Monday, 9 May 2022

Fire of Sumatra

 


தீயை எதிர்கொள்ள, அணைக்க தெரிந்த மனிதர்களுக்குக் கூட தன் வீடு தீப்பற்றி எரிந்தால் பதைபதைத்துப் போய்விடுவான்.

பல குடிசைகள் எரிந்து சாம்பலானதைப் பார்த்து இருப்போம். ஆனால் தீயை எதிர்கொள்ளத் தெரியாத, அணைக்க தெரியாது விலங்குகள் வாழிடமான காடு  தீ பிடித்தால் என்ன ஆகும்? மாண்டு போவதை தவிர வேறு வழியில்லை.


காட்டு தீ இரண்டு விதங்களில் ஏற்படுகிறது பலத்த காற்று வீசுவதால் மரங்கள் இடையே ஏற்படும் உராய்வால் தீ உருவாகும். இவை இயற்கையான ஒன்றாகும்.


இரண்டாவது மனிதர்கள் உருவாக்கும் தீ. செயற்கையான இந்த தீ காட்டில் வாழும் உயிரினங்களுக்கு இயற்கையாக உருவாகும் தீயை விடச் அதிக உயிர்ப் பலியை ஏற்படுத்துகிறது. 


இதை மையப்படுத்தி சுமத்ரா காட்டில் மனிதர்கள் ஏற்படுத்தும் தீயால் அங்கு வாழும் உயிரினங்களுக்கு ஏற்படும் உயிர்ச்சேதங்களைப் புலி அதன் 3 குட்டிகள் கொண்டு விவரித்து வெளிவந்து உள்ள நாவல்தான் “Fire of Sumatra”. ஆசிரியர் ரமணா கைலாஷ். 


பொதுவாகப் புத்தகம் வாசிப்பவர்கள், ஒரு துறையில் நீண்ட  அனுபவம் உடையவர்கள் இவர்களிடம் கதை அல்லது  கட்டுரை எழுதுங்கள் என்று சொன்னால் அவை எல்லாம் முதிர்ந்த வயதில் செய்ய வேண்டியவை என்று நினைத்து ஒத்திப் போடுவார்கள்.


ஆனால் முதிர்ந்த வயதில் அவர்களால் ஒரு பக்கம் கூட எழுத முடியாது என்பதுதான் உண்மை. அதை ரமணா கைலாஷ் தவிர்த்து இளம் வயதிலேயே தான் கற்ற, பெற்ற அனுபவங்களை எளிமையான ஆங்கிலத்தில் எழுதி உள்ளார்.  கதை என்று கடந்துவிட முடியாது. விலங்குகளின் வாழ்வியலைக், காட்டின முக்கியதுவத்தை, மனிதர்கள் காட்டை சிதைப்பதை நுணுக்கமாக விவரித்து இருக்கும் நூல்.


புலி-அதன் 3 குட்டிகள் வழியாக கதை நகர்ந்து முடிவில் காடுதான் மனிதனின் எதிர்காலம் என்பதை உணரவைப்பதில் முடிகிறது நாவல்.



நம்மை வசீகரிக்கும் 3ஆவது புலி குட்டி


3 புலி குட்டிகள் அதில் 3வது புலிக் குட்டியும்-அப்பா புலியும்(பெயர் சலீம்) அவ்வப்போது பார்த்து மெல்லிய சிரிப்பு சிரித்துக் கொள்ளும். ஒரு நாள் மனிதர்கள் வைக்கும் பொறியில் சலீம் சிக்கிவிடும், சலீமிற்கு இறந்துவிடுவோம் என்று நன்கு தெரிந்த பிறகு அதைக் குட்டிகளுக்கு தெரியக் கூடாது என்று நீங்க குகைக்குப் போங்க நான் வருகிறேன் என்று கிளம்பும், அப்பொழுது கடைசியாக 3வது  புலிக் குட்டி அப்பா சலீமை பார்க்கும், அந்த நேரமும் சலீம் மெல்லிய சிரிப்பு சிரித்து அங்கிருந்து நகர்ந்து இறந்துவிடும்.


இது கதை தான் ஆனால் இந்த இடத்தில் காட்டில் மனிதர்கள் ஏற்படுத்தும்   அழிப்புகள் எந்த அளவு விலங்குகளைப் பாதிக்கிறது என்பதை உணர்த்துகிறது.


பெரும்பாலும் புலி இறப்பு என்பது இயற்கையாகத்தான் நடக்கும். எப்பொழுதாவது சில முறை விலங்குகள் இடையே ஏற்படும் சண்டையில் இறக்கலாம். ஆனால் வேட்டையாடுவது, பொறி வைப்பது, மனிதர்கள் உருவாகும் காட்டு தீ  போன்றவற்றால் மிக அதிகப்படியான விலங்குகள் இறக்கும். காடே நாசமாகிவிடும். அதுதான் சலீம் விஷயத்தில் நடந்து இருக்கிறது. விலங்குகள் பேசாது என்றாலும் பேசினால் இப்படி இருக்குமோ என்று உணரும் அளவு ஆசிரியர் எழுதி உள்ளார்.


விலங்குகளின் உடலைக் கொண்டு மருந்து தயாரித்துப் பல நோய்களைக் குணப்படுத்த முடியும்  என்பது உண்மையில்லை என்று நிரூபிக்கப்பட்டாலும் வேட்டையாடுவது, வெளிநாடுகளுக்கு கடத்துவது இன்னும் குறையவில்லை. புத்தகத்தில்  இதுவும் பதிவு ஆகி உள்ளன. லட்சம்  புலிகள் வாழ்ந்த இந்தியாவில் மனிதர்கள் வேட்டையாடி 2500 புலியாக குறைத்து உள்ளோம் என்பது நினைவுக்கு வருகிறது. 


காட்டில் பலமான விலங்கு புலி என்றாலும் அதைவிடப் பலமான விலங்கான யானையை ஒரு இடத்தில் புலி சந்திக்கும். சண்டை ஏதும் செய்யாமல் இரண்டும் நகர்ந்துவிடும். குட்டி புலி ஏன் யானையிடம் சண்டை போடவில்லை என்று கேட்கும். யானை ஒன்றும் செய்யாத போது நாம் எதுவும் செய்யக்கூடாது, இந்த காட்டில் பலம் பொருத்திய பேருயிர் யானை என்று சொல்லும். ஒவ்வொரு விலங்கும் எந்த அளவு காட்டிற்கு முக்கியம் என்பதை உணர்த்துகிறது.


தாயின் அரவணைப்பில் இருக்கும் புலி குட்டிகள் காட்டில் ஏற்படும் தீயில் தாய் புலி சிக்கி காயம் அடையும். காட்டின் பாதுகாப்பாளர்கள் மருத்துவம் கொடுக்கக் கொண்டு செல்வார்கள் அங்கு ஏற்கனவே காலில் அடிபட்ட புலி ஒன்று இருக்கும் இரண்டுக்கும் ஏற்படும் உரையாடல்கள் கவனிக்கத்தக்கவை ஆகும். 


காட்டு தீ ஏற்பட்டுள்ளதால் ஆண் புலி, தன் குட்டிகள் எப்படி உள்ளது என்று அறியக் குட்டிகள் இடத்திற்கு வரும் அங்குப் பெண் புலி இருக்காது (மருத்துவ இடத்தில் உள்ளது) எங்கே அம்மா என்று கேட்கும் இன்னும் வரவில்லை என்று புலி குட்டிகள் சொல்வதை வைத்து ஆண் புலி யூகிக்கும் காட்டுத் தீயில் இறந்து இருக்க வாய்ப்பு உண்டு, அதைச் குட்டிகளுக்கு சொல்லாமல்  குட்டிகளை தன் இடத்திற்கு அழைத்துச் சென்று வளர்க்கும். இப்படிக் கதை புலியை மையமாக வைத்துச் செல்கிறது.


கடைசியில் இந்த அப்பா சலீம் பொறியில் சிக்கி இறந்துவிட்டது. சலீம் இறப்பு  மீட்டுப் குழுவினருக்குத் தெரிந்தவுடன்  உடனே மருத்துவ இடத்தில் உள்ள குணமாகிய பெண் புலியைக் காட்டுக்கு அனுப்பு முடிவு செய்வார்கள். ஆண்-பெண் புலிகள் இரண்டும் இலையென்றால் குட்டிகள் நீண்ட நாட்கள் வாழ்வது சிரமம் என்பதால் திறந்து விடுவார்கள். குட்டிகள் இடத்தை கண்டுபிடித்து பெண் புலி வந்துவிடும்.  


காட்டில் நாம் எந்த விலங்கைப் பார்க்க விரும்புவோம் என்று யாராவது கேட்டால் தயங்காமல் புலி என்று சொல்வோம். ஆனால் காட்டில் உள்ள புலிக்கு எந்த விலங்கைப் பார்க்க ஆசை என்பதைச் சுவாரசியமாக ஒரு இடத்தில் எழுதப்பட்டு இருக்கும்.. 


குட்டி புலி, அப்பா சலீமைப் பார்த்து காண்டாமிருகத்தைப் பார்த்து உள்ளீர்களா? என்று கேட்கும். இதுவரை இல்லை என்று சொல்லும். இறப்பதற்குள் ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்று நினைத்துக் கொள்ளும். அந்த நாளும் வருகிறது. ஒன்றல்ல இரண்டு காண்டாமிருகங்கள் இருப்பதைத் தூரமாக இருந்து சலீம், அதன் குட்டிகள் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கும். அன்று நடு இரவு தன் குகைக்கு திரும்பியவுடன் அன்றைய நாள் மிகுந்த சிறப்பானதாக இருந்தது போல் குகையின் முன் சலீம் அமர்ந்து இருக்கும். 


புலியைத் தவிர காட்டில் வாழும் மற்ற விலங்குகள், பறவைகளையும் அறிந்து கொள்ள முடிகிறது.. அப்படி ஒரு இடத்தில் மரத்தின் உச்சியில் இருவாச்சி(Hornbill) பறவையை பற்றி குறிப்பு வரும். காட்டு பறவையை நன்கு தெரிந்தவர்களுக்குதான் இந்த பறவை பெயர் எழுத முடியும்.


முழு புத்தகம் படித்து முடித்த பிறகு புலிக் குட்டிகளில் நம் கவனம் சென்றாலும் அதே அளவு அழுத்தமாகக் காட்டில் நடக்கும்  வேட்டைகள், வேளாண்மை செய்ய இயற்கையான காட்டை அழிப்பது, பெரும் நிறுவனங்கள் உருவாவதால் ஏற்படும் காடழிப்பு, செயற்கை காட்டுத் தீ, விலங்குகள் கடக்கும் பகுதியில் பெரும் சாலை அமைத்துச் செல்லும்  வாகனங்களால் அடிபட்டு இறக்கும் விலங்குகள், மருந்து தயாரிக்க விலங்குகளை கொல்வது இவ்வளவும் நமக்கு உணர்த்துகிறது.


கதை எழுதுபவர்கள் விலங்குகளைக் கொண்டு கதை எழுதுவது எளிமை ஆனால் அவ்வகை கதைகள் கடைசியில் நீதி போதனை சொல்லி முடிப்பார்கள். காரணம் விலங்குகள் குறித்து, காடுகள் குறித்து உண்மைகளைத் தெரிந்து கொள்ள ஈடுபாடு இல்லாததே காரணம்.


 சூழலியல் கவனம் செலுத்தும் ஒருவர் விலங்குகளைக் கொண்டு கதை எழுதினால் அதில் நீதி போதனைகள் இருக்காது. காட்டின் உண்மைத்தன்மை, விலங்குகளின் வாழ்வியல், மனிதர்களின் தலையீடு என்று  தகவல்களைக் கொண்டு அந்த கதைகள் செல்லும் என்பதற்கு கைலாஷ் ஒரு உதாரணம்.


ரமணா கைலாஷ்- 14 வயது தான் என்றாலும் காட்டை அறிந்து கொள்ளப் புறப்பட்டவர்கள் கண் எதிரே அழியும் காட்டை பார்த்து அமைதியாக இருக்க மாட்டார்கள்- அதை ஏதோ ஒரு வகையில் வெளியே சொல்ல செய்வார்கள். அதைத்தான் ரமணா கைலாஷ் செய்துள்ளார். 


சிறுவர்கள்-பெரியவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல் ஆகும்.


-செழியன். ஜா

  

No comments:

Post a Comment