வெளிநாடுகளில் இருந்து வரும் பறவைகள் தான் தமிழ்நாட்டு பத்திரிகைகளை குளிர்காலத்தில் சுறுசுறுப்பாகிவிடுகிறது.
அக்டோபர் மாதம் வந்தால் தவறாமல் நாளிதழ்களில், தொலைக்காட்சியில் வரும் செய்தி வேடந்தாங்கல் திறக்கப்பட்டது. வெளிநாட்டு பறவைகள் வர தொடங்கி உள்ளன என்று செய்தி போடுவார்கள். இதற்கு முக்கிய காரணம் வெளிநாட்டு பறவைகள் என்று நாம் நினைப்போம்.
ஆனால் உண்மை அப்படி இல்லை. அங்குள்ள பெரும்பாலான பறவைகள் உள் நாட்டு பறவைகள்.
வெளிநாட்டு பறவைகளுக்கும் வேடந்தாங்கல் திறப்பதற்கும் தொடர்பு இல்லை. ஒரு கட்டத்தில் குளிர்காலத்தில் தான் பறவைகள் இருக்கும் என்ற எண்ணமும் இந்த செய்திகள் ஏற்படுத்திவிடுகிறது. மற்ற எந்த மாதத்திலும் பறவைகளை குறித்து பத்திரிகைகள் செய்தி போடுவது இல்லை.
சரணாலயங்களில் கூடு கட்டி கொண்டு இருக்கும் பறவைகள் அனைத்தும் நம் நாட்டு பறவைகளே. வெளிநாட்டு பறவைகள் இங்கு கூடு கட்டுவதில்லை. இதை தெளிவாக புரிந்து கொண்டால் பத்திரிகை செய்திக்கும்- உண்மைக்கும் நிறைய வித்தியாசம் இருப்பதை உணர்வீர்கள்.
சரணாலயங்களில் உள்ள நாட்டு பறவைகள், வெளிநாட்டு பறவைகள் இரண்டும் கலந்து இருக்கும் பிரித்து பார்க்க தொடங்குவது மட்டுமே நம் வேலை.
அப்படி இந்த குளிர் மாதத்தில் சென்னை -சோழிங்கநல்லூர் சதுப்பு நிலத்தில் பறவைகள் அவதானிக்க சென்றோம். நிறைய சிறுவர்கள், பெரியவர்கள் வந்து இருந்தனர். கரையோர பறவைகள், நீரில் நீந்தும் பறவைகள், இரை கொல்லி பறவைகள் என்று கலவையாக இருந்தான.
இங்கு அனைத்து பறவைகளும் மிகுதியாக இருந்தன. புதியவர்களுக்கு இவை வெளிநாட்டு பறவைகள் என்ற எண்ணம் வருவதை தவிர்க்க முடியாது, அதனால் தொடக்கத்தில் சிறு அறிமுகம் கீழ் உள்ளது போல் கொடுத்தோம்.
பறவைகளை வீட்டு பக்கத்தில், வயல்வெளிகளில். நீர்நிலை அருகில், காடுகளில், மலைகளில், கடல் அருகில் என்று பார்க்க முடியும்.
நீர் நிலை பறவைகள் காடுகளுக்கு செல்லாது. காடுகளில் உள்ள பறவைகள் வீட்டு தோட்டத்தில் வருவதில்லை. அந்த அந்த வாழிடங்களில் அப்படியா வாழும். இங்கு நாம் நீர் நிலை பறவைகள் பார்க்க வந்து உள்ளோம். இந்த பறவைகள் மற்ற வாழிடங்களில் செல்வதில்லை.
ஏன் நீர்நிலை அருகில் பார்க்க வந்து உள்ளோம் என்றால் நிறைய பறவைகளை ஒரே இடத்தில் காண நீர்நிலை நல்ல இடம் ஆகும். மற்ற வாழிடங்களில் உள்ள பறவைகள் அதன் வாழிடங்களுக்கு சென்று பார்த்தால் இந்த அளவு ஒரே இடத்தில் காண முடியாது.
அதனால் புதியவர்கள் முதலில் நீர்நிலை அருகில் பறவைகள் பார்க்க தொடங்கினால் எளிமையாக கற்றுக்கொள்ள முடியும் அதனால் தான் நாம் இங்கு வந்து உள்ளோம் என்று அறிமுகத்துடன் பறவைகள் நோக்க தொடங்கினோம்.
இங்கும் உள்ள நாட்டு பறவைகள்-வெளிநாட்டு பறவைகள் கலந்து குதுகலமாக இருந்தன.
முதலில் எங்களுக்கு மிக அருகில் இருந்த தாழைக்கோழி கவனத்தை ஈர்த்தது. கூடவே உண்ணிக்கொக்கு. சிறிய கொக்கு, உள்ளான், காணங்கோழி கலந்து இருந்தன.
சாம்பல் நாரை, செந்நீல நாரை அருகில் அருகில் நின்று நோட்டம் விட்டன. சட்டென்று இரண்டு அரிவாள் மூக்கன் பறந்த எங்களுக்கு டா டா காட்டி சென்றது. கரண்டி வாயன் அதை கவனிக்காமல் அலகை நீரில் நுழைத்து துழாவிக் கொண்டு இருந்தன. தகைவிலான் காலை முதல் மாலை வரை பறந்து கொண்டே இருக்கும் என்ற செய்தி புதியவர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. சில நேரம் மின்சார ஒயரில் நூற்றுக்கணக்கில் அமர்ந்து இருக்கும் அதையும் உங்கள் பறவை நோக்குதலில் காணலாம் என்று சொல்லி இருந்தோம்
சங்குவளை நாரை, கூழைக்கடா, பவளக் கால் உள்ளான் பறவைகள் ஏராளமாக இரை தேடி கொண்டும், நகர்ந்து அங்கு இங்கு செல்வதும் பிசியாக காணப்பட்டது. நாம் இப்போது வெளிநாட்டு பறவைகள் பாக்கம் கவனத்தை திருப்புவோம்.
ஊசிவால் வாத்து, தட்டை வாயன், சேற்று பூனைப்பருந்து முக்கிய இடத்தை பிடித்து இருந்தது. ஒவ்வொன்றின் அடையாளம்தான் பறவையை பிரித்து அறிய எளிமையாக இருக்கும்.
ஊசி போன்ற வால் நீண்டு இருப்பதை பார்த்தவுடன் இதை ஊசி வால் வாத்து என்றும், அலகு தட்டையாக நீந்தி கொண்டு இருக்கும் பறவைதான் தட்டை வாயன் என்று தமிழில் எளிமையாக இனம் கண்டு கொள்ள முடியும்.
இத்தகையை பறவைகளை பிடித்து உன்ன இதன் பின்னாலே வரும் சேற்று பூனை பருந்தின் வழக்கம். நாங்கள் பார்க்கும் போது நீர் இல்லாத நிலத்தில் நின்று நோட்டமிட்டு கொண்டு இருந்தன.
ஏறக்குறைய 30 வகை பறவைகள் கண்டு களித்தோம். நினைவில் உள்ளவற்றை குறிப்பிடுகிறேன்!
கதிர்குருவி
சிகப்பு மூக்கு ஆட்காட்டி
பவளக்கால் உள்ளான்
தாழைக்கோழி
அறிவாள் மூக்கன்
கரண்டிவாயன்
சாம்பல் நாரை
செந்நீல நாரை
பாம்புத்தாரா
வெண்மார்புக் கானாங்கோழி
இலைக்கோழி
கூழைக்கடா
வெண்மார்பு மீன்கொத்தி
நீலவால் பஞ்சுருட்டான்
உண்ணிக்கொக்கு
சிறிய கொக்கு
நடுத்தர கொக்கு
பெரிய கொக்கு
சங்குவளை நாரை
புள்ளி உள்ளான்
உள்ளான்
ஊசிவால் வாத்து
தட்டை வாயன்
சேற்று பூனை பருந்து
தகைவிலான்
சாம்பல் தலை ஆட்காட்டி
கரிச்சான்
மடையான்
புள்ளிமூக்கு வாத்து
Baillon's crake
ஒரே இடத்தில் இவ்வளவு பறவை வாகைகள் பார்க்க சிறந்த இடமாக நீர் நிலைகள் இருக்கிறது.
குளிர்காலம் இன்னும் இதில் சேர்ந்து கொள்வதால் பறவைகளுக்கும் கொண்டாட்டம் அதை
பார்க்கும் நமக்கும் கொண்டாட்டம்.
மீண்டும் ஒரு பறவை சந்திப்பில் சந்திப்போம் என்று கலைந்தோம். !