அறிவியலும், ஆன்மீகமும் இணைந்த வாழ்வை வாழ்வாங்கு வாழ்ந்தவர்கள் நம் முன்னோர்கள். இயற்கையை இறைவனாகவும், இறைவனை இயற்கையாகவும் தரிசனம் செய்த தீர்க்கதரிசிகள் அவர்கள். அதனால் தான் இறைவனை வழிபடும் ஆலயங்களில் தொடங்கி தங்கள் வாழ்வின் எல்லா அன்றாட அம்சங்களிலும் இயற்கையையும், இறைவனையும் இரண்டறக் கலந்த பரிபூரணமான வாழ்வை வாழ்ந்தார்கள். அத்தகைய உலகு போற்றும் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் உடையவர்களாக விளங்கிய நம் ஆன்றோர்கள் உருவாக்கி வைத்த இறைவழிபாடுகளிலும், சடங்கு சம்பிரதாயங்களிலும் பாலில் மறைந்திருக்கும் வெண்ணையைப்போல இயற்கையை போற்றும் மேன்மையான பண்பு சொல்லப்படாத அறிவியலுடன் இணைந்த ஆன்மீகமாக பரிணமித்து வந்தது. இதன் ஒரு அம்சமே இயற்கை பாதுகாப்புக்காகவும், சுற்றுச்சூழல் பேணலுக்காகவும் அவர்கள் மரங்களையும், காடுகளையும் போற்றி வந்தது.
மரங்கள் வளர்ப்பு பற்றியும், காடுகளைப் பேணிப்பாதுக்க வேண்டியதைப் பற்றியும் இன்று நாம் பேசி வருகிறோம். ஆனால் நவீன கண்டுபிடிப்புகள் எதுவும் நிகழாத, நூதனமான சாதனங்களின் பயன்பாடு எதுவும் இல்லாமல் இருந்த நூற்றாண்டுகளுக்கு முன்பே இறைவனை வழிபடச் செல்லும் மக்களின் மனதில் மரங்களை புனிதமாகக் கருதும் எண்ணத்தை ஏற்படுத்துவதற்காகவும், அதேபோல தங்கள் சூழலிலும் மரங்களைப் போற்றி வளர்க்க வேண்டும் என்ற உணர்வை ஏற்படுத்துவதற்காகவும் நம் முன்னோர்கள் கோயில்கள் தோறும் மரங்களை வைத்து அவற்றை திருத்தல மரங்கள் என்ற பெயரில் போற்றி வந்தார்கள். பழம்பெருமை மிக்க நம் பாரத நாட்டிற்கு விளங்கி வந்த பழமையான பெயர்களில் ஒன்று நாவலன் தீவு என்பதாகும். இதன் பொருள் நாவல் மரங்களை அதிகமாகக் கொண்ட தீவுப்பகுதியுன் அமைந்த நாடு என்பதாகும். ஆம்.. நாவல் மரங்களின் தாயகம் நம் பாரத நாடு தான். இதனால் தான் பஞ்சபூத திருத்தலங்களில் ஒன்றாக விளங்கும் திருவானைக்கா கோயிலின் திருத்தல மரமாக விளங்குவதும் நாவல் மரம் ஆகும்.
வில்வத்தை சிவனுக்குரியதாகவும், துளசியை விஷ்ணுவுக்குரியதாகவும், எருக்கையும், அருகம் புல்லையும் விநாயகருக்குரியதாகவும், தாமரை மலர்களை தேவியாருக்குரியதாகவும், அரசங்குச்சிகளையும், புரசமர இலைகளையும் மதசடங்குகளுக்குரியதாகவும் கண்ட நம் முன்னோர்கள் வாழையையும், தென்னையையும், வெற்றிலையையும், மாவிலையையும் எல்லாம் மங்களகரமானதாக இறைவனை வழிபடுவதற்கு பயன்படுத்தியது அவர்களுடைய இறையற்கையோடு இணைந்த வாழ்வுக்கு சிறிய எடுத்துக்காட்டுகளே ஆகும். மழைநீர் பாதுகாப்புக்காக கோயில்கள் தோறும் குளங்களை வெட்டி நீர் சேமிப்பை வாழ்வில் கடைபிடித்த நம் முன்னோர்கள் ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தலமரத்தையும், குளத்தையும் இறைவன், இறவியுடன் திருநாமத்தோடு இணைத்து போற்றி வந்தார்கள். இப்படி மரங்களையும், நீர்நிலைகளையும் உருவாக்கி போற்றி வளர்த்த அவர்கள் காடுகளை போற்றுவதையும் தம் தலையாய புனிதமான கடமையாகக் கருதினார்கள். அந்த வகையில் உருவானதே கோயில் காடுகள் ஆகும்.
கோயில் காடுகள் என்பன ஊருக்கு வெளியே கிராமத் தேவைகளாக, கிராமத்தை பாதுகாக்கும் தெய்வங்களுக்காக சமர்ப்பிக்கப்பட்ட இயற்கை வனங்கள் ஆகும். இந்த காடுகள் இயற்கையாகவே வளர்ந்து பெருகின. சிவன் சொத்து குலநாசம் என்பதைப் போல இந்தக் காடுகளை வெட்டுவதோ, அவற்றில் இருந்து ஒரு இலையை எடுப்பதைக் கூட பெரிய பாவமாகக் கருதினார்கள். இங்கு அந்தந்த காடுகள் அமைந்திருக்கும் அப்பகுதிகளுக்கு ஏற்ப இயற்கையாக காணப்படும் எல்லாவகை மரங்களும், செடி கொடிகளும், புதர்களும், சிறுசிறு விலங்குகளும், புழு, பூச்சிகளும் உண்மையான காடுகளில் வாழ்வதைப் போல சுதந்திரமாக பல்கிப் பெருகின. இவற்றை ஆன்மீகத்தோடு இணைக்கப்பட்ட மினி காடுகள் என்றே சொல்லலாம். ஒவ்வொருவர் எல்லையிலும் இந்தக் கோயில் காடுகள் இருந்து வந்தன.
தமிழ்நாட்டில் மட்டும் இல்லாமல் கேரளத்திலும் இவற்றுக்கு சிறப்பான இடம் சமுதாயத்தில் தரப்பட்டிருந்தது. இவற்றுக்கு அங்கு காவுகள் என்று பெயர். வல்லியூர்காவு, புத்தன்காவு என்று காவுகளை பின்னிணைப்பாகக் கொண்ட ஊர்ப்பெயர்கள் இன்றும் அங்கு விளங்கி வருகின்றன. ‘காவு தீண்டியால் குளம் வற்றும்’ என்று மலையாள மொழியில் ஒரு பழமொழியும் இருக்கிறது. காவுகள் எனப்படும் இந்தக் கோயில் காடுகள் அழிக்கப்பட்டால் குளங்களில் தண்ணீர் இல்லாமல் போய்விடும் என்பது இதன் பொருளாகும். இங்குள்ள கோயில் காடுகளில் யக்ஷி எனப்பட்டும் காளி, நாகராஜன், நாகராணி போன்ற தெய்வங்களின் உருவங்கள் வைக்கப்பட்டு வழிபடப்பட்டு வந்தன.
நம் ஊரில் கிராம தெய்வங்களான கருப்பண்ணசாமி, காளி, ஐயனார் போன்ற தெய்வங்களுடைய திருவுருவங்கள் இந்தக் கோயில் காடுகளில் காணப்படுகின்றன. இந்த காடுகளில் பாம்பு புற்றுகளும், கறையான் புற்றுகளும் உட்பட ஆல், அரசு, வேம்பு, புளி, மா, தென்னை போன்ற மரங்களும், தாழை, செம்பருத்தி, துளசி, அருகு போன்ற செடி, புல் வகைகளும் காணப்படுகின்றன. இந்துமத சடங்குகளுக்கு மிகவும் பயன்படும் புல்வகையான தர்பையும், அதிலும் சிறப்பாக வழவழப்பாக சடங்குகளின் போது பயன்படுத்துபவரின் கையை அறுக்காமல் மென்மையாக இருக்கும் சிறப்புவகை புல்லான விசுவாமித்திரம் என்ற புல்வகையும் இந்தக் கோயில் காடுகளில் இயற்கையாகவே செழித்து வளர்கின்றன. இந்தக் காடுகளைச் சுற்றிலும் ஒரு நீர்நிலையாக ஒரு சிறிய குளமாவது இருக்கும். இதில் நீர்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வரும் வகையில் இவை அமைந்துள்ளன.
அணில், ஔணான், பறவைகள் முதல் குரங்கு வரை எல்லாவிதமான விலங்கு வகைகளும் இங்கு சுதந்திரமாக வாழ்ந்து வருகின்றன. இத்தகைய கோயில் காடுகளில் குறிப்பாக எல்லா கிராமங்களிலும் கிராம எல்லையை ஒட்டி பிடாரி, வீராசாமி போன்ற கிராம தெய்வங்களுடைய கோயில்களுடன் அமைந்திருக்கும் இந்தக் கோயில் காடுகளில் உள்ள நீர் நிலைகள் அங்குள்ள காடுகள் அழிக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதால் எப்போதும் வற்றாமல் வருடம் முழுவதும் தண்ணீர் நிறைந்து காணப்படும், இதனால் காடுகளை சுற்றிலும் அமைந்திருக்கும் ஊரிலும் தண்ணீர்ப்பற்றாக்குறை ஏற்படாமல் இருந்து வந்தது. சுற்றுச்சூழல் ஆதார மரம் (environmental base tree) எனப்படும் ஆலமரம் அதிகமாகக் காணப்படும், காரணம் ஆலமரம் இருக்கும் இடத்தில் தாவரங்கள் செழித்து இயற்கை சமநிலையுடன் இருக்கும் என்பதால் தான். பலவகை பறவைகள், விலங்குகள், பூச்சிகள் ஆலமரத்தை தங்கள் இருப்பிடமாகக் கொண்டு வாழும் இயல்புடையது ஆகும். இதே போல இந்தக் காடுகளில் யானை சுற்றுச்சூழல் விலங்கு (environmental base animal) இங்கு சிறப்பாக காணப்படுகிறது. யானை உள்ள இடத்தில் காடுகள் நன்கு பராமரிக்கப்படுகிறது என்பதாலும், அப்படிப்பட்ட பகுதிகளிலேயே அவை வாழும் என்பதாலும் யானைகள் அவ்வாறு அழைக்கப்படுகின்றன.
இந்தக் கோயில் காடுகள் எப்போது தோன்றியது என்பது அறிவியல் ஆய்வாளர்களால் துல்லியமாகக் கூற முடியாத ஒன்றாகும். அறிவியலாளர்களால் இதைப் பற்றிய ஆய்வுகள் இன்னும் அதிகம் செய்யப்பட வேண்டியதுள்ளது. ஆப்பிரிக்காவில் தோன்றியதாகக் கூறப்படும் மனித இனம் நாகரீகம் அடைந்தபோது, இயற்கையை இறைவனாகக் கண்டு வழிபடத் தொடங்கிய போது இந்தக் காடுகளும், இவற்றின் நடுநாயகமாக கிராம எல்லைக்கோயில்களும் தோன்றியிருக்கலாம் என்று கூறலாம்.
சி.பி.ராமசாமி ஐயர் சுற்றுச்சூழல் ஆய்வு கல்வி மையத்தின் ஆய்வுகளின் படி, இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் மத்தியபிரதேசம், மேற்கு வங்காளம், மகாராட்டிரம் உட்பட எல்லா மாநிலங்களிலும் கோயில் காடுகள் காணப்படுகின்றன. தென்னிந்தியாவிலும் இவை சிறப்பாக மக்களுடைய சமூக வாழ்வில் இன்றியமையாத இடம் பெற்றுள்ளன. கிராம எல்லைப் பகுதிகளில் கிராம தெய்வங்களை மையமாகக் கொண்ட இந்த கோயில் காடுகள் சி.பி.ராமசாமி ஐயர் ஆய்வு மையத்தின் கணக்கீடுகளின் படி இந்தியாவில் எல்லா மாநிலங்களிலும் ஏறத்தாழ 1 முதல் 1.5 லட்சம் வரை கோயில் காடுகள் உள்ளன. தமிழ்நாட்டில் இதுவரை கண்டறியப்பட்டுள்ள கோயில் காடுகள் ஆயிரத்துக்கும் மேற்பட்டவைகள் ஆகும். இவற்றின் குறைந்தபட்ச பரப்பளவு ஒரு ஏக்கராக உள்ளது.
என்றும் வற்றாத குளங்குட்டைகள் இந்த கோயில் காடுகளையொட்டி இருந்ததால் நிலத்தடிநீரின் மட்டம் எப்போதும் நல்ல அளவுக்கு பேணப்பட்டு வந்தது. இதனால் இந்தக் காடுகளைச் சுற்றியுள்ள கிராமங்களில் கடும் கோடையிலும் தட்டுப்பாடு இல்லாமல் தண்ணீர் கிடைத்து வந்தது.
-இந்த கோயில் காடுகள் இன்று நம் அதிகம் பேசிவரும் பல்லுயிர் பரவல் (biodiversity) மற்றும் இயற்கை சமநிலை ஆகியவற்றைப் பேணிப் பாதுகாப்பதற்கும் பெருமளவில் துணை புரிந்தது.
அரியவகை மூலிகைச் செடிகள் முதல் அற்புதமான மரங்கள் வரை வளரும் இந்தக் காடுகள் சமீபகாலமாக அழிந்து வருகின்றன என்பது வருத்தம் அளிக்கக்கூடிய விஷயம் ஆகும். கிராம தெய்வங்களின் திருவுருவங்கள் மட்டுமே இருந்த இந்தக் கோயில்கள் தற்போது வேண்டுதல் என்ற பெயரிலும் பிரார்த்தனை என்ற பெயரிலும், நேர்ந்து கொள்ளுதல் என்ற பெயரிலும் அங்குள்ள காடுகள் அழிக்கப்பட்டு பெரிதாக்கப்படுகின்றன. இது நடைபெறாமல் தடுக்கப்பட வேண்டும். கோயில் காடுகள் பாதுகாக்கப்பட்டால் அந்த ஊரும் அதன் சுற்றுச்சூழலும், இயற்கைச் சூழ்நிலையும் அதனால் பருவநிலையும்கூட பாதுகாக்கப்படும். ஒவ்வொரு கிராமமும் இந்த கோயில் காடுகளை போற்றி பாதுகாத்தால் ஊரும், உலகமும் வளமோடும், நலமோடும் நீண்டநாள் வாழவழி ஏற்படும். அனுபவத்தையே அறிவாகக் கொண்டு அறிந்ததை தங்கள் வாழ்வாக வாழ்ந்த நம் முன்னோர்கள் அரிய தீர்க்க தரிசனத்தோடு போற்றி வந்த இந்தக் கோயில் காடுகளை அழியாமல் பாதுகாப்பது நம் பொறுப்பும் ஆகும். ஆடம்பர கோலாகலங்களும், கொண்டாட்டங்களும் மட்டுமே வழிபாடாகி விடமுடியாது என்பதை புரிந்து கொண்டு இயற்கையில் இறைவனைக் கண்டு, உணர்ந்து வாழ்வாங்கு வாழ்ந்த நம் முன்னோர்கள் காட்டிய நல்வழியில் நாமும் நடந்து கோயிலையும், கோயில் காடுகளையும் போற்றுவோம். பாதுகாப்போம்.
-சிதம்பரம் ரவிசந்திரன்

No comments:
Post a Comment