மணப்பாக்கம் நீர் |
புதிய தொலைக்காட்சி பெட்டி வாங்கினால் சன் டிவி கனக்க்ஷன்
வாங்கியாச்சா என்று ஊர்களில் கேட்பார்கள், கேபிள் இணைப்பு கொடுத்தாச்சா என்பதை
இப்படி கேட்பது வழக்கம் அதே போல் தி.நகர் என்றால் சரவணா ஸ்டோர் போனிற்களா, அடையார்
என்றால் ஆலமரம் மறந்து ஆனந்தபவன் நினைவுக்கு வரும் அளவுக்கு நம் நினைவுகளை
விளம்பரங்களே ஆக்கரமித்து கொண்டுள்ளது. இதில் அடையார் ஆனந்தபவனை தாண்டி அங்கு
ஓடும் நதியை பற்றி ஒருவர் படங்கள் வழியாக பேசியிருந்தால் அதை பார்க்காமல் இருக்க
முடியுமா?
ஓவிய கண்காட்சி நடக்கும் இடம் தெரிந்து- ஜெமினி
பாலத்தில் இருந்து ஆயிரம் விளக்கு பகுதியில் இறங்கினால், வரும் முதல் இடது பக்கம்
திரும்பி நேராக சென்று கொண்டே இருந்தேன் ராட் லேன்ட் 5வது தெருவிற்க்கு சென்று கண்காட்சி நடக்கும் இடத்தின் (joethe institute) காவலரிடம் கேட்டால்,
இங்கு அது போல் எந்த கண்காட்சியும் நடக்கவில்லை என்ற பதில், என்னை சிறிது யோசிக்க
வைத்தது அதை பார்த்த காவலர், எதற்கும் உள்ளே சென்று வரவேற்பறையில் கேட்டுபாருங்கள்
என்று முடிவாக சொல்லிவிட்டார்.
EXPO IMAGE |
வரவேற்பறையில் இரண்டு பேர் மற்றும் சில வெளிநபர்கள் அங்கு இருந்த
நாற்காலியில் அமர்ந்து இருந்தார்கள். இருவரில் ஒருவரிடம் கண்காட்சி என்றேன் அவர்
பக்கத்தில் இருந்த படத்தை காண்பித்து, பாருங்கள் என்றார் அட வரவேற்பறையில்
கண்காட்சியா என்று ஆச்சரியம்! மொத்தம்
பத்து படங்கள் அதில் சில படங்கள் வெளி நபர்கள் அமர்ந்து இருக்கும் நாற்காலியின் பின்
புறம் மாட்டியிருந்தது. கிட்டே சென்று பார்த்தால் இவன் ஏன் நம்மை பார்கிறான் என்று
அவர்கள் என்னை பார்கிறார்கள். இங்கு
கண்காட்சி நடப்பதே அவர்களுக்கு தெரியவில்லை, காவலற்கே தெரியவில்லை
என்ற நினைப்பு வந்து சென்றதால் இவர்களை பற்றி யோசிக்காமல் படங்களை உற்று பார்க்க
ஆரம்பித்தேன்.
இன்றைய அடையார் நதியில் ஒரு சொட்டு தண்ணிர் கூட குடிக்க கிடைக்காது
என்ற நிஜ நிலவரத்தை பத்து படங்கள் வழியாக URBAN WATERS என்ற தலைப்பில் பார்க்க முடிகிறது. அருண் கிருஷ்ணமூர்த்தி (EFI- Environmental
Foundation of India)
இந்த படங்கள் வழியாக பேசுபவர். மாசு, கழிவு நீர்
கொண்ட, ஆறு, ஏரி, குளம் போன்ற பகுதிகளை மறுசீர் செய்து தூய நீர் பகுதிகளாக
மாற்றுவதில் முனைப்பாக செயல்படுகிறார் இவரின் அமைப்பிற்க்கு நிறைய தன்னார்வளர்கள் துணை
நிற்கிறார்கள்..
அவர்களை பற்றி மேலும் தெரிந்துகொள்ள
https://www.efivolunteer.com/
2007
வருடம் உருவாகிய
இந்திய சுற்றுச்சூழல் அமைப்பு (EFI) இதுவரை 19-குளங்கள்,
6-ஏரிகள் என்று
முழுமையாக சரிசெய்து உள்ளது மிகவும் போற்றதக்க செயலாகும். தற்போது 54 நீர் நிலை பகுதிகளை சரிசெய்து
கொண்டிருகிறார்கள் எந்த வித லாபத்தையும் எதிர்பார்க்காமல் எதிர்கால மனிதர்களின்
நம்பிக்கை என்று இவர்களை சொல்லலாம்.
சென்னையில் மொத்தம் முக்கிய இரண்டு நதிகள் ஓடுகிறது. கூவம் நதி,
அடையார் நதி பெரும்பாலனவர்கள் அடையார் நதியையும் கூவம் நதியென்றே
நினைத்துகொண்டிருகிறார்கள். 2015வருடம் செம்பரம்பாக்கம் எல்லோருக்கும்
நினைவில் இருக்கும். நிமிடத்திற்கு ஒருமுறை செய்தியில் அடிப்பட ஏரிதான்
செம்பரம்பாக்கம் ஆகும். இவற்றை திறந்து விட்டதால் தான் சென்னை, நீரில் மிதந்தது.
அந்த ஏரியில் இருந்து வரும் நீர், கொளப்பாக்கம், மணப்பாக்கம்(MIOT மருத்துவமனை), சைதாப்பேட்டை பாலம் வழியாக,
அடையார் கழிமுகதிற்கு வந்து கடைசியில் வங்காளவிரிகுடாவில் கலக்கிறது.
அடையார் கழிமுகத்தை பற்றி தெரிந்து கொள்ளாமல் அடுத்து செல்வது தெய்வ
குற்றமாகிவிடும். பறவையார்களுக்கு அந்தளவுக்கு முக்கிய இடம் அடையார் கழிமுகம். சுற்றுச்சூழல்
எழுத்தாளர்கள் அடையார் கழிமுகத்தில் தங்கள் நாட்களை செலுத்தாமல் இருந்திருக்க வாய்ப்பில்லை.
தியடோர் பாஸ்கரன் சார், சாந்தாராம் சார் இங்கு நிறைய பறவைகளை பார்த்து நாட்களை
கடந்திருகிறார்கள் அவற்றை தங்கள் எழுத்தில் பதிவும் செய்திருகிறார்கள். நிறைய
பறவையாளர்கள் சென்னையில் இந்த இடத்திற்கு வராமல் சென்றதில்லை என்றும் சொல்லலாம்.
நீங்கள் சென்னையில் இருந்தால் மாலை
ஆறுமணிக்கு அடையார் பாலத்திற்கு வந்து நில்லுங்கள் 4000 பழந்தின்னி வௌவால்கள் பறந்து உங்கள் அருகில் வருவதை பார்க்க
முடியும். நூறு முறைக்கு மேல் பார்த்துள்ளேன்.
EXPO IMAGE |
நிறைய தடவை இங்கு பறவைகளை பார்த்திருக்கிறேன் மற்றும் வார
இறுதியில் நிறை பறவையாளர்கள் இங்கு வருவதையும் பார்த்துள்ளேன் ஆனால் இப்பொழுது
அதற்கு வாய்பில்லாமல் போனது. பழைய பாலத்தின் இரண்டு பக்கமும் சுவர் எழுப்பி கதவு
வைத்து பூட்டி விட்டார்கள். (தேவையில்லாத சம்பவங்கள் நடந்திருக்கலாம் என்று
நினைக்கிறன்) அப்படியே இப்பொழுது சென்றாலும்
நாற்றம் அதிகமாகவே உள்ளது. அந்த வழியாக செல்லும் பெரும்பாலான மனிதர்கள்
நின்று பேண்ட் ஜிப்பை திறந்து விடுகிறார்கள். நீங்கள் பேருந்தில் செல்லும்பொழுதும்
இந்த நறுமனத்தை நுகரலாம்.
சரி இந்த கழிவு நீர் கலக்கும் இடமான கடற்கரை அருகில் சென்று
பார்ப்போம் என்று சன் டிவி அலுவலகம் பின் புறம் சென்றால் இரும்பு கதவு போட்டு
இரண்டு காவலர்கள் இருந்தார்கள் அடடா இந்த வெட்டவெளிக்கு எதற்கு காவலர்கள் என்ற
ஆச்சரியத்தில் அவர்களிடமே கேட்டேன்?
அடையார் பூங்காவின் தொடர்ச்சி அதனால் பாதுகாப்பு என்று சொன்னார்கள்.
சரி என்று உள்ளே சென்று சுற்றியதில் கேராளாவில், படகில் வீட்டிற்க்கு செல்வது போல்
சில மனிதர்கள் கால்வாய் நீரில் படகில் செல்கிறார்கள் அனைவரும் வேறு மாநிலத்தவர்கள்
என்பதை முகத்தை பார்த்து தெரிந்துவிட்டது. ஒரு சொட்டு தூய நீர் கூட இல்லை என்பதை கடற்கரை வரை சென்று
தெரிந்துகொண்டேன்.
எங்கு மாசுபடுகிறது ?
ஒரு முறை கொளப்பாக்கம் உள்வழியாக சென்று நதியை பார்த்ததில் நீரில் சாய
கழிவுகள் கலந்து ஓடுவதையும் அதிலேயே மனிதர்கள் தங்கள் உடமைகளை துவைப்பதையும்
பார்க்கமுடிந்தது. மணப்பாக்கம் பாலத்தில் இருந்து நதியை பார்க்கும்பொழுது தெளிந்து நீர்
இல்லாமல் அடர் கருப்பு நிறத்தில் காணப்படுகிறது. MIOT மருத்துவமனை அருகில் பார்த்தால் அங்கு
நீர் ஒரு கால்வாய் போன்று ஓடி கொண்டிருகிறது. நதியின் நடு பகுதியில் வேறு எங்கோ கட்டடம் கட்டுவதற்கு கம்பி
வேலைபாடுகள் நடைபெறுவதை நீங்கள் அங்கு சென்று பார்க்கும்பொழுது தெரிந்துகொள்ளலாம். ஆக சென்னையின் அணைத்து இடத்திலும் நீர் மாசுபடும் அளவுக்கு மனிதர்கள் நடவடிக்கை உள்ளது.
அடையார் நீர் |
இந்த வருடம் நிறைய தடவை அடையார் பலத்தில் இருந்து பார்த்தபொழுது காணப்பட்ட
பறவைகளை
கருவால் மூக்கன்-Black
Tailed Godwit,
பவளக்கால் உள்ளான்-Black
Winged Stilt,
சிற்று உள்ளான்-Little
Stint,
சாதா உள்ளான்-Common
Sandpiper,
பொரி உள்ளான்-Wood
Sandpiper
EXPO IMAGE |
போன்ற பறவைகளை அதிக எண்ணிக்கையில் பார்க்க முடிந்தது. இங்கும் நீர்
மிகவும் மோசமான நிலையிலேயே காணப்பட்டது. பறவைகள் இந்த கழிவு நீரில் வாழ பழகிவிட்டதா
என்ற சந்தேகம் இப்பொழுதும் வருகிறது.
அடையார் நதியில் ஓடும் நீர் ஒரு ஏரியில் இருந்து மட்டும் வருவதில்லை. காஞ்சிபுரம்
மாவட்டத்தில் இருக்கும் செம்பரம்பாக்கம் ஏரி உபநீர், போரூர் ஏரியின் உபநீர்,
சோமங்கலம் ஏரி உபநீர், கூடுவான்சேரி ஏரி உபநீர்
என்று இன்னும் நிறைய ஏரியில் இருந்து வரும் உபரி நீர், அடையார் நதி வழியாக
சென்னை கடலில், கழிவு நீராக கலப்பதற்கா ஓடுகிறது ?
ஆக கொளப்பாக்கம், மணப்பாக்கம், சைதாப்பேட்டை, அடையார், கடல் அருகில்
என்று அணைத்து இடத்திற்கும் அருகில் சென்று பார்த்துவிட்டேன் கழிவு நீர் சூழ்ந்த
பகுதியிலேயே இந்த தலைமுறை மக்கள், சென்னையில் வாழவேண்டும் என்று மட்டும் தெரிந்து
விட்டது. அடுத்த தலைமுறைக்கு, அந்த அவசியமே இல்லை காரணம் இந்த நதி மேலேயே
அடுக்குமாடி கட்டடம் வந்துவிடும் அதனால் அவர்கள், இந்த வீட்டின் கிழேதான் ஒரு நதி
ஓடியது என்று தெரிந்து கொள்வார்கள்.
-செழியன்
lapwing2010@gmail.com
அடையார் ஆற்றின் தற்போதைய நிலையை தெளிவாக சொல்லி விட்டீர்கள். நன்றி செழியன்
ReplyDelete