Sunday, 5 July 2020

ஒரு பறவையின் கால்களுக்கு இத்தனைப் பலமா? - Secretary Bird



2017ஆம் ஆண்டு, கென்யாவிலுள்ள மாசா மாரா தேசிய பூங்காவிற்குச் (Massa Mara National Park) சென்ற போது, செக்கிரட்டரி பறவையைக் காணச் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் மிடுக்கான நடை, அழகிய தோற்றம், பாம்பை விழுங்கின வேகம் மனதிலும், புகைப்படத்திலும் பதிந்து விட்டன. இந்தப் பறவையின் இரை தேடும் திறமையைக் கேட்ட போது மிகவும் வியப்பாக இருந்தது.

ஆப்பிரிக்க நாடுகளில், புல் வெளிகளிலும், வறண்ட நிலப்பகுதிகளிலும் காணப்படும் செக்கிரட்டரி பறவை, பருந்துகள், கழுகுகள் இனத்தைச் சார்ந்த போதிலும், பருந்துகளைப் போல் வானில் பறந்து இரை தேடாமல், நிலத்தில் நடமாடி, இரையைப் பிடிக்கும் தன்மை வாய்ந்தது.  உயரமாகப் பறக்கத் திறமையுடையதாக இருந்த போதிலும், பகல் முழுவதும் நடந்து இரை தேடிய பின், மாலை நேரத்தில் மர உச்சிகளில் அடைகிறது. வலசை போவதில்லை.
           
செக்கிரட்டரி பறவையின், தலைப்பகுதி கழுகைப் போலவும், வளைந்த அலகையும் உடையது. உருவத்தில், பருந்து, கழுகு இனங்களை விட மிகவும் பெரியது. கால்கள் நீண்டு மெலிந்திருக்கும். நன்கு வளர்ச்சியடைந்த செக்கிரட்டரி பறவை, நான்கு அடி உயரமாகவும், ஐந்து முதல் ஒன்பது இராத்தல் எடை பருமனாகவும் இருக்கும். ஆண், பெண் பறவைகள் தோற்றத்தில் ஒன்று போலிருக்கும். இவை இணை பிரியாதவை. அக்கேசியா(Acacia) போன்ற உயர்ந்த மரங்களில் கூடு கட்டி இனப்பெருக்கம் செய்கிறது.


சுமார் 1800 நூற்றாண்டில், இந்தப் பறவையை முதல் முதலாகப் பார்த்த ஆங்கிலேயர்கள் இதனை, செக்கிரட்டரி பறவையென்று அழைத்ததின் காரணம், இதன் தலையிலுள்ள நீண்ட கருப்பு இறகுகளும், சாம்பல் நிற இறக்கைகளும், கருப்பான நீண்ட வால் இறகுகளும், கருப்பு இறகுகளினால் மூடப்பட்ட தொடைப் பகுதிகளும், இங்கிலாந்தில், அந்த சமயத்தில் குமஸ்தா(clerk)பதவியில் பணிபுரிந்த ஆண்கள், முழங்கால் வரையுள்ள கருப்புக் கால் சட்டையும், சாம்பல் நிறக் கோட்டும்(tailcoat), அணிந்து, இறகுப் பேனாவை[quill pen) காதில் சொருகியிருப்பதைப் போன்று தோற்றமளித்ததால்தான். ஆனால், இந்தப் பறவையின் உண்மைப் பெயர், “வேட்டையாடும் பறவை” (Hunter bird).


செக்கிரட்டரி பறவை, புழு, பூச்சி, ஓணான், பாம்பு போன்ற பிராணிகளை வேட்டையாடி உண்ணும். ஆகையால் இந்தப் பறவையை, “உழவனின் நண்பன்” என்று அழைக்கின்றனர். சில விவசாயிகள், இதனைப் பயிர்களைப் பாதுகாக்கவும், நச்சுப் பாம்புகளைக் கொல்லவும், வளர்க்கின்றனர்.

இந்தப் பறவையின் கால்கள், பருந்து இனங்களின் கால்களை விட மிக நீண்டதாகவும், நகங்கள் கூர்மையற்றதாகவும் இருப்பதால், வேகமாக நடக்க முடியும். ஒரு நாளில், சுமார் இருபது மைல்கள் தூரம் நடந்து இரை தேடும். நகங்கள் கூர்மையற்றதால், ஒடி, இரையைப் பாதங்களால் ஓங்கி மிதித்து, கொன்று அல்லது செயலிழக்க வைத்து, விழுங்கி விடும். அலகினால் கொத்தி, இரையைத் தூக்கிச் செல்லவும் முடியும்.

இந்தப் பறவை, பாம்புகளை வேட்டையாடும் திறமை மிகவும் அதிசயத்தக்கது! பாம்பை விரட்டி, அதன் தலையைக் குறி வைத்து, உயர எழும்பி, தலையின் மேல் பல முறை குதித்து, அதன் கழுத்தெலும்பை முறித்து, கொன்று பாம்பை விழுங்கி விடும். நச்சுப் பாம்புகளையும் விட்டு வைப்பதில்லை.

அமெரிக்காவில், சான்டியாகோ மிருகச் சாலையில், இந்தப் பறவையை வளர்க்கிறார்கள். இதனை வெகு எளிதில் பழக்க(domesticate) முடியும்.


சிலஆண்டுகளுக்கு முன்பு, லண்டன் பல்கலைக்கழத்தைச் சார்ந்த சில ஆராய்ச்சியாளர்கள், செக்கிரட்டரி பறவையின் கால்கள், மெலிந்து, நீண்டு(lanky)  காணப்பட்ட போதிலும், எவ்வாறு இவ்வளவு வேகத்தில், பாம்பை மிதிக்க முடிகிறதென்று அறிய ஆராய்ச்சி நடத்தினர். அதற்காக, பருந்துகளைப் பாதுகாக்கும் இடத்தில் (Hawk Conservancy Trust in Hampshire) “மெடலின்” என்ற பழக்கப்பட்ட(domesticated)செக்கிரட்டரி பறவையின் முன் ரப்பர் பாம்பை ஓட விட்டு, அந்தப் பறவை, ரப்பர் பாம்பைக் கொல்ல முயல்வதை ஆராய்ந்தனர். அவர்களுடைய முடிவென்னவெனில், “செக்கிரட்டரி பறவை, இரையை,  ஒவ்வொரு தடவையும் மிதிக்கும் போது, அதனுடைய எடையை விட ஐந்து மடங்கு அதிக எடையளவு பலத்தோடு, 15 மில்லி செகன்டிற்குள் மிதிக்கிறது.  பொதுவாக, கண்ணிமை (blinking) எடுக்கும் நேரம் 150 மில்லி செகன்டுகள். ஆனால், இந்தப் பறவை, அதற்கும் குறைவான நேரத்தை எடுப்பது மிகவும் வியக்கத்தக்கது. மேலும்,  அதனுடைய கூர்மையான பார்வை, இரையைக் குறி தப்பாது துல்லியமாகத் தலையில் அடித்துக் கொல்ல உதவுகிறது”.

  http://www.dailymail.co.uk/sciencetech/article-3416090/Snake-hunting-birds-stamp-prey-force-five-times-weight-says-study.html#ixzz4tNB3sXnx


செக்கிரட்டரி பறவை, இத்தனை வேகத்தோடும், பலத்தோடும் நச்சுப் பாம்புகளை பிடிக்கும் போது, பாம்புகளுக்கு, எதிர்த்துப் போராட நேரம் கிடைப்பதில்லை.



               புகைப் படங்கள்

பாஸ்கல் பாக்கியராஜ், சற்குணா பாக்கியராஜ்

-சற்குணா பாக்கியராஜ்

(2018 ஆம் ஆண்டு "வல்லமை" மின் இதழில் பிரசுரமானது.) 





No comments:

Post a Comment