Sunday 5 July 2020

ஒரு பறவையின் கால்களுக்கு இத்தனைப் பலமா? - Secretary Bird



2017ஆம் ஆண்டு, கென்யாவிலுள்ள மாசா மாரா தேசிய பூங்காவிற்குச் (Massa Mara National Park) சென்ற போது, செக்கிரட்டரி பறவையைக் காணச் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் மிடுக்கான நடை, அழகிய தோற்றம், பாம்பை விழுங்கின வேகம் மனதிலும், புகைப்படத்திலும் பதிந்து விட்டன. இந்தப் பறவையின் இரை தேடும் திறமையைக் கேட்ட போது மிகவும் வியப்பாக இருந்தது.

ஆப்பிரிக்க நாடுகளில், புல் வெளிகளிலும், வறண்ட நிலப்பகுதிகளிலும் காணப்படும் செக்கிரட்டரி பறவை, பருந்துகள், கழுகுகள் இனத்தைச் சார்ந்த போதிலும், பருந்துகளைப் போல் வானில் பறந்து இரை தேடாமல், நிலத்தில் நடமாடி, இரையைப் பிடிக்கும் தன்மை வாய்ந்தது.  உயரமாகப் பறக்கத் திறமையுடையதாக இருந்த போதிலும், பகல் முழுவதும் நடந்து இரை தேடிய பின், மாலை நேரத்தில் மர உச்சிகளில் அடைகிறது. வலசை போவதில்லை.
           
செக்கிரட்டரி பறவையின், தலைப்பகுதி கழுகைப் போலவும், வளைந்த அலகையும் உடையது. உருவத்தில், பருந்து, கழுகு இனங்களை விட மிகவும் பெரியது. கால்கள் நீண்டு மெலிந்திருக்கும். நன்கு வளர்ச்சியடைந்த செக்கிரட்டரி பறவை, நான்கு அடி உயரமாகவும், ஐந்து முதல் ஒன்பது இராத்தல் எடை பருமனாகவும் இருக்கும். ஆண், பெண் பறவைகள் தோற்றத்தில் ஒன்று போலிருக்கும். இவை இணை பிரியாதவை. அக்கேசியா(Acacia) போன்ற உயர்ந்த மரங்களில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கிறது.