Wednesday, 28 September 2016

பறவை நோக்குதல் - தொடர் - 4



குண்டாக இருக்கிறாரே அவர்தான், மாநிறமாக இருப்பவர்தான், மூக்கு சப்பையாக உள்ளவர் தான், குள்ளமாக, கருப்பாக, வெள்ளையாக, உயரமாக, ஒல்லியாக என்று நிறைய தடவை அடையாளங்களை வைத்தே மற்றவரை பற்றி பேசுவோம். நமக்கு ஒருவரின் பெயர் தெரிந்து கொள்வதற்கு இது போல் ஏதாவது ஒரு அடையாளம் சொல்லி மற்றவரிடம் அவரின் பெயரை கேட்ப்போம். இதே போல் தான் நாம் ஒரு பறவையை பற்றி தெரிந்து கொள்வதற்கு அவற்றின்  அலகு, பருமன், நிறம், கால் அமைப்பு, சிறகு அமைப்பு, தரையில் அல்லது மரத்தில் அல்லது நீர்நிலை அருகில் இருந்ததா என்று இவற்றை வைத்து அந்த பறவையை கண்டுபிடித்து விடலாம்.

பறவை நோக்குபவர்கள் அனைவரும் மேல் உள்ளது போல் இருக்கும் அடையாளங்களை வைத்தே பறவைகளை பார்த்தும், புதியவர்களுக்கு கற்றுகொடுத்தும் வருகிறார்கள். அனைத்து பறவைகள் புத்தகமும் இந்த அடையாளங்களை குறித்தே பேசும். பெரும்பாலுமான பறவைகளுக்கு அடையாளங்களே அதன் பெயராக இருக்கும்.

உதாரணம்:

கரண்டி வாயன்(Spoon Bill), மஞ்சள் மூக்கு நாரை(Painted stork), செங்கால் நாரை(White Stork), நாமக் கோழி(Common Coot), நெடுங்கால் உள்ளான்(Black winged Stilt), கொம்பன் ஆந்தை(Indian Eagle Owl), கொண்டலாத்தி(Common Hoopoe), கொண்டைக் குருவி(Red-vented Bulbul)

ஒரு பறவையின் ஆங்கில பெயருக்கும் தமிழ் பெயருக்கும் வித்தியாசம் உள்ளது. அதனால் தமிழ் பெயருடன் ஆங்கில பெயரை போட்டு குழப்பி கொள்ள வேண்டாம்.

அதனால்தான் ஒரு பறவையின் பெயர் தெரியவில்லை என்றால் இது போல் ஏதாவது சில அடையாளங்களை பார்த்து குறித்து கொண்டால் அவற்றை வைத்து நாம் பறவை புத்தகத்திலோ அல்லது பறவை நிபுனர்களிடமோ கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

மனிதர்கள் போல் கருப்பு, வெள்ளை, மாநிறம் என்று சில நிறத்தோடு பறவைகள் இருப்பதில்லை எண்ணற்ற நிறங்களில் பறவைகள் இன்று உலகில் உள்ளது அதனால் அவற்றை பார்க்கும் பொழுதே நமக்கு அதன் நிறமே பிரகாசமாக தெரியும் அதனால் பல பறவைகளுக்கு நிறத்திலேயே பெயர்கள் உண்டு.

உதாரணம்: 

பச்சைக்கிளி(Parakeet), கருங் கரிச்சான்(Black Drongo), சாம்பல் நாரை(Grey Heron), வெள்ளை அரிவாள் மூக்கன்(Black Headed Ibis), கரும் பருந்து (black eagle), மஞ்சள் சிட்டு(common iora), சாம்பல் கதிர்குருவி(Ashy prinia),கருப்பு வெள்ளை மீன்கொத்தி(Pied kingfisher).

ஆங்கிலத்தில் மஞ்சள் மூக்கு நாரையை வர்ண நாரை(painted stork) என்றே அழைக்கப்படுகிறது. அதாவது இந்த பறவையை பார்க்கும் பொழுது ஓவியமாக வரைந்தது போலவே அதன் நிறங்கள் காணப்படும் அதனால் painted stork.ஆனால் தமிழில் மஞ்சள் மூக்கு நாரை அல்லது சங்குவளை நாரை என்று அழைக்கபடுகிறது.  

பறவையை கிழ்கண்டவாறு நாம் குறிப்பு எடுத்து கொள்ளலாம். இந்த குறிப்புகள் மூலம் சுலபமாக அவற்றின் பெயர், இனம், வாழிடம், உணவு முறை எவை என்று கண்டுபிடித்துவிடலாம்.

1.அலகு / அலகு நிறம் 

2.காலின் அமைப்பு மற்றும் நிறம்

3.வால் அமைப்பு 

4.சிறகுகள் நிறம் 

5.உடல் பருமன் 

6.வாழும் இடங்கள்

7.பறக்கும் முறைகள்  

அலகு:

ஒவ்வொரு பறவைக்கும் அதன் அலகு மற்ற இனப்பறவைகளிடம் இருந்து மாறுபட்டே காணப்படும். அவற்றின் உணவுமுறைக்கு ஏற்ப மிக நீளமாக, நீளமாக, மத்திய தரமாக, சிறியதாக, பருமனாக, வளைந்து, கோணி ஊசி போல் நீண்டு கூர்மையாக என்று அலகுகல் அமைந்திருக்கும்.
நெற்கதிர்கள் அறுக்க-அருவா, மரத்தை வெட்ட-கோடரி, மரத்தை பிளக்க-ரம்பம், காய்கறி வெட்ட-கத்தி, முக சவரம் செய்ய-பிளேட் என்று பொருளின் தன்மைக்கேற்ப கருவிகள் மாறுவது போல்தான் பறவைகளின் இறைகளுக்கேர்ப அதன் அலகுகள் மாறுபடும். 

மனிதர்களுக்கு கைகள் எப்படியோ அதுபோல் பறவைகளுக்கு அதன் அலகே முதன்மை. இறக்கையும், அலகுமே பறவைகளின் சொத்து என்றே சொல்லலாம்.


அலகு மாதிரிகள்:

photo-wikipidia
பறவைகளில் அலகுகள் பல நிறத்தில் காணப்படும் அதனால் நாம் அலகு அமைப்பை மட்டும் குறித்து கொள்ளாமல் அதன் நிறத்தையும் சேர்த்து குறித்து கொள்ள வேண்டும்.

நாகணவாய் (MYNA) அலகின் நிறம்-மஞ்சள் (அலகு சிறியதாக இருக்கும்), 

காகத்தின்(CROW) அலகு நிறம்-கருப்பு (அலகு சிறிது நீண்டு காணப்படும்), 

சங்குவளை நாரையின்(PAINTED STORK) அலகு நிறம்-மஞ்சள் (அலகு மிக மிக நீளமாக இருக்கும்), 

வென்மார்பு மீன் கொத்தி(WHITE THROTED KINGFISHER) அலகின் நிறம்-சிகப்பு (அலகு நீண்டு இருக்கும்), 

சாம்பல் கதிர்க்குருவி(ASHY PRINIYA) அலகின் நிறம்-கருப்பு (அலகு மிக சிறியதாக இருக்கும்)

காலின் அமைப்பு மற்றும் நிறம்:

பறவை நோக்குதலில் ஒரு பகுதியாக நாம் பறவைகளின் கால் அமைப்பு மற்றும் அதன் நிறத்தை பார்த்து குறித்து கொள்ளவேண்டும். பறவைகளின் அலகுகளில் உள்ள வேறுபாடு போலவே அதன் கால்களிலும் வேறுபாடு உள்ளது.

சிட்டு குருவி, புறா போன்ற பறவைகளை விட கழுகு, பருந்து, வல்லுறு, ஆந்தை போன்ற இறைகொல்லி பறவைகளுக்கு கால்களே அதன் உணவை தீர்மானிக்கின்றன. இந்த பறவைகளின் அலகு இரையை உண்ணுவதற்கு ஆனால் அவற்றை பிடிக்க கால்களே மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பிடித்தால்தான் அவற்றை உண்ண முடியும்.

நிறைய தடவை நீங்கள் பார்த்திருப்பீர்கள்- கழுகு எலியை தூக்கி செல்வதும், வல்லுறு சிறு பறவை குட்டிகளை எடுத்து செல்வதும். அதனால் இவ்வகை பறவைகளுக்கு கால்கள் மிக மிக முக்கியம்.மற்ற பறவைகளுக்கு கால்கள் மரத்தில் பற்றி அமர, தரையில் நடக்க, நீரில் நீந்த என்று பயன்படுத்துகிறது.

உழவரான் பறவையால் மரத்தில் பற்றி அமர முடியாது அந்த அளவுக்கு அதன் கால்கள் மிக சிறியதாக இருக்கும். மரங்கொத்தி பறவை தன் கால்களால் மரத்தின் பக்கவாட்டில் நடந்து ஏற முடியும் மற்ற பறவைகளால் முடியாது.

கால் அமைப்பு:

photo-wiki
கால்களில் பறவைகளுக்கு இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு. சிட்டு குருவிக்கு சிறியதாகவும், பவளக்கால் உள்ளான் பறவைக்கு மிக நீண்ட கால்களும், வல்லூறுக்கு சிறியதும்/பெரியதுமாக இல்லாமல் இருக்கும் ஆனால் அதன் நகங்கள் மிக மிக கூர்மையாக இருக்கும்.

கால் நிறங்கள்- மஞ்சள், கருப்பு, ஆரஞ்சு, சிகப்பு, வெளிர் நிறம் என்று பல நிறத்தில் கால்கள் இருக்கும் அதனால் அவற்றை குறித்து கொள்ளவேண்டும். 

வால் நீளம் / நிறம்:

புலிகளுக்கு வரிகள் எப்படி ஒன்று போல் இருப்பது இல்லையோ அதே போல்தான் பறவைகளுக்கு வால் சிறியதாக / இரண்டாக பிளந்து / நடுத்தரமாக / நீளமாக /மிக நீளமாக என்று மாறுபட்டே காணப்படும்.

ஈபிடிப்பான் பறவையின் வால் மிக மிக நீளமாக இருக்கும். கரிச்சான் பறவையின் வால் இரண்டாக பிளந்து இருக்கும். தையல் சிட்டின் வால் மேல் நோக்கி இருக்கும். கம்பி வால் தகைவிலான் பறவையின் வால் ஒயர் கம்பி போல் நீளமாக இருக்கும். பறவை நோக்குதலில் நீங்கள் ஆர்வமாக செயல்படும்பொழுது சாதரணமாக பார்ப்பீர்கள்.

பறவை நோக்குதலில் நாம் பறவை வாலின் அமைப்பு, அதன் நீளம் மற்றும் நிறம் ஆகியவற்றையும் குறித்து கொள்ளவேண்டும்.

சிறகுகள் : 

சிறகுகள் பறவைகளின் சொத்து என்றே பார்த்தோம். பறப்பதே பறவைகளுக்கு ஆனந்தத்தை தரும். மனிதர்கள் ஆபத்தில் ஓடுவது போல் எந்த நொடியிலும் அவை தன்னை காப்பாற்றி கொள்ள பறப்பதை முதல் வேலையாக செய்கிறது அந்த அளவுக்கு சிறகுகள் முதன்மையான இடத்தில் உள்ளது.

அனைத்து பறவைகளுக்கும் சிறகுகள் உள்ளது அதில் என்னும் அளவுக்கே பறக்காத பறவைகள் என்றும் சில உள்ளது. உதாரணம்: பெங்குவின், தீக்கோழி.

photo-wikipedia
நடிகர்கள், நடிகைகள்  தலை முடியை வித விதமாக பராமரிப்பார்கள். வழுக்கை தலை உள்ள நடிகர்கள் கூட நடிப்பு என்று வந்தால் விக் வைத்து கொள்கிறார் அந்த விக்கையும் பராமரிக்க வேண்டும் இல்லை என்றால் அவை பொலிவுஇழந்து விடும். பறவைகளும் தன் சிறகுகளை தொடர்ந்து பாரமரித்து வருகிறது அவை தொடர்ந்து பறப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும்.
சிறகுகளை கோதுதல், தண்ணிரில் நனைத்து காயவிடுதல்,சிறு எறும்புகளை சிறகில் அள்ளி போட்டுகொண்டு அதன் மூலம் சிறகுகளை சரி செய்தல் என்று நிறைய வேலைகளை அனைத்து பறவைகளும் செய்கிறது.

பறவைகள் சிறகின் நிறம் அதன் உடம்பின் நிறத்திலும் அல்லது தனியாக சில நிறத்திலும் அல்லது பல வண்ணங்களிலும் என்று அமைந்து இருக்கும். 

பச்சை கிளி, கரிச்சான், தவிட்டு குருவி, காகம், கருஞ்சிட்டு, பச்சை சிட்டு போன்ற பறவைகளுக்கு சிறகின் நிறம் அதன் உடம்பின் நிறத்திலேயே அமைந்து இருக்கும்.

பறவை நோக்குதலில் நாம் ஒரு பறவையின் சிறகின் நிறத்தை குறித்து கொள்ளவேண்டும்.

உடல் அளவு அல்லது பருமன்:

இதற்கும் நாம் மனிதர்களையே உதாரணமாக எடுத்து கொள்வோம்.ஒருவர் குள்ளமாக, உயரமாக, நடுத்தரமான அளவாக இருப்பது போல்தான் பறவைகளின் அளவு.

உலகிலேயே மிக மிக சிறிய பறவை(ஹம்மிங் பறவை), மிக பெரிய பறவை(தீக்கோழி), நடுத்தரமாக(பினதின்னி கழுகு), சாதரணமா (காகம்,கிளி,புறா,நாகணவாய்), மிக சிறியதாக (சாம்பல் கதிர்குருவி,சிட்டு குருவி) என்று பறவைகளின் அளவுகள் உண்டு.

புதிதாக ஒரு பறவையை பார்க்கும் பொழுது நமக்கு தெரிந்த பறவைகளின் அளவுடன் (புறா/ காகம்/ சிட்டு குருவி/ நாகணவாய்(மைனா) இவற்றுடன்) நாம் பார்க்கும் பறவையின் அளவை ஒப்பிட்டு கொள்ளலாம் அல்லது குறித்து கொள்ளலாம்.

வாழும் இடங்கள்:

தரையில், மர உச்சியில், மர பொந்தில், கோவில் கோபுரம் மற்றும் சுவரில், நீர் நிலை அருகில், நீரில், வீட்டின் முற்றத்தில், சிறு மரங்களில், புதர்களில், பாழ் அடைந்த மண்டபத்தில் என்று பறவைகளின் வாழ்விடம் பல விதமாக அமைந்து இருக்கும்.

தரையில் முட்டை இடுபவை
எல்லா பறவைகளும் மரத்தின் மேலேயே வாழாது ஒவ்வொரு பறவைக்கும் வாழிடம் மாறுபடும். உதாரணமாக- மரத்தின் உச்சியில் இருவாச்சி பறவையும் தரையில் செம்போத்தும் தங்கள் வாழிடங்களை அமைத்து கொள்ளும்.

ஆள் காட்டி பறவை தரையில் சிறு பள்ளம் தோண்டி அதில் முட்டைகளை இடும். காகம் மரத்தில் மிக உயரத்தில் கூடு அமைக்காமல் நம் பார்வைக்கு புலப்படும் அளவிலேயே அதன் கூடுகள் இருக்கும்.

சிட்டுகுருவி நம் வீட்டு முற்றத்தில் தன் கூட்டை அமைத்திருப்பதை பார்த்திருப்போம். புறா கோயில் கோபுரங்கள், வீட்டு மாடியில் மற்றும் கட்டடங்களில் அதன் வாழிடம் இருக்கும்.
நாம் பறவைகளை பார்க்கும் பொழுது அவை எந்த இடத்தில் இருந்தது என்று குறிப்பு எடுத்து கொள்ளவேண்டும்

பறக்கும் முறைகள்:

மரத்தில், தரையில் இருந்து பறவைகள் பறக்க போகிறது அதில் என்ன பறக்கும் முறைகள் இருக்கிறது என்று நானும் நினைத்தேன் பிறகு அப்படி இல்லை என்று தெரிந்து கொண்டேன். வண்டியை சாலையில் நாம் நேராக, சிலர் வளைந்து வளைந்து, சிலர் மெதுவாக / வேகமாக,சிலர் நிறுத்தி நிறுத்தி என்று ஓட்டுவதை பார்த்திருப்போம்.

photo-all about birds

photo-all about birds
பறவைகளின் பறக்கும் முறைகளும் இதே போல் நேராக, கீழே மேலே, நின்று நின்று, வேகமாக, கரணம் போட்டு, தாழ்வாகவே, மிக உயரமாக, வட்டம் இட்டு என்று பல நிலையில் இருக்கும்.
நாம் பறவை நோக்கும் பொழுது பறவை பறந்து செல்வதை பார்த்தால் மேலே சொல்வது போல் எந்த நிலையில் பறந்து செல்கிறது என்று குறித்து கொள்ளவேண்டும்
ஆக பறவை நோக்குதலில் முக்கியமாக எல்லோரும் பின்பற்றுவதை சுருக்கமாக மேலே சொல்லியிருக்கிறேன். புதியவர்கள் பறவைகளை பார்க்கும் பொழுது இந்த அடையாளங்களை குறித்து கொண்டால் நமக்கு பெயர் தெரியாத பறவைகளை பற்றி இந்த அடையாளங்களை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

முடிந்தால் பார்த்த பறவையை வரைந்து கொண்டால் கண்டுபிடிக்க மிக உதவியாக இருக்கும்.

                                                                       -தொடரும் 
       

                                                                                 -செழியன் 



உங்கள் கருத்துக்கள் அடுத்த பாகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்: 

lapwing2010@gmail.com

முதல் பாகம்

http://birdsshadow.blogspot.in/2016/05/1.html
இரண்டாம் பாகம்
http://birdsshadow.blogspot.in/2016/06/2.html
மூன்றாம் பாகம்
http://birdsshadow.blogspot.in/2016/07/3.html


 

1 comment:

  1. Bird watchers at early stage must learn these basic and important information. Thanks Chezhiyan. தங்கள் சேவை சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete