Sunday 20 June 2021

சிடார் வேக்ஸ்விங் பறவை

 


Cedar Waxwing
Cedar Waxwing

வசந்த காலத்தில் தென் கனடாவிலும் வட அமெரிக்காவின் வடக்கு மாநிலங்களிலும் இனப்பெருக்கம் செய்யும் சிடார் வேக்ஸ்விங் பறவை, குளிர்காலத்தில் வட அமெரிக்காவின் தெற்கு மாநிலங்களுக்கும் சென்டரல் அமெரிக்காவிற்கும் வலசை செல்கிறது. 

இதன் முக்கிய இரை, செர்ரி பழ வகைகளானதால் டிசம்பர் முதல் மார்ச் வரை கலிபோர்னியாவில் பூங்காவனங்களிலும்(parks, golf courses), பழத் தோட்டங்களிலும்(orchards) சிறு கூட்டமாகவோ அல்லது நூற்றிக்கும் மேற்பட்ட பெருங்கூட்டமாகவோ காணப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் குளிரைப் பொருட்படுத்தாமல் இந்த அழகிய பறவையைக் காணச் செல்ல நான் தயங்குவதில்லை. 

Friday 1 January 2021

குளிர்காலத்தில் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதிக்கு வரும் சிட்டுக் குருவிகள் (Sparrows)

 

White-crowned sparrow
White-crowned sparrow 

ஆண்டுதோறும் குளிர்காலம் ஆரம்பமாகும் போது சில வகைச் சிட்டுகள் தவறாமல் கலிபோர்னியா மாநிலத்திற்கு வலசை வருகின்றன. நாங்கள் வாழும் சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதிக்கு அதிக எண்ணிக்கையில் வரும் சிட்டுகள் White-crowned Sparrow(Zonotrichia leucophrys)வும்,  Golden-crowned  Sparrow(Zonotrichia atricapilla)வுமாகும்.

வட அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா மாநிலத்தையும் தென் கனடாப் பகுதியையும் பிறப்பிடமாகக் கொண்டுள்ள இந்தச் சிட்டுகள், குளிர்காலம் நெருங்கும் போது தெற்கு நோக்கி வலசை வருகின்றன. 

இவற்றை செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல்  மாதம் வரை கலிபோர்னியாவில் பூங்காவனங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் புதர்க் காடுகளிலும் புல் வெளிகளிலும் காணமுடியும். இந்தப் பறவைகள் பெரும் பான்மையான நேரம் நிலத்தை அல்லது இலை,சருகுகளைக் கிளறி விதைகளை உண்கின்றன. தளிர் இலைகளையும் பூக்களையும் விருப்பமாக உண்கின்றன. சிறிது ஆரவாரம் கேட்டாலும் ஒன்றாகப் பறந்தோ அல்லது புதருக்குள் மறைந்தோ போய் விடுகின்றன.

கோடைக்காலத்தில் புழு, பூச்சிகளை உண்கின்றன.

பொதுவாக White-crowned Sparrowவும் Golden-crowned Sparrowவும் கூட்டாகச் சேர்ந்து இரை தேடுவதைக் காணலாம்.

இந்தச் சிட்டுகளை எளிதாக இனம் கண்டு கொள்ள முடியும்.