Thursday, 1 January 2015

கூடு (காக்கை சிறக்கினிலே)


    ஒற்றையாக அவர்களைப் பார்த்ததில்லை.  எப்போதும் ஒன்றாகத்தான்..  ஒன்றாகவே ஜென்மம் எடுத்தவர்கள் போல..  ஒரே கூட்டில் பிறந்தவர்கள்.  உட்புறங்களில், மைதானங்களில், மரத்தடிகளில், தோட்டங்களில் கவனமாக, எச்சரிக்கையோடு மெல்ல மெல்ல அடிமேல் அடிவைத்து, கொத்திப் பொறுக்கியும், பாய்ந்து பாய்ந்து எதையோ பிடித்தும் அந்த சமயங்களில் மட்டுமே தெரியும் சிறகுகளின் புள்ளிகளோடு, ஒவ்வொரு நொடியையும் சுவைத்து, ஆபத்து என்று உணர்ந்தால் பட்டென்று இறக்கைகளை விரித்து பாய்ந்து உயரத்திற்கு பறந்துசெல்லும் மைனாக்கள்.. 

    ஜன்னலுக்கு அருகில் எழுத்துமேசையில் வெற்று காகிதங்களுடன் இருந்த என் முன்னால் எரியும் வெய்யிலின் மணத்துடன், அவர்கள் பறந்து வந்து உட்கார்ந்தார்கள்.  அவற்றின் உதடுகள் காய்ந்து போயிருந்தன  தாகத்தால்....  கண்களில் எதையோ தேடும் பாவம்..  வீட்டின் ஷெட்டில், மேற்கூரையின் அடியில் அவனும், பின்னால் அவளும்..  ஏறியும், இறங்கியும்..  மறுபடியும், மறுபடியும்..  திருப்தியடையாமல், ஆனாலும், விடாமல் அவர்கள் எதையோ தேடினார்கள்..  தேடிக்கொண்டே இருந்தார்கள்..  இடையில் கொஞ்சநேரம் ஒன்றாக சேர்ந்திருந்து, உதட்டோடு உதட்டை வைத்து ஏதோ பேசிக்கொண்டார்கள். காதல் அவர்களுக்குள் நிரம்பி, வழிந்து தளும்பிக்கொண்டு நின்றது.  அது அவர்களுடைய கண்களிலும் தெரிந்தது.  பங்குனி  மாதம் அது..  இணை சேரவேண்டிய காலம்.  குழந்தைகளுக்கு ஜென்மம் தரவேண்டிய உயிர்வலி..  ஆனால், எங்கே?  எப்படி?    எங்கேயாவது அடர்ந்து விரிந்து கிளை பரப்பிய ஒரு மரம்.. அது போதும் அவர்களுக்கு..  கொஞ்சநேரம் ஷெட்டினுடைய முனையில் இரண்டுபேரும் சேர்ந்து இருந்து, பிரார்த்திப்பதுபோல தலை குனிந்து நின்றுகொண்டிருந்தார்கள்..  கடவுளிடம் பிரார்த்தனை செய்தார்களோ?  இல்லை..  மனிதர்களை சபித்தார்களா? 

    அவர்கள் என்னைப் பார்த்தார்கள்.  பயத்தோடு காலடி வைத்து ஜன்னலுக்குப் பக்கத்தில் வந்தார்கள். பெண்ணிடம் எதையோ சொல்வதற்கு உள்ளதுபோல  இருந்தது அது.    பாத்திரத்தில் கொஞ்சமாக தண்ண்£ர் எடுத்துவைத்தேன் நான்.  தலையைக் குனிந்து, தண்ணீரைக் குடித்து அவர்கள் தங்களுடைய உதடுகளை நனைத்துக்கொண்டார்கள்.  நெஞ்சம் கவர்ந்த அந்த அழகை நான் நுகர்ந்தேன்.
 
    மஞ்சள் மை தீட்டிய கறுத்த கண்கள்..  உதடுகளும் மஞ்சள் லிப்ஸடிக் போட்டதுபோல..  ஒழுங்காக வாரிவிட்டதுபோல மெல்லிய முடியாலான லேசான தலைப்பாகை..  வெள்ளையான அடிவயிற்றுக்குப் பிறகு நீளமான வால்..  வாலின் முடிவில் புள்ளி..  அவளைவிட சற்று அளவில் பெரியதாக
   இருந்தான் அவன். 

    - என்ன தேடறீங்க நீங்க? 
    நான் கேட்டேன். 

    - சேர்வதற்கு ஒரு இடம்..
   அவள் பதில் சொன்னள்.  நான் தொடர்ந்தேன்.

   - இந்த வீட்டிலா?

    - எங்கயாவது..

   -இதென்ன? 

    - இங்கே ஒரு பாழாய்ப்போன மரத்தகூட பாக்கமுடியல..  எல்லாத்தயும் நீங்க வெட்டித் தொலைச்சுட்டீங்களே.. 
    அவள்தான் இதை சொன்னது.  பெண்ணுடைய பெண்மையும், தாய்மையும் இணைந்த வேதனை ததும்பும் குரல்.  தொடர்ந்தாள் அவள்.

    - மரப்பொந்தில்தான் நாங்க கூடு கட்டறது..  இலையயும், சுள்ளியையும் வச்சு.. 
    அவன் கூட்டு சேர்ந்துகொண்டான். 

    - கிளையும், இலையும் அடர்ந்த ஒரு தோப்புதுரவோ வயல்வரப்போ இருக்கா இங்க? எங்க குழந்ததைகளுக்குன்னு ஒரு பயிர் பச்சை விட்டு வச்சிருக்கீங்களா நீங்க?
    அவள் கேள்விகளால் என்னைத் துளைத்தாள்.

    - எங்கயாவது ஒரு மரம் மட்டை  மிச்சம் மீதிஉயிரோட வச்சுருக்கீங்களா நீங்க? 
    அவள் விடவில்லை. 

    சரிதானே..?  நான் யோசித்தேன்.  ரப்பர் மரத்திலும், தென்னை மரத்திலும் அவைகளுக்கு கூடு கட்ட முடியாது.  பழையகாலத்தில் இருந்த மரங்களை நான் நினைத்துப் பார்த்துக்கொண்டேன். ஆலம், அரச, ஒதிய, நுனா மரங்கள்..  இலைகளும், கொப்புமாக அடர்ந்து பரந்து  விரிந்து நிழல் பரப்பி, குடை விரித்து  நிற்கும்  அந்த மரங்கள்  இப்போது எங்கே?  இன்றோ மரங்கள் இல்லாத, பச்சை காணாமல்போன காய்ந்து, தீய்ந்துபோன வயல்வரப்புகளும்.. 
    இதற்கு இடையில் அவன் அவளைச் சுற்றிவந்து நாட்டியமாடத் தொடங்கினான்.  அவள் நாணத்தோடு ஒதுங்கிக் கொண்டாள். 

    - இதென்ன ஆட்டம்? 
    நான் கேட்டேன். 

    - எனக்கு..  எனக்கு..
    ஒரு சங்கோஜமும் இல்லாமல் அவன் சொன்னான். 

    - உனக்கு?

    அவர்கள் எனக்குத் தந்த சுதந்திரத்தில் நான் அவளைக் கேட்டேன். 

    - ஆம்..  எனக்கும்..
    அவள் சொன்னாள். 

     - ஆனா.. 
    அவள் சொன்னாள். 

    - என்ன ஆனா?

    - கூடு கட்ட ஒரு இடம் பாக்காம..

    அவள் வேதனையுடன் சொன்னாள். 
    - அது ஏன் அப்படி?

     - ஒரு முட்டையயும் பாழாக்க முடியாது.. 
    ஆச்சரியத்தோடு நான் கேட்டேன். 

    - காதலும், காமமும் வெட்டியாகக்கூடாது என்றா? 

   - ஆமா..  குஞ்சுகளுக்காக கூடு கட்டாம அது முடியாது. 
    அவள் சொன்னாள்.  அவர்களை நான் அதிசயத்துடன் பார்த்தேன். 

   - இனி இதுக்கு என்ன வழி?
    நான் கேட்டேன்.

   - தேடனும்..  கிடைக்கும்வரை.. 
     அவள் பதில் சொன்னாள். 

   - கிடைக்குமா?

    - யாருக்குத் தெரியும்? 

    - எப்பவரை?

    - மழைக்காலம் வரை.. 

    - அப்பறம்?

    - அடுத்த வருஷம்..

    ஒரு தீர்க்கமான பெருமூச்சு விட்டாள் அவள்.  வறண்ட காற்றில் அது நிலைத்து நின்றது.  கீழ ஒரு பூனை கத்தியது.  அவன் அவளைப் பார்த்தான்.  அவளும் அவனைப் பார்த்தாள்.  அவன் இறக்கைகளை விரித்தான்.  அவளும்..  அவர்கள் உயரத்திiல் பறக்கத் தொடங்கினார்கள். 
    - நில்லுங்க..
   நான்  கெஞ்சினேன். 
   - ஒரு நிமிஷம்..
    நான் அவர்களை என்னுடைய மொபைலில் ஒரு கிளிக் செய்தேன்.. என்னுடைய குழந்தைகளுக்காக..  இனி அவர்களை பார்க்கமுடியாமல் போனால்..?  அவர்கள் பறந்துபோனார்கள்.  மேல்திசை வானத்தை நோக்கி..  பணம் காய்க்காத மரமுள்ள நாட்டை நோக்கி.  

                                                                     மலையாள மூலம்- தாமஸ மாத்யு
                                                                     தமிழில்- சிதம்பரம் ரவிச்சந்திரன்.

No comments:

Post a Comment