Monday, 13 April 2015

Sierra Nevada Red Fox- after 100 years


Picture of a Sierra Nevada Red Fox seen in Yosemite, California


நிறைய உயரினங்கள் இன்று அழிவின் விளிம்பில் நின்று இந்த உலகை வலம் வந்து கொண்டிருகிறது.எதிர் காலத்தில் வலம் வருமா என்றால்? நிச்சயம் அதற்கான பதில்  தெரியாது என்று தான் சொல்ல வேண்டும்.

உன்னை பார்த்து ரொம்ப நாள் அல்லது வருடம் ஆச்சு என்று ஒருவரை, நெடு நாள் பார்க்காமல், பார்க்கும் பொழுது இந்த வாசகத்தை மறக்காமல் சொல்லுவோம்.ஒரு விலங்கை நூறு வருடம் கழித்து பார்க்கும் பொழுது என்ன சொல்வது?.ஒரு நூற்றாண்டு கழித்து உன்னை பார்க்கிறேன் நண்பா என்று சொல்வதா?

வடஅமெரிக்காவில் வாழ்ந்து வரும் சிகப்பு நரி(Sierra Nevada RED FOX)1916 பிறகு தற்பொழுதுதான் கேமராவில் பதிவாகியிருக்கிறது.வட அமெரிக்காவில் உள்ள யோசிமைட் தேசிய பூங்காவில்(Yosemite National Park) இந்த சிகப்பு நரி வாழ்ந்து வருவதை நூறாண்டு கழித்து பார்க்கும் பொழுது நூறாண்டு கழித்து வரும் நண்பனே வருக வருக என்றே சொல்ல தோனுகிறது.

நூறு வருடம் பார்க்காததால் அழிந்து விட்டது என்றே நினைக்கும் பொழுது இதோ நான் இருக்கிறேன் என்று தலை காட்டி விட்டது. ஆனால் இப்பொழுதும் இந்த நரி அழிவின் நிலையில் தான் உள்ளது.இரண்டு முறை இந்த நரி கேமராவில் பதிவாகி உள்ளது. மனிதன் வேட்டையாடியதே இந்த நரியின் அழிவிற்கு முக்கிய காரணம் ஆகும்.இத்தனைக்கும் வேட்டையாடுவது தடை செய்யப்பட்ட கலிபோர்னியா மாகானத்தில் தான் நரிக்கு இந்த நிலை. உலக உருண்டையின் ஓரத்தில் இந்த நரி நின்றுகொண்டு இருக்கிறது.

                                                   -செழியன் 
 

Friday, 10 April 2015

விலங்கு vs மனிதன் மோதல்



விலங்குகளோடு காடுகளில் வாழ்க்கையைத் தொடங்கிய மனிதன் தற்போது கான்கிரீட் காடுகளில் வாழ்ந்து வருகிறான். காடுகளில் வாழ்ந்த மனிதன் காடுகளை விட்டுவிட்டு வந்தபோதிலும் தன் சுயநலத்துக்காக இயற்கையையும், காடுகளையும் ஆக்ரமிப்பதை நிறுத்தவில்லை. இதனால் காடுகளில் தன்பாட்டுக்கு அமைதியாக வாழ்க்கையை நடத்தி வந்த விலங்குகள் தங்கள் வாழ்வின் ஆதாரங்களுக்காக மனிதன் வாழும் கான்கிரீட் காடுகளுக்குள் நுழையத்தலைப்பட்டுள்ளன. இதனால் இன்றைய காலகட்டத்தில் விலங்கு மனித மோதல்கள் பெருமளவில் நிகழ ஆரம்பித்துவிட்டன. நாகரீகம் அடையாத காலகட்டத்தில் மனிதன் விலங்குகளோடு சேர்ந்து காடுகளில் வாழ்ந்து கொண்டிருந்த போது விலங்குகள் அவனுக்கு வாழக் கற்றுக் கொடுத்தன. தற்காப்புக் கலையை விலங்குகள் கற்றுக் கொடுத்தன. உணவு தேடுவதை அவன் விலங்குகளைப் பார்த்து தான் அறிந்து கொண்டான். கூட்டமாக வாழ்வதை அவன் விலங்குகளைப் பார்த்து தான் தெரிந்து கொண்டான். இயற்கையின் காலநிலைகளை விலங்குகளில் இருந்து அவன் கற்றுக் கொண்டான். பருவமாறுதல்களையும், இயற்கையின் ஒவ்வொரு அசைவையும், அதில் இருந்து பாடங்கள் படிக்கவும் விலங்குகள் மனிதனுக்கு தாராளமாக மனிதனுக்கு நிறைய விஷயங்களை சொல்லிக் கொடுத்தன.  கிடைத்த உணவை நாளைக்காக சேர்த்து வைக்கவும் அவன் விலங்குகளைப் பார்த்து கற்றுக் கொண்டான்.  

மனித வரலாற்றில் விலங்கு மனித மோதல்கள் முன்பும் நடந்துள்ளன. ஆனால் அவை மிகச்சிறிய அளவிலேயே நடந்தன. அன்று சுயநலம் மிகக் குறைவாக இருந்த மனிதன் தான் வாழும் இடத்தையும், தன்னைச் சுற்றியுள்ள சுற்றுச்சுழலையும், காடுகளையும், வனவிலங்குகளையும் பாதுகாக்க வேண்டியது தான் நன்றாக இருப்பதற்கு முக்கியம் என்று கருதினான். இதனால் காடுகள் அழிக்கப்படுவது மிக அரிதாக இருந்தது. இயற்கையை இறையுணர்வுடன் அவன் போற்றி வந்தான்.  

விலங்கு மனித மோதல்களுக்கு முக்கிய காரணம் காடுகள் இன்று பெருமளவில் அழிக்கப்படுவதும், வளர்ச்சி என்ற பெயரில் விவேகம் இல்லாமல் காடுகளில் வாழும் விலங்குகளின் வாழிடம் அழிக்கப்படுவதும் ஆகும். அணைகள் கட்டுதல், தொழிற்சாலைகளை அமைத்தல், கட்டிடங்களை கட்டுதல், காடுகளை அழித்து சாலைகள் போடுதல், சுரங்கங்கள் வெட்டுதல், பாறைகளையும், குன்றுகளையும் தகர்த்தல், நதிகளின் மண்ணை சுரண்டி எடுத்து அவற்றின் இயல்பான பாதையை மாற்றுதல் போன்றவை இதற்கு சில உதாரணங்கள் ஆகும்.  

ஆனால் இன்றும் வரலாற்றை புரட்டிப்பார்த்தால் காடுகளில் வாழும் பழங்குடி மக்கள் காடுகளோடும், அவற்றில் வாழும் விலங்குகளோடும் இயைந்து ஒன்றாக வாழ்வதைக் காணலாம். பழங்குடி மக்கள் தாங்கள் வாழும் காடு, தங்கள் இருப்பிடம், தங்களோடு வாழும் வனவிலங்குகள் ஆகியவற்றை தெய்வமாகக் கருதி வழிபடுகிறார்கள். போற்றுகிறார்கள். வணங்குகிறார்கள்.  

இந்தியாவில் அந்தமான் தீவுகளில் வாழும் ஆதிவாசிகள், ராஜஸதானில் இருக்கும் ஆதிவாசிகள், ஆப்பிரிக்காவில் காங்கோ காடுகளில் வாழும் ஆதிவாசிகள் இதற்கு சில உதாரணங்கள் ஆகும். இவர்கள் காடுகளை கடவுளாகக் கருதுகின்றார்கள். காடுகள் அழிக்கப்படாமல் அங்கு வாழும் வனவிலங்குகள் அழிக்கப்படாமல் இருந்தால் தான் தங்கள் வாழ்வு வளமாக இருக்கும் என்பதை அதிகம் படிப்பறிவும், நாம் சொல்லும் நவீன நாகரீகமும் இல்லாத இந்த ஆதிவாசி மக்கள் தெரிந்து வைத்துள்ளனர். இதனால் இவர்கள் காடுகளை வாழும் தெய்வமாகக் கருதி போற்றுகிறார்கள். இதனால் நவீன மனிதனைப்போல இவர்கள் காடுகளை அழித்து லாட்ஜ்களையும் டேம்களையும் கட்டி, சுரங்கங்களை வெட்டி சுயநலத்துக்காக வாழ்வின் ஆதாரத்தை சுரண்டியும் காடுகளை அழிப்பது இல்லை. வனங்களோடும், வனவிலங்குகளோடும் ஒத்து வாழும் வாழ்க்கையை அவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

விலங்கு மனித மோதலுக்கு அணைகள் கட்டப்படுவது, தொழிற்சாலைகள் உருவாக்கப்படுவது, சாலைகள் போடப்படுவது போன்ற இவை தவிர வேறு சில காரணங்களும் உள்ளன. பருவநிலை மாற்றம் அல்லது புவி வெப்பமடைதல் காரணமாக தற்போது முன்பு எப்போதும் இல்லாதாளவுக்கு வெப்பமடைந்து வருகிறது. இதனால் மழைக்காலங்களில் போதுமான மழை பெய்யாமல் வெய்யில்காலங்கள் வழக்கத்திற்கு மாறாக நீண்டுகொண்டுச் செல்கிறது. இதனால் நீர்நிலைகள் வற்றுகின்றன. விலங்குகளின் உணவுக்கு ஆதாரமான தீவனப்பயிர்கள் பற்றாக்குறை ஏற்படுகின்றது. இதனால் விலங்குகள் காடுகளில் இருந்து மக்கள் வாழும் பகுதிகளுக்கு வருகின்றன.  

மேலும், காடுகளிலேயே தீவனப்பயிர்கள் கிடைத்தாலும் விலங்குகள் அங்கேயே வாழ்ந்து விடும் என்று சொல்ல முடியாது. இது மற்றொருகாரணம். நம் வீட்டில் எப்போதும் தோசை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் நாம் அடுத்த வீட்டில் இருந்து மட்டன் வாசனை வந்தால் உடனே அந்த வாசனையை மூக்கு முட பிடித்து வைத்து அதை உண்ண ஆசைப்படுவதைப்போல விலங்குகளும் அவற்றுக்கு எப்போதும் கிடைக்கும் சாதாரணமான உணவைவிட சுவையான உணவு காட்டின் எல்லைப்பகுதிகளில் கிடைக்கும் என்பதை அறிந்து கொண்டுவிட்டால், அவை காடுகளில் இருந்து வெளியேறி ஊருக்குள் வருகின்றன.  

எடுத்துக்காட்டாக கேரளாவில் யானைகள் பலா மரங்களையும், பலா தோப்புகளையும் அழிப்பது.  பலாப்பழங்களில் இருந்து அவை பழுக்கத் தொடங்கியவுடன் வெளிவரும் நறுமணத்தால் யானைகள் ஈர்க்கப்பட்டு வருகின்றன. இதேபோல அவைகளுக்கு மிகவும் பிடித்தமான கரும்பு மற்றும் வாழை ஆகியவையும் யானைகளின் கண்ணில் பட்டால் அவ்வளவுதான்..  

வாழை காயாக இருக்கும்போது அதனால் எந்தப் பிரச்சனையும் ஏற்படுவது இல்லை. ஆனால் அதே வாழை பழுக்கத் தொடங்கி விட்டால் பழத்தில் இருந்து வரும் நறுமணம் யானைகளைப் பிடித்து தங்கள் பக்கம் ஈர்க்கின்றன. பலாப்பழ வாசனையும், வாழைப்பழ வாசனையும் யானைகளுக்கு மிகவும் பிடித்தமானவைகள் ஆகும். இதனால் யானைகள் கரும்புத்தோட்டங்களை நோக்கியும், வாழைத்தோப்புகளை நோக்கியும் ஈர்க்கப்படுகின்றன.
சில விலங்குகள் தங்கள் உடல் வெப்பநிலையை அதிகப்படுத்திக் கொள்வதற்காக நாட்டுக்குள் வருகின்றன. பாம்புகள் தங்கள் உடல் வெப்பநிலையை உயர்த்திக் கொள்வதற்காக வெய்யில் நன்றாகப் படும் பாறைகளில் படுத்திருப்பதைக் காணலாம். இதேபோல முதலைகள் வெகு நேரம் நீர்நிலைகளுக்கு மேல் வந்து வாயைப் பிளந்து கொண்டிருப்பதைக் காணலாம்.  

விலங்கு மனித மோதல்களில் அதிகமாக பாதிக்கப்படும் விலங்குகள் யானைகள், புலிகள், சிறுத்தைகள், பாம்புகள், குரங்குகள் போன்றவை ஆகும். யானைகள் அருகில் உள்ள கரும்பு மற்றும் வாழைகளை அழிக்கின்றன. சிறுத்தைகள் மற்றும் புலிகள் இவற்றுக்கு ஆடுகளின் நாற்றம் நமக்கு சகிக்க முடியாத ஒன்றாக இருந்தாலும் அந்த நாற்றமே இவற்றுக்கு நறுமணமாக விளங்குவதால் கிராமங்களில் இறைச்சியை ருசித்துப் பார்க்க இவைகள் ஆசைப்படுகின்றன. இதனால் இவை இரை தேடி இரவு நேரங்களில் கிராமங்களுக்குள் புகுந்து இருநூறு முந்நூறு ஆடுகள் அடைக்கப்பட்டிருக்கும் பட்டிகளில் ஆடுகளைத் தூக்கிச் செல்கின்றன.பாம்புகள் தங்கள் உணவுக்காகதான் வெளியே வருகின்றன.  

யானைகளுக்கும், மனிதர்களுக்குமான மோதல் ஹோசூர் பகுதியில் தேன்கனிகோட்டை, கோவை வால்பாறை பகுதிகளில் அடிக்கடி நிகழ்வதை நாம் அறிவோம். இதேபோல் புலி, சிறுத்தை மோதல்கள் ராஜஸதான், உத்தரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி நிகழ்கிறது. ஒரிசா மாநிலம் புவனேஸவரைச் சுற்றியுள்ள பகுதிகளில் பாம்புகள் காடுகளை விட்டு வெளியே வருகின்றன.  சென்னையில் கூட காட்டுப்பாக்கம் பகுதியில் பாம்புகளின் நடமாட்டம் மிக அதிகமாக உள்ளது. இதனால் அந்தப் பகுதியில் பாம்புக்கடியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. இதற்குக் காரணம் பாம்புகளுக்கு முக்கிய இரையாக அவற்றால் விரும்பி சாப்பிடப்படும் கோழிக்குஞ்சுகள் அப்பகுதியில் அதிகமாக வளர்க்கப்படுவதே ஆகும். வட இந்தியாவில் வாழும் ஒருவகை நீலநிற மான்கள், நீலகிரிப் பகுதியில் வாழும் புள்ளிமான்கள் அவற்றுக்குப் பிடித்த சோளத்தடைகளை மக்காசோளம் விளையும் நாட்டுப்புறங்களுக்கு தேடி வருகின்றன.  

எப்போதும் காடுகளில் வாழும் விலங்குகளுக்கு அவற்றுக்குத் தேவையான நீரும், தீவனப்பயிரும் கிடைப்பது இல்லை.  ஒரு இடத்தில் அவை கூட்டமாக வாழும்போது அவை அங்கு கிடைக்கும் உணவை உண்டு தீர்த்து விடுகின்றன. இதனால் தீவனப்பயிருக்காகவும், நீருக்காகவும் பறவைகள், ஊர்வன, யானைகள் போன்ற விலங்குகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர்ந்து செல்கின்றன. எனவே ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் அவற்றுக்குரிய பகுதியாக நாம் கருத முடியாது. அவற்றின் நடமாட்டம் உள்ள பகுதிகளில் அவற்றுக்கு எந்தவிதமான பாதிப்பையும் ஏற்படுத்தாமல் இருக்கும் போதே வனவிலங்குகளும், காடுகளும் பாதிக்கப்படாமல் இருக்கும். அப்போது விலங்கு மனித மோதல் ஏற்படுவதைத் தடுக்க முடியும்.  

வைத்தீஸவரன்கோயில் பகுதியில் கிளிகளும், தஞ்சாவூர் மற்று திருவாரூர் பகுதிகளில் கொக்குகளும் நெல் வயல்களுக்குள் புகுந்து அதிக நாசத்தை ஏற்படுத்தி விடுகின்றன. இதைத் தடுப்பதற்கு ஒரு எளியவழி கூறப்பட்டது. பாலிதீன் பைகளை தரையில் இருந்து நான்கு அல்லது ஐந்து அடி உயரத்தில் தொடர்ச்சியாகக் கட்டிவிட்டால் இந்த பாதிப்பை பெருமளவுக்குக் குறைக்கலாம். இது விவசாயிகளின் நிதர்சனமான அனுபவ கண்டுபிடிப்பு ஆகும்.  

வனவிலங்குகள் ஊருக்குள் வருவதற்கு அவற்றின் நடமாட்டம் உள்ள பாதைகள் பாதிக்கப்படுவதால் மட்டும் என்று முன்பு நினைக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போதைய ஆய்வுகள் இது தவறு என்று காட்டுகிறது. விருப்பமான உணவைத் தேடியும், விலங்குகள் நோய்வாய்ப்படும் போது அவற்றின் குணாதிசயங்களில் மாற்றங்கள் ஏற்படுவதாலும் அவை இவ்வாறு காடுகளை விட்டு நாட்டுக்குள் நுழைகின்றன.  

குரங்குகள் அபார்ட்மெண்ட்களில் வந்து தொந்தரவு செய்தாலோ, பாம்புகள் பள்ளிகளுக்குள் வந்துவிட்டாலோ நாம் அவற்றை விரட்ட நாமாகவே முயற்சி செய்வதைவிட தீயணைப்புத்துறையினரையோ, வனத்துறையினரையோ அழைத்தால் அவர்கள் குரங்குகளை கூண்டுகளுக்குள் அடைப்பதற்குரிய சிறப்பு கருவிகளோடும், பாம்புகளை உயிரோடு பிடிப்பதற்குரிய சாதனங்களோடும் வந்து அவைகளைப் பிடித்து வனங்களில் விட்டுவிடுவார்கள். சில சமயங்களில் கிராமப்புற பள்ளிக்கூடங்களில் உடும்பு, கீரிப்பிள்ளை போன்ற விலங்குகளும் நுழைந்து விடுவதுண்டு. இதுபோன்ற சமயங்களில் வனத்துறை அதிகாரிகளையோ, தீயணைப்புத்துறை அதிகாரிகளையோ நாடுவது சாலச்சிறந்தது ஆகும். இதற்கான பயிற்சிகளும் அவர்களுக்குத் தரப்படுகிறது. யானைகள் ஊருக்குள் புகுந்து அட்டகாசம் செய்தால் பட்டாசுகளை வெடித்தும், தீப்பந்தம் கொளுத்தியும் விரட்டுவதைப் பற்றி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் யானையின் மதம் அதிகமாக இருக்கும்போது இந்த வழிமுறைகள் வேண்டிய பலனைத் தராது. இதுபோன்ற நேரங்களில் வனத்துறை அதிகாரிகளின் உதவியை நாடினால், அவர்கள் இதற்கென்று இருக்கும் கால்நடை மருத்துவர்களின் உதவியோடு மயக்க மருந்து ஊசிகள் போட்டு யானைகளை பாதுகாப்பாக அகற்ற நமக்கு உதவி செய்வார்கள்.  

வைதீஸவரன் கோயிலில் கோயில்யானை ஒருமுறை மதம் பிடித்து அடக்க முடியாமல் போனதால், இரண்டு நாள்களுக்கு கோயிலையே மூடிவிட நேர்ந்தது. அச்சமயத்தில் கால்நடை மருத்துவ வனவிலங்குகள் பிரிவு நிபுணர்கள் வந்து அந்த யானைக்கு மயக்க ஊசி கொடுத்து இரவு ஒன்பதுமணி முதல் விடிகாலை மூன்று மணி வரை போராடி அதன் மதத்தை தனித்து பிறகு அதை வனவிலங்குகள் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர்.   

ஊருக்குள் வந்து நாசம் செய்கிறது என்பதற்காகவோ, அவற்றின் உடல் பாகங்களுக்காகவோ அவற்றை துன்புறுத்துவதோ, சுட்டுக்கொல்வதோ, தீப்பந்தத்தால் அவற்றை சுடுவது, காயங்களை ஏற்படுத்துவது அல்லது காட்டுத்தீ வைப்பது போன்றவை கொடூரமான செயல்கள் மட்டுமல்ல தண்டனைக்குரிய குற்றங்களும் ஆகும். இவ்வாறு செய்வது ஒரு வகையில் சிந்தித்துப் பார்த்தால் நம்மை நாமே குழி தோண்டி புதைத்துக் கொள்வது போல ஆகும். ஊருக்குள் வரும் யானைகள், புலிகள், சிறுத்தைகள்,  மான்கள், பாம்புகள், மயில்கள் போன்ற விலங்குகள் எல்லாமே அசைவற்ற நிலையில் இருக்கும் நீர்நிலைகளுக்கு வந்து நீரை அருந்தும் இயல்புடையவை ஆகும். 

பூமி மட்டுமே மனிதனுக்கு இன்று வரை தெரிந்ததில் உயிரினங்கள் வாழக்கூடிய ஒரே கோள் ஆகும். இதில் பல சிறப்புகளைப் பெற்று ஆரறிவு கொண்டவனாக விளங்கும் மனிதன் தன் மூதாதைய சகோதர விலங்குகளை பாதுகாத்து அவற்றுக்கும் இந்த உலகில் வாழ நம்மைப் போலவே எல்லா உரிமைகளும் உண்டு என்பதை உணர்ந்து அவைகள் வாழவைக்க வேண்டியது மிக இன்றியமையாதது ஆகும். பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன்புவரை விலங்குகளாக இருந்து பின்னர் பரிணாம வளர்ச்சி அடைந்து இன்றைய இந்நிலையை அடைந்துள்ள மனிதன் இதை மறந்து விடக்கூடாது. உண்மையைச் சொன்னால் இந்த விலங்குகளே நம் மூதாதைய உறவினர்கள் ஆகும்.  

விலங்கு மனித மோதல்கள் நிகழாமல் இருக்க நிரந்தரமான தீர்வுகளைக் காண்பதற்கு சம்பந்தப்பட்ட மக்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் கூடி பேசி முக்கிய தீர்மானங்களை எடுக்க வேண்டிய அவசர காலகட்டம் ஆகும் இது. காடுகள் அழிக்கப்படும் விதத்தில் எந்த விதமான கட்டுமான பணிகளையும் மேற்கொள்ள அனுமதி அளிக்காத வகையில் சட்டங்களை கடுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.  சமீபத்தில் ஏற்பட்ட கேதார்நாத் இமாலயத்துயரம் நமக்கு இதைதான் நினைவூட்டுகிறது. எச்சரிக்கிறது.  காடுகளை ஒட்டியுள்ளa buffer zone எனப்படும் எல்லையோரப் பகுதிகளில் வனவிலங்குகளுக்கு விருப்பமான உணவுப்பயிர்களை பயிரிடுவதை கட்டாயமாக தடை செய்ய வேண்டும். வனப்பகுதிகளில் வனவிலங்குகளுக்குத் தேவையான வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். ஏனென்றால் காடும், காட்டில் வாழும் புலியும், சிங்கமும், யானையும் இன்னும் மற்ற எல்லா உயிரினங்களும், ஏன் புல்பூண்டும் நன்றாக இருந்தால் தான் நாம் நன்றாக இருக்க முடியும். இதை நாம் அடிப்படையில் அத்தியாவசியமாக உணர வேண்டும். வனங்கள் எந்தக் காரணம் கொண்டும் அழிக்கப்படுவதை அனுமதிக்கக் கூடாது. சுரங்கம், தொழிற்சாலை, போக்குவரத்து என்று சொல்லிக் கொண்டு ஏதாவது ஒரு காரணத்தை முன்னிறுத்தி வனங்கள் அழிக்கப்படுவது எப்பாடுபட்டாவது தடுக்கப்பட வேண்டும்.  
  
             எந்த மதமும் எந்த உயிரைக் கொல்வதையும் ஆதரிக்கவில்லை. இன்று மனிதன் வேட்டையாடுவதும், அழிப்பதும் காடுகளையும், வனவிலங்குகளையும் மட்டும் இல்லை. உண்மையில் அவன் தன்னைத்தானே வேட்டையாடிக்கொண்டிருக்கிறான். தன்னைத்தானே அழித்துக் கொண்டிருக்கிறான் புல் பூண்டுக்கும், புழு பூச்சிக்கும் கூட துன்பம் செய்யாமல் வள்ளலார்கள் ஏராளமாக வாழ்ந்த நாடு நம் பாரதநாடு. பசுக்களையும், காளைகளையும், யானையையும், சிங்கத்தையும், புலியையும் என்று ஏன் மூஞ்சூரைக்கூட விட்டு வைக்காமல் எல்லா விலங்குகளையும் தெய்வங்களாக வணங்கி போற்றி பாதுகாக்க வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தோடு தான் எல்லா உயிர்களையும் ஒருவிதத்தில் இல்லை இன்னொரு விதத்தில் ஆன்மீகத்தோடு சம்பந்தப்படுத்தி வாழ்ந்த பாரம்பரியம் நம்முடையது. சிவனுக்கு காளை வாகனம், பெருமாளுக்கு கருடர் வாகனம், சக்திக்கு சிம்ம வாகனம், முருகருக்கோ மயிலும், சேவலும், பாம்பும், விஷ்ணு படுத்திருப்பதோ ஆதிசேடன் என்ற பாம்புப் படுக்கையில். ஐயப்பனுடைய வாகனமோ புலி.. யானையையே தன் முகவடிவாக கொண்ட விநாயகருக்கு வாகனமோ மூஞ்சூர்.  பிரம்மாவுக்கு அன்னமும், தாமரையும், லட்சுமிக்கு தாமரையும், சரஸவதிக்கு வெள்ளைத்தாமரையும். சிவனுடைய சந்நிதியில் முதலிடத்தில் வீற்றிருப்பதோ நந்திபகவான். இப்படி எல்லா விலங்குகளையும், பூக்களையும், மரங்களையும் இவை எல்லாம் நம் சொந்தங்கள் என்பதை உணர்ந்த நம் ஆன்றோர்கள் அவற்றை தெய்வீகமாக வணங்கி வழிபட்ட பெருமை கொண்ட நாடு நம்முடையது. 
 
வில்வம் சிவனுக்கும், துளசி விஷ்ணுவுக்கும், தாமரை மலர்களை தேவியருக்கும், ஆலும், அரசும், வேம்பும், மூங்கிலும், நாவலும் என்று எல்லா தாவரங்களையும், மரங்களையும் இறைத்தன்மையோடு தொட்டு வணங்கிய நாம் நம்மை வாழவைக்கும் காடுகளையும், அதில் வாழும் வனவிலங்குகளையும் அழிப்பது நமக்கே நாளை ஆபத்தாக முடியும் என்பதை நம் குழந்தைகளுக்கு எடுத்துச் சொல்லி புரிய வைக்க வேண்டும்.   

அப்போதுதான் நாம் ஆன்மீகத்தை அறிவியலாகவும், அறிவியலை ஆன்மீகமாகவும் கண்டு உணர்ந்து வாழ்ந்த நம் முன்னோர்களைப்போல தலைநிமிர்ந்து, நோய்நொடியில்லாத, ஆனந்தப் பெருவாழ்வு வாழ முடியும். 
**    **     **
                                                                                                                      -சிதம்பரம் ரவிச்சந்திரன்



Sunday, 5 April 2015

Nest of Birds

வீட்டின் கூரையில் குருவிகள் கூடு கட்டி பார்த்து வளர்ந்த நாம், இப்பொழுது குருவிகளை தேடிக்கொண்டிருக்கிறோம் அப்போ அதன் கூட்டை எங்கே பார்ப்பது.  

வீட்டின் கரண்ட் பாக்ஸ்ஸில் கூடு கட்டி இருந்ததை பார்த்த பொழுது இப்படி தான் இருக்குமா கூடு என்று ஆச்சரியமாகவும் ஏன் கூறையில் கட்டுவதில்லை என்ற கேள்வியும் எழுந்தது. பல காரணங்களால் குருவிகள் குறைந்தது, மாடி வீடு வந்ததால் கூடுகளும் மறைந்தது.

ரொம்ப அருமையாக மெத் மெத் என்று இருந்தது எங்க வீட்டில் இருந்த கூடு. அதன் படத்தை பார்த்தல் தெரியும். எனக்கு என்னவோ அணில் கட்டியது போல் இருக்கிறது
ஏன்னென்றால் வீட்டில் அணில் தான் அதிகம் 

குருவிகள் முட்டை இடுவதற்க்காகவே கூடு கட்டுகிறது. முட்டை இட்டு குஞ்சு பொறித்து, குட்டி தானாக வெளியே சென்று இறை தேடும் வரை கூட்டில் இருக்கிறது அதன் பிறகு அந்த கூட்டிற்கு வேலையில்லை, வருவதுமில்லை..
ஒரே மாதிரி கோடுகள் எப்படி எல்லா வரிகுதிரைக்கும் இருக்காதோ அதேபோல் ஒவ்வொரு பறவையின் கூடும் வித்தியாசமாகவே இருக்கும் Bald Eagle என்ற Eagleதான் மிக பெரிய கூடு கட்டும் பறவை ஆகும். ஏறக்குறைய ஒன்பது அடி வரை இதன் கூடு அமைந்திருக்கும்.

மனிதன் ஓர் இடத்தில நிலையாக வாழ ஆரம்பித்தபொழுதுதான் அவன் வீடு பற்றியே சிந்திக்க ஆரம்பித்தான் ஆனால் பறவைகள் குறிப்பாக குயிலை தவிர மற்ற பறவைகள் கூடு கட்டுவது அதன் உடம்பிலேயே ஊறிய ஒன்று. மனிதன் மட்டுமே நீச்சல் கற்றுகொள்ளவேண்டும் ஆனால் விலங்குகள் அப்படி இல்லை எல்லா விலங்குகளுக்கும் நீச்சல் தெரியும் ஒட்டகத்தை தவிர.

தூக்கனாங்குருவி கட்டிய கூட்டை ஒரு முறை நேரில் பாருங்கள் அவ்வளவு அருமையாக மிக நேர்த்தியாக இருப்பதை காணலாம். மனிதனை தவிர எந்த பறவையும் தன் குட்டிகளுக்கு கூடு கட்டி தருவதில்லை, மரங்களையும் பிடித்து தருவதில்லை அதனாலேயே அதன் உலகத்தில் அண்ணன் தம்பிக்கு “இடம்” சம்பந்தமாக சண்டை என்பதே இல்லை.

எங்கோ ஓர் இடத்தில் படித்தது இங்கு நினைவுக்கு வருகிறது வலசை வரும் பறவைகள் இங்கு கூடு கட்டி குஞ்சு பொறிக்க வருவதில்லை அதன் தாய் நாட்டில் அளவுக்கு அதிகமாக இருக்கும் குளிர் காரணமாக உணவு கிடைக்காது அதனால் இந்தியாவுக்கு வந்து செல்கிறது இங்கு கூடு கட்டும் பறவைகள் இங்கயே இருக்கும் பறவைகள் தான்.

வலசை பறவைகளில், சில வேறுபாடுகள் உண்டு வெளி நாட்டில் இருந்து இந்தியாவுக்கு வருபவை மற்றும் வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வருபவை.இதில் வெளிநாட்டு பறவைகள் கூடு கட்டுவதில்லை.வட மாநில பறவைகள் தான் கூடு கட்டி குஞ்சு பொறிப்பவை.

நிலத்தில் வாழ்பவை ,நீரில் வாழ்பவை, நில மற்றும் நீரில் வாழும் உயிரினங்கள் என்று பல தரப்பட்டு உயிரினங்கள் இருப்பது போல். பறவைகளில் நீர்வாழ் பறவைகள் என்ற இனம் உண்டு. நம் வீட்டு தோட்டத்தில் பார்க்கும் சிட்டு குருவி,காகம்,பச்சை கிளி இவைகள் எல்லாம் நீர்வாழ் பறவைகள் கிடையாது. பூநாரை ,அரிவாள் மூக்கன் ,கரண்டி வாயன், செங்கல் நாரை ,கூழைகடா,வக்கா,கொக்கு,உன்னி கொக்கு ,பெரிய கொக்கு,பட்டதலை வாத்து....என்று நிறைய நீர்வாழ் பறவைகள் உண்டு. இந்த பறவைகளை, நாம் நம் வீட்டு தோட்டத்தில் பார்க்க முடியாது.பறவை சரணாலயங்களுக்கு வரும் பறவைகள் எல்லா இந்த பறவைகள்தான். இவைகள் பல ஆயிரம் கிலோமீட்டர் வரை தொடர்ச்சியாக பறக்கும் திறன் கொண்டது.

கூடு கட்டுவதற்கு என்று ஒவ்வொரு பறவைகளும் ஒவ்வொரு முறைகளை கையாளுகிறது. ஆண் தூக்கனாங்குருவி கூடு கட்டி பெண்ணை வரவேற்கும். குயில்- காக்கை கூட்டில் முட்டை போடும்.புறா- கோவில் கோபுரம், இடிந்த மண்டபம் என்று தன் வாழ்க்கையை நடத்தும்.இருவாச்சி பறவை-பெண் பறவை பாதுகாப்பான ஒரு பொந்தில் அமர்ந்து அவற்றை சுற்றி சுவர் எழுப்பி ஆண் வெளியும் பெண் உள்ளேயும் அமர்ந்து மிக பாதுகாப்பாக இருக்கும் ஏதிரிகள் ஒன்றும் செய்யமுடியாது.

செம்பூத்து கட்டும் கூடு மிக மிக பாதுகாப்பகா இருக்கும் அடர்த்தியான முட்புதாரில், எதிரிகள் எளிதில் வரமுடியாத இடத்தில தான் கூட்டை கட்டும்.அதே போல் மீன் கொத்தி பறவை தன்னுடைய கூட்டை அமைக்க மிகுந்த மெனக்கெட்டு யாரலும் அணுக முடியாத அளவுக்கே கூடு இருக்கும்.
 

                                                                                                   -செழியன்