Thursday 21 April 2022

கோடையில் பறவைகள் அதிகம் இருக்கிறதா?

Indian Roller
பணங்காடை 

பறவைகள்  பார்க்க அதிக அளவில் மக்கள் ஆர்வமாக வருகிறார்கள். 10 ஆண்டுகள் முன்பு இருந்த அளவை ஒப்பிட்டால் இப்பொழுது பல  மடங்கு உயர்ந்து உள்ளது. எந்த நேரமும் சென்னை பெரும்பாக்கம் சதுப்புநிலத்தில் சிலர் பறவைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.  

குளிர்கால தொடக்கத்தில் தவறாமல் ஒரு செய்தி நாளிதழ்களில் இடம்பெறும். வெளிநாட்டுப் பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தந்து உள்ளன. பார்வையாளர் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதே ஆகும். 

பறவைகள் குளிர்காலத்தில் மட்டுமே மக்களுக்கு நினைவுக்கு வரும் அளவு நிலைமை இருந்தது. அதை ஒட்டியே பல பறவைகள் கணக்கெடுப்பு உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதனால் குளிர்காலத்தில் பறவைகள் நிலைமை தெரிந்தது. ஆனால்  கோடையில் பறவைகள் நிலை என்ன என்று சரியாகத் தெரியவில்லை. கணக்கெடுப்பும் நடைபெறுவதில்லை. 

கோடைக் காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்த பறவைகள் திரும்பி அதன் நாட்டிற்கு சென்றுவிட்டதா? அல்லது அதில் சில பறவைகள் இங்கேயே தங்கிவிட்டதா? 

உள்ளூர் பறவைகள் நிலை என்ன? கோடையில் நீர் நிலைகள் வற்றி விடுவதால் நீர்புலப் பறவைகள் நிலை என்ன? போன்ற பல கேள்விகள் தோன்றியதால் கோடையில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தி கோடை பறவைகள் நிலை அறிந்து கொள்ளலாம் என்று காக்கைக் கூடு, உயிர் இணைத்து நடத்திய கணக்கெடுப்பில் பறவைகளின் நிலை அறிந்து கொள்ள முடிந்தது. 

கொரோனா போன்ற பெரும் தொற்று காலமானதால் வீடு, தோட்டம், சுற்றுப்புறம் மட்டுமே பறவைகளைப் பார்த்துப் பதிவு செய்யுமாறு கேட்டு இருந்தோம். நிறையப் பறவை ஆர்வலர்களும் பதிவு செய்து இருந்தனர். 

தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களிலிருந்து 31 மாவட்ட பறவை ஆர்வலர்கள் கலந்து கொண்டு பட்டியல் அனுப்பி இருந்தனர். மொத்தம் 271 பட்டியல் வந்து உள்ளது. மே மாதம் 30 மற்றும் 31, 2021 தேதி கணக்கெடுப்பு நடைபெற்றது. 

Sunday 17 April 2022

ஜவ்வாது மலையில் - பறவை ஆர்வலர்கள் சந்திப்பு-2022

 


துடுப்பு வால் கரிச்சான் பறவை, வேதிவால் குருவி இரண்டின் வாலும் இரண்டிற்கும் அழகு கொடுக்கக் கூடியவை. இந்த இரண்டு பறவைகளைப் பார்ப்பவர்கள் ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் நிற்பதை பார்க்கலாம். அப்படித்தான்  ஜவ்வாது மலையில் பலருக்கும் ஏற்பட்டது.  

அடர்ந்து காட்டில் மட்டுமே பார்க்க முடிகிற துடுப்பு வால் கரிச்சான், ஊர்ப் புறத்தில் பார்க்க முடிகிற கரிச்சான் பறவைக்குச் சொந்தம். 

கரிச்சான் சிறிய பறவைதான்  ஆனால் பெரிய வல்லூறு போன்ற இரைகொல்லி பறவைகளைத் துரத்தும் வல்லமை உண்டு. அந்த தைரியத்தில்  மனிதர்களைக் கண்டாலும் பறந்து ஒளிவதில்லை. மலையில் பார்த்த துடுப்பு வால் கரிச்சான் பறவையும் எங்களைக் கண்டு மறைந்து கொள்ளவில்லை.. பறவைகள் பார்ப்பது சிறந்த பொழுதுபோக்கு என்றாலும் பறவைகள் குறித்துப் பேசுவது, விவாதிப்பது, பகிர்ந்து கொள்வதும்  பறவை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் நிகழ்வு ஆகும். இவ்வளவும் இரண்டு நாட்கள் முழுவதும் செய்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் நடந்தது காக்கைக் கூடு ஒருங்கிணைத்த “பறவை ஆர்வலர்கள் சந்திப்பு-2022 மார்ச் 26-27”.