தோட்டத்தில் |
கூகை(Barn Owl) இரவு பத்து மணியளவில் வீட்டு
மாடியில் வந்து அமர்ந்ததுதான் வீட்டு
அருகில் எனக்கு முதல் தரிசனம் ஆகும்.
பலமுறை வெளிநாட்டுப் பறவை என்றே பத்திரிக்கையில் படித்ததால் அவை வேறு நினைவுக்கு
வந்து சென்றது. பல வருடங்கள் முன்பு
புள்ளி ஆந்தை, வீட்டிற்கு முன்பு இருக்கும் மின்கம்பியில் வந்து அமர்வதைப்
பார்த்து உள்ளேன். வீட்டில் உள்ளவர்கள் சில நாட்கள் முன்பு கூகை வீட்டு முன்
சுவரில் எட்டு மணியளவில் வந்து அமர்ந்து சில நிமிடங்கள் நகரவே இல்லை என்று
தெரிவித்தார்கள். இப்பொழுதும் வீட்டு
அருகில் ஊர்வலம் சென்றவர்கள் வெடி வெடித்தார்கள் அதற்குக் கூட அசையாமல் மாடியில்
அப்படியே இருந்தது. கிண்டி சிறுவர் பூங்காவில் இருக்கும் கூகை அமைதியே உருவாக
இருக்கும். ஆனால் இங்குச் சுறுசுறுப்பாக இருப்பதற்கு அதன் வாழிடத்தில் இருப்பது
அதிமுக்கிய காரணமாகும்.
உலகில் தன் தாய் மொழி பேசுபவர்கள் இல்லாமல்
இருந்தால் அந்த மனித இனம் அழிந்ததற்குச் சமம் என்பதுபோல் உயிரினங்களுக்கு வாழிடம்
மிக முக்கியமாகும். தொடர்ந்து வாழிட அழிப்பு மிகப் பெரிய அச்சுறுத்தலைப்
பறவைகளுக்கு உருவாகியுள்ளது.
கூகை படம் இரவில் எடுத்ததால் சரியாக வரவில்லை.
வீட்டுத்தோட்டத்தில் இருபத்தி ஐந்து பறவைகள் மேல்
வந்து செல்வதை ஒரு வாரம் நிதானமாகக் கவனித்து பார்த்ததில் தெரிந்தது. அதில் ஒரு
சில பறவைகள் தொடர்ந்து வந்தது, சிலது மீண்டும் வரவில்லை, இரண்டு பறவைகள் இரண்டு நாட்கள் வந்தன. மூன்று பறவைகள்
தோட்டத்தில் இருக்கும் மரத்தில் இரவு தங்குகிறது.
ஒரு முறை மட்டும் வந்த பறவைகள்
உண்டு, காலை-மாலை வந்து செல்லும் பறவைகள் என்று
கலவையாகவே பறவைகள் உலகம் இருப்பது தெரிந்தது.
வீட்டில் தோட்டம் இருந்தால், பறவை பார்ப்பதற்கு
மிகச் சிறந்த இடங்களில் இவை முதன்மையாக இருக்கும். வெளியே சென்று பறவை
பார்க்கும்பொழுது என்ன பறவைகளைப் பார்த்தோம் என்ற பட்டியல் தயார் செய்வதற்கே நேரம்
சரியாக இருக்கும். ஆனால் நேரம் இருக்கும் பொழுதெல்லாம் தோட்டத்தில் பறவைகளைப்
பார்க்கும்பொழுது அதன் செயல்திறன்களைக் கவனிக்க முடியும். நாளடைவில் குறிப்பிட்ட
பறவைகளின் பெரும்பாலான செயல்களை நீங்களே சொல்லலாம். பறவைகள் பற்றிக் கற்றுக்கொள்வதற்கு
இவை ஒரு வாய்ப்பு.
தோட்டம், வீட்டைச் சுற்றி இருக்கும் பகுதிகள்,
முடிந்தால் அருகில் இருக்கும் நீர் நிலைகள் பறவைகள் நோக்க மிகச் சிறந்த
இடங்களாகும். உங்களுக்கு ஏற்ற இடங்களில் கவனம் செலுத்துங்கள். என் வீட்டுத்
தோட்டத்தில் தொடர்ந்து ஏழு நாள் பறவைகள் பார்த்ததில், ஒரு சில பறவைகள் இந்த நேரத்திற்கு இங்கு
வரும், இந்த நேரத்தில் பார்க்க முடிவதில்லை என்று தெரிந்து கொண்டேன்.
இவை எல்லாம் எதற்கு என்றால் வேறு என்ன சும்மாதான்.
ஜாலியாக பாருங்கள்- பார்த்ததை குறித்துக் கொள்ளுங்கள். அவ்வளவுதான்..
தோட்டத்தில் |
இந்த ஏழு நாட்களில், வீட்டில் உள்ள குழந்தைகளும்
சேர்ந்தே பறவைகள் பின் வந்தார்கள். பறவைகளுக்கு நீர் வைப்பது, மாம்பழத்தைப்
பறவைகள் சாப்பிடுகிறதா என்று அடிக்கடி ஓடிச் சென்று பார்த்துவிட்டு வந்து
சொல்வார்கள். இரவு நேரத்தில் ஆந்தை வருகிறதா என்று பார்த்துக் கொண்டு இருப்பார்கள்
அவர்களுக்கு இந்த கோடை விடுமுறை பயனுள்ளதாகவே கழிந்தது என்று நினைக்கிறேன்
வந்து செல்லும் பறவைகள் பற்றி ஒரு பூனை பார்வை :
இரண்டு வெண்புருவ வாலாட்டி, வீட்டின் முன்புறம் இருந்த கால்வாயில்
இறங்குவதும்-மீண்டும் சுவரில் வந்து அமர்ந்து தன் வாலை ஆட்டுவதும் என்று இருந்ததை முதல் பறவையாக குறித்து கொண்டேன்.
மீண்டும் மீண்டும் பார்க்கும்பொழுது வாலாட்டி
அந்த கால்வாயில் இறங்கி உணவை தேடுகிறது. மற்ற பறவைகள் நிறைய அருகில்
இருந்தும் அவை எதுவம் கால்வாயில் இறங்கவில்லை..
நிறைய இடங்களில் வாலாட்டி பறவையை
தனியாக மின்கம்பியில் இருப்பதை பார்த்துள்ளேன் இங்கு ஜோடியாகவே சுற்றி வருகிறது.
காலை-மாலை வீட்டின் வெளி சுவரில் பார்க்க
முடிந்தது.
இந்த வாலாட்டி பறவை எப்பொழுதும் நம் சுற்றுப்புறத்திலேயே பார்க்கலாம். இவை தவிர
காட்டு வாலாட்டி (Forest Wagtail) என்ற வாலாட்டி குளிர்காலத்தில் தமிழகத்திற்கு
வலசை வருகின்றன. சிறிய பறவையாக இருக்கும். சென்னை புதர் பகுதியில் ஒரு முறை
பார்த்துள்ளேன். ஒரு மரத்தின் கீழே இரையை தேடித் கொண்டிருந்தத்த்து.
white-browed wagtail |
நாகணவாய், காகங்கள் போல் பரவலாக பார்க்க முடிவதால் இங்கும் அவை நிறைய
பறந்து கொண்டிருந்தது.. ஒரு நாகணவாய் தனியாக இருந்ததை உற்று பார்த்தபொழுது கூட்டில் இருந்து சில
நாட்கள் முன்புதான் வெளி உலகிற்கு வந்துள்ளது என்று தெரியவந்தது.. முழுவதும் வளராத
அதன் இறக்கைகளால், பறக்கும்பொழுது நேராக இல்லாமல், கடல் அலை போல் பறந்து சென்று
அடர்த்தியான வீட்டு மா மரத்தில் அமர்ந்து கொண்டன.
அந்த மா மரமே அதற்கு ஏற்ற இடத்தை வழங்கிவிடுவதால் பாதுகாப்பாக உணர்கிறது.
வல்லூறு ஒன்று எந்நேரமும் வானில் சுற்றி வந்து கொண்டிருக்கிறது. பறப்பதில் இன்னும் முழுமை அடையாத இந்த பறவைகள்
அதற்கு கொள்ளை இஷ்டம். ஏழு நாட்களில் அவற்றை தொடர்ந்து ஒரு முறையாவது பார்க்க முடிந்ததால் பாதுகாப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன்
Myna-Juvenile |
மா மரம் :
தோட்டத்தில் “மா” மரம் முக்கிய
இடத்தை வகிக்கிறது. ராஜா சிம்மாசனத்தில்
அமர்ந்து ஆள்வதை போல் தோட்டத்தில் “மா” ஆட்சி செய்கிறது. குயில் தனக்கே உரிய கூச்ச
சுபாவத்தில் அடைக்கலம் ஆவதும் இந்த மா மரத்தில்தான், வெய்யிலில் காகங்கள் ஓய்வு
எடுப்பதும், செம்போத்து நம்மை பார்த்துவிட்டால் ஒளிந்து கொள்வதும், எந்நேரமும்
அணில்கள் மாநாடு நடத்துவதும் இதே மரத்தில்தான். புதிதாக வரும் பறவைகளுக்கும் மா
மரமே தோட்டத்தின் நுழைவாயில் .
இந்த மாதம் அம்மா சென்டிமன்ட் படங்கள் என்பதுபோல்...
வரும் மாதங்கள் குயில்களுக்கான மாதங்களாகும். அதிகாலை வேலையில் குயில்
பாட்டுடன் எழுந்து கொள்வோம். அடுத்து வரும் மாதங்கள் அதன் வாழ்க்கையில் ஒரே பிஸியோ
பிஸி. வேறு ஒன்றும் இல்லை காகங்களை திசை திருப்பி அதன் கூட்டில் முட்டை
போடவேண்டும். காகங்கள், குயில்
முட்டைகளையும் சேர்த்து அடைகாக்க வேண்டும். அதனால் வரும் மாதங்கள் குயில் vs
காகங்கள் மாதங்கள் என்றும் சொல்லலாம்.
ஆண்-பெண் குயில்கள் சர்-சர்(இரட்டை கிளவி போல்) என்று தோட்டத்தில் இருந்து
எதிர் வீட்டு மரத்தில் அமர்வதும், அங்கு என்னே யோசிக்கமோ தெரியாது மீண்டும் மா
மரத்திற்கு வருவதும் என்று பொழுதை கழிக்கின்றன. அனைவரும் பார்க்கும் வகையில்
குயில் பெரும்பாலும் அமர்வதில்லை. இலைகள் நடுவில் மறைவாகவே அமர்ந்து பாட
தொடங்கும். சில சமயம் சுற்றி சுற்றி தேடினாலும் அவற்றை பார்க்க முடியாது ஆனால்
அதன் குரல் கேட்டுக் கொண்டேயிருக்கும். மாலை வேளையில் ஆண்-பெண் குயில்கள் தோட்டத்தில் குறுக்கும் நெடுக்கும் பறந்து
கொண்டிருந்தது.
Koel-Female |
சில கிராம புறங்களில் அடர்த்தி இல்லாத சிறு செடியில் அமர்ந்து இருப்பதை
தெளிவாக பார்க்கலாம்.
சரி வாங்க நாம் மீண்டும் தோட்டத்திற்கு போவோம்.
முருங்கை மரம்
தோட்டத்தில் முருங்கை மரம் ஒன்று எந்நேரமும் ஆடி கொண்டே இருக்கும். மா மரத்தை தொடர்ந்து பறவைகளுக்கு முருங்கை மரம்
ஒரு வீட்டின் பால்கனி(Balcony) போல் பயன்படுத்துகிறது. மா மரம் போல் அடர்த்தி, முருங்கைக்கு இல்லை என்பதால் இங்கு வந்து அமரும் பறவைகளை
தெளிவாக பார்க்கலாம். அப்படி அமர்ந்து இருந்த சுடலைக் குயிலை(Pied Cuckoo or
Jacobin cuckoo) நான் பார்த்தபொழுது அவை பார்க்கவில்லை, தாமதமாக பார்த்தது.
என்ன இதுவரை தோட்டத்தில் பார்க்காத பறவையாக இருக்கிறதே என்று உற்று
நோக்கி-நோக்கி பார்த்தால், வடிவேல் கொண்டை காட்டி கொடுத்துவிட்டது. இவன் யாரா நம்மை பார்ப்பது என்று விடு ஜூட்
என்று மா மரத்திற்கு சென்றுவிட்டது.
சுடலைக்கு குயிலை ஏழுநாளில் ஒரு முறை மட்டுமே பார்க்க முடிந்தது. இந்த
குயிலைதான் 2.0 படத்தில் பறவை மனிதர்(ப்க்ஷிராஜன்) விவரிப்பார்.
Pied Cuckoo |
ஏழு நாட்களில் ஒரு முறை மட்டுமே பார்த்த பறவைகள் மொத்தம் நான்கு.
அதில் இரண்டாதவதாக மாங்குயில்(Golden Orioel) இடம் பெறுகிறது. மஞ்சள் நிறமே
நமக்கு தெளிவுபடுத்திவிடும். முருங்கையில்தான் தரிசனம். மஞ்சள் நிறம் குறைவாக,
மார்பு பகுதியில் சிறு சிறு கருப்பு கோடுகள் இவை பெண் மாங்குயில் என்று
உணர்த்தியது. வளர் பருவத்தில் இருக்கும் மாங்குயிலும் இவை போலவே காணப்படும்.
அருகில் செல்லாமல் துரமாகவே இருந்து பார்த்து கொண்டு இருந்ததில் அதுவும் சரி போ
என்று விட்டுவிட்டது. சிறிது நேரத்தில் ஆண் மாங்குயில் அங்கு ஆஜரானது. முருங்கை
கீழே இருந்த சிறு செடியில் ஆண் அமர்ந்து கொண்டது. பத்து நிமிடங்கள், அதன் பின் தன்
பயணத்தை தொடங்கியது. எங்கு போகும் என்று தெரியவில்லை ஆனால் மீண்டும் பாரக்கவில்லை.
Golden Oriel-Male |
Golden Oriel-Female |
சிட்டுக் குருவியை இதுவரை வீட்டை
சுற்றி பார்த்ததே இல்லை. மூன்றாவது நாள் வீட்டு மின்கம்பியில் ஓர் ஆண் சிட்டுக்
குருவி வந்து அமர்ந்தது. சென்னையில் சிட்டுக் குருவியை தேடி நிறைய வலம்வந்ததில்
சிறிய அளவில அவற்றின் செயல்பாடுகள் தெரியும். அதனால் ஏன் வீட்டருகில் வருவதில்லை
என்று புரியவந்தது. பிறகு ஏழு நாளில் மீண்டும் வரவில்லை என்பதால் இவையும் ஒரு முறை
மட்டுமே பார்க்கப்பட்ட பட்டியலில் சேர்த்தேன்.
கருங்கொண்டை நாகணவாய்(Brahminy Starling) வரும்பொழுதே ஜோடியாகவே வந்தது.
சுற்றி-முற்றும் பார்த்து சிறிது நேரத்தில் கிட்டவந்து கிளம்புகிறேன் என்று
சொல்லிவிட்டு சென்றது. திரும்பி வருவியா என்று கேட்டதற்கு இல்லை என்று சொல்லி
விட்டதால், சரி ஒரு முறை பார்த்த பட்டியல்தான் இவற்றுக்கும்.
Brahminy Starling |
ஒரு மாலைபொழுது, மங்கிய ஒளியில் வல்லூறு ஒன்று முருங்கையில் அமர்ந்து
சுற்றி நோட்டம் விட்டு கொண்டிருந்தது. சிறிது தொலைவில் நின்று நான் அதனை நோட்டம்
வீட்டுக் கொண்டிருந்தேன். ஆரவாரம்
இல்லாமல் அமைதியாக இருந்ததன. இருள் இன்னும் குறைந்ததால் சர் என்று பறந்ததை மட்டுமே
பார்க்க முடிந்தது, எங்கு சென்றது என்று தெரியவில்லை. தினம் ஒரு முறையாவது பார்த்துவிடுகிறேன்
மாலை வேலையில் வெண்மார்பு
மீன்கொத்தி ஒன்று மட்டும் முருங்கையில்
நீண்ட நேரம் அமர்கிறது. என்ன அதன் மண்டையில் ஓடுமோ என்று தெரியாது ஆனால் வெகு
நேரம் ஆழ்ந்த சிந்தனையில், யோக நிலையில் இருக்கிறது. சிறிது நேரத்தில் எதிர்
வீட்டு சுவரில் சென்று அமர்ந்து கொஞ்சநேரம் வேடிக்கை. மதிய வேளையில் மா மரத்தில்
வந்து ஓய்வு எடுப்பதை அரைமணி நேரம் பார்த்து கொண்டு இருந்தேன். வெய்யிலின் தாக்கம்
அதிகம் என்பதால் இந்த ஓய்வு கட்டாயம் தேவைப்படுகிறது. இருள் முழுவதும் வருவதற்கு
முன் மா மரத்தில் அடைக்கலம் ஆகிறது. இப்படியே அதன் வாழ்க்கை தினமும் நகர்கிறது.
White-throated kingfisher |
மாலை வேளையில் ஐந்து அடி நீளம் உடைய சார பாம்பு தோட்டத்திற்க்கு வந்து
செல்கிறது. நாம் எதுவும் செய்வதில்லை,
அவையும் நம்மை ஒன்றும் சீண்டுவதில்லை
இந்த ஒப்பந்தம் ஏழு நாளில் இருவரும்
மீறியதில்லை.
நன் பகல் வேலையில் தோட்டத்தில் ஒரு மூலையில் இரண்டு கொண்டலாத்தி நடந்து
கொண்டிருந்தது. அதில் ஒன்று மண்ணை சிறிது கிளறி அதில் அமர்ந்து கொண்டன. மற்றோன்று
சிறிது நேரத்தில் அதேபோல் அமர்ந்து கொண்டது. இந்த பறவை முதல் நாள் எதிர் வீட்டு
மாடியில் சில நொடிகள் மட்டுமே அமர்ந்து இருந்ததை பார்த்தேன். மறுநாள் தோட்டத்தில்
இருந்தபொழுது பொறுமையாக அதன் நடவடிக்கையை தூரத்தில் நின்று பார்த்து கொண்டு
இருந்தேன். கொண்டலாத்தி என்ற தலைப்பில் கவிதை புத்தகம் ஒன்று வெளிவந்துள்ளது..
சென்னை-அடையார் கழிமுகத்திற்கு அருகில் எண்ணிக்கையில் நிறைய பார்த்துள்ளேன்.
எழுத்தாணி குருவி என்றும் இவற்றை அழைப்பார்கள். கேமரா எடுத்து வருவதற்குள் இடத்தை
காலி செய்துவிட்டது.
ஒத்தை ரோஜா ஒன்று செடியில் என்பதுபோல் கொண்டு கரிச்சான்(Magpie Robin)
ஒன்று முருங்கையில் வந்து அமர்ந்து வாலை தூக்கி காட்சி கொடுத்தது. இறக்கையில்
இருக்கும் வெள்ளைக் கோடு, இந்தக் கோட்டை தாண்டி நீயும் வராத நானும் வரமாட்டேன்
என்று சொல்வது போல் இருந்ததால் அதன் அருகில் செல்லாமல் தூரத்தில் இருந்தே அதனுடன்
பேச்சுவார்த்தை நடத்தினேன்…மாலையில் ஆண் -பெண் இரண்டும் தரையில் இறங்கி
விளையாடுகிறது. சில நேரம் அருமையாக பாட்டு பாடிக்கொண்டிருக்கும். வீட்டை சுற்றி
எந்நேரமும் பார்க்க முடிகிற பறவையாக குறித்து கொண்டேன்.
Magpie-Robin |
வந்தார்கள்-சென்றார்கள்
1.
குக்குறுவான் (Barbet)
2.
சுடலைக் குயில் (Pied Cuckoo)
3.
மாங்குயில் (Golden Oriel) - M/F
4.
கருங்கொண்டை நாகணவாய்(Brahminy Starling)-M/F
5.
செம்போத்து (Coucal)
6.
வல்லூறு(Shikra)
7.
மடையான்(Pond Heron)
8.
பச்சைக்கிளி (Rose Ringed Parakeet)
9.
கூகை (Barn Owl)
10.
தேன் சிட்டு (Sunbird)
11.
கொண்டலாத்தி (Common Hoopoe)
12.
வால்காக்கை (Treepie)
13.
குயில் (Koyel) - M/F
14.
கொண்டு கரிச்சான் (Magpie Robin) - M/F
15.
தவிட்டு குருவி (Yellow billed-babbler)
16.
சிட்டுக் குருவி (Sparrow)
17.
சின்னான் (Red vented Bulbul)
18.
புள்ளி புறா (Spotted Dove)
19.
வெண் புருவ வாலாட்டி (White Browed Wagtail)
20.
மாடப்புறா (Rock Pigeon)
21.
கரிச்சான்(Black Drango)
22.
அண்டங்காக்கை (Jungle Crow)
23.
வீட்டுக் காக்கை (House Crow)
24.
கதிர் குருவி (Ashy Prinia)
25.
நாகணவாய் (Common Myna)
இரண்டு மூன்று பறவைகள் தவிர மீதி அனைத்து பறவைகளையும் படம் எடுக்க
முடிந்தது.
அபயா குரல் :
கோடை வெய்யில் பறவைகளை அதிகம் வதைத்துவிடுகிறது. பறவைகளுக்கு நீர் மிக
முக்கிய இடத்தில் உள்ளது. இரண்டு மணியளவில் பறவைகள் குரல் மிக அபாய குரலாகவே
வெளிப்படுகிறது. பறவைகள் தங்கள் அலகை மூடுவதே இல்லை திறந்தே வெகு நேரம் வைத்து
இருக்கிறது. அப்படி அலகு திறந்த பார்க்கப்பட்ட பறவைகள்- வால்காக்கை- மீன்கொத்தி-காகம்-நாகணவாய்-தவிட்டு
குருவி போன்றவ பறவைகள் ஆகும். திறந்த வாயை
மூடுவதில்லை என்ற கொளகைப்போல் காட்சியளித்தது.
நீர் பிரச்சனை பறவைகளுக்கு வரக்கூடாது என்று தோட்டத்தில் ஒரு இடத்தில் தண்ணீர் பந்தல் வைத்தேன். தொட்டியில் இருக்கும் நீரை காகங்களே சொந்தம்
கொண்டாடிவிடுகிறது. நாகணவாய் போன்ற பறவைகளை அருகில் விடுவதே இல்லை. அதைவிட சிறியதான தவிட்டு குருவி எப்படி காகம்
அருகில் செல்வது என்று தள்ளியே இருந்து கொள்கிறது.
இது என்னடா புது பிரச்சனை என்று நினைத்து இரண்டாவதாக ஒரு தண்ணிர் பந்தல்
திறந்து, அப்படி திறந்ததை காகத்தை தவிர்த்து நாகணவாய், தவிட்டு குருவிக்கு மட்டும்
சொல்லி அனுப்பினேன். வால்காக்கையின் குரல் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருந்தது.
நீருக்காக அல்லல் பட்டுக் கொண்டிருந்ததை பார்த்து நாகணவாய்-தவிட்டு குருவி
இரண்டிடம் உங்கள் கூட்டணியில் வால்காக்கையும் சேர்த்து கொள்ளுங்கள் என்று
சொல்லிப்பார்த்தேன் சரி என்பதுபோல் தலையை ஆட்டியது.
Treepie |
பப்பாளி மரம்:
ஊருக்கு ஒதுக்குப்புறமா வீடு கட்டுவதுபோல், தோட்டத்தில் ஒரு ஓரத்தில்
பப்பாளி வளர்க்கிறது. அங்கு அந்த மரத்தை
வைத்ததுபோல் நினைவில் இல்லை. காட்டில் மரங்கள் வளர்வதில் முக்கிய பங்கு பறவைகளாக
உள்ளதால் அதுபோல் அவை பப்பாளி விதையை இங்கு போட்டிருக்கலாம்.
பப்பாளி பழத்தை வால்காக்கை நன்கு சாப்பிடுகிறது. சிலநேரம் தவிட்டு
குருவியும் அதில் பங்குபோட்டுக் கொள்கின்றது. பப்பாளி மரத்தில் எந்த பறவையும் அதிக
நேரம் இருப்பதில்லை நகர்ந்து கொண்டே இருக்கிறது.
அணில், பறவைகளை விட ஆட்டம்-பாட்டம் கொண்டாட்டமாக தோட்டத்தில் சுற்றி
வருகிறது. மா-மரத்தில் இவை ராஜாங்கமே நடத்துகிறது. மாம்பழத்தை அதிகம்
சாப்பிடுவதும், சாப்பிட்டதில் மீதியை தவிட்டு குருவி எடுத்துக்கொளவதும் என்று
பரஸ்பர ஒப்பந்தத்தில் இருக்கின்றது. சில சமயம் அணிலால் மாம்பழங்கள் கீழே
விழுந்துவிடும் அப்பொழுது காகம்-நாகணவாய்-தவிட்டுக் குருவி அனைத்தும் தனி தனியாக
வந்து சாப்பிட்டு செல்லும். சில முறை கீழே வந்து அணிலும் சாப்பிடும். அதனால் கீழே
விழுந்த மாம்பழத்தை நாங்கள் எடுப்பதே இல்லை.
மீன்கொத்தி vs சின்னான் vs கொண்டு கரிச்சான்
இந்த-வீடு, எதிர்-வீடு, பக்கத்து-வீடு என்று சின்னான் பறவை சிட்டாக பறந்து
கொண்டு இருக்கும். ஆண்-பெண் எந்நேரமும் ஒன்றாகவே காட்சி கொடுத்தது.. ஒற்றுமைக்கு
குஜராத்தில் இருக்கும் சாரஸ் கிரண்(Sarus crane) பறவையை உதாரணமாக சொல்லுவார்கள்,
அதே ஒற்றுமையை சின்னானிடம் பார்க்க முடிந்தது. மாலை வேலையில் மூன்று பறவைகள்
மா-மரத்தில் தங்குகிறது என்று ஆரம்பத்தில்
குறிப்பிட்டு இருந்தேன். அதில் முதல்
பறவையாக சின்னான் மா-மரத்திற்கு வருகை புரியும்.. இதனுடன் கொண்டு கரிச்சான்-
மீன்கொத்தி இடத்தை பங்குபோட்டுக் கொள்கின்றன. பெரும்பாலும் இந்த பறவைகள் தாழ்வான
கிளையிலேயே தங்குகின்றன.
பெரும்பாலும் கொண்டு கரிச்சான் ஜோடி மரத்திற்கு செல்வதற்கு முன்பு தரையில்
இரங்கி சிறிது நடை போட்டு, தோட்டத்தில் இங்கும்-அங்கும் சென்று சுற்றி
முடித்துவிட்டே மரத்தில் அடைக்கலமாகும்.
மீன்கொத்தி, முருங்கையில் நீண்ட நேரம் அமர்ந்து, சிறிது இருட்டிய
பிறகு மா-மரத்திற்கு சென்று விடும்.
சின்னான், எதிர் வீட்டு மாடியில் முதலில் அமர்ந்து, பிறகு முருங்கைக்கு
வந்து, பிறகு வீட்டு சுவற்றுக்கு தாவி கடைசியில் மா மரத்திற்கு வரும்.
வேப்ப மரம்- பசலை கீரை மரம்:
தோட்டத்திற்கு வெளியே வேப்பமரமும், உள்ளே மா மரத்தில் அருகில் பசலை கீரை
மரமும் உள்ளது. குக்குறுவான் வேப்ப மர உச்சியில் வந்து அமரும் . அதில் சில நேரம்
மடையான்(Pond Heron) வந்து சேருவதை
பார்க்கலாம். பச்சைக்கிளிகள் எந்நேரமும்
இங்குதான் நாட்டு நடப்பை பற்றி பேசுகிறது. தோட்டத்தை விட்டு கிளம்பும் பறவைகள்
முதலில் செல்வது வேப்பமரத்திற்கே ஆகும். செம்போத்து வேப்ப மரத்தில் இருந்து
கிளம்பி பசலை கீரை மரத்திற்கு வரும். ஒரு-ஒரு கிளையாக தாவி அமர்ந்து கொண்டிருப்பதை
நான்கு முறை பார்த்துள்ளேன். என்னை பார்த்துவிட்டால் வேகமாக வேப்ப மரத்திற்கு
சென்றுவிடும்.
குக்குறுவான் |
அந்த ஏழு நாட்கள்
பறவைகளுடன் கொண்டாட்டமாகவே சென்றது. மனிதர்கள்-பறவைகள் உலகம் முற்றிலும்
வேறு வேறாகவே உள்ளது. பனிரெண்டு மணி நேரம் உழைப்பு-பனிரெண்டு மணிநேரம் முற்றிலும்
ஓய்வு என்று பறவைகள் செயல்படுகிறது. இரவு வேலை
என்பது அதன் வாழ்க்கையில் இல்லை. இரவு பறவை என்று வேண்டுமென்றாலும் உண்டு.
இறை தேடி வெகு தூரம் செல்லும் பறவைகள்
வீட்டை மட்டும் சுற்றி வரும் பறவைகள்,
காலை-மாலை வந்து செல்லும் பறவைகள்
ஒரு முறை மட்டும் பார்க்க முடிந்த பறவைகள்
மறைந்தே வாழக்கூடிய பறவைகள்,
மனிதர்கள் அருகில் வரும்-வராத பறவைகள்
இரவில் வரும் பறவைகள்
இவ்வளவும் அந்த ஏழு நாட்களில் கொஞ்சம் தெரிந்து கொள்ளமுடிந்தது……….
மீண்டும் ஒரு புதிய ஏழு நாட்களில் சந்திப்போம் என்று பறவைகளிடம்
சொல்லிவிட்டு கிளம்பினேன்…...
(அணைத்து படங்களும் வீட்டு தோட்டத்தில்,எதிரில் எடுத்தவை.)
-செழியன்.ஜா
lapwing2010@gmail.com
தோட்டத்தில் |
கரிச்சான் |
எதிர் வீட்டு மாடியில் - புள்ளி புறா |
தோட்டத்தில் மாநாடு |
அருமையான கட்டுரை. உலகத்தின் மறுபாகத்தில் இருந்த போதிலும் படிக்கும் போது மரங்களையும் பறவைகளையும் அருகே இருந்து பார்ப்பதுப் போன்ற உணர்ச்சி! நன்றி.
ReplyDeleteWell done.