Monday, 16 October 2017

பறவை நோக்குதல்- 13 (Night Watching)

பகலில் மட்டுமே பறவைகள் பார்ப்பது ஆரம்பத்தில் சரி என்றாலும் அதற்கு அடுத்து இரவிலும் பறவைகளை பார்க்க செல்லவேண்டும். இரவில் தூங்கிகொண்டிருக்கும்  பறவையை பார்த்து  என்ன செய்வது? என்று உடனே கேள்வி கேட்பீர்கள். உங்கள் கேள்வி முற்றிலும் இப்பொழுது சரி என்றாலும், கட்டுரை முடிவில் உங்கள் கேள்விக்கு பதில் கிடைத்து விடும். பறவை உலகில் ஒரு சில பறவைகளுக்கு இரவு உலகம் என்று ஒன்று உண்டு. அவற்றை பற்றி பார்ப்போம்.

மனிதர்கள், பகலில் உழைத்து-இரவில் தூங்குவது பொதுவான ஒன்று. பறவைகளும் அப்படிதான் என்றாலும் சில பறவைகள் இதில் இருந்து விதிவிலக்கு உண்டு. பகலில் உறங்கி இரவில் இரை தேட கிளம்பும்.

இரவு பறவை என்பது ஒன்று உண்டா? என்றால்

உண்டு.

நமக்கு அனைவருக்கும் தெரிந்த பறவை – ஆந்தை. இவை ஒரு இரவு பறவை ஆகும். நம் தோட்டத்தில் இரவில் வந்து அமர்வதை நிறைய தடவை பார்திருப்போம் அல்லது அதன் குரலை கேட்டு இருப்போம். இரவில் நீங்கள் இந்த கட்டுரையை படித்து கொண்டிருந்தால் உங்கள் வீட்டு தோட்டத்தில் சென்று பாருங்கள் ஆந்தை அல்லது வேறு இரவு பறவை இருப்பது தெரிந்தால் பார்த்த பறவையை மின்னஞ்சல் lapwing2010@gmail.com அனுப்புங்கள்.


பகலில் பார்க்கும் பறவைகளை பகலாடி(Diurnal) என்று அழைப்பார்கள் அப்போ இரவு பறவைகளை? வேறு என்ன இராவாடி(Nocturnal) தான்.

உலகில் எந்த மனிதனும் பகலில் தூங்கி இரவில் விழிப்பதில்லை (இப்பொழுது வேலை தொடர்பாக இரவில் விழித்திருப்போம்) இயற்கையாக நம் உடம்பு இரவில் தூங்கவே விரும்பும். ஆனால் பறவை உலகில் இரவில் மட்டும் ஊர் சுற்றும் பறவைகள் உண்டு. இயற்கையின் படைப்பில் இதுவும் ஒரு அதிசயம்.

அதனால் பகலில் பறவை பார்க்க செல்வது போல், இரவிலும் பறவை பார்க்க தொடங்க வேண்டும். இதற்க்கெல்லாம் பெரியதாக முயற்சிக்காதிர்கள் சாதரனமாக வெளியே செல்வது போல் இரவில் ஒரு ரவுண்ட் வாருங்கள் அப்பொழுது உன்னிப்பாக கவனித்தால் போதும் இரவு பறவைகளை பார்க்கலாம்.

ஆரம்பத்தில் பகலில் நன்கு பார்த்த பிறகு இரவில் ஆரம்பியுங்கள். நிறைய ஆச்சிரியங்களை உள்ளடக்கியதே பறவைகள் என்று போக போக உணர தொடங்குவீர்கள்.

இதுவரை இந்தியாவில் நாற்பத்தி மூன்று(43) பறவை இனங்களை இரவு பறவைகளாக பதிவு செய்து உள்ளார்கள். அதில் முப்பத்தி இரண்டு(32) பறவை வகைகள் ஆந்தைகளாகும். இரவு பறவைகளும் பகலாடியை போல் சூழல் சமன்பாட்டியே செய்கிறது. பூச்சிகள், எலிகள் ஓணாணன், தவளை போன்றவரை உண்டு அவற்றின் இனப்பெருக்கத்தை கட்டுபடுத்துகிறது.

மிக மிக மிக குறைந்த பறவைகளே இரவாடிகளாக உள்ளன. அவற்றை ஓர் பார்வை பார்த்து விடுவோம்.

இரவாடி பறவைகள்:

1. ஆந்தை (Owl)

2. கூகை (Barn Owl)

3. தவளை வாயன் (Srilankan Frogmouth)

4. இந்தியன் பக்கி ((Indian Night Jar)

5. இராகொக்கு (Night Heron)

6. கலுவிக் கோடி (Jerdon’s Courser)

மொத்தமே இவ்வளவுதாங்க இரவாடிகள். ஆனால் மிக சுலபமாக மட்டும் பார்த்துவிட முடியாது. அதிக முயற்சி, அதிக ஆர்வம் இருக்கவேண்டும்.

அதவும் கடைசி பறவையான கலுவகோடியை அதிக முயற்சி மற்றும் அதிக ஆர்வம் இருந்தாலும் (காலை, மதியம், மாலை, இரவு என்று எப்பொழுது சென்றாலும்) பார்க்க முடியாது. இப்பொழுது இருக்கிறதா என்றே தெரியவில்லை. அப்போ எங்கே பார்ப்பது?

ஆந்தை:

புள்ளி ஆந்தை -செஞ்சி 
நமக்கு நன்கு தெரிந்த பறவை-ஆந்தை. ஆனால் நாம் இவற்றை அபசகுனமான பறவை  என்ற நினைப்பில் இருக்கிறோம். பகலில் பறவைகளை பார்த்து பழகிய நம் கண்கள், இரவில் இவற்றை இருட்டில் பார்க்கும்பொழுது மனிதர்கள் போன்ற இரண்டு கண்கள் முன்னோக்கி ஆதுவும் பெரியதாக மற்றும் அவற்றின் குரல் (கரடு, முரடாக இருப்பதால்) ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. அதனால் இவற்றை நாம் அபசகுனமான பறவை என்ற வரிசையில் வைத்துவிட்டோம். பொதுவாகவே இரவு நமக்கு ஒரு வித அச்சத்தை தரும். அதனால் இரவில் மட்டும் இவை தென்படுவதால் அந்த அச்சம் இந்த பறவையை அபசகுனமான பார்க்கவைக்கிறது.

உண்மையில் ஆந்தை ஒரு நல்ல பறவையே. வௌவால்(Bat) ஒரு இரவு பாலூட்டியாவதால் இதையும் நாம் அபசகுனமான வரிசையில் வைத்துவிட்டோம்.

ஆந்தை வகைகள்  (Types of Owl) :

1.        புள்ளி ஆந்தை- Spotted Owl
        2.        கொம்பன் ஆந்தை- Horned Owl
                          3.        குட்டை காது ஆந்தை- Short Eared Owl
                                 4.        பெரிய புள்ளி ஆந்தை Mottled wood Owl
                            5.        வேட்டைகார ஆந்தை- Brown Hawk Owl
             6.        சிறிய காட்டு ஆந்தை- Jungle Owl
      7.        பூமன் ஆந்தை- Brow Fish Owl
                            8.        பெரிய காட்டு ஆந்தை- Forest Eagle Owl
                                                  9.        பட்டை கழுத்து சின்ன ஆந்தை- Collard Scops  Owl
                          10.     பழுப்பு காட்டு ஆந்தை- Brown wood Owl
            11.     சிறிய ஆந்தை- Oriental Scops Owl

 பகலில் முழுவதமாக ஆந்தை துங்கும் என்று பார்த்தல், அப்படி இல்லை என்று தெரிகிறது. வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்தில் உள்ள ஒரு மரத்தில் இருந்த, நான்கு புள்ளி ஆந்தைகள், தூங்குவதும் சில நொடியில் மனிதர்களை பார்ப்பதும் என்று இருந்தது. பகலில் அவை முழுவதும் தூங்குவது கிடையாது. ஆபத்து ஏதாவது உள்ளதா என்று அவ்வப்போது உறுதிபடுத்திக்கொள்கிறது.
செஞ்சி மலைக்கோட்டையில் உள்ள இலைகள் இல்லா ஒரு மரத்தில் இருந்த இரண்டு ஜோடி ஆந்தையில் ஒரு ஆந்தை மட்டும் மிகுந்த விழிப்புணர்வுடன் இருப்பதை பார்க்க முடிந்தது. ஆனால் ஆந்தையின் பழக்கவழக்கங்கள் முற்றிலும் மாறுபட்டிருப்பதை, உயிரியல் பூங்காகளில் சென்று பார்க்கும்பொழுது உணர்ந்துகொள்ளலாம்.

உயிரியல் பூங்காவில், பகல் முழுவதும் மனிதர்கள் அதன் அருகில் இருப்பதால், இராவாடி பறவையான ஆந்தை பகலில் தூங்குவதே இல்லை. இரவில் என்ன செய்கிறது என்றும் தெரியவில்லை.
கிண்டி சிறுவர் பூங்கா செல்லுங்கள், அங்கு கொம்பன் ஆந்தை(Horned Owl), நீங்கள் கேமராவை கையில் எடுத்தாலே, தலையை திருப்பிகொள்வதை பார்க்கமுடியும். அந்த அளவுக்கு கேமரா ஒளி(Flash) அதன் கண்ணில் பட்டு வெறுப்பாகி உள்ளது.

மேல இருக்கும் ஆந்தை வகைகளை மிகுந்த முயற்ச்சியால் மட்டுமே தமிழகத்தில் பாக்கமுடியும். அந்த அளவுக்கு அதன் எண்ணிக்கை குறைந்துவிட்டது. அதற்கு முக்கிய காரணம்- அவற்றின் வாழ்விடத்தை பெரும்பகுதி அழித்துவிட்டோம் மற்றும்  கள்ள சந்தையில்  விற்பனை நடைபெறுவதும் ஒரு காரணம் என்றும் சொல்லலாம். நாம் மட்டும் வாழ்வதற்கான இடம் இந்த பூமி என்ற நினைப்பில் மனிதர்கள் உள்ளார்கள்.

உங்கள் வீட்டருகில் இருக்கும் புள்ளி ஆந்தையை சுலபமாக பார்க்கமுடியும். அதனால் புள்ளி ஆந்தையில் இருந்து உங்கள் இரவு பறவை கணக்கை தொடங்குங்கள். தனியாக இரவு பறவை பற்றிய குறிப்புகளை எழுதி வைத்துக்கொண்டு வாருங்கள். எதற்க்கு என்று எல்லாம் யோசிக்காதிர்கள், எழுதி வாருங்கள் அவ்வளுவதான்.

இங்கே ஒரு சிறிய விளக்கத்தை பார்ப்போம்:

பகலடிக்கும்-இரவாடிக்கும் என்ன என்ன வித்தியாசங்கள் உண்டு என்பதை கொஞ்சூண்டு பார்த்துவிட்டு மற்ற இராவாடி பறவைகள் இருக்கும் மரத்திற்கு செல்வோம்.

எண்
இராவாடி (Nocturnal)
பகலாடி (Diurnal)
1
பகலாடி பறவைகள் போல் இரவு பறவைகளின் நிறங்கள் பளிச்(Bright) என்று இருக்காது.
பளிச் என்ற நிறங்களிலும் இருக்கும்.
2
பெரும்பாலும் பழுப்பு நிறத்தில் இதன் நிறங்கள் காணப்படும். (Dull Plumage)
இவைதான் என்று இல்லை பல வண்ண ஜாலங்கள் கொண்டு இருக்கும்.
3
சாம்பல், கருப்பு, வெண்மை போன்ற நிறங்கள் சிறிது காணப்படும். உதாரணம்: (இராகொக்கு- Night Heron)  
அப்படி எதுவும் இல்லை.
4
இவற்றின் கண்கள் பெரியதாக இருக்கும். மிக குறைந்த ஒளியை கூட உள்வாங்கும் திறன் உடையது.
சிறிய கண்கள் உடையது.
5
இரவு பறவைகளில் – சிகப்பு, அரஞ்சு, புளு, மற்ற அடர் நிறங்களில் காணப்படாது.
காணப்படும்.

பள்ளியில் அறிவியல் பாடத்தை படித்தபொழுது இது போல் நிறைய கட்டம் கட்டப்பட்ட (Tabular Colum) கேள்வி பதில்களை படித்து இருப்போம். அந்த நினைப்பு இப்பொழுது வந்ததால் அது போல் இருக்கட்டும் என்று சும்மா மேலே எழுதி உள்ளேன்.

“சும்மா” என்ற வார்த்தை தமிழில் இருப்பதால் இது போல் இடங்களில் பயன்படுத்திக்கொள்ள வசதியாக இருக்கிறது.

நேரடியாக தவளைவாயன், இந்தியன் பக்கி இருக்கும் மரத்திற்கு சென்றுவிடுவோம் :

 முதலில் பக்கி(Nightjar) பார்ப்போம்:

இரவில் காணப்படும் பறவை வகைகளில் பக்கி(Nightjar) ஓர் முக்கிய இடத்தை வகிக்கிறது. நம் வீட்டருகில் இவைகளை பார்க்க முடியாது. காடுகளில் குறிப்பாக- தேக்குகாடு, புதர்காடு, இலையுதிர் காடு, மலை அடிவாரத்தில், போன்ற இடங்கில் காணலாம். தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சிமலை, கிழக்கு தொடர்ச்சி மலை போன்ற இடங்களில் பார்க்க முடியும்.

பறவைகளை பார்க்க காடுகளுக்கு செல்லும்பொழுது இவற்றை பார்க்காமல் வராதிர்கள். அப்படி வந்தால் வீட்டிற்குள்ளே அனுமதிக்காதிற்கள் என்று உங்கள் வீட்டில் சொல்லிவிட்டு சென்றுவிடுங்கள்.


தமிழ் நாட்டில் பார்க்கமுடிகிற பக்கி வகைகள்:

1. காட்டு பக்கி- Jungle Nightjar

2. நீண்டவால் பக்கி- Jerdon’s Nightjar

3.சிறு பக்கி- Common Indian Nightjar

4. Savanna Nightjar

சுலபமாக சொல்லிவிட்டேன் ஆனால் பார்க்க காடு, மலை பகுதிகளை நோக்கி செல்லவேண்டும் மெது, மெதுவாக ஆரம்பியுங்கள். விரைவில் பார்துவிடுவிர்கள்.

தவளைவாயன் 
தவளைவாயன்- Srilankan Frogmouth:

பெயரே இவற்றின் உருவ அமைப்பை குறிப்பிடுகிறது. மேற்கு தொடர்ச்சி மலை, இலங்கை இங்கு தவிர வேறு எங்கும் காணப்படுவதில்லை. 

பார்பது மிக சிரமம் என்பதால் இதுவம் ஒரு இராவாடி பறவை என்று நினைவில் வைத்துகொள்ளுங்கள் அது போதும்.




அபூர்வ பறவை (Barn Owl) :

கூகை 
இப்படி தான் நம் பத்திரிகைகள் குறிப்பிடுகிறது. கூக்கை அல்லது கோட்டான்- (BARN OWL) என்று அழைக்கப்படும் இந்த இராவாடி பறவையை ஆஸ்திரேலிய பறவை என்றும் பத்திரிகையில் எழுதியிருப்பதை நிறைய முறை படித்துள்ளேன்.

இந்தியா முழுவதும் வாழ்கிறது. ஆனால் அடிக்கடி செய்தியில் மர்ம காய்ச்சல் என்று சொல்வது போல் இது அபூர்வ பறவை ஆகிவிட்டது. சாதரனமாக விவசாய நிலங்கள் அருகில் பார்க்கமுடியும்.

கண்கள் இரண்டும் மனிதர்கள் போல் முன் பக்கம் இருக்கும். காகத்தின் அளவு உள்ள பறவைதான் கூகை ஆகும். இரவில் இவற்றையும் பார்துவிடுவிர்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது.

இராகொக்கு (Night Heron) :

பகலிலே இவற்றை பார்க்க முடியும். நீர் நிலை அருகில் சென்றாலே பார்த்துவிடலாம். இந்தியாவிலே இருக்ககூடிய பறவை தான் இராகொக்கு.

கருப்பு நிற தலை, சாம்பல் நிற முதுகு பகுதிகள், வெண்மை நிற அடிபாகம் இவைதான் இராகொக்கு. இராவாடி பறவையான இராகொக்கை நிச்சயம் பார்துவிடுவிர்கள்.

கலுவிக் கோடி (Jerdon’s Courser) :

கலுவிக் கோடி 
இரவில் இரை தேடும் பறவை கலுவகோடி, ஆந்திரபிரதேசத்தில் காணப்படக்கூடியாது . ஆனால் இப்பொழுது இருக்கிறதா என்று நிறை பறவை ஆராய்ச்சியாளர்கள் அவற்றை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.

86 வருடங்கள் பிறகு 1986ஆம் ஆண்டு மிண்டும் பார்த்து பதிவுசெய்து உள்ளனர். அதற்கு அடுத்து 2000ஆம் வருடங்கள் பிறகு பறவையாளர் திரு.பா.ஜெகநாதன் அவர்களால் பார்த்து பதிவு செய்துள்ளார். பிறகு 2008ஆம் வருடம் அதன் குரலை மட்டும் கேட்டுள்ளார் அதன் பிறகு எந்த தகவலும் இன்றுவரை இல்லை.

அதனால் இவை ஒரு இராவாடி பறவை என்று உங்கள் குறிப்பு நோட்டில் எழுதி கொள்ளுங்கள். இப்பொழுதைக்கு இது தான் முடியும்.

எப்படி தயாராவது :

இரவில் பறவை பார்க்க செல்வது என்பது ஒரு சவாலான் செயல்தான். பகல் நமக்கு நன்கு புலப்படுவது போல் இரவு கிடையாது. அதனால் குழுவாக முடிவு செய்து காடுகளுக்கு செல்லுங்கள். அதற்கு தகுந்த பொருட்கள் எடுத்து கொண்டு சென்றால் இரவாடிகளை ரசிக்கலாம்.
வயல்வெளி, நீர்நிலை அருகில் உங்கள் வீட்டு தோட்டங்கள் போன்ற இடங்களுக்கு மாதம் ஒரு இரவு நடை போய்வாருங்கள்.

 நம்மை விட இரவாடிகள் தான் முதலில் நம்மை பார்த்துவிடும்.

             தரமான ஒளி விளக்கு (Torch Light)

           இரவில் பார்க்க முடிகிற தொலைநோக்கி ( Night Vision Binocular )

 தகுந்த உடை ( Comfort Dress) 

கடைசியாக ஒரு பறவை:

பட்டைத்தலை வாத்து 
பட்டை தலை வாத்து (Bar Headed Goose), இமையமலை மேல் இருந்து தமிழகத்திற்க்கு குளிர்காலத்தில் நீர் நிலை நோக்கி வருகிற பறவை. இவை இரவில் இரை தேடும் பறவை ஆகும். இவற்றை நீங்கள் கூந்தன்குளம் பறவை சரணாலயதிற்க்கு சென்றால் பார்த்து விடலாம்.

முடிந்தது இரவாடிகள் என்ன, என்ன இராவாடி பறவைகளை பார்த்துள்ளிர்கள் என்று கொஞ்சம் நேரம் ஒதுக்கி மின்னஞ்சல் அனுபிவிடுங்கள்- lapwing2010@gmail.com


-    செழியன்




   Photos- Wikipedia 


5 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. கூகையும் கோட்டானும் ஒன்றா என்று ஒருவர் எழுதியிருந்தார்.பிறகு அவராலே அந்த பதிவை Delete செய்யப்பட்டுள்ளது.

    கூகையும் கோட்டனும் ஒன்றுதான் இவற்றைத்தான் அபூர்வ பறவை ஆஸ்திரேலிய பறவை என்று தவறாக குறிப்பிடுகிறார்கள்.

    ReplyDelete
  3. Bar headed goose இரவாடி என்பதற்கான சான்றுகள் எதாவது இருக்குதுங்களா ?

    ReplyDelete
    Replies
    1. இரவில் இரை தேடும் பறவையாக இருக்கிறது. "தமிழகத்தின் இரவாடிகள்" புத்தகத்தில் பட்டைதலை வாத்து பற்றிய கட்டுரையில் இவை ஒரு இரவாடி என்று குறிப்பு உள்ளது. புத்தக ஆசிரியருடன் கலந்து ஆலோசித்ததில் பட்டை தலை வாத்து இரவாடி என்று குறிபிட்டார். பட்டை தலை வாத்து பற்றி உங்கள் கருத்துக்களை தெரிவித்தால், கட்டுரையில் சேர்த்துவிடுகிறேன். நன்றி

      Delete