Tuesday, 10 April 2018

Azeez உடன் சந்திப்பு


அணிவகுப்பு

காலை ஆறு மணிக்கு மேல் எப்பொழுது வேண்டுமென்றாலும் வாருங்கள் என்று சொன்னார். இன்று காலை ஏழு மணிக்கு அவர் வீட்டின் முன்பு சென்றபொழுது வெளியே நின்று கொண்டிருந்தார். சிட்டுக் குருவிக்கு தண்ணீரை ஒரு பாத்திரத்தில் நிரப்பி அவற்றுக்கு தேவையான தினையை ஒரு கிண்ணத்தில் வைத்துவிட்டு அருகில் வந்தவரிடம், எவ்வளவு வருடங்களாக இங்கு  சிட்டுக் குருவிகளை பார்த்து வருகிறிர்கள் என்று கேட்டதற்கு பத்து வருடங்களாக என்ற அவரின் பதிலால், நிறைய அனுபவம் அவரிடம் இருக்கும் என்று தோன்றியது.

பட்டினப்பாக்கம், கடற்கரையை ஒட்டிய அடுக்க மாடி(Housing Board) குடியிருப்பில் முதல் மாடியில் இருக்கும் அவர் வீட்டின் வரண்டாவில் ஒரு குருவி கூண்டை வைத்துள்ளார் அங்கு நிறைய சிட்டுக் குருவிகள் வந்து அமர்ந்து தானியங்களை சாப்பிடுவதை பார்த்து கொண்டே பேசினோம். 

இயக்குனர் ஹிட்ச்காக்கின் படமான “THE CROW” படத்தில் எப்படி வீட்டை சுற்றி காகங்கள் இருக்குமோ அதே போல் இவர் வீட்டை சுற்றி சிட்டுக் குருவிகளே. 
நிறைய சிட்டுக் குருவிகள் இருப்பதை பார்த்து சுமார் நாற்பது குருவிக்கு மேல் இருக்குமா? என்று கேட்டேன். நாற்பதா? இரநூறு சிட்டுக் குருவிகள் மேல் இங்கு வாழ்கிறது என்று சொல்லியது மட்டும் இல்லாமல் வீட்டை சுற்றி காண்பிக்க தொடங்கினார். வீட்டின் பின்புறம் மரம் ஒன்று இருப்பதை காண்பித்து பெரும்பாலம் இந்த மரத்தில்தான் இவர்கள் இளைப்பாறுவார்கள் என்று சொல்லியதை கேட்டு உற்று பார்த்தேன், உண்மைதான் நிறைய சிட்டுக் குருவிகள் அந்த மரத்தில் இருந்தது. அங்கு சுற்றி இருக்கும் வீடுகளில் அனைத்திலும் குருவிகள் சென்று அமர்ந்து மீண்டும் இவர் வீட்டுக்கு வந்து சாப்பிடுகிறது.

தண்ணீர் பாத்திரம்
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் மற்றும் இரண்டு பாக்கெட் தானியத்தை ஒரு தட்டில் கொட்டி விடுகிறார். இவற்றை சாப்பிட்டு இங்கேயே சுற்றி வருகிறது. நீங்கள ஊரில் இல்லையென்றால் என்றதற்கு, பெரும்பாலும் வெளியே செல்லமாட்டேன் அப்படி சென்றால் வீட்டில் இருபவர்கள் மிக கவனமாக பார்த்து கொள்வார்கள். வீட்டில் இருபவர்களுக்கும் இதில் மிகுந்த ஈடுபாடு இருப்பதை பார்க்கமுடிந்தது. இவர் மகன் பிலால் நடுவே அவருக்கு தெரிந்ததை சொல்லி கொண்டிருந்தார்.

நகரத்தில் சிட்டுக் குருவிகள் குறைந்து வருகிறதே ஏன் என்று சொல்லுங்களே என்றேன். அவர் வீட்டின் எதிர் வீட்டு சுவரில் ஒரு பெட்டி மூடி வைக்கபட்டுள்ளது அந்த பெட்டியை  காண்பித்து சிட்டுகுருவிகள் இந்த பெட்டியை முட்டி முட்டி பார்க்கும் உள்ளே போக முடியாது. அதனால்  வேறு இடங்களை தேடி செல்லும் இவைதான் மிக மிக மிக முக்கிய காரணம் என்றார். அதாவது அவற்றின் வாழிடம், தங்கும் இடம் இல்லாதது அவை வேறு இடங்களுக்கு செல்கிறது.

இதையே அவர் மீண்டும் மீண்டும் பல முறை அழுத்தி சொன்னார். இங்கு எல்லோர் வீட்டிலும் அட்டைபெட்டி வைத்தால் ஐநூறு சிட்டுக் குருவிகள் மேல் இங்கு பார்க்கலாம் ஆனால் யாரும் வைப்பதில்லை என்ற வார்த்தையில் அவருடைய கவலையை உணரமுடிந்தது.

வீட்டில் இருக்கும் கூடுகளை சுற்றி பார்த்தேன். அட்டை பெட்டிகளில் சிறு துவாரம் போட்டு அவை உயரத்தில் இருந்தது மற்றும்  மூடிய மீட்டர் பாக்ஸில் உள்ளேயும் சிட்டுக் குருவி ஒன்று கூடு கட்டியிருந்தது. இதில் எப்படி உள்ளே செல்கிறது என்று குணிந்து பார்த்தேன் அடியில் சிறு இடைவெளி அதில் சென்று வருகிறது. அந்த பாக்ஸை திறந்தார் உள்ளே ஒரு குட்டி குருவி சாராராரா....ர் என்று பறந்து வெளியே சென்றது.

மாநாடு
பின்புறம் மரம்
எங்கள் அருகில் இருந்த ஒரு பெண் குருவி அதன் அலகில் பூச்சி ஒன்றை வைத்து இருந்தது. அதை காண்பித்து குட்டிகளுக்கு எடுத்து செல்கிறது. பெரும்பாலம் குஞ்சுகளுக்கு புழு, பூச்சிகளையே கொடுக்கிறது மற்றும் இங்கு ஒரு தேன் கூடு இருக்கு, அதில் இருந்து தேனி பறக்கும்பொழுது அதையும் பிடித்து குஞ்சுகளுக்கு உணவாக கொடுப்பதையும் குறிபிட்டார். தேன் கூடு அருகில் சென்று பார்த்தேன் தண்ணி பாத்திரம் அருகிலேயே இருக்கிறது. தேனிகள் சுறு சுறுப்பாக அதன் வேலையில் இருந்தது.

ஆபத்து :

சிட்டுக் குருவிகளுக்கு ஏற்படும் ஆபத்து இங்கு இருக்கும் மனிதர்கள், நாய்களால் இல்லை பூனைகளால் மிக பெரிய அச்சுறுத்தல் உள்ளது. குருவிகள் கூட்டமாக தரையில் அமர்ந்து உணவு அல்லது  மண் குளியல் எடுக்கும்பொழுது  பூனை வேகமாக வந்து பிடித்துவிடுகிறது. அப்படி நிறைய தடவை ஏற்பட்டுள்ளது. மின் அலுவலகத்தில் இருந்து வந்து ஏதாவது சரிசெய்யும்பொழுது கூடை கலைத்துவிடுவார்கள். இவைகளே முக்கிய ஆபத்து.

மனிதர்கள் அருகில் சிட்டுக் குருவிகள் வரும் என்று தெரியும் இங்கு ஒரு அடி தூரத்தில் என் அருகில் ஒரு குருவி இருந்தது ஆனால்  நகரவே இல்லை.

மாடியில்
ஒரு குருவி மண் குளியல் எடுத்து கொண்டிருந்ததை பார்த்தேன். மண் குளியல் முடித்து தண்ணீர் குளியல் எடுப்பதாக சொன்னார். அனைத்தும் இவர் வீடு சுற்றியே நடைபெறுகிறது. மற்ற வீடுகளில் கூடுகள் இல்லையென்றாலும் சிட்டுக் குருவிகளை அவர்கள் எந்த தொந்தரவும் செய்வதில்லை. சாதரணமாக கடந்து போகிறார்கள் குருவிகளும் அவர்கள் அருகில் உலாவிகொண்டிருகிறது. 

மழைக்காலத்தில் பரவலாக பார்க்க முடிவதில்லை ஒவ்வொன்றாக வந்து தண்ணீர் , உணவு எடுத்துகொள்ளும் மற்றபடி பாதுகாப்பாக இருக்கும். அதே வெய்யில் காலம் என்றால் அங்கு இருக்கும் படர் கொடியை காண்பித்து இதன் நடு நடுவே சென்று அமர்ந்துகொள்ளும். 

அசிஸ்
தானியத்தை இரண்டு பாக்கெட் வீதம் தினமும் கொட்டி வைக்கிறார். அதுவும் அந்த தானியத்தில் உள்ளே இருப்பதை மட்டும் சாப்பிட்டு, உமியை விட்டு விடுவதை கையில் எடுத்து காண்பித்தது குருவிகளின் செயலை நினைத்து ஆச்சரியமாக இருந்தது.

இங்கு தவிர நகரத்தில் வேறு எங்கெல்லாம் சிட்டுக் குருவிகளை பார்துள்ளீர்கள் ? அசிஸ் அவர்கள் ஆட்டோ ஒட்டுவதால் நகரத்தில் பல இடங்களுக்கு செல்கிறார் அதனால் மைலாப்பூர் மற்றும் திருவெல்லிகேணியில் (Triplicane) ஒரு இடத்தில் பார்த்து உள்ளதாக கூறியதில் அவர் சொன்ன மைலாப்பூர் இடத்தில் ஏற்கனவே நான் சென்று பார்த்துள்ளேன் அதனால்  திருவெல்லிகேணி சென்று பார்க்க வேண்டும் என்று அவரிடம் அதற்கான வழிகளை கேட்டேன்.
சாபிட்டு பிறகு உமி

தெரு பெயர் தெரியாததால் விவேகானந்தர் மண்டபத்துக்கு பக்கத்து சந்தில் செல்லுங்கள், உள்ளே வளைவு ஒன்று இருக்கும், அதில் சென்று வலது திரும்புங்கள் என்று சொல்லியதை என் சிறு மூளைக்கு கொஞ்சம் புரிந்தது. அங்கு சென்றும் பார்த்து விடுவது என்ற முடிவோடு திருவெல்லிகேணி சென்று அப்படி, இப்படி- இரண்டு, மூன்று சுற்று வந்து  யாரைடமும் வழி கேட்காமல் அவர் சொன்ன இடத்தை கண்டுபிடித்துவிட்டேன்.

அட்டைபெட்டி கூடு
பத்து சிட்டுக் குருவிகள் வரை அங்கு இருக்கும். ஒரு படர் கொடி, பூட்டிய வீட்டில் மேல் மாடிவரை படர்ந்து இருந்தது. பூட்டிய வீடு என்பதால் குருவிகள் ஆனந்தமாக இருப்பதை பார்த்தேன். இந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை என்றாலும் கீழே ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி இருப்பதை பார்த்து தினமும் இங்கு யாரோகுருவிகளுக்ககவே வருகிறார்கள் என்று தெரிந்தது. வண்டியை வீட்டு எதிரில் நிறுத்தியப்பொழுது கீழே தண்ணி தொட்டியில் நான்கு குருவிகள் விளையாடி கொண்டிருந்தது. மெதுவாக அந்த வீட்டு திண்ணையில் சென்று அமர்ந்தேன். உடனே அனைத்தும், கொடி உச்சியில் சென்றுவிட்டது. அதேட பார்வையில் அதன் இடத்திற்கு திருடன் வந்து விட்டான் என்று நினைத்திருக்கும். அதனால் சிறிது நேரத்தில் அங்கு இருந்து நகர்ந்து விட்டேன்.

திருவெல்லிகேணி சிட்டுக் குருவி வீடு
சரி அஸிஸ் அவர்கள் வீட்டிற்கு வருவோம். ஆட்டோ ஓட்டி செல்லும்பொழுது இப்படி எங்கையாவது சிட்டுக் குருவிகளை பார்த்தீர்கள் என்றால் என்ன செய்விர்கள் என்று கேட்டேன்? அப்படி செல்லும்பொழுதுதான் இரண்டு இடத்தில் இருப்பதை பார்த்தேன். பார்க்கும்பொழுது சந்தோசமாக இருக்கும். நின்று பார்த்து விட்டு செல்வேன். இங்கும் நம்மை போல் யாரோ இவங்களுக்கு தண்ணீர் வைக்கிறார்கள் என்று நினைப்பேன். 

ஒன்று மட்டும் நிச்சயம் தெரிந்தது அவருடைய பேச்சில் சிட்டுக் குருவிகளுக்கு கூடு கட்ட ஏற்ற இடங்கள் இருந்தால் கண்டிப்பாக நம் அருகில் வாழ வைக்கலாம்.


வெள்ளந்தையாக பேசுகிறார். சிட்டுக் குருவிகள், தனக்கு சந்தோஷத்தை தருகிறது என்று நினைக்கிறார். பறவை நோக்குதல் என்ற வார்த்தையை கூட இவருக்கு தெரிந்து இருக்க வாய்பில்லை என்று நினைக்கிறேன். இவர் மகனும் எங்களுடன் கூடவே இருந்து காலை ஆறு மணிக்கே குருவிகள் கூட்டமாக வீட்டை சுற்றி வந்துவிடும் என்கிறார். அவர்களிடம் இருந்து கிளம்பும்பொழுது பார்க்கலாம் சார் என்று சொல்லிவிட்டு நகர்ந்தேன். அவர் இடத்தில் வந்து பார்த்தது அவருக்கு மிகுந்த சந்தோஷம் அதனால் என்னை சந்தோஷமாக வழி அனுப்பினார்.

-    செழியன்.ஜா
வேடிக்கை

தேன் கூடு

எனக்கு ஒரு அடி தூரத்தில்

மீட்டர் பாக்சில்  கூடு

மீட்டர் பாக்ஸ் உள்ளே செல்லும் வழி

No comments:

Post a Comment