காலை 6.40 தாம்பரம் பஸ் நிலையத்தில் ஏலக்காய் டி குடித்து கொண்டிருந்தேன்
அடுத்து செங்கல்பட்டு நோக்கி செல்வதற்கு. வேடந்தாங்கல், மிக பழமையான பறவைகள்
சரணாலயத்தை பார்ப்பதற்கு மார்ச் மாதம்தான் என்னால் முடிந்தது.சென்னையில் இருந்து
சிறிது தொலைவு மட்டுமே உள்ளதால் அனைவரும் சென்று வரலாம் ஆனால் அப்படி யாரும்
செல்வதில்லை என்பது பஸ்சில் அங்கு செல்லும்பொழுது தெரிந்துகொள்ளலாம்.
ஐம்பது ரூபாய்
டிக்கெட் எடுத்து விட்டால் செங்கல்பட்டு வரை சென்று வரலாம். வேடந்தாங்கலுக்கு
தாம்பரத்தில் இருந்து பஸ் இருக்கிறதா என்று தெரியவில்லை ஆனால் செங்கல்பட்டில்
இருந்து நாற்பது நிமிடத்திற்கு ஒரு பஸ் உள்ளது என்று இணையத்தில் தேடும்பொழுது
தெரிந்து கொண்டேன். நாற்பது நிமிட பஸ் எல்லாம் கப்சா என்று செங்கல்பட்டில் நீங்கள்
நிற்கும்பொழுது உணர ஆரம்பித்து விடுவீர்கள்.நானும் அப்படியே.
8.15 மணிக்கு செங்கல்பட்டு பஸ் நிலையத்தில் இறங்கிய உடனேயே பஸ் விசாரணை அதிகாரிடம்
சென்று வேடந்தாங்கல் செல்வதற்கு எந்த பஸ் என்ற கேள்விக்கு 8.15 ஒரு பஸ் கிளம்பும் என்றார் அப்பொழுது மணி 8.17. பஸ் நிலையம் முழுவதும் வலம்வந்தேன் பயன் இல்லை மிண்டும் அதே அதிகாரிடம்
வந்து கேட்டேன்.ஒரு நடத்துனர் 8.15 பஸ் இல்லையினா அடுத்து 9.40க்கு தான் பஸ் என்ற பதில் எரிச்சலை தந்தாலும்
வேறு வழி என்ன என்று கேட்டதற்கு, நீங்க
மதுராந்தக பஸ்சில் ஏறி பட்டாளம் கூட்ரோடில் இறங்கி ஷேர் ஆட்டோவில் செல்லவேண்டும்
ஆனாலும் ஒரு சிக்கல் ஷேர் ஆட்டோ வேடந்தாங்கல் வரை செல்லாது என்ற குண்டையும்
போட்டார்.
MAN vs WILD Bear Grylls அடிக்கடி ஒரு வாசகத்தை சொல்லுவார் நாம் ஒரே
இடத்தில் இருக்ககூடாது போயிட்டே இருக்கவேண்டும் என்ற வாசகத்தை பின்பற்றி போயிட்டே
இருப்போம், அங்கே சென்று பார்த்துகொள்ளலாம் என்று மதுராந்தக பஸ்சில் அமர்ந்தேன். 9.00 மணிக்கு பட்டாளம் கூட்ரோடில் இறக்கிவிட்டார்கள்.
சென்னை to திருச்சி மெயின் ரோட்டில் மதுராந்தகதிற்க்கு
முன்பு உள்ளது பட்டாளம் கூட்ரோடு. நிறைய ஷேர் ஆட்டோ இருந்தாலும் எதுவும் வேடந்தாகளுக்கு
செல்வதில்லை என்ற முடிவோடு இருந்தார்கள். கேட்டதற்கு பத்து பேர் சேர்ந்தார்கள் என்றால்
போகலாம், இதுவரை என்னை தவிர வேறு ஒருவரையும் இல்லை என்பதுதான் நிஜம்.இதற்காக
காத்திருந்தால் செங்கல்பட்டில் இருந்து 9.40 பஸ்ஸே வந்துவிடும்.அங்கு இருந்து பனிரெண்டு
கிலோமீட்டர் தான் வேடந்தாங்கல் என்ற பலகையை பார்த்து, தனியாக செல்ல எவ்வளவு என்று
கேட்டேன்.200 ரூபாய் என்பதை 180க்கு முடிவாகி 9.30க்கு வேடந்தாங்கல் என்னை வரவேற்த்தது
சீசன் நேரத்தில் கூட போக்குவரத்து மிக மோசம் என்பதையே பஸ்சில்
செல்லும்பொழுது தெரிகிறது. இதை தான் முதல் பத்தியில் கடைசி வரியாக எழுதியிருகிறேன்
அங்கு யாரும் செல்வதில்லை என்பதை ஒரு பத்து பேர் கூட ஷேர் ஆட்டோவில் சேரவில்லை.என்பது உணர்த்துகிறது
ஐந்துரூபாய் மட்டுமே பெரியவர்களுக்கு உள்ளே செல்ல, கேமரா இருபத்தைந்துரூபாய்
ஆக முப்பது ரூபாயுடன் பார்த்துவிடலாம்.நீர் நிறைந்து இருப்பதால் ஏகப்பட்ட பறவைகள் காணப்படுகிறது
அதில் மிக அதிகமாக மஞ்சள் மூக்கு நாரைகளே நிறைந்து இருக்கிறது.நான் உள்ளே
சென்றபொழுது பறவை நோக்கும் ஒரு குருப் வெளியேறி கொண்டிருந்தது.ஏறக்குறைய இருபது
பேருக்கு மேல் இருப்பார்கள் வயதோ இருபதுகுள்ளே, அனைவரும் வடமாநிலத்தை
சேர்ந்தவர்கள்.எல்லோருடைய கையிலும் குறிப்பெடுக்க தாள்கள், அதில் பறவைகளின்
படங்களும் இருந்ததை அவர்கள் வேகமாக வெளியேறும்பொழுது பார்க்க முடிந்தது.
மஞ்சள் மூக்கு நாரைகள் (Painted
Stork)
சிறிய நீர்காகம் (Little cormorant)
கூழைக்கடா (Pelican)
கரண்டிவாயன் (Spoon Bill)
அரிவாள் மூக்கன் (White ibis)
வக்கா (Night Heron)
மடையான் (Pond Heron)
மரங்கொத்தி பறவை (Wood Pecker)
பணங்காடை (Indian Roller)
இரட்டை வால் குருவி (Black Drongo)
வென்மார்பு மீன்கொத்தி (White Throated Kingfisher)
உன்னி கொக்கு(Cattle Egret)
சிறிய கொக்கு(Little Egret)
உள்ளே நூழைந்தவுடன் இரட்டை வால் குருவி என்னை வா என்று வரவேற்று உள்ளே செல்
என்றது.மஞ்சள் மூக்கு நாரைகள் மொத்தமாக ஏரியை குத்தகை எடுத்தது போல்
இருந்தது.பார்க்கும் இடம் முழுவதும் மஞ்சள் மூக்கு நாரைகளே.சிறிய நீர் காகங்கள்
அதனுடன் போட்டி போடும் அளவுக்கு இருக்கிறது. நிறைய பள்ளிகளில் இருந்து சிறு
பிள்ளைகளை ஆசிரியர்கள் அழைத்து வருகிறாகள்.என்ன வேடிக்கை என்றால் வரும்
ஆசிரியர்களில் யாருக்கும் ஒரு பறவையின் பெயர் கூட தெரியவில்லை ஆமாம் ஒரே ஒரு
பறைவையின் பெயர் கூட தெரியவில்லை என்ற நிலை, பள்ளியில் சுற்றுச்சூழல்,காட்டு
விலங்கு,பறவை என்ற பாடமே இல்லாததை இவர்கள் எல்லாவற்றையும் கொக்கு, கோழி என்றே பிள்ளைகளுக்கு
சுட்டி காட்டி வருவதில் தெரிகிறது.
என் அருகில் இருந்த வாத்தியார் அதோ பறவைகள் பார், கொக்கு பார் என்றே சொல்லி கொண்டிருந்தார். பிள்ளைகளும் பெயரை
கேட்கவில்லை என்பது வாத்தியார்க்கு வசதியாக இருந்தது.இது போல் பிள்ளைகளை அழைத்து
வரும்பொழுது குறைந்த பட்சம் ஒரு சில பறவைகளின் பெயர்களையாவது ஆசிரியர்கள் தெரிந்து
கொண்டு வந்தால் பிள்ளைகள் பார்க்கும் பறவையின் உண்மையான பெயர் சொல்லிக்கொடுப்பதால்,
பிள்ளைகள் மனதில் பதிந்து அவை தவறான பெயர் பதியாமல் இருப்பதற்கு உதவும்.
நாம் நடந்து போகும் வழியின் வலது பக்கத்தில் நிறைய பறவைகள் படமும் அதன்
அருகில் தமிழ் மற்றும் ஆங்கில பெயர்களும் இருப்பதை ஒரு ஆசிரியர்களும் பார்த்து
படிக்கவே இல்லை அப்படியாவது சில பறவைகள் பெயர்கள் தெரிந்து கொண்டிருக்கலாம்.
வேடந்தாங்கலில், நம் கண்ணுக்கு அருகில் இருக்கும் மரத்தில் மஞ்சள் மூக்கு
நாரைகளும்,அதற்கு அப்பால் இருக்கும் மரத்தில் கூழைக்கடாகளும் அதன் பக்கத்தில்
இருக்கும் மரத்தில் நீர்காகங்களும் பாகம் பிரித்து கொடுத்து இருப்பது போல் அமர்ந்திருந்தன.எந்த
பறவைகளுக்கும் இடயே சண்டையோ,போட்டியோ கொஞ்சம் கூட இல்லை என்பது ஆச்சரியம்.
மஞ்சள் மூக்கு நாரைகள், பறப்பதும்,சிறு மரக்கிளைகளை எடுத்து வருவதும் அதனை
கொண்டு கூடு அமைப்பதும், இந்த தொடர்நிகழ்ச்சியை பார்ப்பது பறவை ஆர்வலர்களுக்கு
மிகுந்த சந்தோஷத்தை தரும்.நிறைய மஞ்சள் முக்கு நாரைகள் முட்டை இட்டுயிருப்பதை
பார்க்க முடிந்தது.ஆங்கில பெயரான painted stork என்பதை வர்ண நாரை என்று மொழி பெயர்கிறார்கள்
அது தவறு, ஆங்கில பதத்தின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு, மஞ்சள் மூக்கு நாரை அல்லது
சங்குவளை நாரை என்றே தமிழில் அழைப்பது சரி என்று ஒரு கட்டுரைகளில்
படித்திருக்கிறேன்.
பறவைகளை அவதனிக்க ஒரே ஒரு நேர் பாதை மட்டும் உள்ளதால், கால் வலி,உடம்பு வலி என்பதே இல்லை
போக்குவரத்தால் வரும் உடம்பு வலி மட்டுமே உண்டு. நிறைய இருக்கைகள் அம்ரவதற்கு
இருப்பதால் பெரியவர்களும் சென்று வரலாம், குடிநீர் சுவையாகவே உள்ளது. சிறிது
நேரத்தில் பள்ளி பிள்ளைகளை அமர வைத்து சாப்பிட சொல்லிவிட்டார்கள். காலையில் நிறைய
கனவுகளோடு கிளம்பிய பிள்ளைகள் வித விதமான உணவுகளை பிரித்து சாப்பிட
தொடங்கிவிட்டார்கள் ஒரு பிள்ளை முட்டையை கொண்டுவந்திருப்பதை பார்க்க
முடிந்தது.சுற்றி பார்க்க வேறு எதுவும் அங்கு இல்லை, ஒரே நேர் பாதை மட்டுமே,
எவ்வளவு நேரம் தான் ஒரே மாதிரி பறவைகளை பார்த்து கொண்டிருப்பது என்று பிள்ளைகளுக்கு
போர் அடிப்பதால், சாப்பிட்டு விட்டு விளையாட ஆரம்பித்துவிட்டார்கள்.
நிறைய கூழைக்கடாகள் உயரத்தில் பறந்து கொண்டிருந்தது பருந்துகள் கூட்டமாக பறப்பது
போல் இருந்தது.உயரமான கோபுரம் இருப்பதால் வேடந்தாங்கல் முழுவதும் பார்க்க முடிவது
தான் மிக சிறந்ததாக இருக்கிறது.கோபுரத்தில் இருக்கும் தொலைநோக்கி அன்று இல்லாததால்
அவற்றைக் எதிர் பார்த்து வருபவர்கள் இங்கு இருக்குமே இங்கு இருக்குமே என்று கூட
வருபவர்களிடம் சொல்லி, பறவைகளை கிட்ட பார்க்கலாம்னு வந்தால் இப்படியாகிவிட்டதே
என்று என்னிடம் பைனாகுலரை வாங்கி அவர்களும், அவர்களின் பிள்ளைகளும் பார்த்தார்கள்
அதில் ஒருவர், என்ன பைனாகுலர் இவ்வளவு கனமாக உள்ளது என்று இரண்டு,முன்று முறை
என்னிடம் கேட்டு விட்டார்.
கரண்டிவாயனை தேடுவது சிரமமாக உள்ளது மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே
வேடந்தாங்கலில் காணப்படுகிறது. கடைசியில் இரண்டு கரண்டிவாயனை பார்த்து விட்டே
அங்கு இருந்து கிளம்பினேன். அரிவாள் மூக்கன் சொல்லி கொள்ளும்படி பறந்து
கொண்டிருந்தது. நிறைய மடயான்களை பார்க்க முடிகிறது.நாம் நிற்கும் இடத்தில
இருக்கும் தண்ணீரிலேயே மடையன்கள் சாதுவாக நின்றுகொண்டுயிருகிறது. நானும் ஒரு
மணிநேரத்திற்கு மேல் அவற்றை கவனித்து கொண்டிருந்தேன் அமைதியாக நீரையே பார்த்து
கொண்டிருந்தது. எதை நினைத்து நின்று கொண்டிருகிறது என்று தான் தெரியவில்லை.
முன் வரிசையில் உள்ள ஒரு மரத்தில் இருக்கும் பறவைகளை பற்றி என் நினைவில்
இருப்பதை பதிவிடுகிறேன். மேற்புரதில் ஒரு சங்குவளை நாரை (மஞ்சள் மூக்கு நாரை) தன்
குட்டிகளுக்கு உணவை தந்து கொண்டிருக்கிறது, பக்கத்தில் ஒரு மஞ்சள் முக்கு நாரை கூடு
அமைப்பதற்காக மர கிளைகளை கொண்டுவருவதும் செல்வதுமாக காரியத்தில் சரியாக
செயல்பட்டுகொண்டிருந்தது. நான் பார்த்தபொழுது ஏறக்குறைய கூடு பாதிக்கு மேல் தயார்
நிலையில் இருந்தது. பின் புறம் நிறைய, வளர்ந்து வரும் மஞ்சள் முக்கு நாரைகள்
கூட்டமாக நின்று கொண்டிருந்தது. மரத்தின் கீழ் ஒரு மடையானும் பின்னால் இராகொக்கும்
நின்று, என்னத்தை பார்க்குமோ, எதையோ பார்த்து கொண்டே இருந்தது.ஒரு சில
கூழைக்கடாகளும் இருந்ததை பார்க்க முடிந்தது. அதிகமான கூழைக்கடாகள் முதல் வரிசையில்
உள்ள மரத்தில் இல்லாமல் பின் பக்கம் இருக்கும் மரத்தில் அமர்ந்து இருந்ததை
பைனாகுலர் இருந்தால் துல்லியமாக பார்க்கலாம்.
கோபுரத்தில் இருந்து பார்க்கும்பொழுது பறவை சரணாலயத்திற்கு பின் பக்கம்
உள்ள வயல்வெளிகளில், ஒரே ஒரு மாடு புற்களை மேய்ந்து கொண்டிருந்தது மற்றும் நிறைய
உன்னி கொக்குகள் அதில் காணப்பட்டது.சிறிய கொக்குகள் அதிகமாக சரணாலயத்தில் இருப்பதை
காணமுடிகிறது உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே சிறிய கொக்கையும் உன்னி கொக்கையும்
பிரித்து அவதனிக்க முடியும். பறவை அவதனிப்பவர்கள் சுலபமாக கண்டு பிடித்து
விடுவார்கள். சரணாலயம் மிக அமைதியாக இருப்பதால் பறவைகள் சத்தம் மட்டுமே கேட்க
முடிகிறது. சிறிது நேரம் அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தேன், வித்தியாசமா
சத்தத்தை கேட்டு நான் அமர்ந்து இருந்த இடத்தில இருந்த மரத்தை மேல் நோக்கி பார்த்தேன்
மரங்கொத்தி பறவை ஒன்று தனியாக கிளைகளை விட்டு,விட்டு தாவி கொண்டிருந்தது. உயரத்தில்
இருந்ததால் என்னிடம் இருந்த மொபைல் கேமராவில் படம் சரியாக விழவில்லை.வீட்டில்
சரிபார்த்த பிறகே கேமெராவை எடுத்து சென்றேன் ஆனால் அங்கு மெமரி கார்டு விளையாட்டு
காண்பித்து விட்டது.அதனால் இங்கு இருக்கும் படம் எல்லாம் மொபைலில் எடுத்தவையே.
வேடந்தாங்கல் நீர் |
தண்ணீர் இருக்கும்வரை பறவைகள் இருக்கும், ஏறக்குறைய ஜூன் மாதம் வரை பார்வையாளர்கள்
வருவார்கள், பிறகு சரணாலயத்தை மூடிவிடுவார்கள் அதன் பின் வரும் பார்வையாளர்கள்
உள்ளே செல்ல அனுமதி இல்லை, இதற்காக தான் வந்திருக்கிறோம் என்று சொல்பவர்களை உள்ளே
முழுவதும் செல்ல விடாமல் ஆரம்பத்தில்லேயே நின்று பார்க்க அனுமதிப்பார்கள். இவையெல்லாம்
வெளியே இருப்பவர்களிடம் பேசி தெரிந்து கொண்டேன்.
அப்படி, இப்படி சுற்றி முடித்து விட்டு வெளியே வந்தேன். ஒரு பெண்மணி
தர்புஸ் சாப்பிடுங்கள் என்று கூப்பிட்டார்கள் எவ்வளவு என்பதற்கு பத்து ரூபாய்தான்
ப்ரஷ்ஷாக தருகிறேன் என்று சொன்னதால் சாப்பிட்டு விட்டு, இளநீர் ஒன்று தாருங்கள் என்றேன்
இதன் விலையை நான் கேட்கவில்லை அதான் தர்புஸ் சாப்பிட்டோமே என்ன அதிகமாக சொல்லவிட
போகிறார்கள் என்று குடித்து விட்டேன் பிறகு நாற்பது ரூபாய் என்று
சொன்னார்கள்.சென்னையிலேயே இருபது, இருபத்தைந்து தான் என்பதற்கு பின், இருபத்தைந்து
தந்து வியாபாரத்தை முடித்தேன் அவரிடமே பஸ் எப்பொழுது வரும்? இப்பொழுது வரும்.
சொல்லியபடி வந்ததுதான் ஆச்சரியம், ஏறி அமர்ந்தேன் ஊரைச்சுற்றி காண்பித்து
விட்டுதான் செங்கல்பட்டில் இறக்கிவிட்டார்கள்.போன வழிலேயே வீடு வந்து சேர்ந்தபொழுதுதான்
ஒரு உண்மை தெரிந்தது அடுத்த தடவை வண்டியில்லாமல் செல்லக்கூடாது என்று.
-செழியன்