விலங்கு, பறவை
அடுத்து பூச்சிகள் நம்மைச் சுற்றி இருக்கும்
உயிரினம் ஆகும். உண்மையில் உலகில் மிக அதிகமாக இருக்கும் உயிரினமும் பூச்சிகள்
தான். நாம்
விரும்பாத உயிரினமும் பூச்சிகள் என்று சொல்லலாம்.
பூச்சிகள்
குறித்து புத்தகங்கள் தமிழில் மிக மிகக் குறைவாக வருகிறது. சமீபத்தில் வந்துள்ள புத்தகம்தான் “என்னைத் தேடி வந்த
சிற்றுயிர்கள்” -ஆசிரியர் ஆதி வள்ளியப்பன். எதிர் வெளியீடு
பறவைகள்
பார்க்க நாம் எங்கும் செல்லவேண்டாம் நம் வீட்டிற்கு வெளியே இருந்து
தொடங்கலாம். ஆனால் பூச்சிகள் பார்க்க இன்னும்
சுருக்கி நம் வீட்டிற்குள் இருந்தே தொடங்கலாம்.
ஆசிரியர்
தன் வீட்டிற்கு உள்ளே-வெளியே பார்த்த பூச்சிகளை மிக எளிமையாக, சரியான தமிழ்ப் பெயர்கள் மற்றும் அறிவியல்
பெயர்களையும் கொண்டு எழுதிச் செல்கிறார்..
கூன்வண்டு
பற்றி எழுதியதை அப்படியே பார்ப்போம். ஒரு நாள் எங்கள் வீட்டில் கட்டெறும்பை போன்ற, அதே
நேரம் கருப்பில் சிவப்பு கலந்த நிறத்தில் ஒரு பூச்சி தென்பட்டது. ஆறு கால்கள்,உணர்வுகொம்புகளைக் கொண்டிருந்தாலும் கூட நிச்சயமாக அது
கட்டெறும்பு அல்ல என்று தெரிந்தது. குறிப்பாக,அதன் ஒல்லி தலை முற்றிலும்
மாறுபட்டிருந்தது. ஒரு நோட்டுப் புத்தகத்தில் ஒட்டியிருந்த அது, அதன் எல்லா மூலைகளுக்கும் ஊர்ந்து கொண்டிருந்தது.
ஆங்கிலத்தில்
Weevil என்றிழைக்கப்படும் இந்தப் பூச்சி, தமிழில்
கூன்வண்டு எனப்படுகிறது. அரிசியில்
இதுபோன்று கூன்வண்டு
தோன்றும் என்று கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால், அவை மிகவும்
சிறியவை. இந்த கூன்வண்டு கட்டெறும்பு ஒத்த அளவுடன் இருந்தது...
ஒவ்வொரு
சிற்றுயிர் பற்றிய தன்மை,
அதன் செயல்பாடுகள், காணப்படும் இடம் என்று
விவரித்து உள்ளார்.. புத்தகத்தில் உள்ள அனைத்து படத்தையும் மொபைல் கேமெராவில் எடுக்கப்பட்டது என்ற
செய்தி ஆச்சரியத்தைத் தந்தது. காரணம்
சிற்றுயிர்கள் பெரும்பாலும் அசைந்து கொண்டே இருக்கும் பறவைகள் போல் இவற்றையும்
படம் எடுப்பது கடினமே…
கடைசியில் இப்படிக் குறிப்பிடுகிறார்
இன்னும் நிறையச் சிற்றுயிர்கள் படம்
எடுத்தேன் ஆனால் அவை தெளிவாகப் பதிவு ஆகாததால்
கண்டுபிடிக்கமுடியவில்லை என்கிறார்.
அணிந்துரையில்
காட்டுயிர் ஆராய்ச்சியாளர் ஜெகநாதன் உலகில் 15 லட்சம் பூச்சி வகைகள் இருப்பதாக
மதிப்பிடப்பட்டுள்ளது என்ற செய்தி என்னைப் பறவைகளுடன் ஒப்பிட்டு பார்க்கவைத்து.
பறவை
வகைகள் எவ்வளவு இருக்கும் என்று நினைக்கிறீர்கள்? 9000 முதல்10000 வரை
இருக்கும் என்று இதுவரை குறிப்பிடப்பட்டு வந்துள்ளன.. இதுவே தவறு
18000 பறவை வகைகள் உள்ளது என்று புதிய ஆராய்ச்சி முடிவு சொல்கிறது என்ற செய்தியும்
உள்ளது. ஆராய்ச்சி முடிவு.
எப்படி இருந்தாலும்
பூச்சி வகைகளுக்கு அருகில் கூட பறவைகள் இல்லை.
புத்தகத்தில்
காட்டுயிர் குறித்து ஜெகநாதன் - காட்டுயிர் என்றால் காடுகளில் மட்டுமே வசிக்கும்
உயிரினம் என்று அர்த்தமல்ல. நாம் வசிக்கும் வீடுகூட பல்லுக்கும் சிலந்திக்கு உகந்த வாழிடமாக உள்ளது. இயற்கைச்
சூழலில்,
வளர்ப்பு உயிரினங்கள் அல்லாத எல்லா உயிரினங்களுமே காட்டுயிர்கள்தான்
என்கிறார்…
இப்படி நிறையத் தகவல்கள் அணிந்துரையில் இருந்தே
தொடங்கிவிடுகிறது. ஆசிரியர் எழுதும் ஒவ்வொரு வரிகளிலும் தகவல்கள் உண்டு என்பதால்
கதை படிப்பது போன்று வேகமாகப் படித்துக் கடந்துவிட முடியவில்லை.
பக்கம்
37ல் வீட்டிற்கு வெளியே சென்று
பார்க்கப்பட்ட பூச்சியான கும்பிட்டுப்பூச்சி பச்சை,
பழுப்பு நிறங்களுடன் சுற்றுப்புறத்தில் இருக்கும் தாவரம் அல்லது
காய்ந்த சருகுகளுக்கு ஏற்ப உருமறைத் தோற்றத்துடன் கும்புடுப்பூசி காணப்படும் மற்றும் இவை இளம் பூச்சியாக இருக்கும்பொழுது ஒரு நிறமும்
வளர்ந்த பிறகு வேறொரு நிறமும் அடைகின்றது. பூச்சிகளில் சாதாரணம் இவை நிகழும்
என்றாலும் இடத்திற்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்வது சில பூச்சிகளுக்கே மட்டுமே
உரியது என்று நினைக்கிறேன்.
மொத்தம்
30 சிற்றுயிர்கள் பற்றிய அறிமுகம் புத்தகத்தில் சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. பூச்சி
புத்தகத்தில் வண்ணத்துப்பூச்சி பற்றி இல்லையென்றால் எப்படி?
வாங்க 55ஆம் பக்கத்திற்கு பழுப்பு வசீகரன் உங்களுக்காக மந்தைவெளி
ரயில் நிலையத்தின் தரையில் வெய்யிலில் காய்வதற்காக அமர்ந்து இருப்பதைப் பார்க்கலாம்.
அதே
போல் மயில் வசீகரன்,
மஞ்சள் புல் வெளியாள் வண்ணத்துப்பூச்சிகள் அடுத்து அடுத்து வரிசைகட்டி காத்துக்கொண்டு இருக்கிறேன்.
படித்துமுடித்த
பிறகு பூச்சிகள் பக்கம் நம் கவனம் செல்வதை உணரமுடிந்தது. நம்மை சுற்றி இருக்கும்
அனைத்து உயிரினங்களும் இந்த பூமியில் சிறப்பு வாய்ந்தவை அவற்றை அருவருப்பாக
பார்ப்பதோ, அடித்துக் கொல்வதோ தவறானது என்ற
முடிவுக்கு வரமுடிகின்றது.
வித்தியாசமான வடிவமைப்பில் புத்தகம்
உருவாக்கப்பட்டுள்ளது. பூச்சிகளும் பார்த்து தெரிந்துகொள்ளவேண்டிய உயிரினமாகும்.
சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மட்டும் இல்லாமல் அனைவரும் குறிப்பாகக் குழந்தைகளுக்கு வாங்கி
கொடுக்கவேண்டும் நாமும் படிக்கவேண்டிய புத்தகமாகும்.
-செழியன். ஜா
No comments:
Post a Comment