Sunday, 12 June 2016

பறவை நோக்குதல் - தொடர்-2


IAS தேர்வில் பறவைகள் பற்றி ஒரு கேள்வி கேட்க்கப்பட்டது?

கிராமத்து வயல்களில் மேயும் மாடுகளின் மேல் அமர்ந்து அவற்றின் தோலில் உள்ள பூச்சிகளை கொத்தி சாப்பிடும் பறவைகள் எது ?


1.Painted Stork             2.Common Myna           3.Black-Necked Crane    4.Cattle Egret

 Options

(a) 1,2,3,4                        (b) 1 and 3                    (c) 2 and 4             (d)  3 and 4


இவை தான் அந்த கேள்வி ஒரு நிமிடம் யோசித்து அல்லது யோசிக்காமலும்  பதிலை கண்டுபிடியுங்கள்.

என்னது IAS தேர்வில் இதெல்லாமா கேட்பார்கள் என்று நினைக்காதீர்கள். நம்முடைய கவனம் பாட புத்தகத்தில்(Text Book) மட்டும் இருக்க கூடாது என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம்.

நாமும் வயல் வெளிகளில் நிறைய முறை சென்று இருப்போம் அல்லது அந்த பக்கமாக செல்லும்பொழுது அங்கு மேயும் மாட்டை பார்த்திருப்போம் ஆனால் ஒரு முறை கூட மாட்டின் மேல் அல்லது அதன் அருகில் இருக்கும் பறவைகளை பார்திருக்க மாட்டோம் என்பது தான் நிஜம்.

மேலே உள்ள அந்த பறவைகளில் இருந்தே நாம் பறவைகளின் வகைகளை இந்த கட்டுரையில் ஆரம்பிப்போம்.

IAS கேள்விக்குக்கான பதில் - :” C”

நெறிமுறைகள்:

பறவைகள் நோக்குவதற்கு ஏதாவது நெறிமுறை உள்ளதா என்றால்? இதற்க்கெல்லாம் நாம் வேலைக்கு சேரும்பொழுது தரும் நெறிமுறைகள்(Code of Conduct) படிவம் போல் பக்கம் பக்கமாக இருக்கும் என்று பெரிதாக நினைத்து விடாதிர்கள்.

1.பறவைகளுக்கு எந்தவிதத்திலும் நம்மால் தொந்தரவோ,

2.முட்டை மற்றும் குஞ்சுகளுக்கு இடையூரோ,

3.சத்தம் எழுப்பி கலவரபடுத்துவதோ,

4.உணவு அளிப்பது  

இவையெல்லாம் தவிர்த்தாலே அதுவே பறவைகளுக்கு நாம் செய்யும் பெரிய நன்மைதாங்க.இதை கவனத்தில் கொண்டு பறவைகளை பார்க்க செல்லுங்கள்.

எந்த நேரத்தில் பறவைகளை பார்க்க வேண்டும் அல்லது எந்த நேரத்தில் பார்ப்பது சிறந்தது என்ற அடுத்த கேள்வி நீங்கள் கேட்கப்போகிறிர்கள்.

புதிதாக பறவை நோக்குபவர்கள் (Beginners) ஆரம்பத்தில் நேரம் எல்லாம் பார்த்து செல்லாதிர்கள்.பறவை நோக்குவதற்கு என்று நேரம் உண்டு என்றாலும் ஆரம்பத்தில் அதெல்லாம் வேண்டாம். நினைக்கும் அல்லது நினைத்து நேரங்களில் பார்க்க ஆரம்பியுங்கள்,நீங்கள் போகும் இடங்களில் எல்லாம் பாருங்கள் ஆர்வம் அதிகமாகும் பொழுது குறிப்பிட்ட நேரத்தில் பார்க்க ஆரம்பிப்போம்.

நேரம் என்று பார்த்தால் அதிகாலை ஆறு மணிக்கும், மாலை ஐந்து மணியில் இருந்து கூட்டில் அடையும் வரையும் (மதியம் இரண்டு மணி அளவிலும் பார்க்கலாம்) இவ்வளவுதாங்க பறவைகளை பார்பதற்கான நேரம்.ஆரம்பத்தில் இவையெல்லாம் கவனத்தில் கொள்ளாதிர்கள்.சிலபேருக்கு அதிகாலையில் எழவே முடியாது அதனால் ஆறு மணிக்கு பார்க்க செல்வோம் என்று அலாரம் வைத்து தூங்கிகொண்டிருப்பார்கள்.கடைசி வரை அவர்களால் பறவைகளை அவதானிக்க முடியாது.அதனால் ஆரம்பத்தில் குறிப்பிட்ட நேரத்தில் என்பதை விட்டு நேரம் காலம் பார்க்காமல் பாருங்கள்.

முதல் பறவையாக IASல் கேட்கபட்ட பறவையை பற்றி பார்ப்போம்

1. உண்ணிக் கொக்கு (Cattle Egret) :

பார்பதற்கு முழு வெள்ளையாக காணப்படும் உண்ணிக் கொக்கு. இனப்பெருக்க காலங்களில் மட்டும் பெண் உண்ணிக் கொக்குக்கு தலை மட்டும் முதுகு பகுதியில் ஆரஞ்சு கலர்  தூவிவிட்டது போல் காணப்படும்.இவற்றின் அலகு மஞ்சள் நிறத்திலும், கால்கள் கருப்பு நிறத்திலும் இருக்கும் இவை தான் மற்ற கொக்கில் இருந்து இதனை வேறுபடுத்தி காட்டுகிறது. அந்த பறவையோட மூக்கை பாருங்களேன் என்று சொல்லுவார்கள் உண்மையில் அது மூக்கு அல்ல, அலகு(Beak or Bill) என்று குறிப்பிட வேண்டும்.

 உண்ணிக் கொக்கு நீர் நிலைகளை தவிர வயல்வெளிகளிலும்,மாட்டின் அருகிலும் அதிகமாக காணப்படும்.மாட்டின் அசைவில் வெளிப்படும் பூச்சிகளை மற்றும் மாட்டின் ரதத்தை உறிஞ்சும் உண்ணிகளையும் சாப்பிடுவதால் உன்னிக் கொக்கு என்று பெயர். இதற்கு மாட்டு கொக்கு என்ற பெயரும் உள்ளது.இவற்றின் மஞ்சள் நிற சிறிய அலகு-தடிமனாக இருக்கும்.

இந்தியா மற்றும் உலகளவில் உன்னிகொக்கு காணப்படும். இன்று நல்ல நிலையில் இவற்றின் எண்ணிக்கை இருந்தாலும் நீர் நிலைகள்,சதுப்புநிலங்கள் (பள்ளிகரணை, பெரும்பாக்கம் ஏரி) போன்ற இடங்கள் இன்று அடுக்கு மாடிகளாக மாறிவருவதால் இவற்றின் வாழிடம் பாதிப்படைகிறது.
photo-wikipedia

பறவைகளின் அறவியல் பெயர், குடும்பம் இதையெல்லாம் தவிர்த்துவிட்டு பறவைகளின் செயல்பாடுகள்,நிறம், வாழிடம், எண்ணிக்கை இவற்றை பற்றி மட்டும் பார்ப்போம். எல்லாவற்றையும் புதிதாக பறவைகளை நோக்க ஆரம்பிப்பவர்கள் ஆரம்பத்திலே படித்தால் அவை பள்ளியில் படிக்கும் பாடம் போல் இருந்துவிடும். அதனால் இப்போதைக்கு தவிர்த்து பிறகு தேவையென்றால் பார்ப்போம்.

தொலைநோக்கி - (Binocular)

நிறைய வகைகளில் Binocular கிடைக்கிறது.எது சிறந்த Binocular?


எப்படி தேர்ந்தெடுப்பது ? பறவை பார்பதற்கு நாம் எதை வாங்குவது? என்று நிறைய கேள்விகள் இருக்கும்?

Binocularல் இரண்டு நம்பர் மூலமாக அறியப்படுகிறது. ஒன்று மிக தூரத்தில் இருப்பதை மிக அருகில் காட்டும் திறன் கொண்டது, இரண்டாவது முன்பக்கம் உள்ள லென்ஸ் அளவை (Diameter) குறிக்கும்.

எடுத்துக்காட்டு : 7 x 35 Binocular

இதில் 7 என்ற எண்   Binocularரின் திறனை குறிக்கும்(X-Magnification Power). அதாவது இந்த திறன் கொண்ட Binocular மூலம் ஒரு பொருளை பார்க்கும்பொழுது அந்த பொருள் 7 மடங்கு அருகில் தெரியும்.

ஒரு பறவை 350 yards  தூரத்தில் இருப்பதாக வைத்து கொள்வோம். இந்த 7 x 35 Binocular மூலம் பார்க்கும்பொழுது அந்த பறவை 50 yards ( 350 / 7 ) தூரத்தில் இருப்பது போல நன்றாக தெரியும். அதாவது ஏழு மடங்கு அருகில் தெரியும்.

அப்பொழுது அதிக திறன் கொண்ட Binocular மூலம் ஒரு பொருள் மிக மிக அருகில் இருப்பது போல் தோன்றுமா என்ற கேள்வி எழும்

அவ்வாறு கிடையாது, Binocularதிறன் 10யை தாண்டும்பொழுது நம் கைகளின் சிறு அசைவும் பறவையை தெளிவாக காண்பது சிரமமாக்கிவிடும்.

Binocular 12 X , Binocular 20 X இந்த வகை Binocularரை , Binocular Expertஆல் சரியாக பயன்படுத்த முடியும். பறவை பார்க்க ஆர்ம்பிப்பவர்கள் முதலில் குறைவான எண் உள்ள Binocular பயன்படுத்திவிட்டு பிறக்கு அதிக திறன் உள்ள Binocular பயன்படுத்துவது பலனை தரும்.

இரண்டாவது எண் : 35”  Binocular ( முன்பக்கம் உள்ள ) லென்சின் அளவை குறிக்கும்.

எடுத்துக்காட்டு : 

7 x 35 Binocularல் லென்சின் அளவு 35 mill meters (1.38 inches) இதை பொறுத்துதான் ஒரு Binocular எவ்வளவு வெளிச்சத்தை க்ரகிக்க முடியும் என்பதை தீர்மானிக்கும். ஒரு Binocular அதிக வெளிச்சத்தை கிரகிக்க கூடியதாக இருந்தால், சிறு வெளிச்சத்தில் உள்ள பறவையை கூட மிக பிரகாசமாக காட்டும். 


 முடிவு :

பறவை நோக்குவதற்கு (Bird Watching) என்றால் Binocular 8 X 42 அல்லது 10 X 42 சிறந்தது.


2. நாகணவாய் பறவை (Common Myna)

நாகணவாய் என்று அழைத்து யாருமே பார்த்து இருக்கமாட்டோம்.மைனா என்பதுதான் தமிழ் பெயர் என்ற நினைப்பில் இன்று வரை இருக்கிறோம் ஆனால் இனிமேல் அப்படி இருக்கலாமா? ஆக நாகணவாய் என்பதுதான் மைனா என்று நாம் அழைக்கும் பறவையின் தமிழ் பெயர்.
photo-wikipedia

1.மைனாவில், காடுகளில் வாழும் மைனா, மலைப்ரதேசங்களில் இருக்கும் மைனா நம் வீட்டு அருகே வாழும் மைனா என்று பல வகைகள் உள்ளது.

2.நாம் பொதுவாக பார்க்கும் நாகணவாய் எல்லாவற்றையும் சாப்பிடும், புழு, வெட்டுக்கிளி,மனிதர்கள் உணவுகள் என்று எதையும் விடாது.

3.பெரும்பாலும் ஜோடியாகவே காணப்படும் பறவையான இவை உடல் பழுப்பு நிறத்திலும் கண் அருகே மஞ்சள் திட்டும்,கால் மற்றும் அலகு மஞ்சள் நிறத்திலும் காணப்படும்.

4.மனிதர்கள் அருகில் வாழக்கூடிய ஒரு சில பறவைகளில் இவையும் ஒன்று.


                                                -தொடரும்

                                                                      
                                                                      -செழியன்
முதல் பாகம்

http://birdsshadow.blogspot.in/2016/05/1.html
                                                           

உங்கள் கருத்துக்கள் அடுத்த பாகத்திற்கு பயனுள்ளதாக இருக்கும்:
 

lapwing2010@gmail.com.


Monday, 30 May 2016

பட்டினபாக்கத்தில் 45 நிமிடம்



பட்டினபாக்கதில் உள்ள நீர்நிலையை, குட்டை அல்லது குளம் என்று அழைக்க வேண்டுமா என்று தெரியவில்லை. இன்று காலையில் வந்த நாளிதழில் பட்டினப்பாக்கம் ஏரியில் வெயிலையும் பொருட்படுத்தாமல் இறை தேடும் கூழைகடாக்கள் என்று படத்துடன் செய்தி வெளிவந்ததையொட்டி பைனாகுலர், கேமரா, குறிப்பு நோட்புக் எடுத்துகொண்டு கிளம்பிவிட்டேன். பட்டினப்பாக்கம் சென்று வண்டியை நிறுத்தி அங்குள்ள ஆட்டோ ஓட்டுபவர்களை கேட்பதுதான் நன்று என்று பட்டினப்பாக்கம் ஏரி எங்கு இருக்கிறது என்ற என்னுடைய கேள்விக்கு? ஏரியா? என்று அவர்கள் இழுக்கும்பொழுதே தெரிந்துவிட்டது இங்கு ஏரியெல்லாம் இல்லை என்று அதேயே அவர்களும் சொன்னார்கள்.

நான் குளம்,குட்டையாவது இருக்கிறதா என்றேன் முன்னே சென்று, சிக்னல் இடது பக்கம் திரும்பினால் குட்டை போல் இருக்கும் என்றார்கள்.சொன்னது போலவே இருந்தது ஆனால் ஒரே ஒரு பறவைகளும் அதில் இல்லை. அங்கு இருந்த ஒயின் ஷாப் முன்பு நிறைய மனிதர்கள் நின்று கொண்டிருந்தார்கள். ஒயின் ஷாப் எல்லாம் மதியம் பன்னிரண்டு மணிக்குதான் திறக்கும் என்பது அப்பொழுதுதான் நினைவுக்கு வந்தது. நான் அங்கு இருந்தபொழுது மணி 12.15pm.

அதையும் தாண்டி சென்றேன் கடல் வந்துவிட்டது இதற்குமேல் செல்ல முடியாது என்ற காரணத்தால் திரும்பி வந்தவழியாக வந்து மெயின் ரோட்டுக்கு வந்து நின்று, பாலத்தின் இடது பக்கம் உள்ள நீர்நிலையில் தான் பறவைகள் இல்லை அதனால் பாலத்தின் வலது பக்கத்தில் உள்ள நீர்நிலையில் பறவைகள் உள்ளதா என்று வண்டியை யு டேர்ன் போட்டு வந்து நின்றபொழுதே கூழைக்கடாகள் கண்ணில் தென்பட்டது இது தான் நாளிதழில் வந்த இடம் என்று  தெரிந்துவிட்டது.



இந்த நீர்நிலையை சுலபமாகவே கண்டுபிடிக்கலாம்.ஏரி என்று கேட்டதால் சுற்றவேண்டி வந்தது. சாந்தோம் சர்ச்ல் இருந்து வரும்பொழுது பட்டினப்பாக்கம் சிக்னல் தாண்டி வரும் பாலத்தின் அடியில் உள்ள நீர்நிலைதான் பறவைகள் உள்ள இடம். பலத்தின் இடது புறத்தில் பார்க்காமல் வலது புறம் வந்து நீர் நிலையை பார்த்தல் போதும்.
ஏறக்குறைய நாற்பத்தைந்து நிமிடங்கள் மேல் நின்று பறவைகளை நோக்கியதில் பதிமூன்று பறவைகளை வரை குறிப்பெடுக்க முடிந்தது.

1.கூழைக்கடா (Pelican)- 17 Nos

2.மஞ்சள் மூக்கு நாரை (Painted Stork)- 1 No

3.சிறிய கொக்கு (Little Egret)-10 Nos

4.பவள கால் உள்ளான் (Black Winged Stilt)- 1 No

5.தாழைக்கோழி (Common Moorhen)- 1No

6.நீலத் தாழைக்கோழி (Purple Swamphen)- 4 Nos

7.சிகப்பு ஆள் காட்டி பறவை (Red-Wattled Lapwing)- 1 No

8.வென்மார்பு இலைக்கோழி (White Breasted Water Hen)- 1 No

9.முக்குளிப்பான் (Little Grebe)- 1 No

10.குயில் (Koyel)- 3Nos பறந்த நிலையில் பறவை

11.செம்போத்து (Pheasant Coucal)- 1 No பறந்த நிலையில் பறவை

12.சிறிய நீர்க்காகம்(Little cormorant)-1 No பறந்த நிலையில் பறவை

13.மாட புறா (Blue Rock Pigeon) பறந்த நிலையில் பறவை

                                                                      -செழியன்





Thursday, 19 May 2016

பறவை நோக்குதல் : புதிய தொடர் -1



பொழுதுபோக்கில் இவற்றையெல்லாம் சேர்க்கலாம்- சினிமாவுக்கு போவது, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது, விஷயமே இல்லாமல் பக்கத்து வீட்டு மனிதர்களுடன் பேசிக்கொண்டிருப்பது, சும்மாவே உட்கார்ந்திருப்பது இவையெல்லாம் அன்றைய பொழுதை .... எப்படியாவது போக்க வேண்டும் என்று பெரும்பாலானோர் செய்து கொண்டிருப்பது. இவற்றில் பறவை நோக்குதலை சேர்க்கலாமா என்றால்? கண்டிப்பாக சேர்க்கலாம். ஆரம்பத்தில் பொழுதை போக்கவாது பறவைகளை பாருங்கள் பிறகு அவை உங்களின் அன்றாட செயல்களில் ஒரு முக்கிய இடத்தை பிடிக்கும்.
பறவைகளை ஏன் பார்க்க வேண்டும் அதனால் என்ன நன்மை என்று நீங்கள் நினைத்தால்? வேலைக்கு போனால், சம்பளம் என்ற நேரடியான பலன் இதில் இல்லைதான் ஆனால் நம் வாழ்க்கை முறையை சம விகிதத்தில் கொண்டு செல்வதில் (உதாரணமாக பூச்சிகளை கட்டுபடுத்துவதில்) முக்கிய பங்கு பறவைகள் வகிக்கிறது.யோசித்து பாருங்கள் மனிதர்கள் எங்களை சுடுகிறார்கள் என்று பறவைகள் நான்கு நாட்கள் பூச்சிகளை சாப்பிட மாட்டோம் என்று ஸ்ட்ரைக் செய்தால் நம் நிலை?
வீட்டை விட்டு வெளியே வரமுடியுமா? அப்படியே வந்தாலும் நம்மை சுற்றி  பூச்சிகளே பறந்து கொண்டிருக்கும் அவையே நாள் ஆக, நாள் ஆக பூச்சிகளின் தேசத்தில் தான் நாம் வாழ வேண்டி வரும். வாழ முடியுமா? இந்த இடத்தில பறவை மனிதர் என்று அழைக்கபடும் சலிம் அலி சொன்னது நினைவுக்கு வருகிறது- “மனிதர்கள் இன்றி பறவைகள் வாழும் ஆனால் பறவைகள் இன்றி மனிதனால் வாழமுடியாது”.
பெரும்பாலும் பறவை நோக்குதல் புத்தகங்களில் பல்வேறு பறவைகளை பற்றி படத்துடன் கொடுத்து அவற்றின் சிறிய அறிமுகங்கள் இருக்கும். ஆனால் இந்த தொடர் சிறிது மாறுபட்டு கீழ் கண்டவாறு எழுதலாம் என்று நினைத்திருக்கிறேன். கொஞ்சம் விரிவாக எல்லாவற்றையும் சொன்னால் புதியவர்களும் பறவை நோக்குதலில் ஈடுபாடு ஏற்பட வாய்புண்டு என்ற எண்ணம்தான். அதனால் எனக்கு தெரிந்த மொழிலியே எழுதுகிறேன்.   

பறவை நோக்குதல் என்ற இந்த தொடரில்:

1.பறவைகளின் வகைகள் மற்றும் குறிப்புகள் 

2.பறவை பார்ப்பதற்க்கான நெறிமுறைகள் மற்றும் காலநேரம் 

 3.எது சிறந்த பைனாகுலர்

4.பறவை சம்பந்தமான புத்தகங்கள் மற்றும் இதழ்கள் 

5.பறவை சங்கங்கள்

6.தமிழ்நாட்டின் பறவை சரணாலயங்கள் 

7.இந்திய பறவை சரணாலயங்கள்

8.பறவைகள் இடமான-ஏரி-குளம்-கழிமுகங்கள்-சதுப்புநிலங்கள்

9.பறவைகள் பற்றிய படிப்புகள்
 
10.பறவை நிபுணர்களின் பேட்டிகள்

11.பறவை மனிதர்களின் சந்திப்புகள் 

12.பறவை இணையதளங்கள்-தமிழ்/ஆங்கிலம்  

13.கேள்வி-பதில் 

14.IUCN - RED LIST-BIRDS (அழிவு நிலையில் உள்ள /அழிந்து போன  
  பறவைகள்)

இவற்றை எல்லாம் நாம் தொடர்ச்சியாக அடுத்தடுத்த கட்டுரையில் பார்ப்போம். பறவைகளின் வகைகளை மட்டும் கொடுத்தால் படிக்க போர் அடித்து விடும் என்பதால் எல்லாவற்றையும் கலந்தே எழுது வேண்டும் என்று நினைத்து கொண்டிருக்கிறேன்.

பறவை பார்த்தல் என்று சொல்லாமல் ஏன் பறவை நோக்குதல் என்று  சொல்கிறார்கள் என்ற கேள்வியை நாமே கேட்டுக்கொண்டு அதற்கான பதிலை பார்ப்போம் அங்கே ஒருத்தர் நிற்கிறார் அவரை பாருங்களேன், பிள்ளைகளா தெருவில் யானை போகுது வந்து பாருங்கள் என்று சொல்லுவோம். இதில் ஒரு சில நிமிடங்களில் முடிந்து விடுவதை நாம் பாருங்கள் என்று சொல்லுவோம் அவற்றை பற்றி கேட்டால் (அதாவது அந்த ஆளை அல்லது யானையை பற்றி) நமக்கு எதுவும் தெரியாது.ஏன் என்றால் ஒரு சில நிமிடங்களில் என்ன சொல்லிவிட முடியும் அதே அந்த ஆளை அல்லது யானையை ஐந்து நாள் பின் தொடர்ந்து செல்லுங்கல், ஐந்து நாள் முடிவில் அதே கேள்விக்கு நம்மிடம் நிறைய பதில் இருக்கும்.இதை தான் பார்ப்பதற்கும் நோக்குவதற்கும் உள்ள வித்தியாசம்.
பறவையை ஒரு சில நிமிடங்களில் பார்த்தால் அவற்றை பற்றி ஒன்றும் தெரியாது அதே அவற்றை தொடர்ந்து நோக்கும்போது நிறையை தகவல்கள் நமக்கு கிடைக்கும் இவ்வளவுதான் வித்தியாசம்.அதனால்தான். இதை ஆங்கிலத்தில் BIRD WATCHING என்று சொல்லுகிறார்கள், BIRD SEEING இல்லை.
பறவை பார்ப்பதை யார் ஆரம்பித்தார்கள் என்று யோசித்தால் இதற்கு முன்னோடி ஆங்கிலேயர்கள் என்பதே முற்றிலும் சரி(அவர்களின் பெயர்களை எல்லாம் இப்போதைக்கு தவிர்த்து விடுகிறேன்) அதன் பிறகே இந்தியாவில் இவை பரவ ஆரம்பித்தது.ஆங்கிலேயர் இந்தியாவை விட்டு சென்று அறுபத்து ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் இன்றும் பறவை நோக்குதல் என்பது இந்தியாவில் மேல் தட்டு மக்கள் விஷயமாகவே உள்ளது.
பறவைகளை பார்க்க அதற்கென்று நேரம் ஒதுக்கி சென்றிருக்கிறீர்களா? என்று கிராமங்களில் உள்ளவர்களிடம் கேட்டுபாருங்கள். இதற்கான பதில்-இதற்கெல்லாமா நேரம் ஒதுக்குவார்கள் வேறு வேலை இல்லை எங்களக்கு என்றும் அவர்களுக்கு தெரிந்த பறவைகள் பற்றி அந்த வட்டார பெயரில் சொல்லுவார்கள் அதை தவிர மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளவதோ அதை பற்றி விவாதிப்பதோ, பறவைகளை பாதுக்காக்க வேண்டும் என்பதோ அவர்களுக்கு தெரியாது அதனால் பறவை அவதானித்தால் இன்றும் இந்தியாவில் மேல் தட்டு மனிதர்களின் செயலாகவே உள்ளது.
பறவைகள் சம்பந்தமாக வெளிவரும் இதழ்கள்,பத்திரிகைகள்,புத்தகங்கள் மற்றும் இணையதளங்கள்,செயல்படும் சங்கங்கள் அனைத்தும் ஆங்கிலத்திலேயே உள்ளது. அதனால் ஒரு பாமர மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் கொஞ்சம் சிரமமே.தமிழில் ஒரு சில முயற்சிகள் நடந்திருக்கிறது ,நடந்துகொண்டிருகிறது ஆனால் மிக மிக குறைவே.இப்பொழுதுதான் காடு என்ற இரு மாத இதழ் வெளிவருகிறது மற்றும் காட்டுயிர் என்ற இதழும் வருகிறது அனால் காட்டுயிர் இதழிலேயே ஒரு வரி இப்படி செல்கிறது பொருளாதாரம் பல படும்பொழுது காட்டுயிர் இதழ் வரும் ஆனால் தொடர்ச்சியாக வருவது சிரமமே என்ற வரியும் உள்ளது. அதை தவிர தமிழில் வேறு எதுவும் இல்லை என்றே தெரிகிறது.மக்களுக்கு ஆர்வம் இருந்தால் தானே பறவை இதழ்கள் விற்பனையாகும்.
காகத்தின் கூடு 


ஒரு சிறு அறிமுகத்துடன் முடிப்போம் முதல் பாகத்தை:

நம் வீட்டை சுற்றியிருக்கும் பறவைகளை நாம் இதுவரை முழுவதும் பார்த்து இருக்க மாட்டோம் என்பதே உண்மை.வேண்டுமென்றல் நீங்கள் ஒரு நிமிடம் யோசித்து எழுதி  பாருங்கள் உங்கள் வீட்டை சுற்றி என்ன என்ன பறவைகளை இதுவரை பார்த்து இருக்கிறோம் என்று. பிறகு இரண்டு நாள் உன்னிப்பாக அதே வீட்டை சுற்றி இருக்கும் பறவைகளை பாருங்கள் முதலில் சொன்ன பறவைகளின் எண்ணிக்கை விட இப்பொழுது இரண்டு அல்லது மும் மடங்கு எண்ணிக்கை உயர்ந்து இருப்பதை கான முடியும்.
இவை உண்மையும் கூட பெரும்பாலும் நம் கண்களுக்கு புலப்படுவது காகம்,தவிட்டு குருவி,மைனா,புறா,சில சமையும் சிட்டு குருவி, வாத்தை நம் தெருவில் யாராவது ஓட்டி செல்லும்பொழுது, நம் தலை எப்பொழுதாவது மேல் நோக்கி நிமிர்ந்தால் “பருந்து” இப்படி கை விட்டு என்னு அளவுக்கே பறவைகளின் எண்ணிக்கை இருக்கும்.அதற்கென்று சிறுது நேரம் ஒதுக்கி உன்னிப்பாக பறவைகளை கவனியுங்கள் பிறகு எண்ணிக்கையில் நிறைய மாற்றம் தெரியும்.
முதலில் நம் வீட்டை சுற்றி இருக்கும் பறவைகளை முழுவதும் பார்த்து விட்டு பிறகு வேறு இடங்களுக்கு செல்லுவோம்.இந்தியாவில் சிறந்த காட்டுயிர் எழுத்தாளர் தியடோர் பாஸ்கரன் அவர்கள் அவர் வீட்டை சுற்றி இதுவரை 33வகை பறவைகள (புள்ளினங்களை) பார்த்துள்ளதாக ஒரு கட்டுரையில் பதிவு செய்திருக்கிறார்.இப்பொழுது இதை விட அதிகமாக பார்த்திருக்க கூடும். அதனால் நம் வீட்டை சுற்றி இருக்கும் பறவைகளின் எண்ணிக்கை முழுவதும் நமக்கு தெரிந்து இருக்க வேண்டும்.
பறவைகளை பார்க்ககூடிய இடங்கள் என்று -தமிழ்நாடு,மற்றும் இந்தியாவில் நிறைய உள்ளது.உதாரணமாக குளம்,ஏரி,ஆற்று படுகைகள்,சதுப்பு நிலங்கள்,காடு,மலை பிரதேசங்கள்,சரணாலயங்கள்,வயல் வெளிகள்,கழிமுகங்கள்,புதர் காடுகள், மனிதன் செயற்கையாக உருவாக்கிய மின் கம்பங்கள், இவ்வளவு இடங்கள் இருப்பதால் நம்மால் சுதந்தரமாக எல்லாவற்றையும் பார்த்து ரசிக்க முடியும்.அதற்கு முன் நம் வீட்டை சுற்றி இருப்பதை முதலில் பார்த்து விடுவோம்.

உங்கள் வீட்டை சுற்றி மேலே சொன்னவற்றில் என்ன என்ன  இடங்கள் உள்ளது என்று ஒரு லிஸ்ட் போடுங்கள்.பிறகு அங்கு சென்று பார்த்து குறிப்பெடுங்கள்.அதற்கு முன் நிறைய பறவைகளை நம்மால் இனம் காணமுடியாது மற்றும் அவற்றின் பெயரும் நமக்கு தெரியாது என்பதும் மிக பெரிய குறையாக இருக்கும்.அதனால் பறவை பெயர்கள் தெரிந்தவர்களுடன் சென்றால் அந்த குறை நீங்கி விடும்.அப்படி யாரவது இல்லையென்றால் அதற்கும் பதில் உள்ளது. பறவை சங்கங்கள் உள்ளது அவற்றில் சேர்ந்து தெரிந்து கொள்ளலாம். கிராமத்தில் இருப்பவர்கள் அருகில் இந்த சங்கங்கள் இருக்காது அதனால் நீங்களே உருவாக்கி மற்றவர்களுக்கு சொல்லிகொடுக்கலாம். அதற்கு முன் தமிழில் பறவை அறிமுக புத்தகங்கள் உள்ளது மற்றும் முடிந்தவர்கள் ஆங்கிலத்தில் நிறைய பறவை புத்தகங்கள் உள்ளது அதை படித்து தெரிந்து கொள்ளவது சிறந்ததாக இருக்கும்.

  நம் வசதிக்காக பறவைகள் இப்படி வகைப்படுத்தலாம்  :

- நம் வீடு, வயல்வெளி மற்றும் புதர் சுற்றி இருக்கும் பறவைகள்
 காகம்,குருவி,மைனா,கொக்கு (காட்டில் வாழும் மைனாவும் உண்டு)

- நீர் நில பறவைகள்:
 (ஏரி,குளம்,ஆறு,சதுப்பு நிலங்கள்,கழி முகங்கள்)
 வேடந்தாங்கலில் உள்ளவை எல்லாம் நீர் நில பறவைகள்.

- காடு மற்றும் மலை பிரதேச பறவைகள்-
நிறைய பறவைகளை இங்கு காணமுடியும் அவை எல்லாம் பிறகு  
பார்ப்போம்.மேலே சொன்ன இடங்களில் நிறைய உட்பிரிவு இடங்கள் இருந்தாலும் இவையே இப்போதைக்கு போதும்.

இந்த தொடர் புதியவர்களுக்கே என்பதால் பறவை நோக்குபவர்களுக்கு(BIRD WATCHER) இது தெரிந்த விஷயமாகவே கடந்து செல்வீர்கள்.தமிழில் தொடரை ஆரம்பிப்போம் எப்படி செல்கிறது என்று,வரும் மின் அஞ்சல் மற்றும் பின்னுட்டங்களை வைத்து யோசித்து செயல்படலாம் என்றும் அல்லது இவையே சரியாக இருந்தால் அப்படியே தொடரலாம் என்ற நினைப்பும் இருக்கிறது. 

 முடித்து கொள்ளுங்கள் முதல் பாகத்தை என்று நீங்கள் சொல்வது 
 தெரிகிறது அதனால் .............
                                                            -தொடரும் 

                                                                                                                          -செழியன்