Cedar Waxwing |
ஒவ்வொரு வருடமும் குளிரைப் பொருட்படுத்தாமல் இந்த அழகிய பறவையைக் காணச் செல்ல நான் தயங்குவதில்லை.
சிடார்
வேக்ஸ்விங் பறவை பாடும் பறவைக் குடும்பத்தைச் சார்ந்தது. இந்தப் பறவை, சுமார்
6”-7” (15—18cm)நீளத்துடன், 30 கிராம்(1oz) எடையுடன்
ராபின் பறவையை விடச் சற்றுச் சிறியதாக இருக்கும்.
பால்
வேறுபாடு கிடையாது. இதன் உடலின் மேற்பகுதி, செம்பழுப்பும்
சாம்பலும் கலந்த நிறத்துடன் பட்டுப் போன்று மென்மையாகவுள்ளது. அடிப்பகுதி வெளிர் மஞ்சள்
நிறத்திலும் சிறகுகளும் வாலும் சாம்பல் நிறத்திலும் வாலின் நுனிப் பகுதிகள், கரைத்து
வைத்த மஞ்சள் கலவையில் தோய்த்து எடுத்தது போல் பளிச்சென்ற மஞ்சள் நிறத்துடனும் காணப்படுகின்றன.
உச்சந் தலையில் காணப்படும் பழுப்பு நிறக் கொண்டை, சீராகப்
பின் நோக்கி வாரிவிட்டது போலிருக்கும். கொண்டையில் காணப்படும் இறகுகளைத் அதன்
உணர்ச்சிகளுக்கு ஏற்றவாறு உயர்த்தவோ, தாழ்த்தவோ
இந்தப் பறவையால் முடியும்.
இதன்
முகத்தில், அலகிலிருந்து
கொண்டை வரை கண்களைச் சுற்றிச் செல்லும் கருப்பு நிறப் பட்டையும் அதன் கீழே காணப்படும்
வெண் பட்டையும் இந்தப் பறவைக்கு முகமூடி அணிந்திருப்பது
போன்ற தோற்றத்தைக் கொடுக்கின்றன.
உலகில்
மூன்று வகை வேக்ஸ்விங் பறவைகள் காணப்படுகிறன. இவற்றில் சிடார் வேக்ஸ்விங் பறவைகளும்(Bombycilla cedrorum) பொகிமியன்
வேக்ஸ்விங் பறவைகளும்(Bombycilla garrulus) வட அமெரிக்காவிலும்
கனடாவிலும் காணப்படுகின்றன. மூன்றாவது வகை ஜப்பானில் காணப்படுகிறது.
நாங்கள்
வசிக்கும் வட கலிபோர்னியா வளைகுடாப் பகுதியில் சிடார் வேக்ஸ்விங் பறவை மட்டுமே காணப்படுகிறது.
இந்தப்
பறவை பழங்களையும் பூக்களையும் சிறு பூச்சிகளையும் முக்கிய இரையாகக் கொள்கிறது. பழங்களை
மட்டுமே உண்டு பல மாதங்கள் இதனால் வாழ முடியும்.
ஒரு இடத்தில் பழங்கள் தீர்ந்தவுடன் இரை தேடி வேறு இடங்களுக்குச் செல்லும். பழங்களை
நாடி, வெவ்வேறு
இடங்களுக்குச் செல்வதால் “நாடோடி”(normad) என்றும் அழைக்கப்படுகிறது.
ஒற்றுமையாக இரை பகிர்ந்து கொள்தல்
இரை உண்ணும் நேரம் போட்டியோ சச்சரவோ இல்லாமல் கூட்டமாக மரங்களில் அமர்ந்து உண்ணும். சில நேரங்களில் மிகவும் கனிந்த பழங்களை உண்டு கனிகளிலுள்ள மதுவால் போதை ஏற்பட்டு மயங்கி விழுந்து விடுகிறது!!
இந்தப்
பறவை, பாடும்
பறவைகள் குடும்பத்தைச் சார்ந்த போதிலும் பாடுவதில்லை. கூட்டமாக வாழ்வதால் இணை தேடப் பாடத் தேவையில்லை. எதிரிகள் அணுகும் போது பிற பறவைகளை எச்சரிக்கக் குரல் எழுப்புகிறது. ஆகவே, இது
“பாடும் பறவைகளில் பாடாத பறவை” என்ற பெயரையும் பெற்றுள்ளது.
இனப்பெருக்கக்
காலத்தைத் தவிர்த்துப் பிற காலங்களில் தனக்கென்று வாழ்விடத்தைத் தேர்தெடுப்பதில்லை. நீண்ட வலசையும் போவதில்லை.
இனப்பெருக்கக்
காலத்தில் பெண் பறவையைக் கவர, ஆண்
பறவை, பரிசாகப் பழங்களையோ பூக்களையோ பெண் பறவைக்கு
ஊட்ட முயல்கிறது. பெண் பறவை, விருப்பப்
பட்டால் மாத்திரமே பரிசைப் பெற்றுக் கொண்டு ஆண் பறவைக்குத் திருப்பி ஊட்டுகிறது. இவ்வாறு பல முறைகள் பரிசை மாற்றிய பின்பு பெண் பறவை பரிசுப் பொருளை ஏற்றுக் கொள்கிறது!.
இணை
சேர்ந்த பின் இரண்டு பறவைகளும் இணைந்து கூடு கட்டுகின்றன. 5-6 நாட்களில் கூடு கட்டிய பின்பு பெண் பறவை 4-5 முட்டைகள் இடுகிறது, 12-14 நாட்களில் குஞ்சுகள் பொரித்தவுடன் பெற்றோர் பறவைகள் இரை ஊட்டி வளர்க்கின்றன.
No comments:
Post a Comment