Sunday, 1 May 2016

இயற்கையை நேசிக்க கற்றுக்கொடுங்கள்..



உலகம் ரொம்பவும் கெட்டுப்போய்விட்டது.. அப்போதெல்லாம் இப்படி இல்லை.. சித்திரையில் வெய்யில் கொளுத்தியது..  ஆடியில் காற்றடித்தது.. ஐப்பசியில் அடைமழை பெய்தது.. கார்த்திகையில் தூறல் இருந்தது.. மார்கழியில் குளிரடித்தது.. இப்படி எழுபது, என்பது வயது பெரியவர்கள் இன்றும் புலம்பிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.  இதில் எந்த சந்தேகமும் இல்லை.  அவர்கள் சொல்வதெல்லாம் உண்மையிலும் உண்மைதான். ஆனால் இன்றைய குழந்தைகளிடம் இயற்கையை பற்றி நம்மில் எத்தனை பேர் பேசுகிறோம்..? எத்தனை குழந்தைகளுடைய வீட்டில் வாங்கி வைக்கும் காய்கறிகளின் பெயர்களை குழந்தைகளுக்கு சொல்லிக்கொடுக்கிறோம்..?  அவர்கள் தினமும் சாப்பிடும் அரிசி சோறு எதிலிருந்து வந்தது என்பதுகூட அவர்களுக்கு சரியாக தெரியாது.  இதற்கு அவர்களை குற்றம் சொல்லி பயன் இல்லை.  எல்லாவற்றுக்கும் காரணம் நாம்தான்.. 

Photo-Kalyan Varma
ஆட்டுக்கல்லையும், அம்மிக்கல்லையும், உரலையும், உலக்கையையும் அறியாத இன்றைய இளையதலைமுறையினர் அரிச்சுவடிகளில்கூட இவற்றை பற்றி படிப்பதில்லை. அணிலும், ஆடும், இலையும், ஈயும், உரலும், ஊதலும் எல்லாம் இடம்பெற்றிருந்த அரிச்சுவடி புத்தகங்கள் இன்று காலத்தின் ஔட்டத்தில் எங்கோ தொலைந்துபோயிருக்கின்றன.. உடுத்தும் உடையும், உண்ணும் உணவும், குடிக்கும் நீரும், சுவாசிக்கும் காற்றும் எங்கிருந்து வந்தன என்பதை பற்றிய உணர்வே இல்லாமல் இயற்கையை வாசிக்கத்தெரியாத ஒரு தலைமுறைதான் இன்று வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.. பிச்சிப்பூவையும், செம்பருத்தியையும், மருதாணியையும், மரிக்கொழுந்தையும் பற்றி எதுவுமே தெரியாத தலைமுறைதான் இது.. மஞ்சளும், இஞ்சியும் என்ன என்று தெரியாத இவர்கள் சாப்பிடுவது எதுவோ அது எப்படிப்பட்டதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையான விழிப்புணர்வு கூட இல்லாமல் இயற்கை எழில் கொஞ்சும் இந்த பூமியில் வாழ்க்கையின் இனிமையான இளம்பருவத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்..

எத்தனை பெற்றோர்கள் இன்று தங்கள் குழந்தைகளுக்கு யானையையும், புலியையும் பற்றி சொல்கிறார்கள்..?  அடுத்த அறையிலும், மேல்மாடியிலும் இருக்கும் குழந்தைகளை அலைபேசியில் அல்லவா சாப்பிட அழைக்கிறார்கள் இன்றைய அம்மாக்கள்..?  அறிவியல் முன்னேற்றம் இங்கே துஷ்பிரயோகம் அல்லவா செய்யப்படுகிறது? ஒரு நாளில் எத்தனை  நிமிடங்கள் அப்பா, அம்மாக்கள் தங்கள் குழந்தைகளிடம் பேசுவதற்காக செலவழிக்கிறார்கள்..?  தாய்மண்ணையும், தாயின் மடியின் சுகத்தையும் அறியாமல் வளரும் இன்றுள்ள இளையதலைமுறை எப்படி அந்த மண்ணையும், தாயையும் நேசிப்பவர்களாக இருக்க முடியும்..?  எத்தனை குழந்தைகளுக்கு இன்று புல்வெளிகளையும், அவற்றில் பறந்து திரிந்த தட்டான்பூச்சிகளையும், பட்டாம்பூச்சிகளையும் பிடித்து விலையாடத்தெரியும்..? மாறாக அவர்கள் கம்ப்யூட்டரில் துப்பாக்கிகளோடு எதிரியை சுட்டுக்கொல்வதிலும், வீழ்த்துவதிலும் அல்லவா தங்கள் இளமை பருவத்தை தொலைத்துக் கொண்டிருக்கிறார்கள்..?  நெருஞ்சி முள் குத்த குத்த ஔடி விளையாடிய காலம் எல்லாம் காணாமல் போய்விட்டது இன்று..!  பொன் வண்டை பிடித்து தீப்பெட்டிக்குள் அடைத்துவைத்து அதற்கு அரிசி ஊட்டிவிட்டு அதை சாப்பிடச்சொன்ன கதைகளை எத்தனை அப்பா, அம்மாக்கள் தங்கள் குழந்தைகளிடம் சொல்லியிருக்கிறார்கள்..? காகத்துக்கு காலையில் சாப்பிடுவதற்கு முன்பு நாம் எத்தனை பேர் நம் குழந்தைகளிடம் அவற்றுக்கு சோறு போட்டுவிட்டு வரச்சொல்கிறோம்..?  குளிர்சாதனப்பெட்டிகளையும், துணி துவைக்கும் இயந்திரங்களையும், ஏர் கண்டிஷனையும் பார்க்கும் இந்த தலைமுறைக்கு மண்பானை தண்ணீரின் சுகமும், விசிறி காற்றின் இன்பமும், ஆற்றங்கரையில் தோய்க்கும்  கல்லில் துணியை தோய்ப்பதில் உள்ள ஆனந்தமும் எப்படி தெரியும்..? இன்றுள்ள குழந்தைகள் வானத்தில் வரும் நிலாவையாவது பார்த்திருப்பார்களா என்றால் அதுகூட சந்தேகம்தான்.. மின்னும் நட்சத்திரங்களும், நீல நிற வானமும், அதில் ஔடி விளையாடும் வெண்மையான மேகங்களும் எல்லாம் இவர்களுக்கு இணையதளத்தில் மட்டும்தான் பார்க்க தெரியும்.. 
 
photo-kalyan varma
சிறிய சிறிய பட்டன்களை அழுத்தி கணினியில் பெரிய பெரிய உலகங்களை கணினி திரையின் வழியாக பார்த்துக் கொண்டிருக்கும் இந்த தலைமுறை நாளை வளர்ந்து ஆளாகும்போது, விசாலமான இந்த உலகத்தில் சுருங்கிப்போன மானுட வடிவத்தில் பிறந்த இயந்திரங்களாகத்தான் வாழ்வார்கள்.. சக மனிதர்களின் வேதனைகளை இவர்களால் எவ்வாறு புரிந்துகொள்ள முடியும்..? இந்த உலகம் நாளை நல்லபடியாக இருக்க வேண்டும் என்றால் அது இன்றைய இளம் தலைமுறையால் மட்டும்தான் முடியும். சொத்து சுகங்களையும், காரையும், பங்களாக்களையும் சேர்த்துவைப்பதில் என்ன பயன் இருக்கிறது..? யாருக்காக சேர்த்துவைக்கிறார்களோ அவர்கள் இந்த பூமியில் நாளை அவர்களுடைய காலத்தில் வாழமுடிந்தால்தானே அவர்களின் தாய், தந்தையர் சேர்த்துவைத்துவிட்டுச்சென்ற சொத்து சுகத்தால் பயன் இருக்க முடியும்..?  இருப்பதற்கு பூமியே இல்லாமல் போகும்போது காரும், காசும் பணமும் இருந்து என்ன பயன்..? இதை இன்றைய பெற்றோர்கள் புரிந்துகொள்ளவேண்டும். இயற்கையை நேசிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். இயற்கையை வாசிக்கக் கற்றுக்கொடுக்க  வேண்டும். இயற்கையை சுவாசிக்க கற்றுக்கொடுக்க வேண்டும். தெருவில் இரங்கினால் போக்குவரத்து நெரிசலையும், வீட்டுக்குள் இருக்கும்போது கம்ப்யூட்டர் என்ற மாயாஜால உலகத்தையும், சாப்பிடுவதற்கு பிசாவையும், பர்கரையும், குடிப்பதற்கு பாட்டில் தண்ணீரையும், உடுப்பதற்கு உடம்பை சிறைப்படுத்தும் நவநாகரீக ஆடைகளையும், வாழ்வதற்கு எல்லாவிதமான வேலைகளையும் செய்துதரும் இயந்திரங்களையும் மட்டுமே பார்த்து வளரும் இந்த கால குழந்தைகள் நாளை பெரியவர்களாகும்போது பெரிதாக இந்த பூமியை காப்பாற்றுவதற்கு என்று எதை சாதித்துவிடப்போகிறார்கள்..? அதனால் இன்றே இப்போதே இன்றுள்ள பெற்றோர்கள் அவர்களுடைய குழந்தைகளுக்கு சொல்லித்தர வேண்டும்.. இயற்கையை நேசிப்பதற்கும்,, கண்டுணர்ந்துகொள்வதற்கும் அவர்களுக்கு வாய்ப்புகளை நாம்தான் ஏற்படுத்தி தரவேண்டும்.. 

கணினியின் முன் 24மணிநேரமும் உட்கார்ந்துகொண்டு விளையாடும் குழந்தைகளை பல்லாங்குழியை நோக்கியும், தாயக்கட்டத்தை நோக்கியும் திருப்பி விடுங்கள். அவர்களை வெளியில் மண்ணில் இறங்கி விளையாட விடுங்கள்.  அப்போதுதான் புல்லையும், பூச்சிகளையும் பற்றி அந்த குழந்தை அனுபவித்து அறிந்துகொள்ள முடியும்.. பசுமையான சூழலை அவர்களுக்கு காட்டுங்கள்..  புல்வெளிகளை அவர்களுக்கு காட்டிக்கொடுங்கள்.. அரசமரத்தையும், வேப்பமரத்தையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள்..  வீட்டு சமையலறைக்குள் அவர்களை அழைத்து சென்று அஞ்சரைப்பெட்டிக்குள் இருக்கும் அத்தனை மருத்துவகுணமுடைய பொருள்களையும் அவர்களுக்கு காட்டிக்கொடுங்கள்.. தாளிக்கும் கடுகில் இருந்து வாசனையின் அரசனான ஏலத்தை அவர்களுக்கு எடுத்துக்காட்டுங்கள்..  வெளியில் ஔடியாடி விளையாடி துளசியையும், தும்பைப் பூவையும், தட்டான்பூச்சியையும், தும்பியையும் அப்போதுதான் அவர்கள் அறிந்துகொள்வார்கள். 
 
இயற்கையை நேசிப்பவர்களால் மட்டுமே வாழ்க்கையில் நேசமுள்ளவர்களாக இருக்க முடியும்.. காக்கையும், குருவியையும் தெரிந்துகொள்ளாமலேயே வளரும் அவர்களுடைய பால பருவத்தை பெரியவர்களாகிய நாம் திருடிக்  கொண்டிருக்கிறோம்.. சத்துப்பற்றாக்குறையைப்போல இயற்கை சூழல் பற்றிய உணர்வின் பற்றாக்குறை இன்றைய குழந்தைகளுக்கு ஏற்பட்டிருக்கிறது.. இதை சரிசெய்வதற்கான மருத்துவம் பெரியவர்களாகிய நம் கையில்தான் இருக்கிறது..  இயற்கையை எப்போது நேசிக்கவும், சுவாசிக்கவும் தெரிகிறதோ அப்போதுதான் ஒரு குழந்தைக்கு உடல்நலமாகவும், மனநலமாகவும், படைப்பாற்றல் மிக்கவராகவும் வருங்காலத்தில் வாழமுடியும்..  

Photo-Kalyan Varma
தோட்டம் போடுங்கள்.. அதில் பூத்து சிரிக்கும் பூக்களை பார்க்கும்போது நம் உடலும் நலம் பெறுகிறது. மனமும் நலம் பெறுகிறது..  மரங்களையும், எல்லாவகையான செடிகளையும், பழங்களையும், வீட்டில் தோட்டம் போட்டு தாவரங்களை நட்டு வளருங்கள். அவற்றோடு உங்கள் குழந்தைகளும் வளர்வார்கள். இலைகளையும், பூக்களையும், கூழாங்கற்களையும், கிளிஞ்சல்களையும் பொறுக்கி விளையாட அவர்களை அனுமதியுங்கள். மரங்கள், பூச்சிகள், பறவைகள், விலங்குகளை குழந்தைகளுக்கு நேரில் அழைத்துசென்று அவற்றின் பெயர்களையும் அவற்றின் பெயர்களையும் குணங்களையும் பற்றி குழந்தைகளுக்கு எடுத்துச்சொலுங்கள்.. வளரும் செடிகளோடும், வளர்ந்துநிற்கும் மரங்களை குழந்தைகளுக்கு எடுத்துச்சொல்ல  வேண்டும்..  வாரத்துக்கு ஒரு தடவையாக மலைகள், வனங்களுக்கு அவர்களை அழைத்து செல்லுங்கள்..

மரங்களையும், செடிகளையும், மரங்களையும், புழுக்களையும், பூச்சிகளையும்,  பறவைகளையும், விலங்குகளையும் குழந்தைகளுக்கு நேரில் காட்டி அவற்றின் பெயர்களை சொல்லிக்கொடுத்து அவற்றின் குணநலன்களை பற்றியும் கூறவேண்டும். மார்க்கெட்டுக்கு கூட்டிச்சென்று அங்கேயிருக்கும் காய்களையும், பழங்களையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்திவைக்க வேண்டும். அவைகள் எங்கு விளைகின்றன என்றும் எடுத்துக்கூற வேண்டும்.  முடிந்தால் சுற்றுலா செல்வதைப்போல நம் சொந்த கிராமங்களுக்கு பொங்கல்விடுமுறையில் குழந்தைகளை கூட்டிச்சென்று வயல்வெளிகளையும், கிணறுகளையும் அவர்களுக்கு காட்டவேண்டும். குளங்களையும், ஏரிகளையும், ஆற்றையும், அதன் கரையில் வளர்ந்திருக்கும் ஆலமரங்களையும், அரசமரத்தையும், நாவல் மரங்களையும் அவர்களுக்கு காட்ட வேண்டும். மணல்தரையில் கிளிஞ்சல்களையும், சங்குகளையும் பொறுக்கி எடுத்து விளையாட அவர்களுக்கும் ஒரு வாய்ப்பை அவர்களின் இளம் வயதில் ஏற்படுத்தித் தரவேண்டும். 

வீட்டிலேயே இடமில்லை என்றாலும்கூட தொட்டிகளிலேயே செடிகளை நட்டுவைத்து வளர்த்து ஒரு அழகான தோட்டம் போட அவர்களையும் அதில் ஈடுபடுத்த வேண்டும். காடுகளுடன் உள்ள மலைப்பகுதிகளுக்கும், கடற்கரை பகுதிகளுக்கு அவர்களை ஒருவருடத்துக்கு ஒரு தடவையாவது கூட்டிக்கொண்டுபோய் இயற்கையின் வெவ்வேறுவிதமான பரிணாமங்களின் அற்புதங்களையும் அவர்களுக்கு அறிமுகப்படுத்த வேண்டும்.  பிறந்த நாள், தீபாவளி, பொங்கல், புதுவருடம் போன்ற சிறப்பு நாள்களில் இயற்கையை பற்றிய புத்தகங்களையும், குறுந்தகடுகளையும் அவர்களுக்கு பரிசாக தந்து இயற்கையின் பக்கம் அவர்களை அழைத்துவர வேண்டும்.  கை லென்சுகளையும், பைனாக்குலர்களையும், டெலஸகோப்பையும், கேமராவையும் அவர்களுக்கு பழக்கப்படுத்தித் தரவேண்டும்.

மூங்கில் காடுகள் நடத்தும் இசைக்கச்சேரியையும், அதற்கு தாளம் போடும் வண்டுகளின் முனகல்களையும் அவர்கள் கேட்டு ரசிப்பதற்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தி தரவேண்டும்.   கடலலைகளின் ஔசையில் எழும்பி விழுந்து மறுபடியும் எழும்பி எழும்பி வரும் படகுகளின் நாட்டியத்தை அவர்களுக்கு காட்டித்தர வேண்டும். குயில்கள் பாடலையும், கிளிகளின் கொஞ்சலையும் அவர்கள் அறிந்துகொண்டால் பிறகு போலியான கணினி திரைகளை தேடி அவர்கள் ஒருகாலும் ஔடமாட்டார்கள்.  காலை இளம் கதிரின் வெளிச்சக்கீற்றுக்கள் ஏற்படும் சுகத்தை அவர்கள் அனுபவிக்க அனுமதியுங்கள்..   

தென்றல் தாலாட்டும் தென்றல் தலை வருடிவிட்டு தென்னங்கீற்றுகளின் அழகை அவர்கள் கண் குளிர காண வாய்ப்பு தாருங்கள்..  முடிந்தால் வாரவிடுமுறைகளில் இரவுநேர நட்சத்திரங்களையும், நிலாவையும் கண்டு ரசிக்க அவர்களை அழைத்து செல்லுங்கள்.. உங்கள் குடும்பத்தில் இளமைக்கால கிராம வாழ்க்கையின் அனுபவங்களை அவர்களோடு பகிர்ந்துகொள்ளுங்கள். சூரிய குடும்பத்தைப் பற்றியும் அவர்களுக்கு கற்றுக்கொடுங்கள்.. 

photo-Kalyan varma
நம்மோடு சக உயிரினங்களாக வாழ்ந்து வந்த உயிரினங்களை போற்றி பாதுகாத்த நம் முன்னோர்கள் பின்பற்றிய வழிகளில் முடிந்ததை அவர்களையும் பின்பற்ற ஊக்குவியுங்கள். காலையில் காகத்துக்கு சோறு படைத்தல், குருவிகளுக்கும், புறாக்களுக்கும் அரிசி மணிகளையும், கிண்ணத்தில் நீரையும் வைப்பது, வீட்டுவாசலில் அரிசிமாவால் கோலம் போடுவது போன்ற செயல்களை அவர்கள் செய்ய சொல்லி பழக்கிவிடுங்கள்.. வீட்டு தோட்டம் போட்டு அவர்களுக்கு பிடித்தமான பூச்செடிகளையும், காய்கறி செடிகளையும் அவர்கள் கையாலேயே நட்டு வளர்க்க சொல்லுங்கள்.  இதை பெருமையாக எல்லோரிடமும் சொல்லுங்கள்..  கேக்குகளுக்கும், ஜாம்களுக்கும் பதிலாக தேனையும், கடலை மிட்டாயையும் அவர்களுக்கு வாங்கிக்கொடுங்கள். ஊரில் நடக்கும் திருவிழாக்களுக்கு அவர்களையும் அழைத்துசெல்லுங்கள். அவற்றில் ஒருசிறிய அளவாவது இயற்கையின் போற்றுதல் இருக்கும்.. 

பிறகு என்ன..? இயற்கை இன்றைய இளம் தலைமுறையால் வருங்காலத்திற்கும் பாதுகாக்கப்படும்.. காசு பணத்தை அவர்களாகவே கூட சம்பாதித்துக் கொள்வார்கள்.  காசு பணத்துக்காக இன்று நாம் இயற்கையை அழித்துவிட்டால் அதை யாராலும் மீட்டுக்கொண்டுவர முடியாது..  இயற்கையை நேசிக்க கற்றுக்கொண்ட இன்றைய குழந்தைகள் நாளை பூமியை பத்திரமாக பார்த்துக்கொள்வார்கள்.. 

                                             
                                                                                                                  -சிதம்பரம் இரவிச்சந்திரன்

1 comment: