Showing posts with label பறவை நோக்குதல். Show all posts
Showing posts with label பறவை நோக்குதல். Show all posts

Tuesday, 14 April 2020

Therthangal Bird Sanctuary



“L” வடிவில் தேர்த்தங்கல் சரணாலயம் அமைந்துள்ளது. நாம் சென்று சேரும் இடம் இரண்டு கோடு சந்திக்கும் இடத்தில், ஒரு மத்தியபொழுது அந்த  சந்திப்பில் சென்று இறங்கினோம். சரணாலயம் முழுவதும் நீரால் சூழப்பட்டுள்ளதால் நீர்ப் பறவைகள்-கரையோர பறவைகள் எண்ணிக்கையில் மிகுதியாக இருந்தது.

நண்பர் மாசிலாமணியுடன் தேர்தங்கல் பறவைகள் சரணாலயம் சுற்றிவந்ததில் வறண்ட மாவட்டமான ராமநாதபுரம் இங்கு வந்தபிறகு அப்படித் தெரியவில்லை. நீர் சூழ்ந்த பகுதியில் பறவைகள் கொண்டாடமாக உள்ளது.

சத்தம் எழுப்பாத நத்தைகொத்தி நாரைகள் ஒரு மரத்தில் குவியலாக அமர்ந்து இருந்தது. பறவைகள் எப்பொழுதும்  தங்கள் இருப்பிடங்களைத் தெளிவாகப் பிரித்துக் கொள்கின்றன. இங்கேயும் அப்படியே பிரித்து எல்லைக்கோடுகளை அமைத்து இருந்தது. அனைத்து பறவைகளுக்கும் இந்த நீரில்தான் உணவு என்றாலும் ஒன்றுக்கு ஒன்று சண்டை இடுவதில்லை.

Tuesday, 9 July 2019

Bird Watching - பறவை நோக்குதல்


குளிர்கால மாதங்களில் சென்னையை சுற்றி பறவைகள் பார்க்கப்பட்ட இடங்கள் மற்றும் பறவை வகைகள் பற்றிய  இந்து தமிழ் நாளிதழில் சென்னையும் ஒரு வேடந்தாங்கள்தான் என்ற தலைப்பில் எழுதிய கட்டுரை 

இணைப்பு :

https://tamil.thehindu.com/general/environment/article27244351.ece



Saturday, 24 March 2018

சிட்டுக் குருவி



சிட்டுகுருவி அளவே உள்ள பறவை இனங்கள் நம் நாட்டில் நிறைய உண்டு. ஆனால் சிட்டுக்குருவியை மட்டும் நாம் அதிகம் நேசிக்க காரணம்? அவை நம் வீட்டிற்குள்ளே வந்து நம் உணவுகளை சாபிட்டது, வீட்டின் முற்றத்தில் தன் கூட்டை கட்டியது, அதன் கீச் கீச் குரல் நம் செவியில் கேட்டுகொண்டே இருந்தது. இதனால் சிட்டுக் குருவியை நம் வீட்டின் உறுப்பினராகவே நாம் ஏற்று கொண்டோம் இவையே மிக முக்கிய காரணம் ஆகும். 

ஒவ்வொரு வருடமும் மார்ச் 20ம் தேதி சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. வேறு எந்த பறவைக்கும் இது போல் ஓர் நாளை சிறப்பு தினமாக கொண்டாடுவதில்லை. இன்று, சிட்டுக்குருவிகள் செல்போன் கதிர்வீச்சால் அழிந்து வருகிறது அதனால் பரவலாக நம் கண் முன் விளையாடிய அந்த பறவைகள் இன்று இல்லை என்று பேசப்படுகிறது அவை உண்மையா? சென்னை போன்ற நகரத்தில் சிட்டுக் குருவிகளை பார்ப்பதே கடினமாகிவிட்டது ஏன் ? சிட்டு குருவிகள் தினத்தில் என்ன செய்யலாம் ?

Monday, 25 December 2017

10th சென்னை பறவை பந்தயம்



பறவை பந்தயம் என்ற வார்த்தை பறவைகளை பந்தயம் விடுவார்கள் என்ற அளவிலேயே இரண்டு வருடம் முன்பு தெரிந்து இருந்தது. ஆனால் அதற்கு நேர் எதிர் செயல் என்று தெரிந்து பிறகு இந்த ஆண்டு அதில் கலந்துகொள்வது என்ற முடிவால் தயாராகிவிட்டேன்.

Thursday, 30 November 2017

கொட்டிகிடக்கும் பறவைகள்........



புதர்சிட்டு 
விவசாய நிலத்தின் ஒரு பகுதியில் காட்டு மைனா, சாதரண மைனா, சிறிது தூரத்தில்  வென்புருவ வாலாட்டி. இவை அனைத்தும் நிலத்தில் இரையை தேடிகொண்டிருந்தது. மறுபுறத்தில் விவசாயி, மாடுகளை கொண்டு நிலத்தை உழுது கொண்டிருந்தார். அவரும், மாடும், பறவைகள் பக்கம் செல்லும்பொழுது அவை நகர்ந்து செல்கிறதே தவிர அங்கிருந்து பறந்து செல்லவில்லை அனைத்தும் மனிதர்கள் அருகில் வாழ பழகி கொண்டிருப்பதை பார்க்க முடிந்தது ஏலகிரியில்.

நான்கு கிலோமீட்டர் செல்லவேண்டிய தூரம், பறவைகளை பார்த்து கொண்டே செல்வதற்கு வசதியாக நடந்து செல்வோம் என்று நண்பர் மாசிலாமணியுடன் நடந்தேன். நான்கு கிலோமீட்டர் என்பது இலக்கு இல்லை, போக வேண்டிய தூரம் என்பதால், சென்றோம். என்ன அதிகமாக பறவைகள் இருந்துவிட போகிறது என்ற நினைப்பு ஆரம்பத்தில் வந்தது என்னமோ நிஜம். ஆனால் கொட்டிகிடக்கிறது பறவைகள் ஏலகிரி மலை மேல்.

Saturday, 30 September 2017

பறவை நோக்குதல்- 12 (Feeding Methods)

பறவைகள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம் பாடல்கள் பலவிதம் ஒவ்வொன்றும் ஒருவிதம்
பறவைகள் பலவிதமா ? என்றால்

ஆமாம் என்றே சொல்லத் தோன்றுகிறது அவற்றை நுணுக்கமாக அணுகும்பொழுது

நாம் உணவை கீழே அல்லது நாற்காலியில் அமர்ந்து அல்லது சில நேரம் நின்று கொண்டே சாப்பிடுவோம். ஆனால் பறவைகள்? இதென்ன கேள்வி மரத்தில் இருந்துதான் என்ற பதில் சட்டென்று வரும் அவை சரியென்றாலும் பாதியளவு மட்டுமே உண்மை.

பறவை நோக்குதலில் நாம் ஆரம்பத்தில் மேம்போக்காக பார்த்துக்கொண்டே செல்வோம் மாதங்கள் செல்ல செல்ல நமது பறவை பார்த்தலில் நுனுக்கங்களுடன் பார்க்க வேண்டும். அப்படி பறவை பார்க்கும்பொழுது கீழ் இருக்கும் பறவை வகைகளின் பழக்க வழக்கங்களை பற்றி தெரிந்துகொண்டால் உங்கள் பறவை அறிவு வளர்ந்து கொண்டே செல்லும்.

மயில் 

Sunday, 2 April 2017

கடிதம்



அன்புள்ள செழியன்,

நான் சமீபத்தில் 'பறவை நோக்குதல்' அறிமுக வகுப்பில் கலந்து கொள்ள நேர்ந்தது. எனது முதல் களப்பயிற்சியை Lalbagh-இல் நேற்று தான் முடித்தேன். 'பறவை நோக்குதல்' சம்பந்தமாக தெரிந்து கொள்வதற்காக வலைதளத்தில் தேடுகையில் தங்களுடைய தொடர் கட்டுரையை கண்டடைந்தேன். தெளிவாக, நேர்த்தியுடன் தாங்கள் எழுதியுள்ள கட்டுரைகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. மிக சிறப்பான பணியை தமிழில் முன்னெடுத்துள்ளீர்கள். தொடந்து தாங்கள் எழுதவிருக்கும் கட்டுரைகளை படிக்க ஆர்வமுடன் உள்ளேன்.

நன்றி,

இ.ஜனார்த்தனன்.

Wipro, Bengaluru.

Friday, 31 March 2017

பறவை நோக்குதல் -10 (பதிவு செய்தல்)



களத்தில் வரைந்து கொள்ளுதல்
உங்க கல்யாண போட்டோவை காட்டுங்கள் என்றால் சில பேர் அதெல்லாம் எங்க இருக்குனு  தெரியவில்லை அல்லது வீடு மாறும் பொழுது தொலைந்து விட்டது என்பார்கள் இன்னும் சிலர் உடனே எடுத்து காண்பிப்பார்கள். ஒரு புகைப்படத்தை காண்பித்து நிறைய விஷயங்களை பேசுவார்கள் இங்கே பாருங்கள் வலது ஓரம் நிற்பவர்தான் என் சித்தப்பா, ஏற்கனேவே என்னுடைய பாட்டியை பற்றி சொல்லி இருக்கிறேனே இவர்தான் அவர் அத்தை பின் நிற்பவர்தான் என் பாட்டி, தொண்ணூற்று ஆறு வயது வரை வாழ்ந்தார். இப்படி ஒத்த போட்டோவை கையில் வைத்து கொண்டு அன்று நடந்த கல்யாணத்தை நேற்று காலை மண்டபத்தில் இருந்து வந்ததுபோல் பேசுவார்கள். இவை மனதுக்கும், வாழ்கை சூழலுக்கும் மிகவும் இனிமையானதாக இருக்கும். இவையெல்லாம் கல்யாணத்தை பதிவு செய்து இன்றுவரை அந்த பொக்கிஷங்களை வைத்து இருப்பதால் மட்டுமே சாத்தியப்பட்டது. 

Tuesday, 28 February 2017

பறவை நோக்குதல்- 9 - Raptors



கருடன்-விக்கிபீடியா
இரைகொல்லிகள்(Raptors) என்றால் ? 

பறவை நோக்குதலில் இரைகொல்லிகள்(Birds of Prey) என்று அழைக்கப்படும் கழுகு, பருந்து, வல்லூறு, ராஜாளி, வைரி, பாறு கழுகுகள், ஆந்தை போன்ற பறவை வகைகளுக்கு என்று தனி பிரிவே உள்ளது. இவை அனைத்தையும் ராப்டர்ஸ் (இரைகொல்லிகள்) என்று பொது பெயரில் ஆங்கிலத்தில் அழைப்பதுண்டு. இவ்வகை பறவைகள் உணவுக்காக மற்ற விலங்குகளை கொன்று சாப்பிடும் பழக்கமுடையது (உதாரணம்: எலி, தவளை, பாம்பு, ஓணான், மீன், சிறு பறவை, பறவை குட்டிகள் போன்றவற்றை சாப்பிடும்). பறவை நோக்குதலில் இவ்வகை பறவைகளை தனித்து கவனிக்கப்படுகிறது. இரைகொல்லிகள் பறவைகளுக்கு என்றே நிறைய ஆங்கில புத்தகங்கள் தனியாக வெளிவந்துள்ளது.

இரைகொல்லிகள் பறவைகளை பார்ப்பதற்கென்றே நிறைய பறவை சங்கங்கள், தனி மனிதர்கள் உண்டு. இவ்வகை பறவைகளை தொடர்ச்சியாக பார்த்து அராய்ச்சி செய்வதற்கு உலகம் முழுவதும் நிறை அமைப்புகள் செயல்படுகிறது. பறவை நோக்குதலில் நாம் இவ்வகை பறவைகள் கண்டிப்பாக எதிர் கொள்வோம். காரணம், நாம் செல்லும் இடங்களில் பருந்து, வல்லூறு, வைரி போன்ற இரைகொல்லிகள் பறவைகளை காணமுடியம். அதனால் இவ்வகை பறவைகளை தெரிந்து கொண்டால்தான் நம்மால் சுலபமாக இனம் காண முடியும்.


Thursday, 15 December 2016

வடுவூர் பறவைகள் சரணாலயம்




Entrance Without Name Board
வேடந்தாங்கல் சரணாலயத்திற்கு பெரும்பாலான மக்கள் செல்லவில்லை என்றாலும் அந்த சரணாலயத்தை பற்றி பரவலாக மக்களுக்கு தெரிந்திருக்கிறது. ஆனால் அவற்றை தவிர நம் ஊருக்கு அருகில் பறவைகள் சரணாலயம் இருந்தாலும் யாருக்கும் தெரிவதில்லை என்பதை தஞ்சாவூர் பஸ் நிலையத்தில் வடுவூர் பறவைகள் சரணாலயம் என்று கேட்டால் ஒருத்தர் கோடியக்கரை சரணாலயமா என்றார், பஸ் நடத்துனர் அந்த ஏரியா என்கிறார், இன்னும் சிலபேருக்கு ஊரை தெரிந்து இருக்கிறது ஆனால் சரணாலயம் தெரியவில்லை.

வடுவூர் பறவைகள் சரணாலயம், “ப” வடிவத்தில் நம்மால் சென்று பார்க்கும் வகையில் உள்ளது.அவ்வளவு தொலைவு (தஞ்சாவூர் சென்று வடுவூர்) சென்றதிற்கு பலன் இருந்தது. ஏரியில் நீர் நிறைய இல்லை என்றாலும் நிறைய பறவைகளை பார்க்க முடிந்தது.

கழுத்து மிக நீளமாக, மஞ்சள் அலகுடன் பெரிய கொக்கை எனக்கு அருகில் நிறைய இந்த

Wednesday, 28 September 2016

பறவை நோக்குதல் - தொடர் - 4



குண்டாக இருக்கிறாரே அவர்தான், மாநிறமாக இருப்பவர்தான், மூக்கு சப்பையாக உள்ளவர் தான், குள்ளமாக, கருப்பாக, வெள்ளையாக, உயரமாக, ஒல்லியாக என்று நிறைய தடவை அடையாளங்களை வைத்தே மற்றவரை பற்றி பேசுவோம். நமக்கு ஒருவரின் பெயர் தெரிந்து கொள்வதற்கு இது போல் ஏதாவது ஒரு அடையாளம் சொல்லி மற்றவரிடம் அவரின் பெயரை கேட்ப்போம். இதே போல் தான் நாம் ஒரு பறவையை பற்றி தெரிந்து கொள்வதற்கு அவற்றின்  அலகு, பருமன், நிறம், கால் அமைப்பு, சிறகு அமைப்பு, தரையில் அல்லது மரத்தில் அல்லது நீர்நிலை அருகில் இருந்ததா என்று இவற்றை வைத்து அந்த பறவையை கண்டுபிடித்து விடலாம்.

பறவை நோக்குபவர்கள் அனைவரும் மேல் உள்ளது போல் இருக்கும் அடையாளங்களை வைத்தே பறவைகளை பார்த்தும், புதியவர்களுக்கு கற்றுகொடுத்தும் வருகிறார்கள். அனைத்து பறவைகள் புத்தகமும் இந்த அடையாளங்களை குறித்தே பேசும். பெரும்பாலுமான பறவைகளுக்கு அடையாளங்களே அதன் பெயராக இருக்கும்.

உதாரணம்:

கரண்டி வாயன்(Spoon Bill), மஞ்சள் மூக்கு நாரை(Painted stork), செங்கால் நாரை(White Stork), நாமக் கோழி(Common Coot), நெடுங்கால் உள்ளான்(Black winged Stilt), கொம்பன் ஆந்தை(Indian Eagle Owl), கொண்டலாத்தி(Common Hoopoe), கொண்டைக் குருவி(Red-vented Bulbul)

ஒரு பறவையின் ஆங்கில பெயருக்கும் தமிழ் பெயருக்கும் வித்தியாசம் உள்ளது. அதனால் தமிழ் பெயருடன் ஆங்கில பெயரை போட்டு குழப்பி கொள்ள வேண்டாம்.

அதனால்தான் ஒரு பறவையின் பெயர் தெரியவில்லை என்றால் இது போல் ஏதாவது சில அடையாளங்களை பார்த்து குறித்து கொண்டால் அவற்றை வைத்து நாம் பறவை புத்தகத்திலோ அல்லது பறவை நிபுனர்களிடமோ கேட்டு தெரிந்து கொள்ளலாம்.

மனிதர்கள் போல் கருப்பு, வெள்ளை, மாநிறம் என்று சில நிறத்தோடு பறவைகள் இருப்பதில்லை எண்ணற்ற நிறங்களில் பறவைகள் இன்று உலகில் உள்ளது அதனால் அவற்றை பார்க்கும் பொழுதே நமக்கு அதன் நிறமே பிரகாசமாக தெரியும் அதனால் பல பறவைகளுக்கு நிறத்திலேயே பெயர்கள் உண்டு.

உதாரணம்: 

பச்சைக்கிளி(Parakeet), கருங் கரிச்சான்(Black Drongo), சாம்பல் நாரை(Grey Heron), வெள்ளை அரிவாள் மூக்கன்(Black Headed Ibis), கரும் பருந்து (black eagle), மஞ்சள் சிட்டு(common iora), சாம்பல் கதிர்குருவி(Ashy prinia),கருப்பு வெள்ளை மீன்கொத்தி(Pied kingfisher).

ஆங்கிலத்தில் மஞ்சள் மூக்கு நாரையை வர்ண நாரை(painted stork) என்றே அழைக்கப்படுகிறது. அதாவது இந்த பறவையை பார்க்கும் பொழுது ஓவியமாக வரைந்தது போலவே அதன் நிறங்கள் காணப்படும் அதனால் painted stork.ஆனால் தமிழில் மஞ்சள் மூக்கு நாரை அல்லது சங்குவளை நாரை என்று அழைக்கபடுகிறது.  

பறவையை கிழ்கண்டவாறு நாம் குறிப்பு எடுத்து கொள்ளலாம். இந்த குறிப்புகள் மூலம் சுலபமாக அவற்றின் பெயர், இனம், வாழிடம், உணவு முறை எவை என்று கண்டுபிடித்துவிடலாம்.

1.அலகு / அலகு நிறம் 

2.காலின் அமைப்பு மற்றும் நிறம்

3.வால் அமைப்பு 

4.சிறகுகள் நிறம் 

5.உடல் பருமன் 

6.வாழும் இடங்கள்

7.பறக்கும் முறைகள்  

அலகு:

ஒவ்வொரு பறவைக்கும் அதன் அலகு மற்ற இனப்பறவைகளிடம் இருந்து மாறுபட்டே காணப்படும். அவற்றின் உணவுமுறைக்கு ஏற்ப மிக நீளமாக, நீளமாக, மத்திய தரமாக, சிறியதாக, பருமனாக, வளைந்து, கோணி ஊசி போல் நீண்டு கூர்மையாக என்று அலகுகல் அமைந்திருக்கும்.
நெற்கதிர்கள் அறுக்க-அருவா, மரத்தை வெட்ட-கோடரி, மரத்தை பிளக்க-ரம்பம், காய்கறி வெட்ட-கத்தி, முக சவரம் செய்ய-பிளேட் என்று பொருளின் தன்மைக்கேற்ப கருவிகள் மாறுவது போல்தான் பறவைகளின் இறைகளுக்கேர்ப அதன் அலகுகள் மாறுபடும். 

மனிதர்களுக்கு கைகள் எப்படியோ அதுபோல் பறவைகளுக்கு அதன் அலகே முதன்மை. இறக்கையும், அலகுமே பறவைகளின் சொத்து என்றே சொல்லலாம்.


அலகு மாதிரிகள்:

photo-wikipidia
பறவைகளில் அலகுகள் பல நிறத்தில் காணப்படும் அதனால் நாம் அலகு அமைப்பை மட்டும் குறித்து கொள்ளாமல் அதன் நிறத்தையும் சேர்த்து குறித்து கொள்ள வேண்டும்.

நாகணவாய் (MYNA) அலகின் நிறம்-மஞ்சள் (அலகு சிறியதாக இருக்கும்), 

காகத்தின்(CROW) அலகு நிறம்-கருப்பு (அலகு சிறிது நீண்டு காணப்படும்), 

சங்குவளை நாரையின்(PAINTED STORK) அலகு நிறம்-மஞ்சள் (அலகு மிக மிக நீளமாக இருக்கும்), 

வென்மார்பு மீன் கொத்தி(WHITE THROTED KINGFISHER) அலகின் நிறம்-சிகப்பு (அலகு நீண்டு இருக்கும்), 

சாம்பல் கதிர்க்குருவி(ASHY PRINIYA) அலகின் நிறம்-கருப்பு (அலகு மிக சிறியதாக இருக்கும்)

காலின் அமைப்பு மற்றும் நிறம்:

பறவை நோக்குதலில் ஒரு பகுதியாக நாம் பறவைகளின் கால் அமைப்பு மற்றும் அதன் நிறத்தை பார்த்து குறித்து கொள்ளவேண்டும். பறவைகளின் அலகுகளில் உள்ள வேறுபாடு போலவே அதன் கால்களிலும் வேறுபாடு உள்ளது.

சிட்டு குருவி, புறா போன்ற பறவைகளை விட கழுகு, பருந்து, வல்லுறு, ஆந்தை போன்ற இறைகொல்லி பறவைகளுக்கு கால்களே அதன் உணவை தீர்மானிக்கின்றன. இந்த பறவைகளின் அலகு இரையை உண்ணுவதற்கு ஆனால் அவற்றை பிடிக்க கால்களே மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பிடித்தால்தான் அவற்றை உண்ண முடியும்.

நிறைய தடவை நீங்கள் பார்த்திருப்பீர்கள்- கழுகு எலியை தூக்கி செல்வதும், வல்லுறு சிறு பறவை குட்டிகளை எடுத்து செல்வதும். அதனால் இவ்வகை பறவைகளுக்கு கால்கள் மிக மிக முக்கியம்.மற்ற பறவைகளுக்கு கால்கள் மரத்தில் பற்றி அமர, தரையில் நடக்க, நீரில் நீந்த என்று பயன்படுத்துகிறது.

உழவரான் பறவையால் மரத்தில் பற்றி அமர முடியாது அந்த அளவுக்கு அதன் கால்கள் மிக சிறியதாக இருக்கும். மரங்கொத்தி பறவை தன் கால்களால் மரத்தின் பக்கவாட்டில் நடந்து ஏற முடியும் மற்ற பறவைகளால் முடியாது.

கால் அமைப்பு:

photo-wiki
கால்களில் பறவைகளுக்கு இடையே நிறைய வேறுபாடுகள் உண்டு. சிட்டு குருவிக்கு சிறியதாகவும், பவளக்கால் உள்ளான் பறவைக்கு மிக நீண்ட கால்களும், வல்லூறுக்கு சிறியதும்/பெரியதுமாக இல்லாமல் இருக்கும் ஆனால் அதன் நகங்கள் மிக மிக கூர்மையாக இருக்கும்.

கால் நிறங்கள்- மஞ்சள், கருப்பு, ஆரஞ்சு, சிகப்பு, வெளிர் நிறம் என்று பல நிறத்தில் கால்கள் இருக்கும் அதனால் அவற்றை குறித்து கொள்ளவேண்டும். 

வால் நீளம் / நிறம்:

புலிகளுக்கு வரிகள் எப்படி ஒன்று போல் இருப்பது இல்லையோ அதே போல்தான் பறவைகளுக்கு வால் சிறியதாக / இரண்டாக பிளந்து / நடுத்தரமாக / நீளமாக /மிக நீளமாக என்று மாறுபட்டே காணப்படும்.

ஈபிடிப்பான் பறவையின் வால் மிக மிக நீளமாக இருக்கும். கரிச்சான் பறவையின் வால் இரண்டாக பிளந்து இருக்கும். தையல் சிட்டின் வால் மேல் நோக்கி இருக்கும். கம்பி வால் தகைவிலான் பறவையின் வால் ஒயர் கம்பி போல் நீளமாக இருக்கும். பறவை நோக்குதலில் நீங்கள் ஆர்வமாக செயல்படும்பொழுது சாதரணமாக பார்ப்பீர்கள்.

பறவை நோக்குதலில் நாம் பறவை வாலின் அமைப்பு, அதன் நீளம் மற்றும் நிறம் ஆகியவற்றையும் குறித்து கொள்ளவேண்டும்.

சிறகுகள் : 

சிறகுகள் பறவைகளின் சொத்து என்றே பார்த்தோம். பறப்பதே பறவைகளுக்கு ஆனந்தத்தை தரும். மனிதர்கள் ஆபத்தில் ஓடுவது போல் எந்த நொடியிலும் அவை தன்னை காப்பாற்றி கொள்ள பறப்பதை முதல் வேலையாக செய்கிறது அந்த அளவுக்கு சிறகுகள் முதன்மையான இடத்தில் உள்ளது.

அனைத்து பறவைகளுக்கும் சிறகுகள் உள்ளது அதில் என்னும் அளவுக்கே பறக்காத பறவைகள் என்றும் சில உள்ளது. உதாரணம்: பெங்குவின், தீக்கோழி.

photo-wikipedia
நடிகர்கள், நடிகைகள்  தலை முடியை வித விதமாக பராமரிப்பார்கள். வழுக்கை தலை உள்ள நடிகர்கள் கூட நடிப்பு என்று வந்தால் விக் வைத்து கொள்கிறார் அந்த விக்கையும் பராமரிக்க வேண்டும் இல்லை என்றால் அவை பொலிவுஇழந்து விடும். பறவைகளும் தன் சிறகுகளை தொடர்ந்து பாரமரித்து வருகிறது அவை தொடர்ந்து பறப்பதற்கு பெரும் உதவியாக இருக்கும்.
சிறகுகளை கோதுதல், தண்ணிரில் நனைத்து காயவிடுதல்,சிறு எறும்புகளை சிறகில் அள்ளி போட்டுகொண்டு அதன் மூலம் சிறகுகளை சரி செய்தல் என்று நிறைய வேலைகளை அனைத்து பறவைகளும் செய்கிறது.

பறவைகள் சிறகின் நிறம் அதன் உடம்பின் நிறத்திலும் அல்லது தனியாக சில நிறத்திலும் அல்லது பல வண்ணங்களிலும் என்று அமைந்து இருக்கும். 

பச்சை கிளி, கரிச்சான், தவிட்டு குருவி, காகம், கருஞ்சிட்டு, பச்சை சிட்டு போன்ற பறவைகளுக்கு சிறகின் நிறம் அதன் உடம்பின் நிறத்திலேயே அமைந்து இருக்கும்.

பறவை நோக்குதலில் நாம் ஒரு பறவையின் சிறகின் நிறத்தை குறித்து கொள்ளவேண்டும்.

உடல் அளவு அல்லது பருமன்:

இதற்கும் நாம் மனிதர்களையே உதாரணமாக எடுத்து கொள்வோம்.ஒருவர் குள்ளமாக, உயரமாக, நடுத்தரமான அளவாக இருப்பது போல்தான் பறவைகளின் அளவு.

உலகிலேயே மிக மிக சிறிய பறவை(ஹம்மிங் பறவை), மிக பெரிய பறவை(தீக்கோழி), நடுத்தரமாக(பினதின்னி கழுகு), சாதரணமா (காகம்,கிளி,புறா,நாகணவாய்), மிக சிறியதாக (சாம்பல் கதிர்குருவி,சிட்டு குருவி) என்று பறவைகளின் அளவுகள் உண்டு.

புதிதாக ஒரு பறவையை பார்க்கும் பொழுது நமக்கு தெரிந்த பறவைகளின் அளவுடன் (புறா/ காகம்/ சிட்டு குருவி/ நாகணவாய்(மைனா) இவற்றுடன்) நாம் பார்க்கும் பறவையின் அளவை ஒப்பிட்டு கொள்ளலாம் அல்லது குறித்து கொள்ளலாம்.

வாழும் இடங்கள்:

தரையில், மர உச்சியில், மர பொந்தில், கோவில் கோபுரம் மற்றும் சுவரில், நீர் நிலை அருகில், நீரில், வீட்டின் முற்றத்தில், சிறு மரங்களில், புதர்களில், பாழ் அடைந்த மண்டபத்தில் என்று பறவைகளின் வாழ்விடம் பல விதமாக அமைந்து இருக்கும்.

தரையில் முட்டை இடுபவை
எல்லா பறவைகளும் மரத்தின் மேலேயே வாழாது ஒவ்வொரு பறவைக்கும் வாழிடம் மாறுபடும். உதாரணமாக- மரத்தின் உச்சியில் இருவாச்சி பறவையும் தரையில் செம்போத்தும் தங்கள் வாழிடங்களை அமைத்து கொள்ளும்.

ஆள் காட்டி பறவை தரையில் சிறு பள்ளம் தோண்டி அதில் முட்டைகளை இடும். காகம் மரத்தில் மிக உயரத்தில் கூடு அமைக்காமல் நம் பார்வைக்கு புலப்படும் அளவிலேயே அதன் கூடுகள் இருக்கும்.

சிட்டுகுருவி நம் வீட்டு முற்றத்தில் தன் கூட்டை அமைத்திருப்பதை பார்த்திருப்போம். புறா கோயில் கோபுரங்கள், வீட்டு மாடியில் மற்றும் கட்டடங்களில் அதன் வாழிடம் இருக்கும்.
நாம் பறவைகளை பார்க்கும் பொழுது அவை எந்த இடத்தில் இருந்தது என்று குறிப்பு எடுத்து கொள்ளவேண்டும்

பறக்கும் முறைகள்:

மரத்தில், தரையில் இருந்து பறவைகள் பறக்க போகிறது அதில் என்ன பறக்கும் முறைகள் இருக்கிறது என்று நானும் நினைத்தேன் பிறகு அப்படி இல்லை என்று தெரிந்து கொண்டேன். வண்டியை சாலையில் நாம் நேராக, சிலர் வளைந்து வளைந்து, சிலர் மெதுவாக / வேகமாக,சிலர் நிறுத்தி நிறுத்தி என்று ஓட்டுவதை பார்த்திருப்போம்.

photo-all about birds

photo-all about birds
பறவைகளின் பறக்கும் முறைகளும் இதே போல் நேராக, கீழே மேலே, நின்று நின்று, வேகமாக, கரணம் போட்டு, தாழ்வாகவே, மிக உயரமாக, வட்டம் இட்டு என்று பல நிலையில் இருக்கும்.
நாம் பறவை நோக்கும் பொழுது பறவை பறந்து செல்வதை பார்த்தால் மேலே சொல்வது போல் எந்த நிலையில் பறந்து செல்கிறது என்று குறித்து கொள்ளவேண்டும்
ஆக பறவை நோக்குதலில் முக்கியமாக எல்லோரும் பின்பற்றுவதை சுருக்கமாக மேலே சொல்லியிருக்கிறேன். புதியவர்கள் பறவைகளை பார்க்கும் பொழுது இந்த அடையாளங்களை குறித்து கொண்டால் நமக்கு பெயர் தெரியாத பறவைகளை பற்றி இந்த அடையாளங்களை வைத்து தெரிந்து கொள்ளலாம்.

முடிந்தால் பார்த்த பறவையை வரைந்து கொண்டால் கண்டுபிடிக்க மிக உதவியாக இருக்கும்.

                                                                       -தொடரும் 
       

                                                                                 -செழியன் 



உங்கள் கருத்துக்கள் அடுத்த பாகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்: 

lapwing2010@gmail.com

முதல் பாகம்

http://birdsshadow.blogspot.in/2016/05/1.html
இரண்டாம் பாகம்
http://birdsshadow.blogspot.in/2016/06/2.html
மூன்றாம் பாகம்
http://birdsshadow.blogspot.in/2016/07/3.html


 

Saturday, 23 July 2016

பறவை நோக்குதல் - தொடர்-3


மாட்டின் அருகில் இருக்கும் இரண்டு பறவைகள் (உன்னிக் கொக்கு மற்றும்  நாகணவாய் (மைனா)) பற்றி போன கட்டுரையில் பார்த்தோம் அதன் தொடர்ச்சியாக மாட்டின் அருகில் இருக்கும் மேலும் ஒரு பறவையுடன் தொடங்குவோம்.

3. கரிச்சான் (Black Drango ) :

image-wiki
1.இரட்டை வால் குருவி என்று அழைக்கப்படும் கரிச்சான் பறவையும் மாட்டின் மேல் அமர்ந்திருப்பதை பார்த்திருப்பீர்கள். உடல் முழுவதும் நீல கருப்பாகவும், வால் நீண்டு மற்றும் பிளவுபட்டு இரண்டாக இருப்பது தெரியும். அதனால் இதனை இரட்டை வால் குருவி என்றும் அழைக்கப்படுகிறது. இந்த பெயரில் தமிழ் படம் ஒன்றும் வந்திருக்கிறது.

2.தமிழில் ஒரே பறவைக்கு நிறைய பெயர்கள் இருக்கும். அந்த அந்த வட்டாரத்தில், வட்டார பெயர்களுடன் பறவைகள் அழைக்கப்படுகிறது. (முடிந்த வரை அனைத்து பெயர்களையும் சேகரித்து எழுத முயற்ச்சிக்கிறேன்) அதே போல், இரட்டை வால் குருவிக்கும், இரண்டுக்கு மேற்ப்பட்ட பெயர்கள் உண்டு.

3.பெரும்பாலும் கரிச்சான் இரையை பிடித்த இடத்திலேயே சாப்பிட்டு விடும். இது மின் கம்பிகளில் தனியாக அமர்ந்திருப்பதை பார்த்திருப்பீர்கள்.பூச்சிகளை பார்த்தவுடன் மிக வேகமாக பறந்து சென்று பிடித்துவிடும் தன்மையுடையுது.

4.சில சமயங்களில் பெரிய பறவைகள் கொண்டு செல்லும் இறையையும் பிடுங்கும் பறவையான கரிச்சான், தான் கூடுகட்டும் மரத்தில் தன் குஞ்சுகளை கொத்தவரும் பருந்து மற்றும் மற்ற பெரிய பறவைகளை பறந்து சென்று விரட்டும் தைரியம் உள்ள பறவைதான் கரிச்சான் குருவி. அதனால் இவை கூடு கட்டியுள்ள மரத்தில் மற்ற சாதுவான பறவைகள் (மாம்பழ சிட்டு) கூட்டை அமைத்துகொள்ளும். 

கரிச்சனானை போல் மேலும் மூன்று வகை கரிச்சான்கள் உள்ளன. ஆனால் அவை காட்டில் வாழ்பவை.

image-wiki
 கரிச்சானின் வட்டாரப்பெயர்கள்:

1.கரிச்சான் அல்லது கருங் கரிச்சான் 

2.கரிக் குருவி

3.வால் நீண்ட கருங் குருவி

4.கருவாட்டு வாலி 

5.இரட்டை வால் குருவி 

அடுத்து முக்கியமாக பறவை கோக்குதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டிய அமைப்பு ஒன்றை பற்றி பார்ப்போம்.இந்த அமைப்பு மூலம் பறவைகளின் இன்றைய நிலையை பற்றி தெரிந்து கொள்ள உதவியாக இருக்கும்.



IUCN-International Union for Conservation of Nature: ( சர்வதேச இயற்க்கை பாதுகாப்பு இயக்கம்)

உலகில் இருக்கும் பறவை மற்றும் மற்ற ஊயிரினங்கள் எண்ணிக்கை ,அவற்றின் வாழிடம்,தற்போதிய நிலை,அழிந்து கொண்டிருகிறதா,அழிவை நோக்கி செல்கிறதா அல்லது அழிந்து விட்டதா இப்படி ஒவ்வொரு வருடமும் சிகப்பு பட்டியல்(RED LIST) என்று மிக நீண்ட ஒரு பட்டியலை வெளியிடும் அமைப்புதான் சர்வதேச இயற்க்கை பாதுகாப்பு இயக்கம் (IUCN). இந்த அமைப்பு 1948ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு இன்றுவரை செயல்படுகிறது.

ஆனால் சிகப்பு பட்டியலை(IUCN -RED LIST) 1964ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.

இந்த அமைப்பால் பறவைகளுக்கு என்ன நன்மை என்று பார்த்தால் 

தினமும் மனிதன் இறப்பதை பல வழிகளில் நமக்கு பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி வழியாக தெரிந்து கொள்ளமுடிகிறது. அடுத்து எதனால் இவ்வளவு பேர் இறந்தார்கள் என்ற தகவலும் நமக்கு தெரிகிறது. விபத்தில் இறந்தார்கள் அல்லது ஏதாவது புதிய நோய் வந்து மனிதர்கள் இறந்து கொண்டிருகிறார்கள் என்று தெரிய வந்தால் உடனே அரசு அதற்கான நடவடிக்கையை எடுக்கிறது.

இப்படி மனித உயிர்களை பற்றி தெரிந்துகொள்ள நிறைய வழிகள் இருந்தாலும் பறவை, விலங்குகள் இவற்றின் அழிவை பெரும்பாலும் பத்திரிக்கை கவனத்திற்கு வருவதே இல்லை இப்பொழுது கூட பறவைகளின் அழிவின் விவரத்தை இது போல் இருக்கும் அமைப்பின்(IUCN) மூலம் தான் பதிரிக்கைகளுக்கே தெரியவருகிறது. அரசியல் நிருபர்கள், சினிமா நிருபர்கள், க்ரைம் நிருபர்கள் என்பது போல் எந்த பத்திரிகையிலாவது சுற்றுச்சூழலுக்கு என்று தனி நிருபர்கள் உள்ளார்களா? என்று தெரியவில்லை.

மனித உயிர்களின் விவரங்கள் தினமும் தெரிவது போல் பறவைகள் அழிவின் விவரங்கள் ஆண்டுக்கு ஒரு முறை மட்டுமே இது போல் ஒரு பட்டியல் மூலம்தான் தெரியவருகிறது. இந்த அமைப்பால் பறவைகளுக்கு என்ன நன்மை என்று இப்பொழுது புரிந்திருக்கும். இது போல் அமைப்பு(IUCN) இல்லை என்றால் மனிதனை தவிர்த்து மற்ற உயிர்களின் விவரங்கள்?  

இந்தியாவில் உள்ள பறவைகளின் நிலையை பற்றியும் ஒவொரு ஆண்டும் இந்த அமைப்பு(IUCN) பட்டியல் ஒன்றை வெளியிடுகிறது. உதாரனத்திற்க்கு 2015ஆம் ஆண்டில் இந்தியாவின் சிகப்பு பட்டியலை பார்ப்போம்.

IUCN பறவைகளின் இருப்பு மற்றும் அதன் அழிவு நிலைகளை ஏழு வகையாக பிரித்து கிழே இருக்கும் படத்தில் இருப்பது போல் வகைப்படுத்துகிறது.


1.LC-(LEAST CONCERN) சொல்லத்தகுந்த(வருத்தப்படாத) அளவுக்கு பறவைகள் உள்ளது

2,NT-(NEAR THEREATENED) அச்சுறுத்தும் அளவில் பறவை உள்ளது 

3.VU-(VULNERABLE) அதிகமாக அச்சுறுத்தம் அளவில் பறவை உள்ளது

                    -கடந்த 10 வருடத்தில் 50 சதவிகிதமாக பறவை குறைந்து உள்ளது

                    -அதாவது 10000க்கும் குறைவாக அந்த பறவை உள்ளது. 
  
4.EN- (ENDANGERED) -பறவை அழிந்து கொண்டிருக்கிறது

                                     - கடந்த 10 வருடத்தில் 70 % பறவை அழிந்து உள்ளது 

                                    - அதாவது 250 பறவைகள் மட்டுமே இன்று உயிர்வாழ்கிறது 

5.CR-(CRITICALLY ENDANGERED) -அழிவின் விளிம்பில் பறவை உள்ளது.

                                                         -90 % பறவை அழிந்து உள்ளது 

                                                         -அதாவது 50 பறவை மட்டுமே உயிர் வாழ்கிறது  

6.EW-(EXTINCT IN WILD) -வனத்தில் முற்றிலும் பறவை அழிந்துவிட்டது.  

                                            -ZOO போன்ற இடத்தில் வைத்து காப்பாற்றப்படுவது

                         - பாதுகாக்க வேண்டும் என்று அவற்றை குறிப்பிட இடத்தில வைத்து காப்பாற்றுவது. 

7.EX-(EXTINCT) கடைசியாக இருந்த ஒரு பறவையும் இறந்துவிட்டது.அதாவது   
            முற்றிலும் இவ்வுலகில் இருந்து அந்த பறவை அழிந்து விட்டது.

ஒரு பறவை இன்று பூமியில் எந்த நிலையில் இருக்கிறது என்பது மேலே உள்ள குறியீட்டின் மூலமே சிகப்பு பட்டியலை வெளியிடுகிறது. 
 
2014 ஆம் ஆண்டு 173 பறவைகள் அழிவின் நிலையில் இருந்துள்ளதாக அறிவித்த IUCN-சிவப்பு பட்டியல் அதில் ஒரு பறவை மட்டும் அழிவின் நிலையில் இருந்து வெளியே வந்து 2015ல் மேலும் எட்டு பறவைகள் சேர்ந்து 180ஆக உள்ளது.


RED LIST OF INDIAN BIRDS  (2015) - 8 பறவைகள்:

1. வடக்கு ஆள்காட்டி (Northern Lapwing - Grass Land Bird)

2.Red Knot

3. கர்லூ உள்ளான் (Curlew  Sandpiper)

4.Eurasian oyster Catcher

                                                         5. பட்டைவால் மூக்கன் (Bar-Tailed Godwit)

                                                         6. கொண்டை முக்குளிப்பான்  (Horned Grebe)

                                                         7.Common Pochard

                                                         8. புல்வெளிக் கழுகு  (Steppe Eagle)

முதல் பறவை புல்வெளி வாழ் பறவை (Moved From LC to NT)

அடுத்து நான்கு பறவைகள் நீர் வாழ் பறவைகள் (WETLAND BIRDS) (Moved From LC to NT)

கடைசி இரண்டு பறவை நீர் வாழ்(WETLAND BIRDS) பறவைகள் (Moved From  LC to VULNERABLE)

NEAR THEREATENED  to  LEAST CONCERN

2014 ஆம் வருடத்தில் NTயில் இருந்த EUROPEAN ROLLER 2015தில் LCக்கு வந்திருப்பது மட்டுமே சந்தோஷம் தரக்கூடிய செய்தியாகும்.
 

தமிழில் அழிந்துவரும் உயிரினங்களை பற்றி சிகப்பு பட்டியல் என்ற சிறு புத்தகம் திரு.சுப்ரபாரதிமணியன் எழுத்தில் நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

 4. வெண்மார்பு மீன்கொத்தி (White Throated Kingfisher):
 
image-wiki
உலகமெங்கும் தொண்ணுறு வகையான மீன்கொத்திகள் இருந்தாலும் இந்தியாவில் சில வகையான மீன்கொத்திகள் காணப்படுகின்றன. அவற்றில் ஒன்று தான் வென்மார்பு மீன்கொத்தி.

மைனா அளவுள்ள இவை, தொண்டை மற்றும் வயிர் பகுதியில் வெண்மையாக காணப்படுவதால், வென்மார்பு மீன்கொத்தி ஆகியது. உடலின் மேற்பரப்பில் அடர் நீல நிறத்திலும் மற்றும் தலை,வயிரின் பாதிக்கு மேல் காப்பி வண்ணத்தில் காணப்படும். அலகு மற்றும் கால்கள் ரத்த சிகப்பில் இருக்கும்.

வாழிடம்:
- அதிக மின் அழுத்தம் செல்லும் மின் கம்பிகளில்  அமர்ந்திருப்பதை பார்க்கமுடியும்,
- வயல்வெளி,
- நீர்நிலைகளில் அதிகமாக காணபடும்,
- நம் வீட்டருகில் சுலபமாக பார்க்க கூடிய பறவைகளில்  இவையும் ஒன்று.

உணவுகள்:
சிறு மீன்கள், தவளை குட்டிகள், சிறு உயிர்கள், பல்லி, நத்தை போன்றவை.
நீரை மட்டும் நம்பி இல்லாமல் சிறு உயிர்களையும் பிடித்து சாப்பிடுவதால் நீர் இல்லாத சமயங்களில் மற்ற பறவைகளை காட்டிலும் இவை தப்பித்து வாழ்ந்துவிடும்.

முட்டை:
தன் நீலமான அலகால் (ஏரி அல்லது ஆற்று பகுதிகளில்) தரையில் பள்ளம் தோண்டி முட்டையிடும் பறவையான மீன்கொத்தி பறவை மார்ச் முதல் ஜூலை வரை இவற்றின் இனபெருக்க காலமாகும்.

image-Arun
பறவையின் வட்டாரப்பெயர்கள்:

1.சிரல்

2.சிச்சிலி 

3.பொன்வாய்க் குருவி

4.மூக்கன்

5.விச்சுலி 

6.கலகக் குருவி 

7.பெரு மீன் கொத்தி


                                                                                                                                                                 -   தொடரும்

                                                                                  -செழியன்
 

உங்கள் கருத்துக்கள் அடுத்த பாகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்: 

lapwing2010@gmail.com

முதல் பாகம்
http://birdsshadow.blogspot.in/2016/05/1.html
இரண்டாம் பாகம்:
http://birdsshadow.blogspot.in/2016/06/2.html