வன விலங்குகளை படம்
எடுப்பது என்பது ஒரு கலை. இந்த துறையில் எந்த அளவுக்கு ஒருவர் சாதிக்க முடியும்.
என்ன வாய்ப்புகள் உள்ளது. ஒருவர் முழுநேரமாக இதில் ஈடுபடலாமா? தமிழகத்தில் காட்டுயிர்
ஒளிப்படக்கலை(Wild Life Photography) பற்றி இந்த
துறையில் மிகுந்த அனுபவமும், நிறைய புத்தகங்களை எழுதியவரும், வனவிலங்குக்கு என்று
உயிர் என்ற பத்திரிக்கை நடத்தி வருபவர் திரு.ஏ.சண்முகானந்தம் அவரிடம் வைல்ட் லைப்
போட்டோகிராபி பற்றிய நேர்காணலில் அவர் கூறியதாவது.
1990ஆம் ஆண்டு கேமரா
பற்றிய ஓர் ஆண்டு பயிற்சியை முடித்து திருமண விழாக்களில் படங்கள் எடுத்து தொடங்கிய
என் பயணம், பிறகு எங்கள் வீட்டை சுற்றி இருந்த நீர் நிலைகளில் காணப்படும் பறவைகள்,
பூச்சிகளை படம் எடுக்க தொடங்கினேன். நாளடைவில் திருமண விழாக்களில் இருந்து
விலகி வனவிலங்குகளை போட்டோ எடுப்பதில் ஆர்வம் ஏற்பட்டது. தொடர்ந்து விலங்குகள், பறவைகள், பூச்சிக்கள் எடுபதற்க்கு
பல்வேறு காடுகளில் பயணம் செல்ல தொடங்கினேன்.
நான் தொடங்கிய தொன்னூறாம்
ஆண்டுகளில் இப்போது இருபதுபோல், டிஜிட்டல் முறையில் படம் எடுக்கும் தொழில்நுட்பம்
வரவில்லை. அதனால் பிலிம் ரோல் கொண்டே படங்களை எடுத்து வந்தேன்.
ஒவ்வொரு படமும் எடுத்து அவற்றை கழுவி பிரிண்ட் செய்து பார்த்தபிறகே அதன் தன்மை
தெரியும். சரியாக இல்லையென்றால் மீண்டும் படங்களை எடுக்க முடியாது அதனால் முதல்
முறையிலேயே அதிக கவனத்துடன் படங்களை எடுக்கவேண்டும். அதற்கு என்னுடையை ஒருவருட
பயிற்சியும், அதனை தொடர்ந்து புகைப்படகளை வல்லுனர்களுடன் ஏற்பட்ட நட்பும், அவர்கள்
கொடுத்த குறிப்புகளும் பயன்பட்டன.