Friday, 1 January 2021

குளிர்காலத்தில் சான் பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதிக்கு வரும் சிட்டுக் குருவிகள் (Sparrows)

 

White-crowned sparrow
White-crowned sparrow 

ஆண்டுதோறும் குளிர்காலம் ஆரம்பமாகும் போது சில வகைச் சிட்டுகள் தவறாமல் கலிபோர்னியா மாநிலத்திற்கு வலசை வருகின்றன. நாங்கள் வாழும் சான்பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதிக்கு அதிக எண்ணிக்கையில் வரும் சிட்டுகள் White-crowned Sparrow(Zonotrichia leucophrys)வும்,  Golden-crowned  Sparrow(Zonotrichia atricapilla)வுமாகும்.

வட அமெரிக்காவிலுள்ள அலாஸ்கா மாநிலத்தையும் தென் கனடாப் பகுதியையும் பிறப்பிடமாகக் கொண்டுள்ள இந்தச் சிட்டுகள், குளிர்காலம் நெருங்கும் போது தெற்கு நோக்கி வலசை வருகின்றன. 

இவற்றை செப்டம்பர் மாதம் முதல் ஏப்ரல்  மாதம் வரை கலிபோர்னியாவில் பூங்காவனங்களிலும், வீட்டுத் தோட்டங்களிலும் புதர்க் காடுகளிலும் புல் வெளிகளிலும் காணமுடியும். இந்தப் பறவைகள் பெரும் பான்மையான நேரம் நிலத்தை அல்லது இலை,சருகுகளைக் கிளறி விதைகளை உண்கின்றன. தளிர் இலைகளையும் பூக்களையும் விருப்பமாக உண்கின்றன. சிறிது ஆரவாரம் கேட்டாலும் ஒன்றாகப் பறந்தோ அல்லது புதருக்குள் மறைந்தோ போய் விடுகின்றன.

கோடைக்காலத்தில் புழு, பூச்சிகளை உண்கின்றன.

பொதுவாக White-crowned Sparrowவும் Golden-crowned Sparrowவும் கூட்டாகச் சேர்ந்து இரை தேடுவதைக் காணலாம்.

இந்தச் சிட்டுகளை எளிதாக இனம் கண்டு கொள்ள முடியும்.  

White-Crowned Sparrow Juvenile

White-crowned Sparrow

 முழு வளர்ச்சியடைந்த சிட்டு, நீண்ட வாலுடன் சாம்பல் நிறமுகத்தோடும் தலையின் உச்சிப் பகுதியில் கருப்பு, வெள்ளை நிறக் கோடுகளுடனும் காணப்படும். உடல், சிறகுகள் பழுப்பு நிறம். வயிற்றுப் பகுதியிலும் முதுகுப் பகுதியிலும் வரைகள் கிடையாது.

இளம் பறவையின் தலை-உச்சியில் பழுப்பு நிறக் கோடுகளும் இளம் மஞ்சளும் பழுப்பும் கலந்த  கோடுகளும் காணப்படும் . அலகு மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்தில்   காணப்படும். 

 
Golden-Crowned Sparrow

Golden-crowned Sparrow

இந்தச் சிட்டு, உருவத்தில் பிற sparrowக்களை விடச் சற்றுப் பெரியது. இனப் பெருக்கக் காலத்தில் கருமையான தலைப் பகுதியின் உச்சியில் மஞ்சள் நிறக்கோடு பளிச்சென்றிருக்கும். குளிர்காலத்தில் தலையின் உச்சியிலுள்ள மஞ்சள் மங்கியிருக்கும். அலகு சாம்பல் நிறம். 

இந்த இரண்டு பறவைகளும் குளிர்காலத்திலும் பாடுகின்றன.

இனப் பெருக்கக் காலத்தில் ஆண் White-crowned Sparrow பாடும் பாடல் மிகவும் இனிமையானதென்று கருதப்பட்டுப் பலஆராய்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன.

அதற்குமாறாகGolden-crowned Sparrowவின் பாடல், கேட்பவர்களுக்குத் துயரமாக ஒலிக்கிறதென்று எண்ணப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டின் இறுதியில் யூக்கானிலும் (கனடா), அலாஸ்காவிலும் தங்கச் சுரங்கங்களில் பணிபுரிந்த தொழிலாளிகள் தங்கம் கிடைக்காமல் மனவருத்தத்தோடு இருந்தநேரத்தில் இந்தச் சிட்டு,Oh dear me”, “ I’m so tired” “No Gold here” என்று துயரத்தோடு தாழ்ந்த சுருதியில் (with three notes) தொழிலாளிகளின் அவல நிலையைச் சுட்டிக் காட்டிப் புலம்புவதாக எண்ணினர்.   அவர்கள், இந்தப் பறவையைWeary Willie”  என்று அழைத்தது மட்டுமல்லாமல் அதைப் பற்றிய தகவல்கள் ஒன்றும் சேகரிக்கவில்லை. இன்றும் இந்தப் பறவையின் வாழ்விடத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் அதிகம் செய்யப்படவில்லை.                                                                                                             

இந்தச் சிட்டுகளை நமது தோட்டங்களுக்கு வரவழைக்கத் தானியங்களும் நீரும் கொடுத்தால் போதும்!

- சற்குணா பாக்கியராஜ் 

 

No comments:

Post a Comment