Thursday, 21 April 2022

கோடையில் பறவைகள் அதிகம் இருக்கிறதா?

Indian Roller
பணங்காடை 

பறவைகள்  பார்க்க அதிக அளவில் மக்கள் ஆர்வமாக வருகிறார்கள். 10 ஆண்டுகள் முன்பு இருந்த அளவை ஒப்பிட்டால் இப்பொழுது பல  மடங்கு உயர்ந்து உள்ளது. எந்த நேரமும் சென்னை பெரும்பாக்கம் சதுப்புநிலத்தில் சிலர் பறவைகளைப் பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.  

குளிர்கால தொடக்கத்தில் தவறாமல் ஒரு செய்தி நாளிதழ்களில் இடம்பெறும். வெளிநாட்டுப் பறவைகள் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு வருகை தந்து உள்ளன. பார்வையாளர் செல்ல அனுமதிக்கப்படுகிறார்கள் என்பதே ஆகும். 

பறவைகள் குளிர்காலத்தில் மட்டுமே மக்களுக்கு நினைவுக்கு வரும் அளவு நிலைமை இருந்தது. அதை ஒட்டியே பல பறவைகள் கணக்கெடுப்பு உலகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. அதனால் குளிர்காலத்தில் பறவைகள் நிலைமை தெரிந்தது. ஆனால்  கோடையில் பறவைகள் நிலை என்ன என்று சரியாகத் தெரியவில்லை. கணக்கெடுப்பும் நடைபெறுவதில்லை. 

கோடைக் காலத்தில் வெளிநாடுகளிலிருந்து வந்த பறவைகள் திரும்பி அதன் நாட்டிற்கு சென்றுவிட்டதா? அல்லது அதில் சில பறவைகள் இங்கேயே தங்கிவிட்டதா? 

உள்ளூர் பறவைகள் நிலை என்ன? கோடையில் நீர் நிலைகள் வற்றி விடுவதால் நீர்புலப் பறவைகள் நிலை என்ன? போன்ற பல கேள்விகள் தோன்றியதால் கோடையில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தி கோடை பறவைகள் நிலை அறிந்து கொள்ளலாம் என்று காக்கைக் கூடு, உயிர் இணைத்து நடத்திய கணக்கெடுப்பில் பறவைகளின் நிலை அறிந்து கொள்ள முடிந்தது. 

கொரோனா போன்ற பெரும் தொற்று காலமானதால் வீடு, தோட்டம், சுற்றுப்புறம் மட்டுமே பறவைகளைப் பார்த்துப் பதிவு செய்யுமாறு கேட்டு இருந்தோம். நிறையப் பறவை ஆர்வலர்களும் பதிவு செய்து இருந்தனர். 

தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களிலிருந்து 31 மாவட்ட பறவை ஆர்வலர்கள் கலந்து கொண்டு பட்டியல் அனுப்பி இருந்தனர். மொத்தம் 271 பட்டியல் வந்து உள்ளது. மே மாதம் 30 மற்றும் 31, 2021 தேதி கணக்கெடுப்பு நடைபெற்றது. 

அதிக தூரம் வெளியே செல்லாமல் பதிவு செய்ததில் மொத்தம் 99 பறவை வகைகளைப் பார்த்து பதிவு செய்து உள்ளனர். அதிக எண்ணிக்கையில் பார்க்கப்பட்ட பறவைகளாக காகம், சிட்டுக் குருவி, பச்சைக் கிளி ஆகும். 3000 எண்ணிக்கைக்கு மேல் காகமும், 2000 எண்ணிக்கைக்கு மேல் பச்சைக் கிளியும், 1500 எண்ணிக்கைக்கு மேல் சிட்டுக் குருவிகளும் இடம் பெற்று உள்ளன. 

சென்னை, திருப்பூர், ராமநாதபுரம் மற்றும் விருதுநகரில் அதிக அளவில் சிட்டுக் குருவி வாழ்கிறது.  சமீபமாகச் சிட்டுக் குருவிகள் அழிந்து வருகிறது என்ற கேள்விக்கு இந்த கோடை பறவை கணக்கெடுப்பு அப்படி இல்லை போதுமான அளவு வாழ்ந்து வருவதாகக் காட்டுகிறது. 

காகத்துடன் ஒப்பிடும்பொழுது அண்டங்காக்கை எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளது. 378 எண்ணிக்கை மட்டுமே அண்டங்காக்கை இடம் பெற்று உள்ளது. 20 காகங்கள் இருக்கும் இடங்களில் 2 அல்லது 3 அண்டங்காக்கைகள் இருப்பதைப் பல இடங்களில் பார்த்து உள்ளது நினைவுக்கு வருகிறது. 

அனைத்து மாவட்டத்திலும் பார்க்கப்பட்ட பறவைகளாக மைனா, காகம், பச்சை கிளி, கரிச்சான், சின்னான், புறா, தவிட்டு குருவி போன்றவை உள்ளன. கரிச்சான் அதிகபட்சமாக 200 எண்ணிக்கையில் ராமநாதபுரத்திலும் அதற்கு அடுத்து மதுரை 37, திருச்சி 24 என்ற எண்ணிக்கையில் பதிவுகள் வந்து உள்ளன. 


பரவலாகப்
 பார்க்கப்பட்ட பறவைகளாகக் குயில், தையல் சிட்டு, செம்போத்து, சிகப்பு மூக்கு ஆட்காட்டி, வால் காக்கைவெண் மார்பு மீன்கொத்தி, ஊதா தேன்சிட்டு, கரும்பருந்து, உண்ணிக்கொக்கு, பனங்காடை ஆகும். குயில் இனப்பெருக்க காலம் என்பதால் அதன் குரல் நாள் முழுவதும் கேட்டு கொண்டே இருக்கும் காலமாகும். அதனால் அனைவரின்  கண்களில் தென்பட அதிக வாய்ப்பு உண்டு.
 

சிலர் தேன்சிட்டு என்று அதன் வகை குறிப்பிடாமல் பதிவு செய்து உள்ளனர். பலர் சரியாகப் பதிவுசெய்து உள்ளனர். சரியாகப் பதிவு செய்ததில் ஊதா தேன்சிட்டு நிறைய இடங்களில் வாழ்கிறது. 

சிகப்பு மூக்கு ஆட்காட்டி பறவையின்  எண்ணிக்கையை ஒப்பிடும்பொழுது மஞ்சள் மூக்கு ஆட்காட்டி மிகக் குறைவாகவே காணப்படுகிறது. சென்னை போன்ற மாநகரத்தில் அவை இல்லை என்று சொல்லும் அளவு உள்ளது. திருப்பூர், கோவை, விருதுநகர் போன்ற ஊர்களிலிருந்து மட்டுமே மஞ்சள் மூக்கு ஆட்காட்டி பதிவு ஆகியுள்ளன.  உருவில் சிகப்பை விட மஞ்சள் ஆட்காட்டி கொஞ்சம் சிறியதாக இருக்கும். ஆனால் எண்ணிக்கையில் குறைவாகவே உள்ளன. 

நீர் வாழ் பறவைகளில் பல வகைகள் இந்த கோடையில் இருப்பது கணக்கெடுப்பில் தெரியவருகிறது.. நத்தை கொத்தி நாரை, அரிவால் மூக்கன், அன்றில், நாமக் கோழி, சாம்பல் நாரை, நீலத் தாழைக்கோழி, இந்திய நீர்க்காகம், சிறிய நீர்க் காகம், ஊசிவால் வாத்து, கூழைக்கடா, மடையன், செண்டு வாத்து, சிறிய கொக்கு, முக்குளிப்பான்,  பட்டாணி உப்புக்கொத்திவெண் மார்பு கானாங்கோழி, பவள கால் உள்ளான், மஞ்சள் மூக்கு நாரை, கடற்கரைக் கொக்கு, இராக்கொக்கு  போன்ற நீர்புலப் பறவைகள் பார்க்கப்பட்டுள்ளன. 

நத்தை கொத்தி நாரை 

கடற்கரை கொக்கு திருநெல்வேலியிலிருந்து மட்டுமே பதிவு ஆகியுள்ளது. இந்த கொக்கு மூன்றுவித தோற்றங்களில் இருக்கக்கூடியவை. சாதாரணமாகப் பார்க்கும்பொழுது சிறிய கொக்கு என்று நினைக்கத் தோன்றும். காரணம் அதன் வெள்ளை நிறத்தோற்றம் கொண்டு இருக்கும் இவை ஒரு வகை.  கருஞ்சாம்பல் நிறத் தோற்றம் ஒரு வகை. வெள்ளை, வெளிர் சாம்பல் கலந்த  நிறத்தோற்றம் இன்னொரு வகையாகும். அவ்வப்பொழுது உள்ளூர் நீர் நிலைகளில் காணப்படும். 

செண்டு வாத்து வட மாநிலங்களில் வாழக்கூடிய பறவை என்று அனைத்து ஆங்கில  பறவை புத்தகங்களிலும் குறிப்பிட்டு இருப்பார்கள். ஆனால் தமிழ்நாட்டிலும் பார்க்க முடிகிற பறவை  ஆகும். சென்னை நீர் நிலைகளில் பல முறை பார்த்தது உண்டு. இந்த வாத்தின் அலகு மேல் செண்டு போன்ற அமைப்பு இருப்பது நன்கு புலப்படும்.  

இந்த நேரம் அதன் தாய் நாட்டிற்கு(ஐரோப்பா நிலப்பகுதி) சென்று இருக்கவேண்டிய ஊசிவால் வாத்து விருதுநகரில் பார்க்கப்பட்டுள்ளன. வால் நன்கு நீண்டு ஊசி போன்று இருக்கும்.  

வெளிநாடுகளிலிருந்து வரக்கூடிய பறவைகள் கோடை தொடங்குவதற்கு முன்பு அதன் நாட்டிற்குச் சென்று விடும். சில சமயம் சில பறவைகள் மட்டும் இங்கேயே தங்கிவிடும். காரணம் அடிபட்டு இருக்கலாம். இப்படி சில காரணங்கள் உண்டு. ஊசிவால் வாத்து பார்க்கப்பட்டது கோடை மாதமான மே 30ஆம் தேதி ஆகும். 

கணக்கெடுப்பில் பதிவாகியுள்ள நீர்புலப் பறவைகள் தொண்ணூறு ஒன்பது  சதவிகிதம் நம் நாட்டை சேர்ந்த பறவைகள் ஆகும். குறிப்பாக ஊசி வால் வாத்து பறவை தவிர அனைத்தும் நம் நாட்டை வாழிடமாக கொண்ட பறவைகள் ஆகும். மடையன், சின்ன கொக்கு, நீர் காகம், வெண் மார்பு கானாங்கோழி போன்ற பறவைகள் ஆண்டு முழுவதும் நம் அருகில் உள்ள நீர் நிலைகளில் பார்க்க முடிகிற பறவைகள் ஆகும். 

வட மாநிலத்தில் வாழக்கூடிய பறவை என்று சொல்லப்படுகிற செண்டு வாத்து தென் தமிழகத்தில் கூடு அமைத்து குஞ்சு பொறித்து உள்ளதை அந்த பகுதி பறவை நோக்குபவர்கள் குறிப்பிட்டு இருந்தனர். 

இந்த குளிர் மாதத்தில் நம் சரணாலயத்தில் உள்ள மரங்களில் இனப்பெருக்கம் செய்து இருக்கும் மஞ்சள் மூக்கு நாரை போன்ற உள்நாட்டுப் பறவை வகைகளின் குஞ்சுகள் நன்கு வளர்ந்து அதன் தாய் பறவைகளுடன் பறந்து சென்று இருக்கும். இங்கிருந்து கிளம்பிய வெளிநாட்டு வலசை பறவைகள் அதன் தாய் நாட்டை அடைந்து இருக்கலாம். சில பறவைகள் பறந்து சென்று கொண்டு இருக்கலாம்.. 

மஞ்சள் மூக்கு நாரை 

குளிர்காலத்தில் தமிழகத்திற்கு வலசை வரும் நீலவால் பஞ்சுருட்டான் பறவை வேலூர் மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் வருடம் முழுவதும் பார்க்க முடிகிற சிறிய பஞ்சுருட்டான் 7க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பார்க்கப்பட்டுள்ளது. நீர் நிலை ஓரங்களில் உள்ள செடிகளில் அமர்ந்து இரை தேடிப் பறந்து சென்று மீண்டும் அந்த இடத்திலே வந்து அமர்வதைப் பல இடங்களில் பார்த்து உள்ளது நினைவுக்கு வருகிறது. 

கருப்பு நிற உடல் உடைய பறவைகளான கொண்டு கரிச்சான், புதர் சிட்டு, கரிச்சான், கருஞ்சிட்டு போன்ற பறவைகள் விருதுநகர், திருப்பூர், கோவை,   சேலம், திருச்சி, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களிலிருந்து அதிக எண்ணிக்கையில்  பதிவு ஆகியுள்ளது.  

நிறைய வாலாட்டி பறவைகள் இருந்தாலும் கோடையில் இரண்டு வகை வாலாட்டிப் பார்த்து உள்ளனர். குளிர் காலத்தில் தமிழகத்திற்கு வலசை வரும் எலுமிச்சை வாலாட்டி திருநெல்வேலி மாவட்டத்திலும், வருடம் முழுவதும் பார்க்கக் கூடிய வெண் புருவ வாலாட்டிப் பல இடங்களில் பார்க்கப்பட்டுள்ளன.  

கோவை மாவட்டத்தில் மலபார் இருவாட்சி பறவை ஆர்வலர்களால் பார்க்கப்பட்டுள்ளது. இருவாட்சி மிகப் பெரிய பறவை. அழகிய பறவை கூட. அவை பறக்கும்பொழுது  ஹெலிகாப்டர் சத்தம் கேட்கும். மலபார் இருவாட்சி ஓரிட வாழ் பறவை ஆகும். மற்ற இருவாட்சிக்கு இருக்கும் கொண்டை போன்ற அமைப்பு  இவற்றுக்கு இருக்காது. மேற்குத் தொடர்ச்சி மலை இவற்றின் வாழிடமாகும். இருவாட்சி பார்ப்பதற்குப் பறவை ஆர்வலர்கள் வால்பாறை, மேற்குத்தொடர்ச்சி மலை போன்ற பகுதிகளால் சுற்றி வருவார்கள். பார்த்துவிட்டால் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள். 

ஓரிட வாழ் பறவை என்பது சில  பறவைகள் வேறு எந்த பகுதியிலும் பார்க்க முடியாது.. அந்த இடத்தில் மட்டுமே வாழக்கூடியவை ஆகும்.  பொதுவாகப் பழங்குடி மனிதர்கள்  காடு, மலைப் பிரதேசத்தில் மட்டுமே வாழ்வார்கள். அதுபோல் இந்த பறவைகள் சில பகுதிகளில் மட்டுமே வாழக்கூடியவை. அப்படி ஒரு பறவைதான் மலபார் இருவாட்சி. 

பாடும் பறவைகள் என்று அழைக்கப்படும் உருவில் சிறிய பறவை வகைகள்  நிறையப் பதிவாகியுள்ளன. சாம்பல் கதிர் குருவி, தூக்கணாங்குருவி, மாம்பழச்சிட்டு, தையல் சிட்டு, புள்ளிச்சில்லை, வயல் நெட்டைக்காலி, செவ்வலகு பூஞ்சிட்டு, வேலி கதிர்க்குருவிவிசிறிவால் கதிர்குருவி, மாங்குயில் என்று இன்னும் பல பாடும் பறவைகள் கோடை கணக்கெடுப்பில் பறவை ஆர்வலர்களால் பார்க்கப்பட்டுள்ளது. 

உலகில் உள்ள பறவை வகைகளில் பாடும் பறவைகள் தான் அதிக வகைகளில் உள்ளன. இவ்வகை பறவைகள் ஆங்கிலத்தில் passerine பறவைகள் என்று அழைக்கப்படுகின்றன. இந்த வகை பறவைகளின் கால் விரல் அமைப்பு மூன்று விரல்கள் முன் நோக்கியும், ஒரு விரல் பின்னோக்கியும் அமைந்து இருக்கும். கிளையில் அமரும் போது நன்கு உறுதியாக அமர இந்த வகை கால் விரல் பயன்படுகிறது. 

பாடும் பறவைகளின் குஞ்சுகள் முட்டையிலிருந்து வந்தவுடன் கண் தெரியாமல், முடி முளைக்காமல் முழுக்க முழுக்க பெற்றோர் பறவைகள் அரவணைப்பில் வளரக்கூடியவை. அதே தரையில் முட்டை இட்டு குஞ்சு பொறிக்கும் பறவைகளான ஆட்காட்டி போன்ற பறவைகள் குஞ்சுகள் முட்டையிலிருந்து வெளியே வரும்போது முடிகள் வளர்ந்து, கண்பார்வை நன்கு தெரிந்து பெற்றோருடன் ஓட தொடங்கிவிடும். 

தேசியப் பறவை மயில் பன்னிரண்டு மாவட்டங்களில் பார்க்கப்பட்டுள்ளன. திருப்பூர், திண்டுக்கல், தூத்துக்குடி, நாமக்கல் விருதுநகர் போன்ற பகுதிகளில் அதிக எண்ணிக்கையில் வாழ்கிறது.  வட மாவட்டங்களிலிருந்து மயில் பார்க்கப்பட்டதற்கான தரவுகள் வரவில்லை. தென் மாவட்டம், கொங்கு மண்டலம் போன்ற பகுதிகளில்  மயில் காணப்படுகிறது. 

நீலகிரி மாவட்டத்தை மட்டும் சார்ந்த நீலகிரி பூஞ்சிட்டு, நீலகிரி காட்டுப் புறா, கருப்பு- ஆரஞ் ஈப்பிடிப்பான் போன்ற பறவைகள் பார்த்துப் பதிவு செய்து உள்ளார்கள் பறவை ஆர்வலர்கள். 

பல மாவட்டத்திலிருந்து பறவைகள் பட்டியல் வந்து உள்ளன. அதில் கோவை, விருதுநகர், சென்னை, சேலம்  மாவட்டத்திலிருந்து அதிகமான பதிவுகள் வந்து உள்ளன. தமிழ்நாட்டில் பறவைகளை அதிகம்  பார்க்கப்படும் மாவட்டமாகக் கோவை உள்ளது அடுத்து சேலம், திருப்பூர். 

தென் தமிழகம் கணக்கில் எடுத்துக் கொண்டால் திருநெல்வேலி, மதுரை, விருதுநகர் போன்ற மாவட்டங்களில் பறவை ஆர்வலர்கள் அதிகம் உள்ளனர்.  வட மாவட்டம் என்று எடுத்துக் கொண்டால் சென்னை மட்டுமே அதிக பறவை ஆர்வலர்கள் இருப்பது தெரிய வருகிறது. 

கோடை பறவை கணக்கெடுப்பு காக்கைக் கூடு-உயிர் இணைந்து  இரண்டாவது வருடமாக நடத்துகிறது. போன வருடமும் கொரோனா பரவல் காரணமாக அதிகம் வெளியே செல்லாமல் பறவைகளைப் பார்த்துப் பதிவு செய்த மக்கள் இந்த வருடமும் அதே காரணங்களுக்காக வெளியே செல்ல முடியாத சூழல் ஏற்பட்டது. அப்படி இருந்தும் 100 வகை பறவைகள் பார்க்கப்பட்டது. வெளிநாடுகளில் வந்த சில பறவைகள் இன்னும் தமிழகத்தில் இருப்பது, ஓரிட வாழ் பறவைகள், நீர்புலப் பறவைகள், பாடும் பறவைகள் என்று கோடையில் பறவைகளின் வகைகள் மற்றும் அதன் எண்ணிக்கையிலும் அதிகம் இருப்பது  மகிழ்ச்சியைத் தருகிறது.

 

கோடை பறவை கணக்கெடுப்பு முழு விவரம் 

-    செழியன். ஜா

                                                                                                                   படங்கள்- மாசிலாமணி செல்வம்

4 comments:

  1. அருமையான தரவுகள் . வாழ்த்துக்கள் ஐயா 👍🏽🌷🌷

    ReplyDelete
  2. அருமையான தொகுப்பு.சிறப்பான பணி. வாழ்த்துகள் அனைவருக்கும்.

    ReplyDelete
  3. அழகு தமிழில் நம் மண்ணின் புள்ளின அருமை தகவல்

    ReplyDelete