Saturday 20 October 2018

நாமக் கோழியும், குஞ்சுகளும்


Photo by Marianne Taylor, UK,
இருபது வருடங்களுக்கு முன்பு வெளி வந்த “The Life of Birds” by Sir. David Attenborough-வின் ஆவணப் படத்தில் நாமக் கோழி தன் குஞ்சுகளைக் கொல்லுவதைப் பலர் பார்த்திருக்கலாம் அல்லது கேள்விப் பட்டிருக்கலாம். "உணவு பற்றாத காலத்தில் வளருவதற்குச் சக்தியற்ற  குஞ்சுகளைப் பெற்றோர் நாமக்கோழிகள் கொன்று விடுகின்றன" என்று அப்போது நம்பப்பட்டது. "நாமக் கோழி உண்மையாகத் தன் குஞ்சுகளைக் கொல்லுமா?" என்ற கேள்விக்கு விடையை அறிவியல் ஆராய்ச்சிகளின் அடிப்படையில் பார்ப்போமா?


எது இந்த நாமக் கோழி?

ஏரி, குளம், குட்டைகளில் வாத்துகளுடன் அல்லது தங்கள் இனத்துடன் கூட்டமாகவோ அல்லது தனித்தோ அமைதியாக நீந்திக் கொண்டிருக்கும் நாமக் கோழி, பார்ப்பதற்கு வாத்து அல்லது தாராவைப் போல் காணப்படுவதால் பலர் இதை "நாமத் தாரா" என்று அழைக்கின்றனர். ஆனால் இது வாத்தும் அல்ல, தாராவும் அல்ல.  இந்தப் பறவை நீர்க் கோழிகள் (Rallidae) குடும்பத்தைச் சார்ந்தது.

உருவத்தில் நாட்டுக் கோழியைப் போல் காணப்படும் நாமக் கோழியின் நெற்றியில் வெண்மையான பட்டை போன்ற கவசம் (frontal shield) காணப்படுகிறது.   அதன் அலகும் வெண்மை நிறம். பிற உடல் பாகங்கள் கறுப்பு நிறமாக இருக்கும்.

உலகத்தில் பத்து வகை நாமக் கோழிகள் காணப்படுகின்றன. இவற்றில் வட அமெரிக்காவில் காணப்படுவது American Coot  (Felicia americana).  இந்தியாவில் காணப்படுவது Common coot or Eurasian coot (Felicia arta).

 
நாமக் கோழியின் இனப் பெருக்கமும் இரகசிய வாழ்க்கையும்:

கலிபோர்னியாவிலுள்ள சேன்டா குரூஸ் பல்கலைக் கழகத்தைச் சார்ந்த பேராசிரியர் Bruce Lyon-உம் (university of California, Santa Cruz, CA, USA) ஆராய்ச்சியாளர் D. Shizuka-வும் கனடாவிலுள்ள பிரிட்டிஷ் கொலம்பியாவில் நாமக் கோழிகளின் இனப் பெருக்கத்தை அறிய ஆராய்ச்சிகள் (1987-1990 and 2005 - 2008) நடத்திய போது எதிர் பாராத விதமாகப் பல ஆச்சரியமான தகவல்களைச் சேகரித்தனர்.

அவர்கள் சேகரித்த தகவல்களில் முக்கியமானவை:

மற்ற கூட்டில் முட்டையிடும் நாமக்கோழி:

சில பெண் நாமக் கோழிகள் கூடு கட்டவும் குஞ்சுகளை வளர்க்கவும் விரும்பாமல் பிற நாமக் கோழிகளின் கூடுகளில் திருட்டுத்தனமாக முட்டைகளிட்டு வைக்கின்றன. சில நேரங்களில், நாமக் கோழிகள் தங்கள் கூடுகளில் முட்டையிடுவது மட்டுமல்லாமல் தங்கள் வம்சம் வளர பிற நாமக் கோழிகளின் கூடுகளிலும் முட்டைகள் இடுகின்றன. ஒரே இனத்தைச் சார்ந்த பறவைகள் தங்கள் இனத்தினரின் கூடுகளில் முட்டைகள் இடுவதை Con specific brood parasitism என்று விலங்கியலில் அழைக்கின்றனர்.  கூட்டில் காணப்படும் பிற முட்டைகளை "ஒட்டுண்ணி முட்டைகள்" (parasitic eggs ) என்றும் அடைகாக்கும் நாமக் கோழிகளை "விருந்தோம்பி(hosts) நாமக் கோழிகள்" என்றும்  ஆராய்ச்சியாளர்கள் அழைக்கின்றனர். இந்தச் செயல் (Con specific brood parasitism) சில வாத்துகளிலும் வேறு நீர்க் கோழிகளிலும் காணப்படுகின்றன.

விருந்தோம்பி நாமக்கோழி ஒட்டுண்ணி முட்டைகளை நிராகரித்தல் (Parasitic eggs rejection):

விருந்தோம்பி நாமக் கோழி தன் கூட்டில் இருக்கும் ஒட்டுண்ணி முட்டைகளை இனம் கண்டு கொண்டு கூட்டின் விளிம்பு வரையிலும் தள்ளி இலை, தழைகளின் அடியில் புதைத்து விடுவதால் ஒட்டுண்ணி முட்டைகள் வளருவதற்கு ஏற்ற சந்தர்ப்பம் கிடைக்காமல் அழிந்து விடுகின்றன. இந்தச் செய்கையினால் பொரிக்கும் குஞ்சுகள் பெரும்பாலும் விருந்தோம்பியின் குஞ்சுகளாகவே இருக்கின்றன.

பெண் நாமக் கோழி, ஒட்டுண்ணி முட்டைகளை எப்படிக் கண்டு பிடிக்கிறது?

நாமக் கோழி, ஒரு நாளைக்கு ஒரு முட்டை மட்டுமே இடும். ஆகவே தனது கூட்டில் அதிகப்படியான முட்டைகளைக் காணும் போது ஒட்டுண்ணி முட்டைகள் இருப்பதைத் தெரிந்து கொள்கிறது. ஒவ்வொரு நாமக் கோழி இடும் முட்டையின் நிறம், முட்டை ஓட்டின்  மீது காணப்படும் புள்ளிகள் தனிப்பட்டவை.

ஆதலால் விருந்தோம்பி நாமக் கோழி, ஒட்டுண்ணி முட்டைகளைத் தன்னுடையதல்ல என்று கண்டு கொள்ள வாய்ப்புள்ளது. ( நமது கைவிரல் ரேகை ஒவ்வொருவருக்கும் எப்படித் தனிப்பட்டதாகக் காணப்படுகிறதோ அப்படியேதான் முட்டை ஓட்டிலுள்ள புள்ளிகள் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர்).

ஒட்டுண்ணி முட்டை உருவத்தில் சற்றுப் பெரியதாக இருப்பதால் தொடு உணர்ச்சியாலும் விருந்தோம்பி நாமக் கோழி கண்டு கொள்கிறது என்று ஆராய்ச்சியாளர்கள் எண்ணுகின்றனர்.

இந்த ஆராய்ச்சி நடந்த சமயம் 2003-ஆம் ஆண்டு, நாமக் கோழியால் எண்ண முடியுமென்று ஒரு கருத்து ஏற்பட்டுப் பறவை உலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

விருந்தோம்பிக் குஞ்சுகளும், ஒட்டுண்ணிக் குஞ்சுகளும் (Host Chicks and Parasitic chicks) நாமக் கோழி, சராசரி ஒன்பது முதல் பன்னிரெண்டு முட்டைகள் இடும். கூட்டிலுள்ள எல்லாக் குஞ்சுகளும் பொரித்து முடிப்பதற்கு மூன்று முதல் பத்து நாட்களாகின்றன.
Photo by Marianne Taylor, UK,
 முதல் நாள் பொரிக்கும் குஞ்சுகளை விருந்தோம்பி நாமக் கோழி அடையாளம் (imprint) வைத்துக் கொள்கிறது. அதன் பின் பொரிக்கும் குஞ்சுகள் முதல் பொரித்த குஞ்சுகளைப் போல் இல்லாவிட்டால் பெற்றோர் விருந்தோம்பி நாமக் கோழிகள், அந்தக் குஞ்சுகளை ஒட்டுண்ணிக் குஞ்சுகளாகப் பாவித்து அவைகளுக்கு உணவு ஊட்டுவதில்லை.

ஒட்டுண்ணிக் குஞ்சு உணவுக்காகக் குரல் கொடுக்கும் போது பெற்றோர் விருந்தோம்பி நாமக் கோழிகள் அதன் தலையைக் கொத்திக் கொத்தி விரட்டுவதால் குஞ்சு பயந்து குரல் கொடுக்காமல் பட்டினியால் இறந்து விடும்.

சில நேரங்களில் குஞ்சு பசியால் விடாமல் குரல் கொடுக்கும் போது பெற்றோர் விருந்தோம்பிகள் ஒட்டுண்ணிக் குஞ்சு கழுத்தை அல்லது தலையைக் கெளவிப் பலமாக ஆட்டிக் கொன்று விடுகின்றன. இந்தச் செயலை “tousling” என்று அழைக்கின்றனர்.

முட்டைகளை மாற்றி வைத்தால் :

ஆராச்சியாளர்கள், விருந்தோம்பி நாமக் கோழியின் கூட்டிலிருந்து முட்டைகளைப் பொரிக்கப் போகும் சமயம் நீக்கி விட்டுப் பொரிக்க இருக்கும் ஒட்டுண்ணி முட்டைகளை வைத்த போது நாமக் கோழி முதலில் பொரித்த ஒட்டுண்ணிக் குஞ்சுகளைத் தனதாகப் பாவித்துக் கொண்டது. அதன் பின்னால் பொரித்த தன்னுடைய குஞ்சுகளை ஒட்டுண்ணிக் குஞ்சுகளாகப் பாவித்து அவைகளை நிராகாரித்து விட்டது.

ஆராய்ச்சியாளர்கள் பல முறை வெவ்வேறு முறையில் பரிசோதனைகள் நடத்திய போதிலும் விருந்தோம்பி நாமக் கோழி முதலில் பொரிக்கும் குஞ்சுகளைத்தான் தனதாக எடுத்துக் கொள்கிறது. இதனால் சில நேரங்களில் தன்னுடைய குஞ்சுகளை நிராகரித்து விட நேரிடுகிறது.

இந்த நடத்தை (குஞ்சுகளை அடையாளம் வைத்துக் கொள்வது) தலைமுறைத் தலைமுறையாக வந்ததல்ல அல்லது தன் ஊக்க உணர்வு காரணமாகவும் அல்ல (neither  inherited nor instinct), ஆனால் அனுபவத்தில் " படித்துக் கொள்ளும் நடத்தை" (learned behavior)  என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். ஒவ்வொரு தடவையும் நாமக் கோழி அடை காக்கும் போது ஒட்டுண்ணி முட்டைகளையும் குஞ்சுகளையும் பிரித்தறிய வேண்டியுள்ளது.

நாமக் கோழிகள் ஒட்டுண்ணிக் குஞ்சுகளைக் கொல்வதின் காரணம் "தங்களுடைய குஞ்சுகள் வாழ்வதற்கு" என்று நம்பப்படுகிறது. 

அடைகாக்கும் ஒட்டுண்ணிகளைப் பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி செய்ய முடிவு செய்துள்ளனர்.


Soap opera in the marsh: Coots foil nest invaders, reject impostors
December 16, 2009 By Tim Stephens, University of California - Santa Cruz

Shizuka, Daizaburo and Lyon, Bruce E., "Coots Use Hatch Order to Learn to Recognize and Reject Conspecific Brood Parasitic Chicks" (2010). Papers in Ornithology. 86. http://digitalcommons.unl.edu/biosciornithology/86

--சற்குணா பாக்கியராஜ்
California 

No comments:

Post a Comment