Angled Caster |
இந்தியாவில் பறவை வகைகளைப் போலவே வண்ணத்துப்பூச்சிகளிலும் 1300-க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு. கோடைக் காலம் முடிந்து ஜூலை-ஆகஸ்ட் மாதங்களில் மழை தொடங்கும்போது தாவரங்களில் மலர்கள் பூத்து குலுங்கும். அப்போது வண்ணத்துப்பூச்சிகளும் ஓயாமல் அவற்றைச் சுற்றிப் பறந்து தேனை உண்கின்றன. வேலூர்-சித்தூர் செல்லும் சாலை காடுகள் சூழ்ந்த பகுதி. காட்பாடியைத் தாண்டினால் காடு தொடங்கிவிடுகிறது. சிறு பாலூட்டிகள், பறவைகள், பூச்சிகள், பலவகைத் தாவரங்கள், மலைகளை உள்ளடக்கிய காடு இது.
மழை தொடர்ந்து பெய்துவரும் இந்த பகுதிகளில் அனைத்துத் தாவரங்களும் மலர்களைச் சூடியிருந்தன. வலசைப் பறவைகள் கோடையில் தங்கள் இருப்பிடங்களுக்கு திரும்பிவிடும். அதனால் இந்த மாதங்களில் உள்நாட்டுப் பறவைகளை பார்க்க முடியும். சித்தூர் சாலையில் உள்ள காட்டு பகுதியில் அப்படியிருக்கும் பறவைகளைப் பார்க்க சென்றிருந்தேன். ஆனால், வண்ணத்துப்பூச்சிகளால் சூழப்பட்டேன். பறவைகளைத் தேடிச்சென்றிருந்த எனக்கு வண்ணத்துப்பூச்சிகளின் வருகை ஆச்சரியத்தை கொடுத்தது.
Common Emigrant
பறவைகளை நோக்குவதற்கும், வண்ணத்துப்பூச்சி நோக்குவதற்கும் வேறுபாடு உண்டு. பறவைகள் தொலைவில் இருக்கும், அதனால்
நெருங்கிச் சென்று பார்க்க முடியாது. தேவையென்றால் இருநோக்கியைப் பயன்படுத்தவேண்டும்.
ஆனால், வண்ணத்துப்பூச்சி நமக்கு மிக மிக அருகில் வரும். சில நேரம் நம் கைகளிலும்கூட அமரலாம்.
செடிகளில் உள்ள மலர்களில் அமர்ந்து தேன் உறிஞ்சுவதை அருகில் நின்றே பார்க்க முடியும்.
அங்கேயே ஒரு மணி நேரம் நின்றுவிட்டால், அவற்றின் உலகுக்குள் நாமும் பிரவேசிக்கலாம்.
அப்படித்தான் நானும் உணர்ந்தேன்...
நஞ்சால் தப்பிக்கும் பூச்சிகள்
முதலில் கொன்னை வெள்ளையன் (Common Emegrant) வண்ணத்துப்பூச்சி ஈர்த்தது. அது அதிக எண்ணிக்கையில் பறந்துக்கொண்டிருந்தது காரணமாக இருக்கலாம். ஒன்றை ஒன்று துரத்தி, மலர்களை நோக்கிச் சென்று சட்டென்று அமர்கிறது. வண்ணத்துப்பூச்சிகளுக்கு இடையே பறக்கும் முறைகளில் நிறைய வேறுபாடு உண்டு. உயரமாக பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள், தாழ்வாக பறக்கும் வண்ணத்துப்பூச்சிகள், நெடுநேரம் அமராமல் பறந்துக்கொண்டிருக்கும் வண்ணத்துப்பூச்சிகள் என்று பலவற்றைப் பார்க்க முடியும்.
மஞ்சள் புல்வெளியாள் வண்ணத்துப்பூச்சி (Common Grass Yellow) தாழ்வாகப் பறந்துகொண்டிருந்தது. இவை உயரமாகப் பறப்பதில்லை. விரைவாகப் பறக்கும் வண்ணத்துப்பூச்சி வகைகளில் ஒன்று. அது அமர்வதற்காகக் காத்திருந்தேன். சில நிமிடங்கள் கடந்தே ஒரு மலரில் அமர்ந்தது. பறந்துக் கொண்டிருக்கும்போது அதன் மேற்புற இறக்கையின் விளிம்பு கறுப்பு நிறத்தில் இருக்கும். அமரும்பொழுது இறக்கையை மடித்து வைக்கிறது. கறுப்பு நிற விளிம்பு அப்போது தெரியாது.
ரோஜா அழகி (Common Rose) எங்கும் அமராமல் நெடுநேரம் பறந்துகொண்டே இருந்தது. அளவில் பெரிதான இது, சுறுசுறுப்பாக இருக்கக்கூடியது. இந்த வண்ணத்துப்பூச்சி நஞ்சுத்தன்மை கொண்டது. உடலில் உள்ள நச்சுத்தன்மை காரணமாகவே இரைக்கொல்லிகளிடமிருந்து தப்பிக்கிறது. இந்த நச்சுத்தன்மை இவை தோற்றுவளரியாக (லார்வா) இருக்கும்போது, உண்ணும் நச்சுத் தாவரத்தில் இருந்து உடலில் நஞ்சு சேர்கிறது. இதை ஒத்த சிவப்பு உடல் அழகியும் (Crimson Rose) நடுநடுவே பறந்துக்கொண்டிருந்தது. அவையும் நச்சுத்தன்மை கொண்டவையே.
Plain Tiger
மண்ணிலிருந்து கிடைக்கும் தாது
ஒரு நிமிடத்துக்கும் குறைவாகவே வண்ணத்துப்பூச்சிகள் மலர்களில் அமர்கின்றன. இன்னும் சில வண்ணத்துப்பூச்சிகள் ஐந்து நொடிக்கும் குறைவாக மலரில் இருப்பதை பார்த்தேன். கருநீல வரியன் (Dark blue tiger) வண்ணத்துப்பூச்சியும் அதில் ஒன்று. அமர்வது, மீண்டும் பறப்பது, செடிகளை சுற்றிவருவது என்று தொடர் செயல்களில் இவை ஈடுபடுகின்றன. இவற்றை நெடுநேரம் உற்றுக் கவனித்ததில் எந்த மலரிலும் சில நொடிகளுக்கு மேல் அமராமல் பறந்துக்கொண்டே இருந்தது.
இவற்றை கறிவேப்பிலை அழகி (Common Mormon) துரத்திக்கொண்டே இருந்தது. இருந்தாலும், கருநீல வரியன் வேறு பக்கம் பறந்து, மீண்டும் பழைய இடத்துக்கே திரும்ப வந்தது. சில நொடிகளில் கறிவேப்பிலை அழகி அங்கே வந்துவிட்டது. இப்படியே சிறிது நேரம் துரத்துதல், திரும்ப வருதல் என்று கடந்தது.
நாம் விரும்பும் அளவுக்குக் காட்சிதருவது எலுமிச்சை நீலன் (Lime Blue), கரும்புல் நீலன் (Dark Grass Blue) வகை வண்ணத்துப்பூச்சிகளே. மூன்று நிமிடத்துக்குக்கூட கரும்புல் நீலன் மலரில் அமர்ந்திருப்பதைப் பார்க்க முடிந்தது. அருகில் நாம் இருப்பதைப் பொருட்படுத்தாமல், தன் வேலையை அது தொடர்கிறது. இவை இரண்டும் சிறிய வண்ணத்துப்பூச்சிகள். நம் கண்களுக்கு சில நேரம் புலப்படக்கூடச் செய்யாது. கூர்ந்து பார்த்தால்தான் தெரியவரும். ஈரம் நிறைந்த தரையில் அமர்ந்திருந்த கரும்புல் வண்ணத்துப்பூச்சி, ஐந்து நிமிடம்வரை மெதுவாகத் தன் கால்களை நகர்த்தி நகர்ந்தது
வண்ணத்துப்பூச்சிகள் ஈரப்பதமான மண் தரையில் தங்களுக்கு தேவையான தாதுக்களைப் பெறுவதற்கு அமர்ந்து உறிஞ்சும். ஈர மண்தரையில் தனியாகவோ கூட்டமாகவோ அமர்ந்து இருப்பதை பார்க்க முடியும். ஆங்கிலத்தில் இதை Mud puddling என்கிறார்கள்.
வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்கத் தொடங்கும்போது நமக்கு அதிகம் தென்படுவது வெந்தய வரியன் (Plain Tiger) வகையே. இது கூட்டமாகப் பறக்கும். ஒரு வெந்தய வரியன் பூவில் நெடுநேரம் அசையாமல் அமர்ந்திருந்ததை ஆச்சரியமாக பார்த்தேன். ஏறக்குறைய 15 நிமிடங்கள். மெதுவாக அருகில் சென்று பார்த்தால், இறக்கைகள் சாய்ந்து, இறந்த நிலையில் இருப்பது தெரியவந்தது. நிறைய வெந்தய வரியன் வண்ணத்துப்பூச்சிகள் சுற்றிப் பறந்துக்கொண்டிருந்தன. நடுத்தர அளவு கொண்ட இந்த வண்ணத்துப்பூச்சி இனப்பெருக்கத்துக்குத் தேவையான வேதிப்பொருள்களை சில வகைத் தாவரங்களில் இருந்து எடுத்துக்கொள்கின்றன. இவை வலசை செல்லக்கூடியவையும்கூட.
ஒரு செடியில் ஈ போன்ற உருவம் ஒன்றைப் பார்த்தேன். உற்றுநோக்கினால் அதுவும் ஒரு வண்ணத்துப்பூச்சி. துத்தித் தாவி (African Marbled Skipper) என்ற பெயருடையது. அனைத்து வண்ணத்துப்பூச்சிகளும் ஒரே அளவில் இருப்பதில்லை. இவை துத்தித் தாவரத்தில் உணவை உறுஞ்சுவதால் துத்தித் தாவி என்று பெயர். அதிகாலை, மாலை வேலைகளில் சுறுசுறுப்பாக இருக்கும்.
Lemon Pansy
உங்களைச் சுற்றிப் பாருங்கள்
வண்ணத்துப்பூச்சிகளின் இறக்கையில் பல நிறங்களில் வளையங்கள் இருக்கும். பார்ப்பதற்குக் கண் போன்ற தோற்றத்தைத் தரும். வசீகரன் இனத்தில் எளிதாகப் பார்க்கமுடிகிற இந்த வண்ணத்துப்பூச்சி, அதிக எண்ணிக்கையில் இருந்தது. வண்ணத்துப்பூச்சிகளில் பல வகைகள் இறக்கையை விரிக்காமல் மலரில் அமரும். இன்னும் சில வகை நன்கு இறக்கையை விரித்து அமர்ந்து தேன் உறிஞ்சும். பழுப்பு வசீகரன் இரண்டாவது வகையைச் சேர்ந்தது. மஞ்சள் புல் வெளியாள் வண்ணத்துப்பூச்சி இறக்கையை மடித்தே அமரும்.
இருபது வகைகளுக்கு மேல் அங்கே பார்க்க முடிந்தது. மலர்கள் சூழ்ந்த பகுதி என்பதால் சுற்றி எந்நேரமும் வண்ணத்துப்பூச்சிகள் பறந்துகொண்டிருந்தன. வண்ணத்துப்பூச்சிகள் 7 குடும்பங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. தேன் முக்கிய உணவு என்றாலும் பறவைகளின் எச்சம், இறந்த பாம்பு, விலங்குகளின் கழிவு போன்றவற்றில் இருக்கும் திரவங்களையும் உணவாகக் கொள்கின்றன.
இது வண்ணத்துப்பூச்சிகள் மாதம். உங்கள் அருகிலிருக்கும் மலர் சூழ்ந்த பகுதிகளில் கவனம் செலுத்துங்கள். பல வண்ண வண்ணத்துப்பூச்சிகள் உங்களை ஈர்க்கும். அவற்றின் உலகில் சிறிது நேரம் வாழ்ந்,து திரும்பலாம்.
-செழியன். ஜா
lapwing2010@gmail.com
No comments:
Post a Comment