Thursday, 19 March 2015

அரளியை அறிவோம்



இந்தியப் பண்பாட்டோடு நெருங்கிய தொடர்பு கொண்ட ஒரு தாவரம் அரளி ஆகும். மூன்று தேவியர்களில் பார்வதியின் அம்சமாக விளங்கும் சக்திக்கு அரளிப்பூ உகந்தது ஆகும். பெரும்பாலான திருக்கோயில் நந்தவனங்களில் வளர்க்கப்படும் தாவரங்களில் அரளி கட்டாயம் இடம்பெற்றிருக்கும்.  தெய்வங்களுக்கு சார்த்தப்படும் பூமாலைகளில் அரளி முக்கிய இடம் பெறுகிறது. பூஜைக்குரிய மலராகக் கருதப்படும் அரளி அழகுக்காகவும் வீட்டுத்தோட்டங்களிலும், ஆற்றோரங்களிலும் வளர்க்கப்படுகிறது.  ஆனால் இது ஒரு நஞ்சுள்ள செடியாகும். இது ஆங்கிலத்தில் ஔலியாண்டர் என்றும், தாவரவியலில் நீரியம் ஔலியாண்டர் என்றும் அழைக்கப்படுகிறது. இது அப்போசயனேசி குடும்பத்தைச் சேர்ந்த இருவித்திலை தாவரம் ஆகும். இதன் தாயகம் தென்மேற்கு ஆசியா, மொரிடேனியா, மொராக்கோ, போர்ச்சுகல் அல்லது மத்திய தரைக் கடல் பகுதியாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது. இது வளமற்ற வறண்ட நிலத்திலும் செழித்து வளரக்கூடியது ஆகும். இதன் சிறப்பு இது ஹிரோஷிமா நகரின் அதிகாரப்பூர்வமான சின்னமாக உள்ளது. 1945ல் ஹிரோஷிமா அமெரிக்க அணுகுண்டு தாக்குதலால் முற்றிலுமாக அழிந்தபோது முதல்முதலாக வளர்ந்து, பூத்தது அரளியே ஆகும். 
 
இந்த தாவரத்தின் வேர், வேர்ப்பட்டை, தண்டுப்பட்டை, பூ, விதை, இலை என்று பல பாகங்களும் விஷத்தன்மை உடையது. இதில் இருக்கும் நஞ்சு பச்சையாக மட்டும் இல்லாமல் இந்த பாகங்களை உலர்த்தி காயவைத்த பிறகும் நீங்குவது இல்லை. வேர், வேர்ப்பட்டை மற்றும் விதைகளில் நீரியோடெரின் , கெராபின் என்கிற விஷத்தன்மையுடைய கக்லைகோசைடுகள் எனப்படும் வேதிப்பொருள்கள் உள்ளன.  இலைகளில் இருந்து நீரியோடின், ஔலியாண்டிரின், ஔலியாண்டிரிஜெனின் ஆகிய கிலைகோசைடுகள் பெறப்படுகின்றன. இந்த செடியின் பகுதிகளின் சாறை உட்கொண்டால் குடல், இரைப்பை, இதயம் ஆகிய உடல் பகுதிகளை பாதிக்கிறது. விழுங்க முடியாமல் போவது, உமிழ்நீர் அதிகமாவது, வயிற்றுவலி, குமட்டல், வாந்தி போன்ற பாதிப்புக்கான அறிகுறிகள் முதலில் ஏற்படும். பிறகு இதயம் பாதிக்கப்படும். நாடிநரம்புகள் பாதிக்கப்படும். சுவாசிப்பது கடினமாகும். இதனால் உடலின் சில பாகங்கள் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு உடல் விறைத்து போய்விடும். அடுத்த நிலையில் மைய நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டு ஆழ்ந்த மயக்கநிலை ஏற்பட்டு உயிரிழப்பும் நேரலாம்.

உடல் எரிச்சல், கண் எரிச்சல், ஒவ்வாமை போன்ற அறிகுறிகளும் ஏற்படும். 16கிராம் வேர் அல்லது வேர்ப்பட்டை உயிரை போக்கும் வலிமை கொண்டதாகும். கவனிக்கப்படாவிட்டால் 24மணிநேரத்தில் இருந்து 36மணிநேரத்துக்குள் உயிரிழப்பு நேரிடும். ஔலியாண்டிரின், ஔலியாண்ட்டிரிஜெனின், கெராபின் போன்ற நச்சுத்தன்மையுடைய வேதிப்பொருள்கள் கார்டியாக் க்லைகோசைடுகள் என்ற இதயத்தைத் தாக்கும் நச்சுப்பொருள்கள் ஆகும். இதனால் இவை உடலின் சில முக்கியமான செயல்பாடுகளுக்கு கேடு விளைவிக்கின்றன. இதில் முக்கியமானது சோடியம் பொட்டாசியம் ஏடிபிஸ (ATPS) என்ற நொதி ஆகியவற்றை செயல்படவிடாமல் தடுப்பது ஆகும். இந்த ஏடிபிஸ நொதி சோடியம் பொட்டாசியம் ஆகியவை செல்களின் உள்புற வெளிப்புற பரிமாற்றத்திற்கு உதவும் நொதி ஆகும். நரம்புகளில் மின்னியக்கசைகைகள் (electric signals) இந்த சோடியம் பொட்டாசியம் பரிமாற்றம் நிகழ்ந்தால் தான் நடக்கும். அரளியின் இதய நச்சுப்பொருள்களான க்லைகோசைடுகள் இந்த ஏ.டி.பிஸ. நொதியில் இருக்கும் சில அமினோமில புரத மூலக்கூறுகளுடன் தம்மைப் பிணைத்துக் கொண்டு சோடியம் பொட்டாசியம் பரிமாற்ற நிகழ்வை செயல்பட முடியாமல் தடுக்கின்றன. சோடியம் மற்ற செல் புரதங்கள் இடம்பெயரக் காரணமாக இருக்கிறது.  

சோடியம் கால்சியம் பரிவர்த்தனையில் கார்டியோமையோசைட்டுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.  தசை சுருங்குவதற்கு செல்லின் வெளிப்புற திரவத்தில் இருக்கும் கால்சியம் உள்ளே பாய்வது மிக முக்கியமானதாகும். சுருங்குதல் முடிந்தவுடன் கால்சியம் இயல்பாகவே வெளியேற்றப்பட்டு சோடியத்துடன் பரிமாற்றம் நடக்கும். ஆனால் சோடியத்தில் உள்ள க்ரேடியண்ட் குறையும்போது கால்சியம் கார்டியோமையோசைட்டில் அளவுக்கு அதிகமாக சேர்க்கப்படுகிறது. இதனால் தசைநார்கள் விரிவடைய முடியாமல் இதயத்துடிப்பு சிரமப்பட்டு ஆக்சிஜனை முக்கியத் திசுக்களுக்கு அனுப்ப முடியாமல் போய்விடுகிறது. 

இத்தகைய இதய பாதிப்பை அரளியின் நச்சுத்தன்மையுடைய பொருள்கள் ஏற்படுத்தி உயிரிழப்பையே ஏற்படுத்திவிடுகிறது. உடனே மருத்துவ உதவி செய்ய வேண்டும். முதலுதவியாக நோயாளியை எப்படியாவது வாந்தி எடுக்கச் செய்தால் விஷம் உடலில் சேர்வதை ஔரளவு தடுக்கலாம்.  அப்படியும் உணவுப்பாதையில் மிஞ்சும் நஞ்சை கரித்தூளை உட்கொள்ளச் செய்வதன் மூலம் அது மீதம் இருக்கும் விஷத்தை உறிஞ்சி எடுத்துவிடும். டிகாக்சின் இம்யூன் பேப் என்ற சிகிச்சை முறையே அரளியின் நஞ்சை குணப்படுத்த சிறந்தவழி ஆகும். 

                                              -சிதம்பரம் ரவிச்சந்திரன்

                                                                                  


                                     




No comments:

Post a Comment