Thursday 19 May 2016

பறவை நோக்குதல் : புதிய தொடர் -1



பொழுதுபோக்கில் இவற்றையெல்லாம் சேர்க்கலாம்- சினிமாவுக்கு போவது, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, விஷயமே இல்லாமல் பக்கத்து வீட்டு மனிதர்களுடன் பேசிக்கொண்டிருப்பது, சும்மாவே உட்கார்ந்திருப்பது இவையெல்லாம் அன்றைய பொழுதை .... எப்படியாவது போக்க வேண்டும் என்று பெரும்பாலானோர் செய்து கொண்டிருப்பது. இவற்றில் பறவை நோக்குதலை சேர்க்கலாமா என்றால்? கண்டிப்பாக சேர்க்கலாம். ஆரம்பத்தில் பொழுதை போக்கவாது பறவைகளை பாருங்கள் பிறகு அவை உங்களின் அன்றாட செயல்களில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும்.
பறவைகளை ஏன் பார்க்க வேண்டும் அதனால் என்ன நன்மை என்று நீங்கள் நினைத்தால்? வேலைக்கு போனால், சம்பளம் என்ற நேரடியான பலன் இதில் இல்லைதான் ஆனால் நம் வாழ்க்கை முறையை சம விகிதத்தில் கொண்டு செல்வதில் (உதாரணமாக பூச்சிகளை கட்டுபடுத்துவதில்) முக்கிய பங்கு பறவைகள் வகிக்கிறது.யோசித்து பாருங்கள் மனிதர்கள் எங்களை சுடுகிறார்கள் என்று பறவைகள் நான்கு நாட்கள் பூச்சிகளை சாப்பிட மாட்டோம் என்று ஸ்ட்ரைக் செய்தால் நம் நிலை?
வீட்டை விட்டு வெளியே வரமுடியுமா? அப்படியே வந்தாலும் நம்மை சுற்றி  பூச்சிகளே பறந்து கொண்டிருக்கும் அவையே நாள் ஆக, நாள் ஆக பூச்சிகளின் தேசத்தில் தான் நாம் வாழ வேண்டி வரும். வாழ முடியுமா? இந்த இடத்தில பறவை மனிதர் என்று அழைக்கபடும் சலிம் அலி சொன்னது நினைவுக்கு வருகிறது- “மனிதர்கள் இன்றி பறவைகள் வாழும் ஆனால் பறவைகள் இன்றி மனிதனால் வாழமுடியாது”.
பெரும்பாலும் பறவை நோக்குதல் புத்தகங்களில் பல்வேறு பறவைகளை பற்றி படத்துடன் கொடுத்து அவற்றின் சிறிய அறிமுகங்கள் இருக்கும். ஆனால் இந்த தொடர் சிறிது மாறுபட்டு கீழ் கண்டவாறு எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். கொஞ்சம் விரிவாக எல்லாவற்றையும் சொன்னால் புதியவர்களும் பறவை நோக்குதலில் ஈடுபாடு ஏற்பட வாய்புண்டு என்ற எண்ணம்தான். அதனால் எனக்கு தெரிந்த மொழிலியே எழுதுகிறேன்.   

பறவை நோக்குதல் என்ற இந்த தொடரில்:

1.பறவைகளின் வகைகள் மற்றும் குறிப்புகள் 

2.பறவை பார்ப்பதற்க்கான நெறிமுறைகள் மற்றும் காலநேரம் 

 3.எது சிறந்த பைனாகுலர்

4.பறவை சம்பந்தமான புத்தகங்கள் மற்றும் இதழ்கள் 

5.பறவை சங்கங்கள்

6.தமிழ்நாட்டின் பறவை சரணாலயங்கள் 

7.இந்திய பறவை சரணாலயங்கள்

8.பறவைகள் இடமான-ஏரி-குளம்-கழிமுகங்கள்-சதுப்புநிலங்கள்

9.பறவைகள் பற்றிய படிப்புகள்
 
10.பறவை நிபுணர்களின் பேட்டிகள்

11.பறவை மனிதர்களின் சந்திப்புகள் 

12.பறவை இணையதளங்கள்-தமிழ்/ஆங்கிலம்  

13.கேள்வி-பதில் 

14.IUCN - RED LIST-BIRDS (அழிவு நிலையில் உள்ள /அழிந்து போன  
  பறவைகள்)

இவற்றை எல்லாம் நாம் தொடர்ச்சியாக அடுத்தடுத்த கட்டுரையில் பார்ப்போம். பறவைகளின் வகைகளை மட்டும் கொடுத்தால் படிக்க போர் அடித்து விடும் என்பதால் எல்லாவற்றையும் கலந்தே எழுது வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறேன்.

பறவை பார்த்தல் என்று சொல்லாமல் ஏன் பறவை நோக்குதல் என்று  சொல்கிறார்கள் என்ற கேள்வியை நாமே கேட்டுக்கொண்டு அதற்கான பதிலை பார்ப்போம் அங்கே ஒருத்தர் நிற்கிறார் அவரை பாருங்களேன், பிள்ளைகளா தெருவில் யானை போகுது வந்து பாருங்கள் என்று சொல்லுவோம். இதில் ஒரு சில நிமிடங்களில் முடிந்து விடுவதை நாம் பாருங்கள் என்று சொல்லுவோம் அவற்றை பற்றி கேட்டால் (அதாவது அந்த ஆளை அல்லது யானையை பற்றி) நமக்கு எதுவும் தெரியாது.ஏன் என்றால் ஒரு சில நிமிடங்களில் என்ன சொல்லிவிட முடியும் அதே அந்த ஆளை அல்லது யானையை ஐந்து நாள் பின் தொடர்ந்து செல்லுங்கல், ஐந்து நாள் முடிவில் அதே கேள்விக்கு நம்மிடம் நிறைய பதில் இருக்கும்.இதை தான் பார்ப்பதற்கும் நோக்குவதற்கும் உள்ள வித்தியாசம்.
பறவையை ஒரு சில நிமிடங்களில் பார்த்தால் அவற்றை பற்றி ஒன்றும் தெரியாது அதே அவற்றை தொடர்ந்து நோக்கும்போது நிறையை தகவல்கள் நமக்கு கிடைக்கும் இவ்வளவுதான் வித்தியாசம்.அதனால்தான். இதை ஆங்கிலத்தில் BIRD WATCHING என்று சொல்லுகிறார்கள், BIRD SEEING இல்லை.
பறவை பார்ப்பதை யார் ஆரம்பித்தார்கள் என்று யோசித்தால் இதற்கு முன்னோடி ஆங்கிலேயர்கள் என்பதே முற்றிலும் சரி(அவர்களின் பெயர்களை எல்லாம் இப்போதைக்கு தவிர்த்து விடுகிறேன்) அதன் பிறகே இந்தியாவில் இவை பரவ ஆரம்பித்தது.ஆங்கிலேயர் இந்தியாவை விட்டு சென்று அறுபத்து ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இன்றும் பறவை நோக்குதல் என்பது இந்தியாவில் மேல் தட்டு மக்கள் விஷயமாகவே உள்ளது.
பறவைகளை பார்க்க அதற்கென்று நேரம் ஒதுக்கி சென்றிருக்கிறீர்களா? என்று கிராமங்களில் உள்ளவர்களிடம் கேட்டுபாருங்கள். இதற்கான பதில்-இதற்கெல்லாமா நேரம் ஒதுக்குவார்கள் வேறு வேலை இல்லை எங்களக்கு என்றும் அவர்களுக்கு தெரிந்த பறவைகள் பற்றி அந்த வட்டார பெயரில் சொல்லுவார்கள் அதை தவிர மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவதோ அதை பற்றி விவாதிப்பதோ, பறவைகளை பாதுக்காக்க வேண்டும் என்பதோ அவர்களுக்கு தெரியாது அதனால் பறவை அவதானித்தால் இன்றும் இந்தியாவில் மேல் தட்டு மனிதர்களின் செயலாகவே உள்ளது.
பறவைகள் சம்பந்தமாக வெளிவரும் இதழ்கள்,பத்திரிகைகள்,புத்தகங்கள் மற்றும் இணையதளங்கள்,செயல்படும் சங்கங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே உள்ளது. அதனால் ஒரு பாமர மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கொஞ்சம் சிரமமே.தமிழில் ஒரு சில முயற்சிகள் நடந்திருக்கிறது ,நடந்துகொண்டிருகிறது ஆனால் மிக மிக குறைவே.இப்பொழுதுதான் காடு என்ற இரு மாத இதழ் வெளிவருகிறது மற்றும் காட்டுயிர் என்ற இதழும் வருகிறது அனால் காட்டுயிர் இதழிலேயே ஒரு வரி இப்படி செல்கிறது பொருளாதாரம் பல படும்பொழுது காட்டுயிர் இதழ் வரும் ஆனால் தொடர்ச்சியாக வருவது சிரமமே என்ற வரியும் உள்ளது. அதை தவிர தமிழில் வேறு எதுவும் இல்லை என்றே தெரிகிறது.மக்களுக்கு ஆர்வம் இருந்தால் தானே பறவை இதழ்கள் விற்பனையாகும்.
காகத்தின் கூடு 


ஒரு சிறு அறிமுகத்துடன் முடிப்போம் முதல் பாகத்தை:

நம் வீட்டை சுற்றியிருக்கும் பறவைகளை நாம் இதுவரை முழுவதும் பார்த்து இருக்க மாட்டோம் என்பதே உண்மை.வேண்டுமென்றல் நீங்கள் ஒரு நிமிடம் யோசித்து எழுதி  பாருங்கள் உங்கள் வீட்டை சுற்றி என்ன என்ன பறவைகளை இதுவரை பார்த்து இருக்கிறோம் என்று. பிறகு இரண்டு நாள் உன்னிப்பாக அதே வீட்டை சுற்றி இருக்கும் பறவைகளை பாருங்கள் முதலில் சொன்ன பறவைகளின் எண்ணிக்கை விட இப்பொழுது இரண்டு அல்லது மும் மடங்கு எண்ணிக்கை உயர்ந்து இருப்பதை கான முடியும்.
இவை உண்மையும் கூட பெரும்பாலும் நம் கண்களுக்கு புலப்படுவது காகம்,தவிட்டு குருவி,மைனா,புறா,சில சமையும் சிட்டு குருவி, வாத்தை நம் தெருவில் யாராவது ஓட்டி செல்லும்பொழுது, நம் தலை எப்பொழுதாவது மேல் நோக்கி நிமிர்ந்தால் “பருந்து” இப்படி கை விட்டு என்னு அளவுக்கே பறவைகளின் எண்ணிக்கை இருக்கும்.அதற்கென்று சிறுது நேரம் ஒதுக்கி உன்னிப்பாக பறவைகளை கவனியுங்கள் பிறகு எண்ணிக்கையில் நிறைய மாற்றம் தெரியும்.
முதலில் நம் வீட்டை சுற்றி இருக்கும் பறவைகளை முழுவதும் பார்த்து விட்டு பிறகு வேறு இடங்களுக்கு செல்லுவோம்.இந்தியாவில் சிறந்த காட்டுயிர் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் அவர்கள் அவர் வீட்டை சுற்றி இதுவரை 33வகை பறவைகள (புள்ளினங்களை) பார்த்துள்ளதாக ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.இப்பொழுது இதை விட அதிகமாக பார்த்திருக்க கூடும். அதனால் நம் வீட்டை சுற்றி இருக்கும் பறவைகளின் எண்ணிக்கை முழுவதும் நமக்கு தெரிந்து இருக்க வேண்டும்.
பறவைகளை பார்க்ககூடிய இடங்கள் என்று -தமிழ்நாடு,மற்றும் இந்தியாவில் நிறைய உள்ளது.உதாரணமாக குளம்,ஏரி,ஆற்று படுகைகள்,சதுப்பு நிலங்கள்,காடு,மலை பிரதேசங்கள்,சரணாலயங்கள்,வயல் வெளிகள்,கழிமுகங்கள்,புதர் காடுகள், மனிதன் செயற்கையாக உருவாக்கிய மின் கம்பங்கள், இவ்வளவு இடங்கள் இருப்பதால் நம்மால் சுதந்தரமாக எல்லாவற்றையும் பார்த்து ரசிக்க முடியும்.அதற்கு முன் நம் வீட்டை சுற்றி இருப்பதை முதலில் பார்த்து விடுவோம்.

உங்கள் வீட்டை சுற்றி மேலே சொன்னவற்றில் என்ன என்ன  இடங்கள் உள்ளது என்று ஒரு லிஸ்ட் போடுங்கள்.பிறகு அங்கு சென்று பார்த்து குறிப்பெடுங்கள்.அதற்கு முன் நிறைய பறவைகளை நம்மால் இனம் காணமுடியாது மற்றும் அவற்றின் பெயரும் நமக்கு தெரியாது என்பதும் மிக பெரிய குறையாக இருக்கும்.அதனால் பறவை பெயர்கள் தெரிந்தவர்களுடன் சென்றால் அந்த குறை நீங்கி விடும்.அப்படி யாரவது இல்லையென்றால் அதற்கும் பதில் உள்ளது. பறவை சங்கங்கள் உள்ளது அவற்றில் சேர்ந்து தெரிந்து கொள்ளலாம். கிராமத்தில் இருப்பவர்கள் அருகில் இந்த சங்கங்கள் இருக்காது அதனால் நீங்களே உருவாக்கி மற்றவர்களுக்கு சொல்லிகொடுக்கலாம். அதற்கு முன் தமிழில் பறவை அறிமுக புத்தகங்கள் உள்ளது மற்றும் முடிந்தவர்கள் ஆங்கிலத்தில் நிறைய பறவை புத்தகங்கள் உள்ளது அதை படித்து தெரிந்து கொள்ளவது சிறந்ததாக இருக்கும்.

  நம் வசதிக்காக பறவைகள் இப்படி வகைப்படுத்தலாம்  :

- நம் வீடு, வயல்வெளி மற்றும் புதர் சுற்றி இருக்கும் பறவைகள்
 காகம்,குருவி,மைனா,கொக்கு (காட்டில் வாழும் மைனாவும் உண்டு)

- நீர் நில பறவைகள்:
 (ஏரி,குளம்,ஆறு,சதுப்பு நிலங்கள்,கழி முகங்கள்)
 வேடந்தாங்கலில் உள்ளவை எல்லாம் நீர் நில பறவைகள்.

- காடு மற்றும் மலை பிரதேச பறவைகள்-
நிறைய பறவைகளை இங்கு காணமுடியும் அவை எல்லாம் பிறகு  
பார்ப்போம்.மேலே சொன்ன இடங்களில் நிறைய உட்பிரிவு இடங்கள் இருந்தாலும் இவையே இப்போதைக்கு போதும்.

இந்த தொடர் புதியவர்களுக்கே என்பதால் பறவை நோக்குபவர்களுக்கு(BIRD WATCHER) இது தெரிந்த விஷயமாகவே கடந்து செல்வீர்கள்.தமிழில் தொடரை ஆரம்பிப்போம் எப்படி செல்கிறது என்று,வரும் மின் அஞ்சல் மற்றும் பின்னுட்டங்களை வைத்து யோசித்து செயல்படலாம் என்றும் அல்லது இவையே சரியாக இருந்தால் அப்படியே தொடரலாம் என்ற நினைப்பும் இருக்கிறது. 

 முடித்து கொள்ளுங்கள் முதல் பாகத்தை என்று நீங்கள் சொல்வது 
 தெரிகிறது அதனால் .............
                                                            -தொடரும் 

                                                                                                                          -செழியன் 

2 comments:

  1. நல்ல முயற்சி.வாழுத்துக்கள். பறவைகள் படம் வேண்டுமெனில்,என் சிறிய தொகுப்பிலிருந்து பயன்படுத்தி கொள்ளுங்கள்.
    http://arunsnap.blogspot.in
    https://facebook.com/arunsnap

    ReplyDelete
    Replies
    1. நன்றி அருண்குமார்,உங்கள் தொகுப்பில் இருந்து படங்கள் தேவைப்படுகிறது,உங்கள் பெயருடன் பயன்படுத்திகொள்கிறேன் நன்றி.

      Delete