Friday, 18 March 2016

Late comers to VedanthaankaL





காலை 6.40 தாம்பரம் பஸ் நிலையத்தில் ஏலக்காய் டி குடித்து கொண்டிருந்தேன் அடுத்து செங்கல்பட்டு நோக்கி செல்வதற்கு. வேடந்தாங்கல், மிக பழமையான பறவைகள் சரணாலயத்தை பார்ப்பதற்கு மார்ச் மாதம்தான் என்னால் முடிந்தது.சென்னையில் இருந்து சிறிது தொலைவு மட்டுமே உள்ளதால் அனைவரும் சென்று வரலாம் ஆனால் அப்படி யாரும் செல்வதில்லை என்பது பஸ்சில் அங்கு செல்லும்பொழுது தெரிந்துகொள்ளலாம்.

ஐம்பது ரூபாய் டிக்கெட் எடுத்து விட்டால் செங்கல்பட்டு வரை சென்று வரலாம். வேடந்தாங்கலுக்கு தாம்பரத்தில் இருந்து பஸ் இருக்கிறதா என்று தெரியவில்லை ஆனால் செங்கல்பட்டில் இருந்து நாற்பது நிமிடத்திற்கு ஒரு பஸ் உள்ளது என்று இணையத்தில் தேடும்பொழுது தெரிந்து கொண்டேன். நாற்பது நிமிட பஸ் எல்லாம் கப்சா என்று செங்கல்பட்டில் நீங்கள் நிற்கும்பொழுது உணர ஆரம்பித்து விடுவீர்கள்.நானும் அப்படியே.

8.15 மணிக்கு செங்கல்பட்டு பஸ் நிலையத்தில் இறங்கிய உடனேயே பஸ் விசாரணை அதிகாரிடம் சென்று வேடந்தாங்கல் செல்வதற்கு எந்த பஸ் என்ற கேள்விக்கு 8.15 ஒரு பஸ் கிளம்பும் என்றார் அப்பொழுது மணி 8.17. பஸ் நிலையம்  முழுவதும் வலம்வந்தேன் பயன் இல்லை மிண்டும் அதே அதிகாரிடம் வந்து கேட்டேன்.ஒரு நடத்துனர் 8.15 பஸ் இல்லையினா அடுத்து 9.40க்கு தான் பஸ் என்ற பதில் எரிச்சலை தந்தாலும் வேறு வழி என்ன என்று  கேட்டதற்கு, நீங்க மதுராந்தக பஸ்சில் ஏறி பட்டாளம் கூட்ரோடில் இறங்கி ஷேர் ஆட்டோவில் செல்லவேண்டும் ஆனாலும் ஒரு சிக்கல் ஷேர் ஆட்டோ வேடந்தாங்கல் வரை செல்லாது என்ற குண்டையும் போட்டார்.

MAN vs WILD Bear Grylls அடிக்கடி ஒரு வாசகத்தை சொல்லுவார் நாம் ஒரே இடத்தில் இருக்ககூடாது போயிட்டே இருக்கவேண்டும் என்ற வாசகத்தை பின்பற்றி போயிட்டே இருப்போம், அங்கே சென்று பார்த்துகொள்ளலாம் என்று மதுராந்தக பஸ்சில் அமர்ந்தேன். 9.00 மணிக்கு பட்டாளம் கூட்ரோடில் இறக்கிவிட்டார்கள். சென்னை to திருச்சி மெயின் ரோட்டில் மதுராந்தகதிற்க்கு முன்பு உள்ளது பட்டாளம் கூட்ரோடு. நிறைய ஷேர் ஆட்டோ இருந்தாலும் எதுவும் வேடந்தாகளுக்கு செல்வதில்லை என்ற முடிவோடு இருந்தார்கள். கேட்டதற்கு பத்து பேர் சேர்ந்தார்கள் என்றால் போகலாம், இதுவரை என்னை தவிர வேறு ஒருவரையும் இல்லை என்பதுதான் நிஜம்.இதற்காக காத்திருந்தால் செங்கல்பட்டில் இருந்து 9.40 பஸ்ஸே வந்துவிடும்.அங்கு இருந்து பனிரெண்டு கிலோமீட்டர் தான் வேடந்தாங்கல் என்ற பலகையை பார்த்து, தனியாக செல்ல எவ்வளவு என்று கேட்டேன்.200 ரூபாய் என்பதை 180க்கு முடிவாகி 9.30க்கு வேடந்தாங்கல் என்னை வரவேற்த்தது 

சீசன் நேரத்தில் கூட போக்குவரத்து மிக மோசம் என்பதையே பஸ்சில் செல்லும்பொழுது தெரிகிறது. இதை தான் முதல் பத்தியில் கடைசி வரியாக எழுதியிருகிறேன் அங்கு யாரும் செல்வதில்லை என்பதை ஒரு பத்து பேர் கூட  ஷேர் ஆட்டோவில் சேரவில்லை.என்பது உணர்த்துகிறது


ஐந்துரூபாய் மட்டுமே பெரியவர்களுக்கு உள்ளே செல்ல, கேமரா இருபத்தைந்துரூபாய் ஆக முப்பது ரூபாயுடன் பார்த்துவிடலாம்.நீர் நிறைந்து இருப்பதால் ஏகப்பட்ட பறவைகள் காணப்படுகிறது அதில் மிக அதிகமாக மஞ்சள் மூக்கு நாரைகளே நிறைந்து இருக்கிறது.நான் உள்ளே சென்றபொழுது பறவை நோக்கும் ஒரு குருப் வெளியேறி கொண்டிருந்தது.ஏறக்குறைய இருபது பேருக்கு மேல் இருப்பார்கள் வயதோ இருபதுகுள்ளே, அனைவரும் வடமாநிலத்தை சேர்ந்தவர்கள்.எல்லோருடைய கையிலும் குறிப்பெடுக்க தாள்கள், அதில் பறவைகளின் படங்களும் இருந்ததை அவர்கள் வேகமாக வெளியேறும்பொழுது பார்க்க முடிந்தது.

மஞ்சள் மூக்கு நாரைகள் (Painted Stork)

சிறிய நீர்காகம் (Little cormorant)

கூழைக்கடா (Pelican)

கரண்டிவாயன் (Spoon Bill)

அரிவாள் மூக்கன் (White ibis)

வக்கா (Night Heron)

மடையான் (Pond Heron)

மரங்கொத்தி பறவை (Wood Pecker)

பணங்காடை (Indian Roller)

இரட்டை வால் குருவி (Black Drongo)

வென்மார்பு மீன்கொத்தி (White Throated Kingfisher)

உன்னி கொக்கு(Cattle Egret)

சிறிய கொக்கு(Little Egret)

உள்ளே நூழைந்தவுடன் இரட்டை வால் குருவி என்னை வா என்று வரவேற்று உள்ளே செல் என்றது.மஞ்சள் மூக்கு நாரைகள் மொத்தமாக ஏரியை குத்தகை எடுத்தது போல் இருந்தது.பார்க்கும் இடம் முழுவதும் மஞ்சள் மூக்கு நாரைகளே.சிறிய நீர் காகங்கள் அதனுடன் போட்டி போடும் அளவுக்கு இருக்கிறது. நிறைய பள்ளிகளில் இருந்து சிறு பிள்ளைகளை ஆசிரியர்கள் அழைத்து வருகிறாகள்.என்ன வேடிக்கை என்றால் வரும் ஆசிரியர்களில் யாருக்கும் ஒரு பறவையின் பெயர் கூட தெரியவில்லை ஆமாம் ஒரே ஒரு பறைவையின் பெயர் கூட தெரியவில்லை என்ற நிலை, பள்ளியில் சுற்றுச்சூழல்,காட்டு விலங்கு,பறவை என்ற பாடமே இல்லாததை இவர்கள் எல்லாவற்றையும் கொக்கு, கோழி என்றே பிள்ளைகளுக்கு சுட்டி காட்டி வருவதில் தெரிகிறது.



என் அருகில் இருந்த வாத்தியார் அதோ பறவைகள் பார், கொக்கு பார்  என்றே சொல்லி கொண்டிருந்தார். பிள்ளைகளும் பெயரை கேட்கவில்லை என்பது வாத்தியார்க்கு வசதியாக இருந்தது.இது போல் பிள்ளைகளை அழைத்து வரும்பொழுது குறைந்த பட்சம் ஒரு சில பறவைகளின் பெயர்களையாவது ஆசிரியர்கள் தெரிந்து கொண்டு வந்தால் பிள்ளைகள் பார்க்கும் பறவையின் உண்மையான பெயர் சொல்லிக்கொடுப்பதால், பிள்ளைகள் மனதில் பதிந்து அவை தவறான பெயர் பதியாமல் இருப்பதற்கு உதவும். 
 
நாம் நடந்து போகும் வழியின் வலது பக்கத்தில் நிறைய பறவைகள் படமும் அதன் அருகில் தமிழ் மற்றும் ஆங்கில பெயர்களும் இருப்பதை ஒரு ஆசிரியர்களும் பார்த்து படிக்கவே இல்லை அப்படியாவது சில பறவைகள் பெயர்கள் தெரிந்து கொண்டிருக்கலாம்.
வேடந்தாங்கலில், நம் கண்ணுக்கு அருகில் இருக்கும் மரத்தில் மஞ்சள் மூக்கு நாரைகளும்,அதற்கு அப்பால் இருக்கும் மரத்தில் கூழைக்கடாகளும் அதன் பக்கத்தில் இருக்கும் மரத்தில் நீர்காகங்களும் பாகம் பிரித்து கொடுத்து இருப்பது போல் அமர்ந்திருந்தன.எந்த பறவைகளுக்கும் இடயே சண்டையோ,போட்டியோ கொஞ்சம் கூட இல்லை என்பது ஆச்சரியம்.


மஞ்சள் மூக்கு நாரைகள், பறப்பதும்,சிறு மரக்கிளைகளை எடுத்து வருவதும் அதனை கொண்டு கூடு அமைப்பதும், இந்த தொடர்நிகழ்ச்சியை பார்ப்பது பறவை ஆர்வலர்களுக்கு மிகுந்த சந்தோஷத்தை தரும்.நிறைய மஞ்சள் முக்கு நாரைகள் முட்டை இட்டுயிருப்பதை பார்க்க முடிந்தது.ஆங்கில பெயரான painted stork என்பதை வர்ண நாரை என்று மொழி பெயர்கிறார்கள் அது தவறு, ஆங்கில பதத்தின் நேரடி தமிழ் மொழிபெயர்ப்பு, மஞ்சள் மூக்கு நாரை அல்லது சங்குவளை நாரை என்றே தமிழில் அழைப்பது சரி என்று ஒரு கட்டுரைகளில் படித்திருக்கிறேன்.

பறவைகளை அவதனிக்க ஒரே ஒரு நேர் பாதை மட்டும் உள்ளதால், கால் வலி,உடம்பு வலி என்பதே இல்லை போக்குவரத்தால் வரும் உடம்பு வலி மட்டுமே உண்டு. நிறைய இருக்கைகள் அம்ரவதற்கு இருப்பதால் பெரியவர்களும் சென்று வரலாம், குடிநீர் சுவையாகவே உள்ளது. சிறிது நேரத்தில் பள்ளி பிள்ளைகளை அமர வைத்து சாப்பிட சொல்லிவிட்டார்கள். காலையில் நிறைய கனவுகளோடு கிளம்பிய பிள்ளைகள் வித விதமான உணவுகளை பிரித்து சாப்பிட தொடங்கிவிட்டார்கள் ஒரு பிள்ளை முட்டையை கொண்டுவந்திருப்பதை பார்க்க முடிந்தது.சுற்றி பார்க்க வேறு எதுவும் அங்கு இல்லை, ஒரே நேர் பாதை மட்டுமே, எவ்வளவு நேரம் தான் ஒரே மாதிரி பறவைகளை பார்த்து கொண்டிருப்பது என்று பிள்ளைகளுக்கு போர் அடிப்பதால், சாப்பிட்டு விட்டு விளையாட ஆரம்பித்துவிட்டார்கள்.

நிறைய கூழைக்கடாகள் உயரத்தில் பறந்து கொண்டிருந்தது பருந்துகள் கூட்டமாக பறப்பது போல் இருந்தது.உயரமான கோபுரம் இருப்பதால் வேடந்தாங்கல் முழுவதும் பார்க்க முடிவது தான் மிக சிறந்ததாக இருக்கிறது.கோபுரத்தில் இருக்கும் தொலைநோக்கி அன்று இல்லாததால் அவற்றைக் எதிர் பார்த்து வருபவர்கள் இங்கு இருக்குமே இங்கு இருக்குமே என்று கூட வருபவர்களிடம் சொல்லி, பறவைகளை கிட்ட பார்க்கலாம்னு வந்தால் இப்படியாகிவிட்டதே என்று என்னிடம் பைனாகுலரை வாங்கி அவர்களும், அவர்களின் பிள்ளைகளும் பார்த்தார்கள் அதில் ஒருவர், என்ன பைனாகுலர் இவ்வளவு கனமாக உள்ளது என்று இரண்டு,முன்று முறை என்னிடம் கேட்டு விட்டார்.  

கரண்டிவாயனை தேடுவது சிரமமாக உள்ளது மிக குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே வேடந்தாங்கலில் காணப்படுகிறது. கடைசியில் இரண்டு கரண்டிவாயனை பார்த்து விட்டே அங்கு இருந்து கிளம்பினேன். அரிவாள் மூக்கன் சொல்லி கொள்ளும்படி பறந்து கொண்டிருந்தது. நிறைய மடயான்களை பார்க்க முடிகிறது.நாம் நிற்கும் இடத்தில இருக்கும் தண்ணீரிலேயே மடையன்கள் சாதுவாக நின்றுகொண்டுயிருகிறது. நானும் ஒரு மணிநேரத்திற்கு மேல் அவற்றை கவனித்து கொண்டிருந்தேன் அமைதியாக நீரையே பார்த்து கொண்டிருந்தது. எதை நினைத்து நின்று கொண்டிருகிறது என்று தான் தெரியவில்லை.

முன் வரிசையில் உள்ள ஒரு மரத்தில் இருக்கும் பறவைகளை பற்றி என் நினைவில் இருப்பதை பதிவிடுகிறேன். மேற்புரதில் ஒரு சங்குவளை நாரை (மஞ்சள் மூக்கு நாரை) தன் குட்டிகளுக்கு உணவை தந்து கொண்டிருக்கிறது, பக்கத்தில் ஒரு மஞ்சள் முக்கு நாரை கூடு அமைப்பதற்காக மர கிளைகளை கொண்டுவருவதும் செல்வதுமாக காரியத்தில் சரியாக செயல்பட்டுகொண்டிருந்தது. நான் பார்த்தபொழுது ஏறக்குறைய கூடு பாதிக்கு மேல் தயார் நிலையில் இருந்தது. பின் புறம் நிறைய, வளர்ந்து வரும் மஞ்சள் முக்கு நாரைகள் கூட்டமாக நின்று கொண்டிருந்தது. மரத்தின் கீழ் ஒரு மடையானும் பின்னால் இராகொக்கும் நின்று, என்னத்தை பார்க்குமோ, எதையோ பார்த்து கொண்டே இருந்தது.ஒரு சில கூழைக்கடாகளும் இருந்ததை பார்க்க முடிந்தது. அதிகமான கூழைக்கடாகள் முதல் வரிசையில் உள்ள மரத்தில் இல்லாமல் பின் பக்கம் இருக்கும் மரத்தில் அமர்ந்து இருந்ததை பைனாகுலர் இருந்தால் துல்லியமாக பார்க்கலாம்.

கோபுரத்தில் இருந்து பார்க்கும்பொழுது பறவை சரணாலயத்திற்கு பின் பக்கம் உள்ள வயல்வெளிகளில், ஒரே ஒரு மாடு புற்களை மேய்ந்து கொண்டிருந்தது மற்றும் நிறைய உன்னி கொக்குகள் அதில் காணப்பட்டது.சிறிய கொக்குகள் அதிகமாக சரணாலயத்தில் இருப்பதை காணமுடிகிறது உன்னிப்பாக கவனித்தால் மட்டுமே சிறிய கொக்கையும் உன்னி கொக்கையும் பிரித்து அவதனிக்க முடியும். பறவை அவதனிப்பவர்கள் சுலபமாக கண்டு பிடித்து விடுவார்கள். சரணாலயம் மிக அமைதியாக இருப்பதால் பறவைகள் சத்தம் மட்டுமே கேட்க முடிகிறது. சிறிது நேரம் அங்கு இருந்த இருக்கையில் அமர்ந்தேன், வித்தியாசமா சத்தத்தை கேட்டு நான் அமர்ந்து இருந்த இடத்தில இருந்த மரத்தை மேல் நோக்கி பார்த்தேன் மரங்கொத்தி பறவை ஒன்று தனியாக கிளைகளை விட்டு,விட்டு தாவி கொண்டிருந்தது. உயரத்தில் இருந்ததால் என்னிடம் இருந்த மொபைல் கேமராவில் படம் சரியாக விழவில்லை.வீட்டில் சரிபார்த்த பிறகே கேமெராவை எடுத்து சென்றேன் ஆனால் அங்கு மெமரி கார்டு விளையாட்டு காண்பித்து விட்டது.அதனால் இங்கு இருக்கும் படம் எல்லாம் மொபைலில் எடுத்தவையே.
 
பறந்து செல்லும் மஞ்சள் மூக்கு நாரை



வேடந்தாங்கல் நீர்

தண்ணீர் இருக்கும்வரை பறவைகள் இருக்கும், ஏறக்குறைய ஜூன் மாதம் வரை பார்வையாளர்கள் வருவார்கள், பிறகு சரணாலயத்தை மூடிவிடுவார்கள் அதன் பின் வரும் பார்வையாளர்கள் உள்ளே செல்ல அனுமதி இல்லை, இதற்காக தான் வந்திருக்கிறோம் என்று சொல்பவர்களை உள்ளே முழுவதும் செல்ல விடாமல் ஆரம்பத்தில்லேயே நின்று பார்க்க அனுமதிப்பார்கள். இவையெல்லாம் வெளியே இருப்பவர்களிடம் பேசி தெரிந்து கொண்டேன். 

அப்படி, இப்படி சுற்றி முடித்து விட்டு வெளியே வந்தேன். ஒரு பெண்மணி தர்புஸ் சாப்பிடுங்கள் என்று கூப்பிட்டார்கள் எவ்வளவு என்பதற்கு பத்து ரூபாய்தான் ப்ரஷ்ஷாக தருகிறேன் என்று சொன்னதால் சாப்பிட்டு விட்டு, இளநீர் ஒன்று தாருங்கள் என்றேன் இதன் விலையை நான் கேட்கவில்லை அதான் தர்புஸ் சாப்பிட்டோமே என்ன அதிகமாக சொல்லவிட போகிறார்கள் என்று குடித்து விட்டேன் பிறகு நாற்பது ரூபாய் என்று சொன்னார்கள்.சென்னையிலேயே இருபது, இருபத்தைந்து தான் என்பதற்கு பின், இருபத்தைந்து தந்து வியாபாரத்தை முடித்தேன் அவரிடமே பஸ் எப்பொழுது வரும்? இப்பொழுது வரும். சொல்லியபடி வந்ததுதான் ஆச்சரியம், ஏறி அமர்ந்தேன் ஊரைச்சுற்றி காண்பித்து விட்டுதான் செங்கல்பட்டில் இறக்கிவிட்டார்கள்.போன வழிலேயே வீடு வந்து சேர்ந்தபொழுதுதான் ஒரு உண்மை தெரிந்தது அடுத்த தடவை வண்டியில்லாமல் செல்லக்கூடாது என்று. 

                                                                                                                                             -செழியன்
                                       
         




  

Wednesday, 20 January 2016

சு.தியடோர் பாஸ்கரன்

காலில் அடிபட்டதால் முழு ஓய்வில், இந்த நேரத்தில் தியடோர் பாஸ்கரன் அவர்களின் காட்டுயிர் புத்தகங்களை ஒரு சேர படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.சோலை என்னும் வாழிடம்,தாமரை பூத்த தடாகம், இன்னும் பிறக்காத தலைமுறைக்காக,வானில் பறக்கும் புல்லெல்லாம்,மொழிபெயர்ப்பு-கானுறை வேங்கை,தொகுத்த நூல்-மழை காலமும் குயில் ஓசையும்,மற்றும் இணையத்தில் சில கட்டுரைகள். 

ஒவ்வொரு கட்டுரையும் வெவ்வேறு காலகட்டத்தில் எழுதியிருந்தாலும்.எந்த இடத்திலும் புள்ளிவிவரங்களை சரியாகவே குறிப்பிடுகிறார்.ஒரு நாட்டின் பரப்பளவில் 33% காடுகளாக இருக்க வேண்டும் ஆனால் தமிழ்நாட்டில் அவை 17.5% இருப்பதாக பல்வேறு கட்டுரைகளில் காணமுடிகிறது.அணை கட்டுவதாலும்,காடுகளில் பாதை அமைப்பதிலும்,தேயிலை பயிர் இடுவதற்கு, காகிதம் மற்றும் சுரங்கம் என்ற பெயரிலும் காட்டை பிரித்து அழித்து விட்டார்கள்.செயற்கை கோள் எடுத்த படத்தில் 17.5%க்கும் குறைவாகவே காட்டின் அளவு இருப்பதாக குறிப்பிடுகிறார்.

நாம் பார்க்கும் பறவைகள் அனைத்திற்க்கும் தமிழ் பெயர் இருப்பதை சுட்டி காட்டி, தமிழ் பெயர்களையே தாம் பார்த்த பறவைகளுக்கு எழுதியுள்ளார்.சிங்கவால் குரங்கு என்பது ஆங்கில பதத்தின் நேரடி மொழிபெயர்ப்பு அதன் தமிழ் பெயர் என்ன என்று ஒரு கட்டுரையில் கேள்வியோடு நிறுத்தி பல ஆண்டுகளுக்கு பிறகு எழுதிய ஒரு கட்டுரையில் அவை சோலை மந்தி என்று குறிப்பிடுவது எந்தளவுக்கு அவர் தமிழ் பெயரை தேடி சென்றிருக்கிறார் என்று புலப்படுகிறது.

ஆறுகளை இணைப்பதால் என்ன மாதிரியான விளைவுகள் ஏற்படும் என்று தெரியாமல் நாட்டில் உள்ள ஆறுகளை இணைக்க வேண்டும் என்று சொல்வது, சுதந்ததிர தின உரையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இதை பற்றி எதுவும் சொல்லாதது ஆறுதலாக இருக்கிறது என்று ஒரு கட்டுரையிலும், தமிழில் காட்டுயிர் பற்றிய எழுத்துகள் வருவது இல்லை அதிலும் பெரும்பாலான பத்திரிகைகள் அபூர்வ விலங்கு,வெளிநாட்டு பறவை என்றே பெயர் தெரியாத பறவைகளுக்கு குறிக்கப்படுவது, காட்டுயிர் கலைச்சொற்கள் இல்லாமல்போனதின் வெளிப்பாடே என்று குறிபிடுகிறார். சித்த மருத்துவர்கள் இருப்பதால் மரங்களின் பாரம்பரிய பெயர் காப்பாற்றப்படுவது இப்போதைக்கு ஆறுதல் என்று சொல்வது உண்மையிலும் உண்மை.இதே வரிகளை மா.கிருஷ்ணனின் மழைக்காலமும் குயிலோசையும் நூலின்  முன்னுரையிலும் குறிப்பிடுகிறார்.

தியடோர் பாஸ்கரன் அவர்களின் அனைத்து கட்டுரைகளும் ஏறக்குறைய காட்டுயிர், மரங்கள், ஆறுகள், மலைகள், கழிமுகங்கள்,சோலை காடுகள், பாலை காடுகள், வேட்டையாடிகளால் உயிரினங்கள் குறைந்தது, அணுஉலை நிறுவுவதால் ஏற்படும் ஆபத்துகள், அரசாங்கத்தால் உருவாகும் அணைகள் ஏற்படுத்தும் இடம் அழிப்புகள், சுரங்கம் என்ற பெயரில் ஏற்படும் காட்டழிப்பு, தேயிலை பயிரால் ஏற்படும்  இழப்புகள்,பறவைகளின் தமிழ் பெயரை பயன்படுத்தாமல் இருப்பது,எந்த அரசாங்கமும் சுற்றுச்சூழலை பற்றி தேர்தல் அறிக்கையில் சொல்லாதது இப்படி அணைத்து செய்திகளையும் ஒரு சேர அறிந்துகொள்ள முடிகிறது.

ஒரு மனிதர் இந்த அளவுக்கு காட்டை நேசிக்க முடியுமா என்று அனைத்து கட்டுரைகளையும் படித்துமுடித்தபோது உணரமுடிகிறது. காட்டுயிர் சம்பதமாக படிப்பவர்கள் தாங்கள் முழுநேரமாக காட்டுயிர் ஆய்வில் இருப்பார்கள் ஆனால் தான் பார்த்த வேலைக்கும் இதற்கும் சமந்தம் இல்லாத ஒருவர் வாழ்நாள் முழவதும் செலவுசெய்து கொண்டியிருகிறார் என்பதுதான் ஆச்சரியம்.

இவர் கட்டுரையின் முதல் வரியே மேற்கொண்டு முழுவதும் படிக்க வைத்துவிடும்.எப்படி இளையராஜாவின் பாடல் வெற்றி, பல்லவி ஆரம்பிப்பதற்கு முன்பு வரும் இசையே பாடலின் கொண்டாதத்தை சொல்லிவிடுமோ அதேபோல்தான்  இவரின் ஆரம்ப வரி. தான் போய் இறங்கும் இடத்தை துல்லியமாக பதிவு செய்துவிடுகிறார்.அவரோட முதல் வரிகளை பார்ப்போம்.... 
 
முதுமலையிலிருந்து கல்லட்டி வழியாக ஊட்டி செல்லும் சாலையில் மசினகுடிக்கருகே சீக்ரட் ஐவரி (Secret ivory)விடுதியை நாங்கள் அடைந்தபொழுது மாலை ஐந்து மணியாகிவிட்டது.

மார்ச் 2004 பெரியார் புலிகள் சரணாலயத்தின் உட்பகுதியில்,வனத்துறைக்கு சொந்தமான ஒரு சிறிய குடிலில் நாங்கள் மூவரும் அமர்ந்திருந்தோம். 

கடந்த ஜனவரி முதல் நாள்,காலை ஆறரை மணிக்கு ஒரு ஜீப்பில் பந்திப்பூர் சரணாலய்திற்குள் நுழைந்தோம்.

ஒவ்வொரு வருடப்பிறப்பையும் காட்டில் கழிக்கும் குடும்ப வழக்கதிற்கேற்ப அந்த ஆண்டு குடகிலுள்ள பிரம்மகிரி மலைக்கு செல்ல தீர்மானித்தோம்.மதியம் பெங்களுரை விட்டுப் புறப்பட்டு,இருட்டியபின் இவ்விடுதியை அடைந்தோம்.

மா.கிருஷ்ணன் சந்திப்பை இப்படி தொடங்குகிறார் 1962ஆம் வருடம் சென்னை எட்வர்ட் எலியட்ஸ் சாலையிலுள்ள(இன்றைய ராதாகிருஷ்ணன் சாலை) அவரது பெருங்குளம் இல்லத்தில் நான் மா.கிருஷ்ணனை முதன் முறையாக சந்தித்தேன். சட்டையில்லாமல், வெற்றுடம்புடன் லுங்கியைக் கட்டிக்கொண்டு ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்து சிகரெட் புகைத்துகொண்டிருந்தார்.

பெரியார் சரணாலயத்திலுள்ள காட்டுயிரைக்காண ஏரியில் ஒரு சிறு படகில் சென்று சுற்றிவிட்டுத் திரும்பிகொண்டிருந்தோம்.

ஒரு கட்டுரையில் ஆப்ரிக்காவில் உள்ள The Great Rift Valley பற்றி விவரித்துவிட்டு ஒரே சமயத்தில் பத்து இலட்சம் பூநாரைகள்(Flamingos) கூடும் இடமான நக்கூரா பறவை சரணாலயத்தை பார்ப்பதற்கு செல்வதை இப்படி தொடங்குகிறார் ஒரு சனிக்கிழமை அதிகாலையில் நான் நைரோபியை விட்டுப் புறப்படும்போது பொழுது புலர ஆரம்பித்து விட்டிருந்தது. இவருக்கு வழிக்காடியாகவும், காரோடியாகவும் வரும் கினாரா, ஒரு வார்த்தை மட்டும் பேசுபவர் இவர் கேட்ட ஒரு கேள்விக்கு “பறவைகள்” என்று கூறிவிட்டு சிகரட்டை பற்ற வைப்பதில் முனைந்துவிட்டார்.

இப்படி இவருடைய கட்டுரைகளின் முதல் வரியே அடுத்து படிக்க வைத்துவிடும். காட்டுயிர் மட்டும்மில்லாமல் சினிமா பற்றியும் ஆய்வு செய்து நிறைய நூல்களை எழுதியுள்ளார்.அவருடைய ஒரு சினிமா பேட்டியில் உங்களுக்கு பிடித்த ஐந்து படங்களை வரிசைபடுத்துங்கள் என்ற கேள்விக்கு சகுந்தலை(1940),ஏழை படும் பாடு(1950),யாருக்காக அழுதான்(1965),அவள் அப்படிதான்(1978),அன்பே சிவம்(2003) என்று பதில் சொல்லியிருக்கிறார்.

தமிழில் காட்டுயிர் எழுத்து என்று மா.கிருஷ்ணன் அவர்களுக்கு அடுத்து மிக பெரிய அளவில் எழுதி கொண்டிருப்பவர், இன்று எழுதும் அனைத்து காட்டுயிர் எழுத்தாளர்களும், இவரை குறிப்பிடாமல் எழுதுவதில்லை.இந்த வயதிலும் தொடர்ந்து எழுதி கொண்டிருக்கிறார் என்பதற்கு சமிபத்தில் தி தமிழ் இந்துவில் வெளிவந்த “வரையாடு” கட்டுரையே ஒரு உதாரணம் முகநூலிலும் அப்படியே.


தியடோர் பாஸ்கரன் அவர்கள் எழுதிய சோலை என்னும் வாழிடம் புத்தக வெளியிட்டு நிகழ்சியில்.அவர் அருகில் நான் அமர்ந்திருந்தேன்.புத்தக வெளியிட்டு  நிகழ்ச்சி முடிந்து கிளம்பியவரை பார்த்தபடியே நானும் சென்றேன்.வேலை காரணமாக பல மாநிலங்களில் அவர் இருந்தாலும் இப்பொழுது பெங்களுருவில் வீடு கட்டி வசிக்கிறார்.தம் வீட்டை சுற்றி இதுவரை 33வகை புள்ளினங்களை பார்த்துள்ளதாக ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.இப்பொழுது இதை விட அதிகமாக பார்த்திருக்க கூடும்.

அவர் அனுபவம் நமக்கு கட்டுரையாக இருக்கிறது அதனுடன், நிறைய புத்தகங்களையும் நமக்கு அறிமுகபடுத்துகிறார். நிறைய இடங்களுக்கு சென்றும்  நிறைய படித்தும் ஒரூ கட்டுரையை எழுதுகிறார் என்பது அவருடையை எந்த கட்டுரையை படித்தாலும் தெரிந்துகொள்ளலாம்.நானும் நிறைய நூல் மற்றும் படங்களை அவருடைய கட்டுரைகளில் இருந்து குறிப்பெடுத்து வைத்திருக்கிறேன்.

1-Climb Every Mountain- கொல்லிமலை 


2-Tree of  Delhi


3-Check List of Birds of Tamil Nadu- M.A .பாட்ஷா 


4-Hachiko(2009)- movie


5-An Inconvenient Truth Documentary Film
 

6-Silent Spring 


7-The Deer and Tiger (இந்த புத்தகத்தை உல்லாஸ் கரந்த் தன்னுடைய The Way of Tiger என்ற புத்தகத்தில் குறிப்பிடுகிறார்)


8-The Story of Asia’s Lion 


9- 18ஆம் யானை:மூன்று குரல்கள்- Documentary film
 
Hachiko படம் 1930களில் ஜப்பானில் வாழ்ந்த ஒரு நாயின் உண்மை கதை. ஹச்சிகோவுக்கு சிலை ஒன்றை ஜப்பான் ரயில் நிலையத்தில் வைத்துள்ளார்கள். இன்றும் அது இறந்தநாளான ஏப்ரல் 8ஆம் தேதியன்று மக்கள் அச்சிலை முன் கூடி மரியாதை செலுத்துகிறார்கள். பின்பு ஒரு முறை தியடோர் பாஸ்கரன் அவர்கள் ஜப்பான் சென்றதை அவர் வரிகளில் பார்ப்போம்-பயிற்சிக்காக ஒரு முறை நான் டோக்கியோ சென்றிருந்தபோது,எனக்கு கிடைத்த முதல் வாய்ப்பில் ஒரு ரயிலைப் பிடித்து புறநகர் ஷிபுயா ஸ்டேஷனுக்குச் சென்று,அங்கு நடைமேடையிலிருந்த ஹச்சிகோவின் சிலை முன் சில வினாடிகள் நின்றேன்.

தியடோர் பாஸ்கர் அவர்களின் நிறைய கட்டுரைகளை காட்டுயிர்,சினிமா பற்றி இருக்கும் ஆனால் எந்த இடத்திலேயும் அவருடைய வாழ்கை முறை வந்ததில்லை 1940ஆம் வருடம் ஈரோடு மாவட்டம் தாராபுரத்தில் பிறந்தார் என்றே எல்லா புத்தகத்தின் புகப்பில் பார்க்கமுடிகிறது ஆனால் அவரை பற்றி ?

காலச்சுவடு எடுத்த ஓர் நேர்காணலில் அவரின் வழக்கை பற்றி சிறிது அறிந்துகொள்ள முடிகிறது அவற்றின் லிங்க் கொடுத்துள்ளேன்.


காட்டுயிர,சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி எழுதியும், பேசியும் மட்டுமே மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முடியும் என்பதை இசை விமர்சகர் ஷாஜி எழுதிய ஒரு கட்டுரையில்-ஒரு முற்பகல் நேரம் எனது நண்பனின் மளிகை கடையில் அமர்ந்திருந்தேன்.திடிரென ஒட்டுமொத்தக் கட்டடமும் பெரும் நடுக்கத்துடன் குலுங்கியது.ஒரு பூகம்பத்தை நான் உணர்ந்த முதல் அனுபவம் அதுவே. அக்காலகட்டத்தில் நான் பெருவந்தானம் ஜான் என்பவரை சந்தித்தேன்.அவர் ஒரு சுற்றுச்சூழலியல் போராளி.பேச்சை கேட்பவர்கள் என யாருமில்லாத ஒரு தெருமுனைக்கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தார். சாலையோரத்தில் அவரது உரை கேட்க சுவாரசியமில்லாமல் இருந்தது.ஆனால் எங்கள் பகுதிகளில் தொடர்ந்து நிகழும் பூகமப்தைப் பற்றிதான் அவர் பேசிக்கொண்டிருக்கிறார் என்பதை உணர்ந்ததும் ஆர்வமுடன் நான் அவரது பேச்சை கவனித்தேன்.இப்படி செல்கிறது ஷாஜியோட வரிகள் ......ஆக சுற்றுச்சூழல் பாதுகாப்பு பற்றி கேட்பதற்கு கூட மக்கள் ஆர்வம் காட்டுவதில்லை என்றே அவரின் ஆரம்ப வரிகள் உணர்த்தினாலும் தொடர்ந்து எழுதியும், பேசியும் மட்டுமே கவனத்தை திருப்ப முடியும் என்று அவரின் கடைசி வரிகள் உணர்த்துகிறது.

இன்றைய அளவில் தமிழில் அதிக அளவில் சுற்றுச்சூழல் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பு பற்றி கட்டுரைகளை எழுதி வருபவர் தியடோர் பாஸ்கரன் அவர்கள். எந்த ஒரு பறவையை பற்றியும் முழு விபரங்களை சொல்லி போரடிக்காமல் பார்த்ததை விவரிக்கும் பாங்கு சிறந்ததாக அமைந்திருக்கிறது.இவருடைய காட்டுயிர் ஆர்வத்திற்கு உதாரணமாக இந்த நிகழ்வை குறிப்பிடலாம் தான் இறந்தபின்,தான் நேசித்த காட்டிலேயே தனது உடல் புதைக்க பட வேண்டுமென்று உயில் எழுதியவர்- ஹ்யுகோ வுட். உயில்படியே அவரது உடல் டாப்ஸ்லிப்பில் புதைக்கபட்டது.ஆனால் அந்த உயிலை படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் தியடோர் அவர்கள் பல அலுவகங்களுக்குச் சென்று தேடியும் ஒரு தடையமும் கிடைக்கவில்லை என்று பதிவுசெய்திருக்கிறார்.

ஒரு கட்டுரையில் வேட்டையாடிய உணவை சிங்கங்கள் சாபிட்டுகொண்டிருந்த இடத்தின் வெகுஅருகில் இவருடைய ஜீப் சென்று நின்று, இஞ்சினை டிரைவர் அணைத்துவிட்டார். பின் சீட்டில் அமர்ந்திருந்த தியடோர் பாஸ்கரன் இவற்றை புகைப்படம் எடுக்க கையில் கேமராவை எடுத்தபொழுது ஒரு ஆண் சிங்கம் இவரை நோக்கி திரும்பி நேருக்கு நேர் பார்த்தபொழுது ஈரக்குலையே நடுங்கியதாக குறிப்பிடுகிறார்.இதே போல் கார்டுனிஸ்ட் மதன் ஒரு பதிலில்-ஒரு முறை சிங்கம் ஒன்று நேருக்கு நேர் என் கண்ணை பார்த்தபொழுது என் உடல் நடுங்கியதாக எழுதியுள்ளார்.பெரும்பாலும் நாம் சிங்கம்,புலி இவற்றை அடைக்கப்பட்ட கூண்டில்  பார்த்தே பழகியதால் அவற்றின் கம்பீரம் நாம் உணருவதில்லை.புலியை அதன் வாழிடத்தில்,காட்டில் பாருங்கள் அதன் கம்பீரம் தெரியும் என்று எப்பொழுதோ தியடோர் பாஸ்கரன் அவர்கள் எழுதியது படித்த ஞாபகம் வருகிறது. 

இவர் செல்லும் இடங்களில் தரப்படும் உணவுகளை பற்றி எழுதும்பொழுது, அந்த உணவுக்கு என்ன சுவை இருக்குமோ அப்படியே அந்த சுவையை எழுத்தில் கொண்டுவந்துவிடுகிறார்.படித்துபாருங்கள் நீங்களும் உணர்வீர்கள். தியடோர் எழுதியுள்ள பறவை,விலங்குகளின் தமிழ் பெயர்களை அனைத்தும் எடுத்து தனியாக எழுதிவைத்துள்ளேன். முடிவில் என்பதுக்கும் மேற்ப்பட்ட தமிழ் பெயர்கள் வந்தது. ஜல்லிகட்டை தடை செய்த இந்த வேளையில் அவருடைய ஏறு தழுவுதல் கட்டுரையை அவரது முகநுலில் பதிவு செய்திருந்தார்.

 சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சிபெற்று தபால் துறையில் உயர்ந்த பொறுப்பு வரை சென்று,வேறு வேறு துறைகளிலும்(தொல்லியல் ,காட்டுயிர்,சினிமா) புலமையுடன் இருந்தவரை பற்றி இன்னும் முழுவதுமாக நாம் அறிந்துகொள்ள பேட்டியாகவும், கட்டுரையாகவும், ஆவணப்படமாகவும் அவரை பற்றி வரவேண்டும் என்பதே உண்மை.தமிழ் நாட்டில் மட்டுமே எதையும் ஆவணப்படுதுவதில்லை என்ற நம்பிக்கையை தகர்த்தி இவரை போன்றவர்களின் அனுபவங்களை சேகரிப்போம். 

                                                    - செழியன் 

           தெடர்புக்கு lapwing2010@gmail.com








Wednesday, 16 December 2015

afternoon in pallikaranai



நாளை கனமழை பெய்யும் என்று தொலைகாட்சியில் தொடர்ச்சியாக சொல்லிகொண்டிருந்தார்கள் ஆனால் அவை வானத்திற்கு தெரியாது போலும் அதனால் சுளீர் என்று வெய்யில் அடித்து கொண்டிருந்தது. மதியநேரமாக பள்ளிகரனையை சுற்றி வரலாம் என்று கேமரா, பைனாகுலர் உடன் கிளம்பிவிட்டேன்.

வேலைச்சேரி சென்று பள்ளிகரணை செல்லலாம் ஆனால் நான் omr வழியாக சென்று டோல் பூத் தாண்டி வலது புறம் திரும்பினால் உடனே இன்னமொரு டோல் பூத் வருகிறது அதற்க்கு முன்பு டிராபிக் போலீஸ் மாத கடைசி என்று மடக்கி கொண்டிருந்தார்கள் அவர்களிடம் மாட்டாமல் டோல் தாண்டினால் சிறுது தூரத்தில் பள்ளிகரணை சதுப்பு நிலம் நம்மை பார்க்கும்.


நாம் நின்று பார்பதற்க்குள் நம் அருகிலேயே அங்கு செல்பவர்கள் வண்டியை ஓரம் கட்டி ஜிப்பை கழட்டி விடுகிறாகள் நாம் தான் தள்ளி தள்ளி செல்லவேண்டும். ஒரு பனை ஓலை போட்ட இரண்டு பேர் அமரும் அளவுக்கு குடில் ஒன்று உள்ளது ஆனால் அங்கு நாம் செல்ல முடியாத அளவுக்கு பாதை நம்மை தடுக்கும். இருந்தாலும் கிடைக்கும் இடத்தில இருந்து பறவையை பார்க்க தொடங்கி விட்டேன் முதலில் நிறைய cattle egret என்னை அழைத்தது.நல்ல மழை காலம் ஆதலால் சாக்கடை தண்ணியும் சதுப்பு நிலத்தில் வந்து கலக்கிறது.


நான் இருந்த இடத்தின் மரத்தின் மேல் காகம் ஒன்று கூடு கட்டியிருந்தது அவற்றை படம் எடுத்து பிறகு சதுப்பு நிலத்தில் கவனத்தை திருப்பினேன். பறவைகள் தொலைவில் இருப்பதால் பைனாகுலர் இல்லாமல் சிறு பறவைகளை பார்ப்பது கடினமாகவே இருந்தது.சதுப்பு நிலத்தின்  இடையில் உயரமான மின்கம்பிகள் அதில் நிறைய கூழைக்கடாகள் பார்க்க முடிந்தது வெறும் கண்ணில் பார்த்தல் சிறு பறவையாகவே தெரிகிறது.பள்ளிகரணை செல்பவர்கள் பைனாகுலர் எடுத்து செல்லவது சிறந்தது.
அதிகமாக தாழை கோழிகள் விளையாடி கொண்டிருகிறது. சாலையின் இருபுறத்திலும் தாழை கோழிகள் இருப்பதை பார்க்கலாம்.சதுப்புநிலத்தின் மற்றொரு புறம் குப்பைகளை கொண்டு மூடி விட்டார்கள்.அவர்கள் நன்றாக இருக்கட்டும்.

என் பக்கத்தில் தன் எட்டு வயது சிறுமிக்கு பறவை நோக்குவதை பற்றி சொல்லி கொடுத்து கொண்டிருந்தார் சிறுமியின் தந்தை. சிறுமியிடம் தரமான பைனாகுலர் இருப்பதை பார்க்க முடிந்து. அவங்க அப்பா சொல்ல சொல்ல அவற்றை பார்த்து கொண்டே, சந்தேகங்களையும் கேட்டு கொண்டே வந்தார்.இந்த சிறுமிக்கு எதிர் வரும் காலம் வீனாகாது என்பது நிச்சயம்.

சாலையின் முடிவில் அதாவது வேலைச்சேரி சாலை சந்திக்கும் இடத்தில நிறைய அரிவாள் மூக்கன்,கூழைகடா மரகிலையில் இருப்பதை பார்க்க முடியும். புகைப்படம் எடுப்பதை பொழுதுபோக்க கொண்டவர்களையும், நீண்ட லென்ஸ்கள் உடைய கேமரா,தோழன் போல் அவர்களுடன் தொங்கிகொண்டிருந்தது.

வேடந்தாங்களில் நிறையை பறவைகள் வந்துள்ளதாக தினசரி செய்தித்தாள் தினசரி
சொல்லிக்கொண்டிருகிறது.அடுத்து அங்கு தான் செல்லவேண்டும்.

பார்த்த பறவைகள்

உன்னி கொக்கு

சின்ன கொக்கு 

பாம்புதாரா -நயன்தார அல்ல 

கூழைகடா

அரிவாள் மூக்கன்

மடையான்

வெண் மார்பு மீன் கொத்தி

தாழைக்கோழி

பருந்து 

நீர்காகம்.

நான் சென்ற பொழுது இவ்வளவே பார்க்க முடிந்தது.

                                                         -செழியன்