கரிச்சான் சிறிய பறவைதான் ஆனால் பெரிய வல்லூறு போன்ற இரைகொல்லி பறவைகளைத் துரத்தும் வல்லமை உண்டு. அந்த தைரியத்தில் மனிதர்களைக் கண்டாலும் பறந்து ஒளிவதில்லை. மலையில் பார்த்த துடுப்பு வால் கரிச்சான் பறவையும் எங்களைக் கண்டு மறைந்து கொள்ளவில்லை.. பறவைகள் பார்ப்பது சிறந்த பொழுதுபோக்கு என்றாலும் பறவைகள் குறித்துப் பேசுவது, விவாதிப்பது, பகிர்ந்து கொள்வதும் பறவை ஆர்வலர்களுக்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும் நிகழ்வு ஆகும். இவ்வளவும் இரண்டு நாட்கள் முழுவதும் செய்தால் எப்படி இருக்கும்? அப்படித்தான் நடந்தது காக்கைக் கூடு ஒருங்கிணைத்த “பறவை ஆர்வலர்கள் சந்திப்பு-2022 மார்ச் 26-27”.
நிகழ்வு நடந்தது ஜவ்வாது மலையில். வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் மாவட்டம், திருவண்ணாமலை மாவட்டம் மூன்று மாவட்டங்களை இணைக்கும் மலையாக ஜவ்வாது மலை உள்ளது. கிழக்கு தொடர்ச்சி மலைத் தொடரில் வரும் ஜவ்வாது மலை முன்பு ஆயிரக்கணக்கான யானைகள் வலம் வந்த பூமி. ஆனால் இன்று ஒரு கண் குருடாகிச் சுற்றும் ஒரு யானை மட்டுமே உண்டு. அவ்வப்பொழுது நாம் இருக்கும் இந்த பகுதிக்கும் வரும் என்று நண்பர் பிரவின் குமார் சொன்னார்.
மலை ரெட்டியூர் வனம் சூழ்ந்த கிராமம். அங்கிருந்து அரை கிலோமீட்டர் நடந்து இன்னும் அடர்ந்த காட்டுப் பகுதியில் பறவைகள் குறித்துப் பேசி விவாதிக்கச் சென்றோம். இந்த காட்டுப் பகுதியில் எப்பொழுதாவது சில மனிதர்கள் தங்கள் வளர்ப்பு மாடுகளை ஓட்டி வருகிறார்கள். இங்கு வாழும் மனிதர்களுக்கான மருத்துவம் பெரும்பாலும் சமவெளிப் பகுதிக்கே வரவேண்டும். மலை ரெட்டியூர்க்கு அருகில் உள்ள சமவெளிப் பகுதிகள் வாணியம்பாடி, ஆம்பூர், திருப்பத்தூர், வேலூர். இதில் வேலூர்தான் பெரிய நகரம் ஆனால் சிறிது தூரமும் கூட.
மலை ரெட்டியூரில் ஒரு அரசுப் பள்ளி உண்டு. சுற்றி இருக்கும் பிள்ளைகளுக்கு ஒரே கல்விக் கூடம். எப்பொழுதாவது வரும் பேருந்துக்காக மாணவர்,மாணவிகளும் காத்துக் கொண்டு இருக்கிறார்கள். இரண்டு, நான்கு சக்கர வாகன போக்குவரத்து மலைகளையும் ஆக்கிரமித்து விட்டது. ஆனால் இன்னமும் சுத்தமான காற்று வீசுவது ஆறுதல். வந்திருந்த பறவை ஆர்வலர்களில் உங்களுடைய இரண்டு நாள் அனுபவங்களைச் சொல்லுங்கள் என்ற கேட்டபொழுது இளம் பெண் சொன்ன வாசகம் சுத்தமான காற்றைச் சுவாசித்தேன்.
இந்த ஊர் சமவெளியும், மலைகளும், சிறு பாறைகளும் அடங்கிய பகுதியாக உள்ளன. அடர்த்தியான வீடுகள் இல்லை என்பதால் மனிதர்களும் குறைவு. ஆனால் பறவைகளுக்கும், வண்ணத்துப்பூச்சிகளுக்கும் குறைவு இல்லை. நம்மைச் சுற்றிப் பறந்து கொண்டு இருக்கும் பூச்சிகளில் பட்டாம்பூச்சிகளே அதிகம்.
பட்டாம்பூச்சிகள்
சமவெளியில் சாதாரணமாகப் பார்க்க முடிகிற வெந்தய வரியன்(Plain Tiger) பட்டாம்பூச்சி இங்கு ஒரு முறை மட்டுமே பார்க்க முடிந்தது. Pansy வகையான chocolate pansy, yellow pansy, blue pansy, lemon pansy, Peacock Pansy பட்டாம்பூச்சிகள் குடில் அருகிலேயே பறந்து கொண்டு இருந்தது. எண்ணக்கையிலும் மிகுதியாக இருந்தது. இதில் yellow pansy இங்குதான் முதன் முறையாகப் பார்க்கிறேன். மற்ற pansy வகை பட்டாம்பூச்சியைவிட yellow pansy உருவில் சிறியவை. உண்மையில் பட்டாம்பூச்சிகள் பார்க்க ஜவ்வாது மலை சிறந்த இடம் ஆகும்.
காய்கறி சந்தை
ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமையும் காய்கறி சந்தை கூடுகிறது. அதிகம் இல்லை 10 கடைகள் இருக்கலாம். பெரும்பாலம் சமவெளிப் பகுதியில் வாங்கக் கூடிய காயிகரிகளே விற்கப்படுகிறது. சந்தை என்பது ஒவ்வொரு ஊருக்கும் ஒரு குறியீடு. அந்த பகுதி மக்களிடம் தங்கள் பேச்சில் சந்தையில் வாங்கினேன், அடுத்த சந்தையில் வாங்கப் போகிறேன் என்ற பேச்சு அடிப்படும். அந்த அளவு சந்தைதான் இன்று பல கிராம மனிதர்களை ஒருங்கிணைக்கிறது. எங்கள் நிகழ்வின் உணவுக்காகவும் இங்குதான் காய்கறிகளை வாங்கிக் கொண்டோம்.
அங்கிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் ஆசியாவிலேயே பெரிய தொலைநோக்கி அமைந்துள்ள ஊர் காவலூர் வருகிறது. பரந்த நிலப்பரப்பில் அடர்ந்த மரங்கள் இடையில் தொலைநோக்கியை அமைத்து உள்ளனர். இங்கு இருக்கும் தொலைநோக்கியில் கண் வைத்துப் பார்க்க முடியாது. தொலைநோக்கியைக் கணினியுடன் இணைத்து உள்ளனர். கணினியில்தான் பார்க்க வேண்டும்.
இந்த தொலைநோக்கியில் சூரிய மண்டலம், பால்வீதியில் உள்ள நட்சத்திரங்களை ஆராய்வதில்லை. அதையும் தாண்டி உள்ள நட்சத்திரங்களை ஆராய்கிறது. கணினியில் அவை ஒரு புள்ளியாகத் தெரியும். அவ்வளவுதான். பொது மக்கள் பார்வைக்காகத் தொடக்கத்திலேயே சிறிய தொலைநோக்கி அமைத்து உள்ளனர். அதில் கண் வைத்துப் பார்க்கலாம். ஆனால் கோவிட் காரணமாக அனுமதி இல்லை என்றார்கள். ஊரே சாதாரணமாக இயங்கும்பொழுது இன்னும் இவர்கள் கோவிட் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார்கள்.
பறவை ஆர்வலர்கள் வருகை
சனி-ஞாயிறு பறவை ஆர்வலர்கள் சந்திப்பு. அதற்கு முதல் நாள் வெள்ளிக்கிழமையே தூரத்தில் இருப்பவர்கள் வரத் தொடங்கினர். மொத்தம் 35 நபர்கள் வரை தங்க முடியும். வந்த நண்பர்களுடன் வெள்ளிக்கிழமை மாலை அந்த பகுதியைச் சுற்றிப் பார்க்கத் தொடங்கினோம். குடிலுக்கு அருகிலேயே உள்ள மரத்தில் பச்சை சிட்டு இருப்பதைப் பார்த்துவிட்டோம். ஒரே கொண்டாட்டம் எங்களுக்கு. இரண்டு நாள் நிகழ்வு முடியும் வரை எங்களுடனேயே பச்சை சிட்டு இருந்தது. நாங்கள் அங்கிருந்து சென்ற பிறகும் அவை அங்கேயேதான் இருக்கும். அதன் இடத்தில்தான் நாங்கள் இருந்தோம்.
மாலை உணவு காய்கறி சந்தை கூடும் இடத்தில் வந்து ஒரு ஹோட்டலில் வாங்கிக் கொண்டோம். பொதுவாகக் கிடைக்கும் பராட்டோ, தோசை. வண்டியை நிறுத்தியவுடன் ஒரு சிறுவன் வண்டி அருகில் வந்து பணம் கேட்டான். கொடுக்க முடியாது வேண்டுமென்றால் உணவு வாங்கி கொடுக்கிறோம் என்று சொன்னோம். சரி என்று முட்டையுடன் தோசை என்று சொன்னான். சில நொடிகள் பிறகுதான் தெரிந்தது அவன் முழுவதும் குடித்து இருக்கிறான். வயது 13 இருக்கலாம்.
அவன் தன் நிலையில் இல்லை. ஆடிக் கொண்டு இருந்தான். ஒரு இடத்தில் நிற்க முடியவில்லை.
அருகில் ஒரு வண்டி வந்தால் அங்குப் போய் கேட்கத் தொடங்கினான். இந்த பக்கம் இருந்து
அந்த பக்கம் ஓடுகிறான். சுற்றிச் சுற்றி வலம் வந்தான். உள்ளூர் நபர்கள் அவனைப் பற்றித்
தெரிந்து இருப்பதால் துரத்துகிறார்கள். எங்களைவிட்டு வேறு பக்கம் சென்றுவிட்டான். அங்கு
அவன் அப்பா என்று நினைக்கிறேன். அவரும் முழுவதும் குடித்துத் தள்ளாடிக் கொண்டு இருக்கிறார்.
கடைசியில் இரவு உணவு வந்து இருக்கும் நண்பர்களுக்குச் சேர்த்து வாங்கி சென்றோம். அவன்
அருகில் வரவில்லை.
இரக்கம் காட்டுவது, ஆளும் அரசை நினைத்து வெட்கப்படுவதா என்று யோசித்துக் கொண்டு இருந்தேன். அரசு டாஸ்மாக்கை மூடினால் இவன் தடம் மாறி செல்ல நிச்சயம் வாய்ப்பு குறைவு என்று தோன்றியது. ஆனால் நிர்வாகமே டாஸ்மாக்கில்தானே நடக்கிறது. சாராயத்தை நிறுத்தினால் அரசு தள்ளாடிவிடும் என்கிறது அரசு. ஆனால் , நிறுத்தாவிட்டால் மக்கள் தள்ளாடுகிறார்களே. அரசு காது என்ன மனிதர்கள் காதா உடனே கேட்பதற்கு.
காட்டுப்பகுதியில், நிலவு வெளிச்சத்தில் நடந்து செல்வது சிறந்த அனுபவம். உணவு வாங்கிக் கொண்டு நடந்து சென்றோம். எங்களைச் சுற்றிலும் மரங்கள் சூழ்ந்து. பறவைகள் நிறைந்து உள்ளது. ஒத்தையடிபாதை என்பதால் கையில் உள்ள மொபைல் வெளிச்சத்தையும் பயன்படுத்திக் கொண்டோம். பாம்புகள் நடமாட்டம் சாதாரணமாக இருக்கும் என்றார் நண்பர். இரவு நடை பெரும்பாலும் பாதை மாற வாய்ப்பு உண்டு. அப்படி வேறு பாதையில் நடக்க தொடங்கினோம். சில அடிகளில் கண்டுபிடித்து பழைய பாதைக்குத் திரும்பினோம்.
நிகழ்வு
கலந்து கொண்ட நண்பர்கள் |
பறவைகள் குறித்துப் பேசுவது-விவாதிப்பது-கற்றுக் கொள்வது-நோக்குவது என்ற அடிப்படையில் நிகழ்வை ஒருங்கிணைத்தோம். காட்டுயிர் ஒளிப்பட நிபுணர், பறவை காப்பிடங்கள் புத்தகத்தின் ஆசிரியர், உயிர் இதழ் ஆசிரியர் ஏ.சண்முகானந்தம் அவர்கள் தன் அனுபவங்களுடன் காட்டுயிர் ஒளிப்படம் குறித்து, பறவைகள், பூச்சிகள், காடு குறித்து விரிவாகப் பேசினார்.
காடுகளில் பல வருடங்கள் தங்கி காட்டுயிர்களைப் படம் எடுத்த அனுபவம் உள்ளவர் என்பதால் ஒவ்வொரு விலங்கும் என்ன செய்யும், படம் எடுக்க எப்படி முயற்சித்தோம், புலிகள் குறித்து விரிவான விவரிப்பு என்று நேரம் சென்றதே தெரியாமல் பேசியதை ஆர்வமாகக் கேட்டுக் கொண்டு இருந்தோம்.
வந்திருந்த பலரில் சிலர் புகைப்படம் எடுப்பதில் ஆர்வம் கொண்டு இருந்தனர். அதற்கு
ஏற்றார் போல் நீண்ட லென்ஸ் உடைய கேமரா வாங்கி தன் ஆர்வத்திற்கு ஏற்ப பறவைகளைப் படம்
எடுத்தனர். அவர்களுக்கு சண்முகானந்தம் அவர்களின் அனுபவம் நிச்சயம் பயன்பட்டு இருக்கும்.
கிழக்கு தொடர்ச்சி மலை குறித்து விரிவாக சொன்னார் பிரவின் குமார். இந்த மலையில் ஒரு காலத்தில் ஆயிரக்கணக்கான யானைகள் நடமாடிய பூமி என்ற தகவல் உடலை சிலிர்க்கவைத்தது.
காட்டு ஆந்தை
எங்களைச் சுற்றி எந்த நேரமும் பறவைகள் குரல் கேட்டுக் கொண்டு இருந்தது. புள்ளி
ஆந்தை அனைவரும் பார்த்து இருக்க வாய்ப்பு உண்டு. இங்கேயும் புள்ளி ஆந்தை அங்கும்- இங்கும்
பறந்து கொண்டு இருந்தது. சாப்பாடு தயாராகும் இடத்தின் பின்புறம் உள்ள பாழடைந்த கட்டத்தில்
இரண்டு புள்ளி ஆந்தை எந்த நேரமும் இருப்பதை ஒரு முறைக்குப் பல முறை பார்த்து உறுதி
செய்து கொண்டோம்.
ஆனால் இதே காட்டுப்பகுதியில் காட்டு ஆந்தை ஒன்றை பார்த்துவிட்டோம். அனைத்து நபர்களும் உற்சாகம் ஆகிவிட்டோம். ஒரு முறையாவது பார்த்துவிட வேண்டும் என்று எங்கே காட்டு ஆந்தை பார்த்தீர்கள் என்று கேட்டு பார்க்க சென்றார்கள்.
முதல் நாளைவிட இரண்டாவது நாள் காலை ஒரு மரத்தில் நீண்ட நேரம் அமர்ந்து இருந்தது காடு ஆந்தை. இப்பொழுது அனைவரும் பார்த்துவிட்டோம். புள்ளி ஆந்தை அளவுதான் காட்டு ஆந்தை இருந்தது. நேரடி பார்வையில் புள்ளி ஆந்தை என்று நினைக்க தோன்றும் ஆனால் அவை காட்டு ஆந்தை.
பெயருக்கு ஏற்றாப்போலவே காட்டில் மட்டுமே பார்க்க முடிகிற ஆந்தை என்றாலும் கேமராவுக்கு நன்கு ஒத்துழைத்தது. தேவைக்கு ஏற்ப படம் எடுத்தனர் அனைவரும். மரத்தில் உள்ள சிறு பொந்தில் இருக்கும்பொழுது காட்டு ஆந்தையை கண்டுபிடிப்பது மிக சிரமம். உருமறைத்தோற்றம் என்பது ஆந்தைக்ளுக்கு சரியாக பொருந்துகிறது.
பறவைகளை குறித்து மருத்துவர் வி.விக்ரம்குமார் படங்களுடன் விவரித்து சொன்னார். ஒவ்வொரு பறவை தகவல்களுடன் அவை எப்படி, எங்கு எடுத்தேன் என்பதையும் சேர்த்து சொன்னது கேட்பவர்களுக்கும் ஆர்வம் அதிகமாகியது.
நீண்ட வால் கொண்ட வேதிவால் குருவி பறவையை படம் எடுக்க வேறு எங்கேயும் செல்லவில்லை தான் பணிபுரியும் ஆண்டியப்பனுர் மருத்துவ வளாகத்தில் உள்ள மரத்தில் இருந்தது. பார்த்த உடன் கையில் கேமரா இல்லை. உள்ளே சென்று எடுத்துவரும்பொழுது பறவை அங்கு இல்லை. மீண்டும் பார்க்காமல் படம் எடுக்காமல் செல்வதில்லை என்று அங்கேயே சில நிமிடங்கள் கவனித்ததில் வந்துவிட்டது மீண்டும் வேதிவால் குருவி.
இப்படி பறவைகளை பற்றி விக்ரம்குமார் சொல்ல சொல்ல நாம் எப்பொழுது இந்த பறவையை பார்த்தோம் அப்பொழுது அவை என்ன செய்து கொண்டு இருந்தது என்று நினைக்க வைத்தது. மருத்துவம்-பறவைகள் என்று பல தளங்களிலும் இயங்குகிறார் விக்ரம்குமார்.
மதிய உணவு முடிந்து தொடங்கிய முதல் நிகழ்வில் பறவைகள் குறித்து வினாடி வினா நடைபெற்றது. பறவை ஆர்வலர் ஆனந்த், வினாடி வினா நிகழ்வை நடத்தினார். சரியாக சொல்பவர்களுக்கு பறவை கையேடு வழங்கப்பட்டது. எந்த அளவு பறவைகள் குறித்து அறிந்து வைத்து உள்ளோம் என்ற சுயபுரிதல், மற்றும் இன்னும் எவ்வளவு தெரிந்து கொள்ள வேண்டும் என்று தெளிவையும் கற்றுக் கொடுத்தது நிகழ்வு.
இரண்டாவது நாள் பறவைகளை குறித்து நன்கு அறிந்த அன்பரசி பேசினார். தான் எடுத்த படங்களுடன் பறவைகளின் சிறப்புகளை விவரித்து சொன்னார். இதனால் ஒவ்வொருவரும் இதுபோல் தாங்கள் பார்த்த, எடுத்த பறவைகளை பதிவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் உருவாக்கியது.
பறவைகளை பார்க்க தொடங்கிவர்கள் தொடக்கத்தில் கேமரா வாங்காமல் இருப்பது நல்லது. கேமரா வாங்கிவிட்டால் பறவைகள் பார்க்காமல் படம் எடுக்கும் ஆர்வம் வந்துவிடும். பிறகு பறவைகளை பற்றி ஒன்றும் தெரியாமல் போகும். அதனால் முதல் இரண்டு வருடம் பறவைகளை பார்த்து பிறகு கேமரா வாங்குவது சிறந்தது. அன்பரசி அதே போல் செய்து உள்ளார். அதனால் சரியாக விவரிக்க முடிந்தது.
எளிமையான உணவு ஆனால் சுவையான உணவு
இரண்டு நாளும் எளிமையான உணவு பரிமாறப்பட்டது. இட்லி-சப்பாத்தி-சாப்பாடு-பிரிஞ்சி ஒவ்வொரு வேலையும் இதில் ஒரு உணவு. இதற்கு ஏற்ற சட்னி, சாம்பார் தயாராக இருந்தது.. சூடான உணவு அங்கு நிலவிய குளிருக்கு இதமாக இருந்தது. இடையிடையே பால் இல்லாத தேநீர். இதன் கூடவே வந்திருந்த நண்பர்கள் அனைவரும் வெளியில் இருந்து வாங்கி வந்த பிஸ்கட் , கடலை மிட்டாய் என்று பகிர்ந்து சாப்பிட்டோம்.
நீண்ட ஒரு அறைதான் தங்குவதற்கு. அதில் ஆண்கள் அனைவரும் தங்கிக்கொண்டோம். அங்கேயே கதவுடன் கூடிய இரண்டு சிறிய அறை அதில் பெண்கள் தங்கினார்கள். முதல் ஆச்சரியம் நிறைய மகளிர் கலந்து கொண்டது. சிலர் குழந்தைகளையும் அழைத்து வந்து இருந்தனர். பறவை குறித்து பேசுவதை கேட்க ஆர்வமாக மக்கள் வருவார்களா என்று நினைக்க தோன்றியது. . எதிர்பார்த்தத்தை விட அதிகமாகவே கலந்து கொண்டனர்.
ITயில் பணிபுரிபவர், ரயில் ஓட்டுபவர், RBI வங்கி அதிகாரி, மருத்துவர், தொழில் செய்பர்கள் என்று ஆண்கள் பெண்கள் இதில் அடக்கம். சிறுவர்கள் கற்றுக் கொள்ள வருவார்கள் என்று நினைத்தால் அனைவருக்கும் கற்றுக் கொடுக்கும் நிலையில் அவர்கள் இருந்தார்கள்.
பறவை பெயர்களை சர்வ சாதாரணமாக சொல்கிறார்கள். அதே போல் பார்த்தவுடன் அவை இந்த பறவை என்று கண்டும் பிடித்துவிடுகிறார்கள்.
கிணறு - பம்புசெட்
குடிலுக்கு வெளியே கிணறு ஒன்று உண்டு. நீச்சல் தெரிந்தவர்கள் அதில் குதித்து குளித்துக்கொண்டனர். நீச்சல் தெரியாத சிலர் கிணற்றில் இருந்து நீர் எடுக்கும் பம்ப்செட்டில் குளித்தனர்.
என்னை போன்ற சிலர் நீரை சூடாக்கி பாத்துரூமில் குளித்தோம். இடையிடையே மழை பெய்ய வாய்ப்பு உண்டு என்ற செய்தி ஓடி கொண்டு இருந்தது. அதற்கு ஏற்றாற்போல் வானமும் மழை மேகங்களை தாங்கி எங்கள் குடிலுக்கு மேல் வந்து நின்றது.
மழை வரும் சிலரும், இல்லை கடந்து சென்றுவிடும் என்று சிலரும் பேசிக் கொண்டோம். இரண்டும் இல்லாமல் மழை துளி மட்டும் கொஞ்சம் வீழ்ந்தது. அவை பெரிய தாக்கத்தை உருவாக்கவில்லை. முதல் நாள் மாலை பறவைகளை பார்க்க அனைவரும் கிளம்பினார்கள். தலைவலி ஏற்பட்டதால் வெளியே செல்லாமல் குடிலில் தங்கிவிட்டேன்.
நீர்புல்ப் பறவைகள் பார்ப்பதற்கு ஏற்ப பெரிய குளம் மலை ரெட்டியூரில் இருந்தது. அதில் நாமக்கோழி, தாழைக்கோழி மடையான், உண்ணி கொக்கு என்று பல நீர் பறவைகள் பார்க்க முடிந்தது. இன்னும் சில குளங்களும் அருகில் இருந்தது.
மொத்தம் 50க்கும் மேற்பட்ட பறவை வகைகளை பார்த்து பதிவு செய்து உள்ளோம். . சில பறவைகளின் குரல்களை கேட்டோம்
1.Jungle
Owelt
2.Grater
racket tailed Drongo
3.Leaf
Bird
4.Red
Whishkered Bulbul
5.Redvnetd
-Bulbul
6.Purple
Rumped Sunbird
7.Tailor
Bird
8.Rufous
Treepie
9.Rose
Ringed Parakeet
10.House
corw
11.Jungle
crow
12.Spotted
Owl
13.Yellow
billed babbler
14.Common
Myna
15.White
browed bulbul
16.Oriental
Magpie Robin
17.White
Browed Wagtail
18.Lauging
Dove
19.Spotted
Dove
20.Common
Coot
21.Greater
Painted Snipe
22.Spot-billed
Duck
23.Black
Drongo
24.coppersmith
barbet
25.Jeordn's
bushlark
26.Cattle
egret
27.Southern
coucal
27.Southern
Grey shrike
28.Pied
bushchat
29.Pond
Heron
30.Pheasant
tailed Jacana
31.Red
wattled-lapwing
32.Common
Iora
33.Indian
Golden oriole
34.Indian
Peafowl
35.Indian
Roller
36.Tickell's
blue Flycatcher
37.Oriental
white eye
38.Blue
Throated Flyucatcher
39.Eurasian
Moorhen
40.Hawk
cuckoo
41.Ashy
Prinia
42.Chesnut
Tailed Starling
43.Common
Wood Shrike
44.White
Throated Kingfisher
45.White
Breasted waterhen
46.White
cheeked barbet
47.Shikra
48.Asian
Paradise Flycatcher
49.Pale
billed flowerpecker
50.Painted Snipe
இன்னும் இரண்டு நாட்கள் இருந்து இருந்தால் இன்னும் சில பறவைகளை பார்த்து இருக்க முடியும். காரணம் ஒவ்வொரு நாளும் காடு ஆச்சரியம் தரக்கூடியவைதான்.
புத்தகங்கள்
பறவை தொடர்பான புத்தகங்களை ஆர்வமாக வாங்கினார்கள். நேரில் பறவைகளை பார்ப்பது அதன் தொடர்ச்சியாக பறவைகளை குறித்து மேலும் தகவல்களை தெரிந்து கொள்ள பறவை புத்தகங்கள் பயன்படும். தமிழில் வந்து உள்ள பறவை புத்தகங்கள் அனைத்தும் காட்சிப் படுத்தி இருந்தோம்.
நிகழ்வு நடக்க பெரிய அளவில் உதவிய நண்பர்கள்
கட்டணம் இல்லாமல் நிகழ்வு நடக்கும் இடத்தை வழங்கிய மலை ரெட்டியூரில் வசிக்கும், சுருக்கமாக அழைக்கப்படும் MG சார், இதுபோல் நடத்தலாம் என்று யோசித்தபொழுது மலையில் நடத்தலாம் அதற்கான ஏற்பாடுகள் நான் செய்துவிடுகிறேன் என்று சொன்ன நண்பர் ஆற்றல் பிரவீன் குமார், காக்கைக் கூடு செயல்களுக்கு என்றைக்கும் துணை நிற்கும் ஆனந்த, கவிஅரசன்,நிர்மல்,பாலாஜி, ஜோசப், சிவா இவர்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்.
கலந்து கொண்ட நண்பர்களுக்கும் மிக்க நன்றிகள்.
நிகழ்வின் முடிவில் கலந்து கொண்ட நண்பர்கள் அனைவர்க்கும் சான்றிதழ் வழங்கினோம்.
ஆச்சரியமான சில விஷயங்கள் நடந்தது. இங்கு கலந்து கொள்ளும் அணைவரும் புதியவர்கள். அங்குவந்துதான் அறிமுகமாகினோம். ஒவ்வொருவரும் விலையுயர்ந்த கேமரா, பைனாகுலர், மொபைல் வைத்து இருந்தோம். சார்ஜ் போடுவது, கீழே வைத்து அப்படியே பறவை பார்க்க கிளம்பி நீண்ட நேரம் பிறகு வருவது என்று இரன்டு நாட்கள் கழிந்தாலும் ஒவ்வொருவர் பொருட்களும் அப்படியே இருந்தது. ஒருவருக்கொருவர் பெரிய நம்பிக்கையுடன் இருந்தனர்.
இரன்டு நாள் முடிந்து அனைவரும் சொன்ன வாசகம் அடுத்து எப்பொழுது நடத்துவீர்கள்?
அடுத்த பறவை ஆர்வலர்கள்
சந்திப்பு இன்னும் விரிவாக நடத்தலாம் என்று எண்ணியுள்ளோம்.
-செழியன். ஜா
படங்கள் : குழு நண்பர்கள்
செழியன் ஐயா, அருமையான நிகழ்வு மற்றும் பதிவு முழுப் பதிவையும் படித்து முடிக்கும்போது நானே அந்நிகழ்வில் கலந்துகொண்டது போல் தோன்றுகிறது.
ReplyDeleteஇதுபோன்ற நிகழ்வுகளை மாவட்ட வாரியாகவோ அல்லது மண்டல வாரியாகவோ நிகழ்த்த வேண்டும் என்பது எனது கருத்து.
மேலும் மகளிர் மற்றும் சிறுவர்கள் கலந்துகொண்டது பாராட்டுக்குரியது.
தங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்.