Saturday, 24 March 2018

சிட்டுக் குருவி



சிட்டுகுருவி அளவே உள்ள பறவை இனங்கள் நம் நாட்டில் நிறைய உண்டு. ஆனால் சிட்டுக்குருவியை மட்டும் நாம் அதிகம் நேசிக்க காரணம்? அவை நம் வீட்டிற்குள்ளே வந்து நம் உணவுகளை சாபிட்டது, வீட்டின் முற்றத்தில் தன் கூட்டை கட்டியது, அதன் கீச் கீச் குரல் நம் செவியில் கேட்டுகொண்டே இருந்தது. இதனால் சிட்டுக் குருவியை நம் வீட்டின் உறுப்பினராகவே நாம் ஏற்று கொண்டோம் இவையே மிக முக்கிய காரணம் ஆகும். 

ஒவ்வொரு வருடமும் மார்ச் 20ம் தேதி சிட்டுக்குருவிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. வேறு எந்த பறவைக்கும் இது போல் ஓர் நாளை சிறப்பு தினமாக கொண்டாடுவதில்லை. இன்று, சிட்டுக்குருவிகள் செல்போன் கதிர்வீச்சால் அழிந்து வருகிறது அதனால் பரவலாக நம் கண் முன் விளையாடிய அந்த பறவைகள் இன்று இல்லை என்று பேசப்படுகிறது அவை உண்மையா? சென்னை போன்ற நகரத்தில் சிட்டுக் குருவிகளை பார்ப்பதே கடினமாகிவிட்டது ஏன் ? சிட்டு குருவிகள் தினத்தில் என்ன செய்யலாம் ?

எப்பொழுதும் சிறு கூட்டமாக இங்கும், அங்கும் பறந்து கொண்டிருக்கும் சிட்டுக் குருவி, ஒரு தரைவாழ் பறவை ஆகும். தரையில், மொட்டை மாடியில் உணவை சாப்பிடுவதை நாம் பார்த்திருப்போம். 2012ம் வருடம் டெல்லி அரசு சிட்டுக் குருவியை மாநில பறவையாக அறிவித்தது.

பெரும்பாலானா பறவை வகைகளில் ஆண், பெண் இரண்டும் ஒன்று போலவே இருக்கும். அதனால் அவற்றை பிரித்து பார்ப்பது சிறிது கடினமாக இருக்கும். ஆனால் சிட்டுக் குருவிகளில் ஆண்- அடர் பழுப்பு நிறத்தில் மேல் பாகமும், சாம்பல்-வெள்ளை கலந்த  நிறத்தில் கீழ்பாகம் இருக்கும். பெண்- வெளிறிய பழுப்பு நிறத்தில் மேல் பாகம் இருக்கும். சுலபமாக சிட்டுக் குருவிகளில் ஆண்-பெண் பறவையை வேறுபடுத்தி கண்டுபிடித்துவிடலாம்.

உயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகுமா? என்ற சொல்வடை கிராமத்தில் உண்டு. இங்கு ஊர் குருவி என்று குறிப்பிடபடுவது சிட்டுக் குருவியைத்தான். 

இவை ஒரு தவறான உதாரணமாகும். பருந்தை, சிட்டுக் குருவியுடன் ஒப்பிடுவதே முதலில் தவறு ஆகும். இயற்கையின் படைப்பில், பருந்து உயரத்தில் பறந்து தனது இரையை தேடும் வகையில் படைக்கப்பட்டுள்ளது. ஆனால் வீட்டின் மொட்டை மாடிக்கு மேல் பறந்து செல்லாத சீட்டுக் குருவிகள் தங்கள் இரையை, தரையில் தேடும் வகையில் அதன் படைப்பு உண்டு. அதன் படைப்பின் வகையில் அதன் செயல்பாடுகள் உண்டு. இதில் எந்நாளும் சிட்டுக் குருவிகள் உயர பறக்க விரும்புவதில்லை. அதன் அமைப்பும் அது போல் இல்லை. அதனால் எப்பொழுதும் தன் நிலைக்கு மேல் செல்ல விரும்பாத ஒரு பறவையை தேவையில்லாமல் வேறு ஒரு பறவையுடன் ஒப்பிட்டு குறிப்பிடுவதே தவறான வழிமுறையாகும்.

சிட்டுக் குருவிகளை பெரு நகரத்தில் அதிகம் பார்க்க முடியவில்லையே? ஏன்? எளிமையான உதாரணம் கொண்டு இவற்றை தெரிந்துகொள்ளலாம். நாம் வாழும் வீட்டை திடீர் என்று இடிக்கபட்டால் என்ன செய்வோம்? வேறு வீடிற்க்கு  செல்வோம். அந்த வீடும் இடிக்கபட்டால்? இப்படி செல்லும் வீடெல்லாம் இடிக்கபட்டால் நாடோடியாக நகர்ந்து கொண்டே இருப்போம். நடுவில் ஒருவர் நம்மிடம் ஏன் உங்கள் பழைய இடத்தில் இருந்து இங்கு வந்தீர்கள் என்று கேட்டால், வீடு இடிக்கப்பட்ட செய்தியை சொல்வோம். இங்குதான் நமக்கும், சிட்டுக் குருவிக்கும் சிறு வித்தியாசம். நாம் வார்த்தைகளில் சொல்லிவிடுகிறோம், சிட்டுக் குருவிகள் சொல்லுவதில்லை நகர்ந்துகொண்டே இருக்கிறது.

சிட்டுக் குருவிகள் வீட்டின் உள்ளே வரும் அளவுக்கு முன்பு, நம் வீட்டின் அமைப்பு இருக்கும். ஓட்டு வீடு, தாழ்வாரம் மற்றும் நாலா பக்கமும் காற்று உள்ளே வர ஜன்னல் இருக்கும். இதன்  வழியாக சிட்டுக் குருவிகள் உள்ளே வரும். இன்று சென்னை போன்ற பெரு நகரத்தில் நீங்கள் எங்கு சென்று பார்த்தாலும் இந்த அமைப்பில் வீடு கிடையாது.

மிக மிக அடர்த்தியாக வீடுகள் மட்டுமே உண்டு. அங்கு மனிதர்கள் வாழ்வதே மிக கடினாமான நிலை என்பதால் சிட்டுக் குருவிகள் என்ன செய்யும்?. அதன் வாழிடமான நம் வீடுகள் அதற்கு தங்க ஏற்றாற்போல் இல்லாததால் சென்னை போன்ற மாநகரத்தில் இருந்து நகர்ந்து சென்று கொண்டே இருக்கிறது. அதன் மொழயில் அதன் வாழிடம் அழிக்கப்படுகிறது.

மற்றொரு காரணம் உணவு  கிடைப்பது தடைபடுதல். அதி காலையில் நம் வீட்டின் முன்பு மாவு கோலங்கள் போடுவோம். இவை சிறு பறவைகள், எறும்புகள் போன்றவற்றுக்கு உணவாகும். இன்று மாவு கோலம் முற்றிலும் நகரத்தில் இல்லை. நெல் மற்றும் தானியங்களை வீட்டின் மொட்டை மாடியில் காயவைப்போம் இவையும் நகரத்தில் வழக்கொழிந்துவிட்டது. பறவைகள் நீர் அருந்த இடங்களும் சென்னையில் குறைந்துவிட்டது. நகரத்தில் உருவாகும் அதிகபடியான வாகன சத்தத்தால், கூட்டில் இருக்கும் குட்டிகள் கொடுக்கும் குரல் தாய் பறவைக்கு கேட்பதும் இல்லை. 

சிட்டுக் குருவிகளின் வாழிடம் அழிப்பு, உணவு கிடைக்காதபோதல், நீர் நிலைகள் அழிப்பு, அதிக படியான வாகன இரைச்சல் போன்ற காரணங்களால் அவை நகரத்தில் இருந்து நகர்ந்து வெளியே சென்று விட்டது. அப்போ செல்போன் கதிர்வீச்சால் அழிந்து விட்டது என்று சொல்வது உண்மையா ?


இதுவரை இந்தியாவில் எந்த ஆய்வும் கதிர்வீச்சால் ஆபத்து என்று தெரிவிக்கவில்லை. பறவை ஆராய்ச்சியாளர்களும் கதிர்வீச்சு ஆபத்தை உறுதிபடுத்தவில்லை. IUCN என்ற பன்னாட்டு அமைப்பும் சிட்டுக் குருவிகள் எண்ணிக்கை குறைந்து விட்டது என்று தெரிவிக்கவில்லை. இன்றும் சிட்டுக் குருவிகளை LC என்று சொல்லப்படும் Least Concern என்ற அளவிலேயே IUCN வைத்துள்ளது. 

சிட்டுக் குருவிகள் தினம் எதற்கு:

தியடோர் பாஸ்கரன் சாரிடம் பேசியபொழுது- சிட்டு குருவிகள் மட்டும் இல்லை பெரும்பாலான பறவைகள் நகரத்தில் இருந்து நகர்ந்து விடுகிறது அதனால் சிட்டுகுருவியை மட்டும் தனித்து சொல்லக்கூடாது என்றார். சிட்டுக் குருவிக்கு என்று ஏன் தினம் என்று கேட்டுவிட்டு சரி அப்படியாக பறவைகளை பற்றி செயல்படுகிறார்களே என்று சொல்லலாம் என்றார்.

நகரத்தில் மீண்டும் வரவைக்க இந்த தினத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தபடுகிறது. சிட்டுக் குருவிகளை மீண்டும் வரவைப்பதற்கு, அவை இனப்பெருக்க செய்வதற்கு தேவையான கூடு இன்று விற்கபடுகிறது. அவற்றை நீங்கள் உங்கள் வீட்டில் தொங்கவிடலாம். அல்லது அட்டைபெட்டி ஒன்றில் குருவி வந்து போகும் அளவு ஓட்டை போட்டு, வீட்டின் முன்பு, பூனை போன்ற உயிரிணங்களுக்கு எட்டாதவாறு தொங்கவிடுங்கள். 

ஒரு பாத்தரத்தில் நீர் மாடியில் வைத்துவிடுங்கள். மற்றும் சிறு தட்டில் அரசி, தானியங்கள் போன்றவற்றை கொட்டி வைத்தால் சிட்டுக் குருவிகளை நகரத்திலும் வரவைக்கலாம். இவையெல்லாம் செய்தால் உடனே வருமா என்றால்? உடனே வராது என்று சொல்லலாம். வருவதற்கு சில மாதங்கள் ஆகும். பறவைகளுக்கு இங்கு சென்றால் ஆபத்து இல்லை என்று தெரிந்து அருகில் வருவதற்கு சில மாதங்கள் ஆகும் என்பதால் பொறுமையாக இவற்றை செய்து வரவேண்டும்.

ஆரம்பத்தில் நிங்கள் வைக்கும் நீர், உணவு போன்றவற்றை சாப்பிட வேறு சில பறவைகளும் வர தொடங்கும். அவற்றை விரட்டாதிர்கள். இவற்றுடனே தான் நாம் சிட்டுக் குருவிகளையும் வரவைக்கமுடியும். இன்று நிறைய பேர் சிட்டுக் குருவிகளை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்திவருகிறார்கள். அப்படி ஒரு விழிப்புணர்வு ஒன்றை மெட்ராஸ் இயற்கை சங்கம் இந்த மாதம் இருபத்து ஐந்தாம் தேதி சென்னை பெசன்ட் நகர் பீச்சில் மாபெரும் விழிப்புணர்வு ஏற்படுத்தபோகிறது. உங்கள் குழுந்தைகள் உடன் கலந்துகொள்ளுங்கள்.

வாருங்கள் சிட்டுக் குருவிகளுடம் விளையாடுவோம்....

Photos- Dr. Masilamani
-    செழியன்.ஜா


lapwing2010@gmail.com

 
.

2 comments:

  1. உண்மைதான் செழியன் ஐயா, நானும் ஆரம்பத்தில் சென்னை மற்றும் இங்கே என் சொந்த ஊர் தாராபுரதில் அரிசி தானியம் வைத்திருக்கிறேன் ஆனால் முதலில் வந்தது அழுக்கு வண்ணான் குருவி , ஒரு சில மாதங்கள் கழித்தே சிட்டு குருவி வந்தது. இப்போது ஒவ்வொரு நாள் காலை மற்றும் மாலை 30 க்கும் மேற்பட்ட சிட்டு குருவிகள் வருகிறது, மட்டற்ற பறவைகளுடன் சேர்ந்து. தினமும் இவை குளிப்பதை பார்க்க அவ்வளவு அழகு. :-)

    ReplyDelete
  2. நல்ல பதிவு. ஆனால் சிட்டுக் குருவி இனம் அழிந்ததற்கு செல்போன் கோபுரங்கள் காரணம் என்பது நிரூபிக்கப்படாதது. புடைத்தல், மற்றும் புழுக்கள் அற்ற தானியங்கள், கூடுகட்ட ஏதுவான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இல்லாமை, நகரமயமாக்கல் மற்றும் இன்ன பிற காரணங்களினால் அவற்றின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டதே அவற்றின் எண்ணிக்கை குறைய காரணம். இன்றும் நகரின் பல பகுதிகளில் அவற்றின் இருப்பை உணர முடிகிறது.

    ReplyDelete