Sunday 1 April 2018

பறவை நோக்குதல்- 14 (Famous Bird watchers)


எவ்வளவு நாள்தான் பறவைகளை பற்றியே பேசி கொண்டிருப்பது. அதனால் இந்த கட்டுரையில் பறவையாலர்களை பற்றி கொஞ்சம் பார்த்துவிடுவோம்.

நமக்கு பறவை பார்ப்பது ஒரு வித பொழுதுபோக்கு என்று கற்றுகொடுத்தது ஆங்கிலேயர்களாக இருக்கலாம். ஆனால் அதற்கு முன்பே நம் முன்னோர்கள் மிக நுணுக்கமாக பறவையை பார்த்து உள்ளனர் என்பதை முண்டக்கன்னி அம்மன் மேல் சத்தியம் செய்யலாம்.

பார்த்தது மட்டும் அல்லாமால் ஐம்பதுக்கும் மேற்பட்ட பறவைகளை பாடல்கள் வழியாக பதிவும் செய்து வைத்து உள்ளார்கள்.  

பள்ளி பாடபுத்தகத்தில் நாம் படித்திருப்போம் ஆனால் நினைவில்இருப்பதில்லை. ஒவ்வொரு பறவைக்கும் வட்டார பெயர் என்று ஒன்று உண்டு. அந்த அந்த பகுதிகளில் செல்லும்பொழுது தெரிந்து கொள்ளாலாம்.




உதாரணத்திற்கு சிலவற்றை மட்டும் பார்ப்போம் :

நம் அனைவருக்கும் தெரிந்த நாராய் நாராய் பாடல் :

1. செங்கால் நாரை - நாராய் நாராய் செங்கால் நாரைய் 

(White Stork)            பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன 

                    பவளக் கூர்வாய்ச் செங்கால் நாராய் சத்திய முற்றப் புலவர்                                                                    (தனிப்பாடல்)

2.கூகை ஆந்தை -   உணவில் வருங்கூட் டுள்ளகத் திருந்து 

(Barn Owl)                   வளைவாய் கூகை நண்பகற் குழறவும் – பட்டினப்பாலை  267-68 பாடல்
 

3.வானம்பாடி         வானம்பாடி வறங்களைந் தானாது 

(Sky Lark)             அழிதுளி தலைஇய புறவில் காண்வர 

                      வானர மகளோ நீயே – ஐந்குறுநூறு- 146 பாடல்  
               
இது போல் இன்னும் நிறைய பாடல்கள், விளக்கங்களுடன் உள்ளது. தேவைபடுபவர்கள் தொடர்புகொள்ளுங்கள். 

பறவை நோக்குதலில் சில முக்கியமான பறவையாளர்களை பற்றி கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டும். காரணம் இந்தியா, தமிழ்நாடு முழுவதும் பறவை, விலங்குகளை பார்ப்பதை அறிமுகபடுதியவர்கள்.

ஹுயூம்- Allan Octavian Hume  (பிரிட்டன்) :

காங்கிரஸ் என்று சொன்னவுடன் நினைவுக்கு வருவது மகாத்மா காந்தி, நேரு, காமராஜர் போன்றவர்களே. (இப்பொழுது இருக்கும் அரசியால்வாதிகளை எப்படி யோசித்தாலும் நினைவுக்கு வரமாட்டேன்கிறது) ஆனால் இவர்கள் இருந்த காங்கிரசை நிறுவியவர்களில் ஒருவர் பிரிட்டிஷ் அதிகாரியாவர். ஆமாம் ஆலன் ஆக்டாவியன் ஹுயூம் என்ற பிரிட்டிஷ் அதிகாரி.
ஆனால் எனக்கு இன்னொரு முகம் உண்டு என்ற வசனம் இவருக்கு கண்டிப்பாக பொருந்தும். அந்த முகம், இவர் ஒரு மிக சிறந்த பறவையாளர்  ஆகும்.

கலெக்டராக இந்தியாவுக்கு வந்த ஒரு பிரிட்ஷ் அதிகாரி, இந்திய தேசிய காங்கரசை நிறுவியவர் மற்றும் பறவையாளர் என்ற மூன்று முகத்தில், தன் வாழ்கையின் பெரும்பகுதி தனது மூன்றாவது முகத்தை கொண்டே வாழ்ந்தார்.  பறவை பார்பதிலும், பறவைகளை சேகரிப்பது மற்றும் முட்டை, கூட்டை சேகரிப்பதிலும் வாழ்நாள் கழிந்தது. தாவரவியல்(Botany) பிரிவிலும் ஆர்வம் கொண்டிருந்தார்.

ஆங்கிலத்தில் Stray Feathers” (“சிதறிய இறகுகள்”) என்ற பத்திரிக்கையை நடத்தினார். இந்தியாவில் பறவைகள் பற்றி வெளிவந்த முதல் பத்திரிகை. அறுபதாயிரதிற்க்கும் மேற்பட்ட பறவைககளை பதபடுத்தி இங்கிலாந்துக்கு அனுப்பினார். எண்ணற்ற பறவை முட்டைகள், கூடுகள் என்று பறவைகள் பற்றிய அவரின் ஆர்வம் மிக மிக அதிகமாக இருந்தது.
நிறைய பறவைகளுக்கு இவருடைய பெயரில் அழைக்கபடுகிறது. 
   
Hume's treecreeper

அதனால்தான் இவரை நாம் கண்டிப்பாக தெரிந்து கொள்ளவேண்டும்.

சாலிம் அலிSalim Ali  (இந்தியா - மகாராஷ்டிரா) :

இந்திய பறவையாளர்களின் தந்தை என்ற நிலையில் இருப்பவர். இவர் எழுதிய “இந்திய பறவைகள்” (Birds of India) என்ற புத்தகம் பறவையாலர்களின் கீதை, பைபிள், குரான் இவற்றில் உங்களுக்கு பிடித்த ஒன்றை உதாரணமாக எடுத்து கொள்ளலாம். அந்த அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்த ஒன்று.

பறவைகளை சுடுவது, பிடிப்பது என்று வாழ்கையை துவக்கிய சாலிம் அலி தான் சுட்ட ஒரு பறவை (மஞ்சள் தொண்டை குருவி) தன் மடியில் இறந்தபிறகு இவரின் பார்வை அங்கிருந்து மாற தொடங்கியது. அதன் பின் பறவைகள் பற்றி தெரிந்துகொள்ள தொடங்கினார். 

மக்களால் நான், மக்களுக்கவே நான் என்பது போல் பறவைகளால் நான் மற்றும் பறவைகளுக்காகவே நான் என்று உண்மையாகவே வாழ்ந்தார். 

பறவைகளுக்கு என்று பழமையான அமைப்பான பம்பாய் இயற்கை சங்கத்தில் (Bombay Naturalist Society) சேர்ந்து, நிறைய கற்று கொண்டார். பின்பு அந்த சங்கத்தில் உயர்ந்து பொறுப்புக்கு சென்று பறவைகள் பற்றிய அணைத்து தகவலகளை சேகரிக்க அதிகம் உழைத்தார்.

இவரின் புகழ் பெற்ற வாசகம் – “மனிதர்கள் இன்றி பறவைகள் வாழும். ஆனால் பறவைகள் இன்றி மனிதர்கள் வாழமுடியாது

Himalayan Forest Thrush
2016ஆம் ஆண்டு இந்தியாவின் வடகிழக்கு பகுதியில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்டு புதிய பறவை இனத்திற்கு சாலிம் அலி பெயரை அறிவியல் பெயராக வைத்து கவுரபடுத்தி உள்ளனர்.

Bird Name : Himalayan Forest Thrush, (Zoothera salimalii,)

இதற்கு முன்பு:

தமிழ்நாடு, தேனி மாவட்டம், மேற்குதொடர்ச்சி மலை பகுதியில் உள்ள பழந்தின்னி வௌவால் ஒன்றுக்கு சாலிம் அலி பழந்தின்னி வௌவால்(Salim Ali's fruit bat) என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இவரின் வரலாறு சுருக்கமாக Link - சாலிம் அலி வரலாறு
 


மா.கிருஷ்ணன் – M. Krishnan (இந்தியா-தமிழ்நாடு) :

Right- M.Krishnan
இந்திய அளவில் சில பறவையாளர்கள் இருந்தபொழுது தமிழகத்தில் இருந்து ஓர் ஒளிகீற்று போல் தோன்றியவர் மா.கிருஷ்ணன். இன்று நாம் பேசும் பெரும்பாலான செய்திகளை எழுபதுகளில் சர்வ சாதரணமாக எழுதிவிட்டார். அதற்கு மிக சிறந்த ஒரு உதாரணம்: வெளிநாட்டில் இருந்து வலசை வரும் பறவைகள் இங்கு கூடு கட்டி குஞ்சி பொறிப்பதற்கு வருவதில்லை. உணவை தேடியும், தங்குவதற்கும் வருகிறது என்று பதிவு செய்து உள்ளார்.

தமிழில், முதன் முதலில் .விலங்கு-பறவைகள் பற்றி எழுதியவர் மா.கிருஷ்ணன் என்றே சொல்லலாம். எதையும் படித்து எழுதுவதில்லை (நான் எழுதுவது போல்) களத்துக்கு சென்று அங்கு பார்த்து, ஆராயிந்து அதன் பிறகு எழுதினர். இன்று இவருடைய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு விற்பனைக்கு உள்ளது. இவரின் கட்டுரைகள் ஒரு பக்கத்தில் மட்டுமே சுலபமாக படிக்கும் அளவுக்கு இருக்கும் அதனால் படித்துவிடுங்கள். 

நூல்கள்: 

மழைக்காலமும் குயில் ஓசையும்,

பறவைகளும் வேடந்தாங்கலும்,

 Nature's Spokesman 

Of Birds and Birdsong
 
புத்தகத்தில் இருக்கும் படங்களும் மா.கிருஷ்ணன் அவர்களே வரைந்தது. எந்த அளவுக்கு இயற்கை மேல் ஆர்வம் இருந்திருந்தால், அதாவது ஆரம்பகால படங்களில் நடித்த நடிகர்கள், பின்னணி பாடுவதற்கு வேறு ஒருவரை வைத்துகொள்ளாமல் தாங்களே பாடி நடிப்பார்கள் (T.R.மகாலிங்கம்). அது போல் மா.கிருஷ்ணன் அவர்கள் எழுதிய கட்டுரைகளுக்கு அதற்கு ஏற்ற படங்களை அவரே வரைந்துள்ளார். 

தியடோர் பாஸ்கரன் Theodore Baskaran (இந்தியா, தமிழ்நாடு)

நிகழ்காலத்தில் இவரின் எழுத்துகளை படித்தே நிறைய பேர் சுற்றுச்சூழல் பக்கம் கவனம் செலுத்திவருகிறார்கள். மா. கிருஷ்ணனுக்கு அடுத்து அதிக அளவில் எழுதிவருபவர். சமிபத்தில் இவரின் “இந்திய நாயினங்கள்” புத்தகம் மிக பெரிய அளவில் விற்பனையானது குறிப்பிடத்தக்கது. சிவில் சர்விஸ் தேர்வில் வெற்றிபெற்று தபால் துறையில் மிக பெரிய பதவியில் இருந்துள்ளார். இந்தியா, வெளி நாடுகள் என்று அணைத்து சரணாலயங்களையும் சுற்றி வந்தவர். இன்றும் உலகை சுற்றி வந்துகொண்டிருப்பவர். 

சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுதிவருவதில் முன்னோடியாக இருப்பவர்.  ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத வார்த்தை Development என்று அழுத்தமாக பதிவுசெய்தவர்.

பறவைகள், விலங்குகளின் பெயர்களை தமிழில் தனது எழுத்தில் பதிவு செய்து வருகிறார். சிங்க வால் குரங்கு என்று ஒரு கட்டுரையில் எழுதி, பின்பு ஒரு கட்டுரையில் அவற்றின் தமிழ் பெயர் சோலைமந்தி என்று அறிமுகபடுத்தினார் அந்த அளவுக்கு தமிழ் பெயர்களை நோக்கி சென்றுகொண்டிருகிறார்.

இவரை பற்றி : தியடோர் பாஸ்கரன்

நூல்கள் :

இன்னும் பிறக்காத தலைமுறைக்காக,

சோலை என்னும் வாழிடம்,

தாமரை பூத்த தடாகம்,

வானில் பறக்கும் புள்ளெல்லாம் 

The Dance of Sarus

இந்திய நாயினங்கள் ........

-செழியன்

lapwing2010@gmail.com
 

No comments:

Post a Comment