காலில் அடிபட்டதால்
முழு ஓய்வில், இந்த நேரத்தில் தியடோர் பாஸ்கரன்
அவர்களின் காட்டுயிர் புத்தகங்களை ஒரு சேர படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.சோலை
என்னும் வாழிடம்,தாமரை பூத்த தடாகம், இன்னும் பிறக்காத தலைமுறைக்காக,வானில்
பறக்கும் புல்லெல்லாம்,மொழிபெயர்ப்பு-கானுறை வேங்கை,தொகுத்த நூல்-மழை காலமும்
குயில் ஓசையும்,மற்றும் இணையத்தில் சில கட்டுரைகள்.
ஒவ்வொரு கட்டுரையும்
வெவ்வேறு காலகட்டத்தில் எழுதியிருந்தாலும்.எந்த இடத்திலும் புள்ளிவிவரங்களை
சரியாகவே குறிப்பிடுகிறார்.ஒரு நாட்டின் பரப்பளவில் 33% காடுகளாக இருக்க வேண்டும் ஆனால்
தமிழ்நாட்டில் அவை 17.5% இருப்பதாக பல்வேறு கட்டுரைகளில் காணமுடிகிறது.அணை
கட்டுவதாலும்,காடுகளில் பாதை அமைப்பதிலும்,தேயிலை பயிர் இடுவதற்கு, காகிதம்
மற்றும் சுரங்கம் என்ற பெயரிலும் காட்டை பிரித்து அழித்து விட்டார்கள்.செயற்கை
கோள் எடுத்த படத்தில் 17.5%க்கும் குறைவாகவே காட்டின் அளவு இருப்பதாக
குறிப்பிடுகிறார்.
நாம் பார்க்கும் பறவைகள்
அனைத்திற்க்கும் தமிழ் பெயர் இருப்பதை சுட்டி காட்டி, தமிழ் பெயர்களையே தாம்
பார்த்த பறவைகளுக்கு எழுதியுள்ளார்.சிங்கவால் குரங்கு என்பது ஆங்கில பதத்தின்
நேரடி மொழிபெயர்ப்பு அதன் தமிழ் பெயர் என்ன என்று ஒரு கட்டுரையில் கேள்வியோடு
நிறுத்தி பல ஆண்டுகளுக்கு பிறகு எழுதிய ஒரு கட்டுரையில் அவை சோலை மந்தி என்று
குறிப்பிடுவது எந்தளவுக்கு அவர் தமிழ் பெயரை தேடி சென்றிருக்கிறார் என்று
புலப்படுகிறது.
ஆறுகளை இணைப்பதால்
என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று தெரியாமல் நாட்டில் உள்ள ஆறுகளை இணைக்க
வேண்டும் என்று சொல்வது, சுதந்ததிர தின உரையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்
இதை பற்றி எதுவும் சொல்லாதது ஆறுதலாக இருக்கிறது என்று ஒரு கட்டுரையிலும், தமிழில்
காட்டுயிர் பற்றிய எழுத்துகள் வருவது இல்லை அதிலும் பெரும்பாலான பத்திரிகைகள்
அபூர்வ விலங்கு,வெளிநாட்டு பறவை என்றே பெயர் தெரியாத பறவைகளுக்கு குறிக்கப்படுவது,
காட்டுயிர் கலைச்சொற்கள் இல்லாமல்போனதின் வெளிப்பாடே என்று குறிபிடுகிறார். சித்த
மருத்துவர்கள் இருப்பதால் மரங்களின் பாரம்பரிய பெயர் காப்பாற்றப்படுவது இப்போதைக்கு
ஆறுதல் என்று சொல்வது உண்மையிலும் உண்மை.இதே வரிகளை மா.கிருஷ்ணனின் மழைக்காலமும்
குயிலோசையும் நூலின் முன்னுரையிலும் குறிப்பிடுகிறார்.
தியடோர் பாஸ்கரன்
அவர்களின் அனைத்து கட்டுரைகளும் ஏறக்குறைய காட்டுயிர், மரங்கள், ஆறுகள், மலைகள்,
கழிமுகங்கள்,சோலை காடுகள், பாலை காடுகள், வேட்டையாடிகளால் உயிரினங்கள் குறைந்தது, அணுஉலை
நிறுவுவதால் ஏற்படும் ஆபத்துகள், அரசாங்கத்தால் உருவாகும் அணைகள் ஏற்படுத்தும் இடம்
அழிப்புகள், சுரங்கம் என்ற பெயரில் ஏற்படும் காட்டழிப்பு, தேயிலை பயிரால் ஏற்படும்
இழப்புகள்,பறவைகளின் தமிழ் பெயரை
பயன்படுத்தாமல் இருப்பது,எந்த அரசாங்கமும் சுற்றுச்சூழலை பற்றி தேர்தல்
அறிக்கையில் சொல்லாதது இப்படி அணைத்து செய்திகளையும் ஒரு சேர அறிந்துகொள்ள முடிகிறது.
ஒரு மனிதர் இந்த
அளவுக்கு காட்டை நேசிக்க முடியுமா என்று அனைத்து கட்டுரைகளையும் படித்துமுடித்தபோது
உணரமுடிகிறது. காட்டுயிர் சம்பதமாக படிப்பவர்கள் தாங்கள் முழுநேரமாக காட்டுயிர்
ஆய்வில் இருப்பார்கள் ஆனால் தான் பார்த்த வேலைக்கும் இதற்கும் சமந்தம் இல்லாத
ஒருவர் வாழ்நாள் முழவதும் செலவுசெய்து கொண்டியிருகிறார் என்பதுதான் ஆச்சரியம்.
இவர் கட்டுரையின்
முதல் வரியே மேற்கொண்டு முழுவதும் படிக்க வைத்துவிடும்.எப்படி இளையராஜாவின் பாடல்
வெற்றி, பல்லவி ஆரம்பிப்பதற்கு முன்பு வரும் இசையே பாடலின் கொண்டாதத்தை
சொல்லிவிடுமோ அதேபோல்தான் இவரின் ஆரம்ப
வரி. தான் போய் இறங்கும் இடத்தை துல்லியமாக பதிவு செய்துவிடுகிறார்.அவரோட முதல்
வரிகளை பார்ப்போம்....
முதுமலையிலிருந்து
கல்லட்டி வழியாக ஊட்டி செல்லும் சாலையில் மசினகுடிக்கருகே சீக்ரட் ஐவரி (Secret ivory)விடுதியை நாங்கள் அடைந்தபொழுது மாலை ஐந்து மணியாகிவிட்டது.
மார்ச் 2004 பெரியார் புலிகள் சரணாலயத்தின் உட்பகுதியில்,வனத்துறைக்கு சொந்தமான
ஒரு சிறிய குடிலில் நாங்கள் மூவரும் அமர்ந்திருந்தோம்.
கடந்த ஜனவரி முதல்
நாள்,காலை ஆறரை மணிக்கு ஒரு ஜீப்பில் பந்திப்பூர் சரணாலய்திற்குள் நுழைந்தோம்.
ஒவ்வொரு வருடப்பிறப்பையும்
காட்டில் கழிக்கும் குடும்ப வழக்கதிற்கேற்ப அந்த ஆண்டு குடகிலுள்ள பிரம்மகிரி
மலைக்கு செல்ல தீர்மானித்தோம்.மதியம் பெங்களுரை விட்டுப் புறப்பட்டு,இருட்டியபின்
இவ்விடுதியை அடைந்தோம்.
மா.கிருஷ்ணன்
சந்திப்பை இப்படி தொடங்குகிறார் 1962ஆம் வருடம் சென்னை எட்வர்ட்
எலியட்ஸ் சாலையிலுள்ள(இன்றைய ராதாகிருஷ்ணன் சாலை) அவரது பெருங்குளம் இல்லத்தில்
நான் மா.கிருஷ்ணனை முதன் முறையாக சந்தித்தேன். சட்டையில்லாமல், வெற்றுடம்புடன்
லுங்கியைக் கட்டிக்கொண்டு ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிகரெட்
புகைத்துகொண்டிருந்தார்.
பெரியார்
சரணாலயத்திலுள்ள காட்டுயிரைக்காண ஏரியில் ஒரு சிறு படகில் சென்று சுற்றிவிட்டுத்
திரும்பிகொண்டிருந்தோம்.
ஒரு கட்டுரையில்
ஆப்ரிக்காவில் உள்ள The Great Rift Valley பற்றி விவரித்துவிட்டு ஒரே சமயத்தில் பத்து
இலட்சம் பூநாரைகள்(Flamingos) கூடும் இடமான நக்கூரா பறவை சரணாலயத்தை பார்ப்பதற்கு செல்வதை இப்படி தொடங்குகிறார் ஒரு சனிக்கிழமை அதிகாலையில் நான் நைரோபியை
விட்டுப் புறப்படும்போது பொழுது புலர ஆரம்பித்து விட்டிருந்தது. இவருக்கு வழிக்காடியாகவும், காரோடியாகவும் வரும்
கினாரா, ஒரு வார்த்தை மட்டும் பேசுபவர் இவர் கேட்ட ஒரு கேள்விக்கு “பறவைகள்” என்று
கூறிவிட்டு சிகரட்டை பற்ற வைப்பதில் முனைந்துவிட்டார்.
இப்படி இவருடைய கட்டுரைகளின் முதல் வரியே அடுத்து படிக்க வைத்துவிடும். காட்டுயிர்
மட்டும்மில்லாமல் சினிமா பற்றியும் ஆய்வு செய்து நிறைய நூல்களை
எழுதியுள்ளார்.அவருடைய ஒரு சினிமா பேட்டியில் உங்களுக்கு பிடித்த ஐந்து படங்களை
வரிசைபடுத்துங்கள் என்ற கேள்விக்கு சகுந்தலை(1940),ஏழை படும் பாடு(1950),யாருக்காக அழுதான்(1965),அவள் அப்படிதான்(1978),அன்பே சிவம்(2003) என்று பதில் சொல்லியிருக்கிறார்.
தமிழில் காட்டுயிர் எழுத்து என்று மா.கிருஷ்ணன் அவர்களுக்கு அடுத்து மிக
பெரிய அளவில் எழுதி கொண்டிருப்பவர், இன்று எழுதும் அனைத்து காட்டுயிர்
எழுத்தாளர்களும், இவரை குறிப்பிடாமல் எழுதுவதில்லை.இந்த வயதிலும் தொடர்ந்து எழுதி
கொண்டிருக்கிறார் என்பதற்கு சமிபத்தில் தி தமிழ் இந்துவில் வெளிவந்த “வரையாடு”
கட்டுரையே ஒரு உதாரணம் முகநூலிலும் அப்படியே.
தியடோர் பாஸ்கரன் அவர்கள் எழுதிய சோலை என்னும் வாழிடம் புத்தக வெளியிட்டு
நிகழ்சியில்.அவர் அருகில் நான் அமர்ந்திருந்தேன்.புத்தக வெளியிட்டு நிகழ்ச்சி முடிந்து கிளம்பியவரை பார்த்தபடியே
நானும் சென்றேன்.வேலை காரணமாக பல மாநிலங்களில் அவர் இருந்தாலும் இப்பொழுது
பெங்களுருவில் வீடு கட்டி வசிக்கிறார்.தம் வீட்டை சுற்றி இதுவரை 33வகை
புள்ளினங்களை பார்த்துள்ளதாக ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.இப்பொழுது
இதை விட அதிகமாக பார்த்திருக்க கூடும்.
அவர் அனுபவம் நமக்கு கட்டுரையாக இருக்கிறது அதனுடன், நிறைய புத்தகங்களையும்
நமக்கு அறிமுகபடுத்துகிறார். நிறைய இடங்களுக்கு சென்றும் நிறைய படித்தும் ஒரூ கட்டுரையை எழுதுகிறார்
என்பது அவருடையை எந்த கட்டுரையை படித்தாலும் தெரிந்துகொள்ளலாம்.நானும் நிறைய நூல்
மற்றும் படங்களை அவருடைய கட்டுரைகளில் இருந்து குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன்.
1-Climb Every Mountain- கொல்லிமலை
2-Tree of Delhi
3-Check List of Birds of Tamil Nadu- M.A .பாட்ஷா
4-Hachiko(2009)- movie
5-An Inconvenient Truth Documentary Film
6-Silent Spring
7-The Deer and Tiger (இந்த புத்தகத்தை உல்லாஸ் கரந்த் தன்னுடைய The
Way of Tiger என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்)
8-The Story of Asia’s Lion
9- 18ஆம் யானை:மூன்று குரல்கள்- Documentary
film
Hachiko படம் 1930களில் ஜப்பானில் வாழ்ந்த ஒரு நாயின் உண்மை
கதை. ஹச்சிகோவுக்கு சிலை ஒன்றை ஜப்பான் ரயில் நிலையத்தில் வைத்துள்ளார்கள்.
இன்றும் அது இறந்தநாளான ஏப்ரல் 8ஆம் தேதியன்று மக்கள் அச்சிலை முன் கூடி
மரியாதை செலுத்துகிறார்கள். பின்பு ஒரு முறை தியடோர் பாஸ்கரன் அவர்கள் ஜப்பான்
சென்றதை அவர் வரிகளில் பார்ப்போம்-பயிற்சிக்காக ஒரு முறை நான் டோக்கியோ
சென்றிருந்தபோது,எனக்கு கிடைத்த முதல் வாய்ப்பில் ஒரு ரயிலைப் பிடித்து புறநகர்
ஷிபுயா ஸ்டேஷனுக்குச் சென்று,அங்கு நடைமேடையிலிருந்த ஹச்சிகோவின் சிலை முன் சில
வினாடிகள் நின்றேன்.
தியடோர் பாஸ்கர் அவர்களின் நிறைய கட்டுரைகளை காட்டுயிர்,சினிமா பற்றி இருக்கும்
ஆனால் எந்த இடத்திலேயும் அவருடைய வாழ்கை முறை வந்ததில்லை 1940ஆம் வருடம் ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில்
பிறந்தார் என்றே எல்லா புத்தகத்தின் புகப்பில் பார்க்கமுடிகிறது ஆனால் அவரை பற்றி
?
காலச்சுவடு எடுத்த ஓர் நேர்காணலில் அவரின் வழக்கை பற்றி சிறிது
அறிந்துகொள்ள முடிகிறது அவற்றின் லிங்க் கொடுத்துள்ளேன்.
காட்டுயிர,சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி எழுதியும், பேசியும் மட்டுமே
மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்பதை இசை விமர்சகர் ஷாஜி எழுதிய
ஒரு கட்டுரையில்-ஒரு முற்பகல் நேரம் எனது நண்பனின் மளிகை கடையில்
அமர்ந்திருந்தேன்.திடிரென ஒட்டுமொத்தக் கட்டடமும் பெரும் நடுக்கத்துடன்
குலுங்கியது.ஒரு பூகம்பத்தை நான் உணர்ந்த முதல் அனுபவம் அதுவே. அக்காலகட்டத்தில்
நான் பெருவந்தானம் ஜான் என்பவரை சந்தித்தேன்.அவர் ஒரு சுற்றுச்சூழலியல்
போராளி.பேச்சை கேட்பவர்கள் என யாருமில்லாத ஒரு தெருமுனைக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார்.
சாலையோரத்தில் அவரது உரை கேட்க சுவாரசியமில்லாமல் இருந்தது.ஆனால் எங்கள்
பகுதிகளில் தொடர்ந்து நிகழும் பூகமப்தைப் பற்றிதான் அவர் பேசிக்கொண்டிருக்கிறார்
என்பதை உணர்ந்ததும் ஆர்வமுடன் நான் அவரது பேச்சை கவனித்தேன்.இப்படி செல்கிறது
ஷாஜியோட வரிகள் ......ஆக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி கேட்பதற்கு கூட மக்கள்
ஆர்வம் காட்டுவதில்லை என்றே அவரின் ஆரம்ப வரிகள் உணர்த்தினாலும் தொடர்ந்து
எழுதியும், பேசியும் மட்டுமே கவனத்தை திருப்ப முடியும் என்று அவரின் கடைசி வரிகள்
உணர்த்துகிறது.
இன்றைய அளவில் தமிழில் அதிக அளவில் சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர்
பாதுகாப்பு பற்றி கட்டுரைகளை எழுதி வருபவர் தியடோர் பாஸ்கரன் அவர்கள். எந்த ஒரு
பறவையை பற்றியும் முழு விபரங்களை சொல்லி போரடிக்காமல் பார்த்ததை விவரிக்கும்
பாங்கு சிறந்ததாக அமைந்திருக்கிறது.இவருடைய காட்டுயிர் ஆர்வத்திற்கு உதாரணமாக இந்த
நிகழ்வை குறிப்பிடலாம் தான் இறந்தபின்,தான் நேசித்த காட்டிலேயே தனது உடல் புதைக்க
பட வேண்டுமென்று உயில் எழுதியவர்- ஹ்யுகோ வுட். உயில்படியே அவரது உடல்
டாப்ஸ்லிப்பில் புதைக்கபட்டது.ஆனால் அந்த உயிலை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில்
தியடோர் அவர்கள் பல அலுவகங்களுக்குச் சென்று தேடியும் ஒரு தடையமும் கிடைக்கவில்லை
என்று பதிவுசெய்திருக்கிறார்.
ஒரு கட்டுரையில் வேட்டையாடிய உணவை சிங்கங்கள் சாபிட்டுகொண்டிருந்த இடத்தின்
வெகுஅருகில் இவருடைய ஜீப் சென்று நின்று, இஞ்சினை டிரைவர் அணைத்துவிட்டார். பின்
சீட்டில் அமர்ந்திருந்த தியடோர் பாஸ்கரன் இவற்றை புகைப்படம் எடுக்க கையில் கேமராவை
எடுத்தபொழுது ஒரு ஆண் சிங்கம் இவரை நோக்கி திரும்பி நேருக்கு நேர் பார்த்தபொழுது
ஈரக்குலையே நடுங்கியதாக குறிப்பிடுகிறார்.இதே போல் கார்டுனிஸ்ட் மதன் ஒரு பதிலில்-ஒரு
முறை சிங்கம் ஒன்று நேருக்கு நேர் என் கண்ணை பார்த்தபொழுது என் உடல் நடுங்கியதாக
எழுதியுள்ளார்.பெரும்பாலும் நாம் சிங்கம்,புலி இவற்றை அடைக்கப்பட்ட கூண்டில் பார்த்தே பழகியதால் அவற்றின் கம்பீரம் நாம்
உணருவதில்லை.புலியை அதன் வாழிடத்தில்,காட்டில் பாருங்கள் அதன் கம்பீரம் தெரியும்
என்று எப்பொழுதோ தியடோர் பாஸ்கரன் அவர்கள் எழுதியது படித்த ஞாபகம் வருகிறது.
இவர் செல்லும் இடங்களில் தரப்படும் உணவுகளை பற்றி எழுதும்பொழுது, அந்த
உணவுக்கு என்ன சுவை இருக்குமோ அப்படியே அந்த சுவையை எழுத்தில்
கொண்டுவந்துவிடுகிறார்.படித்துபாருங்கள் நீங்களும் உணர்வீர்கள். தியடோர்
எழுதியுள்ள பறவை,விலங்குகளின் தமிழ் பெயர்களை அனைத்தும் எடுத்து தனியாக எழுதிவைத்துள்ளேன்.
முடிவில் என்பதுக்கும் மேற்ப்பட்ட தமிழ் பெயர்கள் வந்தது. ஜல்லிகட்டை தடை செய்த
இந்த வேளையில் அவருடைய ஏறு தழுவுதல் கட்டுரையை அவரது முகநுலில் பதிவு
செய்திருந்தார்.
சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிபெற்று
தபால் துறையில் உயர்ந்த பொறுப்பு வரை சென்று,வேறு வேறு துறைகளிலும்(தொல்லியல்
,காட்டுயிர்,சினிமா) புலமையுடன் இருந்தவரை பற்றி இன்னும் முழுவதுமாக நாம்
அறிந்துகொள்ள பேட்டியாகவும், கட்டுரையாகவும், ஆவணப்படமாகவும் அவரை பற்றி வரவேண்டும்
என்பதே உண்மை.தமிழ் நாட்டில் மட்டுமே எதையும் ஆவணப்படுதுவதில்லை என்ற நம்பிக்கையை
தகர்த்தி இவரை போன்றவர்களின் அனுபவங்களை சேகரிப்போம்.
- செழியன்
தெடர்புக்கு lapwing2010@gmail.com