Wednesday, 20 January 2016

சு.தியடோர் பாஸ்கரன்

காலில் அடிபட்டதால் முழு ஓய்வில், இந்த நேரத்தில் தியடோர் பாஸ்கரன் அவர்களின் காட்டுயிர் புத்தகங்களை ஒரு சேர படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.சோலை என்னும் வாழிடம்,தாமரை பூத்த தடாகம், இன்னும் பிறக்காத தலைமுறைக்காக,வானில் பறக்கும் புல்லெல்லாம்,மொழிபெயர்ப்பு-கானுறை வேங்கை,தொகுத்த நூல்-மழை காலமும் குயில் ஓசையும்,மற்றும் இணையத்தில் சில கட்டுரைகள். 

ஒவ்வொரு கட்டுரையும் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதியிருந்தாலும்.எந்த இடத்திலும் புள்ளிவிவரங்களை சரியாகவே குறிப்பிடுகிறார்.ஒரு நாட்டின் பரப்பளவில் 33% காடுகளாக இருக்க வேண்டும் ஆனால் தமிழ்நாட்டில் அவை 17.5% இருப்பதாக பல்வேறு கட்டுரைகளில் காணமுடிகிறது.அணை கட்டுவதாலும்,காடுகளில் பாதை அமைப்பதிலும்,தேயிலை பயிர் இடுவதற்கு, காகிதம் மற்றும் சுரங்கம் என்ற பெயரிலும் காட்டை பிரித்து அழித்து விட்டார்கள்.செயற்கை கோள் எடுத்த படத்தில் 17.5%க்கும் குறைவாகவே காட்டின் அளவு இருப்பதாக குறிப்பிடுகிறார்.

நாம் பார்க்கும் பறவைகள் அனைத்திற்க்கும் தமிழ் பெயர் இருப்பதை சுட்டி காட்டி, தமிழ் பெயர்களையே தாம் பார்த்த பறவைகளுக்கு எழுதியுள்ளார்.சிங்கவால் குரங்கு என்பது ஆங்கில பதத்தின் நேரடி மொழிபெயர்ப்பு அதன் தமிழ் பெயர் என்ன என்று ஒரு கட்டுரையில் கேள்வியோடு நிறுத்தி பல ஆண்டுகளுக்கு பிறகு எழுதிய ஒரு கட்டுரையில் அவை சோலை மந்தி என்று குறிப்பிடுவது எந்தளவுக்கு அவர் தமிழ் பெயரை தேடி சென்றிருக்கிறார் என்று புலப்படுகிறது.

ஆறுகளை இணைப்பதால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று தெரியாமல் நாட்டில் உள்ள ஆறுகளை இணைக்க வேண்டும் என்று சொல்வது, சுதந்ததிர தின உரையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இதை பற்றி எதுவும் சொல்லாதது ஆறுதலாக இருக்கிறது என்று ஒரு கட்டுரையிலும், தமிழில் காட்டுயிர் பற்றிய எழுத்துகள் வருவது இல்லை அதிலும் பெரும்பாலான பத்திரிகைகள் அபூர்வ விலங்கு,வெளிநாட்டு பறவை என்றே பெயர் தெரியாத பறவைகளுக்கு குறிக்கப்படுவது, காட்டுயிர் கலைச்சொற்கள் இல்லாமல்போனதின் வெளிப்பாடே என்று குறிபிடுகிறார். சித்த மருத்துவர்கள் இருப்பதால் மரங்களின் பாரம்பரிய பெயர் காப்பாற்றப்படுவது இப்போதைக்கு ஆறுதல் என்று சொல்வது உண்மையிலும் உண்மை.இதே வரிகளை மா.கிருஷ்ணனின் மழைக்காலமும் குயிலோசையும் நூலின்  முன்னுரையிலும் குறிப்பிடுகிறார்.

தியடோர் பாஸ்கரன் அவர்களின் அனைத்து கட்டுரைகளும் ஏறக்குறைய காட்டுயிர், மரங்கள், ஆறுகள், மலைகள், கழிமுகங்கள்,சோலை காடுகள், பாலை காடுகள், வேட்டையாடிகளால் உயிரினங்கள் குறைந்தது, அணுஉலை நிறுவுவதால் ஏற்படும் ஆபத்துகள், அரசாங்கத்தால் உருவாகும் அணைகள் ஏற்படுத்தும் இடம் அழிப்புகள், சுரங்கம் என்ற பெயரில் ஏற்படும் காட்டழிப்பு, தேயிலை பயிரால் ஏற்படும்  இழப்புகள்,பறவைகளின் தமிழ் பெயரை பயன்படுத்தாமல் இருப்பது,எந்த அரசாங்கமும் சுற்றுச்சூழலை பற்றி தேர்தல் அறிக்கையில் சொல்லாதது இப்படி அணைத்து செய்திகளையும் ஒரு சேர அறிந்துகொள்ள முடிகிறது.

ஒரு மனிதர் இந்த அளவுக்கு காட்டை நேசிக்க முடியுமா என்று அனைத்து கட்டுரைகளையும் படித்துமுடித்தபோது உணரமுடிகிறது. காட்டுயிர் சம்பதமாக படிப்பவர்கள் தாங்கள் முழுநேரமாக காட்டுயிர் ஆய்வில் இருப்பார்கள் ஆனால் தான் பார்த்த வேலைக்கும் இதற்கும் சமந்தம் இல்லாத ஒருவர் வாழ்நாள் முழவதும் செலவுசெய்து கொண்டியிருகிறார் என்பதுதான் ஆச்சரியம்.

இவர் கட்டுரையின் முதல் வரியே மேற்கொண்டு முழுவதும் படிக்க வைத்துவிடும்.எப்படி இளையராஜாவின் பாடல் வெற்றி, பல்லவி ஆரம்பிப்பதற்கு முன்பு வரும் இசையே பாடலின் கொண்டாதத்தை சொல்லிவிடுமோ அதேபோல்தான்  இவரின் ஆரம்ப வரி. தான் போய் இறங்கும் இடத்தை துல்லியமாக பதிவு செய்துவிடுகிறார்.அவரோட முதல் வரிகளை பார்ப்போம்.... 
 
முதுமலையிலிருந்து கல்லட்டி வழியாக ஊட்டி செல்லும் சாலையில் மசினகுடிக்கருகே சீக்ரட் ஐவரி (Secret ivory)விடுதியை நாங்கள் அடைந்தபொழுது மாலை ஐந்து மணியாகிவிட்டது.

மார்ச் 2004 பெரியார் புலிகள் சரணாலயத்தின் உட்பகுதியில்,வனத்துறைக்கு சொந்தமான ஒரு சிறிய குடிலில் நாங்கள் மூவரும் அமர்ந்திருந்தோம். 

கடந்த ஜனவரி முதல் நாள்,காலை ஆறரை மணிக்கு ஒரு ஜீப்பில் பந்திப்பூர் சரணாலய்திற்குள் நுழைந்தோம்.

ஒவ்வொரு வருடப்பிறப்பையும் காட்டில் கழிக்கும் குடும்ப வழக்கதிற்கேற்ப அந்த ஆண்டு குடகிலுள்ள பிரம்மகிரி மலைக்கு செல்ல தீர்மானித்தோம்.மதியம் பெங்களுரை விட்டுப் புறப்பட்டு,இருட்டியபின் இவ்விடுதியை அடைந்தோம்.

மா.கிருஷ்ணன் சந்திப்பை இப்படி தொடங்குகிறார் 1962ஆம் வருடம் சென்னை எட்வர்ட் எலியட்ஸ் சாலையிலுள்ள(இன்றைய ராதாகிருஷ்ணன் சாலை) அவரது பெருங்குளம் இல்லத்தில் நான் மா.கிருஷ்ணனை முதன் முறையாக சந்தித்தேன். சட்டையில்லாமல், வெற்றுடம்புடன் லுங்கியைக் கட்டிக்கொண்டு ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிகரெட் புகைத்துகொண்டிருந்தார்.

பெரியார் சரணாலயத்திலுள்ள காட்டுயிரைக்காண ஏரியில் ஒரு சிறு படகில் சென்று சுற்றிவிட்டுத் திரும்பிகொண்டிருந்தோம்.

ஒரு கட்டுரையில் ஆப்ரிக்காவில் உள்ள The Great Rift Valley பற்றி விவரித்துவிட்டு ஒரே சமயத்தில் பத்து இலட்சம் பூநாரைகள்(Flamingos) கூடும் இடமான நக்கூரா பறவை சரணாலயத்தை பார்ப்பதற்கு செல்வதை இப்படி தொடங்குகிறார் ஒரு சனிக்கிழமை அதிகாலையில் நான் நைரோபியை விட்டுப் புறப்படும்போது பொழுது புலர ஆரம்பித்து விட்டிருந்தது. இவருக்கு வழிக்காடியாகவும், காரோடியாகவும் வரும் கினாரா, ஒரு வார்த்தை மட்டும் பேசுபவர் இவர் கேட்ட ஒரு கேள்விக்கு “பறவைகள்” என்று கூறிவிட்டு சிகரட்டை பற்ற வைப்பதில் முனைந்துவிட்டார்.

இப்படி இவருடைய கட்டுரைகளின் முதல் வரியே அடுத்து படிக்க வைத்துவிடும். காட்டுயிர் மட்டும்மில்லாமல் சினிமா பற்றியும் ஆய்வு செய்து நிறைய நூல்களை எழுதியுள்ளார்.அவருடைய ஒரு சினிமா பேட்டியில் உங்களுக்கு பிடித்த ஐந்து படங்களை வரிசைபடுத்துங்கள் என்ற கேள்விக்கு சகுந்தலை(1940),ஏழை படும் பாடு(1950),யாருக்காக அழுதான்(1965),அவள் அப்படிதான்(1978),அன்பே சிவம்(2003) என்று பதில் சொல்லியிருக்கிறார்.

தமிழில் காட்டுயிர் எழுத்து என்று மா.கிருஷ்ணன் அவர்களுக்கு அடுத்து மிக பெரிய அளவில் எழுதி கொண்டிருப்பவர், இன்று எழுதும் அனைத்து காட்டுயிர் எழுத்தாளர்களும், இவரை குறிப்பிடாமல் எழுதுவதில்லை.இந்த வயதிலும் தொடர்ந்து எழுதி கொண்டிருக்கிறார் என்பதற்கு சமிபத்தில் தி தமிழ் இந்துவில் வெளிவந்த “வரையாடு” கட்டுரையே ஒரு உதாரணம் முகநூலிலும் அப்படியே.


தியடோர் பாஸ்கரன் அவர்கள் எழுதிய சோலை என்னும் வாழிடம் புத்தக வெளியிட்டு நிகழ்சியில்.அவர் அருகில் நான் அமர்ந்திருந்தேன்.புத்தக வெளியிட்டு  நிகழ்ச்சி முடிந்து கிளம்பியவரை பார்த்தபடியே நானும் சென்றேன்.வேலை காரணமாக பல மாநிலங்களில் அவர் இருந்தாலும் இப்பொழுது பெங்களுருவில் வீடு கட்டி வசிக்கிறார்.தம் வீட்டை சுற்றி இதுவரை 33வகை புள்ளினங்களை பார்த்துள்ளதாக ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.இப்பொழுது இதை விட அதிகமாக பார்த்திருக்க கூடும்.

அவர் அனுபவம் நமக்கு கட்டுரையாக இருக்கிறது அதனுடன், நிறைய புத்தகங்களையும் நமக்கு அறிமுகபடுத்துகிறார். நிறைய இடங்களுக்கு சென்றும்  நிறைய படித்தும் ஒரூ கட்டுரையை எழுதுகிறார் என்பது அவருடையை எந்த கட்டுரையை படித்தாலும் தெரிந்துகொள்ளலாம்.நானும் நிறைய நூல் மற்றும் படங்களை அவருடைய கட்டுரைகளில் இருந்து குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன்.

1-Climb Every Mountain- கொல்லிமலை 


2-Tree of  Delhi


3-Check List of Birds of Tamil Nadu- M.A .பாட்ஷா 


4-Hachiko(2009)- movie


5-An Inconvenient Truth Documentary Film
 

6-Silent Spring 


7-The Deer and Tiger (இந்த புத்தகத்தை உல்லாஸ் கரந்த் தன்னுடைய The Way of Tiger என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்)


8-The Story of Asia’s Lion 


9- 18ஆம் யானை:மூன்று குரல்கள்- Documentary film
 
Hachiko படம் 1930களில் ஜப்பானில் வாழ்ந்த ஒரு நாயின் உண்மை கதை. ஹச்சிகோவுக்கு சிலை ஒன்றை ஜப்பான் ரயில் நிலையத்தில் வைத்துள்ளார்கள். இன்றும் அது இறந்தநாளான ஏப்ரல் 8ஆம் தேதியன்று மக்கள் அச்சிலை முன் கூடி மரியாதை செலுத்துகிறார்கள். பின்பு ஒரு முறை தியடோர் பாஸ்கரன் அவர்கள் ஜப்பான் சென்றதை அவர் வரிகளில் பார்ப்போம்-பயிற்சிக்காக ஒரு முறை நான் டோக்கியோ சென்றிருந்தபோது,எனக்கு கிடைத்த முதல் வாய்ப்பில் ஒரு ரயிலைப் பிடித்து புறநகர் ஷிபுயா ஸ்டேஷனுக்குச் சென்று,அங்கு நடைமேடையிலிருந்த ஹச்சிகோவின் சிலை முன் சில வினாடிகள் நின்றேன்.

தியடோர் பாஸ்கர் அவர்களின் நிறைய கட்டுரைகளை காட்டுயிர்,சினிமா பற்றி இருக்கும் ஆனால் எந்த இடத்திலேயும் அவருடைய வாழ்கை முறை வந்ததில்லை 1940ஆம் வருடம் ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் பிறந்தார் என்றே எல்லா புத்தகத்தின் புகப்பில் பார்க்கமுடிகிறது ஆனால் அவரை பற்றி ?

காலச்சுவடு எடுத்த ஓர் நேர்காணலில் அவரின் வழக்கை பற்றி சிறிது அறிந்துகொள்ள முடிகிறது அவற்றின் லிங்க் கொடுத்துள்ளேன்.


காட்டுயிர,சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி எழுதியும், பேசியும் மட்டுமே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்பதை இசை விமர்சகர் ஷாஜி எழுதிய ஒரு கட்டுரையில்-ஒரு முற்பகல் நேரம் எனது நண்பனின் மளிகை கடையில் அமர்ந்திருந்தேன்.திடிரென ஒட்டுமொத்தக் கட்டடமும் பெரும் நடுக்கத்துடன் குலுங்கியது.ஒரு பூகம்பத்தை நான் உணர்ந்த முதல் அனுபவம் அதுவே. அக்காலகட்டத்தில் நான் பெருவந்தானம் ஜான் என்பவரை சந்தித்தேன்.அவர் ஒரு சுற்றுச்சூழலியல் போராளி.பேச்சை கேட்பவர்கள் என யாருமில்லாத ஒரு தெருமுனைக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். சாலையோரத்தில் அவரது உரை கேட்க சுவாரசியமில்லாமல் இருந்தது.ஆனால் எங்கள் பகுதிகளில் தொடர்ந்து நிகழும் பூகமப்தைப் பற்றிதான் அவர் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்ததும் ஆர்வமுடன் நான் அவரது பேச்சை கவனித்தேன்.இப்படி செல்கிறது ஷாஜியோட வரிகள் ......ஆக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி கேட்பதற்கு கூட மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்றே அவரின் ஆரம்ப வரிகள் உணர்த்தினாலும் தொடர்ந்து எழுதியும், பேசியும் மட்டுமே கவனத்தை திருப்ப முடியும் என்று அவரின் கடைசி வரிகள் உணர்த்துகிறது.

இன்றைய அளவில் தமிழில் அதிக அளவில் சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு பற்றி கட்டுரைகளை எழுதி வருபவர் தியடோர் பாஸ்கரன் அவர்கள். எந்த ஒரு பறவையை பற்றியும் முழு விபரங்களை சொல்லி போரடிக்காமல் பார்த்ததை விவரிக்கும் பாங்கு சிறந்ததாக அமைந்திருக்கிறது.இவருடைய காட்டுயிர் ஆர்வத்திற்கு உதாரணமாக இந்த நிகழ்வை குறிப்பிடலாம் தான் இறந்தபின்,தான் நேசித்த காட்டிலேயே தனது உடல் புதைக்க பட வேண்டுமென்று உயில் எழுதியவர்- ஹ்யுகோ வுட். உயில்படியே அவரது உடல் டாப்ஸ்லிப்பில் புதைக்கபட்டது.ஆனால் அந்த உயிலை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தியடோர் அவர்கள் பல அலுவகங்களுக்குச் சென்று தேடியும் ஒரு தடையமும் கிடைக்கவில்லை என்று பதிவுசெய்திருக்கிறார்.

ஒரு கட்டுரையில் வேட்டையாடிய உணவை சிங்கங்கள் சாபிட்டுகொண்டிருந்த இடத்தின் வெகுஅருகில் இவருடைய ஜீப் சென்று நின்று, இஞ்சினை டிரைவர் அணைத்துவிட்டார். பின் சீட்டில் அமர்ந்திருந்த தியடோர் பாஸ்கரன் இவற்றை புகைப்படம் எடுக்க கையில் கேமராவை எடுத்தபொழுது ஒரு ஆண் சிங்கம் இவரை நோக்கி திரும்பி நேருக்கு நேர் பார்த்தபொழுது ஈரக்குலையே நடுங்கியதாக குறிப்பிடுகிறார்.இதே போல் கார்டுனிஸ்ட் மதன் ஒரு பதிலில்-ஒரு முறை சிங்கம் ஒன்று நேருக்கு நேர் என் கண்ணை பார்த்தபொழுது என் உடல் நடுங்கியதாக எழுதியுள்ளார்.பெரும்பாலும் நாம் சிங்கம்,புலி இவற்றை அடைக்கப்பட்ட கூண்டில்  பார்த்தே பழகியதால் அவற்றின் கம்பீரம் நாம் உணருவதில்லை.புலியை அதன் வாழிடத்தில்,காட்டில் பாருங்கள் அதன் கம்பீரம் தெரியும் என்று எப்பொழுதோ தியடோர் பாஸ்கரன் அவர்கள் எழுதியது படித்த ஞாபகம் வருகிறது. 

இவர் செல்லும் இடங்களில் தரப்படும் உணவுகளை பற்றி எழுதும்பொழுது, அந்த உணவுக்கு என்ன சுவை இருக்குமோ அப்படியே அந்த சுவையை எழுத்தில் கொண்டுவந்துவிடுகிறார்.படித்துபாருங்கள் நீங்களும் உணர்வீர்கள். தியடோர் எழுதியுள்ள பறவை,விலங்குகளின் தமிழ் பெயர்களை அனைத்தும் எடுத்து தனியாக எழுதிவைத்துள்ளேன். முடிவில் என்பதுக்கும் மேற்ப்பட்ட தமிழ் பெயர்கள் வந்தது. ஜல்லிகட்டை தடை செய்த இந்த வேளையில் அவருடைய ஏறு தழுவுதல் கட்டுரையை அவரது முகநுலில் பதிவு செய்திருந்தார்.

 சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிபெற்று தபால் துறையில் உயர்ந்த பொறுப்பு வரை சென்று,வேறு வேறு துறைகளிலும்(தொல்லியல் ,காட்டுயிர்,சினிமா) புலமையுடன் இருந்தவரை பற்றி இன்னும் முழுவதுமாக நாம் அறிந்துகொள்ள பேட்டியாகவும், கட்டுரையாகவும், ஆவணப்படமாகவும் அவரை பற்றி வரவேண்டும் என்பதே உண்மை.தமிழ் நாட்டில் மட்டுமே எதையும் ஆவணப்படுதுவதில்லை என்ற நம்பிக்கையை தகர்த்தி இவரை போன்றவர்களின் அனுபவங்களை சேகரிப்போம். 

                                                    - செழியன் 

           தெடர்புக்கு lapwing2010@gmail.com








Wednesday, 16 December 2015

afternoon in pallikaranai



நாளை கனமழை பெய்யும் என்று தொலைகாட்சியில் தொடர்ச்சியாக சொல்லிகொண்டிருந்தார்கள் ஆனால் அவை வானத்திற்கு தெரியாது போலும் அதனால் சுளீர் என்று வெய்யில் அடித்து கொண்டிருந்தது. மதியநேரமாக பள்ளிகரனையை சுற்றி வரலாம் என்று கேமரா, பைனாகுலர் உடன் கிளம்பிவிட்டேன்.

வேலைச்சேரி சென்று பள்ளிகரணை செல்லலாம் ஆனால் நான் omr வழியாக சென்று டோல் பூத் தாண்டி வலது புறம் திரும்பினால் உடனே இன்னமொரு டோல் பூத் வருகிறது அதற்க்கு முன்பு டிராபிக் போலீஸ் மாத கடைசி என்று மடக்கி கொண்டிருந்தார்கள் அவர்களிடம் மாட்டாமல் டோல் தாண்டினால் சிறுது தூரத்தில் பள்ளிகரணை சதுப்பு நிலம் நம்மை பார்க்கும்.


நாம் நின்று பார்பதற்க்குள் நம் அருகிலேயே அங்கு செல்பவர்கள் வண்டியை ஓரம் கட்டி ஜிப்பை கழட்டி விடுகிறாகள் நாம் தான் தள்ளி தள்ளி செல்லவேண்டும். ஒரு பனை ஓலை போட்ட இரண்டு பேர் அமரும் அளவுக்கு குடில் ஒன்று உள்ளது ஆனால் அங்கு நாம் செல்ல முடியாத அளவுக்கு பாதை நம்மை தடுக்கும். இருந்தாலும் கிடைக்கும் இடத்தில இருந்து பறவையை பார்க்க தொடங்கி விட்டேன் முதலில் நிறைய cattle egret என்னை அழைத்தது.நல்ல மழை காலம் ஆதலால் சாக்கடை தண்ணியும் சதுப்பு நிலத்தில் வந்து கலக்கிறது.


நான் இருந்த இடத்தின் மரத்தின் மேல் காகம் ஒன்று கூடு கட்டியிருந்தது அவற்றை படம் எடுத்து பிறகு சதுப்பு நிலத்தில் கவனத்தை திருப்பினேன். பறவைகள் தொலைவில் இருப்பதால் பைனாகுலர் இல்லாமல் சிறு பறவைகளை பார்ப்பது கடினமாகவே இருந்தது.சதுப்பு நிலத்தின்  இடையில் உயரமான மின்கம்பிகள் அதில் நிறைய கூழைக்கடாகள் பார்க்க முடிந்தது வெறும் கண்ணில் பார்த்தல் சிறு பறவையாகவே தெரிகிறது.பள்ளிகரணை செல்பவர்கள் பைனாகுலர் எடுத்து செல்லவது சிறந்தது.
அதிகமாக தாழை கோழிகள் விளையாடி கொண்டிருகிறது. சாலையின் இருபுறத்திலும் தாழை கோழிகள் இருப்பதை பார்க்கலாம்.சதுப்புநிலத்தின் மற்றொரு புறம் குப்பைகளை கொண்டு மூடி விட்டார்கள்.அவர்கள் நன்றாக இருக்கட்டும்.

என் பக்கத்தில் தன் எட்டு வயது சிறுமிக்கு பறவை நோக்குவதை பற்றி சொல்லி கொடுத்து கொண்டிருந்தார் சிறுமியின் தந்தை. சிறுமியிடம் தரமான பைனாகுலர் இருப்பதை பார்க்க முடிந்து. அவங்க அப்பா சொல்ல சொல்ல அவற்றை பார்த்து கொண்டே, சந்தேகங்களையும் கேட்டு கொண்டே வந்தார்.இந்த சிறுமிக்கு எதிர் வரும் காலம் வீனாகாது என்பது நிச்சயம்.

சாலையின் முடிவில் அதாவது வேலைச்சேரி சாலை சந்திக்கும் இடத்தில நிறைய அரிவாள் மூக்கன்,கூழைகடா மரகிலையில் இருப்பதை பார்க்க முடியும். புகைப்படம் எடுப்பதை பொழுதுபோக்க கொண்டவர்களையும், நீண்ட லென்ஸ்கள் உடைய கேமரா,தோழன் போல் அவர்களுடன் தொங்கிகொண்டிருந்தது.

வேடந்தாங்களில் நிறையை பறவைகள் வந்துள்ளதாக தினசரி செய்தித்தாள் தினசரி
சொல்லிக்கொண்டிருகிறது.அடுத்து அங்கு தான் செல்லவேண்டும்.

பார்த்த பறவைகள்

உன்னி கொக்கு

சின்ன கொக்கு 

பாம்புதாரா -நயன்தார அல்ல 

கூழைகடா

அரிவாள் மூக்கன்

மடையான்

வெண் மார்பு மீன் கொத்தி

தாழைக்கோழி

பருந்து 

நீர்காகம்.

நான் சென்ற பொழுது இவ்வளவே பார்க்க முடிந்தது.

                                                         -செழியன்



Sunday, 1 November 2015

Bannarghatta Zoological Park



பெங்களுரு, கோபாலன் மால் எதிரில் இருக்கும் பஸ் நிறுத்தத்தில் நின்றிருந்தேன். அங்கிருந்து சரியாக பதினெட்டு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் பானர்கட்ட உயிரியல் பூங்காவுக்கு செல்வதற்க்கு.இரண்டு விதமாக பார்க்கலாம் உயிரியல் பூங்கா மற்றும் சபாரி செல்லலாம் .சபாரி செல்பவர்கள் சிலர் உயிரியல் பூங்காவுக்கு வருவதில்லை இரண்டில் ஏதாவது ஒன்றை பார்ப்பவர்களே அதிகம்.


நான் ஏறிய பஸ் முழுவதும், ஒரு கிலோமீட்டர் தள்ளியே விட்டு விடுவோம், நடந்து தான் செல்லவேண்டும் என்றே சொல்லி கொண்டிருந்ததால் ஏறி, ஏறி இறங்க வேண்டியிருந்தது. இத்தனைக்கும் ஏற்கனவே எந்த பஸ் போகும் என்று கேட்டு தெரிந்தே வந்தேன் ஆனால் அந்த பஸ் எல்லாம் தள்ளியே நிற்கும் என்றே நடத்துனர் சொல்வதை கேட்க்க வேண்டியிருந்தது. கடைசியாக உயிரியல் பூங்கா செல்லும் பஸ்சில் ஏறி அமர்ந்து விட்டேன்.  

பெங்களுருளில் இருக்கும் ஒரே சவுகரியம் நாம் தமிழிலேயே பேசலாம் அவர்களும் நமக்கு புரிந்து கொள்ளும் அளவுக்கு தமிழில் பேசுவார்கள் சில இடத்தில நாம் தமிழ் நாட்டில் தான் இருக்கோமோ என்று உணரும் அளவுக்கு தமிழ் கபடி விளையாடும்.அதே போல் தான் சித்தூரிலும் (ஆந்திரா)

அரைமணி நேரத்தில் உயரியல் பூங்காவை அடைந்தேன்.பஸ் நிறுத்தத்தை ஒட்டியது போல் உயிரியல் பூங்கா தொடங்குகிறது.நான் சபாரி செல்லாமல் சுற்றி பார்க்கலாம் என்று டிக்கெட் கவுன்ட்டர் நோக்கி நடந்தேன்.எனக்கு டிக்கெட் வாங்கிய பிறகு கேமராவுக்கு டிக்கெட் என்று கேட்டேன், என்னை ஒரு முறை ஏற பார்த்த பிறகே டிக்கெட் கொடுத்தார் முதலில்  புரியவில்லை பிறகு தெரிந்தது, யாரும் கேமராவுக்கு டிக்கெட் வாங்குவதில்லை என்று. ஆனால் கேமராவுக்கும் டிக்கெட் வாங்க வேண்டும் என்ற பலகை அவரை பார்த்து சிரித்து கொண்டிருந்தது. 

இடது புறத்தில் சபாரியும் வலது பக்கம் திரும்பினால் உயரியல் பூங்காவும் செல்லலாம்.வலது புறம் திரும்பி சென்றேன். சென்னை வண்டலூர் உயரியல் பூங்கா போல் பெரியதாக இல்லாமல் கிண்டி பூங்காவை விட பெரியதாக இருந்தது.மூன்று நீர் யானை என்னை வரவேற்றது நீரில் விளையாடி காட்டியது.

     
                          
மிக பெரிய வலை மூடிய குளத்தில் இராகொக்கு ,கூழைகடா,அரிவாள் மூக்கன்,கரண்டிவாயன் என்று நிறைய நீர் வாழ் பறவைகள் பாட்டு பாடி கொண்டு இருந்தது.ஏறக்குறைய எல்லா உயிரியல் பூங்காவிலும் இதை போல் ஒரு குளம் ஆரம்பத்திலேயே காணப்படுகிறது.இவற்றை தொடர்ந்து தன்னந்தனியாக காட்டு பூனை ஒன்று சுற்றி வரும் கூண்டு அருகில் சென்று நின்றேன்.மிக பெரிய கூண்டு அதனால் சவகாசமாக சுற்றி வந்து நம்மை பார்க்கிறது.பூனை உருளுவதற்கு பச்சை பசேல் என்று புல் தரை உள்ளது. 

                            
மிக உயர்ந்த மரத்தில் மட்டும் வாழும் பறவையான இருவாச்சி பறவை ஒன்று  கூண்டில் அல்லல் பட்டது. சிப்ஸ் ஒன்றை ஒருவர் கொடுத்தார் அதை எடுப்பதற்கு தன் நீண்ட முக்கை வெளியே நீட்டி முயற்சி செய்து கொண்டிருந்தது.இங்கு தான் நான் இந்த பறவையை முதல் முறையாக பார்க்கிறேன். மேற்கு தொடர்ச்சி மலையில் இப்பறவை காணப்படும். கேரளாவின் மாநில பறவை மலபார் இருவாச்சி பறவையாகும் அதே போல் அருணாச்சல பிரதேசத்தின் மாநில பறவையாகும்.


இந்தியாவில் ஏழு வகையான இருவாச்சி பறவை உள்ளது இவை போடும் சத்தம் ஹெலிகாப்டர் சத்தம் போல் இருக்கும்.
                                
சிங்கம் இருப்பதற்கான பலகை காணப்படுகிறது ஆனால் பார்க்க முடியவில்லை நிறைய சிறுத்தைகள் உலாவியும் சிலது பாறை மேல் படுத்து யார் பார்த்தால் எனக்கென்ன என்பது போல் அமைதியாக இருக்கிறது.உயிரியல் பூங்காவில் நிறைய பறவைகள், குரங்குகள், மான்கள் பார்த்தாலும் சிங்கம், சிறுத்தை, புலி பார்ப்பது என்பது உண்மையில் சிலிர்ப்பை தரும் விஷயமாகும்.அதன் அருகில் செல்லும்பொழுதே உடம்பு சிலிர்த்து எங்கே நம் அருகில் வந்து விடுமோ என்ற உணர்வையும் தரும். அது மட்டும் இல்லாமல் எங்கே கூண்டை விட்டு வெளியே தப்பி வந்து விடுமோ என்ற பய உணர்வையும் தந்து விடுகிறது.

இரண்டு கரடிகள், தாம் கூண்டில் இருக்கோம் என்று நன்கு உணர்ந்து படுத்தே காட்சியளித்தது.நிறைய நட்சத்திர ஆமைகள் வலம் வந்து உணவை சாப்பிட்டும், மயில்கள் ஆனந்தமாக தோகை விரித்து ஒன்று ஆடியும் மற்றொன்று உயரமான கொம்பில் அமர்ந்தும், ஆந்தைகள் என்னை பார்த்து ஏன் காலையில் வந்து என் தூக்கத்தை கெடுக்கிறாய் என்பது போல் இருந்தது. 

பேனர்கட்டா உயிரியல் பூங்கா அமைதியான சூழலில் அமைந்து இருப்பதால் எந்த வித வெளி சத்தமும் இல்லாமல் நாம் உள்ளே வலம் வரலாம் என்பதற்கு நான் உறுதி அளிக்கிறேன்.

மலைப்பாம்பு, மான்கள், நிறைய வெளிநாட்டு பறவைகள், குரங்குகள்,யானைகள்,காட்டு கோழிகள், வெள்ளை புறா,வெள்ளை மயில், கூகை இவற்றை நம் செய்திதாளில் ஆஸ்த்ரேலியா பறவை என்றே தவறாக குறிப்பிடுவார்கள்.குள்ள நரி இரண்டு என்று பார்ப்பதற்கு நிறைய உள்ளதால் தயங்காமல் சென்று வரலாம் முடிந்தால் சபாரியும் செல்லலாம்.

ஒவ்வொரு கூண்டின் முன்பும் அந்த கூண்டில் இருக்கும் பறவை அல்லது விலங்கு பற்றிய தெளிவான தகவல்கள் கொடுத்துள்ளார்கள்.உதாரணத்துக்கு லவ் பேர்ட்ஸ் என்று நாம் அழைக்கும் சிறிய பறவையை பற்றி 

LENGTH     : 18CM

WEIGHT    : 28-30 GM

LIFE SPAN : 5-10 YEARS

SEXUAL MATURITY : 3-4 MONTHS

INCUBATION PERIOD : 18 DAYS

CLUTCH SIZE : 5-6 EGGS

HABITAT : SCRUBLAND, OPEN WOODLAND AND GRASSLAND

RANGE : AUSTRALIA, EXCEPT EASTERN COSTAL AREAS.

DIET IN WILD : SEEDS OF SPINIFEX, GRASS WEEDS AND SOMETIME RIPENING WHEAT.

                                                  DIET IN ZOO:( PER HEAD)
                                      CORIANDER LEAVES- 15G / MILLET – 15G

என்னை சுற்றி நிறைய மாணவர்கள் தமிழில் பேசி விளையாடி கொண்டிருந்தார்கள் எனக்கு கிண்டி பூங்காவில் இருப்பது போல் இருந்தது. அவர்களை அழைத்து கேட்டதற்கு கோரமங்களாவில் உள்ள பள்ளியில் படிப்பதாகவும் திருவண்ணாமலையில் இருந்து வந்து இங்கேயே செட்டில் ஆனவர்கள் என்று தெரிந்தது. வருடம் ஒருமுறை பள்ளியால் இங்கே அழைத்து வரப்படுகிறார்கள்  ஆனால் இவர்கள் சுற்றி பார்ப்பதை விட விளையாடுவதே சிறந்ததாக கருதுகிறாற்கள். எல்லா மாணவர்களும் வேகமாக சுற்றி வந்து பறவைகளை பார்த்து விட்டு விளையாட ஆரம்பித்துவிடுகிறார்கள் .


               -    செழியன்