Monday 29 April 2019

Reserved Forest-பூசிமலை குப்பம்



கோடைக் காலம், பசுமையைப் போக்கி வெண்மையைக் கொண்டு வந்துவிடுகிறது. காப்புக்காடுகள் அதில் தப்பவில்லை. திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்து உள்ள பூசிமலைக்குப்பம்  காப்புக்காட்டுக்குக்  காலை 6 மணியளவில் சென்றபொழுது  பசுமை இல்லா காட்டை பார்க்க முடிந்தது.

Blue-faced malkoha

பச்சை வாயன் (Blue-faced malkoha):

முதலில் வரவேற்ற பறவையாகும். கூச்ச சுபாவம் உடைய இந்த பறவை மிக அருகிலிருந்தபொழுதும் சிறிதும் நகராமல் ஒரு சிறு செடியில் விளையாடிக் கொண்டிருந்தது. முதன் முதலாக ராஜபாளையத்தில் இந்த பறவையைப் பார்த்தபொழுது இலைகள் அடர்ந்த மரத்தில் நமக்கு தெரியாதவாறு இருந்தது. இருந்தாலும் அங்கேயே ஒரு மணிநேரம் அமர்ந்து  முடிந்த அளவு பார்த்துவிட்ட நகர்ந்தோம். ஆனால் அப்படியே இங்கு தலைகீழ். இங்கும் நீண்ட நேரம் அதன் அருகிலிருந்தே பார்த்து நகர்ந்தோம். 




வேலூர், ஆரணி, திருவண்ணாமலை சுற்றி நிறையக் காப்புக் காடுகள் உண்டு. பூசிமலை காட்டை விட்டு சிறிது நகர்ந்தால் கண்ணமங்கலம் காடு, அங்கு இருந்து சிறிது நகர்ந்தால் அமர்த்தி வன உயிரியல் பூங்கா(amirthi zoological park), ஜவ்வாது மலை, படவோடு காடு என்று பத்து-பத்து கிலோமீட்டரில் நிறையக் காடுகள் அமைந்து உள்ளன. 

காட்டு பாதை 

பூசிமலை காட்டில் மிகப்பெரிய அரண்மனை ஒன்று உண்டு.  வண்டியை அங்கே நிறுத்திவிட்டு காட்டை சுற்றி வந்தோம். உள்ளூர் மக்களிடம் பேசியபொழுது வேட்டையாடுவதற்கு ராஜாக்கள் இங்கு வந்து தங்குவார்கள் என்று சொன்னாரக்ள. எந்த அளவு நிஜம் என்று தெரியவில்லை. ஆனால் இந்த காட்டில் இவை இருப்பதற்கு அவையும் ஒரு காரணமாக இருக்கலாம். இன்றும் அடர்த்தியான காடாக  இருப்பதால் இருநூறு வருடங்கள் முன்பு நிச்சயம் பெரிய விலங்குகள் வாழ்ந்திருக்க வாய்ப்பு உண்டு. அரண்மனை பற்றி இங்கு நிச்சயம் சொல்லவேண்டும். 

அரண்மனை 

கம்பீரம் என்ற சொல் அரண்மனைக்குச் சொந்தம் என்று உறுதியாகச் சொல்லலாம். அதன் முன்பு நிற்கும்பொழுது அப்படியே உணரமுடிகிறது. இன்றைக்கு உள்ள மிக உயர்ந்த கட்டங்கள் அழகு என்று சொல்லலாம். ஆனால் கம்பீரம் அரண்மனை மட்டும் சொந்தமாகவும். மேல் தளத்திற்குச் செல்ல மூன்று இடங்களில் படிக்கட்டுகள் உள்ளன. சுழல் படிக்கட்டு, நேராக ஏறிச் செல்லும் படிக்கட்டு போன்று விதவிதமாக அமைத்து உள்ளார்கள். அதன் அருகில் ராஜாக்கள் குளிக்கக் கிணறு போன்று குளம் உள்ளது. அதில் இறங்குவதற்கு அமைத்து உள்ள படிக்கட்டுகள் மிக அருமை. அகலமான படிக்கட்டுகள், எதையும் பிடிக்காமல் குளத்திலே இறங்கிக் குளிக்கலாம்.  இப்பொழுது அதில் இயந்திரம் வைத்து நீர் எடுக்கிறார்கள். 

குளத்திற்கு செல்லும் பாதை 
வால்காக்கை(Treepie) 

அரண்மனை மரத்தில் அமர்ந்து குரல் கொடுத்துக் கொண்டிருந்தது. எங்களைப் பார்த்ததும் அடுத்த மரத்திற்குத் தாவிவிட்டன. 

(வால்காக்கைக்கும் நீண்ட வால், பச்சை வாயனுக்கும் நீண்ட வால்). காக்கை குடும்பம் என்றாலும் அழகான நிறத்தில் இருக்கும். உருவிலும் காகத்தை விட சிறியதே.  தவிட்டுக் குருவிகள்(Yellow-billed Babbler)  தரையில் தனக்கான இரையைத் தேடித் தேடி தானே சாப்பிட்டுக்  கொண்டிருந்தது. சென்னையில் இந்த பறவையை அதிகம் பார்க்க முடியவில்லை ஆனால் கிராமங்களில் சாதாரணமாக உலாவிக் கொண்டிருக்கிறது.


கூச்ச சுபாவும் உடைய பறவைகள் இங்குக் கூச்சமே இல்லாமல் சுற்றிக் கொண்டு இருக்கிறது. பச்சை வாயனுக்கு அடுத்து செம்போத்து. இதுவரை பார்த்தபொழுதுயெல்லாம் வேகமாகச் சென்று மறைந்து கொள்ளும். இங்கு மெதுவாக நடந்து எங்களைப் பார்த்து ஒரு மொறை முறைத்துவிட்டு, சாவகாசமாகச் சென்றது. இதன் குரல் கேட்டுக்கும்பொழுதெல்லாம் உருவத்தைப் பார்க்க முடியாது. எங்கோ மறைந்து “கூப்” “கூப்” என்று குரல் கொடுத்துக் கொண்டு இருக்கும். இதன் கூடு அமைக்கும் முறை நேர்த்தியாக இருக்கும்.. 

செம்போத்து 
காட்டை சுற்றி நிறைய குடும்பங்கள் வாழ்கின்றன. மிக அமைதியாக இருக்கும் காட்டில் பறவைகள் சத்தங்கள் மட்டும் எந்நேரமும் கேட்டுக் கொண்டு இருக்கிறது. சிறிய தவிட்டுப் புறாக்களின்(Little Brown Dove or Laughing Dove) இனப்பெருக்கம் செய்யும்  காலம் என்பதை வேக வேகமாகக் குச்சிகளை எடுத்துக் காய்ந்த காட்டில்  உள்ள ஒரு மரத்தில் கூடு கட்டிக் கொண்டிருந்ததைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். அதில் சில புறாக்கள் தரையில் சிங்க நடை போட்டு இரையை தேடித் கொண்டிருந்தது.

காட்டை சுற்றி பசுமை மிகச் சிறிதளவும், அதிகப்படியாகக் காய்ந்தும் இருக்கிறது. இந்த இடத்தில் சின்ன தவிட்டுப் புறா எண்ணிக்கையில் மிகுதியாகக் காணப்படுகின்றன.அதில் ஒரு புறாக் கூடு கட்டிக் கொண்டிருந்ததைத் தொலைவில் நின்று சிறிது நேரம் பார்த்துவிட்டு நகர்ந்தோம்.

சிறிய தவிட்டு புறா 
பறவைகள், மனிதர்களைக் கண்டால் நகராமல் இரையைத் தேடித் தேடித் மனிதர்கள் அருகிலேயும் வருகிறது என்பதை இன்னும் கொஞ்சம் தூரம் சென்றபிறகு ஒரு நபர் தரையில் அமர்ந்து இருந்தார் அவரை சுற்றி நிறைய பறவைகள் இரையைத் தேடிக் கொண்டிருக்கிறது. அதில் புறா, கொண்டு கரிச்சான், புதர் சிட்டு போன்றவையும் அடங்கும்.

ஆட் காட்டி 
வறண்ட இடத்தில் ஒரு குரல்  ஓங்கி “Did you do it” என்று கொடுத்துக்கொண்டே வந்தது. எங்களைப் பார்த்து குரல் கொடுத்ததா என்று தெரியாது ஆனால் சிறிது தொலைவில் விமானம் தரை இறங்குவது போல் எங்கள் முன்பு இறங்கியது. நின்று எங்களைப் பார்த்துக் கொண்டு இருந்தன நாங்கள்  கிளம்புகிறோம் என்று சொல்லவிட்டு நகர்ந்தோம். சிகப்பு மூக்கு ஆட்காட்டி பரவலாகப் பார்ப்பது போல் மஞ்சள் மூக்கு பார்ப்பது கடினமாகவே இருக்கிறது. இந்த ஆட்காட்டி பறந்து வரும்பொழுது அருகில் இருப்பவரிடம் சொன்னேன் இவை சிகப்பு ஆட்காட்டியாக இருக்கும் என்று. 

விலங்கு என்று எதையும் பார்க்க முடியவில்லை. நிச்சயம் சிறு விலங்குகள் இருக்க வாய்ப்புண்டு.. மிகுந்த வெயில் என்பதால் நடமாட்டம் குறைவு என்று நினைக்கிறேன்.

வழக்கம்போல் கரிச்சான், பனங்காடை, கருஞ்சிட்டு தரிசனம் கொடுத்தது.  இந்த காட்டில் காகம், நாகணவாய் போன்றவை தென்படவில்லை. காட்டை சுற்றி மனிதர்கள் வாழ்வதால் வண்டிகள் நடமாட்டம் இருந்து கொண்டே உள்ளது.  ஒரு சிறு நெருப்பு மொத்த காட்டியும் அழித்துவிடும் அளவுக்குக் காய்ந்து காணப்படுகின்றன. சுற்றிப் பார்ப்பதற்குக்  கட்டணங்கள் இல்லாததால்  இந்த பகுதிக்கு வருபவர்கள் ஒரு முறை காட்டை சுற்றி வரலாம்.


புறா கூடு கட்டுதல் 



-செழியன்.ஜா 

1 comment:

  1. வறண்டு கிடக்கும் எங்கள் மாவட்டத்தில் இத்தனை பறவைகளா?தங்களின் இயற்கையைப் பாதுகாக்கும் பணி தொடரட்டும் .வாழ்த்துக்கள்

    ReplyDelete