தென்னை மரத்திலிருந்த இரைகொல்லி பறவையான வல்லூறு, நீண்ட நேரம் அமர்ந்து இருந்ததைப் பள்ளி மாணவ-மாணவிகளும் நீண்ட நேரம் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதில் ஒரு மாணவர், தினமும் பள்ளி விட்டுச் செல்லும்பொழுது இந்த பறவையைப் பார்ப்பதாகவும் ஆனால் பெயர் தெரியாது என்று சொன்னார். அவர்களுக்கு அவைதான் முதல் பறவை பார்த்தால் ஆகும். தருமபுரி மாவட்டத்தில் உள்ள கெட்டுஅள்ளி ஊரில் இருக்கும் அரசு உயர் நிலைப் பள்ளி மாணவ மாணவிகளுடன் பறவைகள் பார்த்தபொழுது பேசப்பட்ட வார்த்தைகள் ஆகும்.
தான் பணிபுரியும் பள்ளியில், பறவை புகைப்பட கண்காட்சி மற்றும் பறவை நோக்குதல் கருத்தரங்கு நடத்த யோசனை உள்ளதால், உங்களால் அதற்கான ஆலோசனை அல்லது நேரில் வர முடியுமா என்ற மின்னஞ்சல், பள்ளியின் அறிவியல் ஆசிரியர் திரு.லோகநாதன் அவர்களிடம் இருந்து வந்தது.
நேரில் செல்வதற்கான தேதி முடிவாகி, நண்பர் மாசிலாமணியுடன் ஒரு அதிகாலைபொழுது தருமபுரி பேருந்து நிலையத்தில் இறங்கினோம். அதற்கு முன்பு எங்களுக்காகப் பேருந்து நிறுத்தம் அருகில் இருக்கும் லாட்ஜ்ல் அறை முன்பதிவு செய்து தகவலும் வந்துவிட்டன.
அதிகாலை வேலையில் திரு.லோகநாதன் அவர்களுடன், லாட்ஜ் அருகில் இருக்கும் டீ கடையில் சூடாக டீ அருந்தி விட்டுப் படியேறினோம். காலை எட்டு முப்பது மணியளவில் பள்ளி ஆசிரியர்கள் உங்களை அழைத்துச் செல்ல வருவார்கள் என்றும் காலை உணவைப் பொன்னி ஓட்டலில் சாப்பிடுமாறு சொன்னதையும் அப்படியே பின்பற்றிச் சென்று பொன்னி ஓட்டலில் சாப்பிட்டோம் நன்றாகவே இருந்தது.
ஓட்டலில் சாப்பிட்டு விட்டு வரும்பொழுது, ஆசிரியரிடம் இருந்து அழைப்பு மணி. வாட்ச் மணியைப் பார்த்தல் சரியாக எட்டு முப்பது.
தருமபுரி ஊரிலிருந்து, இருபது கிலோமீட்டர் தூரத்தில் உள்ள கெட்டுஅள்ளி ஊரில் இருக்கும் பள்ளியை நோக்கிச் செல்லும் வழியெங்கும், பறவைகள் துள்ளி விளையாடிக் கொண்டிருக்கிறது. மரத்தில், இலைகளின் இடுக்கில் மறைந்து பாடி கொடிருப்பதையையே வழக்கமாகக் கொண்டிருந்த குயில், அங்கு ஒரு சிறு செடியில் அனைவரும் பார்க்கும்படி ஒய்யாரமாக அமர்ந்து இருந்ததைப் பார்த்தேன். மனிதர்கள் அருகில் இருக்கிறார்கள் என்ற நினைப்பு சிறிதும் அதனிடம் இல்லை.
நாகணவாய்(Myna) பறவை கெட்டுஅள்ளி முழுவதும் நிரம்பி உள்ளன.அதற்குப் போட்டிப் போடும் அளவுக்குப் பஞ்சுருட்டான்(Green Bee-eater) பறவை உள்ளது. எந்த பறவையும் ஒன்று-இரண்டு இல்லாமல் எண்ணிக்கையில் அதிகமாகவே காணப்படுகிறது.
புதிதாகக் கட்டப்பட்டுள்ள பள்ளியில், அறைகள் மாணவர்கள் அமர்வதற்கு ஏற்றாற்போல் அமைந்து உள்ளது. பள்ளி சுற்றிலும் வானம் பார்த்த பூமியாக இருக்கும் இடங்கள். பச்சை நிற மரங்கள் குறைந்து, காய்ந்த நிற மரங்களாகக் காணப்படுகின்றன. மழை வந்தால் மட்டுமே மரங்களில் பச்சை தன்மை பார்க்க முடிகிற நிலைமையே உள்ளது. பள்ளியைச் சுற்றி செடிகள் வளர்க்கிறார்கள் அதற்கு நீர்ப் பற்றாக்குறை இருக்கக்கூடாது என்று வெளியிலிருந்து தண்ணீர் லாரி மூலம் நீர் ஊற்றுகிறார்கள். மிக நல்ல செயல் ஆகும்.
கடைசி நேரத்தில் முதன்மை கல்வி அலுவலர்(CEO) தவிர்க்கமுடியாத வேலையால் வரமுடியாமல் ஆனது. பள்ளியின் தலைமை ஆசிரியர் திரு.முருகேசன் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார். மாணவர்கள் ஆர்வமாக அமர்ந்து இருந்தனர்.
ஆசிரியர் திரு.லோகநாதன் 100 பறவைகளின் படங்களை பிரிண்ட் செய்து அருமையாக காட்சிப்படுத்தியிருந்தார்.
மாணவர்களுக்குப் பறவைகளைப் பற்றி விவரித்துச் சொன்னோம். குறிப்பாக அனைவரும் 2.0 படம் பார்த்து இருந்ததால் சிட்டுக் குருவி பற்றிய வதந்திகள், இன்னும் நன்றாக அவர்கள் மனதில் பதிந்து இருந்தது. பறவைகளைப் பார்க்க வேண்டும் என்பதே அவர்களுக்கு புதியதாக இருந்தது. அனைவரிடமும் உங்களுக்குத் தெரிந்த பார்த்த பறவைகள் பற்றிச் சொல்லுங்கள் என்று கேட்டதற்குக் குருவி,கொக்கு, மைனா என்று சொல்லிக்கொண்டு வந்தார்கள், முன் வரிசையிலிருந்த ஒரு மாணவர் காகம் என்று சொன்னார்.
பறவைகள் பார்ப்பதால் என்ன மாற்றங்கள் ஏற்படும் என்று அறிவியல் ஆசிரியர் லோகநாதன் அவர்கள் சொல்வதைக் கேட்போம்.
சென்ற மதம் முதல் பறவைகள் பார்க்கத் தொடங்கினேன். அதுவரை வீட்டிலிருந்து அறுபது கிலோமீட்டர் வேகத்தில் பள்ளிக்கு வரும் நான், இப்பொழுது முப்பது கிலோமீட்டர் வேகத்தில் வருகிறேன். அதற்கு மிக முக்கிய காரணம் பறவைகள் என்னை அதன் பக்கம் இழுத்துக் கொண்டன. வரும் வழியில் பறவைகள் தென்பட்டால் அவை என்ன பறவை என்று பார்ப்பதில் கவனம் செலுத்துகிறேன். இதனால் மனது இளமையாக உள்ளது. நான் கற்றுக் கொண்ட பறவை பார்த்தலை, மாணவர்களும் நிச்சயம் அறிந்து கொள்ளவேண்டும் என்று நினைத்தேன். அதற்கான சிறு முயற்சிதான் இவை என்று பேசினார். இதற்குப் பள்ளியில் உள்ள மற்ற ஆசிரியர்களும் இவருக்கு உறுதுணையாக இருந்தனர்.
கருத்தரங்கம் முடிவடைந்த பிறகு மாணவர்களை நேரடியாகப் பறவைகள் பார்க்க, பள்ளி சுற்றி உள்ள இடங்களுக்கு அழைத்துச் சென்றோம். பள்ளி சுற்றி நிறைய மரங்கள் நிறைந்த பகுதி என்பதால் பறவைகள் பார்க்க வேறு எங்கும் செல்லவேண்டிய நிலை ஏற்படவில்லை. இந்த இடங்களைச் சுற்றி மாணவர்கள் வீடுகள் இருப்பதால் பறவைகள் அவர்களை எதிர்கொண்டு இருந்து உள்ளனர். பெயர் தெரியவில்லை என்றாலும் பறவைகளைப் பார்த்து, கடந்து செல்கிறார்கள். பறவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தபொழுது அவர்கள் அனுபவங்கள் தெரிந்தது.
இங்குப் பேய் ஓட்டுவதைப் பற்றிச் சொல்ல வேண்டும்.
பறவைகள் பார்த்துக் கொண்டே சென்றதில் ஒரு இடத்திலிருந்து மேள சத்தம் ஓங்கிக் கேட்டது. அருகில் சென்று பார்த்தால் ஒரு கோவிலில் நிறைய பெண்கள் தலை முடியை விரித்துப் போட்டு அமர்ந்து இருந்தனர். சுற்றிலும் நிறைய மனிதர்கள். மாணவர்களிடம் பேசியதில் இவர்களுக்குப் பேய் பிடித்து உள்ளது என்று சொன்னார்கள். பேய் ஓடுதா, இல்லை இந்த சத்தத்தால் பிடிக்கப் போகிறதா என்று மட்டும் தெரியவில்லை. இன்னும் கிராமத்தில் மனநலம் பாதிக்கப்பட்டார்களை, பேய் பிடித்து உள்ளது என்று தலை முடியை விரித்துப் போட்டு அமரவைத்து விடுகின்றனர்.
அதென்ன பெரும்பாலும் பேய் பெண்களையே பிடிக்கிறது. எங்கும் ஆண்கள் தங்கள் தலை முடியை தொங்க விட்டு அமர்ந்து உள்ளதை இதுவரை பார்த்ததில்லை.
இவற்றைப் பார்த்தபொழுது, ஆதிகாலத்தில், மனிதர்களுக்கு ஜுரம் வந்து சரியாகாமலிருந்தால் அவர்களுக்குப் பேய் பிடித்து உள்ளது என்று நினைத்து நடு தலையில் ஆணி போன்ற ஆயுதத்தை வைத்து அடிப்பார்கள். காரணம்-உள்ள இருக்கும் பேய் இந்த ஓட்டை வழியாக வெளியே சென்று விடும் என்ற பதிலை அதற்குத் தயாராக வைத்து இருந்தனர். அந்த மனிதனுக்கு ஜுரம் சரியாகிறதோ இல்லையோ ஆணி அடித்ததால் ஏற்படுத்தும் காயத்தால் இறந்துவிடுவான்.
மேள சத்தத்திற்கு, அங்குள்ள பறவைகளும் பழக்கமாகிவிட்டன. எங்களுடன் மேள சத்தங்களைக் கேட்டுக்கொண்டிருந்த பறவைகளைப் பார்த்துவிடுவோம்
1.Black Redstart
2.Bay Back Shrike
3.Green Bee-eater
4.Jeordan’s Bushlark
5.Brahminy Starling
6.Pied Bushchat-M/F
7.Yellow Billed babbler
8.Southern coucal
9.Black Drongo
10.Jungle Crow
11.Rock Pigeon
12.White-throat Kingfiher
13.Pied Kingfisher
14.Cattle Egret
15.Pond Heron
16.Rose ringed parakeet
17.Common Myna
18.Ashy Prinia
19.Plain Prinia
20.Indian Roller
21.Shikra
22.Purple sunbird-M/F
23.Palm Swift
24.Rufous Treepie
25.Asian Koel-M/F
26.Red vented bulbul
27.Grey Francolin
28.Magpie Robin
29.Indian Robin
30.House Crow
இவ்வளவு பறவைகளும் தங்கள் வேளைகளில் மும்முரமாக இருந்தன. நடந்து செல்லும் சாலையிலிருந்த கிணற்றில் மாடப்புறா எங்களைப் பார்த்து எங்கள் இடத்தில் உங்களுக்கு என்ன வேலை இங்கிருந்து கிளம்புங்கள் என்று சொன்ன காரணத்தால் வேகமாக அதனிடம் இருந்து நகர்ந்தோம்.
ஒரு மரத்திலிருந்த சிறு பறவை ஒன்று, பறப்பதும்-தரைக்கு வருவதும்-மீண்டும் அதே மரத்தில் சென்று அமர்வதும் என்று தனியாக விளையாடிக் கொண்டிருக்கிறது. சிறிது நேரம் நின்று பார்த்தோம் என்ன பறவை என்று கண்டுபிடிக்க முடியவில்லை. இதற்கு முன்பு பார்த்ததது போல் இல்லாததால் படம் மற்றும் குறிப்புகளை( மேல்பாகம் கருப்பு நிறத்திலும் வயிறு முழுவதும் சிகப்பு நிறத்திலும்) எடுத்துக் கொண்டோம்.
வீட்டிற்கு வந்து முதல் வேலையாக மாசிலாமணி அவை என்ன பறவை என்று கண்டுபிடித்து இவை Black redstart என்று குறிப்பிட்டார்.
வடநாட்டிற்கு வலசை வரும் பறவையான redstart, தமிழகத்தில் பார்க்க முடியாது. ஆனால் இந்த பறவை இங்குத் தவறுதலாக வந்துள்ளதா என்று தொடர்ந்து பார்க்க வேண்டும். அப்படி இவை தொடர்ந்து பார்க்கப்பட்டால் தமிழகத்திற்கும் வலசை வரக்கூடியவை என்று குறிப்பிட்டுவிடலாம்.
நாங்கள் பார்த்து ஒரு வாரம் பிறகு, ஆசிரியர் லோகநாதன் அவர்களிடம், அந்த பறவை அங்கே இருக்கிறதா என்று பாருங்கள் என்று தகவல் சொன்னேன். அவரும் மறுநாள் பார்த்து அதே மரத்தில் உள்ளது என்று படம் எடுத்து அனுப்பியிருந்தார். ஆக Black redstart அதே மரத்தில் ஆனந்தமாக உள்ளன. சிறிய பறவை, அதுவும் தனியாக அதே மரத்தில் இருப்பது ஆச்சரியம். மீண்டும் பார்க்க வேண்டும் என்று தோன்றுகிறது ஆனால் மிகத் தூரம் ஒரு தடையாக உள்ளன.
Black Redstart |
பறவைகளில் மிகக் குதூகலமானது எவை என்று கேட்டால் தவிடு குருவி(Yellow-billed babbler) என்று சொல்லலாம். நம் வீட்டு அருகில் எந்நேரமும் கீச் கீச் கீச் என்று ஆரவாரத்துடன் தன் சொந்தங்களுடன் காணப்படும். ஒற்றுமை என்பதற்கு இந்த பறவையைக் குறிப்பிடலாம். அதனால் தான் ஆங்கிலத்தில் இவற்றை seven sisters என்று அழைக்கிறார்கள். இந்த பறவை கெட்டு அள்ளியில், அள்ளி கொடுப்பார்கள் என்று சொல்வதுபோல் இந்த இடத்திற்கு அள்ளி கொடுத்துபோல்உள்ளது. இங்கு எந்நேரமும் அதன் குரல்களைக் கேட்டுக் கொண்டு இருக்கலாம்.
ஒரு நாள் மாலையில் சென்னை பெசன்ட் நகரில் உள்ள ஒரு மரத்தில் இந்த பறவை ஒன்றாகத் தூங்கிக் கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது.
பஞ்சுருட்டான்(Bee-eater) பறவை, காகங்கள் போல் எண்ணிக்கையில் அதிகமாகப் பார்க்கமுடிகிறது. வானம் பார்த்த பூமியில் இவற்றுக்கு எங்கே உணவு கிடைக்கிறது என்று நம்மை யோசிக்கவைக்கிறது. சிறு செடியிலும், மரத்தின் உயரத்திலும் , சில சமயம் தரையிலும் அமர்ந்து எங்களுக்குப் போக்கு காண்பித்துக் கொண்டிருந்தது. அந்த கால போர் வீரர்கள் தலையில் கவசம் அணிந்து இருப்பது போன்று இதன் முக அமைப்பு இருக்கும். அடுத்த முறை பஞ்சுருட்டான் பறவையைப் பார்க்கும்பொழுது கவனித்துப் பாருங்கள். பெரும்பாலும் மின் கம்பியில் அமர்ந்து இருப்பதைப் பார்க்கலாம். தனியாக அல்லது சிறு கூட்டமாகக் காணப்படும்.
பஞ்சுருட்டான் போல் கீச்சான் பறவைகள் நிறைய காணப்படுகிறது. தலைப்பகுதி ஆண் சிட்டுக் குருவி போல் இருக்கும். கீச்சான் வகைகளில் நீளவால் கீச்சான் வலசையாக தமிழகத்திற்கு வருபவை. நீர் நிலை அருகில் இதனை காணலாம். மேல் உள்ள படத்தில் இருக்கும் கீச்சான் கருச்சிவப்பு முதுகு கீச்சான் என்று தற்காலிகமாக அழைக்கலாம் காரணம் ஆங்கில பெயரின் நேரடி தமிழ் பெயராக இவை இருப்பதால்.
நீர் இல்லாத பகுதி என்பதால் ஒரே ஒரு மடையன்(Pond Heron) மட்டும் காணப்பட்டது. பூநாரை ஒன்று, வானில் பல வட்டங்கள் அளித்தாகவும் பிறகுச் சென்று விட்டன என்று ஆசிரியர் திரு.லோகநாதன் சொன்னார். பூநாரைகள்(Flamingo) நீர்ப் பகுதிகளில் பார்க்கமுடிகிற பறவை, இங்கு நீர் என்பது சிறிதும் இல்லாததால் சில வட்டத்திற்கு மேல் இங்குத் தரை இறங்க வழியில்லை என்று கிளம்பியிருக்கலாம்.
வழக்கமாகப் பறவைகள், வலசை வரும் பகுதிகளில் ஏதாவது தடங்கல் ஏற்பட்டால் அப்பொழுது தங்கள் இடங்களை மாற்றிக் கொள்ளும். அல்லது ஒரு சில வலசை பறவை தன் கூட்டத்துடன் இருந்து தனியாகப் பிரிந்துவிட்டு இருக்கலாம். அது போல் நேரங்களில் புதிய இடங்களில் பார்க்க முடியும்.
கிளி என்று நாம் பச்சைக் கிளியைத்தான் சொல்வோம் இதன் கூடு என்று பார்த்தல் தென்னை மரத்தில் உள்ள சிறு பொந்துகள் ஆகும். நாங்கள் பறவைகளைப் பார்த்துக் கொண்டே சென்றதில் ஒரு மரத்தின் பொந்தின் உள்ளே இருந்து ஒரு கிளி மிக அழகாக ராணிகள் மாட மாளிகைகளிலிருந்து வெளி உலகைப் பார்ப்பது போன்று இந்த உலகத்தைப் பார்த்து இருந்தன.
பனங்காடை(Indian Roller) பறக்கும் அழகே தனிதான். அதன் பல வன்னங்கள் நம்மை மயக்கும். இந்த பறவை எப்போதும் தனியாக இருப்பதைப் பார்க்கலாம். சிறிது தள்ளி மற்றொரு பனங்காடை இருப்பதையும் சிலநேரம் பார்க்க முடியும். எங்கள் கண்களுக்கும் தனியாகவே காட்சி அளித்தது
புதர் சிட்டு(Pied Bushchat) குறுக்கும்-நெடுக்குமாகச் சென்று வந்து கொண்டு இருந்தது. மிகச் சிறிய பறவையான இவை அடிக்கடி குரல் கொடுத்துக்கொண்டிருப்பதைக் கேட்க முடியும். ஒரு மரத்தில் ஆண் பறவை நீண்ட ராகத்தில் பாடிக்கொண்டிருந்தது. இங்கு ஆண்-பெண் ஜோடிகளைப் பார்க்க முடிந்தது.
பார்த்த பறவைகளைக் குறிப்பு எடுத்துக் கொண்டே வந்தார்கள் மாணவர்கள். சுற்றி வந்து முடிவில் எண்ணிப் பார்த்தபொழுது முப்பது பறவைகள் மேல் பார்த்து இருப்பது தெரிந்ததும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர்
பள்ளி மாணவ,மாணவிகள் பறவைகள் பார்ப்பதை ஆர்வமாகச் செய்தனர். பறவைகள் பார்ப்பதும் ஒரு பொழுதுபோக்கு என்பது தெரிந்து கொண்டனர். இதில் ஒரு சில மாணவ,மாணவிகள் பறவைகள் பக்கம் தங்கள் கவனத்தைச் செலுத்துவார்கள் என்பது நிஜம்.
பள்ளியில் நடந்த கருத்தரங்கு நாளிதழில் வந்திருந்தது. இவை ஆசிரியர் லோகநாதன் முயற்சிக்குக் கிடைத்த அங்கீகாரம் ஆகும். கெட்டு அள்ளி பள்ளி அங்கு உள்ள மற்ற பள்ளிகளுக்கு ஒரு முன்னுதாரணமாகத் திகழ்கிறது
படங்கள் :
ஆசிரியர் லோகநாதன் |
பஞ்சுருட்டான் |
The content doesn't reflect what the article is actually about. There are disinterested accounts of what happened. Spell checks can be done in places. What's the point for a reader to read this? Are you bragging? Why can't you try gather knowledge on birds and then try these stuffs?
ReplyDeleteபள்ளி மாண்வர்களுக்கு நிச்சயம் பயன்தரக்கூடிய செய்திகள் ஆகும். மாணவர்கள் தங்கள் கவனங்களை சமூக வலைத்தளத்தில் செலுத்துகிறார்கள் அவர்களுக்கு பறவைகள் பக்கம் கவனம் திரும்பினால் நிச்சயம் பயன்தரக்கூடும். வாழ்த்துக்கள்....
ReplyDeleteஇந்த நல்வாய்பினை மாணவர்களாகிய அடுத்த தலைமுறைக்கு வழங்கிய அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்
ReplyDelete