IAS நேர்முக தேர்வில் உங்களுடைய பொழுது போக்கு என்ன என்று கேள்விக்கு பறவை
நோக்குதல் (Bird Watching) என்று ஒருவர் பதில்
அளித்தார். பதில் அவர்களுக்கு சுவாரசயத்தை தந்ததால் நேர்முகம் கலகலப்பாக சென்றது. பெரும்பாலும்
நாம் புத்தகம் படித்தல் என்றே பதில் அளிப்போம்.பறவையை ஏன் பார்க்க வேண்டும் என்று
கேள்விக்கு, பார்த்தால் என்ன என்ற கேள்வியும் தோன்றுகிறது.
பறவையை பார்க்க
எங்கேயோ போக வேண்டும் என்ற நினைப்பை அப்படி தள்ளிவையுங்கள். உங்கள் வீட்டை சுற்றி
பாருங்கள் அங்கு வரும் பறவையை குறித்து கொள்ளுங்கள் சில வாரங்கள் கடந்து அதே போல்
பாருங்கள் ஏற்கனவே வந்த பறவை வருகிறதா அல்லது புது பறவை எதாவது தென்படுகிறதா என்று
மீண்டும் குறித்து கொள்ளுங்கள் இதில் நிறையை உண்மைகள் தெரியவரும். இந்த வீடு
நமக்கு மட்டும் சொந்தமில்லை என்று உணரும் தருணம் அது.
பார்க்க முடியாத
பறவைகளை பார்க்க, இருக்கவே இருக்கிறது National Park, Zoological Park அப்படி இப்படி என்று
ஏக்கப்பட்ட பூங்கா நம் நாட்டில் உள்ளது அதில் ஒரு நேஷ்னல் பூங்காவை சுற்றி
பார்ப்பதே இந்த கட்டுரை.
GUNIDY NATIONAL PARK (Chennai)
இந்தியாவில்
இருக்கும் மிக சிறிய பூங்காவாக கிண்டி பூங்கா இருக்கிறது. பெரியவர்களுக்கு
இருபதும் சிறியவர்களுக்கு ஐந்தும் கொடுத்தால் உள்ளே செல்லலாம். வெளியே இருந்தே
பார்த்தாலும் ஒரு சில பறவைகள் தெரிகிறது சமிபத்தில் ஏற்படுத்தியே கழுகு கூண்டு, வெளியே
இருந்தும் பார்க்க முடிகிறது.
மிக ரம்மியமான சூழல்,
மாநகர் சத்தம் சிறிதும் கேட்க்காமல் இருப்பது தான் மிகச் சிறப்பு. முதலில் நம்மை வரவேற்ப்பது மான்களே.
ஒரு மான் அதன் இருப்பிடத்தை விட்டு வெளியே சுற்றி வருகிறது எல்லோரும் அதனிடம்
விளையாடுகிறார்கள், குழந்தைகள் நின்று படம் படித்து கொள்கிறார்கள்.
மிகப்பெரிய
வலையில் நிறைய நீர்வாழ் பறவைகள் விளையாடி கொண்டிருந்ததை நாம் பார்க்கிறோம் என்பதை சிறிதும்
சட்டை செய்யாமல் அதன் வேலைகளை பார்த்துகொண்டிருந்தது. ஒரு கூழைக்கடா தண்ணிரில் தன்
இறகுகளை நனைத்து வெளியே வந்து விரித்து விரித்து ஆட்டியத்தை பார்க்கும் பொழுது மயில்
தோகை விரித்து நிற்கும் கம்பீரத்தை இதில் பார்க்க முடிந்தது.
அரிவாள் மூக்கன்
, கரண்டி வாயன் , கூழைக்கடா , நாரை என்று நிறைய நீர்வாழ் பறவைகளை தொலைநோக்கி
இல்லாமல், அருகில் இருந்து பார்ப்பது பரவசத்தை தருகிறது.பறவைகள் பார்ப்பதை
ஆரம்பிப்பவர்கள் முதலில் இது போல் உள்ள பூங்காவுக்கு சென்று அருகில் பறவைகளை
பார்த்து தெரிந்து கொண்டு சரணாலயம் செல்வது ஆர்வத்தை மிகுதியாக்கும்.
ஆந்தைகள் பகலில்
உறங்கி இரவில் இரை தேடும் என்பது இங்கு முறைமாறி பகல் பொழுதும் மனிதர்கள் அதனை
அருகில் நின்று, பார்த்தும் மற்றும் சத்தங்களையும் உண்டு பண்ணுவதால் அவை தூங்குவதே
இல்லை. அதுவும் மனிதர்களை பார்த்து கொண்டிருக்கிறது. இரவில் என்ன செய்கிறது என்று
தான் தெரியவில்லை. அதனுடைய வாழ்கை முறையே முற்றிலும் இது போல் இருக்கும்
பூங்காக்களில் மாறிவிடுகிறது.ஒருவேளை அவை இரவில் தூங்கிவிட்டால் இராவாடி என்றதை
நாம் பகலாடியாக்கிவிட்டோம் என்ற பெருமை சேரும்.
முள்ளம்பன்றிக்கு
வைக்கப்பட்ட உணவை பார்க்கும் பொழுது ஒரு ராஜா சாப்பிடும் மதிய உணவு எப்படி
இருக்குமோ அது போல் இருந்தது. படத்தை பார்த்தல் உங்களுக்கே தெரியும்.முள்ளம்பன்றிகள்
அதன் இருப்பிடத்தில் தூங்கி கொண்டிருந்ததை பார்த்துகொண்டிருந்த சிறுவர்கள்,
குரல்களை எழுப்பி, கம்பிகளை தட்டியும் பார்த்தார்கள் ஒரு பயனும் இல்லை அவை வெளிய
வரவே இல்லை
வெளிமான்கள்
அதிக அளவில் இருப்பது நல்ல விஷயம். காடுகளுக்கு சென்று பார்கவேண்டியதை சுலபமாக
இங்கு பார்க்க முடிவதுதான் சிறப்பே. வெளிமான்களை
மான்களுடன் ஒப்பிட கூடாது, வெளிமான்கள் மற்றும் மான்கள் இரண்டும் வேறு வேறானவை.
ஒரு பூங்கா
ஊழியர் தட்டில் கேரட்,பீன்ஸ்,கோஸ் இவற்றை சிறு சிறு துண்டுக்களாக எடுத்து
சென்றுகொண்டிருந்தார் கூடவே சென்றேன் தரைக்கு மேல் சிறுது அளவே உயர்ந்து இருந்த
சுவறுக்குள் கதவை திறந்து, முட்டி போட்டுகொண்டு சென்றார் உத்து பார்த்தல்
பத்துக்கும் மேற்ப்பட்ட ஆமைகள் இருந்தது அதுவரை அப்படி ஒரு உயிரினம் அங்கு
இருப்பதே தெரியவில்லை. நிறைய முறை அப்படி இப்படி நடந்து சென்று வந்தேன் ஆனால் இவை இருப்பதே
தெரியவில்லை சரி மற்றவர்களாவது பார்கிறார்களா என்றால் யாரும் பார்த்ததா தெரியவில்லை.
அதில் இரண்டு
ஆமை மட்டும் தன் வழக்கமான நடையில் வந்து அவற்றை சுவை பார்த்து கொண்டிருந்தது
மற்றது புலி வயிர் நிறைய சாபிட்டுவிட்டால் எப்படி படுத்திருக்குமோ அப்படி
காணப்பட்டது. கிண்டி பூங்காவுக்கு செல்பவர்கள் மறக்காமல் ஆமையை பார்த்து விடுங்கள்
அவை கொம்புஆந்தை அருகில் உள்ளது.
ஐந்து முயல்கள்
ஆனந்தமாக சிறு கூண்டில் விளையாடிகொண்டிருக்கிறது வெளியே இருந்தால் இவ்வளவு உணவு
கிடைக்குமா என்று சந்தேகம்தான் எப்பொழுதும் அதன் கூண்டில் முட்டை கோஸ்.கேரட்
இருந்து கொண்டே இருக்கிறது.
பழக்கப்பட்ட
குரங்கை போல் இங்கு இருக்கும் கொம்பு ஆந்தை, நாம் கேமராவை எடுத்தாலே அவை தலையை
திருப்பி கொள்கிறது சிறிது நேரத்தில் தலை திருப்பி பார்க்கிறது மீண்டும் நாம்
எடுத்தால் அவை திருப்பி கொள்கிறது பகல் வெளிச்சமே அவற்றின் கண்ணை கூசும் இதில்
கேமரா வெளிச்சம் நிச்சயம் அவற்றின் கண்ணை பதம் பார்த்துவிடும். அவை தலையை
திருப்பும்பொழுது இங்கிருந்து கிளம்புடா என்று சொல்வதுபோல் இருக்கிறது.
ஒரே ஒரு நீர்
நாய் மட்டும் சந்தோஷமாக கண்ணாடி தொட்டியில் குளித்து கொண்டிருக்கிறது. அதே போல்
முன்பு இரண்டு கழுகு இருந்தது இப்பொழுது ஒன்றுதான் இருக்கிறது அவற்றுக்கு
அமைக்கப்பட்ட கூண்டின் மேல் எந்நேரமும் குரங்குகள் விளயாடிகொண்டிருப்பதை நீங்கள்
சென்று பார்க்கும்பொழுதும், இருக்கும் என்று உறுதியாக சொல்லலாம்.
வனவிலங்குகளை பற்றி
விழிப்புணர்வு படம் ஒன்று முப்பது நிமிடங்கள் மேல் ஒளிபரப்பபடுகிறது பத்து ரூபாய்
கொடுத்தால் உள்ளே செல்லலாம் ஆனால் இருபது பேர் இருந்தால்தான் பார்க்க முடியும்.
ஒருவர், இருவருக்கு கிடையாது.ஒரு பள்ளி குட்டிஸ்கள் பார்த்து கொண்டிருந்தார்கள்
நடுவில் ஒரு லேடி டீச்சர் வெளியே வந்து, கூட இருந்தவரிடம் தலை வலியே வந்து விட்டது,
சுத்த போர், ஏன்டா உள்ளே சென்றோமோ இருக்கிறது என்று சொல்கிறாரர். இவர்தான் உள்ளே
இருக்கும் குழந்தைகளுக்கு பாடம் எடுப்பார் அந்த குழந்தைகளின் நிலைமையை நினைத்து
பாருங்கள்.
பூங்கா அருகிலே தனியாக
பாம்பு பண்ணை உள்ளது. மறக்காமல் அவற்றையும் சென்று பாருங்கள்.பூங்கா உள்ளேயும் ஒரு
சில பாம்புகளை காண்ணாடி தொட்டியில் இருப்பதை பார்க்க முடிந்தது. பாம்பை பற்றி அதிகமாக
அறிந்துகொள்வதற்கு பாம்பு பண்ணையை சுற்றி பார்பதுதான் சிறந்தது.
நிறைய மரங்களை
பற்றியும் நாம் தெரிந்து கொள்ளமுடியும். மரத்தின் பெயரும் பலகையில் இருப்பதால்
உபயோகமா இருக்கிறது. ஜாலியாக சென்று பார்த்து வாருங்கள் ..........
-செழியன்
No comments:
Post a Comment