான் பார்த்து இருக்கிறேன் ஆனால் ஊர் பக்கத்தில் ஏன் அவை குறைந்து விட்டது.   பொதுவாக அவை அதிகம் இல்லை என்பதற்கு நிறைய காரணங்கள் உண்டு என்பதே உண்மை. அதை பற்றி சிட்டு என்றே புத்தகம் உள்ளது, அதில் சிட்டு குருவிகள் பற்றி அனைத்து செய்திகளும் இருக்கிறது.

மாலையில் ஒரே ஒரு கரிச்சான் மட்டும் அங்கும் இங்கும் பறந்து, கம்பிரமாக, மின் கம்பிகளில் அமர்ந்து சுற்றி பார்த்து கொண்டு இருந்ததை அரை மணி நேரம் பார்த்தோம். கரிச்சான்-இவற்றை சூழியல் எழுத்தாளர் மா.கிருஷ்ணன் நீண்ட வால் கொண்ட கருங்குருவி என்று குறுப்பிடுகிறார். இரட்டை வால் குருவி என்று இன்னொரு பெயரும் உண்டு இந்த பெயரில் மோகன் நடித்த ஒரு தமிழ் படமும் வந்து, ஜேசுதாஸ் பாடிய ராஜ ராஜ சோழன் நான் என்ற பாட்டு இன்றும் அனைவராலும் கேட்க்கப்படுகிறது.

ஒரே ஒரு வல்லுறு மட்டும் எதிர் வீட்டு மாடியில் அமர்ந்து இருந்ததை குட்டிஸ்களுக்கு காண்பித்து அவை என்ன செய்யும் என்று விளக்கி சொன்னேன்.

கொஞ்ச துரத்தில் இருந்த ஒரு மின் கம்பத்தில் அமரந்திருந்த மீன் கொத்தி பறவையை பார்த்து அவை என்ன பறவை என்று கேட்டார்கள். நான் அவற்றின் கலர் மற்றும் அலகு காண்பித்து இவைதான் மீன்கொத்தி பறவை இவற்றின் முதுகு நீல கலர் மற்றும் அவற்றின் அலகு நீண்டு இருந்ததை காண்பித்து வயல்களில் இருக்கும் தவளை மற்றும் மீன் இவற்றை உணவாக உண்ணும் என்றும் பக்கத்திலே வயல்வெளி இருத்தால் இங்கு நிறை மீன்கொத்தி பறவை இருக்கும் என்று கூறினேன்.  

தவுட்டு குருவி போல் நிறைய மைனாகளையும் வீட்டை சுற்றி பார்க்க முடிந்தது.கரிச்சான் மற்றும் மைனா இவைகளை நாம் அதிகமாக வயல்வெளியில் மேயும் மாடுகளை சுற்றி பார்க்க முடியும். இந்த முறை நடந்த IAS தேர்வில் கிராமத்து வயல்வெளியில் மேயும் மாடுகளின் மேல் அமர்ந்து, உண்ணிகளை சாப்பிடும் பறவை எவை என்ற கேள்வி கேட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது .

இரவில், ஆந்தை தெரிகிறதா என்று பார்க்க சொன்னேன் குட்டிஸ்களும் அடிக்கடி சென்று பார்த்தார்கள் ஆனால் ஆந்தையை பார்க்க முடியவில்லை ,அவை எங்கு உட்காரும், ஏன் இரவில் மட்டும் வருகிறது என்ற கேளிவிகளுக்கு பதில் சொல்லி முடித்தேன்.
மறுநாள் முதல் குட்டிஸ்களே பறவைகளை பார்க்க ஆரம்பித்துவிட்டார்கள். பெயர்களும் தெரிந்து விட்டதால் அவார்களே பறவைகளை பார்த்து, பெயர் சொல்லி  கொண்டிருந்ததை அடிக்கடி கேட்க முடிந்தது.

யார் எல்லாம் பறவைகள் பார்க்கலாம் ?

கண்பார்வை யாருக்கெல்லாம் தெரியுமோ அவர்கள் எல்லோரும் பார்க்கலாம் .........

சென்னையில் இருப்பவர்கள் வேடந்தாங்கல் சென்று பார்பதற்க்கு முடியவில்லை என்றால் வேளச்சேரி அடுத்து இருக்கும் பள்ளிகரணை சதுப்பு நிலத்தில் நிறைய பறவைகள் இருப்பதை, பார்த்து ரசிக்கலாம்.

பள்ளிகரணை சதுப்பு நிலத்தை பற்றி ஒரு கட்டுரை எழுதும் அளவுக்கு நிறைய செய்திகள் இருக்கிறது அதனால் அடுத்து பள்ளிகரணை பற்றி எழுத வேண்டும்.

போங்கள், போங்கள் போய் பறவைகளை பார்த்து இரசியுங்கள்...................................,,,,,,,,,

                                                     செழியன்