Tuesday 14 April 2020

Therthangal Bird Sanctuary



“L” வடிவில் தேர்த்தங்கல் சரணாலயம் அமைந்துள்ளது. நாம் சென்று சேரும் இடம் இரண்டு கோடு சந்திக்கும் இடத்தில், ஒரு மத்தியபொழுது அந்த  சந்திப்பில் சென்று இறங்கினோம். சரணாலயம் முழுவதும் நீரால் சூழப்பட்டுள்ளதால் நீர்ப் பறவைகள்-கரையோர பறவைகள் எண்ணிக்கையில் மிகுதியாக இருந்தது.

நண்பர் மாசிலாமணியுடன் தேர்தங்கல் பறவைகள் சரணாலயம் சுற்றிவந்ததில் வறண்ட மாவட்டமான ராமநாதபுரம் இங்கு வந்தபிறகு அப்படித் தெரியவில்லை. நீர் சூழ்ந்த பகுதியில் பறவைகள் கொண்டாடமாக உள்ளது.

சத்தம் எழுப்பாத நத்தைகொத்தி நாரைகள் ஒரு மரத்தில் குவியலாக அமர்ந்து இருந்தது. பறவைகள் எப்பொழுதும்  தங்கள் இருப்பிடங்களைத் தெளிவாகப் பிரித்துக் கொள்கின்றன. இங்கேயும் அப்படியே பிரித்து எல்லைக்கோடுகளை அமைத்து இருந்தது. அனைத்து பறவைகளுக்கும் இந்த நீரில்தான் உணவு என்றாலும் ஒன்றுக்கு ஒன்று சண்டை இடுவதில்லை.




சரணாலயத்தில் அமர்வதற்கு  இருக்கைகள் உள்ளது ஆனால் அமரமுடியாது. காரணம் வெய்யில்.  எந்த இருக்கையும் நிழலில் இல்லை என்பது சிறிது குறை. L வடிவ சரணாலயத்தில் கோடுகள் சந்திக்கும் இடத்தில் மிகப் பெரிய மரம் இருப்பது ஆறுதல். ஒரு பக்கம் நடந்து சென்று திரும்பி  மரத்துக்குக் கீழ் வந்து அமர்ந்து கொண்டோம்.

சிறிது நேரத்தில் கார் ஒன்று சரணாலயத்தில் வந்து நின்றதில் பெரியவர் ஒருவர் இறங்கி பறவைகளைப் பார்த்துக் கொண்டு இருந்தார் இடையில் பேசினோம். ராமநாதபுரத்தில் மிகப் பெரிய ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இந்த சரணாலயம் பக்கம் செல்லும் பொழுதெல்லாம் நின்று பறவைகள் பார்த்துச் செல்வேன் என்று சொல்லி எங்களிடம் இருந்த இரு கண்ணோக்கி வாங்கி ஆசைதீரப் பறவைகளைப் பார்த்தார்…

மத்தியபொழுது சரணாலயம்  

சரணாலயத்தின் ஒரு பக்கத்தில் நடை

சரணாலயத்தின்  ஒரு பக்கம் நடந்து சென்றோம்.   சிறிது தூரம் சென்றால் அணைத்து பறவைகளும்  பெரிய மாநாடு நடத்திக்கொண்டு இருக்கிறது. மரத்தில்  அருகிலிருந்து பார்க்கும்பொழுது நிச்சயம் தெரியவில்லை. 

மாநாட்டில் கலந்து கொண்ட பறவைகள்


1.மஞ்சள் மூக்கு நாரை (Painted Stork)

2. நத்தை கொத்தி நாரை (Open Billed Stork)

3. நீர்க் காகம் (Cormorant)

4.சாம்பல் நாரை (Grey Heron)

5.வெள்ளை அரிவாள் மூக்கன் (Black Headed Ibis)

6. அன்றில் (Glossy Ibis)

7. பவளகால் உள்ளான் (Black Winged Stilt)

8. சிகப்பு மூக்கு ஆட்காட்டி (Red-lapwing)

9. பெரிய கொக்கு (Large Egret)\

10. சிறிய கொக்கு (Little Egret)

11. மடையான் (Pond Heron)

12. கூழைக்கடா (Pelican)

Birds Meeting Point


பெரிய கொக்கு-சிறியகொக்கு-சாம்பல் நாரை- வெள்ளை அரிவாள் மூக்கன் இந்த நான்கு பறவைகள் எண்ணிக்கையில் அதிகமாக இருந்தது. எந்த நீர் நிலைக்கு சென்றாலும்  நிச்சயம் மடையான் பறவையை பார்த்துவிடலாம் இங்கும் பரவலாக தென்பட்டது…

சரணாலயத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட பறவைகள் நீரில் இறந்து மிதந்தது. ஆச்சரியம் தாங்காமல் சரணாலயத்தை ஒட்டி இருந்த வீட்டில் இருந்தவரிடம் விசாரித்தோம். அவருக்கு சரியான காரணம் தெரியவில்லை மீண்டும் நீரை பார்த்துக் கொண்டு இருந்தோம். பறவைகளின் எச்சம் நீரில் அதிகம் இருந்தது ஆனால் அவை காரணமாக இருக்காது என்று தெரியும். பிறகு தோழர் மதுரை ரவீந்திரன் அவர்கள் மூலம் அங்கு உள்ள காட்டிலாகா அதிகாரிகளுக்கு தகவல் தரப்பட்டது. இதற்கு ரவீந்தரன் அவர்கள் மிகுந்த முயற்சி எடுத்தார். அவருக்கு மிக்க நன்றி…



இரண்டு நாள் கழித்து பறவை இறப்பு தொடர்பாக ஆராய்ச்சிசெய்து வரும் கிருபாநந்தினி அவர்கள் தொடர்பு கொண்டு எப்படி இறந்து என்று விசாரித்தார். அங்கு உள்ள நீரை ஆய்வு செய்வதாக சொல்லியுள்ளனர் என்று அவரிடம் சொன்னேன். வேறு எங்கையாவது பறவைகள் இறப்பு தெரிந்தால் தகவல் கொடுங்கள் என்று சொன்னார்..


ஆட்காட்டி பறவை  குரல் கொடுத்துக் கொண்டே எங்கள் முன்பு பறந்து கொண்டு இருந்தது. சிகப்பு ஆட்காட்டி பறவையை பார்ப்பது போல், மஞ்சள் ஆட்காட்டி பறவையை பார்ப்பது சிரமமே. பரவலாக காணப்பட்ட இந்த ஆட்காட்டி இப்பொழுது சென்னை வெளிபகுதிகளில் மட்டுமே வாழ்கிறது. அப்படி ஒரு முறை சிறுதாவூர் பகுதியில் நாங்களும் பார்த்தோம் அவையும் எங்களை பார்த்தது. 

சென்னைக்கு உள்ளே ஏன் வருவதில்லை என்று கேள்வி கேட்டேன் நீங்க்ள அங்கு இருப்பதால் நாங்கள் வருவதில்லை  என்று பதில் சொன்னது.  உங்கள் கண்ணில் பட கூடாது என்றுதான் இவ்வளவு தொலைவு வந்துள்ளோம் இருந்தாலும் இங்கேயும் வந்துவிடுகிறீர்கள் என்று குற்றம் சுமத்தியது…

மஞ்சள் மூக்கு ஆட்காட்டி முதல் முறையாக திருநெல்வேலியில் பார்த்தது நினைவுக்கு வருகிறது. வறண்ட நிலத்தில் இரண்டுக்குமேல் இருப்பது தெரிந்து உற்று நோக்கினோம் அவற்றில் ஒன்று தரையில் அமர்ந்து இருந்ததை வைத்து முட்டையை அடைகாக்கலாம் என்று முடிவுக்கு வந்தோம் அருகில் சென்று பார்க்கவில்லை அப்படி செய்தால் நிச்சயம் ஆட்காட்டிக்கு தொந்தரவாக இருக்கும்..

தேர்த்தங்கல் சரணாலயதில் பாம்புத்தாரா பறவை ஒன்று  நீரில் தன் தலையை நிமிர்த்தி இப்ப வாங்கடா என்கிட்ட என்பது போல் காட்சியளித்தது. இந்த பறவையை பார்க்க மற்ற சரணாலயங்களில் தேடி கொண்டிருப்போம் ஆனால் இங்கு மிக சாதாரணமாக நம் பார்வையில்படுகிறது. முக்குளிப்பான் நான்கு அல்லது ஐந்து எந்நேரமும் உடலை மூழ்கி  நிமிர்த்தி நகர்ந்து கொண்டிருக்கிறது. வாத்து வகைகள் அதிகம் இல்லையென்றாலும்  கரையோர பறவைகள் மட்டுமே இந்த சரணாலயத்தில் ராஜாங்கத்தை நடத்துகிறது.

Darter

தேர்த்தங்கல் சரணாலயத்தின் மற்றோரு பாதையில் உயர் கோபுரம் அமைத்து உள்ளனர். அவற்றில் இருந்து பார்த்தால் மஞ்சள் மூக்கு நாரை, நத்தை கொத்தி நாரை இரண்டின் கூட்டிலும் குஞ்சுகள் நன்கு வளர்ந்து நின்று கொண்டிருப்பதை பார்க்கலாம். கரண்டிவாயன் பின் பக்கம் உள்ள மரத்தில் இருப்பது உயர் கோபுரத்தில் இருந்து பார்த்தால் மட்டுமே தெரிகிறது. அதில் ஒரு கரண்டி வாயன் பறவை வேகமாக பறந்து பின்புறம் உள்ள மரத்தில் சென்று அமர்வதை பார்த்த பிறகுதான் எங்கள் கவனம் அங்கு குவிந்தது.


உயர்கோபுரம், மரங்களின் மேல் கூட பறவைகளின் மாநாடு நடைபெறுகிறது என்று தெரியவந்தது. கொக்குகள், மூக்கன்கள், நாரைகள் இந்த மாநாட்டை நடத்திவருகின்றது.. தலையை உயர்த்தி வானத்தை பார்த்தால் நத்தைகொத்தி நாரை குவியலாக பறந்து வட்டமடித்துக் கொண்டு இருக்கின்றது..

அருகில் நிறைய கிராமங்கள் உள்ளதால்  சரணாலயத்தை ஒட்டிய  சாலையில் மக்கள் போவதை  பார்த்துக்கொண்டே பறவைகளை பார்த்துக்கொண்டிருந்தோம்.  வலது பக்கம் இருக்கும்  வயலில் ஒரு பெரியவர் நீர் கொண்டு செல்கிறார் அவரின் ஆனந்தமாக வாழக்கை  மகிழ்ச்சியாக தெரிந்தது..



பெரியவர் பயிர்களுக்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தார் இன்னோரு வயதான நபர் பஸ் நிறுத்தத்தில் என்ன செய்து கொண்டிருந்தார் என்றால் உள்ளுக்கு ஊற்றி கொண்டு இருக்கிறார்..  

சுற்றி முடித்து பேருந்து நிறுத்தத்தில் நின்று இருந்தபொழுது . ஒரு பெரியவர் சாலையின் எதிர் பக்கத்தில் இருந்து எங்கள் பக்கம் வந்த சிறு கல் மேல் அமர்ந்தார். பேசாமல் இருப்போமா அதனால் பேச்சு கொடுத்தோம். எதிலும் ஆர்வம் பெரியதாக இல்லமால் முழுவதும் குடிப்பதில் ஆர்வம் இருப்பது தெரிந்தது. பேச்சின் இடையில் பெரியவர் சொல்கிறார் இப்பதான்  போய் குடித்துவிட்டு வந்தேனா, இது தெரியாமல் என் மகன் வாங்கி  வந்து கொடுப்பான் அதையும் குடிப்பேன் என்று சொல்லி சிரித்தார். வேறு என்ன இவரிடம் பேசுவது என்று நினைத்து எப்பொழுது பேருந்து வரும் என்று மாற்றினோம். பறவைகள் பற்றியெல்லாம் சிறிது அறிந்து வைத்து இருக்கவில்லை முழுவதும் குடி மேல்மட்டுமே கவனம் உள்ளது. பஸ் வரும் வரை பேசிவிட்டு நகர்ந்தோம்.


சாதாரணமாக பார்க்கமுடிகிற பறவைகளான  கரிச்சான், பச்சைக்கிளி, புறா, நாகணவாய், காகம் போன்றவற்றையும் உன்னிப்பாக கவனித்து குறித்துக் கொண்டோம். 

பச்சைக்கிளி ஒரு கம்பியில் சர்க்கஸ் வித்தை அங்கு செல்பவர்களுக்கு  காட்டிக் கொண்டிருக்கிறது. நாங்கள் பார்த்தோம் கிளியும் எங்களை பார்த்தது. வேறு எதுவோம் பேசிக் கொள்ளவில்லை..

ஒரு மரத்தில் நீர் காகம் கூட்டில் இருப்பது போல் அமர்ந்து அடைகாத்து கொண்டிருந்தது அருகில் மற்றொரு நீர் காகம் காவலுக்கு இருந்தது. ஆனால் கூடு இருப்பது போலவே தெரியவில்லை. அதன் அமர்வு அடைகாக்கும் என்பது போல் இருந்தது உறுதிப்படுத்த முடியவில்லை..



எப்பொழுதும் புதிய பறவைகளை பார்த்தால்தான் சந்தோஷம் என்று பலர் இருப்பார்கள்  ஆனால் இப்படிபட்டவர்களுக்கு  நாளடைவில்  பறவை நோக்குதலில் சுவாரசியம் இல்லாமல் போக வாய்ப்புண்டு. ஏற்கனவே பார்க்கப்பட்ட பறவை என்றாலும் முதல் முறை பார்ப்பது போல் மகிழ்ச்சியாக பார்க்க பழகி கொள்ளவேண்டும்.

காகத்தை கூட கூர்ந்து பார்க்க தொடங்குகள். புதிய பறவை சுவாரசியம் தரும் ஆனால் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு புதிய பறவைகள் பார்க்க எங்கு செல்விர்கள்..

நான் கூழைக்கடா பறவையை கூட சந்தோஷமாக பார்த்துக் கொண்டிருப்பேன் அதற்கு முன்பு நூறு முறை அவற்றை பார்த்திருந்தாலும்…..

புதிய பறவையை நோக்கி செல்லுங்கள் ஆனால் அவை மட்டும் நோக்கமாக இருக்கக் கூடாது.


மாலைபொழுது சரணாலயத்தில் இருந்ததால், சூரிய ஒளி குறைய, குறைய  சரணாலயத்தின் அழுகு மேலும் கூடுகிறது. வெளியே சென்று இருந்த பறவைகள் தங்கள் மரங்கள் நோக்கி வந்துக் கொண்டு இருந்தது.. நீர்ப் பறவைகள் அனைத்தும் இங்கேயே உணவு தேடும் என்பது இல்லை உணவுக்காக வெளியே சென்றும் திரும்பும். அதுவும் கூட்டில் குஞ்சுகள் இருந்தால் அதற்கு உணவு அதிகம் சேகரிக்க வேண்டும்.

இரவை நோக்கி சரணாலயம் 

பறவைகளின் வாழ்க்கை மிக எளிமையாக அமைத்துக் கொள்கிறது. எந்த பறவையும் வருடம் முழுவதும் கூட்டில் இருப்பதில்லை முட்டை வைக்கும்பொழுது மட்டுமே அவற்றுக்கு கூடு தேவை அப்பொழுது கூடு அமைகிறது..

நீர் குறைந்து சரணாலயம் வற்றிவிடும்பொழுது பறவைகள் இங்கிருந்து கிளம்பிவிடும். அதன் கூடு நாளடைவில் சிதலடைந்து காணப்படும். மீண்டும் அடுத்த வருடம் வந்து புதிய கூடு அமைக்கும்.. ஒரு சில பறவைகள் மட்டுமே பழை கூட்டை மீண்டும் பயன்படுத்தும் ஆனால் அவை நீர்ப் பறவைகள் இல்லை…

இந்த சரணாலயத்தில் மஞ்சள் மூக்கு நாரை, நத்தைகொத்தி நாரை இரண்டும் அதிகளவில் கூடு அமைத்து உள்ளன. நன்கு குஞ்சுகள்  எழுந்து நிற்கும் அளவுக்கு வளர்ந்துவிட்டது. அவ்வப்பொழுது இறக்கைகளை அடித்து நாங்களும் பறக்க தயார் என்பது போல் இருந்தது..


இப்பொழுது சரணாலயம் தியான நிலையில் இருந்தது. நாங்கள் மட்டுமே சுற்றி வந்துக் கொண்டு இருந்தோம்.. மயில் ஓசை அருகில் கேட்டது ஆனால் பார்க்க முடியவில்லை.. பறவைகள் அனைத்தும் இரவை நோக்கி காத்திருந்தது.

நீண்ட நேரம் பறவைகள் ,மரங்கள், நீர், கிராம மனிதர்கள்  என்று கலவையாக பார்த்து அங்கிருந்து நகர்ந்தோம்…

சோர்வாக இருந்தாலும் முழுமையாக சரணாலயத்தை உள் வாங்கிய மனநிலை இருந்தது..




 -செழியன்.ஜா 


1 comment:

  1. One more sanctuary for protection and sustainable development. Good work

    ReplyDelete