ராமநாதபுரத்திலிருந்து
45 கிலோமீட்டர் சரணாலயம். உள்ளூர் நண்பரிடம்
இருசக்கர வண்டி இருப்பது தெரிந்து வாங்கிக்கொண்டோம். காலை 6 மணிக்குக்
கிளம்பிச் செல்லும் வழியெல்லாம் பறவைகளுக்குக் காலை வணக்கம் சொல்லிக் கொண்டே சென்றோம்.
காலை வேலையில்
பறவைகள் சுறுசுறுப்பாகப் பறந்தும், கிளையில் அமர்ந்தும், சில தரையில்
நடந்தும், வயல்வெளிகளில் இரை தேடியும், நிலை குத்தி நின்றும் பார்த்தபொழுது
மனிதர்கள் தன் கால்களைப் பயன்படுத்துவதைத் தவிர வாகனத்தில் செல்வதே அதிகம் என்று உணரமுடிந்தது.
எந்த பறவையும்
மற்றொரு பறவை மீது சவாரி செய்வது இல்லை. எந்த வாகனமும் பறவைகளுக்கு கிடையாது.
இறக்கை உடைந்தாலும் இரையை அதுவே தேடிக் கொள்ளவேண்டும். தன்னார்வலர்கள் என்பது
பறவைகள் உலகில் முற்றிலும் கிடையாது.
முதுகுளத்தூர்
சாலையில் தனித்து இரையைத் தேடிக்கொண்டிருந்த கொண்டலாத்தி ஒன்று ஓட்டு வீட்டை தன் அலகால்
நுழைத்து வெளியே எடுத்தபொழுது எங்கள் பக்கம் திரும்பி ஒரு சிறு பார்வைதான்.
மிக அருகில்தான் இருந்தோம். கண்டுகொள்ளவில்லை. படம் எடுப்பதை எடுத்துக்
கொள்ளுங்கள் என்பது போல் கவனம் வீட்டு ஓட்டில் வைத்தது.
ஐந்து வருடம்
முன்பு விழுப்புர சாலையில் வண்டியில் சென்று கொண்டிருந்தபொழுது அருகிலிருந்த மரத்தில் சர் என்று வந்து கொண்டையைக்
காண்பித்ததுதான் முதன்முதலாகக் கொண்டலாத்தியைப்
பார்த்தது. இந்த பறவைக்குக் கொண்டை-அலகு இரண்டும் வித்தியாசமாக இருப்பது சிறப்பு.
பெரும்பாலும் பறவைகளுக்கு ஒரு அடையாளம் முதன்மையாகத் தெரியும். பெயரும் அதில் வைத்துவிடுவார்கள்.
ஆனால் கொண்டை-கொண்டலாத்தி அலகு-எழுத்தாணி என்று இரண்டு அடையாளங்கள், இரண்டு அடையாள
பெயர்….
சென்னையில் உடைந்த
பாலம்(Broken
Bridge) நோக்கிச் செல்லுங்கள். தரையில் கொண்டலாத்தி இரை தேடித் கொண்டிருக்கும்.
உங்கள் தலை அதன் பக்கம் தானாகத் திரும்பும்.
தேட வேண்டாம்..
முதுகுளத்தூர் சாலையின் இரண்டு பக்கமும் புதர்கள், வயல்வெளிகள் எங்களுடன் தொடர்ந்து வருவதால் பறவைகளும் எங்களுடன் தொடர்ந்து. செம்போத்து சிறு செடியில் அனைவரின் பார்வையில் படும்படி தாவிக் கொண்டிருந்தது. இறங்கி நின்று பேசினோம். ஆனால் செம்போத்து பேசவில்லை. காரணம் கேட்டோம். வண்டி கொடுக்க உங்களுக்கு நண்பர் உண்டு. தேவையென்றால் உணவும் தருவார். ஆனால் செம்போத்து ஆகிய நான் இரை தேடினால் மட்டுமே இன்றைய இரவு உறங்க முடியும். பதில் சொல்லாமல் கிளம்பினோம்.
உளுந்தூர்பேட்டை
சாலையில் ஒரு பக்கம் இருந்து எதிர் பக்கம் இருக்கும் புதரை நோக்கிப் பட படவென்று பறந்தது
சென்றதுதான் எனக்குச் செம்போத்தின் முதல் தரிசனம். அப்பொழுது செம்போத்தின் பெயர் தெரியாது. பிறகு தொடர்ந்து பறவைகள்
பார்த்த காலத்தில் தெரிந்திக்கொண்டேன்.
முதுகுளத்தூர்
சாலைக்கு வந்துவிடுவோம். செம்போத்திற்கு அடுத்து சிறிது தொலைவில் பச்சைக்கிளி
ஒன்று முதலில் எங்களைப் பார்த்தது. பச்சைக்கிளியிடம் எதுவும் பேசக் கூடாது என்று நாங்களே முடிவு செய்து
கொண்டோம். அமைதியாகப் படம் எடுத்துக் கொண்டு கிளம்பினோம். எங்கும் பார்க்கமுடிகிற
பறவைதான் என்றாலும் இவற்றில் எண்ணற்ற வகைகள் உண்டு.
பள்ளியில் படித்தபொழுது
கிளி பிடிக்கப் பசங்களுடன் அடர்ந்த மலைப்பகுதிகளுக்குச் சென்றதுண்டு. சரியாக
எந்த பொந்தில் கிளி இருக்கும் என்று கூட வரும் பசங்களுக்குத் தெரிந்து இருந்தது.
எனக்கு அதுதான் முதல் முறை. கிளி பிடித்துக் கொடுத்தால் காசு கொடுப்பார்கள் என்று மட்டுமே
பசங்கள் பேசியதிலிருந்து தெரிந்து கொண்டேன்.அனைவரும் கிராமத்திலிருந்த வரும் பிள்ளைகள்.
நிச்சயம் வீட்டில் காசு கொடுத்து அனுப்பமாட்டார்கள். கிளி பிடித்துக் கொடுத்து
வரும் காசில் பள்ளி அருகில் ஏதாவது வாங்கி சாப்பிடுபவர்கள்…
நீங்கள் படித்துக்
கொண்டு இருக்கும் இப்பொழுதும் தமிழ்நாட்டில் எங்கோ ஒரு ஊரில் நாலைந்து பசங்கள் கிளி பிடிக்கச் செல்லலாம்.
இன்று ஒரு கிளி பிடித்தால் தரும் காசும் அதிகமாகி இருக்கலாம். பறவைகள் பிடிக்க,
சுட சட்டப்படி தடை இருப்பது 70சதவிகித மனிதர்களுக்கு
நிச்சயம் தெரியாது. பள்ளியிலும் சூழலியல் தொடர்பான பாடங்கள் இல்லாததாலும் மிகப் பெரிய
குறையாக இருக்கிறது. இப்படியே தொடர்ந்தால் அடுத்து ஐம்பது ஆண்டுகள் பிறகும்
கிளி பிடிக்கப் பிள்ளைகள் செல்வார்கள் என்பது உண்மை. அடுத்த முறை கிளி பிடிக்க நான் செல்லவில்லை.
ஆனால் சில மாணவர்கள் இது ஒரு தொடர் வேலையாக வைத்து இருந்தார்கள்.
முதுகுளத்தூர்
சாலையில் பச்சைக்கிளி முடிந்து இரண்டு கிலோமீட்டர் சென்றால், வயல் நடுவில் ஒரு
பறவை ஹெலிகாப்டர் அந்தரத்தில் நிற்பதுபோல் நிலைக் குத்தி நின்று அதன் தலைமட்டும் கீழ் நோக்கி இருந்தது. வேகமாக இறக்கை அடித்துக் கொண்டிருந்தது.
முகம் எங்களுக்கு எதிர்புறம். வால் பகுதியை எங்களுக்குக் காட்டியது.
கருப்புவெள்ளை
மீன் கொத்தி நீர் நிலைகள் மேல் நிலைக் குத்தி
நின்று ஒரே பாய்ச்சலாக நீரில் முழுகி மீனை வெளியே கொண்டு வருவதை நிறையத் தடவை பார்த்திருந்ததால்
இவை அவனேதான் என்ற முடிவுக்கு வரலாம் என்று
பேசிக்கொண்டோம். இருந்தாலும் உருவில் பெரியதாகத் தெரிந்தது. எங்களை விட
மிகத் தொலைவிலிருந்ததால் அருகில் செல்லவும் முடியவில்லை.
Black winged Kite |
சிறிய கரும்பருந்து என்று பிறகு படத்தைக் கொண்டு தெரிந்து
கொண்டோம்.. ஆச்சரியம் நிலை குத்தி நின்று பரப்பதை இன்றுதான் பார்த்தேன்..
இரையைப் பிடிக்கப் பல முயற்சிகள் இரைக்கொல்லி பறவைகள் எடுக்கிறது. சென்னை பெரும்பாக்கம்
நீர் நிலைப் பின்புறம் சுற்றிவந்தபொழுது ஒரு பருந்தின் ஒரு கண் குருடாகிச்
சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. கண்கள் மிக முக்கியும் இரைக்கொல்லி பறவைகளுக்கு.
அவை இழந்தால் நீண்ட நாட்கள் வாழ்வது கடினம்..
ஜல்லிக்கட்டு
பார்த்தவுடன் வண்டியை நிறுத்திவிட்டோம். உணவகத்தின் பெயர். சூடான வடை
அதனுடன் நான்கு இட்லி கொஞ்சம் கெட்டி சட்னி. கையில் கேமரா இருந்ததால் நன்கு கவனித்தார்கள்.
எல்லாம் சூடாகவே கொடுத்தார்கள் கெட்டி சட்னி தவிர.. எதிர் பக்கம் இருந்த வீட்டின் மாடியில்
ஓயாமல் இரைச்சல் சத்தம் ஒலிபெருக்கியில். அதை கர்ண கொடூரமாகக் கேட்டுக் கொண்டே
காலை உணவு இனிதே முடிவடைந்தது.
அதை மறக்க அறிவால்
பக்கம் கவனம் செலுத்தினோம்.
சாலை ஒட்டி இருந்த
வயல்வெளியில் அறிவால் மூக்கன் ஒன்று தனியாக
இரை தேடித் நடந்து வலம் வந்தது. கடைசி
வரை எங்களைப் பார்க்கவில்லை. நிமிடத்திற்கு நான்கு வாகனங்கள் சென்று கொண்டிருப்பதால்
இவர்களை ஏன் பார்க்கவேண்டும். நம் வேலையில்
கவனமாக இருப்போம் என்ற எண்ணமாகக் கூட இருக்கலாம்.
பறவைகள் என்றும்
மனிதர்களை வேடிக்கை பார்ப்பதில்லை. எங்கே அருகில் வந்துவிடுவார்களோ என்ற அச்ச
உணர்வில் பார்வையை மனிதர்கள் மீது வைக்கிறது. மனிதர்கள் அற்ற நிலத்தில் பறவைகளின்
உலகம் முற்றிலும் வேறு. அங்குக் கூடு வைக்கும் மரங்களை வெட்டி சாய்ப்பதற்கு
யாரும் இல்லை. போலிகள் சிட்டுக் குருவி
லேகியத்திற்கு குருவிகளை பிடிக்கப்படுவத்தில்லை. நீர் நிலைகளில் மீது எந்த கட்டங்களும்
இல்லை. முழு நீர் பகுதியும் பறவைகள் சொந்தம் கொண்டாடலாம். நீந்தி வலம்
வரலாம். கரையோர பறவைகள் அங்கேயே ஓய்வு எடுக்கலாம்.
Red Naped Ibis |
எந்த பறவையும் மனிதர்களிடம் கேட்பதில்லை, கூட்டில் இருந்து குஞ்சுகள்
பறந்தபிறகு மரங்களை வெட்டுங்கள் என்று. எந்த பறவையும் மனிதர்களிடம் கேட்பதில்லை கூடு கட்ட கொஞ்சம் குச்சிகள் கொடுங்கள் என்று. எந்த பறவையும் மனிதர்களிடம் கேட்பதில்லை உங்கள் வீட்டில் மரங்கள்
வளருங்கள் எங்களுக்கு உபயோகமாக இருக்கும் என்று. எந்த பறவையும் மனிதர்களிடம்
கேட்பதில்லை எங்கள் நீர் நிலைகளை அழிக்காதீர்கள் என்று. ஆனால் மனிதன் இதற்கு எதிர் மாறாகவே செய்து கொண்டே
இருக்கிறான்…
சிறு பாலத்தின் மீது கௌதாரி ஒன்று காலை நடை முடித்து நின்று இருந்தது. இது அரிவாள் மூக்கன் இருந்த வயலில் இருந்து கொஞ்சம்
தள்ளி. வலதுபுற வயலில். எப்பொழுதும்
மனிதர்களை கண்டால் வேகமாக ஓடி புத்தகர்களில் மறைந்துக் கொள்ளும் கௌதாரி இங்கு அங்கேயே
இருந்தது. நகரவில்லை. இரை நிறைய சாப்பிட்டு நின்றுவிட்டதா என்ற சந்தேகம் வந்தது.
இரைகொல்லி பறவைகளிடம் இருந்து மறைந்து கொள்ள இங்கு இருக்கிறதா என்ற இரண்டாவது கேள்வியும்
எங்களுக்கு தோன்றியது.
சிறிது நேரம் நாங்கள் நேருக்கு நேர் பார்த்துக் கொண்டோம். பிறகு மெதுவாக
இறங்கி புதரில் சென்றுவிட்டது.. தரைவாழ் பறவையான கௌதாரிக்கு புத்தர்களே பிரதான இடமாக உள்ளது.
Grey francolin |
சாலை ஓரம் இருந்த சிறு மணல் பல்லத்தில் பறவையின் இறக்கை ஒன்று இருந்து. பாம்பு
சட்டையை உரிப்பது போல் இறக்கையை உதிர்த்து பறவை எங்கோ சென்றது போல் இருந்தது.
மனிதனிடம் இருந்து தப்பிக்க பறவைகளின் முதல் ஆயுதம் இறக்கையாகும். இறக்கை மட்டும்
இல்லையென்றால் அனைத்து பறவைகளும் சாலையில் நம்முடன் நடந்து வரலாம் அவற்றை காலால் மிதித்தே
நாம் கொன்று இருப்போம்.
எதிர் காலத்தில் மனிதர்களால் மிகப் பெரிய ஆபத்து வரப்போகிறது என்று தெரிந்ததால்
உயிர் வாழ பறவைகளுக்கு இறக்கை
தோன்றியிருக்குமோ. இங்கு இறக்கையை உதிர்த்துவிட்டு போன பறவை, இந்த இறக்கையை தேடுமோ. அப்படி கண்டறிந்தால் சட்டை எடுத்து உடம்பில் மாட்டுவதுபோல் இறக்கையை எடுத்து அதன் உடலில் சொருகி கொள்ளுமோ. இப்படி எங்கள் கற்பனைகள் தோன்றிக் கொண்டே நகர்ந்ததில் முதுகளத்தூர் ஊரில் நுழைந்துவிட்டோம்..
தோன்றியிருக்குமோ. இங்கு இறக்கையை உதிர்த்துவிட்டு போன பறவை, இந்த இறக்கையை தேடுமோ. அப்படி கண்டறிந்தால் சட்டை எடுத்து உடம்பில் மாட்டுவதுபோல் இறக்கையை எடுத்து அதன் உடலில் சொருகி கொள்ளுமோ. இப்படி எங்கள் கற்பனைகள் தோன்றிக் கொண்டே நகர்ந்ததில் முதுகளத்தூர் ஊரில் நுழைந்துவிட்டோம்..
ஊரை ஒரு முறை நின்று பார்த்ததில் வேறு சில நினைப்புகள் வந்து சென்றது. இங்குதான்
மிகப் பெரிய கலவரம் நடந்து. “முதுகளத்தூர் படுகொலை” என்று புத்தகங்கள்
விற்பனையாகிறது. அந்த நேரத்தில் இருந்த
மக்கள் இன்றும் வாழ்ந்துக் கொண்டிருப்பார்கள். இதோ என் அருகில் கூட ஒருத்தர்
இருக்கலாம். அவரிடம் பேசியிருந்தால்
கலவரத்தின்பொழுது அவர் என்ன செய்துக் கொண்டிருந்தார் என்று சொல்லலாம்.
நேரிடையாக பார்த்த நபர்களிடம் இருந்து வரலாறை கேட்பது படிப்பதை விட ஆர்வத்தை அதிகமாகும்.
நம் வண்டி. முதுகளத்தூர் தாண்டிவிட்டது. பிரதான சாலையில் சென்றுக் கொண்டிருக்கிறது.
சில கிலோமீட்டர் கடந்தால் இடதுபுறம் தானாகவே வண்டி நுழைந்து சென்றது.
எங்களுக்கே ஆச்சரியம். ஏன்டா என்று பார்த்தால் “சித்திரங்க்குடி பறவைகள் சரணாலயம்”
என்று பலகை எங்கள் வண்டியை வழிநடத்தி அழைத்து சென்றது தெரிந்தது.
ஒரு வழியாக சரணாலயம் வந்துவிட்டோம்.
உள்ளே போகலாம் வாங்க
-தொடரும்
-செழியன். ஜா
No comments:
Post a Comment