Sunday, 3 May 2020

Lockdown



கடைசியாகப் பறவைகளுக்கும் 20 நாள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் முதல் இவை அமுலுக்கு வருகிறது. பறவைகள் மரத்தை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது. மரத்தில் இருக்கும் பழங்கள், அங்கு வரும் பூச்சிகள் போன்றவற்றை உண்ணவேண்டும். உங்கள் மரத்தில் வேறு பறவைகள் வந்தால் தகவல் கொடுக்க வேண்டும்.

இந்த தகவல்களை எப்படி அனைத்து பறவைகளாகும் தெரிவிப்பது என்ற விவாதம் தொடங்கியது. மக்களிடம் இந்த பணியைக் கொடுத்துவிடுவோம் அவர்கள் அவங்க இடத்தில் இருக்கும் மரத்தில் சிறு தாளில் எழுதி ஒட்டிவிடவேண்டும். மரத்தில் இருக்கும் ஒரு மூத்த பறவையை மரத்தின் தலைவனாகக் கொண்டு அந்த பறவையிடம் சொல்லிவிடவேண்டும்.

அனைத்தும் தொலைக்காட்சியிலும் Breaking Newsஆக ஓடிக் கொண்டிருந்தது.


 இரவு நடந்த  தொலைக்காட்சி விவாத மேடையில் “பறவைகளின் ஊரடங்குதான்” தலைப்பு.  பறவைகள் பற்றி கொஞ்சமும் தெரியாத, கொஞ்சம் தெரிந்த நபர்கள் விவாதத்தில் அமர்ந்து இருந்தனர். அதில் ஒருவர் பேசுகிறார். ஆறு மாதம் ஒரு முறையாவது இதுபோல் பறவைகளுக்கு ஊரடங்கு அமல்படுத்த வேண்டும். எங்கள் வீட்டு மொட்டை மாடியில் எதையும் காயவைக்க முடியவில்லை. இந்த பறவைகளால் ஒரே தொந்தரவு என்று ஆக்ரோஷமாகச் சொல்லி முடித்தார். அதற்கு நெறியாளர் பறவைகள் இருந்தால்தானே பூச்சிகள் கட்டுப்படும். பூச்சிகளை, பூச்சிக் கொல்லி மருந்து அடித்துச் சாகடிக்கலாம் பறவைகளுக்கு நிச்சயம் ஊரடங்கு தேவை என்று மேஜையை ஓங்கித் தட்டினார்.

காகங்கள் நிறைய எங்கள் தெருவில் இருக்கிறது. சில நேரம்  கார் மேல்  “கக்கா” போய்விடுவதால் காரை இரண்டு நாள் ஒரு முறை தண்ணீர் கொண்டு கழுவ வேண்டியுள்ளது. அதனால் அணைத்து பறவைகளுக்கும் இல்லையென்றாலும்  பரவாயில்லை காகங்களுக்காக மாதம் ஒரு முறை ஊரடங்கு அமல்படுத்தவேண்டும் என்று காகத்தின் “கக்கா” குறையைப் பேசினார்..  

வீட்டிற்குள் அணில் சில தடவை கூடு கட்டிவிடுகிறது அதனால் பறவைகள் போல் சிறு விலங்குகளுக்கும் ஊரடங்கு தேவை என்று ஒரு பிரகஸ்பதியின் கருத்து. இப்படி தொலைக்காட்சி விவாதம் சென்று கொண்டு இருந்தது.

அணைத்து மக்களும் தங்கள் அருகில் உள்ள மரத்தில் சிறு தாளில் ஊரடங்கை எழுதி ஓட்டிவிட்டீர்களா என்ற அடுத்து Breaking News ஓட ஆரம்பித்தது. சரி நம் தெருவில் இருக்கும் சிட்டுக் குருவிக்கு தகவல் சொல்ல அருகில் சென்றேன்.

 சிட்டுக் குருவிகள் வாழும் ஒரு வீட்டிற்குச் சென்று சிட்டுக் குருவிகளிடம் நாளை முதல் ஊரடங்கு அதனால் நீங்கள் எங்கும் வெளியே செல்லக்கூடாது என்று சொன்னேன். அதற்குக் குருவிகள் நாங்கள் எப்பொழுதும் இங்கேதான் இருப்போம் போய் உன்னுடைய வேலையே பார் என்று சொன்னது.

சிட்டுக் குருவிக்கு விஷயம் தெரிந்துவிட்டது அதான் கோபமாகப் பேசுகிறது. அருகிலிருந்த மரத்தில் சிறு தாளில் எழுதி ஓட்டினேன். மரத்திலிருந்த சில காகங்கள் என்னைப் பார்த்து நீயே இந்த மரத்தைப் பார் ஒரு பூவும், பழமும் இல்லை. அப்போ இரை எப்படிக் கிடைக்கும் என்ற கேள்வி எனக்கு நியாயமாகத் தெரிந்தது.

வெளிநாடுகளுக்குச் செல்லவேண்டிய சில பறவைகள் இந்த ஊரடங்கால் அரசிடம் முறையிட்டன. நாங்கள் எங்கள் நாட்டிற்கு இப்பொழுது கிளம்பினால்தான் அங்கு முட்டை இட்டு குட்டிகளுடன்  குளிர்காலத்திற்கு மீண்டும் இங்கு வர முடியும். அப்படி இல்லையென்றால் எங்கள் வாழ்க்கை சுழற்சி மாறிவிடும் ஏன் ஒரு தலைமுறை இல்லாமல் கூடப் போகலாம் அதனால் எங்களைப் பறக்க விடுங்கள் என்ற கோரிக்கையை அரசு பரிசலைனைக்கு  ஏற்றுக் கொண்டுள்ளது.

கோபுரத்தில் வாழும் புறாக்கள். நாங்கள் மரத்தில் வாழ்வதில்லை எங்கள் இரையை வெளியே சென்றால்தான் கிடைக்கும். உங்களுக்கு கோயில் நிர்வாகம் இரை கொடுக்க சொல்கிறோம் என்றது அரசு.. ஆனால் புறா கொஞ்சம் புத்திசாலித்தனமாக இதேபோல் எங்கள் சொந்தங்கள், வீட்டின் மொட்டைமாடியிலும், உயர்ந்த கட்டடங்களிலும்  வாழ்கிறார்கள்  அவர்களுக்கும்  இரை கிடைக்க வழிவகை செய்யுங்கள். அரசு அந்த கோரிக்கையை பரிசலனைக்கு எடுத்துக் கொண்டது.

ஆந்தைகள் தங்களுக்குள் பேசிக் கொண்டது.  நம் வாழ்க்கை இரவில் தொடங்கி பகலில் முடியும். அரசின் இந்த ஊரடங்கு நமக்கு பொருந்துமா. எந்த ஆந்தைக்கும் பதில்  தெரியவில்லை. முடிவில் அரசிடம் அதே கேள்வியை முன்வைத்தது. அரசு சிறிது யோசித்து உங்களுக்கு நாளை முடிவு சொல்கிறோம் என்ற பதில் ஆந்தைகளுக்கு குழப்பத்தை உருவாக்கியது..

எங்கள் வாழ்க்கையை காலை முதல் மாலை வரை பறப்பதுதான்.  எங்களுக்கு என்று மரங்கள் கிடையாது. இரை பூச்சிகள் ஆகும். எங்களை நோக்கி பூச்சிகள் வராது. நாங்கள்தான் பூச்சிகளை நோக்கி செல்லவேண்டும். ஒரு இடத்தில் மட்டும் இருப்பதுபோல் இயற்கை எங்களை படைக்கவில்லை. பறப்பதே எங்கள்  வாழ்வியல். இந்த உரடங்கு எங்கள் இனத்தை அற்றுப்போக செய்துவிடும். இப்படி நீண்ட பட்டியலை வசித்தது உழவரன் பறவைகள்.

தரையில் வாழும் பறவை கவுதாரி. ஓடி ஓடி தேடினால்தான் இரை கிடைக்கும். வேகமாக பறக்கும் பறவைகள் போல் நாங்கள் இல்லை. எங்கள் வாழ்கை தரையில் ஆரம்பித்து- தரையில் முடிவடைந்துவிடும். ஊரடங்கு எங்களுக்கு  உண்டா என்று கேள்வி கேட்க தொடங்கியது. இதையும் அரசு பரிசலனைக்கு எடுத்து கொண்டது.

கழுகு  எங்கள் இரை மற்ற பறவைகள், எலிகள், ஓணான், பாம்பு போன்றவைதான்.  பறவைகள் பறந்து சென்றால்தான் நாங்கள் பின் தொடர்ந்து அவற்றை பிடிக்க முடியும். இப்படி அனைத்து பறவைகளும் பறக்க கூடாது என்று சொன்னால் எங்களுக்கு இரை  கிடைக்க வாய்ப்பில்லை என்று கோரிக்கை வைத்தது. அரசு பரிசலனை பட்டியலில் இவற்றையும் சேர்த்துக் கொண்டது.

நீர் பறவைகளின் இரை  நீரில். கோடை வந்துவிட்டது. பல நீர்நிலைகள் வறண்டு காணப்படும். நீண்டதூரம் பறந்து சென்றால் மட்டுமே இரை கிடைக்கும். எங்கும் செல்லகூடாது என்றால் நாங்கள் என்ன செய்வது. அரசிடம் கோரிக்கைகள் சேர்த்துக் கொண்டே இருந்தது.

காட்டில் வாழும் பறவைகளுக்கு இந்த தகவல் தாமதமாக கிடைத்தது. யார் சொன்னது என்று தெரியவில்லை. ஆனால் தெரிந்துவிட்டது. நமக்கும்- நாட்டில்  இருக்கும் பறவைகளுக்கும் தொடர்புகளே இல்லை அப்படி இருக்க இந்த ஊரடங்கு நமக்கு இருக்காது என்று காட்டில் பேச்சுகள் ஓடிக் கொண்டு இருந்தது.

நமக்கும் இருந்துவிட்டால் இருவாட்சி பறவையின் கேள்வி.

இருக்காது நம்மை எப்படி இதில் சேர்க்க முடியும் மனிதர்கள் இல்லாத பகுதியில் நாம் வாழ்கிறோம். பறக்க கூடாது என்று சொன்னால் இறக்கைகளை வெட்டி விடலாமா என்று கோபமாக கேட்டது  தீகாக்கை.


கோடை காகம், குயில் இனப்பெருக்ககாலம் ஆகும். குயில் காகத்தை திசை திருப்பி அதன் கூட்டில் முட்டை இடவேண்டும். ஒரே முயற்சியில் இவை நடக்காது. பல தடவை முயற்சி செய்யவேண்டும். மரத்தை விட்டு காகங்கள் நகரக்கூடாது என்றால் கடைசிவரை குயில் முட்டை  இட முடியாது. துணுக்கு செய்தியாக நாளிதழில் வந்தது. தலைப்பு செய்தியே கவனம் பெறமுடியாதபோது துணுக்கு செய்தி என்னாகும்.

பறவைகளுக்கு மனிதர்கள் போல்  உணவுகளை சேமித்து வைக்கும் வழக்கம் கிடையாது. சூரியன் வரும் முன்பே தங்கள் இறக்கைகளை அடித்து பறக்க  தயாரக இருக்கும் பறவைகள். பூச்சிகள்  வேகத்திற்கு பறவைகள் பறந்தால் மட்டுமே இரை கிடைக்கும். அதன் வாழ்க்கை இயற்கையுடன் ஒன்றி இருப்பது. செயற்கையான கட்டுப்பாடுகள் அதன் தனித்தன்மையை குலைத்துவிடும். மனிதர்கள் இயற்கையை விட்டு தூர வந்துவிட்டார்கள். பறவைகளையும் இயற்கையில் இருந்து விலக்கிவைத்தால் மனிதர்கள் வாழ்வதே கேள்வி குறியாகிவிடும். ஒரு பறவையாளரின் கதறல் காற்றில் கலந்து கடலில் கலந்துவிட்டது.

வானில் இரைகொல்லி பறவைகளும், நீர் நிலைகளில் நீர் பறவைகளும், மரங்களின் அடியில் காகம்,நாகனாவாய் பறவைகளும், கோபுரத்தில் புறாக்களும், புதரில் கவுதாரி, செம்போத்து பறவைகளும், மர பொந்தில் பச்சைக்கிளி, மரங்கொத்தி பறவைகளும் ஊரடங்கை பற்றி விவாதிக்க தொடங்கின.

இதற்கு முன்பு நம் முன்னோர்கள் இதுபோல் ஊரடங்கை எதிர் கொண்டு இருக்கிறார்களா?

பறப்பது, இரை பிடிப்பது, மாலை தன் இடங்களுக்கு வந்து அடைவது இவைதான் நம் ஒரு நாள் வாழ்க்கை.  இருக்கும் இடத்தில இருந்து பறக்க கூடாது என்றால் பறவை இனத்தில் பல பறவைகள் அழிந்துவிடும்.

ஊரடங்கு முடிந்து நமக்கு பறக்க வருமா என்றும் தெரியவில்லை. பறப்பதாலே நாம் பறவைகள். மனிதர்களுக்கு கால்கள் எப்படியோ நமக்கு இறக்கைகள்.  அரசிடம் நம் கோரிக்கைகளை கொடுத்து உள்ளோம். என்ன பதில் வருகிறது என்று பார்ப்போம்.

பறவைகளின் கோரிக்கைளை முன் வைத்து அரசு விவாதம் செய்தது. பறவைகள் மரத்தில் வாழும் என்று தவறாக நினைத்துவிட்டோம்.  தரையில் வாழ்கிறது, கோபுரத்தில் வாழ்கிறது, நீர் நிலைகளில் வாழ்கிறது, இரவில் வாழும் பறவைகள் இருக்கிறது, காட்டில் வாழும் பறவைகள் இருக்கிறது, தொடர்ந்து பறந்து கொண்ட இருக்கும் பறவைகள் இருக்கிறது, வெளிநாடுகளுக்கு செல்லும் பறவைகள் என்று நிறைய வகைகள் இருக்கிறது. பறவைகளின் இரைகளும் மாறுபடுகிறது. 

முழுவதுமாக ஆராயாமல் Lockdown சொல்லிவிட்டோம். அதனால் Lockdown நிறுத்திவைக்கலாம். பறவைகள் முன்பு போல் பறந்துக் கொண்டு இருக்கட்டும்..

இதேபோல் Lockdown மனிதர்களுக்கு சொல்லும்பொழுதும் அனைத்து வித மனிதர்களையும் ஆராய்ந்து சொல்லவேண்டும் என்று புரிகிறது. ஒரு சில மனிதர்களை கொண்டு Lockdown சொன்னால் பல மனிதர்கள் பாதிக்கப்படுவது உண்டு…



 -செழியன். ஜா 




6 comments:

  1. இதை ஒரு படக் கதையாக கொடுத்து இருந்தால் டிஸ்னியே கதையை படமாக்க உரிமை கேட்டு வரிசையில் நின்று இருப்பார்கள். வாழ்த்துக்கள் செழியன்.

    ReplyDelete
  2. அருமை ஐயா

    ReplyDelete
  3. அருமை அருமை

    ReplyDelete
  4. அருமையான கட்டுரை செழியன்

    ReplyDelete
  5. அருமையான கட்டுரை.. மகிழ்ச்சி ஐயா.

    ReplyDelete
  6. நல்ல கற்பன... மனிதர்கள் தங்களை மையமாக ஆக்கித்தான்
    மற்ற உயிரினங்களை அழிக்கிறார்கள்...

    ReplyDelete